கடந்து செல் காதலுடன்! 8 1 10095 கடந்து செல் காதலுடன்! 8 இந்த நல்லவனின் நக்கல் பேச்சில் சம்யுக்தா கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை. “கண்டிப்பா வருத்தம் தான். தப்பிச்சுட்ட! என்ன உன் அப்பா வந்து அருமை மகளை காப்பாத்திட்டாரா?” என்று அவன் மேலும் பேச, சம்யுக்தா மூக்கு விடைக்கத்தான் செய்தது. ‘நோ நோ சம்யு. நிதானம். எதுக்கு இங்க நீயே வந்தியோ அந்த வேலையை முடிச்சுட்டு கிளம்பு‘ சம்யுக்தா தன்னை நிதானித்து கொண்டவள், “எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள். “எனக்கு சூடா காபி வேணும்” என, “பிளாஸ்க்ல இருக்கே?” என்று சம்யுக்தா அதனருகே செல்ல, “அதுல டீ தான் இருக்கு” என்றான். “நீங்க அதிகம் டீ குடிக்கிறதால பாட்டி டீ கொடுத்துவிட்டாங்க போல” என்றவள், “பாட்டி எஸ்டேட்ல இருக்காங்க. இன்னைக்கு மட்டும் டீயே குடிச்சுக்கிறீங்களா?” என்று கேட்டாள். “முடியாது. எனக்கு காபி வேணும்” என்றான். “சரி. பாட்டி வர நேரம் தான். கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க” என, “எனக்கு இப்போவே வேணும்” என்றான் இவன். சம்யுக்தா இவனை ஆயாசமாக பார்த்து, போன் எடுத்தாள். கற்பகம் பாட்டி இப்போது தான் தினசரி கணக்கு வழக்கை முடித்து கொண்டிருக்கிறார். அவரின் உதவியாளருக்கு அழைத்து பேசினாள் பெண். “சொல்லிட்டேன். பாட்டி இப்போ கிளம்பிடுவாங்க” என, “ஏய். உனக்கு நான் சொல்றது புரியலையா? எனக்கு இப்போ காபி வேணும்” என்றான் கத்தலாக. அவன் திடீரென கத்தியதில், சம்யுக்தா உடல் தூக்கியே போட்டுவிட்டது. “எதுக்கு இப்படி கத்துறீங்க? எஸ்டேட்டுக்குள்ள பேட்டரி கார் தான். அவங்க அந்த லாஸ்ட்ல இருக்காங்க. அங்கிருந்து வந்து உங்களுக்கு காபி போட்டு கொடுக்க நேரம் எடுக்காதா?” என்று கேட்டாள் சம்யுக்தா. “அதெல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் அஞ்சு நிமிஷத்துல எனக்கு காபி வந்தாகணும்” என்றான் சட்டமாக. கேட்டது கேட்ட நொடியில் கிடைக்கும் பணம் படைத்தவன். இப்படி கூட இல்லையென்றால் தான் அதிசயம்! நல்லவன் குருமூர்த்தியை வேறு திரும்ப, திரும்ப அழைக்க, “ஷ்ஷ். என்ன பண்றீங்க? பொறுங்க” என்று சம்யுக்தா பதறி அவனை நிறுத்த பார்க்க, அவன் நிறுத்தினால் தானே? சம்யுக்தாவிற்கு போன் வந்துவிட்டது. “ப்பா” என்று மகள் எடுத்ததுமே, “என்ன நடக்குது அங்க? பாட்டி இன்னும் அவரை பார்க்க போகலையா? பாட்டி எங்க? பாட்டிகிட்ட கொடு” என்ற குருமூர்த்தி குரலில் வேகம் தெரிய, “பாட்டி எஸ்டேட்ல இருக்காங்கப்பா” என்றாள் மகள். “எஸ்டேட்ல இருக்காங்களா? சம்யுக்தா என்ன பண்ற நீ? நான் உன்கிட்ட சொன்னதை நீ செய்யலை அப்படி தானே? பொறுப்பில்லாம நடந்துகிற! இல்லை நீ என்ன சொல்றது நான் என்ன செய்றதுன்னு அப்பாகிட்ட திமிர் காட்டுறியா?” “ப்பா. இல்லை” மகள் பதட்டத்துடன் சொல்ல, “அப்புறம் இதுக்கு வேறென்ன காரணம் இருக்கு. நான் பொறுமையா இருக்கிறதால எல்லாம் என்கிட்ட ஆடி பார்க்க நினைச்சீங்க தொலைச்சிடுவேன். நீ இன்னும் சின்ன பொண்ணு இல்லை. கொஞ்சம் பொறுப்போட நடந்துக்கோ” என்று குருமூர்த்தி மகளை பிடிப்பிடியென பிடித்துவிட்டார். சம்யுக்தா கண்கள் சட்டென கலங்கி போனது. தந்தையிடம் ஓர் சொல் கூட கேட்டு விட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருப்பவள் சம்யுக்தா. இவனோ இந்தளவு பேச வைத்துவிட்டானே? சம்யுக்தா வேகமாக அங்கிருந்து கிளம்ப, “எனக்கு பில்டர் காபி தான் வேணும்” என்றான் நல்லவன். திரும்பி பார்க்க கூட மனமில்லாமல் கிட்சனுக்கு ஓடியவள், நொடி நின்றுவிட்டாள். நல்லவேளை கற்பகம் பாட்டி மாலை வேளைக்காக பில்டர் இறக்கி வைத்திருக்க, சம்யுக்தா வேக, வேகமாக அவனுக்கு காபி கலந்து எடுத்து ஓடினாள். கட்டிலில் அமர்ந்திருந்தவனிடம் காபி கொடுத்தவளுக்கு, அவன் முகம் பார்க்க கூட இஷ்டம் இல்லை. “ரொம்ப திட்டு வாங்கிட்டியோ?” என்று அவன் கேட்க, “வேறெதுவும் வேணுமா?” என்று கேட்டாள் சம்யுக்தா. “வேணும் தான். ஆனா இப்போ வேணாம். நானே பார்த்துகிறேன்” என்றான் பொடிவைத்து. சம்யுக்தாவிற்கு அதை புரிந்து கொள்ளும் மனம் தான் இல்லை. அவனிடம் பேச்சு வளர்க்காமல் ஹாலுக்கு வந்துவிட்டவளை, கற்பகம் பாட்டி எதிர்கொண்டார். “என்னாச்சு கண்ணு. உங்கப்பா போன் போட்டு, இன்னும் ஏன் வீட்டுக்கு போகலைன்னு சத்தம் போட்டுட்டாரு” என்று இவளிடம் கேட்க, “அவர் கூப்பிட்டுட்டே இருந்தாரு பாட்டி. அதான் நானே என்னன்னு கேட்டு காபி போட்டு கொடுத்துட்டேன்” என்றாள் சம்யுக்தா. “என்ன கண்ணு இப்படி பண்ணிட்ட? நீ ஏன் அங்க போன? உன் அப்பாக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நீ இதை செஞ்சிருக்க கூடாது. என்னை கூப்பிட்டிருக்கணும்” என்று கற்பகம் பாட்டி கண்டிப்புடன் சொன்னார். தவறுதான். தெரிந்து தான் செய்திருந்தாள்! இதையும் சமாளிக்க தான் வேண்டும்! சம்யுக்தா கண்களை மூடி அமர்ந்துவிட்டாள். “உன் அப்பாகிட்ட சொல்லிடணும் கண்ணு. திட்டினாலும் பரவாயில்லை. எவ்வளவு அவசரம்ன்னாலும் நீ அங்க போயிருக்க கூடாது” என்ற கற்பகம் பாட்டி அவளுக்கு அனுசரணையாக காபி எடுத்து வந்து கொடுத்தார். அந்த காபியை பார்க்கும் போதே பெண்ணுக்கு அலர்ஜியாகிவிட்டது. “எனக்கு வேணவே வேணாம் பாட்டி” என்று உறுதியாக மறுத்துவிட்டாள். குருமூர்த்தி வர இரவாகிவிட்டது. சம்யுக்தா தந்தையை எதிர்கொள்ள ஹாலிலே காத்திருக்க, “எனக்கு சாப்பாடு வேணாம்” என்று மகளை கண்ணெடுத்து கூட பார்க்காமல் அறைக்குள் நுழைந்து கொண்டார். மகளுக்கு திரும்ப கண்ணீர் சூழ்ந்துவிட்டது. தலையை குனிந்து கொண்டாள் பெண். “பாட்டி அந்த தம்பிக்கு சாப்பாடு கொடுத்திட்டீங்களா?” என்று பின்னால் வந்த மாசிலாமணி கேட்க, “கொடுத்துட்டேன் தம்பி” என்றார் கற்பகம் பாட்டி. “சரி அண்ணனை தொந்தரவு பண்ணாதீங்க. எனக்கு வெளியில வேலை இருக்கு” என்றவர், நொடி நின்று, “தேவையில்லாம வீட்ல நடமாட வேண்டாம்” என்று சொல்லிவிட்டு சென்றார். இன்றைக்கான நாள் குருமூர்த்திக்கு கடினமாகவே இருந்துவிட்டது. பிடித்து வைத்திருந்த ஆட்கள் சார்பாக பேச சண்முகம் நேரிலே வந்துவிட்டார். அந்த மனிதரின் முகம் பார்க்க, ம்ஹூம், அவர் இருக்குமிடத்தில் இருப்பதை கூட குருமூர்த்தி அறவே விரும்ப மாட்டார். வெறுப்பு என்பதை கடந்து, உச்சகட்ட கோவம் இன்றும் அவருக்குள் உண்டு. “சுபத்ரா!” காதலித்து கரம் பிடித்த குருமூர்த்தியின் மனைவி. அவர் இன்று இல்லாமல் போனதற்கு காரணம் சண்முகம். “என்மேல பகை இருந்தா என்னை தானே கொன்னிருக்கணும். என் பொண்டாட்டி என்ன பண்ணா? அவளை ஏண்டா கொன்னீங்க?” என்று சண்முகத்தின் நெஞ்சு சட்டையை பிடித்து குருமூர்த்தி அன்று கதறிய கதறல் எல்லார் நினைவிலும் அழுத்தமாக பதிந்து போனது. கோவத்தில் ஆளை அடித்து போடும் குருமூர்த்தி தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மனைவிக்காக அவர் துடித்த துடிப்பு சண்முகத்தை கூட அசையாமல் நிறுத்திவிட்டது. அந்த சண்முகம் இன்று சொல்லாமல் கொள்ளாமல் திடீரென கண் முன்னால் வந்து நின்றுவிட, குருமூர்த்தி உடல் நடுங்கிவிட்டது. யாரோ பேச வருகிறார்கள் என்று நினைத்திருக்க, இந்த மனிதர் கண்ணுக்கு நேரே நின்றிருக்கிறார். “ஏய். நீயா? எவ்வளவு தைரியம் இருந்தா இங்க வந்திருப்ப? போயா. வெளியே போயா” என்று மாசிலாமணி சட்டென பாய்ந்து சண்முகத்தை இழுத்து கொண்டு செல்ல, “மணி. இருப்பா. பேச தான் வந்திருக்காங்க. பொறுப்பா. அட நில்லுப்பா, அவரை விடுய்யா” என்று ஆட்கள் மாசிலாமணியிடம் இருந்து சண்முகத்தை பிரித்து எடுத்தனர். “யாரை கேட்டு இவர் எங்க ஆபிசுக்குள்ள வந்தாரு. இவரோட நாங்க பேச மாட்டோம். முதல்ல இவரை வெளியே போக சொல்லுங்க, அப்புறம் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி போனா எங்களை கேட்க கூடாது” என்று மாசிலாமணி குதிக்க, “டேய் என்ன விட்டா பேசிட்டே போற? எங்க அவர்மேல கைவைச்சு பாரு” என்று சண்முகத்தின் ஆட்கள் மறுபக்கம் எகிறி கொண்டு வந்தனர். “வைச்சா என்னடா செய்வீங்க? செய்ங்கடா பா* பசங்களா?” மாசிலாமணி வெறிகொண்டு பேச, “தப்பு மாசிலாமணி. நீ பேசுறது ரொம்ப தப்பு. அவர் இப்போ அமைச்சர். அந்த பதவிக்கு நீ மரியாதை கொடுத்து தான் ஆகணும்” என்று இடைநிலை ஆட்கள் மாசிலாமணியை அடக்க முயல, மணியோ அடங்க மாட்டேன் என்று நின்றார். சண்முகத்தின் மேல் பாய்வதிலே குறியாக நின்றவரை, “மணி” என்ற குருமூர்த்தியின் ஒற்றை வார்த்தை தான் கட்டுப்படுத்தியது. “நன்றி மூர்த்தி. நீ எங்க பேச்சை கேட்பன்னு நம்பித்தான் வந்திருக்கோம். அஞ்சு நிமிஷம். நாங்க பேசிட்டு உடனே கிளம்பிடுறோம்” என்றவர்களை அமர கூட சொல்லவில்லை குருமூர்த்தி. “அந்த பசங்களை நான் அனுப்பலை” என்றார் சண்முகம். “ஆமாம்ப்பா. அவனுங்க சண்முகம் ஆளுங்க இல்லை. வேற யாரோ” என, “சரி சொல்லிட்டீங்க இல்லை. கிளம்புங்க” என்றார் மாசிலாமணி. “அட பொறுப்பா. நீ வேற” என்ற பெரியவர் ஒருவர், “மூர்த்தி. அந்த பசங்க சண்முகம் ஆளுங்கன்னு நினைச்சு தான் நீ பிடிச்சு வைச்சிருக்கிறதா கேள்விப்பட்டோம். அதான் உன்கிட்ட சொல்லி அந்த பசங்களை அனுப்பிடலாம்ன்னு வந்தோம்” என்றார். “நீங்க சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க இல்லை. கிளம்புங்க. அவங்களை விடுறதா? வேணாமான்னு நாங்க பார்த்துகிறோம்” என்றார் மாசிலாமணி.