கடந்து செல் காதலுடன்! 7

“இது எப்படி நடந்துச்சு?” குருமூர்த்தியின் முதலாளி லிங்கம் விளக்கம் கேட்டு அழைத்துவிட்டார்.

“எனக்கும் தெரியல. ஆனா அனுமானம் இருக்கு” என்றார் குருமூர்த்தி.

“நீ என்னை பார்க்க வந்தது தானே?” என்று லிங்கம் கேட்க,

“ஆமா. அன்னைக்கே என்னை பாலோ பண்ணாங்க” என்றார் குருமூர்த்தி.

“அவங்களுக்கு என் மேல சந்தேகம். இப்போ வரை என்னை கண்காணிச்சிட்டு தான் இருக்காங்க மூர்த்தி. அதனால தான் நீ என்னை பார்க்க வந்தப்போ நான் உன்மேல கோவப்பட்டேன்” என்ற லிங்கம்,

“உன்னை இப்போவும் நான் நம்புறேன் மூர்த்தி” என்றார்.

“நம்பாம போற அளவுக்கு நான் எதுவும் பண்ணலை. முதல்லே இவரை பத்தி நீங்க சொல்லியிருந்தா நான் உங்களை பார்க்க வந்திருக்கவே மாட்டேன்” என்றார் கோவத்தை அடக்கி கொண்டு.

“நீ புரிஞ்சுப்பன்னு நான் நினைச்சேன்” லிங்கம் சொல்ல, குருமூர்த்தி பதிலே சொல்லவில்லை.

அவருக்கு உண்மையில் கோவம். இந்த  நொடி வரை என்ன பிரச்சனை? யார் இதில் சம்மந்த பட்டிருக்கிறார்கள் என்று எதுவும்  தெரியாது. ஆனாலும் அந்த அடங்காதவனுக்கான பாதுகாப்பை அவர் கொடுக்க தானே செய்கிறார்.

“மூர்த்தி” என்று லிங்கம் அழைக்க,

“சொல்லுங்க” என்றார் குருமூர்த்தி.

“ம்ப்ச். உன் கோவம் நியாயம் தான். ஆனா உனக்கு எப்படி சொல்ல?” என்று சில நொடிகள் மௌனித்தவர்,

“இவர் நண்பர்களோட பைக் ரைடிங் போறது வழக்கம் மூர்த்தி. தனியா கிளப் இருக்கு. இந்த முறை ஹிமாலயன் zojila pass இடத்துக்கு போனாங்க. கிட்டத்தட்ட அவங்க ரைட் முடியற நேரத்துல தான் எல்லாம் ஆரம்பிச்சது. ஒரு குடும்பத்தையே கொன்னுட்டாங்க”

“இவரும், இவர் நண்பர் கோகுலும் தான் நேரடியா பார்த்திருக்காங்க. அவங்க கிளப்ல சொன்னதை கேட்காம, போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்து, அந்த ஆட்களை அரெஸ்ட் பண்ற வரைக்கும் அங்கிருந்து கிளம்பலை”

“சிவப்பிரகாசம் சாரும் பையன் பிடிவாதத்துக்காக, அந்த கொலைகாரங்களை அரெஸ்ட் பண்ண சப்போர்ட் பண்ணியிருக்கார். இவரும் ஊருக்கு வந்துட்டார். கொஞ்ச நாள் எல்லாம் சாதாரணமா தான் போயிருக்கு. ஆனா திடீர்ன்னு ஒரு கும்பல் இவரை தாக்க பார்த்திருக்கு”

“இவரோட பாதுகாப்பு ஆளுங்க இல்லைன்னா அப்போவே இவரை முடிச்சிருப்பாங்க. தீவிரமான தாக்குதல். வசுந்தரா மேடம் வேலை, பணம், தொழில்ன்னு இவங்களுக்கு தான் எதிரிங்க உண்டே. அந்த கண்ணோட்டத்துலே விசாரணை நடக்க, திரும்ப ஒரு தாக்குதல் முயற்சி”

“பொது இடத்துல வெளிப்படையா துப்பாக்கி சூடு நடந்திருக்கு. உடனே இவரை கவர் பண்ணிட்டாங்க. டார்கெட் யாருன்னு மக்களுக்கும் தெரியாம போகலாம். ஆனா வசுந்தரா மேடம் குடும்பத்துக்கு தெரியுமே. அதிர்ந்துட்டாங்க மூர்த்தி”

“பெரிய குடும்பம். என்ன இல்லை அவங்ககிட்ட? பணம், பவர், ஆள் பலம்ன்னு எல்லாம் இருந்தும், அவங்க வாரிசு மேல கொலை முயற்சி தாக்குதல் நடக்கிறதை என்னென்ன நினைக்க? அவங்களால இதை ஏத்துக்கவே முடியலை”

“அவங்க சுதாரிக்க கூட நேரம் கொடுக்காம திரும்ப, திரும்ப அட்டேக் நடந்துக்கிட்டே இருக்கு. இவரை பாதுகாப்பா வைக்கிறதே போராட்டமா இருக்குன்னா பார்த்துக்கோ.  போலீஸ் பக்கம் விசாரணை நடக்குதே தவிர, தாக்குதல் குறையலை”

“இவரோட நண்பர் கோகுலையும் மறுபக்கம் டார்கெட் பண்ண ஆரம்பிக்கிறாங்க. இரண்டு பேரையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போற வழியிலே கோகுலை முடிச்சுட்டாங்க”

“வசுந்தரா மேடம் குடும்பத்துக்கு யாரை நம்புறதுன்னே தெரியலை. எல்லார் மேலயும் நம்பிக்கை போச்சு”

“மகனை வெளிநாடு அனுப்பிடலாம்ன்னு சிவப்பிரகாசம் சார் நினைக்க, வசுந்தரா மேடம் மறுத்துட்டாங்க. கடைசியா தான் உன்கிட்ட அவரை பாதுகாப்பா சேர்த்திருக்கோம்  மூர்த்தி”

“எங்களுக்கும் இப்போ வரை என்ன பிரச்சனைன்னே தெரியாது. யார் இதுல இருக்காங்கன்னும் தெரியாது” என்றார் லிங்கம்.

“அதெப்படி இன்னும் கண்டுபிடிக்காம இருப்பாங்க?” என்று வசுந்தரா மேடத்தின் பலமான பின்புலத்தை மனதில் வைத்து கேட்டார் குருமூர்த்தி.

“சங்கிலி மாதிரி நீண்டுட்டே போகுது மூர்த்தி. நெருங்கிட்டே இருக்காங்க. சீக்கிரம் விஷயத்தை முடிச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் அவரை பத்திரமா பார்த்துக்கோ மூர்த்தி” என்றார் லிங்கம்.

“பார்த்துக்க மாட்டேன்னு நான் எப்போ சொன்னேன்?” என்று குருமூர்த்தி கேட்க,

“சொல்லலை. ஆனா உன் வீடு வரைக்கும் ஆளுங்க வந்தது உனக்கு பிடிக்கலை” என்றார் லிங்கம் இவரை சரியாக கணித்து.

“என் பொண்ணு வரைக்கும் போயிட்டாங்க” என்றார் இவர் கடுமையான கோபத்துடன்.

“புரியுது மூர்த்தி. ஆனா நம்ம பாப்பா துப்பாக்கி எடுத்து நின்னாங்கன்னு தானே நான் கேள்விப்பட்டேன்” என்றார் பெருமையுடன்.

குருமூர்த்தி விரல்கள் தன்னை போல் மீசையை முறுக்கி விட்டதுடன், “வெளியே போங்கடான்னு சொன்னதை நீங்க கேட்கலையே” என்றார்.

“பையனா பிறந்திருந்தா நீ தான் குருமூர்த்தி” என,

“இப்போவும் நாந்தான்” என்றார் தந்தை கர்வத்துடன்.

“நம்ம பாப்பா மாதிரி, அவரையும் துணிஞ்சு நிக்க வைச்சிடு மூர்த்தி. போதும்” என்றார் லிங்கம் எதிர்பார்ப்புடன்.

“அவர் எனக்கு மேலே நிற்பார்” என்றார் குருமூர்த்தி.

“உண்மையாவா சொல்ற?” என்று லிங்கம் சந்தேகத்துடன் கேட்டார்.

“எதிர்பாராம நடந்ததுல கொஞ்சம் வீக்கா உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கலாம், ஆனா அவர் அப்படி இல்லை” என்றார் இவர் உறுதியாக.

“நீ சொன்னா அது சரியாத்தான் இருக்கும் மூர்த்தி. அவரோட குடும்பத்துக்கு தான் மகனை நினைச்சு ஏகப்பட்ட அதிருப்தி, கவலை” என்றார் லிங்கம்.

“அதிருப்தியாக என்ன இருக்கு?”

“வசுந்தரா மேடம்க்கு இவர் அந்த கேசுல இன்வால்வ் ஆனது முதல்ல இருந்தே பிடிக்கலை. நீ முதல்ல ஊருக்கு கிளம்பி வா. நான் என் பக்கம் இருந்து என்ன செய்ய முடியுமோ அதை செய்றேன்னு சொல்லியிருக்காங்க. ஆனா இவர் பிடிவாதம் அதிகம்”

“பிடிவாதத்துக்கு இன்னொரு பெயர்ன்னு இவர் பேரை வைச்சிடலாம்” என்றார் குருமூர்த்தி.

தினம், தினம் இவரும் பார்க்கிறாரே!

“ஆமா அவர் பேர் என்ன?” என்று குருமூர்த்தி கேட்டார்.

“சர்வாச்சார்யா!”

குருமூர்த்தி, “சர்வாச்சார்யா” என்று தானும் சொன்னார்.

“எல்லாம் கூப்பிடுறது சர்வா” என்றார் லிங்கம்.

“சர்வாச்சார்யா முழு பேர் சொல்லியே கூப்பிடலாம்” என்ற குருமூர்த்தியிடம்,

“பிடிச்சு வைச்சிருக்கவங்களை என்ன பண்ண போற? எனக்கு தெரிஞ்சு பிரயோஜனமில்லை. யோசிச்சுக்கோ” லிங்கம் சொல்ல,

“அவங்களை விசாரிச்சா எந்த தகவலும் கிடைக்காதுன்னு எனக்கும் தெரியும். ஆனாலும் நான் விட மாட்டேன். இன்னொரு முறை என் இடத்துக்கு எவனும் வர கூடாது” என்றார் குருமூர்த்தி திட்டவட்டமாக.

“உன் இஷ்டம். நானே கூப்பிடுறேன்” என்று லிங்கம் போனை வைக்க, குருமூர்த்தி அவரின் அறையில் இருந்து ஹாலுக்கு வந்தார்.

“அண்ணா. அந்த பசங்களுக்கு சாப்பாடு?” என்று மாசிலாமணி கேட்க,

“கொடு. ஒரு நேரம் மட்டும் தான்” என்றார் குருமூர்த்தி.

“அண்ணா. அவங்களை பிடிச்சு வைச்சு, நாம ரிஸ்க் எடுக்கலை தானே?” என்று மாசிலாமணி கேட்க,

“ரிஸ்க்கா இருந்தாலும் இப்படி தான். என் இடத்துக்குள்ள அத்துமீறி நுழைஞ்சவங்களை நான் சும்மா விடணுமா?” என்று கோபத்துடன் குருமூர்த்தி கேட்டார்.

சம்யுக்தா! அவரின் மகளை நெருங்குவார்களா? நான் ஓர் நிமிடம் தாமதித்திருந்தால்?

மகளை சுற்றி அத்தனை ஆண்கள். கொலைக்கும் அஞ்சாத மனித மிருகங்களுக்கு  இடையில் என் மகள்! குருமூர்த்தி எனும் தந்தையின் ரத்தம் இன்னும் கொதித்து கொண்டே தான் இருக்கிறது.

“இல்லைண்ணா அந்த பையன் இங்க இருக்கும் போது, இவங்களையும் நம்ம எஸ்டேட்டுக்குள்ள வைக்கிறது எந்தளவு சரியா இருக்கும்ன்னு தெரியலை. அதுதான்” என்று மாசிலாமணி சொல்லும் போதே,

“அவங்க நெருங்க நினைச்சது என் மகளை மணி” என்றார் குருமூர்த்தி ஆங்காரமாக.

“அப்போ பாப்பா எனக்கு யாருண்ணா? நான் விட்டுடுவேனா?” என்று மாசிலாமணி கோபத்துடன் கேட்டார்.

“அப்புறம் எதுக்கு அவங்களை விட சொல்ற?” குருமூர்த்தி கொஞ்சம் நிதானத்துக்கு வர,

“நான் விட சொல்லலை. அவங்க எஸ்டேட்டுக்குள்ள வேண்டாம்ன்னு தான் சொல்ல வந்தேன்” என்றார் மாசிலாமணி.

“இல்லை. இருக்கட்டும். இவங்களை மீட்டுட்டு போக யார் வராங்கன்னு நாமளும் பார்த்துடலாம்” குருமூர்த்தி முடித்துவிட்டார்.

அன்றய இரவு உணவு நேரம், “நாளைக்கு காலேஜ் போக வேண்டாம்” என்று மகளிடம் சொன்னார் குருமூர்த்தி.

சரியென தலையசைத்த சம்யுக்தாவிற்குள் அலைப்புறுதல்.

நிச்சயம் நான் வந்த வழியை அவர் பார்த்திருப்பார்! அப்பாகிட்ட சொல்வாரா? இல்லை அவரும் அந்த வழியை கண்டுபிடிக்க பார்ப்பாரா? இல்லை அதை வைச்சு என்னை மிரட்டுவாரா? ஏதேதோ குழப்பம். தந்தை மேல் அச்சம்!

இன்று நடந்தது அவள் வயதிற்கு, அனுபவத்திற்கு அதிகம்!

உண்மையை சொல்ல போனால் சம்யுக்தா இந்தளவு தீவிரத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.

படையென குவிந்த ஆட்கள்! அவர்களின் வெறிகொண்ட தேடல்கள்!

குருமூர்த்தி மட்டும் சரியான சமயத்திற்கு வரவில்லை என்றால் என்னவாகியிருக்கும்?

துப்பாக்கியும், தற்காப்பு கலைகளும் எவ்வளவு நேரத்திற்கு கை கொடுத்திருக்கும்?

என் ரூமுக்குள்ள வருவாங்களா? என்ன தைரியம்? குருமூர்த்தியின் மகளுக்கும் அதே ரத்தம் என்பதால், அந்த கோவம் இப்பொழுதும் உண்டு.

ஆனால் அந்த மிருகங்களிடம் சிக்கினால் அவர் நிலை? குருமூர்த்தி பாதுகாக்க நினைக்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான தகுதி உள்ளவனாக தான் இருப்பார்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

அப்பாவிடம் அந்த வழி பற்றி சொல்லி விடலாமா? என்னை தவிர வேறு யாருக்கேனும் அது பற்றி தெரிந்திருந்தால்?

எதிரிகள் இந்த வீட்டை பற்றி முழு தகவலும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த சுரங்க வழி இன்று தெரியாவிட்டாலும், நாளை தெரிந்து விட கூடுமே!

ம்ப்ச். எனக்கு இருக்க ஒரே ரகசியம் அதுதான்! சம்யுக்தாவிற்கு வருத்தம் தான். ஆனாலும் ஓர் உயிர் சம்மந்தப்பட்டது.

அப்பாகிட்ட சொல்லிடுறது தான் சரி. குருமூர்த்தியின் கோவத்தை நினைத்தால் இப்போதும் கைகால்கள் வேர்க்க தான் செய்கிறது.

சம்யுக்தா அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தாள். கண்கள் ஓயாமல் அந்த சுவற்றின் பக்கம் சென்று வந்தது.

அந்த அடங்காதவன் இதில் இருந்து வந்துவிடுவானோ? ம்ஹூம். வர மாட்டார். எனக்கே கண்டுபிடிக்க ரொம்ப நாள் ஆச்சு.

ஆளை பார்த்தா புத்திசாலி மாதிரி தான் இருக்கு. கண்டுபிடிச்சுட்டா?

ஆஹ். முடியலைடா சாமி!

மறுநாள் குருமூர்த்தி இல்லம் இயல்பு நிலைக்கு திரும்பியது. முன்தினம் அங்கு ஓர் கலவரம் நடந்ததிற்கான எந்த அறிகுறியும் அங்கில்லை.

ஆட்கள் எப்போதும் போல் வேலைக்கு வந்தனர். சம்யுக்தா பயிற்சிக்கு அழைக்கப்பட்டாள்.

சும்மாவே குருமூர்த்தி விடுமுறை அளிக்கமாட்டார். இதில் நேற்று நடந்த கலவரத்தில் மகளுக்கு கூடுதல் பயிற்சி தான் கொடுக்கப்பட்டது.

“காலை சாப்பாடு” என்று கற்பகம் பொதுவாக கேட்க,

“மூணு நேரத்துக்கும் ரெடி பண்ணிடுங்க” என்றார் குருமூர்த்தி.

இனி வீட்டில் அவனை பற்றிய பேச்சு இருக்க போவதில்லை. குருமூர்த்தி மிகவும் கவனமாக எல்லாவற்றையும் ஆராய்ந்து செயல்பட்டார்.

“ண்ணா. குணா மதியத்துக்குள்ள வெளியே வந்திடுவான்” என்று மாசிலாமணி தகவல் கொடுக்க,

“நான் சொன்னது என்னாச்சு?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“ரெடிண்ணா. நைட்டே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க” என்றார் மாசிலாமணி.

குருமூர்த்தி மூன்று வேளை உணவையும் சர்வாச்சார்யாக்கு கொடுக்க சொல்லிவிட்டு, வெளியே கிளம்பினார்.

கற்பகம் பாட்டி எப்போதும் போல, மாலை கோவில் அது முடித்து வேலையாட்கள் மேற்பார்வை, தினக்கூலி என்று இருந்தார்.

சம்யுக்தா புத்தகத்தில் மூழ்கியிருந்த நேரம், குருமூர்த்தியிடம் இருந்து போன் வந்தது.

“பாட்டி எங்க? அவர் என்னமோ கூப்பிட்டுட்டே இருக்கார். அவங்களை போய் பார்க்க சொல்லு” என்று வேகமாக தகவல் சொல்லி வைத்துவிட்டார்.

கற்பகம் பாட்டி எஸ்டேட்டிற்குள் இருக்க, சம்யுக்தா அவரை அழைக்க சென்று, சட்டென நின்றாள்.

“அவரை பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அப்பா கேட்டா பாட்டி இல்லைன்னு சொல்லிடலாம்” தனக்குள் கணக்கு போட்டவள், கற்பகம் பாட்டிக்கு மாசிலாமணி சொல்லி கொடுத்தது போல், சுற்று புறத்தை அவதானித்து, அருகில் இருக்கும் கதவுகளை மூடி அவனை காண சென்றாள்.

கைகட்டி நின்றிருந்தவன், ‘நீ தான் வருவேன்னு எனக்கு தெரியும்’ என்ற பார்வையே பெண்ணுக்கு கொடுத்தான்.

அவன் பார்வையை படித்தவளுக்கு,  ‘இவர்கிட்ட உஷாரா தான் இருக்கணும்’ என்று புரிந்து போனது.

“உயிரோட தான் இருக்கியா?” என்று நக்கல் கேள்வி வேறு கேட்டான்.

“என்னை அடிச்சு, கட்டிலுக்கு கீழே தள்ளி விட்டு போன வேகத்துக்கு போய் சேர்ந்திருப்பேன்னு இல்லை நினைச்சேன். மிஸ் ஆகிட்ட!”

“அதில உங்களுக்கு ரொம்ப வருத்தம் போல” என்று சம்யுக்தா கடுப்பாக கேட்டாள்.