கடந்து செல் காதலுடன்! 49 2 9900 வீட்டின் ஆண்கள் மட்டும் அடிக்கடி சர்வாச்சார்யா முகம் பார்த்தனர். கார்த்திக், ஆகாஷ் அவனிடம் ஏதோ பேசி கொண்டே வேறு இருக்க, “ராஜாவை சாப்பிட விடுங்கடா” என்று அதட்டினார் பெரிய அத்தை. “இருக்கட்டும் அத்தை. நூல் விட்டு பார்க்கிறாங்க. பிடிபடுதான்னு பார்ப்போம்” என்றான் சர்வாச்சார்யா கிண்டலாக. “சர்வா. மாமா” என்று இருவரும் ஒருசேர குரல் கொடுத்தார்கள். “சாப்பிடுங்க” என்ற சர்வாச்சார்யா, மனைவிக்கு வைத்து தானும் உண்டான். விருந்தினர்கள் இருந்ததில் பெரிதாக பேச முடியாமல் உணவு நேரம் முடிந்தது. மாமாக்கள் இருவரும் சர்வாச்சார்யாவிடம் பேச வர, “சுஹா” என்று தங்கையை சத்தமாக அழைத்தான் அண்ணன்காரன். “என்ன‘ண்ணா?” என்று சுஹாசினி வர, “ரூமுக்கு போகாத. உன் அண்ணியோட அப்பா ஆபிஸ் ரூம் போ” என, “சரிண்ணா” என்றவள், சம்யுக்தாவுடன் அலுவலக அறை செல்ல, “தங்கம். என்னபா? எதாவது பிரச்சனையா?” என்று அத்தைகள் இருவரும் அண்ணன் மகனை நெருங்கிவிட்டனர். சிவப்பிரகாசம், வசுந்தரா தேங்கி நிற்க, “மாம், டாட்” என்றான் மகன். இருவரும் அலுவலக அறைக்கு செல்ல, “என்ன நடக்குது இங்க? ராஜா எங்ககிட்ட சொல்ல மாட்டியா?” என்று பெரிய அத்தை கேட்க, “இரண்டு மாம்ஸ்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க அத்தைஸ்” என்றவன், அலுவலக அறைக்குள் செல்லவும் ராகவ் சரியாக அலுவலக அறை கதவில் வந்து நின்றுவிட்டான். வீட்டினர் அதிர்ந்து தான் போய்விட்டர்கள். ராகவ் வீட்டிற்குள் கடைமையை செய்கிறானா? அப்போ நாங்க யாரும் அந்த ஆபிஸ் ரூமுக்குள்ள போக கூடாதா? அத்தைகள் இடிந்து போய்விட்டார்கள். முதல் முறையாக நெஞ்சுக்குள் பயங்கர இரைச்சல்! “அப்பா. என்ன நடக்குதுன்னு எங்களுக்கு கொஞ்சம் சொல்றீங்களா?” என்று ஆதி தந்தை முன் நின்றான். “மாமா வீட்டுக்குள்ள இப்படி செய்ற ஆள் இல்லை. அப்பா நீங்க எதுவும்?” என்று வைஷ்னவி தந்தையை சந்தேகமாக பார்த்தாள். “என்ன பண்ணீங்க?” என்று சின்ன அத்தை அவரின் கணவரிடம் ஆக்ரோஷமாக சென்றவர், “என்ன கிறுக்குத்தனம் பண்ணீங்க? சொல்லுங்க. உங்களை தான் கேட்கிறேன் சொல்லுங்க” என்று அவரின் நெஞ்சு சட்டையை பிடித்துவிட்டார். “சித்தி. அவரை விடுங்க சித்தி, என்ன இது?” கார்த்திக் தான் அவரை பிரித்துவிட்டவன், தானே விஷயத்தை சொல்லிவிட்டான். “என் அண்ணன் மகனுக்கு பணம் இல்லைன்னு சொன்னீங்களா? அதை சொல்ல நீங்க யாரு?” அத்தைகள் கடுமையாக கேட்டார்கள். “எங்களோட பணமும் இதுல இருக்கு? உங்க அம்மா வீட்டு சொத்தே முழுசும் கிடையாது ஞாபகம் வைச்சுக்கோங்க” என்று பெரிய மாமா சொல்ல, “அப்படி எவ்வளவு கொண்டு வந்துட்டீங்க? பொன் வைக்கிற இடத்தில பூ வைச்சுட்டு பேசுறீங்களா நீங்க?” என்று அத்தைகள் பதிலுக்கு பேச, சில நிமிடங்கள் அங்கு கலவரம். “எதுக்கு இப்போ இவ்வளவு சண்டைமா? போதும் அமைதியாகுங்க” என்று கார்த்திக் கத்திவிட்டான். அத்தைகளுக்கு தான் ஏற்று கொள்ள முடியவில்லை. அண்ணன் மகன் மட்டுமில்லை அண்ணனும் அமைதியாக ஆபிஸ் ரூமுக்குள்ள போயிட்டார் தானே! கைவிட்டு போய்விடுமா சொந்தம்? பரிதவித்தார்கள் பெண்கள். அவர்கள் பாசத்தில் குறைவில்லை. ஆனால் அந்தந்த உறவை அந்தந்த இடத்தில் தான் வைக்க வேண்டும். வலுக்கட்டாயமாக தோளில் சுமக்க முடியாது. இழுத்து பிடிக்கும் சொந்தம் ஒரு மாயபிம்பம்! என்றைக்கு இருந்தாலும் காணாமல் தான் போகும். கற்றுக்கொள்வார்கள். அலுவலக அறை மௌனத்தால் கனத்தது. “என்னாச்சுண்ணா?” என்று சுஹாசினி கேட்க. “நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சுக்கணும் சுஹா” என்றான் அண்ணன். “சொல்லுங்கண்ணா” என்ற பெண்ணிடம் மெலிதான அச்சம். சர்வாச்சார்யா தங்கை முன் முட்டியிட்டு அமர்ந்து அவளின் கைப்பற்றி கொண்டவன், “லண்டனுக்கு ஷிப்ட் ஆக நினைக்கிறேன்” என்றான். சம்யுக்தா திகைத்து விழிக்க, பெற்றவர்களும் அதிர்ந்து போனார்கள். “அண்ணா. ஆபிஸ் மட்டும்” “இல்லைமா. நானுமே தான். நாம எல்லாம் தான்” என்றான். “எல்லாருமா? ராஜா என்ன பேசுற நீ? நம்ம பிஸ்னஸ் இங்க இருக்கு, சுஹாக்கு கார்த்திக் கூட கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று சிவப்பிரகாசம் படபடவென சொல்ல, “ப்பா. லண்டன்ல இருந்து பிஸ்னஸ் பண்ண முடியும், சுஹா ம்ஹ்ம். சுஹா நீ சொல்லு” என்று கேட்டான் அண்ணன். “நா, நான் என்ன சொல்ல? நீங்க, நான் இல்ல” சுஹா கலங்க, “நோ பேபி ப்ளீஸ்” என்று தங்கையை தன் தோளில் சாய்த்து கொண்டான் அண்ணன். “சர்வா என்ன பேசிட்டிருக்க நீ? நாம எல்லாம் லண்டன் போக வாய்ப்பே இல்லை. நீ அந்த பேச்சை விடு முதல்ல” வசுந்தரா சொல்ல, “மாம். நாம போகணும்” என்றான் மகன். “ராஜா. நாலையும் யோசிக்காம எந்த முடிவும் எடுக்க முடியாது. நமக்கு எல்லாம் இங்க தான். தொழில், குடும்பம், நம்ம வேர்ன்னு எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயும் நாம போகப்போறதில்லை” தந்தை முடிவாக சொல்ல, “இத்தனை வருஷம் இது எல்லாத்தையும் தூக்கி சுமந்தது போதாதாப்பா உங்களுக்கு?” என்று மகன் வெடித்தான். “சர்வா என்ன பேசுற நீ?” வசுந்தரா மகனை கண்டிக்க, “ஏன் மாம்? அப்பாம்மாவோட குடும்பமா இருக்கணும்ன்னு நாங்க ஆசைப்பட கூடாதா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா. “ராஜா” பெற்றவர்கள் பேச்சற்று போனார்கள். அடிப்படை நியாயமான ஆசையை எப்படி இல்லை என்று மறுக்க முடியும்? “இத்தனை வருஷம் நீங்க சொன்னீங்க நான் கேட்டேன். நீங்க இருக்க சொன்ன இடத்தில தான் நான் இருந்தேன். இனியும் அது முடியாது மாம் அண்ட் டாட்” என்றுவிட்ட மகன், “சுஹா மட்டும் தான் எனக்கு பதில் சொல்லணும். அவளுக்கு மட்டும் தான் நான் விளக்கம் கொடுக்கணும்” என்றான். “கார்த்திக் கூட உனக்கு கல்யாணம் முடியவும் எங்க இருக்க நினைக்கிற சுஹா?” என்று தங்கையிடம் கேட்டான். “அண்ணா. ஏன் இந்த திடீர் முடிவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள் அவனின் தங்கை. “இதுக்கு மேல விட்டா நம்ம பேமிலி கண்டிப்பா உடைஞ்சிடம் சுஹா. எனக்கு நம்ம பேமிலி எப்போவும் வேணும். எல்லோரும் வேணும். அத்தைங்க வேணும். சோ தள்ளி இருக்கிறது தான் சரி” என்ற சர்வாச்சார்யா, “இந்த முடிவுல என்னோட சுயநலமும் அடங்கியிருக்கு சுஹா. ம்ஹ்ம். நான் யாருன்னு தெரியாத இடத்துக்கு போய் அமைதியா வாழணும். எந்நேரமும் எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டு, என்னை நிரூபிச்சுக்கிட்டு என்னால வாழ முடியாது. தொழில், குடும்பம் இரண்டுமே எனக்கு சரியான அலைவரிசைல இல்லை சுஹா” என்றான் அண்ணன். சுஹாசினி பார்வை தன்னை போல் சம்யுக்தாவிடம் சென்றுவிட்டது. சம்யுக்தா கலங்கிய முகத்தை திருப்பி கொண்டாள். “யோசிச்சு சொல்லு சுஹா. உன் முடிவு தான் என் முடிவு” என்றான் சர்வாச்சார்யா. அப்பாம்மா அநேக நேரங்களில் தள்ளி இருந்த போது, உடனிருந்தவர்கள் உடன்பிறப்புகள் மட்டும்தான்! சர்வாச்சார்யா மனைவியுடன் அலுவலக அறையை விட்டு வெளியே வர, வீட்டில் பெரும் அமைதி. ராகவ் அவனிடம் ஏதோ சொல்ல, கேட்டு கொண்ட சர்வாச்சார்யாவின் முகம் கசங்கி போனது. நிமிடமே அத்தைகள் அறை பக்கம் பார்த்து நின்றான். “பாஸ். தீரஜ் தான் காரணம்” என்றான் ராகவ். “நான் சொன்னது என்னாச்சு?” என்று சர்வாச்சார்யா கேட்க, “நைட்டுக்குள்ள முடிஞ்சிடும் பாஸ்” என்றான் ராகவ். “பார்த்துக்கோ” என்றவன் மனைவியுடன் அவன் தளத்திற்கு வந்தான். முதல் முறையாக அவன் அறைக்குள் சம்யுக்தா நுழைகிறாள். அதற்கான படபடப்பு, ஆர்வம், மகிழ்ச்சி என்று எதையும் உணர முடியவில்லை. “ஹேய் வெய்ட்” சர்வாச்சார்யா சட்டென மனைவியின் கரம் பற்றி நிறுத்தியவன், “நம்மளோட சாம்ராஜ்யத்துக்குள்ள என்டர் ஆக போறோம்” என்றபடி அவளை கைகளில் அள்ளி கொண்டான். சம்யுக்தா அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்தவள், கணவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள். சர்வாச்சார்யா பெண்ணின் உச்சியில் முத்தமிட்டபடி அறைக்குள் காலடி எடுத்து வைத்தான். சம்யுக்தா அவனை விட்டு விலகுவதாக இல்லை. “ரூமையும் கொஞ்சம் பாருங்க மேடம்” என்று நாயகன் மனைவியின் காதில் சொல்ல, பெண் இன்னும் தான் ஒண்டினாள். “ஹேய் என்னடி?” என்று கேட்டவன் மனைவியுடன் கட்டிலில் சரிய, சம்யுக்தா அவனை முழுவதுமாக இழுத்து தன் மேல் போட்டு கொண்டாள். “வெய்ட்டா இருப்பேன்டி” என்று கிசுகிசுத்தவன், பெண்ணின் கழுத்துக்கு அடியில் முகம் புதைத்து, அவள் மேலே படுத்துவிட்டான். வேகமான மூச்சு காற்றும், அசைந்து கொண்டே இருக்கும் அவன் உடலும், நாயகனின் நிலையில்லா மனதை சொன்னது. தவிக்கிறான். உடைய முடியாமல் தவிக்கிறான்! ஊட்டி வீட்டில் வைத்து தரையை அடித்த அவன் வேகம், அந்த கோவம், அவன் கண்ணீர் இப்போது இல்லை. முதிர்ச்சியாகி விட்டான். ஆனால் அந்த துடிப்பு ஒன்று தானே! “நீங்க அந்த ட்ரிப் போகாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்றாள் சம்யுக்தா. நாயகனின் அசைந்த உடல் இறுக்கமாகி விட்டது. “அந்த ட்ரிப்பால நீங்க இழக்கிறது அதிகமா இருக்கு” சம்யுக்தா சொன்ன நிமிடம், அவளின் கழுத்தோரம் ஈரம். கரை கட்டியிருந்த சம்யுக்தா கண்களும், அவளின் கணவனை போல் உடைந்து போனது. ‘கோகுலை விட்டுட்டேன். அத்தைங்களையும், என் பேமிலியையும் கூட விட போறேன். நான் ரொம்ப, ரொம்ப மோசமானவன்!’ நட்புக்கும், நன்றி உணர்வுக்கும், பாசத்திற்கும், இழப்பிற்கும் இடையில் அல்லாடுகிறான் சர்வாச்சார்யா. பிறரின் முகம் காட்டும் கண்ணாடி அதற்கு முகம் ஒன்றும் இல்லை!! அந்த கண்ணாடி நான்தானே முகமே இல்லை என்னிடம் தான்!!!