கடந்து செல் காதலுடன்! 47

இதுதான் எதார்த்தம் என்று தெரியும்! குருமூர்த்தி எதார்த்தத்தை ஏற்று கொள்ளும் மனிதர்.

ஆனால் மகள் பிரிவை மட்டும் மனது இன்னும் ஏற்று கொள்ளவில்லை. அவர் மகளுடன் இருந்தது சில வருடங்கள் மட்டுமே! அது அவருக்கு போதவில்லை.

மண்டபத்தில் இருந்து வந்தவர், அவர் அறைக்குள் அடைந்து விட்டிருந்தார்.

மதிய உணவிற்கு கற்பகம் பாட்டி கதவை தட்டி கேட்க, “வேண்டாம்” என்று மறுத்துவிட்டார்.

சம்யுக்தா அழைத்து கேட்ட போது, சாப்பிட்டேன் என்று சொல்லியாகி விட்டது.

மகள் அங்கு சமாளித்து கொள்வாள், சர்வாச்சார்யா மகளை நன்றாக பார்த்து கொள்வான், மகள், மருமகனை பற்றி கவலையில்லை.

எம்பையர் கூட நாமளே பார்த்துக்கணும். சம்யுக்தாவை கொஞ்ச மாசத்துக்கு தொந்தரவு பண்ண கூடாது.

அவங்க வெளியே கொஞ்ச நாள் போய்ட்டு வரட்டும். இவனுக்கு நேரம் கிடைக்குமா தெரியவில்லை. மருமகன்கிட்ட பேசணும்! அது நடக்காத காரியம்! மூஞ்சை திருப்பிகிட்டு போவான்! அதுக்காக பேசாம இருக்க முடியாது.

அவனுக்கு என் மேல கோவம்! அவன் கோவத்தில் மனிதருக்கு மகிழ்ச்சிதான்.

ஆம். முதன் முறையாக அவன் கோவத்தில் மனிதர் ஆனந்தப்பட்டார்.

“நீ எங்களுக்கு வேணாம்” என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லிவிட்டார்.

அவனும் கேட்டு கொண்டு விலகிவிட்டான்.

என் முடிவை அவன் மதித்தான்!

அவனிடம் நான் நேரே சென்று பேச வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

சர்வாச்சார்யாவிற்கு அழைத்து சந்திக்க வேண்டும் என்று கேட்டார் குருமூர்த்தி.

“என்ன திடீர்ன்னு?” என்று நல்லவன் கேட்க,

“எங்க மீட் பண்ணலாம்? இப்போ நீ எங்க இருக்க?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“நான் மீட்டிங் போய்ட்டு இருக்கேன். ஏதாவது அர்ஜெண்டா?”

“சரி நீ முடிச்சுட்டு, எங்க வரணும்ன்னு சொல்லு நான் வரேன்”

என்ன புதுசா? சர்வாச்சார்யா புருவங்கள் சுருங்கியது. தவிர்க்க முடியா மீட்டிங்க் இது!

“நீங்க ஆபிஸ் வந்துடுங்க. நாம பேசலாம்” என்றான் நாயகன்.

குருமூர்த்தி அவன் அலுவலகம் செல்ல, ராகவ் அவரை வாசலிலே எதிர்கொண்டு உள்ளே அழைத்து சென்றான்.

“மீட்டிங் முடியற நேரம் தான்” என்று தகவல் சொன்ன ராகவ், குடிக்க வரவைத்தான்.

“அவன், க்கும். அவர் வந்திடட்டும்” என்றார் மனிதர்.

சர்வாச்சார்யா அறையில் அமர வைக்கப்பட்டிருக்க, குருமூர்த்தியின் கண்கள் ரூமை சுற்றி ஓடினாலும், மனது பேச வந்த விஷயத்திலே சுற்றியது.

அவருக்கு நேரே இருந்த சர்வாச்சார்யா இருக்கை, அவனை போலவே மதிப்பில் மனிதரை மிரட்டியது.

அவன் உயரம் குருமூர்த்தியை மிரள வைப்பது உண்மை. அவன் மதிப்பிற்கு எங்களால் எந்த பாதகமும் வந்துவிட கூடாது என்று மனிதர் அதிகமே நினைத்தார்.

ஆனால் மகள்! இவனை தவிர வேறு ஒருவனை அவள் ஏற்று கொள்வாள் என்ற நம்பிக்கை மனிதருக்கு அணு அளவும் இல்லை.

குருமூர்த்தி இருக்கையில் அமர முடியாமல் எழுந்துகொண்டார்.

சென்னை மாநகரத்தை கண்ணாடி வழியே பார்த்தவருக்கு, இந்த கட்டிடத்தின் உயரம் புரிந்தது.

பிரம்மாண்டமான கட்டிடம், அசர வைக்கும் முதலாளியின் அறை, திரும்பும் இடமெல்லாம் பணத்தின் பளபளப்பு, அமைதியான தளம், ஏசியின் குளுமை! எம்பையர் இந்த கட்டிடத்தின் முன் எந்தளவு தாக்கு பிடிக்கும்? ஏன் இதை விட்டு அங்கு வந்தான்?

குருமூர்த்தி அங்கிருக்கும் வெள்ளை நிற கவுச்சில் அமர்ந்து கொண்டார்.

நிமிடம் சென்று, கதவு திறக்கப்பட, வேக நடையுடன் உள்ளே வந்தான் சர்வாச்சார்யா.

குருமூர்த்தி தன்னை போல் எழுந்துவிட, சர்வாச்சார்யா பின் வந்த சிலர் அவனிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்தார்கள்.

சர்வாச்சார்யா அவன் இருக்கைக்கு செல்லாமல், நேரே இவரிடம் வந்தவன், அவரின் கைப்பற்றி அமரவைத்து தானும் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

வந்தவர்களிடம் சுருக்கமாக பேச்சை முடித்து கொண்டு, அவர்களை கிளம்ப சொல்ல, தயங்கி நின்றார்கள்.

“நான் வெய்ட் பண்றேன்” என்று குருமூர்த்தி மெல்ல சொல்ல,

“அவங்க வெய்ட் பண்ணட்டும்” என்றான் நாயகன்.

“ராகவ்” என்ற குரலுக்கு, டீ வந்தது.

குருமூர்த்தி எடுத்து கொள்ள, இவன் உதவியாளரை வரவைத்து படபடவென உத்தரவுகளை பிறப்பித்தான்.

“நாளைக்கு மீட்டிங் இருக்குன்னு டிரைக்டருக்கு இன்பார்ம் பண்ணுங்க. கார்த்திக் சார்கிட்ட நாளைக்குள்ள பைல் வேணும்ன்னு சொல்லிடுங்க. அப்புறம், இனியொரு முறை இப்படி நடந்தா, அந்த டீமே இருக்காதுன்னு வார்னிங் மெயில் அனுப்புங்க” என்றான்.

உதவியாளரும் அவன் சொன்னதை எல்லாம் உடனுக்கு உடனே செய்து முடித்தார்.

குருமூர்த்தி டீ குடித்து முடிப்பதற்குள், அங்கு பல வேலைகள் முடிக்கப்பட்டிருந்தது.

“சார். உங்களுக்கான லன்ச் மேத்தா சாரோட” என்று உதவியாளர் நினைவுபடுத்திவிட்டு சென்றார்.

“வேலை நேரத்துல தொந்தரவு பண்ணிட்டேன்” என்று குருமூர்த்தி சொல்ல,

“இன்னைக்கு முக்கியான மீட்டிங் ஒன்னு இருந்தது. அதனால தான் இப்படி?” என்றவன், டையை தளர்த்திவிட்டு,  மிகவும் சவுகரியமாக சாய்ந்து அமர்ந்தான்.

“உனக்கு டீ?” என்று குருமூர்த்தி கேட்க,

“மீட்டிங்ல குடிச்சிட்டேன்” என்றவன், குருமூர்த்தியை குறுகுறுவென பார்த்தான்.

“என், என்ன?”

“நீங்க தான் சொல்லணும். புதுசா என்னை தேடி வந்திருக்கீங்க?”

“க்கும், அது. அது இன்னைக்கு என், என் பொண்ணு பேசினா. இல், இல்லை. என்கிட்ட கேட்டா”

“ம்ஹ்ம்”

“அதுதான் உன்கிட்ட பேசிட்டு போலாம்ன்னு”

சர்வாச்சார்யா சொல்லி முடிங்க என்று பார்த்திருந்தான்.

நீ வேணாம் என்று சொல்லும் போது கடினமாக உணர்ந்தார்.

ஆனால் நீ வேணும் என்று கேட்க திணறுகிறார் மனிதர்.

நல்லவன் முகம் பார்க்க முடியவில்லை. எங்கெங்கோ பார்த்தார்.

ஏதோ புரிந்திருக்க வேண்டும். நாயகன் உல்லாசமாக விசிலடித்தான்.

“முன், முன்னாடி பேசினோம் இல்லை. அதை பத்தி”

“எதை பத்தி?”

“அதான்.  நாள் குறிக்கலாம்ன்னு”

“எதுக்கு நாள் குறிக்க பேசினோம். எம்பையர் திறப்பு விழாக்கா? அதுதான் முடிஞ்சு போச்சே? ஓஹ் இப்போ கட்டிட்டு இருக்க செகண்ட் ப்ராஜெக்ட்க்கா?”

“அதை கட்டி முடிக்க இன்னும் நாள் இருக்கு”

“நான் சீப் கெஸ்ட்டா வரணுமா?”

அடங்காதவன் படுத்துறான்!

 “டேய். அதில்லை. கல், கல்யாணத்துக்கு நாள், நாள் குறிக்க”

“நீங்க கூட என்னை வேணாம்ன்னு சொன்னீங்களே? ஞாபகம் வந்திடுச்சு”

“இப்போ அதை பத்தி நாம பேசலாம்”

“அவ்வளவு பெருசா பேசுட்டீங்களே? திரும்ப என்ன பேசணும்? ஏதாவது காரணம் விட்டு போச்சா என்ன?” என்று கேட்டான் சேட்டைக்காரன்.

“நாள் குறிக்கலாம்” என்றார் குருமூர்த்தி.

“எதுக்கு?” என்று இவன் கேட்டான்,

“கல்யாணத்துக்கு தான்”

“யாருக்கு?”

“உனக்கும், என் பொண்ணுக்கும்” ஒரு வழியாக சொல்லிவிட்டார் குருமூர்த்தி.

ஆசுவாசத்துடன் மூச்சை விட்ட மனிதரிடம், “வேணாம்ன்னு சொன்னது என்னாச்சு?” என்று கேட்டான் நல்லவன்.

“நீ வேணும்ன்னு தான் பேச வந்திருக்கேன்” என்றார் குருமூர்த்தி.

“என்ன திடீர்ன்னு?”

“சம், சம்யுக்தா கேட்டா, என் பொண்ணு நீ வேணும்ன்னு கேட்டா”

“ஓஹ். உங்களுக்கு?”

“எனக்கு என்ன? என் பொண்ணு”

“நான் உங்களை கேட்டேன்” என்றான் அழுத்தமாக.

“என்னால உனக்கு எந்த பேச்சும் வந்திட கூடாது. நான் நல்லவன், கெட்டவன்னு யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை. ஆனா நீ, உன்னோட சம்மந்தப்படும் போது என்னால அப்படி இருக்க முடியாது”

“அதுக்கு?”

“கல், கல்யாணத்துல அப்பா, அப்பான்னு என், என்னை சொல்லாம”

“யோவ் என்ன பேசிட்டு இருக்க நீ?”

“டேய் தம்பி. புரிஞ்சுக்கோ. எல்லோருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. என் கடந்தகாலம்  என்னோட போகட்டும். நீ ஏன் அந்த பாரத்தை சுமக்கணும்?”

“எந்த ம*று என்ன பேசினா எனக்கென்ன? ஊர்ல இருக்க எந்த நாதரிக்காகவும் நான் வாழலை”

“கோவப்படாதடா தம்பி. உன் தொழில் எல்லாம் என்னால பாதிக்கப்படும். முதலீடு பண்றவங்க எல்லாம் உன்னை கேள்வி கேட்பாங்க, பங்கு விலை வரைக்கும் குறையும்”

“அதுக்காக உன் பொண்ணை அனாதைன்னு சொல்ல போறியா?”

“அந்த வார்த்தை சொல்லாதடா ராஸ்கல். நான் இருக்கும் போது என் பொண்ணை எப்படிடா நீ சொல்லுவ?”

“நீதான் ஊரை கூட்டி சொல்ல நினைக்கிற?”

“வேறென்ன பண்ணட்டும் நான்? இரண்டு பேரும் பிடிவாதமா நிக்கிறீங்களே?”

“இதுதான் உங்க பிரச்சனையா? சரி. எங்களுக்கு கல்யாணமே வேண்டாம், நீங்க கிளம்புங்க”

“தம்பி என்னடா இது?”

“பேசாம போயிருங்க” என்று கத்தியவன் அவன் இருக்கைக்கு சென்றுவிட்டான்.

குருமூர்த்தி மிக, மிக கடினமான மனதுடன் தான் இப்படி ஒரு யோசனையை சொன்னார்.

சர்வாச்சார்யா தொழிலில் இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கிறான். இந்த சமயத்தில் இவனுக்கு ஒரு கரும்புள்ளியா நான் இருக்க வேண்டுமா?

சர்வாச்சார்யாவின் மாமனார் கொலை குற்றத்திற்காக ஜெயிலுக்கு போனார் என்று  தானே உலகம் முழுக்க பதிவாகும். சட்டத்தின்  படி அதுதான் உண்மையும் கூட!

சுபாவின் முடிவே அவருக்கு வாழ்நாள் குற்ற உணர்ச்சியை கொடுத்து விட்டிருந்தது. பல இரவுகள் தூக்கமில்லா இரவுகள் தான்.

இதில் இவனுக்கும் அநியாயம் செய்ய முடியுமா?

“டேய் தம்பி”

ம்ஹூம் பதிலில்லை.

அவன் கோவம் உண்மையில் மனிதருக்கு மகிழ்ச்சி!

இவனுக்கும் பார்க்க வேண்டும் என்று தான் அந்த வீணான யோசனை.

கோபத்துடன் அமர்ந்திருந்தவன், “பொண்ணு மேல உயிரையே வைச்சிருக்கவர் சொல்ற யோசனையா இது?” என்று கத்தினான்.

இறுதியில் குருமூர்த்தி தான், “நான் அதை சொல்லியிருக்க கூடாது. தப்பு தான். விடுடா தம்பி” என்று வெகு நேரம் பேசிய பின்னே, நிதானத்துக்கு வந்தான் நல்லவன். அப்போதும் சமாதானம் ஆகவில்லை.

அதன் பின் எல்லாம் ஜெட் வேகம் தான். கண் மூடி திறப்பது போல் திருமணமே முடிந்து விட்டது.

மகள் நல்ல முறையில் புகுந்த வீடு சென்றுவிட்டாள்.

நிறைவுடன் வெறுமையையும் உணர்ந்தார் குருமூர்த்தி.

சம்யுக்தா அந்த நேரம் அழைத்து வருகிறேன் என்று சொன்னதில் மனிதர் பதறி விட்டிருந்தாலும், பின் பரபரப்பாகி விட்டார்.

அறையை விட்டு ஓடி வந்தவர், எல்லோரையும் விரட்டி மகள், மருமகன் வருகைக்கான ஏற்பாட்டை செய்தார்.

சர்வாச்சார்யா கார் தெருவில் வரும் போதே, வெடி சத்தம் காதை பிளந்தது.

ஊர்க்காரர்கள் அத்தனை பேரும் சொந்தங்களாக வந்து நின்றுவிட்டனர்.

சர்வாச்சார்யா மனைவி கரம் பற்றி நிற்க, ஆரத்தி எடுக்கப்பட்டது.

சம்யுக்தா கணவனுடன், சாமி அறைக்கு சென்ற பின், சுபத்ரா புகைப்படம் முன் சென்று நின்றாள்.

சுபாவை பார்த்து கொண்டே இருந்தாள். பெண் அழவில்லை. இப்போது மட்டுமில்லை எப்போதும் அவள் அம்மாவை தேடி அழுது பார்த்ததில்லை.

ஏன் இப்படி? சர்வாச்சார்யா இன்று தான் கவனித்தான்.

மணமக்களுக்கு உபசரிக்கபட, “ஸ்வீட் எங்க? பலகாரம் இன்னும் வரலை, டீ, காபி இரண்டும் எடுத்துட்டு வாங்க, சீக்கிரம்” குருமூர்த்தி சத்தம் பெரிதாக கேட்டது.

மனிதர் இங்கும், அங்குமாக ஓட, “என்னவாம் உன் அப்பாக்கு?” என்று மனைவியிடம் உதட்டை பிதுக்கினான் நல்லவன்.

குணா சுட சுட பலகாரத்தை எடுத்து வர, “மண்டபத்துல உங்களை காணலை?” என்று கேட்டாள் சம்யுக்தா.

“சார். யார் இந்த மேடம்? என்கிட்ட ஏன் பேசுறாங்க?” என்று கேட்டான் குணா.

சர்வாச்சார்யா, “திருந்திட்டியா என்ன? முதலாளிகிட்ட நேரா சண்டை போட்டு தானே உனக்கு பழக்கம்?” என்று கேட்டான்.

“அவர் கொடுத்த கிப்ட் நான் வாங்கலை. அந்த கோவம்” என்றாள் சம்யுக்தா.

“அப்படியென்ன கிப்ட் கொடுத்தார்?”

“தங்க வளையல்!”

“வாங்கிக்கோ” என்றான் சர்வாச்சார்யா.

“அவர் இத்தனை வருஷமா சேர்த்து வைச்ச பணம்ங்க” சம்யுக்தா அவனின் காதில் எட்டி சொல்ல,

“ரூம்ல இப்படி ரகசியம் பேசுடி. நல்லா இருக்கு” என்று இவன் பதிலுக்கு கிசுகிசுத்தான்.

“உங்களோட” சம்யுக்தா சிவந்து விட்ட முகத்தை திருப்பி கொண்டாள்.

“நாம பின்னாடி பார்த்துக்கலாம். இப்போ வாங்கு” என்றான் சர்வாச்சார்யா.

குணா திரும்ப பலகாரம் எடுத்து கொண்டு வர, “கிப்ட் கொடுங்க” என்று கேட்டாள் சம்யுக்தா.

“உண்மையாவா?” என்று கேட்டவன், பாக்கெட்டிலே வைத்திருந்ததை எடுத்து மகிழ்ச்சியுடன் நீட்டினான்.

ஆறு பவுன்க்கு மேலே  இருக்கும் போல. பெரிதாக, கனமாக இருந்தது.

சம்யுக்தா அப்போதே கைகளில் மாட்டி கொண்டவள், “ரொம்ப நல்லா இருக்கு” என, அவளின் உச்சி தலையில் கை வைத்து அழுத்திவிட்டு சென்றான் குணா.

வெளியே பந்தி நடந்து கொண்டிருக்க, சர்வாச்சார்யா தானே மனைவியுடன் அங்கு சென்றான். பந்தல் இடப்பட்டு, விளக்கு தோரணங்களின் ஜொலிப்பில் மிக பெரிய பந்தி அமர்க்கள பட்டு கொண்டிருந்தது.

 சம்யுக்தா சிலரிடம் பேசிவிட்டு கணவனை பார்க்க, “நீ போ” என்று அவளை போக சொல்லிவிட்டவன், அங்கேயே நின்றான்.