கடந்து செல் காதலுடன்! 46

‘இவர்கள் எல்லாம் காதலிக்கலாம்! இவர்கள் எல்லாம் காதலிக்க கூடாது!’

ம்ஹ்ம். எல்லை வகுக்கிறார்களா? இல்லை. அடக்குமுறை!

நீ இதைத்தான் பண்ணனும், நீ இதை பண்ண கூடாது!  சகமனிதர்களை அடக்க துடிக்கும் கூட்டம்!

உன் தகுதிக்கு நீ ஆசைப்படலாமா? படக்கூடாது. அப்போ என்ன பண்ணனும்? நீ வேடிக்கை பாரு, நான் அனுபவிச்சிட்டு போறேன்! ஹாஹா!

கடவுளும் காதல் கொள்ளலாம்! சாமானியனும் காதல் கொள்ளலாம்!

கடவுள் சாமானியனை எதிர்ப்பதில்லை, தண்டிப்பதில்லை!

ஆனால் சகமனிதன் எதிர்க்கிறான், தண்டிக்க பாடுபடுகிறான்!

 ஹிட்லரும் காதலிதத்தார்! சேகுவாராவும் காதலித்தார்!

கொடூரமான மனம், போராளி குணம் கூட காதல் மடியை  கேட்கிறது.

காதல் பொதுவான ஒன்று தான். ஆனால் ஏன் அதை மிகவும் உயர்த்தி பிடிக்க வேண்டும்? மிகவும் தாழ்த்தி பேச வேண்டும்? 

பரிமாண வளர்ச்சி காதலிலும் உண்டு. அழகானது எல்லாம் சிதைக்கப்பட்டு விடும் என்ற விதி காதலுக்கும் பொருந்துமா?

இல்லை. பல காதல்கள் அப்படி சொல்லவில்லை. 

காதலுக்கான வரையறை காதலிப்பவர்களிடம் தான் எழுதப்படுகிறது! 

சர்வாச்சார்யா, சம்யுக்தா காதலுக்கான வரையறையும் இவர்களால் தான் எழுதப்பட்டது.

இதுதான் காதல்! இப்படி தான் காதலிக்க வேண்டும், காதலுக்காக இதையெல்லாம் தான் செய்ய வேண்டும், இதையெல்லாம் செய்ய கூடாது  என்ற எல்லை கோட்டிற்குள் இவர்கள் அடங்கியதில்லை.

தெரியும், தெரியும் நம் நாயகனே அடங்காதவன் தான்! அவனுக்கு எல்லை கோடு இல்லை தான். ஆனால் எல்லையை கடந்து அவனால் காதல் செய்ய முடியும்!

சம்யுக்தா எனும் பெண்ணுக்காக அவன் எதை செய்ய மாட்டான்? பதில் கிடைப்பது கடினம்!

அவளுக்காக மொத்த உலகத்தையும் எதிர்ப்பான். அவளையும் சேர்த்து தான். பின் எப்படி இத்தனை வருடங்களாக அவளை பார்க்கமால், அவளுடன் பேசாமல் அவனால் இருக்க முடிந்தது. 

என் பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் தான் பேசுவேன் என்று சபதம் ஏதும் எடுத்திருப்பானோ? இவனை நம்ப முடியாது! இருந்தாலும் இருக்கும்!

இப்போது சம்யுக்தாவிடம் பேசிவிட்டான். அதான் தாலி கட்டிவிட்டானே!

“மிஸஸ் சர்வாச்சார்யா. சம்யுக்தா ராஜ்யத்துக்கான ராஜா வந்தாச்சு” என்றான் நாயகன்.

பேசுறானா? சம்யுக்தாவின் விழிகள் விரிந்து தான் போனது.

நனைந்துவிட்ட இமைகளை தாழ்த்தி கொண்டாள் சம்யுக்தா.

ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க என்று அவனிடம் இறுதி வரை கேட்கா அதிசய பெண்ணவள் இவள்!

இப்போ மட்டும் ஏன் பேசுறீங்க என்று கேட்பாளா என்ன?

சம்யுக்தா முகம் நிமிர்த்தப்பட்டு அவளின் நெற்றியில் குங்குமம் வைத்தான் சர்வாச்சார்யா.

உணர்ச்சி வயப்பட்டிருந்த பெண்ணின் கரத்தை கோர்த்து கொண்டான் நாயகன்.

அவனின் ஐந்து விரல்களோடு, உள்ளங்கையும் சேர்த்து இறுக்கி கொண்டாள் சம்யுக்தா. அப்படி ஒரு அழுத்தமான கரத்தின் அணைப்பு!

மெட்டி அணிவித்த நேரம் சர்வாச்சார்யாவின் உதடுகள் குறுகுறுத்தது. 

பெண்ணின் பாதத்தில், மருதாணி கோலத்திற்குள் மறைத்து  வரையப்பட்டிருந்த உதடுகள் சிவந்து விட்டிருந்தது.

மெட்டி அணிவித்த நாயகனின் விரல் உயர்ந்து, பாதத்தில் மறைந்திருந்த உதட்டை வருடியது.

மருதாணிக்கு இணையாக சிவந்து போன சம்யுக்தா, பற்றுதலுக்காக நாயகனையே பற்றி கொண்டாள். 

அதன் பின்னான சடங்குகள் வேகமாக முடிந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்கள் மணமக்கள்.

சிவப்பிரகாசம் தம்பதி பூரிப்பில் திளைத்திருந்தவர்கள், மகன், மருமகளுக்கு ஆசீர்வாதத்தை அள்ளி, அள்ளி கொடுத்தார்கள்.

 சிறு குறையும் வைக்கா பெற்றவர்கள்!

ம்ம்ஹ்ம். ராஜா மகன் தான் சர்வாச்சார்யா.

“தேங்க்ஸ் மாம் அண்ட் டாட்!” தங்கமகன் அப்பா, அம்மாவை தன் இரு கரத்திற்குள் அடக்கி கொண்டான்.

“ராஜா. என்னப்பா” என்ற சிவப்பிரகாசம் கலங்கி விட்ட கண்களுடன் மகன் முதுகை தடவி கொடுக்க, வசுந்தரா மகன் நெற்றியில் ஆழமான முத்தத்தை பதித்தார். 

“மருமகளே!” என்ற சிவப்பிரகாசம் ஆர்ப்பாட்டமான சிரிப்புடன், மருமகளை தன் தோளோடு அணைத்து கொள்ள,

“மாமா” என்ற மருமகள் சங்கடமான வெட்கத்துடன், முகத்தை மறைத்து கொண்டாள்.

‘இந்த முறை நான் பொறுப்புல இருந்து தவற மாட்டேன்!’ வசுந்தரா உறுதியுடன், சம்யுக்தாவை அணைத்து கொண்டார்,

பெருமதிப்பு கொண்ட நீதிபதி மாமியார்! 

என்னுடைய எல்லா முக்கியமான கட்டத்திலும் வசுந்தரா இருக்கிறார்! என்ன பந்தம் இது! சம்யுக்தாவின்  நெஞ்சம் நெகிழ்ந்து போனது.

அடுத்து குருமூர்த்தியிடம் வந்தார்கள் மணமக்கள்.

தந்தையை நெருங்க, நெருங்கவே சம்யுக்தாவின் கால்கள் தடுமாற்றம் கண்டது.

குருமூர்த்தி முன் ம்ஹூம் மாமனார் முன் நெஞ்சை நிமிர்த்தி நின்றான் நல்லவன்.

குருமூர்த்திக்கோ மணக்கோலத்தில் நின்றவர்களை பார்க்க, பார்க்க தெவிட்டவில்லை.

சர்வாச்சார்யா மனைவியுடன் அவரின் பாதம் பணிய, மனிதருக்கு விழியோரம் கசிந்து போனது.

சம்யுக்தாவின் கண்ணீர் துளி குருமூர்த்தியின் பாதத்தில் பட, மனிதர் நடுங்கி போனார்.

அவரின் நடுங்கும் கரத்தை பிடித்து கொள்ள சுபத்ரா இல்லை.

நம்ம பொண்ணு கல்யாணம்டி சுபா! என்கூட நீ இருந்திருக்கணும்! அவருக்கு  அருகில் இருக்கும் வெற்றிடம் குருமூர்த்தியை வீழ்த்தியது.

என்னை ஒத்தையில நிக்க வைச்சுட்ட இல்லை! 

மனிதர் சமாளித்து, மனைவிக்கும் சேர்த்தும் மணமக்களை ஆசீர்வாதம் செய்தவர் இருவரையும் தூக்கிவிட, சம்யுக்தா தாளாமல் தந்தையின் மார்பில் முகத்தை புதைத்து அப்படி ஒரு அழுகை.

மண்டபத்தில் வைச்சு அழுதிடவே கூடாது, அப்பா தாங்க மாட்டார் என்று ஒரு வாரமாக உறுப்போட்டது எல்லாம் வீண்!

குருமூர்த்தியை விட அவரின் மகள் தான் அதிகம் உடைந்து போனாள். 

தனித்து நிற்கும் தந்தை அவளின் நெஞ்சில் சுமக்கா முடியா பாரத்தை உணர வைத்தார்.

குருமூர்த்தி மகளின் அழுகையில், தளர்ந்து விடாமல் இருக்க அதிகம் முயன்றார்.

நடுக்கும் கரத்துடன் மகளின் உச்சி தலையைதொட்டு வருடி கொடுத்தவர், “ச, சம். சம்யுக்தா. என், என்ன, போதும்மா” என்று மகளை சமாதானம் செய்ய, மகளின் கண்ணீர் நிற்பதாக தெரியவில்லை.

‘எதாவது பண்ணுடா‘ என்று சர்வாச்சார்யாவை ம்ஹூம் மருமகனை பார்க்க, அவனோ யார் நீங்க என்று பார்த்தான்.

“சம்யுக்தா. போதும்மா. என்ன இது? உங்க அப்பாவும் கஷ்டப்படுறார் பாரு” என்று வசுந்தரா மருமகளிடம் சொன்ன பின்னே, சம்யுக்தா வேகமாக கண்களை துடைத்து, தந்தையை விட்டு பிரிந்து நின்றாள்.

குருமூர்த்தி விறைப்பாக நின்ற நல்லவனை அணைத்து கொள்ள, அராஜக குதிரை திமிறத்தான் செய்தது.

அவனின் கைகள் வெறுமனே இருக்க, அவனுக்கும் சேர்த்து தான் மாமனார் தழுவி கொண்டார்.

மகளை அணைத்த போது உடைந்த மனது, மருமகனை அணைத்த போது திடம் கொண்டது.

சர்வாச்சார்யா முதுகை மெலிதாக தட்டி கொடுக்க, “மருமகன்னு பயம் இல்லாம அடிக்கிறீங்க?” என்று கேட்டான் நாயகன்.

“மருமகன்னா பயப்படணுமா? இனி தெரிஞ்சுக்கிறேன்” என்றார் குருமூர்த்தி.

“இனிமேல் இப்படி எல்லாம் கட்டிப்பிடிக்க கூடாது. டென் ஸ்டெப்ஸ் பேக்ல தான் இருக்கணும்” என்று புதிய விதி வேறு.

“ராஜா என்ன இது? அவர்கிட்ட இனி இப்படி எல்லாம் பேசக்கூடாது” என்று சிவப்பிரகாசம் சங்கடத்துடன் மகனை கண்டிக்க,

“விடுங்க. விடுங்க. ஒன்னுமில்லை” என்று வேகமாக சொன்னார் குருமூர்த்தி.

நல்லவன் ஏதோ பேச வரவும், “சர்வா. அத்தைங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க” என்று வசுந்தரா இடையிட்டார். 

இவர்களை விட்டால் விடிய விடிய கூட நின்று வழக்கடிப்பார்கள் என்று அவருக்கு தெரியுமே!

“அப்புறம் இதை பத்தி பேசலாம்” என்ற நாயகன், மனைவியின் கரம் கோர்த்து அத்தை, மாமாக்களிடம் சென்றான்.

சிரித்த முகமாக நின்றவர்கள் நல்ல முறையிலே ஆசீர்வதிக்க, சர்வாச்சார்யா இரு அத்தை ஜோடிகளையும் அணைத்து கொண்டான்.

சம்யுக்தாவை இளையவர்கள் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன், சர்வாச்சார்யாவை தூக்கி அதகளம் செய்துவிட்டார்கள்.

அதன் பின்னே விருந்தினர்கள் மேடைக்கு ஏற்றப்பட, அடுத்தடுத்த நிமிடங்கள் பறந்து போனது.

இடையில் மணமக்களுக்கு பந்தி பரிமாறப்பட, இனிப்பை கண்டதும் திரும்பி நாயகனை பார்த்தாள் சம்யுக்தா.

இருவருக்கும் பிடித்தமான இனிப்பை, சர்வாச்சார்யாவிற்கு தானே ஊட்டிவிட்டாள் சம்யுக்தா. 

நல்ல நேரத்தில் மணமக்கள் கிளம்ப வேண்டும். சம்யுக்தா இந்த முறை அழுகாமல் தந்தையிடம் நல்ல முறையிலே விடைபெற்றாள்.

குருமூர்த்தி மகளை நிமிடமே தன் நெஞ்சத்தில் தாங்கி நின்றவர், “பார்த்துக்கோமா. சந்தோஷமா இருங்க” என்றார்.

வேறென்ன புத்திமதி சொல்ல? 

கற்பகம் பாட்டி தான் ஒரு வரமாக அவளுக்கு புத்தி சொல்லி கொண்டிருந்தாரே! போதாதற்கு இப்போதும் அவளின் கைப்பற்றி சொன்னவர், அழுதபடி அவளுக்கு விடைகொடுத்தார்.

லிங்கத்திடம் பெண் விடைபெற்று கொள்ள, அவர் கண்களும் சிவந்து போனது.

குருமூர்த்தி மீதான அன்பு அவரின் மகள் மீது இல்லாமல் இருக்குமா? அவர்கள் சூழ்நிலை இவளை வளர்க்க முடியவில்லை. என்ன செய்ய?

மாசிலாமணி ஓடியாடி வேலை பார்த்து கொண்டிருந்தவர், சம்யுக்தா கிளம்பவும், அவசரமாக வந்தவர், “பத்திரம் பாப்பா” என்று பெண்ணின் உச்சி தலையில் கை வைத்து சொன்னார்.

“குணா எங்க?” என்று அவனின் அம்மா பானுமதியிடம் கேட்க,

“பந்தி பரிமாறுற இடத்துல தான் இருக்கான். உனக்கு லேட் ஆகுது பாரு. நீ கிளம்புமா” என்றார் பானுமதி.

 சர்வாச்சார்யாவிடம், “பார்த்துக்கோ. என் பொண், என் பொண்ணை பார்த்துக்கோ” என்றார் குருமூர்த்தி.

“ஏறுங்க” என்றான் நல்லவன் கார் கதவை திறந்து.

“நான் எங்க?” என்று மனிதர் அதிர, 

“எங்களோட நீங்களும் தான் வரீங்க” என்றான் இவன்.

“இ, இல்லை. நீங்க கிளம்புங்க. நான் நாளைக்கு  வரேன்” என்று குருமூர்த்தி பின் வாங்க.

“ஏன் இப்போ வந்தா என்ன? சீக்கிரம் ஏறுங்க” என்றான் பிடிவாதக்காரன்.

“சர்வா. என்ன இது? அவர்தான் வரேன்னு சொல்றார் இல்லை. வற்புறுத்த கூடாது. நீ வா. நேரம் ஆச்சு பாரு” என்று வசுந்த்ரா மகனை கண்டிக்க,

“மாம். என்ன இது? அவர் இப்போ வந்தா என்ன?” என்று மகன் கேட்டான்.

“ப்ளீஸ். நாம மட்டும் கிளம்பலாம்” என்று சம்யுக்தா சொல்ல, சர்வாச்சார்யா கடுப்புடன் காரில் ஏறி கொண்டான்.