கடந்து செல் காதலுடன்! 44

சர்வாச்சார்யாவின் வார்த்தைகள் பெண்ணை முதலில் திகைக்க தான் வைத்தது.

அவனின் அடாவடி பேச்சுக்கள் தெரியும், முரட்டு தனமும் தெரியும். ஆனால் இதென்ன தள்ளி வைத்து பேசுவது?

சம்யுக்தாவிற்கு முகம் சிவந்து, மூக்கும் விடைத்துவிட்டது.

ஆகாஷின் ஆச்சரியமான பார்வை இருவர் மீதும் படிந்தது. கூடுதலாக சர்வாச்சார்யா மீது! சம்யுக்தாவிற்காக மொத்த குடும்பத்தையும் எதிர்த்து நிற்பவன் பேசுகிற பேச்சா இது?

சண்டையா இருக்கும். இல்லைன்னா மாமாவாவது இவங்களை இப்படி பேசுறதவாவது?

பிறந்ததுல இருந்து கூடவே வளர்ந்த எங்களை இவங்களுக்காக விட்டு கொடுத்துட்டார் தானே? எத்தனை, எத்தனை நல்லது, கெட்டதுகளை ஒண்ணா கடந்து வந்திருக்கோம்.

ஆண் பிள்ளைகளுக்கு இடையில் சண்டைகளுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. ஆனால் அன்பிற்கும் குறைவில்லையே? அப்புறமும் ஏன்? ஆகாஷின் மனத்தாங்கல் தீரவே வழியில்லை.

முகத்தை திருப்பி கொண்டவன், பின் தலையில் பட்டென ஒன்று விழுந்தது.

“மாமா” என்று கோவமாக தலையை தேய்த்து கொண்டான் ஆகாஷ்.

“அந்த ஆள் வேற பார்த்துட்டார். பப்லிக்ல இப்படி பண்ணாதீங்க மாமா. வளரும் தொழில் அதிபரை மரியாதையா நடத்துங்க” என்றான் அவன் முடியை அட்ஜஸ்ட் செய்தபடி.

“ஒஹ். வளரும் தொழில் அதிபர்!” என்று ஏகத்திற்கும் ஆச்சரியமான சர்வாச்சார்யா கையசைவில் அவன் கைக்கு மைக் வந்தது.

அவன் கம்பெனி சார்பாக தான் ப்ரேசெண்டேஷன் நடந்து கொண்டிருக்க, “சார். இனி ஆகாஷ் கன்டினியூ பண்ணுவார்” என்று அறிவித்தான் சர்வாச்சார்யா.

“மாமா” என்று ஆகாஷ் மெல்லிய குரலில் அலற,

“எழுந்து போங்க பிஸ்னஸ் மேன்” என்றான் நல்லவன் நக்கலாக.

“மாமா. நான் அப்பா சொன்னார்ன்னு தான் தலை காட்டிட்டு போக வந்தேன். எனக்கு இதுபத்தி ஒன்னும் தெரியாது”

“தெரிஞ்சுக்கோ, போ. இந்த மேடம் தான் வளைச்சு, வளைச்சு கிளாஸ் எடுத்தாங்களே!. டவுட்ஸ் கூட எக்கச்சக்கமான கேட்டு, நீயும் அதை உன்னிப்பா பார்த்துட்டு இருந்தியே. நீயும் ப்ரேசெண்டேஷன் கொடு. எழுந்து போ” என்றான் சர்வாச்சார்யா.

“டேய் மாமா!” என்று ஆகாஷ் பல்லை கடித்தான்.

சம்யுக்தாவை ட்ரெக்ட் செய்யும் போது நான் அவளுக்காக நிற்கவில்லை என்றா இப்படி?

“மரியாதையா பேசுடா வெண்ணெய். டேய் சொல்ற நீ? ராகவ்” என்றான் சர்வாச்சார்யா.

“சார்” என்று ராகவ் வந்து நின்றான்.

நீயா வரலைன்னா தோள்ல தூக்கி போட்டுட்டு போயிடுவேன்! ராகவ் பார்வையில் இதுதான் இருந்தது.

எங்க இருந்துதான் இந்த பீம் பாயை பிடிச்சார் தெரியலை. போன வாரம் கூட தனியாக பப் சென்ற கார்த்திகை கதற கதற தோளில் தூக்கி கொண்டு வந்து வீட்டில் போட்டான் ராகவ்.

நான் எல்லாம் எம்மாத்திரம்! ஆகாஷ் மூச்சை இழுத்து விட்டு கொண்டவன், “போறேன். போய் தொலையறேன்” என்று முனகியபடி மேடைக்கு ஏறினான்.

இன்னுமாடா கை தட்டிட்டு இருக்கீங்க? ஆகாஷ் புன்னகையுடன் நிற்க, “திறமையான இளம் தொழில் அதிபர் ஆகாஷ். பெரிய ஆளா வரக்கூடிய எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு” என்று சிலபல புகழ்ச்சிகள் வேறு.

ஆகாஷ் சமாளித்து நன்றி சொன்னவன், மடமடவென ப்ரேசெண்டேஷனை விட்ட இடத்தில இருந்து தொடர ஆரம்பித்தான்.

எப்பா முடிச்சாச்சு! நிம்மதி பெரு மூச்சுவிட்டவனிடம் நோக்கி கேள்விகளை கேட்க ஆரம்பித்தான் சர்வாச்சார்யா.

யோவ் மாமா ஏன்யா இந்த கொலைவெறி? ஆகாஷ் தனக்கு தெரிந்த பதிலை, சுத்தி வளைத்து சொல்லி கொண்டிருந்தான்.

“இதுக்கேன் சிங்கப்பூர் எல்லாம் போய்ட்டு வரணும். நம்ம சிப்காட்ல கூட எக்ஸாம்பிள் இருக்கு” என்றான் நாயகன்.

தெரியுது இல்லை, அப்புறம் ஏண்டா மாமா கேட்ட? ஆகாஷ் கண்களை சுருக்கி மாமனை முறைக்க, நாயகனோ கேள்விகளை நிறுத்தவில்லை.

ஆகாஷ் திணற, திணற கேள்விகளை எதிர் கொண்ட பின், போனால் போகட்டும் என நிறுத்தி கொண்டான் சர்வாச்சார்யா.

“சர்வா சாருக்கு ஆகாஷ் சார் மேல எவ்வளவு பாசம். என்னமா ட்ரெயின் பண்றார் மனுஷன்” என்ற பேச்சுக்களை கேட்டபடி நடந்து வந்தான் ஆகாஷ்.

அவர் ஆளுக்கு சப்போர்ட் பண்ணலைன்னா பழி வாங்குறார்டா! உள்ளுக்குள் கத்தியவன், இருக்கையில் தொப்பென அமர்ந்தான்.

“தண்ணீர் குடி” என்று சர்வாச்சார்யா பாட்டிலை நீட்டினான்.

“என்மேல கொட்டிடலாம்ன்னு மட்டும் நினைக்காத. இங்கேயே உன்னை உருட்டு விட்டுடுவேன்” என்று எச்சரித்தான் நாயகன்.

“வீட்ல போய் வைச்சுக்கிறேன் மாமா” என்று ஆகாஷ் பொறுமியபடி வேகமாக முழு பாட்டிலையும் காலி செய்தான்.

சம்யுக்தா ரோஷத்துடன் விறைப்பாக அமர்ந்திருந்தவள், அடக்க முடியாமல் மெலிதாக புன்னகைத்துவிட்டாள்.

“மாமா” என்றான் ஆகாஷ் உடனே.

“ஹேய் ஹாய்” என்று சர்வாச்சார்யா புன்னகையுடன் எழுந்து கை குலுக்கினான்.

அவனுக்கு எதிரில் நின்ற அழகியும், அவளின் அண்ணாவும் சர்வாச்சார்யாவிடம் மகிழ்ச்சியுடன் பேசி கொண்டிருக்க,

“ராகவ். இவங்க யார் தெரியுமா? மாமாக்கு ஜீனியர். காலேஜ் படிக்கும் போது மாமா இவங்களை டேட் பண்ணதா கேள்விப்பட்டேன்” என்றான் ஆகாஷ்.

சம்யுக்தா பார்வை பட்டென அந்த பெண் மேல் படிந்தது.

முகம் மலர்ந்து, சர்வாச்சார்யா பேச்சிற்கு தலையாட்டி புன்னகைத்து கொண்டிருந்தாள் அந்த அழகி.

ஏனோ பச்சை மிளகாய் கடித்தது போல் சட்டென ஒரு காரம் அடித்தொண்டையில் இருந்து கிளம்பியது.

கிரஷ் லிஸ்ட்டில் வைத்து கொள்ள, அத்தனை அம்சங்களும் பொருந்தியவன் சர்வாச்சார்யா. அவன் சமூக வலைதள பக்கத்திற்கு கூடி கொண்டே போகும் பாலோயர்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி தான்.

சம்யுக்தா பாலோ மட்டும் செய்யவில்லை. ஆனால் அடிக்கடி திறந்து பார்த்து கொண்டே இருப்பாள்.

நல்லவனின் புகைப்படம் இருக்காது. ஆனால் அவனின் தினசரி நாளுக்கான எதாவது ஒரு நிகழ்ச்சியை பதிவேற்றி விடுவான்.

சம்யுக்தாவிற்கு சில நேரம் சுள்ளென நெடி ஒன்று கிளம்பும் தான். ஆனால் இன்று என்னமோ கூடுதலான காரம்.

தொண்டையை செருமி கொண்டவள் முன்பு, நமட்டு சிரிப்புடன் வாட்டர் பாட்டிலை வைத்தான் ஆகாஷ்.

போடா டேய் போடா! என்று பெண் சிலுப்பி கொண்டாள்.

அந்த அழகியும், அவளின் அண்ணனும் பேசிவிட்டு சென்ற பின்னும், சம்யுக்தா இயல்பிற்கு திரும்பவில்லை.

இடைவெளி விடப்பட்டது. சர்வாச்சார்யா  எழுந்து நிற்க, சம்யுக்தா அவளின் உதவியாளர்கள் பக்கம் பார்த்தாள்.

“மேம். அவங்களை நம்ம கார்ட்ஸ் பார்த்துப்பாங்க. நீங்க ப்ளீஸ்” என்று ராகவ் சொல்ல,

சம்யுக்தா நாயகனுடன் நடந்தாள். இருவரும் ஒன்றாக தான் நடந்தார்கள். ஆனால்?

சில நாட்கள் என்றாலும், சம்யுக்தா உடனே இருக்கும் போது அவளின் கரம் பற்றியே நடந்த நல்லவன் இன்று, அவளின் கரத்தை உரச கூட இல்லை.

சம்யுக்தா ஏமாற்றத்தை விழுங்கி கொண்டு, மொபைலை அழுத்தமாக பற்றி கொண்டாள்.

“மேம்” என்று டீ கொடுக்க, வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

காபி, ஜுஸ் எது வந்தாலும் பெண் எடுக்கவில்லை.

“ராகவ். எனக்கு தலைவலிக்குது. இந்த தண்ட மீட்டிங்குக்கு நான் இருக்கிற வேலையெல்லாம் போட்டுட்டு வந்திருக்கேன். ஒழுங்கா காபியை எடுக்க சொல்லு” என்றான் நாயகன் அடிக்குரலில்.

முடியாது போடா மலைமாடு! சம்யுக்தா முகத்தை திருப்பி கொண்டாள்.

“சீனியர். ஸாரி உங்களை தொந்தரவு பண்றேன். சந்தேகம் ஒன்னு கேட்கணும்” என்று அந்த அழகி இவர்களிடம் வர,

“ஹேய் ஸாரி எதுக்கு? என்ன கேட்கணுமா கேளு” என்றான் நாயகன்.

அந்த அழகி சந்தேகத்தை கேட்டபடி காபியை எடுத்தவள், “சீனியர்” என்று இவனிடம் நீட்டினாள்.

சர்வாச்சார்யா வாங்கி கொள்ள, சம்யுக்தா கால்கள் வேறு பக்கம் திரும்பியது.

நாயகனால் அவளின் கரம் பற்றப்பட்டத்துடன், அந்த காபி கோப்பை இவளின் முன் நீண்டது.

சம்யுக்தா மற்றவர்கள் பார்வையில் மறுக்க முடியாமல் வாங்கி கொள்ள, சர்வாச்சார்யாவிடம் வேறு ஒரு கோப்பையை கொடுத்தான் ராகவ்.

“சீனியர் இன்ட்ரோ கொடுக்க மாட்டிங்களா?” என்று அந்த அழகி கேட்டவள்,  “ஹாய்.” என்று தன்னை தானே அறிமுகம் செய்து சம்யுக்தாவை ஜென்டிலாக அணைத்து விடுவித்தாள்.

சம்யுக்தா காபி கப்பை ராகவ் உடனே வாங்கி கொண்டு, திரும்ப அவளிடம் கொடுத்தான்.

“அப்புறம் ஆகாஷ்” என்று அவனிடம் அந்த அழகி பேச, சம்யுக்தா மெல்ல அந்த காபியை பருகினாள்.

ஏன் இப்படி? என்ன பண்றேன் நான்? சம்யுக்தா கண்களை அழுத்தமாக மூடி திறந்தாள்.

சின்ன புள்ளத்தனமா நடந்துக்கிறேனா? நான் இப்படி இல்லையே.

முதிர்ச்சி அதிகமே கொண்ட பெண்ணுக்குள்ளும், தனக்கானது மீது பற்றுதல் இல்லாமல் இருக்குமா என்ன?

சடசடவென உள்ளுக்குள் பரவும் உஷ்ணத்தை எப்படி கட்டுப்படுத்த நான்? காபி இன்னும் கூட தேவைப்பட்டது.

சம்யுக்தா திரும்பி பார்க்க, “நோ” என்றான் நாயகன்.

போடா உன்னை கேட்டேனா? எல்லாம் உன்னால தான்! சம்யுக்தா காபியை எடுத்து தீருவேன் என்று தீவிரமாக பார்க்க, “ராகவ்” என்றான் நல்லவன்,

“மேம். இது ஒரிஜினல் ஸ்ட்ராங்கான காபி பிளேவர். கசப்பு கொஞ்சம் அதிகம் இருக்கும்” என்று ராகவ் இவளிடம் விளக்கம் கொடுக்க,

“எனக்கு வேணும்” என்றாள் சம்யுக்தா.

பிடிவாதம் பிடிக்கிறேனா நான்? இது எப்போ இருந்து?

சம்யுக்தா நெற்றியை நீவிவிட, அவளுக்கு முன் காபி நீட்டப்பட்டது. கால் கப் அளவு கூட இல்லை.

பெண்ணுக்கு இப்போது அதை வாங்க தயக்கம். “மேம்” என்று ராகவ் அழைக்க, வாங்கி கொண்டாள் பெண்.

ராகவ் அவளிடம் சாப்பிட எதாவது எடுத்து வரட்டுமா? என்று கேட்க, வேண்டாம் என்று மறுக்க வந்தவள் திரும்பி நல்லவனை பார்த்தாள்.

சம்யுக்தா தானே சென்று அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்து தேவையானதை சொன்னாள்.

சர்வாச்சார்யா வந்ததை மறுக்காமல் எடுத்து உண்டவன், சம்யுக்தா நேரம் பார்க்கவும், “என்னை பேச சொல்லியிருக்காங்க ராகவ்” என்றான்.

ஓஹ் அதனால தான் கிளம்பலையா? சம்யுக்தா புரிந்து கொண்டவள், உதவியாளர்களிடம் சென்றாள்.

“எனக்கு வர லேட் ஆகும். நீங்க கிளம்பிக்கோங்க” என்று அவர்களிடம் சொல்ல,

“மேம். நீங்க” என்று தயங்கினார்கள் அவர்கள்.

“நாங்க பார்த்துகிறோம்” என்றான் ராகவ்.

சரியென அவர்கள் கிளம்பிவிட, சம்யுக்தா அவளின் மேஜைக்கு வந்தாள்.

“மேம். அங்க” என்று ராகவ் அவளை அழைத்து சென்று முதல் மேஜையில் அமர வைத்தான்.