குருமூர்த்திக்கு கொஞ்சம் குத்தியதோ?

ஆனால் அதற்கான காரணங்களும் நினைவிற்கு வர, மனிதர் நிமிர்ந்து கொண்டவர், “நம்மளோட வாழ்க்கைக்கு அதுதான் தேவைன்னா தூக்கி போடலாம். தப்பில்லை” என்றார்.

அதில் சர்வாச்சார்யாவின் முகம் தகதகவென சிவந்து போக, “அப்போ உங்களுக்கு நான் தேவையில்லாதவன் சொல்றீங்களா?” என்று நெஞ்சம் ஏறி இறங்க கேட்டான்.

“ப்பா. ப்ளீஸ்” என்று சம்யுக்தா இடையில் வர,

“சம்யுக்தா” என்ற தந்தை பார்வை, நீ தள்ளி இரு என்று மகளுக்கு சொன்னது.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” நாயகன் கேட்க,

“உனக்கு நாங்க தேவையில்லைனு சொல்றேன்” என்றார் குருமூர்த்தி.

“எனக்கு யார் தேவை, தேவையில்லைன்னு நீங்க முடிவு பண்ணுவீங்களா?”

“உனக்காக நான் முடிவு எடுக்க கூடாதா?” என்று குருமூர்த்தி நிதானமாக கேட்க,

“தாராளமா எடுக்கலாம். ஆனா எந்த உரிமையில எடுக்கிறீங்க?” நாயகன் தெளிவாக கேட்டான்.

“மகன் ஸ்தானத்துல எல்லாம் இருக்க மாட்டியா?” குருமூர்த்தி கேட்க,

“அப்போ இவளை எங்க அப்பாம்மாக்கு தத்து கொடுத்திடுங்க” என்றான் அவன் சாதாரணமாக.

“விதண்டாவாதம் பேசாதடா” என்று மனிதர் கோபம்கொள்ள,

“நீங்க பேசுறது தான் விதண்டாவாதம்” என்றான் இவன்.

“சரி அப்படியே இருக்கட்டும். இந்த கல்யாண பேச்சை எல்லாம் விட்டுட்டு  வேலையை பாரு போ” என்றார் குருமூர்த்தி.

“விட முடியாது. எல்லா ஏற்பாடும் ஆரம்பிச்சாச்சு”

குருமூர்த்தி நெற்றியை அழுத்தமாக தேய்த்து கொண்டார்.

சர்வாச்சார்யா அவரையே பார்த்திருக்க, “டேய் தம்பி. வேணாம்டா” என்றார் குருமூர்த்தி மிக பொறுமையாக.

அவரின் இந்த பொறுமை நாயகனை சில்லிட வைத்தது.

“காரணத்தை சொல்லுங்க” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“உனக்கு என் கடந்த காலம் எந்தளவு தெரியும்ன்னு எனக்கு தெரியல”

“எல்லாம் தெரியும். சுபத்ரா ஆண்ட்டிக்கு முன்னாடி பக்கத்து வீடு பரிமளா அக்காவை சைட் அடிச்ச”

“டேய், டேய். என்ன பேசிட்டு இருக்க நீ?” குருமூர்த்தி மகள் அங்கிருப்பதில் பாய்ந்து போய் அவன் வாயை அடைத்தார்.

சம்யுக்தா தந்தையை அதிர்ந்து பார்க்க, “க்கும். அது, அது, அந்த அக்கா என்னை விட பெரியவங்க. ரொம்ப நல்லவங்க, அவங்களை மாதிரி எனக்கும் பொண்டாட்டி வந்தா நல்லா இருக்கும்ன்னு” குருமூர்த்தி ஏன் சொல்கிறோம் என்று தெரியாமல் மகளுக்கு விளக்கம் கொடுத்து கொண்டிருக்க,

“அவளுக்கு புரிஞ்சிடுச்சு. நீங்க விஷயத்துக்கு வாங்க” என்றான் வில்லன்.

“உன்னை கொல்ல போறேன்டா ராஸ்கல். என் பொண்ணு முன்னாடி இப்படி எல்லாம் பேசி வைக்காத” என்று குருமூர்த்தி சத்தமே இல்லாமல் அவனுக்கு எச்சரிக்கை விடுக்க,

“சரி இனி இவமுன்னாடி பேச மாட்டேன்” என்றான் அவன் சத்தமாக.

குருமூர்த்தி தலையில் அடித்து கொள்ள, “உங்க பாஸ்ட் லைப்ல நடந்தது எல்லாம் எனக்கு தெரியும். அதுக்கும் என்னை வேணாம் சொல்றதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“என் கைக்குள்ளே இருக்க குடும்பம் தான் எனக்கு வேணும்” என்றார் குருமூர்த்தி.

“புரியலை?”

“சுபா தவறி போக நாந்தான் காரணம். என் பொண்ணு பிறந்ததுக்கு பின்னடியாவது, என் குடும்பம், என் வாழ்க்கைன்னு நான் மாறியிருக்கணும். ஆனா நான் மாறலை. அந்த அடிதடிக்குள்ளே ஊறி போயிருந்தேன். பணம் சேர்க்கணும்ன்னு எண்ணம் இருந்தது தான். ஆனா அந்த கெத்துக்கு நான் அடிமை ஆகிட்டிருந்தேன்” என்றார் குருமூர்த்தி.

“நீதிபதியா இருந்த உன் அம்மாகிட்ட கூட திமிரா தான் நடந்துப்பேன். யாரையும் மதிக்க மாட்டேன். போலீஸ், கோர்ட், கேஸ் எல்லாம் சர்வசாதாராணம். கட்டுப்பாடில்லாத வாழ்க்கை. அப்படியே தனியே இருந்திருந்தா கூட நல்லா இருந்திருக்கும்”

“ஆனா காதல்ன்ற பேர்ல சுபாவையும் இதுக்குள்ள இழுத்து விட்டு அவளையும் வாழ விடாம பண்ணி, நானும் ஜெயிலுக்கு போய், என் மகளும் ஹோம்ல வளர்ந்துன்னு, ரொம்ப மோசமா தோத்து போயிட்டேன்”

“உண்மையை சொல்லணும்ன்னா எனக்கு கிடைச்ச அந்த தண்டனை சரிதான். நான் அதுக்கு தகுதியானவன் தான். சுபாவும் என்னை கல்யாணம் பண்ணிகிட்ட தப்புக்காக இல்லாமலே போயிட்டா. என் பொண்ணும் எனக்கு மகளா பிறந்ததுக்கு பத்து வருஷம் அனாதையா வளர்ந்துட்டா. போதும். இதோட போதும். இதுக்கு மேல எங்க வாழ்க்கை சுமூகமா போகணும்ன்னு மட்டும்தான் நான் ஆசைப்படுறேன்” என்றார் குருமூர்த்தி.

“நான் உள்ள வந்தா உங்க வாழ்க்கை சுமுகமா போகாதா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“ஊட்டிக்கு நான் ஏன் வந்தேன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“திரும்ப உங்களை அந்த தொழிலுக்குள்ள இழுக்கிறாங்கன்னு தானே?” சர்வாச்சார்யா கேட்க,

“எந்த தொந்தரவும் இல்லாம அமைதியா வாழணும்ன்னு தான் ஊட்டிக்கு போனோம். ஆனா நீ வந்து, மொத்த வில்லங்கத்தையும் இழுத்து விட்டுட்ட?” குருமூர்த்தி சொன்னார்.

“அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே” நல்லவன் சொல்ல,

“திரும்ப ஆரம்பிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“ஹீரோ சார். நான் பிஸ்னஸ் மேன். ரௌடி இல்லை”

“ரௌடிக்குள்ள தான் பிஸ்னஸ் மேன் இருக்கான்”

சர்வாச்சார்யா அவரை முறைத்து பார்க்க, “நான் முதல்ல சொன்னது தான். என் பிடியில் தான் என் குடும்பம் இருக்கணும்” என்றார் மனிதர்.

“நான் உங்க பிடிக்குள்ள இல்லையா என்ன?” இவன் புருவங்கள் சுருங்கியது.

இவர் பேச்சை கேட்டிருக்கேனா? அட்லீஸ்ட் ஒரு முறையாவது. ம்ஹூம். இல்லையோ? ச்சு.

“இல்லவே இல்லை. உன் பிடிக்குள்ள நாங்க வந்துடவும் கூடாது” என்றார் குருமூர்த்தி உஷாராக.

சர்வாச்சார்யா முகத்தை சுருக்கினான்.

“டேய் தம்பி” என்று அவன் தோள்களை பிடித்து கொண்ட குருமூர்த்தி,

“உன் அளவுக்கு நாங்க இல்லை. எதார்த்தம் இதுதான். இப்போவே விஷயம் லைட்டா கசிஞ்சத்துக்கே வெளியே என்னென்னமோ பேசிக்கிறாங்க. நான் கொலைகாரன் இல்லை தான். ஆனா நீ கொலைகாரனோட மருமகன்ற பேரை சுமக்காதடா தம்பி”

“திரும்ப திரும்ப அந்த நிழல் எங்க மேல படுறதுல எனக்கும் மனசு சோர்ந்து போகுது. வயசு ஆகுறதாலோ  என்னமோ? இப்போ எல்லாம் கொஞ்சம் பயம் வருது. என் பொண்ணை நல்ல படியா வாழ வைச்சிடணும்ன்னு மனசு கிடந்து தவியா தவிக்குது. நான் பண்ண தப்பு எல்லாம் என் மகள் வாழ்க்கையை சிதைச்சிடுமோன்ற கவலையிலே நைட் எல்லாம் தூக்கம் வர மாட்டேங்குது”

“என் கையில நிறைய கறை இருக்கு. பாவபுண்ணியம் பார்க்காம எத்தனையோ பேரை பணத்துக்காக அடிச்சிருக்கேன். தைரியம் எல்லாம் அளவுக்கு மீறியும் இருக்க கூடாதுன்னு இப்போ புரியுது, ஆனாலும் ஒரு பிரச்சனைன்னா இப்போவும் ரத்தம் சூடேறுது, நான் எல்லாம் திருந்த மாட்டேன். என் பொண்ணுக்கு வரவனாவது பொறுமைசாலியா, நிதானமானவனா இருக்கணும். நான் வாழாத ஒரு அமைதியான வாழ்க்கையை என் பொண்ணு வாழணும்”

“அவளுக்கு ஒரு நல்ல குடும்பம் வேணும். உன் குடும்பத்தை நான் குறை சொல்லலை. ஆனா என் பொண்ணு வாழ அந்த குடும்பம் சரிப்பட்டு வராது. உன் அம்மாவை நம்பி தான் என் பொண்ணை ஒப்படைச்சேன். ஆனா அவங்க என் பொண்ணை, ம்ப்ச்”

“கூட்டு குடும்பமா இருந்தாலும் உங்களுக்குள்ள எந்தளவு உண்மையான அன்பு இருக்குன்னு எனக்கு தெரியலை. ஊர் உலகம் ஏத்துக்கிட்டா கூட உன் குடும்பம் என் பொண்ணை ஏத்துக்காது. அவளை கஷ்டப்படுத்துற மாதிரி ஏதாவது நடந்தா நானும் சும்மா இருக்க மாட்டேன்”

“பணம், அந்தஸ்து, கௌரவம், அன்பு, பாசம்ன்னு எல்லாத்திலும் நீங்க வேற, நாங்க வேற. எல்லா விதத்திலும் நேரெதிரா தான் நிக்கிறோம். இது கண்டிப்பா ஆகாது. வேணாம்” என்றார் குருமூர்த்தி.

“முடியாதுன்னு சொல்றதுக்கா இவ்வளவு காரணத்தை அடுக்குறீங்க?” என்று சர்வாச்சார்யா  கேட்டான்.

சில வருடங்களுக்கு முன்பும் என்னை வேண்டாம் என்று தான் சொன்னார். இப்போதுமா?

எங்களுக்குள்ள எதுவும் மாறவே இல்லையோ?

என்ன மாறியிருக்கு?

சர்வாச்சார்யாவிற்குள் மாபெரும் அழுத்தம் வந்து அமர்ந்து கொண்டது.

“தம்பி. நீ கடல் மாதிரி. பரந்து விரிஞ்சு எல்லையே இல்லாம, எல்லோரையும் உள்ளிழுத்து, பிரம்மாண்டமா, பயமா, ராஜாவா ஆதிக்கம் செலுத்துறவன்! உன்னை தூரத்துல இருந்து ரசிக்கலாம். உன்னை கைக்குள்ள அடக்க நினைக்க கூடாது. தப்பாகிடும். உன் இடத்துல நீ இருக்கிறது தான் உனக்கு அழகு. நீ ராஜாவா இருக்கணும்டா தம்பி. எங்களுக்கு அதுதான் வேணும்” என்ற குருமூர்த்தி அவனை கட்டியணைத்து கொண்டார்.

சம்யுக்தாவிற்கு கண்ணில் தண்ணீர் தேங்கிவிட்டது.

சர்வாச்சார்யா கடல் அல்லவா? அவனுள் ஆழ்ந்த அமைதி!