சர்வாச்சார்யா கான்பிரன்ஸ் ஹாலுக்குள் நுழைய, “மாமா” என்றபடி வந்தான் ஆகாஷ்.

சம்யுக்தா உடன் இருப்பதை அவன் பார்த்தது போல் கூட தெரியவில்லை.

“சர்ப்ரைஸ் விசிட் மாமா” என்றபடி சர்வாச்சார்யாவை தழுவி கொண்டான் ஆகாஷ்.

சம்யுக்தா அவன் அருகில் வரும் போதே கரத்தை இழுத்து தள்ளி நின்றிருந்தவள், ஆகாஷ் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியை தான் கண்டாள்.

“மீட்டிங் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் ஆகாஷ்.” என்றபடி சர்வாச்சார்யாவும் அவனை தழுவி கொண்டான்.

“மாமா. பரவாயில்லை. வாங்க, உட்காருங்க” என்று நடுநாயகமாக இருந்த இருக்கையை காட்டினான் ஆகாஷ்.

சம்யுக்தாவின் கரம் பற்றி அவனுக்கு வலப்புறம் இருந்த இருக்கையில் அமர வைத்தவன், அதன் பின் அவன் இருக்கைக்கு சென்றான்.

ஆகாஷ் அவர்களுக்கு குடிக்க எடுத்து வர சொன்னவன்,  நாயகனுக்கு இடப்புறம் அமர்ந்தான்.

சர்வாச்சார்யா திரும்பி ராகவை பார்க்க, அவர்களுக்கு எதிர்புறம் இருந்த பெரிய திரையில் சர்வாச்சார்யாவின் குடும்பத்து ஆட்கள் அத்தனை பேரும் தோன்றினார்கள்.

“என்ன ராஜா திடீர்ன்னு?” என்று கேட்ட பெரிய அத்தை, அவனுக்கு பக்கத்தில் இருந்த சம்யுக்தாவை கண்டதும் அதிர்ந்து போனார்.

“அவ, அவ எங்க என்ன பண்றா?” என்று சின்ன அத்தை கோபத்துடன் கேட்க, மற்றவர்களும் முதலில் அதிர்ந்து, பின் சிலர் கோவம் கொண்டு, சிலர் ஆச்சரியபட்டு, சிலர் சுவாரஸ்யத்துடன் பார்த்தார்கள்.

“நாந்தான் கூட்டிட்டு வந்தேன் அத்தை. ஏன் தப்பு ஏதும் பண்ணிட்டேனா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“சர்வா. நம்ம ஆபிஸ் அது, அங்க அவளை கூட்டிட்டு வந்தது சரியா?” என்று கேட்டார் பெரிய அத்தை.

அவர்களுக்கு மட்டுமே சொந்தமான அலுவலகத்தில் சம்யுக்தாவின் வரவு என்பது ஏற்று கொள்ள முடியாதது.

“என் சார்பா இங்க யாரும் வர கூடாது. அப்படியா அத்தை?” மருமகன் குரலில் அழுத்தம்.

“ஆச்சார்யா தங்கம். நாங்க சொல்றது வேற. அந்த பொண்ணு”

“போதும். சர்வா கெஸ்ட்டை நாம வெல்கம் தான் பண்ணனும்” என்ற பெரிய மாமா,

“வாம்மா. எப்படி இருக்க?” என்று சம்யுக்தாவிடம் கேட்டார்.

சம்யுக்தா திரையை அமைதியாக பார்த்திருந்தவள், “நல்லா இருக்கேன்” என்றாள்.

“ஹாய். நான் சுஹாசினி” என்று சர்வாச்சார்யாவின் தங்கை புன்னகையுடன் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, மற்ற இளையவர்களும் தங்களை அறிமுக படுத்தி கொண்டார்கள்.

“ஹாய். நான் வைஷ்ணவி. மாமாக்கு அடிபட்டப்போ, கோயம்பத்தூர் ஹாஸ்பிடல்ல நாம மீட் பண்ணியிருக்கோம். ஞாபகம் இருக்கு தானே?” என்று அவள் புன்னகையுடன் கேட்க,

“ஞாபகம் இருக்கு. எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் சம்யுக்தா.

இளையவர்கள் பேச, பெரியவர்களுக்கு தான் கோவத்தை அடக்கி கொண்டிருக்க வேண்டிய நிலை.

அவர்கள் அலுவலகத்தில் அமர்ந்து, பெரிய திரை முழுதும் நிறைந்திருக்கும் வீட்டினரிடம் சம்யுக்தா மிகவும் சாதாரணமாக பேசி கொண்டிருக்கிறாள்.

அவள் அச்சத்தில் தயங்கி இருந்தால் கூட பெரியவர்களுக்கு சிறிதளவாவது ஆறுதல் கிட்டியிருக்க கூடும். ஆனால் இல்லை.

சம்யுக்தாவின் மிதமான புன்னகை, இயல்பான பேச்சை பொறுத்து கொள்ள முடியாமல்,

“என்ன விஷயம் சர்வா?” என்று கேட்டார் சின்ன மாமா.

“**** கம்பெனிக்கு நாம இனி இன்வெஸ்ட் பண்ண போறதில்லை மாமா” என்றான் சர்வாச்சார்யா.

“ஏன் சர்வா? நல்ல கம்பெனி. நமக்கு சரியா ரிட்டர்ன் கொடுத்திடுறாங்க. இப்போ கூட ஒரு பெரிய ப்ரொஜெக்ட் நடந்திட்டு இருக்கு. நாம அதுக்கும் பணம் கொடுத்திருக்கோம்” என்றார் சின்ன மாமா.

“ஆச்சார்யா தங்கம். நாம தொழில் பேசும் போது மூணாவது ஆளுங்க இருக்க கூடாது. மறந்துட்டியா?” என்று இடையிட்டு கேட்டார் சின்ன அத்தை.

சம்யுக்தாவின் இருப்பு அவரை பெருமளவு படுத்துகிறது போல.

“அத்தை. நீங்க சொல்றது சரிதான். என்ன பண்ணலாம்? சட்டப்படி உட்கார வைச்சிடலாமா?” என்று கூர்மையாக கேட்டான் சர்வாச்சார்யா.

“ஆஹ்”

“சர்வா”

“ஆச்சார்யா? என்ன இது?” என்று பெரியவர்கள் உடனே குரல் கொடுத்தார்கள்.

“அத்தை கேட்டதுக்கு என்னோட பதில் இதுதான்” என்றான் சர்வாச்சார்யா தெளிவாக, திடமாக.

நிர்வாகத்தில் சம்யுக்தாவிற்கு பங்கு கொடுக்கிறேன் என்று சொல்பவனிடம் வேறென்ன பேச?

“சர்வா? ஏன் இன்வெஸ்ட் பண்ண கூடாதுன்னு சொல்ற? என்ன விஷயம்?” என்று கேட்டார் பெரிய மாமா.

“மாமா. எனக்கு அங்க இன்வெஸ்ட் பண்ண வேண்டாம். என்னோட முடிவு இது” என்றான் சர்வாச்சார்யா.

“சர்வா. உனக்கு நடைமுறை தெரியும். போர்ட்ல பேசணும், சட்டுன்னு எல்லாம் நிறுத்த முடியாது” சின்ன மாமா சொன்னார்.

“நஷ்டத்தை என் கணக்குல எழுதிக்கோங்க” நாயகன் சொல்ல,

“பணம் விஷயம் இல்லை. அந்த கம்பெனியை நம்பி பல நூறு பேர் இருக்காங்க. அவங்களை பத்தி யோசிக்கணும்” என்றான் பெரிய மாமாவின் மகன் கார்த்திக்.

“அது என் கவலை இல்லை. அந்த கம்பெனி ஓனர் தான் அதை எதிர்கொள்ளணும்” என்றான் சர்வாச்சார்யா.

“சர்வா. இப்போ நீ கோவமா இருக்கேன்னு நினைக்கிறேன். ஒருநாள் டைம் கொடு, நாம பேசலாம்” என்று கார்த்திக் சொல்ல,

“நோ. இப்போவே”

“சர்வா ப்ளீஸ். இது என்னோட ரெகுவஸ்ட்” என்றான் கார்த்திக்.

அந்த வீட்டில் மற்றவர்கள் எப்படியோ? ஆனால் கார்த்திக் நம் நாயகனுக்கு வேறு.

நாயகனின் தங்கையை மணக்க போவதால் மட்டுமில்லை, சர்வாவின் பக்கம் இருந்து, அவனுக்காக யோசிப்பவன்  கார்த்திக்.

இப்போதும் சர்வாச்சார்யா கோவத்தில் எடுக்கும் முடிவை நிறுத்தி வைக்கவே முயலுகிறான்.

சர்வாச்சார்யா நிமிடம் முகம் இறுக அமர்ந்திருந்தவன், பின் “ஓகே. நாளைக்கு ஒரு நாள் தான். அடுத்த நாளில் இருந்து அந்த கம்பெனியோட நமக்கு எந்த தொடர்பும் இருக்க கூடாது” என்றான் முடிவாக.

“சர்வா. நீ இப்படி பிடிவாதமா இருக்கிற அளவு என்னாச்சு? காரணத்தை சொன்னா நாங்களும் சூழ்நிலையை புரிஞ்சுப்போம்” என்று சின்ன மாமா கேட்க,

“என்னை அவங்க தொட்டிருக்க கூடாது தானே மாமா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

எல்லோருக்கும் ஏதோ புரிவதாய்.

“சம்யுக்தா. நீ அங்கதானே வேலை பார்க்கிற?” என்று பெரிய மாமா கேட்க,

“பார்த்தேன் சார். காலையில தான் ரிசைன் பண்ணேன்” என்றாள் சம்யுக்தா.

“சோ மாமா. இவங்களை டச் பண்ணா உங்களை டச் பண்ற மாதிரி, அப்படித்தானே?” என்று கேட்டான் ஆகாஷ்.

“மாதிரி இல்லை ஆகாஷ். என்னையே தொட்டதுதான்” என்றான் சர்வாச்சார்யா.

ஆகாஷ் கோபமாக எழுந்து விட்டவன், ” அப்போ என் அக்காக்கு என்ன பதில் சொல்ல போறீங்க? நீங்க உங்க கமிட்மெண்ட்க்கு உண்மையா இல்லை. ஆனா என் அக்கா உங்களுக்கு உண்மையா இருந்தாங்க” என்று ஆவேசத்துடன் கேட்டான்.

“வைஷ்ணவிகிட்ட நான் பேசிக்கிறேன், நீ இதுல இருந்து தள்ளி இரு”

“முடியாது மாமா. உங்க தப்பை நீங்க இப்போ வரை உணரலை! நம்ம வீட்ல இப்படி ஒரு பேச்சு இருக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சும் உங்களால எப்படி அக்காக்கு துரோகம் பண்ண முடிஞ்சது? இவங்க உங்க லைப்ல எப்போ வந்தாங்க? நாங்க எப்போ இருந்து உங்களோட இருக்கோம்?”

“நம்ம வீட்ல இந்த செகண்ட் வரை உங்களுக்கு தான் முன்னுரிமை. பெரியவங்க மட்டுமில்லை நாங்களும் உங்களை அப்படி தான் வைச்சிருக்கோம். ஆனா நீங்க இப்போ வந்தவங்களுக்காக எங்களை தூக்கி போடுறீங்க?”

“ஆகாஷ்”

“எனக்கு தெரியும் இவங்க உங்களுக்காக உயிரை கூட கொடுப்பாங்க தான். ஏன் நம்ம கார்ட்ஸ் கூட நமக்கு ஒண்ணுன்னா முன்னாடி நிப்பாங்க. அதுக்காக அவங்களுக்கு நம்ம லைஃப்பையே தூக்கி கொடுக்க முடியுமா?”

“ஆகாஷ். போதும். இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது” நாயகனிடம் இருந்து கடுமையான எச்சரிக்கை.

“தங்கம். ஆகாஷ் பேசினதுல எந்த தப்பும் இல்லை” என்று பெரிய அத்தை சொன்னார்.

“அவன் அக்காக்காக அவன் பேசுறான் ராஜா? நீதான் எங்களை மறந்துட்டு யார் பின்னாடியோ போற?” என்று சின்ன அத்தை சொல்ல,

“ஓகே. உங்க எல்லோருக்கும் கோவம் என்மேல தானே? ரைட்” என்ற சர்வாச்சார்யா,

“அப்போ ஆகாஷ் என்கிட்ட தானே நீ சண்டை போட்டிருக்கணும்?” என்று கேட்டான்.

“அட்டையை தான் பிடுங்கி போடணும் மாமா” என்றான் ஆகாஷ்.

“ஹாஹா” சர்வாச்சார்யா சத்தமாக சிரித்தான்.

சம்யுக்தா விரல்களை இறுக்கமாக கோர்த்து கொண்டாள்.

“அட்டை. ம்ஹ்ம். சரியா சொல்லிட்ட ஆகாஷ். ஆனா ஆளு தான் தப்பு. மாத்தி சொல்லிட்ட” என்றவன்,

“இவளை விடாம ஒட்டிட்டு இருக்கிறது நாந்தான். அடியேன் அந்த அட்டை. அதுவும் ராட்சத அட்டை!” என்றான் சர்வாச்சார்யா.

சம்யுக்தா சட்டென எழுந்து கிளம்ப போக, சர்வாச்சார்யா எட்டி அவளின் கரம் பற்றி அமர வைத்தவன், அவளின் இருக்கையை தன் இருக்கைக்கு அருகில் இழுத்து கொண்டான்.

ஜோடியாக அமர்ந்திருந்த சர்வாச்சார்யா, சம்யுக்தாவை கண்டு, திரையில் இருந்த பல முகங்கள் கருத்து போனது.

“ஆகாஷ். முதல்லே நீ நேருக்கு நேரா என்கிட்ட சண்டை போட்டிருந்தா நான் உனக்கு பதில் சொல்லியிருப்பேன். ஆனா இனி இல்லை” என்றவன்,

“உங்க எல்லோருக்கும் மெயில் வந்திருக்கும். செக் பண்ணுங்க” என்றான் சர்வாச்சார்யா.

வீட்டினர் உடனே எடுத்து பார்த்து அதிர்ந்து போனவர்கள், “சர்வா. என்ன இது?” என்று சின்ன மாமா தான் கோபத்துடன் பாய்ந்தார்.

“எனக்கு இருக்க அதிகாரத்தை வைச்சு நான் ஆகாஷை தொழிலை விட்டு தள்ளி வைக்கிறேன்” என்றான் சர்வாச்சார்யா.

“இது அதிகம் சர்வா. நீ தப்பான வழியில போற?” பெரிய மாமா சொல்ல,

“இது தற்காலிகமா இருக்கிறதும், நிரந்தரமா மாறுறதும் என் கையில இல்லை” என்றான் நாயகன்.

“ஆச்சார்யா தங்கம். உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை. அவனோட லைஃப்ல கை வைக்கிற நீ?” சின்ன அத்தை கண்கள் கலங்கி விட்டிருந்தது.

“என் லைஃப்ல அவன் கை வைக்க நினைச்சிருக்க கூடாது தானே அத்தை?” என்று கேட்டான் மருமகன்.

அவனோட லைஃப்? சம்யுக்தா? அவளை தொட நினைச்சதுக்கா இந்த தண்டனை!