இரவாகி விட, குருமூர்த்தி போன் எடுப்பதும், வைப்பதுமாக இருந்தார்.
“அண்ணா, முதலாளி, அண்ணாத்தே” என்று குருமூர்த்தியை தேடி சந்தேகம் கேட்டு ஆட்கள் வந்து கொண்டே தான் இருந்தனர்.
மனிதருக்கு தான் நேரம் ஆக, ஆக மனது தடுமாற ஆரம்பித்தது.
கற்பகம் பாட்டி, “தம்பி. சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன்” என்று எம்பையருக்கு வந்திருந்தார்.
வயது கூடியதில் கற்பகம் பாட்டியும் தளர்ந்து போய்விட்டார். குணாவின் அம்மா தான் அவருக்கு துணையாக வீட்டின் முழு பொறுப்பையும் எடுத்திருப்பது,
“உங்களுக்கு தான் முடியலயில்லை. நீங்க ஏன் வந்தீங்க?” என்று மூச்சு வாங்கி அமர்ந்தவரை கடிந்து கொண்ட குருமூர்த்தி, மகள் கண்ணுக்கு படாததில், அவளை அழைத்து வர சொன்னார்.
டீ கொடுத்துவிட்டு சென்ற மகள் இப்போது வரையிலும் நான் இருக்கும் இடம் வரவில்லை.
“எங்க போயிருந்த நீ?” என்று சம்யுக்தா வரவும் தந்தை கோபத்துடன் கேட்டார்.
“ப்பா. நீங்க சொன்ன வேலையை தான் பார்த்துட்டு இருந்தேன்” என்ற சம்யுக்தா அவருக்கு ரிப்போர்ட் கொடுத்தபடி அவருக்கான உணவை பரிமாறினாள்.
“நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுகிறேன் கண்ணு” என்று கற்பகம் பாட்டி மறுக்க,
“மெடிசின் எடுக்கணும், சாப்பிடுங்க பாட்டி” என்று அவரையும் உண்ண வைத்தாள் சம்யுக்தா.
மாசிலாமணி, குணா வர அவர்களுக்கும் உணவை கொடுக்க, “தம்பி” என்றழைத்தார் கற்பகம் பாட்டி.
“நம்ம தம்பி வந்திருக்காமே. அவரையும் திறப்பு விழாக்கு கூப்பிட்டிருக்கியா? பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு” என்று கற்பகம் பாட்டி கேட்க,
“யாரை சொல்றீங்க பாட்டி? சர்வாச்சார்யா சாரையா? அவரை கூப்பிடலை பாட்டி” என்றான் குணா.
“உன்னை கேட்டாங்களா? நீ வாயை மூடுடா” குருமூர்த்தி அவன் மேல் எரிந்து விழ,
“கெஸ்ட் பொறுப்பு என்னது தான். அப்போ நான்தானே பதில் சொல்லணும்” என்றான் குணா.
“டேய் பேசாம இருடா. அண்ணா கோவமா இருக்கிற மாதிரி இருக்கு” என்று மணி அவன் காதை கடித்தார்.
“உங்க அண்ணன் என்னைக்கு கலகலன்னு இருந்திருக்கார்? எப்போவும் அதே டெரர் பேஸ் தானே” என்று குணா சொல்லி வைத்தான்.
“டேய் என்ன வாய் நீளுது?” என்று குருமூர்த்தி குரல் உயர்த்த,
“கை மட்டும் நீட்ட கூடாது. வாய் பத்தி நீங்க எதுவும் சொல்லலை. அதோட நான் தப்பா ஒன்னும் சொல்லிடலையே” என்றான் குணா.
“நீ பேசிட்டு இருக்க அத்தனையும் வேண்டாதது தான்”
“சர்வாச்சார்யா சார் உங்களுக்கு வேண்டாதவரா? ஹாஹா. குழந்தை கூட இந்த கதையை நம்பாது”
குருமூர்த்தி அவனை கோபத்துடன் பார்த்திருக்க, “அவருக்காக அப்பாவும், பொண்ணும் உசுரையே கொடுப்பாங்க. ஆனா அவரை பங்க்ஷனுக்கு மட்டும் கூப்பிட மாட்டாங்க” என்றுவிட்டான் குணா.
“எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு” என்ற சம்யுக்தா தந்தையின் பார்வையில் இருந்து வெளியேறிவிட்டாள்.
குருமூர்த்தி உணவு தட்டை வைத்துவிட, கற்பகம் பாட்டி அவரை உண்ண சொல்ல, “நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன். நீங்க வீட்டுக்கு போங்க” என்றார்.
அந்த அறை காலியாகிவிட, குருமூர்த்தி கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டார்.
அவருக்குள் எத்தனையோ சிந்தனைகள். நிமிடங்கள் சில கடந்த பின் போன் எடுத்து, நாயகனுக்கு அழைத்தார்.
“இன்விடேஷன் கொடுக்கணும்” குருமூர்த்தி குரலில் சுத்தமாக சத்தே இல்லை.
“என்ன திடீர்ன்னு?”
“கேள்வியா கேட்காத. உங்களை மீட் பண்ண அப்பாயிண்ட்மெண்ட் போட்டிருக்கணும்ன்னு எனக்கு தெரியும். அதுக்கென்ன பண்ணன்னு மட்டும் சொல்லு”
“ம்ப்ச்” சர்வாச்சார்யா நெற்றியை நீவினான்.
சென்னையில் இருக்கும் மாளிகையில் கூட்டு குடும்பமாக எல்லாம் இருக்கிறார்கள்.
இவர் வருகிறார் என்றாலே, அத்தை குடும்பத்தினர் நிச்சயம், மறுக்க தான் பார்ப்பார்கள்.
அது போலவே, “நாளைக்கு பங்க்ஷன் வைச்சுட்டு, இன்னைக்கு நைட் வந்து நம்மளை கூப்பிடுவாரா? அப்படியொன்னும் அவர் இன்விடேஷன் நமக்கு தேவையில்லை. அவரை வர வேண்டாம்ன்னு சொல்லிடு” என்று பெரிய மாமா சத்தியன் சொல்லிவிட்டார்.
சின்ன மாமா, அத்தையும் கூட இதையே சொல்ல, சிவப்பிரகாசம் தங்கைகளை விட்டு கொடுக்க முடியாமல் தத்தளித்தார்.
“என்ன’ண்ணா. அமைதியா இருக்க? நம்ம பேமிலி டின்னர் டைம் இது. மூணாவது ஆளுங்களை இந்த நேரம் மீட் பண்ண முடியுமா?” என்று பெரிய தங்கை கேட்க.
“இன்விடேஷன் கொடுக்க தானே வரார். எவ்வளவு நேரம் ஆக போகுது?” என்று சிவப்பிரகாசம் சொல்ல,
“அப்போ சரி. நீங்க மீட் பண்ணுங்க. நாங்க எல்லாம் ரூமுக்கு போறோம், இல்லை மும்பை கூட கிளம்பிக்கிறோம். உங்களை தொந்தரவு பண்ண கூடாது பாருங்க” என்றார் சத்தியன்.
வசுந்தரா டெல்லியில் இருக்க, மகன் போன் இணைப்பில் இருக்க, சிவப்பிரகாசம் என்ன செய்வார்?
“ப்பா. நான் வேண்டாம்ன்னு சொல்லிடுறேன்” என்று சர்வாச்சார்யா முடித்துவிட்டான்.
“ஆச்சார்யா தங்கம். சீக்கிரம் வீட்டுக்கு வா. உனக்காக தான் நாங்க வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்று பெரிய அத்தை அழைக்க,
“எனக்கு டின்னர் வேண்டாம் அத்தை” என்று வைத்துவிட்டான் சர்வாச்சார்யா.
குருமூர்த்தி நிமிடங்கள் சில கடந்தும் அவன் அழைக்காததில் தானே புரிந்து கொண்டார்.
இதற்காக தானே அவர்களிடம் இருந்து முழுவதுமாக விலக நினைக்கிறார்.
ஆனால் அவன்!
அடுத்த நாள் விடிந்து, நேரம் வேகமாக சென்று விருந்தினர்களும் எம்பையரில் நிறைந்துவிட்டனர்.
திறப்பு விழாவிற்கான நேரமும் வந்துவிட்டது. முக்கிய விருந்தாளியும் எம்பையரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
குணா, மணி எல்லாம் சுழன்று கொண்டிருக்க, கடைசி நேர பரபரப்புக்கு பஞ்சமில்லை.
“அப்பா” என்றழைத்துவிட்ட சம்யுக்தா,
“க்கும். சீப் கெஸ்ட் வந்துட்டாராம்” என்றாள்.
அவள் அதை சொல்ல வரவில்லை. குருமூர்த்தி வாசலுக்கு சென்று சீப் கெஸ்ட்டை வரவேற்றார்.
சண்முகம் தன் குடும்பத்துடன் வந்திருக்க, சம்யுக்தா கண்கள் கலங்கியே போனது.
அவனை விட்டு ஒரு நல்லது செய்துவிட முடியவில்லை! தவியாய் தவித்தது அவள் மனது!
குருமூர்த்தி டக்கென போன் எடுத்தவர், “இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ எம்பையர்ல இருக்கணும்” என்றார்.
“ஆர்டர் போடுறீங்களா ஹீரோ சார்?” என்று சர்வாச்சார்யா கேட்க,
“ஆமா அப்படி தான். கிளம்பி வா சீக்கிரம்” என்றார் குருமூர்த்தி.
“நான் வந்து இரண்டு நிமிஷம் ஆச்சு ஹீரோ சார்” என்று அவரின் பின்னால் குரல் கேட்டது.
வந்துட்டானா? தந்தை, மகளின் நெஞ்சங்கள் அப்படியே அமைதியாகி போனது.
“சார்” என்று குணா ஓடிவந்து அவன் கை பிடித்து குலுக்கினான்.
“தம்பி” என்று மாசிலாமணி அவன் இருகைகளையும் பற்றி கொண்டார்.
கற்பகம் பாட்டியை இவன் தோளோடு அணைத்து, அவரிடம் நலம் விசாரித்து கொண்டிருந்தான்.
“என்ன தம்பி. பேண்ட் சட்டையில வந்திருக்கீங்க. பட்டு வேஷ்டி சட்டை போட்டுட்டு வந்திருக்கலாம் இல்லை” என்று கற்பகம் பாட்டி கேட்டு கொண்டிருக்க,
சர்வாச்சார்யா முன் இரு கைகள் நீண்டது.
குருமூர்த்தி, குணா இருவரும் அவனுக்கான புது உடையை நீட்டி கொண்டிருக்க, “அப்பா” என்றாள் சம்யுக்தா அதிர்ந்து.
குருமூர்த்தி நொடி திணறி, “நீ எப்போடா வாங்குன?” என்று குணாவிடம் கேட்டார்.
“நான் எங்க வாங்கினேன்?” என்றவன், சம்யுக்தா மறுப்பில், “எப்போ வாங்கினா என்ன இப்போ? சார். இந்தாங்க. இரண்டுல எது புடிச்சிருக்கோ அதை போடுங்க” என்று சர்வாச்சார்யாவிடம் சொன்னான்.
நாயகனோ குணா பார்சலை திரும்பி கூட பார்க்காமல், குருமூர்த்தியிடம் வாங்கி கொண்டு செல்ல, “தெரியும்டா எனக்கு மலைமாடு” சம்யுக்தா பொறுமினாலும், முகத்தில் புன்னகைக்கு குறைவில்லை.
“சார். நேரம் ஆச்சு?” என்று குருமூர்த்தியை அவரசப்படுத்த,
“சார். ஒரு நிமிஷம்” என்ற குருமூர்த்தி, சர்வாச்சார்யா வந்த பின்னே திறப்பு விழாக்கான ஏற்பாட்டை துவங்கினார்.
வந்திருக்கும் விருந்தாளிகள் சர்வாச்சார்யாவிடம் பேசுவதில் ஆர்வம் காட்ட, பாதுகாப்பு அதிகாரிகள் அவனை நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.
“சார் பன்க்ஷனுக்கு நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியலை. குருமூர்த்தி உங்களுக்கு ரொம்ப நல்ல பழக்கம் போலயே” என்ற சிறப்பு விருந்தாளி, சர்வாச்சார்யா கரம் குலுக்கி பேசினார்.
“சார். அவரும் உங்களோட ஜாயின் பண்ணிப்பார்” என்று குருமூர்த்தி சொல்ல,
“கண்டிப்பா. அவர் இல்லாமலா? சார். ப்ளீஸ் வாங்க” என்று சர்வாச்சார்யாவை அழைத்தார் சிறப்பு விருந்தினர்.
நல்லவன் மறுக்கவெல்லாம் இல்லை.
நடுநாயகமாக நிற்க வைக்கப்பட்ட சர்வாச்சார்யா. குருமூர்த்தி பக்கம் நின்ற சம்யுக்தாவின் கரத்தை எட்டி பற்றினான்.
சம்யுக்தா அதிர்ந்து பார்க்க, “சார். உங்க பொண்ணு தானே இவங்க. நீயும் வாம்மா?” என்று சம்யுக்தாவை அழைத்தார் சிறப்பு விருந்தினர்.
“சார். என்னோட ஜாயின் பண்ணிப்பாங்க” என்ற குருமூர்த்தி சொல்லி கொண்டிருக்கும் போதே,
சம்யுக்தாவை சுழற்றி தன் கைவளைவுக்குள் கொண்டு வந்திருந்தான் சர்வாச்சார்யா.