கடந்து செல் காதலுடன்! 32

அடுத்த நாள் திறப்பு விழா. எம்பையர் வண்ண, வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தது.

மிகவும் பரபரப்புடன், ஆரவாரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, குருமூர்த்தி சத்தம் மறுபக்கம் கேட்டு கொண்டே இருந்தது.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் பண்ணுவான் மணி. அந்தாள் இல்லைன்னா வேற ஆளை கூப்பிட முடியாதா உன்னால?” என்று மணியை சத்தமிட,

“அண்ணா, இப்போ வந்திடுவான். போன் பேசிட்டேன். நீங்க டென்சன் ஆகாதீங்க” என்று மணி சமாதானமாக சொன்னார்.

“நாளையில இருந்து எம்பையர் ரன் ஆக ஆரம்பிச்சிடும் மணி. நாம கொடுக்கிறதா சொல்லியிருக்க எல்லா வசதியும் நாம கொடுத்தாகணும். உனக்கு புரியுது இல்லை”

“அண்ணா. எனக்கு புரியுது, இரண்டாவது புளோர் ஏசி மட்டும் சரி பண்ணிட்டா முடிஞ்சது”

“டேய். அப்போ நீ அந்த பிளம்பரை கூப்பிடவே இல்லையா?”

“அவர் எதுக்குண்ணா. ஆஹ். ஞாபகம் வந்திடுச்சுண்ணா. கத்திடாதீங்க. அவன் பக்கத்துல தான் இருக்கான். போன் பண்ண நிமிஷம் வந்திடுவான்” என்று மணி அவர் முன் நிற்காமல் ஓடியேவிட்டார்.

விருந்தினர்ககளை கவனிக்கும்  பொறுப்பை ஏற்றிருந்த குணா, “உங்க ஆளை கூப்பிடவே போறதில்லையா?” என்று சம்யுக்தாவிடம் மெல்ல கேட்டான்.

“வேலையை பாருங்க சார்”  சம்யுக்தா சொல்ல,

“இதுவும் என் வேலை தான் மேடம். அவர் திடுதிப்புன்னு வந்து நின்னா நான்தானே மாட்டிட்டு முழிக்கணும்” குணா சொன்னான்.

“அப்பாவை கூப்பிடுறேன். அவர்கிட்டேயே கேளுங்க?” என்று சம்யுக்தா சொல்ல,

“கூப்பிடுங்க. எனக்கென்ன பயமா?”

“ப்பா” என்று சம்யுக்தா அவரை அழைத்துவிட்டாள்.

“என்னமா?” என்று குருமூர்த்தி வர,

“உங்க பொண்ணு உங்களை நினைச்சு ரொம்ப கவலைப்படுறாங்க. டென்க்ஷனை கொஞ்சம் குறைச்சுக்கோங்க முதலாளி” என்றான் குணா.

அடக்கேடி பயலே! சம்யுக்தா அவனை முறைக்க,

“நீ என்னடா லிஸ்ட் செக் பண்ணாம வெட்டியா உட்கார்ந்திருக்க?” என்று அவனிடம் பாய்ந்தார் குருமூர்த்தி.

“பண்ணிட்டு தான் இருக்கேன். அதுல ஒரு சந்தேகம்ன்னு உங்க பொண்ணை கேட்டேன். பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க. என்னன்னு கேட்டு சொல்லுங்க” என்று குணா இவள் பக்கம் விரல் நீட்டினான்.

“என்ன சம்யுக்தா?” என்று குருமூர்த்தி மகளை பார்க்க, அவளோ விழித்தாள்.

“நானும் ரொம்ப நேரமா கேட்கிறேன் முதலாளி, என் சந்தேகத்தை தீர்க்க முடியாதுன்னு அடம் புடிக்கிறாங்க”

“டேய். நீ கேட்கிறது அவளுக்கு தெரியாம கூட இருக்கலாம். என்கிட்ட கேளு. நான் சொல்றேன்” என்று குருமூர்த்தி சொல்ல,

“ஆமா. ஆமாப்பா. எனக்கு தெரியலை. குணா கேட்கிறதுக்கான பதில் உங்ககிட்ட தான் இருக்கு. நீங்களே சொல்லிடுங்க” என்றாள் சம்யுக்தா.

“சீக்கிரம் கேளுடா” என்று குருமூர்த்தி அதட்ட,

“அது. அது முதலாளி. நாளைக்கு மெனுல  பூரி இருக்கு தானே?”

“ராஸ்கல். கையில் சிக்கு. உன் தோளை உரிக்கிறேன்” என்று ஓடிவிட்ட குணாவை கத்தினார் குருமூர்த்தி.

சம்யுக்தா முகத்தை மறைத்து சிரித்து கொள்ள, “போயிட்டார்டா சாமி” என்றபடி திரும்ப வந்து அமர்ந்தான் குணா.

“தேவையா இது?” என்று சம்யுக்தா கேட்க,

“ஏன் அவர் உங்களுக்கு தேவையில்லயா?” என்று குணா கேட்டான்.

“நான் இந்த ரிப்போர்ட்டை நைட்டுக்குள்ள கொடுத்தாகணும். என்னை தொந்தரவு பண்ணாத”

“ஆமா அவருக்காக எடுத்து வைச்சிருக்க புது ட்ரெஸ் என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க?”

“ம்ப்ச். உன்கிட்ட அளவு கேட்டது தப்பா போச்சு”

“பேசாம என்கிட்ட கொடுங்க. அவர்கிட்ட சேர்த்துடுறேன்”

“வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள் சம்யுக்தா.

“கம்பெனி பேர்ல இன்விடேஷன் போயிருக்கு. ஆனா உங்க ஆள் ஆட்டிடியூட்க்கு கண்டிப்பா வர மாட்டார்” என்றான் குணா.

எம்பையரில் பங்குபெற்ற அலுவலகத்திற்கான அழைப்பு முறைப்படி சென்றுவிட்டது.

ஆம் சர்வாச்சார்யா, அவனுக்கான அலுவலகத்தை எம்பையரில் நிறுவிவிட்டான்.

குருமூர்த்தி நம் நாயகன் கம்பெனியை வெளியே தள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“இருந்துட்டு போகட்டும் விடு. பணம் மட்டும் கைக்கு சரியா வந்து சேரணும். சொல்லிடு அவன்கிட்ட” என்று குணாவிடம் சொல்ல,

சர்வாச்சார்யாவின் மேலாளர் தான் அன்றிரவே இவர்களிடம் எல்லா நடைமுறையும் முடித்தவர், “பணம் சரியா வந்திடும், எங்களுக்கான பெசிலிட்டி கொஞ்சம் கூட குறைய கூடாது. எலெக்டிரிசிடி, நெட் ஒர்க், வாட்டர், லிப்ட், செக்கியூரிட்டி” என்று ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தவர், “எல்லாம் இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கணும். பாதுகாப்புக்கு எங்க கார்ட்ஸும் இருப்பாங்க. அவங்களுக்கான வசதியும் நீங்க செஞ்சு கொடுக்கணும்” என்று சொல்ல,

“அதுக்கு தனியா பேமெண்ட் கொடுக்கணும்” என்றார் குருமூர்த்தி.

மேலாளர் அவர்களின் கம்பெனி பற்றி குருமூர்த்திக்கு தனியா விளக்கியவர், “ரொம்ப முக்கியமான ப்ரொஜெக்ட் எல்லாம் இங்க தான் பண்ண போறோம். சோ உள்ள வர ஒவ்வொருத்தரையும் நாங்க பெர்சனலா செக்கியூரிட்டி செக் பண்ணுவோம். எங்களுக்கு லிப்ட் தனியா இருக்கணும். எங்க பாஸ்க்கு தனியா பேன்ட்ரி செட் அப் வைச்சு கொடுத்துடுங்க. மத்த கம்பெனி ஸ்டாப் எங்க புளோர் பக்கம் வர அனுமதி கிடையாது” என்று பெரிதான அக்ரீமெண்ட் ஒன்றை சமர்ப்பித்தார்.

மறுநாள் குருமூர்த்தி டீம் அக்ரீமெண்ட்டின் சாதக, பாதங்கங்களை அலசி ஆராய்ந்து ரிப்போர்ட் கொடுத்தனர்.

அதன்படி குருமூர்த்தி சிலதை மறுக்க, சர்வாச்சார்யா எங்கும் விட்டு கொடுக்க முடியாது என்று நின்றான்.

சர்வாச்சார்யா போன் இணைப்பில் இருக்க, வாக்குவாதம் நீண்டு கொண்டே சென்றது.

 “நான் மீட்டிங் அட்டண்ட் பண்ண போய்ட்டு இருக்கேன். இனி என்னை தொந்தரவு பண்ண கூடாது. அக்ரீமென்ட் சைன் ஆகியிருக்கணும், பார்த்துக்கோங்க” என்று மேலாளரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்ட நாயகன்,

“சும்மா கிராக்கி பண்ணிட்டு இருக்காம அக்ரீமெண்ட் சைன் ஆக விடுங்க. அக்ரீமெண்ட் போட்டு தான் செய்யணும்ன்ற இடத்துல நானும்  இல்லை. அக்ரீமெண்ட் வைச்சு தான் என்னை கட்டுப்படுத்த முடியும்ன்ற  இடத்தில நீங்களும் இல்லை. மீட்டிங் இருக்கு எனக்கு. படுத்தாதீங்க ஹீரோ சார்” என்று குருமூர்த்திக்கு தனியே அழைத்து பேசி வைத்தான் சர்வாச்சார்யா.

சம்யுக்தா தான் அதற்கு மேல் தள்ளி இருக்க முடியாமல், அவளின் டீம் ஆட்களிடம் பேசி இரு பக்கமும் சாதகமாக இருக்கும் படி அக்ரீமெண்ட் ஒன்றை தயாரிக்க வைத்தாள்.

இருபக்கமும் சில சில சமாதானத்துடன் அக்ரீமெண்ட் கையெழுத்தானது.

“ம்ம். பரவாயில்லை. தொழில்ன்னு வந்துட்டா பையன் விவரமா தான் இருக்கான்” என்று குருமூர்த்தி மெச்சி கொள்ள,

“ஹீரோ சார் அநியாயத்துக்கு விவரமா இருக்கார். எம்பையர் ஒன்னும் சும்மா வந்துடலைடா டோய்” என்று சர்வாச்சார்யா புன்னகைத்து கொண்டான்.

அதிக வேலைகளுக்கு நடுவில், தந்தையும் மகளும் மாலை டீக்கு ஒன்றாக அமர்ந்தனர்.

“உன் வேலை முடிஞ்சதா?” என்று குருமூர்த்தி கேட்க,

“முடிஞ்சதுப்பா. ரிப்போர்ட் அனுப்பிட்டேன்” என்றாள் மகள்.

“ம்ம். திறப்பு விழா ஏற்பாடு எல்லாம் ஓகேவான்னு பாரு. ஆர்டர் கொடுத்திருக்க ஹோட்டலுக்கு ஒருமுறை கூப்பிட்டு பேசு. பந்தி பரிமாறுற இடத்தை சரியா பண்ணியிருக்காங்களான்னு மேற்பார்வை பாரு. VVIP, VIPன்னு பிரிச்சிருக்கணும். அப்புறம் குணாகிட்ட, அந்த பூ அலங்காரத்தை நைட்டே முடிச்சிருக்கணும்ன்னு சொல்லிடு”

“அப்புறம் சிசிடிவி கண்ட்ரோல் ரூமுக்கும், நெட்ஒர்க் ஆப்பரேஷன் சென்டர்க்கும் போய் பார்த்துட்டு, நம்ம டீமையும் மீட் பண்ணு. அட்மின் ஹெட் எனக்கு ஓகே தான். எதுக்கும் நீ இன்னொரு முறை அவர்கிட்ட பேசு” என்று குருமூர்த்தி அடுக்கி கொண்டே போக,

“சரிப்பா. சரி” என்று சம்யுக்தா எல்லாவற்றுக்கும் தலையாட்டினாள்.

“அவ்வளவு தான். வேறென்ன?” என்று தந்தை கேட்க,

“வேற எதுவுமில்லைப்பா” என்றாள் மகள்.

“ஏன் உன் முகம் இப்படி இருக்கு? இந்த பார்லர்க்கு போய்ட்டு வா”

“காலையில வருவாங்கப்பா”

“ம்ம். நகை, துணி எல்லாம்”

“எல்லாம் இருக்குப்பா”

“உனக்கு தனியா கார் ஒன்னு எடுத்திருக்கேன். காலையில வந்திடும்”

“இருக்கிற காரே போதும்ப்பா”

“இல்லை. உன் பாதுகாப்புக்கு அது போதாது” என்றார் குருமூர்த்தி.

“சரிப்பா” என்று மகள் ஏற்று கொண்டுவிட்டாள்.

அடுத்து ஓர் அமைதி. குருமூர்த்தி எங்கோ பார்க்க, மகள் வேறு பக்கம் பார்த்திருந்தாள்.

முதல் முறையாக ஒன்றை செய்ய போகிறார்கள். அதுவும் எல்லோரையும் அழைத்து, பிரம்மாண்டமாக நடத்த போகிறார்கள்.

ஆனாலும் சர்வாச்சார்யாவையும், அவன் குடும்பத்தையும் குருமூர்த்தி இன்னமும் அழைக்கவில்லை.

‘ஊருக்கே பத்திரிக்கை போயிடுச்சு. அவருக்கு மட்டும் கொடுக்கலை, அவரை மட்டும் கூப்பிடலை’ சம்யுக்தாவிற்குள் பெரிதான சுணக்கம்.

அவனுக்கு புது உடையும் வாங்கி வைத்துவிட்டாள்.

நாங்க எடுத்து, அவனுக்கு மட்டும் எடுக்காமல் விடுவதா?

எம்பையரில் திரும்பும் இடமெல்லாம் பரபரப்பு தான். ஆனால் பெண்ணின் மனது மட்டும் அவனை அழைக்காததிலே நிற்கிறது.

அவரையும் கூப்பிடுங்கப்பா என்று சம்யுக்தா சொல்லவில்லை. சொல்லவும் மாட்டாள்.

பயம் காரணம் இல்லை. தந்தைக்கான மரியாதை அது!

இதோ எம்பையர் விளக்குக்குள் முழு பிரகாசத்துடன் ஒளிர்கிறது. அதன் உரிமையாளர்கள் முகத்தில் ஒளி இல்லை.

குருமூர்த்தி மனைவியை அதிகம் தேடினார்.

நிச்சயம் சுபத்ரா இருந்தால், இதை ஒரு விழாவாகவே கொண்டாடி இருந்திருப்பார்.

எனக்கும், என் மகளுக்கும் கொடுத்து வைக்கலை!

பரிவாக மகளை பார்த்தவருக்கு, அவளின் வாடிய முகம் ரசிக்கவில்லை.

அவனை கூப்பிடலைன்னா இப்படி இருக்கா?

எது என்னை தடுக்கிறது? என் மகளின் எதிர்காலம்!

ம்ப்ச். அதுக்குள்ள இவங்க இரண்டு பேருக்கும் என்ன பழக்கம் வேண்டியிருக்கு? நான் எப்படி கவனிக்காம விட்டேன்?

குருமூர்த்தி முகம் இப்போதும் கடுகடுத்தது.

மகனாக அவனை என் பக்கத்தில் ம்ஹூம் எனக்கு முன்னால் நிறுத்தி வைப்பேன். ஆனால் அவன்? சுருங்கிய முகத்தில் கோவமும் தான்.

அடங்காதவன் என் மகளையும் அவனை மாதிரியே மாத்தி வைச்சுட்டான்!

என் பொண்ணு முகத்துல சந்தோஷமே இல்லை! அவளுக்காக தான் இந்த ஓட்டம், போராட்டம். ஆனா என் பொண்ணு அவனை கூப்பிடலைன்னு முகத்தை வாட வைச்சுட்டு நிக்கிறா!