“உங்க காதல் என்மேல வந்திருக்க கூடாது. என்னை பொறுத்தவரை அது காதலாவும் இருக்காது. கோவம் வேண்டாம் சீனியர். என்மேல பாவப்பட்டு, பரிதாப்பட்டு, அப்புறம் தான் காதல்”
“உன்கிட்ட நான் சில நாள் பழகியிருக்கேன் சம்யுக்தா. எனக்கு பிடிச்சு தான் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணேன்”
“சீனியர். நீங்க ஆபத்து இல்லாத ஆளா எனக்கு தெரிஞ்சிங்க. சோ நான் உங்ககிட்ட ரொம்ப கடுமையா நடந்துக்கலை. ஆனா இப்போ நான் தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது”
“சம்யுக்தா காதலிக்கிறது ஒன்னும் குற்றம் இல்லை”
“சரியான ஆள் மேல வராத காதல் குற்றம் தான் சீனியர். அதுவும் நாம, காட் எப்படி முடிஞ்சது சீனியர் உங்களால? என் அம்மா! அவங்க ரத்தத்தோட கரை உங்க குடும்பத்து மேல படிஞ்சிருக்கு”
“சம்யுக்தா” வார்த்தை இல்லாமல் நின்றான் ரோஹன்.
“தம்பி. போதும். பேசிட்டிங்க இல்லை கிளம்புங்க” என்றார் மாசிலாமணி. முன்பே வந்தவர் சம்யுக்தா கையசைவில் நின்றுவிட்டிருந்தார்.
“சம்யுக்தா. தாத்தா பண்ணியிருக்கவே கூடாத தப்பு அது. சின்ன மகன் மேல இருக்க பாசத்துல”
“பழி வாங்கிட்டார் அப்படி தானே சீனியர்”
“இல். அது”
“என்ன சொன்ன பாசத்தில பண்ணதா?” என்று குருமூர்த்தி குரல் வாசலில் இருந்து வரும் போதே ஓங்கி ஒலித்து கொண்டு வந்தது.
“அங்கிள்” தன்னை வெகுவாக நெருங்கி நின்ற குருமூர்த்தியின் வேகத்தில் ரோஹன் கால்கள் தானே ஓர் அடி பின் சென்றுவிட்டது.
“ப்பா” என்ற சம்யுக்தா தந்தை கைப்பற்றி கோர்த்து கொண்டபடி, “சீனியர் சும்மா பேசிட்டு தான் இருந்தார்” என்றாள்.
“நானும் பேசத்தான் போறேன். நீ என் கையை விடு” என்றார் குருமூர்த்தி.
“நாங்க பேசி முடிச்சுட்டோம்ப்பா”
“நான் அவர் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடுறேன்”
“ரோஹன். என்னடா இது?” என்று சண்முகம் மகன் பக்கத்தில் வந்து நின்றவர், “மூர்த்தி. அவன் கம்பெனி விஷயமா பேச வந்திருப்பான். நாம பொறுமையா பேசலாம்” என்றார்.
“பாசத்துல என்ன வேணும்ன்னாலும் பண்ணலாம் அப்படி தானே?” என்று ரோஹனிடம் கேட்டார் குருமூர்த்தி.
“அவன் ஏதோ தெரியாம பேசியிருப்பான் மூர்த்தி” என்று சண்முகம் சொல்ல,
“என் பொண்டாட்டி மேல நான் உயிரையே வைச்சிருக்கேன். அப்போ நானும் உங்களை எதாவது பண்ணியிருக்கணும் தானே?” குருமூர்த்தி கேட்டு வைக்க,
“அப்பா. என்ன இது? எதுக்கு இப்போ நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க?” மகளுக்கு கோவம்.
“ம்ப்ச். இப்போ கூட என்ன கெட்டு போச்சு. மணி. இவனோட அம்மா எங்க இருக்காங்கன்னு”
“ஏய்” என்று ரோஹன் கத்திவிட,
“மூர்த்தி” என்று சண்முகம் மறுபக்கம் சத்தமிட்டார்.
“விசாரிக்க தான் சொன்னேன். அதுக்கே இவ்வளவு கோவமா?” என்று குருமூர்த்தி கேட்க,
“மூர்த்தி. நீ தப்பு பண்ற?” என்று சண்முகம் எச்சரித்தார்.
“நீங்க தப்பை பண்ணி முடிச்சுட்டீங்களே!”
“அந்த மனிஷன் அறிவில்லாம பண்ணிட்டு போயிட்டார். அதுக்காக நான் என் கடைசி மூச்சு வரை உனக்கு பரிகாரம் பண்ண கடமைப்பட்டிருக்கேன். ஆனா நீ என் பேமிலி பக்கம் மட்டும் திரும்பிடாத”
“இதை நீ உன் மகனுக்கு இல்லை சொல்லி வளர்த்திருக்கணும், அவங்க ரத்தத்தை நாம நம்ம கையில பூசியிருக்கோம். அதுல அவங்க வீட்டு சாப்பாட்டை எப்படிடா சாப்பிடுவன்னு கேட்டிருக்கணும்?” குருமூர்த்தி கத்தியதில் சம்யுக்தா கண்களை மூடி திறந்தாள்.
எங்கமேல அவருக்கு இருக்க கோவம் இந்த ஜென்மத்தில் தீரப்போவதில்லை. ஒதுங்கி தான் இருக்கிறாரே தவிர, உள்ளுக்குள் நெருப்பு எரிந்து கொண்டே தான் இருக்கிறது.
“மூர்த்தி. நான், நான் அவனுக்கு சொல்றேன் மூர்த்தி. அவனும் மதிகெட்டு, நானும் அவனுக்காகன்னு, ச்சு. வேண்டாம். நாம இதை விட்டுடுவோம். இன்னொரு நாள் நான் வரேன். நாம பேசலாம்” என்று சண்முகம் சமாதானமாக சொல்ல,
“இன்னொரு நாள் பேசணுமா?” என்று குருமூர்த்தி பெரிதாக கத்திவிட்டார்.
“ப்பா. ப்ளீஸ் ப்பா. கோவம் வேண்டாம். போதும்” என்று சம்யுக்தா தந்தை கரத்தை இறுக்கமாக பற்றி கொள்ள,
“நிதானத்துக்கு வா மூர்த்தி. நாம சொன்னா சண்முகம் கேட்டுப்பான்” என்றார் லிங்கமும்.
ரோஹன் ஏதோ பேசவர, “வேணாம்” என்று அவன் கைப்பற்றி தடுத்தார் சண்முகம்.
“ப்பா” என்ற ரோஹனை தனியே இழுத்து கொண்டு சென்ற சண்முகம், “நாம இனி இது சம்மந்தமா ஏதும் பேச போறதில்லை ரோஹன். சில கரையை நாம என்ன அழிக்க நினைச்சாலும் அது அழியாது. விட்டுடு” என்றார் மகனிடம்.
சண்முகம் தான் இதுநாள் வரை அவனுக்கு துணை நின்றது. இப்போது அவரே இப்படி சொல்ல, ரோஹனுக்கு எல்லாம் கைமீறி செல்வதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
சம்யுக்தா, லிங்கம், மணி மூவரும் குருமூர்த்திய சமாதானம் செய்து கொண்டிருக்க, “சார். பொருள் எல்லாம் வந்திருக்கு. எங்க இறக்கணும்” என்று செக்கியூரிட்டி வந்தார்.
“என்ன பொருள்?” என்று மணி கேட்க,
“என்னோடது தான்” என்று வந்தான் சர்வாச்சார்யா.
“தம்பி” மணி விழிக்க,
அவன் நேரே குருமூர்த்தியிடம் வந்தவன், “இரண்டு புளோர் என் ஆபிசுக்கு எடுத்துகிறேன்” என்றான் அறிவிப்பாக.
“எடுத்துக்கிறியா? நாந்தான் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன் இல்லை” என்று மூர்த்தி சொல்ல, நாயகன் பின்னால் திரும்பி ஓர் பார்வை பார்த்தான்.
அதன்பின் பொருள் எல்லாம் மடமடவென இறங்க ஆரம்பித்தது.
திடீர்ன்னு ஏன் இப்படி? சம்யுக்தா புரியாமல் நின்றாள்.
“ண்ணா. நம்ம செக்கியூரிட்டிங்களை கொஞ்சம் கூட மதிக்காம பொருள் எல்லாம் மேல ஏறுது” என்று மணி பார்த்து தகவல் கொடுக்க,
“டேய் தம்பி. நான் ஏற்கனவே மண்டை சூடாகி போய்த்தான் இருக்கேன். நாம இப்போ எதையும் பேச வேணாம். நீ எல்லாத்தையும் நிறுத்த சொல்லு” என்று குருமூர்த்தி சொல்ல,
“ம்ப்ச். எனக்கும் தலை வலிக்குது, காபி வேணும்” என்றான் நாயகன்.
“என்னை கோவப்படுத்தாத. இதென்ன விளையாட்டா? அதுவும் இரண்டு புளோர்?” என்று மூர்த்தி பல்லை கடிக்க,
“நான் கேட்டப்போ கொடுத்திருந்தா ஒண்ணோட போயிருப்பேன், இப்போ எனக்கு இரண்டு வேணும்” என்றான் அவன் தோள்களை குலுக்கி கொண்டு.
“இப்போ நீ நிறுத்த சொல்லலை. மொத்தத்தையும் தூள், தூளாக்கிடுவேன்”
“எனக்கென்ன? நீங்க தான் திரும்ப வாங்கி கொடுக்கணும்” என்றான்.
“ராஸ்கல் சொல்லிட்டே இருக்கேன். என் பேச்சை கேட்க மாட்டியா நீ?” என்று குருமூர்த்தி அவன் மேல் ஏறிக்கொண்டு செல்ல, கைகளை பேண்ட் பேக்கட்டில் விட்டபடி அசையாமல் நின்றான் சின்ன ரௌடி.
குருமூர்த்தி சென்ற வேகத்திற்கு இருவர் நெஞ்சும் உரச, கண்கள் மற்றவரை எரிக்க, மூச்சு காற்று ஒருவரை ஒருவர் அனலாக சுட்டது.
இதென்ன இரண்டு பேரும் இவ்வளவு குளோசா நிக்கிறாங்க? சம்யுக்தா முகம் ஏகத்துக்கும் சுருங்க,
“ப்பா. என்ன இது? தள்ளி வாங்க” என்று அவர் கைப்பற்றி இழுத்து விட்டாள் மகள்.
“இவன் என்னை வெறியேத்தாம விட மாட்டான்” குருமூர்த்தி பொறும,
“தலை வலிக்குதுன்னு எத்தனை முறை சொல்றது. இப்போ எனக்கு காபி வருமா வராதா?” என்று சத்தமிட்டான் நாயகன்.
“பில்டர் காபி எடுத்துட்டு வாங்க” என்று போன் செய்து சொன்னாள் சம்யுக்தா.
“ஹலோ சார் எப்படி இருக்கீங்க?” சண்முகத்தின் கை குலுக்கினான் சர்வாச்சார்யா.
குருமூர்த்தி, அவர் மகள், இவன்? எப்படியான உறவு இது?
சர்வாச்சார்யா மனதிலும் சம்யுக்தா இருக்காளா?
ஆம் என்றது அவன் சம்யுக்தா இருக்கும் திசை நோக்கி கத்தி காபி கேட்ட உரிமை.
இவளும் பில்டர் காபி என்றல்லவா சொல்கிறாள்.
தன்னை ஓர் நொடி கூட பார்க்கா சர்வாச்சார்யாவை ரோஹன் கண்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அடுத்து லிங்கமிடமும் பேசிவிட்டு, சோபாவில் சென்று விழுந்தான் நாயகன்.
குருமூர்த்தி அவனை நெருங்கி சண்டையிட, அவனும் கூலாக படுத்தபடி சண்டை போல் ஏதோ செய்து கொண்டிருந்தான்.
“எழுந்து உட்கார்ந்து பேசவே முடியாதா உன்னால?” என்று மூர்த்தி அவனிடம் கடுகடுக்க,
“ஏன் படுத்துட்டு பேசினா உங்களுக்கு காது கேட்காதா?” என்று கேட்டு வைத்தான் அடங்காதவன்.
“என்னம்மா அந்த தம்பி மூர்த்திகிட்ட இப்படி பேசிட்டு இருக்கு?” லிங்கம் நம்ப முடியாமல் சம்யுக்தாவிடம் கேட்க, சண்முகம், ரோஹனின் முகமும் கூட இதே கேள்வியை தான் கேட்டு கொண்டிருக்கிறது.
சம்யுக்தா என்ன சொல்வாள்? அவளுக்கு இது பழக்கம் தான். ஆனால் அங்குள்ள மற்றவர்களுக்கு இந்த குருமூர்த்தி புதிது! அவருடன் நேருக்கு நேர் நிற்கும் இவனும் புதிது!
ரோஹனுக்கு அந்த நேரம் முக்கியமான அழைப்பு வர, எடுத்து பேசியவன் அதிர்ந்து போனான்.
வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த அவன் தொழில், சில மணி நேரங்களில் ஆட்டம் கண்டிருந்தது..