ஒரு நாளுக்காக பெங்களூர் சென்று திரும்பி வர முடியாது என்பதால், வீட்டில் இருந்து வேலை பார்க்க கேட்டாள்.

நிச்சயம் கோவம் கொள்வார் என்று தெரியும். ஆனால் அவரோ எடுத்ததும் ஹைபிட்சில் ஆரம்பித்து வைத்தார்.

“என்ன சொல்றார்?” மகளின் பாவனையில் தந்தை முகம் மாறியது.

“ஒன்னுமில்லை. நீங்க கிளம்புங்க” என்று தந்தைக்கு கையசைத்தாள்.

“நீ பேசி முடி முதல்ல” அங்கேயே நின்றார் குருமூர்த்தி.

“இதுதான் லாஸ்ட் வார்னிங். நான் உங்களுக்கு கொடுத்த வேலை முடிச்சு எனக்கு ரிப்போர்ட் வந்தாகணும்” என்று போன் கட்டாக, சம்யுக்தா முகத்தை சாதாரணமாக வைத்தபடி, “சரி சொல்லிட்டார்ப்பா” என்றாள்.

“நாம இதைப்பத்தி திறப்பு விழா முடிச்சுட்டு பேசுறோம்” என்ற குருமூர்த்தி போன் வரவும் வெளியே கிளம்பிவிட்டார்.

திரும்ப வேலைக்கு போவேனா நான்? சம்யுக்தாவிற்கு சந்தேகமே.

“பாப்பா. நான் இந்த லிஸ்ட்ல இருக்க பொருள் எல்லாம் வாங்க போகணும். உன்னை வீட்ல விட்டுட்டு போகவா?” என்று மாசிலாமணி கேட்க,

“அங்கிள். நீங்க போய்ட்டு வாங்க. அப்பா வந்ததுக்கு அப்புறம் அவரோடே வீட்டுக்கு போயிக்கலாம்” என்றாள் சம்யுக்தா.

அவர்கள் இடம், சுற்றிலும் அவர்கள் ஆட்கள் என்பதால் மணி அவள் பேச்சை ஏற்றுக்கொண்டு கிளம்பினார்.

ரோஹன் அந்த நேரம் அங்கு வந்தவன், “ஹாய்” என்றான்.

சம்யுக்தா அவன் திடீர் வருகையில் ஜெர்க் ஆனாலும், “ஹலோ சீனியர்” என்றாள்.

“தேங்க் காட். ஞாபகம் இருக்கு. நான் கூட மறந்திருப்பேன்னு நினைச்சேன்” அவன் பெரிதாக நிம்மதியை வெளிப்படுத்தியவன், “எப்படி இருக்க? எல்லாம் ஓகேவா?” என்று விசாரித்தான்.

சம்யுக்தா அவனுக்கு பதில் சொல்லி அவனையும் நலம் விசாரிக்க, “ம்ஹூம். நான் நல்லா இல்லை” என்றான் ரோஹன்.

சம்யுக்தா இதென்ன என்று பார்க்க, “செகண்ட் டைம்” என்றான்.

“என்ன?” பெண் புரியாமல் கேட்க,

“என்னை துரத்துறது”

குருமூர்த்தி ஊட்டியை விட்டு அவனை அனுப்பியது தெரியும். அதற்கான குற்ற உணர்ச்சியும் பெண்ணுக்கு உண்டு. ஆனால் இரண்டாவது முறை?

“சோ மேடம்க்கு தெரியாது” என்று தானே அவளின் கேள்வியான பார்வையில் புரிந்து கொண்டவன்,

“என் கம்பெனி அக்ரீமெண்டை எம்பையர் கேன்சல் பண்ணியிருக்கு. எம்பையர்ல இடம் இல்லைன்னு மெயில் வந்திருக்கு” என்றான் ரோஹன்.

சம்யுக்தாவிற்கு இந்த தகவல் புதிது. “உங்க கம்பெனி உள்ள வந்ததும் எனக்கு தெரியாது. வெளியே போனதும் எனக்கு தெரியாது” என்றாள்.

“இன்னும் எத்தனை வருஷத்துக்கு நான் இதை எல்லாம் பேஸ் பண்ணனும்?” ரோஹன் கேட்க, சம்யுக்தாவிடம் பதில் இல்லை.

குருமூர்த்தி சம்மந்தப்பட்ட விஷயம் ஆகிற்றே!

சம்யுக்தா மௌனம் காப்பது ரோஹனை பாதித்திருக்க வேண்டும். அவனிடம் சீறலான மூச்சு.

மெயில் வந்த நிமிடம் முதல் குருமூர்த்தியை தொடர்பு கொள்ள இந்த நொடி வரையிலும் முயல்கிறான்.

குருமூர்த்தி சிறிதும் இடம் கொடுக்க மாட்டேன்னு என்று நிற்க, ரோஹன் நேரே கிளம்பி வந்துவிட்டான்.

“உன் அப்பாவோட ரிஜெக்ஷனை என்னால ஹாண்டில் பண்ண முடியலை. ஒரு மாதிரி டெஸ்பேர்ட் ஆகுது சம்யுக்தா. ஏன் இதை உட்கார்ந்து நம்மால சார்ட் அவுட் பண்ண முடியாது. நல்ல முறையில முடிச்சுக்கலாம் தானே? நீ சொல்லு?” என்று இவளிடம் கேட்டான்.

லிங்கமும் அதுதான் கேட்கிறார். சண்முகத்துடன் நல்ல முறையில் போய்விடு என்று நெறுக்குகிறார்.

ரோஹனும் இப்போது அதையே சொல்ல, சம்யுக்தாவிற்கு தலை வலிக்க ஆரம்பித்தது.

அவளை பொறுத்தவரை சண்முகத்தின் மீதும், அவர் குடும்பத்தின் மீதும் அவளுக்கு எந்தவிதமான கோவமும் இல்லை.

“எனக்கு தெரியும் மன்னிக்கிற மாதிரி எந்த தப்பையும் என் தாத்தா பண்ணலை. பட் அவரோட தப்புகளுக்கு நானும், என் அப்பாவும் பரிகாரம் செஞ்சுட்டே தான் இருக்கோம். ஊட்டியை விட்டு உன் அப்பா என்னை துரத்தும் போதும் சண்டை போடலை நான். அப்படியாவது உன் அப்பா சமாதானம் ஆகட்டும்ன்னு நினைச்சேன். பட் அவர் அப்படியே தான் இருக்கார். இரண்டாவது முறையும் என் துரத்துறார். என்னால இதை அக்சப்ட் பண்ணிக்க முடியல சம்யுக்தா” என்றான் ரோஹன்.

“அப்பா விஷயத்துல நான் தலையிட முடியாது சீனியர்” சம்யுக்தா சொல்ல,

“நீ எங்களை மன்னிச்சுட்டியா?” என்று கேட்டான் ரோஹன்.

“எப்போவும் உங்க யார்மேலயும் எனக்கு கோவம் இருந்தது இல்லை”

“சீரியஸ்லி” ரோஹன் கேட்க,

“உண்மையை தான் சொல்றேன் சீனியர்.” என்றாள் சம்யுக்தா.

“காட். கோவம் இல்லையா?” ரோஹன் முகம் அப்படியே மத்தாப்பாய் மலர்ந்து போனது.

அவன் மகிழ்ச்சியின் அளவை, அவன் விரிந்த புன்னகை சொன்னது.

“இப்போதான் ரிலீஃபா இருக்கு, பெரிய பாரமே இறங்கி, லைட்டா பீல் பண்றேன். தேங்க் யூ, தேங்க் யூ சோ சோ மச்” என்று ரோஹன் பெண்ணின் கையை தானே பற்றி கொள்ள, சம்யுக்தா திகைத்து அவனிடம் இருந்து கையை உருவி கொண்டாள்.

சர்வாச்சார்யா பெரிய மாமா சத்தியன், “மருமகனே. சண்முகத்தை விட நாம தான் குருமூர்த்திக்கு எதிரியா என்ன?” என்று கேட்டார்.

“என்ன சொல்றீங்க மாமா?” என்று கேட்ட சர்வாச்சார்யா கண்கள் மொபைலையே பார்த்திருந்தது.

சம்யுக்தா கைப்பற்றிய ரோஹன் அவன் திரை முழுதும் நிறைந்திருந்தான்.

“இல்லை சண்முகத்தை திறப்பு விழாக்கு கூப்பிட்டிருக்கார் வளரும் தொழிலதிபர் குருமூர்த்தி. உன்னை கூப்பிடலையே. அதான் சண்முகத்தை விட நீதான் அவருக்கு பெரிய எதிரியான்னு கேட்டேன்” என்றார் சத்தியன்.

“ஓஹ்” என்ற சர்வாச்சார்யா புருவங்கள் சுருங்கியது. அவன் பதிலை எதிர்பார்த்து சத்தியன் நிற்க, சர்வாச்சார்யா மொபைலை பார்த்த வண்ணம் கிளம்பிவிட்டான்.

அங்கு எம்பையரில், “ஸாரி. ஸாரி. எக்ஸைட்மென்ட்ல பண்ணிட்டேன்” என்ற ரோஹன்,

“தாத்தா உனக்கு பண்ணது ரொம்ப அதிகம். தரம் தாழ்ந்து போய், ம்ம்.  குற்ற உணர்ச்சி மட்டுமில்லாமல் அசிங்கமா கூட பீல் பண்ணியிருக்கேன்” என்று உண்மையான வருத்தத்துடன் சொன்னான்.

“இல்லை. நீங்க அப்படி எல்லாம் நினைக்க தேவையில்லை.  விட்டுடுங்க” என்றாள் சம்யுக்தா.

“ஊட்டியில என் ஐடென்ட்டி மறைச்சதுக்கு கோவமா இருப்ப. தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு இத்தனை வருஷம் தள்ளி இருந்தேன்” ரோஹன் சொல்ல,

“கேள்விப்பட்டபோ ஷாக் ஆனேன் தான் சீனியர். கோவம் எல்லாம் இல்லை. நீங்க அப்போவே என்கிட்ட பேசியிருந்திருக்கலாம்” என்றாள் பெண்.

“மிஸ் பண்ணிட்டேன். ம்ப்ச்” பின் தலையை தவிப்பாக கோதி கொண்டவன்,

“ஓகே. இப்போவும் லேட் ஆகிடலை தான்” என்றான் தனக்கு தானே சமாதானமாக.

“ஸாரி உட்கார கூட சொல்லலை. உட்காருங்க சீனியர். குடிக்க ஏதும் கொடுக்கவா?” என்று கேட்டாள் சம்யுக்தா.

“எஸ். காபி ப்ளீஸ்” என்றபடி சம்யுக்தா தருவித்த காபியை ரசித்து குடித்தவன்,

“கீழே இருக்க புளோர் தான் எங்களுக்கு கொடுத்தது. பாதி வேலைக்கு மேல முடிஞ்சிடுச்சு” என்று ரோஹன் சொல்ல,  சம்யுக்தாவிற்கு சங்கடமே!

“உன் அப்பாகிட்ட பேச ட்ரை பண்றேன். பண்ணிட்டே இருக்கேன். ம்ஹூம். எப்போவும் எனக்கு மட்டும் அவர் அவுட் ஆப் கவரேஜ் ஏரியா தான்” என்று மெலிதாக புன்னகைத்தவன்,

“எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா?” என்று இவளிடம் கேட்டான்.

சம்யுக்தா மையமாக தலையசைத்தவள், “என்னால முடிஞ்சா செய்றேன் சீனியர்” என்றாள்.

“நான் உன் அப்பாகிட்ட பேசுற வரைக்கும் இந்த புளோர் யாருக்கும் கொடுக்காம பார்த்துக்க முடியுமா?” என்று கேட்க,

“ட்ரை பண்றேன் சீனியர். ஆனா சிட்டில உங்களுக்கு இடம் இருக்கு, பில்ட்டிங் இருக்கு. ஏன் இங்க வரணும்ன்னு?” சம்யுக்தா கேட்டாள்.

“உள்ள வந்து ஏதும் பிரச்சனை பண்ணுவேன்னு சந்தேகப்படுறியா சம்யுக்தா” அவன் சிரித்த முகம் சுருங்கியது.

“சீனியர். நீங்க பிரச்சனை பண்ணணும்ன்னா உள்ள வந்துதான் பண்ணனும் இல்லை” சம்யுக்தா சொல்ல.

“நீ என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டே இருக்க சம்யுக்தா” என்றான் அவன் திரும்ப பூத்துவிட்ட முகத்துடன்.

“உன் அப்பா போல நீ இல்லை. அவர் அநியாயத்துக்கு ஸ்ட்ரிக்ட்” என்றும் அவன் சொல்ல,

“ஹாஹா. அவரை நீங்க புரிஞ்சுக்கலை சீனியர். எதிர்ல இருக்க ஆளை பொறுத்து தான் அப்பா இருப்பார். நானும் இருப்பேன்” என்றாள் சம்யுக்தா.

“நாந்தான் இப்போ உன் எதிர்ல இருக்கேன். நீ சிரிக்கிற. சோ நாம?” என்று அவன் புருவம் தூக்க,

“சீனியர். நோ, நோ. நீங்க திரும்ப ஆரம்பிக்க போறீங்களா?” பெண் அரண்டாள்.

“ரொம்ப அலறாத கேர்ள்! அய்யாக்கு இப்போ எவ்வளவு டிமென்ட் தெரியுமா?” என்று ரோஹன் காலர் தூக்க,

“சூப்பர் சீனியர், சரியான வழியில் போய்ட்டு இருக்கீங்க, அப்படியே போயிடுங்க” என்று கைக்குவித்தாள் பெண்.

“சம்யுக்தா. ஜஸ்ட் ஒரு கேள்வி. நான் திரும்ப உனக்கு ப்ரொபோஸ் பண்ணா என்ன பண்ணுவ?”

“ரிஜெக்ஷன் தான் சீனியர்”

“நீ உன் அப்பா மாதிரி தான். நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன்” என்றான் அவன் கடுப்புடன்.

சம்யுக்தா புன்னகைக்க, “சிரிக்கிற. ம்ம். என் மனசை உடைச்சுட்டு சிரிக்கிற. ஓகே. ரிஜெக்ஷனுக்கு நீயாவது காரணம் சொல்வியா?” என்று ரோஹன் கேட்க,

பெண்ணிடம் மௌனம். “உன் அப்பா காரணம் தான் உனக்குமா? என் பேமிலி?” என்று அவன் உறுத்தலை கேட்க,

“இல்லை சீனியர்” என்றாள் சம்யுக்தா.

“என்னை மறுக்க ஸ்ட்ராங்கானா காரணம் இல்லைன்னாலும் சுமாரான காரணமாவது கொடு பொண்ணே”

“சீனியர்”

“உங்க அப்பாக்கு நீ தான் ராணி! சண்முகம் மகன் ரோஹனா உங்க எம்பையர்க்குள்ள அனுமதி இல்லை, ஆனா இந்த ராணிக்கான ராஜாவா நான்  வரலாம் தானே?”

சம்யுக்தாவிற்குள் அதிர்வும், கோவமும். ஏனோ தீப்பற்றியது போல் உடல் சூடு கண்டது.

ராஜாவா? சிரித்த முகம் கோவமாக, வார்த்தைகள் சீறிக்கொண்டு வந்தது.

“என் வாழ்க்கையில ஒரு கிங் தான். அவரும் அரியணை ஏறிட்டார்” என்றாள் சர்வத்தின் நாயகி.