கடந்து செல் காதலுடன்! 30

குருமூர்த்தி அமைதியாக அமர்ந்திருக்க, “கடைசியா கேட்கிறேன். சண்முகத்தை கூப்பிடுவியா மாட்டியா?” என்று லிங்கம் கேட்டார்.

“அவரை மீட் பண்ணனும். அந்த பையன் விஷயமா. ஏற்பாடு பண்ணுங்க” குருமூர்த்தி சொல்ல,

“முடியாது. பண்ண மாட்டேன்” என்றார் லிங்கம் கோவமாக.

“அய்யா” குருமூர்த்தி அவரிடம் சமாதானமாக பேச வர,

“உனக்காக சண்முகம் நிறைய உதவி பண்ணியிருக்கான். உனக்கு தெரிஞ்சு கொஞ்சம் தெரியாம அதிகம். அவனை திறப்பு விழாக்கு கூப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு, மீட் பண்ண மட்டும் கேட்கிற. சரியில்லை மூர்த்தி” லிங்கம் அதிருப்தியாக சொன்னார்.

“அவரோட உதவியை நான் முதல்லே இருந்தே மறுத்துட்டு தான் இருக்கேன்” குருமூர்த்தி சொல்ல,

“ஆனாலும் உனக்காக அவன் செய்றான் மூர்த்தி. கேட்டு செய்றது வேற கேட்காமலே செய்றது வேற.” என்றார் லிங்கம்.

“அவருக்கு எதாவது காரணம் இருக்கும். என்னால எதையும் மறக்க முடியாது”

“மூர்த்தி. நீ தப்பு பண்ற. என் வளர்ப்பு நீ இல்லை”

“என்னை விட உங்களுக்கு அந்தாள் முக்கியமா போயிட்டார் இல்லை” மூர்த்தி கேட்க,

“உனக்காக தான் மூர்த்தி கேட்கிறேன் புரிஞ்சுக்கோ” என்றார் லிங்கம்.

“அப்படி எனக்காக கூட நான் அவரை கூப்பிட மாட்டேன். இதுக்கு மேல கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதீங்க” மூர்த்தி முடிவாக சொல்ல,

“என் பேச்சை மதிக்க மாட்டியா நீ” லிங்கம் விடமாட்டேன் என்று நின்றார்.

“உங்க பேச்சை மதிக்கிறேன்னு அந்தாளை கூப்பிட்டு தான் நிரூபிக்கணும் இல்லை” மூர்த்தியும் அவர் பிடியிலே நின்றார்.

“உனக்கு எப்படிடா புரிய வைப்பேன் நான்? சண்முகம், அவன் உனக்காக”

“போதும். இதுக்கு மேல நாம இதைப்பத்தி பேச வேண்டாம். அவன் எனக்காக என்ன பண்ணியிருந்தாலும் அதுக்கு நன்றி சொல்லி முடிச்சுகிறேன். இனியும் அந்தாள் நமக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை. மணி. பார்த்துக்கோ”

“நன்றி சொல்லி முடிச்சுக்கிறியா? சரி அப்படித்தான் பண்ணு. இனி சண்முகம் உனக்காக எதையும் செய்ய தேவையில்லை. நான் சொல்லிடுறேன். ஆனா திறப்பு விழா நடத்திடுவியா? இந்த கட்டிடத்தை திறந்திடுவியா நீ?” என்று லிங்கம் கேட்க,

“என்னை மிரட்டுறீங்களா?” மூர்த்தி நம்ப முடியாமல் கேட்டார்.

“உன் பொண்ணு இருக்கான்னு பார்க்கிறேன். இல்லை உன்னை இங்கேயே விளாசி தள்ளிடுவேன்” என்று லிங்கம் ஆத்திரமாக சொல்ல,

சம்யுக்தா இவர்கள் பேச்சு வார்த்தையில் விழித்து தான் அமர்ந்திருந்தாள்.

“பின்ன நீங்க சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம் இருக்கு சொல்லுங்க” குருமூர்த்தி கேட்க,

“எம்பையர் அப்ரூவல் கேன்சல் பண்ண சொல்லியிருக்காங்க. ஆர்டர் ரெடியாகிட்டு இருக்கு. விடிஞ்சதும் உன் கைக்கு வரும். நீயே பார்த்துக்கோ” என்றார் லிங்கம்.

“என்ன சொல்றீங்க அய்யா? யார் பண்ண வேலை இது?” மணி கோவமாக கேட்க,

“ஒரு ரௌடி எங்களுக்கு சமமா தொழில் பண்ணுவானான்னு கேட்கிறாங்களாம்?” என்றார் லிங்கம்.

“ஓஹ்” குருமூர்த்தி நெற்றியை சுருக்கினார்.

தன்னை சுற்றிய சூழ்நிலையில் மாற்றம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியாத ஆள் இல்லை குருமூர்த்தி.

கட்டிடம் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அதில் இறங்கிய பின் பல சவால்களை சந்திருந்தார்.

பணம் கொடுக்க கூடாது என்று இவர் கேட்ட பைனான்ஸ் ஆளிடம் சொன்னது, வேலைக்கு ஆட்களை வர விடாமல் தடுத்தது, பொருட்கள் ஏற்றி வரும் லாரியை மடக்கி நிறுத்தி வைப்பது, ஆய்வு எனும் பேரில் சிலர் வந்து மிரட்டி செல்வது என்று தொல்லைகள் நீண்டு கொண்டே தான் செல்கிறது இப்போது வரையிலும்.

குருமூர்த்தியும் அவரால் முடிந்தவரை அமைதியான முறையிலே எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.

ஆனாலும் திறப்பு விழா நேரத்தில் இவ்வளவு பெரிய தடங்கலை ஏற்படுத்துவார்கள் என்பதை குருமூர்த்தி எதிர்பார்த்திருக்க வேண்டுமோ?

யார் என்னை தடுப்பது? குருமூர்த்திக்கும் சிலர் மேல் சந்தேகம் உண்டு.

சம்யுக்தாவும் சிலவற்றை மணி மூலம் அறிந்தே இருந்தாள். “அய்யா. யார் கேன்சல் பண்ண சொன்னாங்கன்னு தெரியுமா?” என்று கேட்டாள்.

“ஒருத்தர் இரண்டு பேர் எல்லாம் கிடையாது. நமக்கு எதிரா ஒரு கூட்டமே சேர்ந்திருக்கு”

“எதிரிங்க நமக்கு ஒன்னும் புதுசில்லை” குருமூர்த்தி சொல்ல,

“எதிரிங்க. ம்ஹ்ம். அவங்க நமக்கு எதிரியான்னு தெரியலை” லிங்கம் யோசனையுடன் சொன்னார்.

“அய்யா”

“வசுந்தரா மேடம் குடும்பத்து ஆளுங்க பேரும் இதுல அடிபடுது” என்றார் லிங்கம் பெருமூச்சுடன்.

“எதிர்பார்த்தேன்” என்றார் குருமூர்த்தி கோபத்துடன்.

என் பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்க வைச்சதுக்கு அவங்க இதை கூட செய்யலைன்னா எப்படி?

சம்யுக்தா தான் அதிர்ந்து போனாள். அவளின் கண்கள் தந்தையை அச்சத்துடன் பார்த்தது.

“ஏன் சம்யுக்தா? ஏன் இந்த பயம்?” குருமூர்த்தி மகளிடம் நேரடியாக கேட்டார்.

“இல். இல்லைப்பா. அது”

“நான் அந்த குடும்பத்துக்கிட்ட சண்டைக்கு போயிட கூடாது. அவங்களை அப்படியே சும்மா விட்டுடணும். அப்பாகிட்ட இதைத்தானே எதிர்பார்க்கிற நீ “

“நோ’ப்பா” என்றாள் மகள் தெளிவாக.

“அப்புறமென்ன?”

“நீங்க கோவப்பட கூடாது”

“கோவப்பட கூடாதுன்னா? நம்ம அடிமடியில கை வைக்கிறவங்களுக்கு அப்பா போய் தேங்க்ஸ் வேணும்ன்னா சொல்லிட்டு வரவா?”

“ப்பா. ப்ளீஸ். நீங்க யாரையும் என்னவும் செய்ங்க, ஆனா நிதானத்தோட செய்ங்க. கோவம் மட்டும் வேண்டாம். அந்த கோவத்தால நான் இனியும் எதையும் இழக்க தயார் இல்லை”

“சம்யுக்தா” தந்தை திகைத்துவிட, மகள் முகத்தை திருப்பி கொண்டாள்.

“ம்ப்ச். நான் இதை, இப்படி யோசிக்கலை”

“உங்க பொண்ணு உங்களுக்கு பிடிக்காதது செய்றா. அந்த கோவத்தை காட்டுறீங்க. எனக்கு தெரியும். நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன். உங்க கோவத்துக்கு நான் தகுதியான ஆள் தான்”

“சம்யுக்தா”

மகள் மௌனமாகிவிட்டாள். தந்தையிடம் உரிமையாக சண்டை போட நான் என்ன நல்ல மகளா என்ன? இல்லை. என்னாலதான் மருத்துவமனையில் காயங்களுடன் அமர்ந்திருந்தார்.  யார், யாரோ அப்பாவை குற்றம் சாட்டினார்கள்.

“மூர்த்தி வர வர உனக்கு கோவம் அதிகம் ஆகிடுச்சு. பொறுமை பேச்சுக்கும் இல்லை” லிங்கம் அவரை சத்தம் போட,

“அப்பா சரியாத்தான் இருக்கார் அய்யா. அவருக்கு பொறுமை இருக்க போய் தான் நாம இப்போ எம்பையர்’ல  உட்கார்ந்திருக்கோம்” என்றாள் சம்யுக்தா.

“உன் அப்பன் பொறுமையை நான் பார்த்துட்டு தான் இருக்கேன். நீ அவனுக்கு ஏத்துக்கிட்டு வராத”

“என் பொண்ணுகிட்ட ஏன் கோவப்படுறீங்க அய்யா? உங்களை பொறுத்தவரை நான்தானே தப்பு. என்கிட்ட பேசுங்க” குருமூர்த்தி சொல்லிவிட,

“அப்பனும், மகளும் ஒருத்தருக்கு சளைச்சவங்க இல்லை. எப்படியோ போங்க எனக்கென்ன?” லிங்கம் சலித்து கொண்டவர்,

“காலையில இருந்து சண்முகம் தான் அப்ரூவல் கேன்சல் ஆக கூடாதுன்னு போராடிட்டு இருக்கான். அவனை திறப்பு விழாக்கு கூப்பிட மாட்டேன்னா என்ன அர்த்தம்?” என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றார்.

“என்கிட்ட சொல்லிட்டீங்க இல்லை. இனி அப்ரூவல் விஷயத்தை நான் பார்த்துகிறேன்” என்றார் குருமூர்த்தி.

“அமைச்சர் பேசியே பிடி கொடுக்க மாட்டேங்கிறாங்க. நீ பேசினா உடனே கொடுத்துடுவாங்களா?”

“யார், யார்கிட்ட எப்படி பேசணும்ன்னு எனக்கு தெரியும் அய்யா. சும்மா ஒன்னும் இங்கவரை நாம வந்திடலை. பார்த்துக்கலாம்” என்றார் குருமூர்த்தி திடமாக.

அவரிடம் கோவம் இல்லை என்பதில் மகளுக்கு திருப்தி.

 அன்றிரவு சம்யுக்தா எம்பையரில் இருக்க, ரோஹன் அங்கு வந்து சேர்ந்தான்.

“ஒரு ஏற்பாடும் நிக்க கூடாது. வேலை சீக்கிரம் நடக்கட்டும்” என்று மூர்த்தி சொல்லிவிட, எம்பையர் அதனுடைய நாளுக்காக தயாராகி கொண்டிருந்தது.

இறுதி கட்ட வேலைகள் மிகவும் துரிதமாக நடக்க, “நீ ஒரேடியா பங்க்ஷன் முடிஞ்சதும் பெங்களூர் போயிக்கோ” என்று மகளிடம் சொன்னார் குருமூர்த்தி.

“நானும் அதைத்தான் யோசிக்கிறேன். ஆனா மேனேஜர் என்ன சொல்வார் தெரியலைப்பா. இவர் புதுசா வந்திருக்கார். கெடுபிடி அதிகம்”

“சொல்லிப்பாரு. கேட்டா ஆச்சு. இல்லை வேலையை விடு”

“ப்பா. பெரிய கம்பெனி. அங்க ஓப்பனிங் வந்து வேலை கிடைக்கிறதே பெருசு”

“உன் எம்பையர் விட பெருசா?”

“ப்பா” மகள் என்ன பதில் சொல்வாள்?

“எனக்கு இந்த நிர்வாகம் எல்லாம் சரிப்பட்டு வராது. நீ கேட்ட நான் எம்பையர் முடிச்சு கொடுத்துட்டேன். இனி எல்லாம் உன் பொறுப்பு தான். நான் எதையும் பார்த்துக்க மாட்டேன்”

“ப்பா. அதுக்கு தான் தனியா டீம் ஹையர் பண்ணியிருக்கோம் இல்லை”

“அவங்களுக்கு பாஸ் யாரு?”

“நீங்க தான்ப்பா. இதென்ன கேள்வி?”

“எம்பையர் உன் பேர்ல இருக்கு. நீதான் இதுக்கு பாஸ்”

“ப்பா”

“என் முடிவு இதுதான்” என்று குருமூர்த்தி அவரின் நிலைப்பாட்டை சொல்லிவிட்டார்.

“நான் முதல்ல என் மேனேஜர்கிட்ட பேசுறேன்ப்பா. இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” சம்யுக்தா போன் எடுத்தாள்.