சர்வாச்சார்யாவின் கண்கள் பெண்ணை மிக கூர்மையாக தாக்க, அவன் கை நீண்டு அவளை தன்னிடம் இழுத்தது.

“என்ன?” என்றாள் சம்யுக்தா.

“நான் உனக்கு வேணாம்ன்னா நேரடியா சொல்லுடி” என்று சீறினான்.

சம்யுக்தா முகத்தை திருப்ப, அவள் கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தவன், “உன் அப்பனும் முதல்ல இதையே சொல்லியிருக்கார். இப்போ நீ! அப்பனும், மகளும் என்னடி நினைச்சிட்டு இருக்கீங்க?”

“அப்பாவை மரியாதை இல்லாம பேசாத”

“இவ்வளவு நேரம் நீ எனக்கு என்ன பண்ணிட்டிருந்த?”

“நான் இருக்கிறதை தான் சொன்னேன். உங்களுக்காக நாங்க எல்லாம் பாதிக்கப்படுறோம்”

“நான் கேட்கலையே? என் அம்மாக்காக உன் அப்பா செஞ்சார். எனக்காக இல்லை!”

“அப்போ உங்களுக்கு எல்லாம் தெரியும். நான், அப்பா யாருன்னு எல்லாம் தெரியும் இல்லை” சம்யுக்தா விழிகள் சிவந்தது.

“நீதாண்டி சொன்ன! உன் ரூம்ல வைச்சு நீதான் சொன்ன!”

“நீங்க வசுந்தரா மேடம் மகன்னு எனக்கு சொல்லியிருக்கலாம் இல்லை” சம்யுக்தா தேங்கிவிட்ட விழிகளுடன் கேட்டாள்.

“ம்ப்ச். இப்போ அதனால என்ன ஆகிடுச்சு”

“எல்லாமே அதனால தான் ஆச்சு. நான், நீங்க, என் அப்பா எல்லாம். நான் இனி அப்பா முகத்தை எப்படி  பார்ப்பேன். நீங்க என் ரூமுக்கு வந்தது எல்லாம் சொல்லிட்டேன். அவ்வளவுதானான்னு சந்தேகமா கேட்கிறார். நான், என்னால அவர் முகத்தை கூட பார்க்க முடியலை. அப்பா என்னை வெறுத்துடுவார்ன்னு பயமா இருக்கு. நான் நிறைய தப்பு பண்ணிட்டேன். உங்களை கோயம்பத்தூர் கூட்டிட்டு வந்திருக்க கூடாது. அதனால தான் நீங்க, அவர் இரண்டு பேரும் ஹாஸ், ஹாஸ்பிடல்ல. என்னால தான். எல்லாம் என்னால தான். நான் நல்ல பொண்ணே இல்லை” என்று அவன் கழுத்துக்கடியில் முகம் புதைத்து கொண்டாள்.

ம்ஹ்ம். இத்தனை நடந்த பின்னும் சம்யுக்தா அவனிடம் ஆறுதல் தேடுகிறாள்!

நிமிடங்கள் சில சென்ற பின்னே பெண்ணுக்கு புத்தி தெளிந்தது போல். வேகமாக அவனிடம் இருந்து விலகி கொண்டாள்.

சர்வாச்சார்யா அதுவரை அவளை வருடி கொண்டிருந்தவன், “உன் அப்பாகிட்ட நான் பேசுறேன்” என்றான்.

“ஒன்னும் தேவையில்லை. நீ அவரை மீட் பண்ணவே கூடாது” என்றாள் பதற்றத்துடன்.

குருமூர்த்தி கோவம்தான் தெரியுமே! கையில் கிடைத்தால் இவனை உண்டு இல்லையென ஆக்கிவிடுவார்.

சம்யுக்தாவிற்கு தான் அந்த கவலை. நம் பேட்டை ரௌடியோ, “ரொம்ப பண்ணாதடி. உன் ஹீரோ அப்பாவை நான் ஒன்னும் பண்ண மாட்டேன்” என்றான்.

‘க்கும். அவர் உன்னை எதாவது பண்ணிட்டா அதுக்கும் நாந்தான் கிடந்து தவிக்கணும்’ சம்யுக்தா அவனை நொடிப்பாக பார்த்தவள்,

“என்ன பண்ணுது? எங்கேயாவது வலிக்குதா?” என்று அவன் சுருங்கிய முகத்தில் தொற்றி கொண்ட பயத்துடன் கேட்டாள்.

“லைட்டா தான் கை வலிக்குது, உடனே சுருங்காத” என்றான்.

“டாக்டரை கூப்பிடவா? அவங்க வலிக்காம இருக்க”

“ஏன் அவர் வந்ததும் நீ ஓடிடவா?” என்று அவள் கைய கேட்டான். பெண் கொடுக்கவில்லை.

“நான் இப்போ போக தான் போறேன். நீங்க உடம்பை பார்த்துக்கோங்க. நாங்க ஒன்னு இரண்டு நாள்ல ஊட்டி கிளம்பிடுவோம்” என்றாள்.

“இப்போ அதுதான் முக்கியமா? நீ ஊட்டி போனா நானும் சென்னை போகத்தான் போறேன்”

“போங்க. சமத்தா இருங்க. உங்களை நீங்களே பார்த்துகிற அளவு ஸ்ட்ராங்கா இருங்க. தீரஜ் இல்லை யார் வந்தாலும் நீங்க தான் கிங்!” என்று அவன் முன் நெற்றி முடியை கோதி கொடுத்தவளின் விரல்கள் நடுக்கம் கண்டது.

இனி இவனை எப்போது பார்ப்பேன்!

பெண்ணின் கண்கள் அவனை முழுதும் தன்னுள் எடுத்து கொள்ள முயன்றது. போதவில்லை. என்னமோ மிகவும் பிரம்மாண்டமாக அவன் தெரிந்தான். அவளுக்குள் அடங்க மறுத்தான்.

“என்னடி பண்ற நீ?” அவன் கரகரத்த குரலுடன் கேட்டான்.

“உங்களுக்கு அந்த சிப் இப்போ கிடைக்காது, கேட்காதீங்க” என்றவள்,

“தேங்க்ஸ்” என்றாள்.

“எதுக்கு தேங்க்ஸ். நான் உனக்கு ஒரு நல்லது கூட பண்ணலை”

“நீங்க அப்போ கொடுத்த சாக்லேட்க்காக”

“ஏய் உனக்கு ஞாபகம் இருக்கா?” அவன் ஆச்சரியம் கொண்டான்.

‘தொடர் உதாசீனத்தால் பாதிக்க பட்டிருந்த சிறுமிக்கு, இவன் கொடுத்தது சாக்லேட் மட்டுமில்லை, சிறிதளவு ஆறுதலும் தான்!’

“சாக்லேட் கவர் கூட பத்திரமா வைச்சிருக்கேன்” என்றாள் சம்யுக்தா.

“சாக்லேட் கவர்க்கு இருக்க மரியாதை கூட எனக்கு இல்லையில்லை” அவன் கூர்மையாக கேட்டான்.

“சர்வா” என்று வசுந்தரா கதவை தட்டி கொண்டு வந்தவர், “அவங்க அப்பா போன் பண்ணிட்டார்” என்றார்.

“வருவான்னு சொல்லுங்க. இப்போத்தானே வந்தா, அப்படியென்ன அவசரமாம் அவருக்கு” மகன் சிடுசிடுவென விழுந்தான்.

“நான் போறேன். நீங்க ஹெல்த்தை பார்த்துக்கோங்க. டேக் கேர்” என்று சர்வாச்சார்யாவிடம் சொன்னாள் சம்யுக்தா.

“போறியா? வரேன்னு சொல்ல தெரியாதா?” சர்வா அவளின் கையை பற்றவே பார்த்தான்.

சம்யுக்தா அவனை விட்டு தள்ளி நின்றவள், வசுந்தராவிற்கு தலையசைக்க, “ரொம்ப நன்றிமா. உங்க உதவியை என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன். குருமூர்த்திக்கு என்மேல கொஞ்சம் கோவம். நாங்க பண்ணதும் சரியில்லை. நான் கொஞ்ச நாள் கழிச்சு உங்களை மீட் பண்ண வரேன்” என்றபடி விடை கொடுத்தார் வசுந்தரா.

சர்வாச்சார்யா அவளை நிறுத்தி வைக்க முயல, சம்யுக்தா நிற்காமல் வெளியேறிவிட்டாள்.

அடுத்த இரண்டு நாள் சம்யுக்தா அங்கேயே இருந்தும் சர்வாச்சார்யாவை சென்று பார்க்கவில்லை. நிறைய முறை, நிறைய வழிகளில் அவளை அழைத்துவிட்டான். ஆனால் சம்யுக்தா இறுதிவரை அவனை காண செல்லவில்லை.

குருமூர்த்தியை அன்று வீட்டிற்கு போக சொல்லிவிட்டார்கள். மாசிலாமணி மறுநாளே மருத்துவமனை வந்திருக்க, அவரும் சென்று சர்வாச்சார்யாவை பாத்திருந்தார். லிங்கமும் அங்கேயே தான் இருந்தார்.

சிவப்பிரகாசம் பணம் கட்டியிருக்க, மணி அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்.

“ஏன்? எங்களால தானே அவருக்கு அடிபட்டுச்சு” என்று சிவப்பிரகாசம் பணத்தை வாங்க மறுக்க, மணி அவரின் முன் வைத்து வந்துவிட்டார்.

அவர்கள் ஏற்பாடு செய்த எந்த வசதியையும் குருமூர்த்தி பெற்று கொள்ளவில்லை. உணவு முதல் கொண்டு எல்லாம் திரும்பி வந்தது. சர்வாச்சார்யா இதையெல்லாம் அமைதியாக பார்த்திருந்தான்.

குருமூர்த்தி காயங்கள் நல்லவேளைக்கு ஆழமாக இல்லை என்பதால், ஓரளவு மனிதர் திடமாகவே தயாராகியவர், அறை வாசலுக்கு செல்ல, அங்கு சர்வாச்சார்யா நின்றிருந்தான்.

அவருக்கு நேரெதிர் நின்றவனின் கைக்கட்டு பெரிதாக இருக்க, மெலிந்து போயிருந்தான்.

அறைக்குள் வந்து கதவடைத்தவனை கண்டு, சம்யுக்தாவிற்கு திக், திக்கென இதயம் அடித்து கொண்டது. குருமூர்த்தி கண்கள் ஓர் நொடி அவனை ஆராய்ந்து, அதன் பின் தீயாக எரிந்தது.

‘ராஸ்கல் என் பொண்ணு ரூமுக்கு போயிருக்கான் இவன்’ துடித்த கைகளை மடக்கி கொண்டார்.

“எப்படி இருக்கீங்க?” என்று இவரிடம் நலம் விசாரித்தான்.

“ம்ம்ஹ்ம்” என்று உறுமினார்.

“சம்யுக்தாகிட்ட”

“என் பொண்ணு பேரை சொல்லாத” என்று மனிதர் மிரட்டினார்.

“சம்யு தங்கம்கிட்ட நீங்க கோவப்பட கூடாது” என்றான் அவன் அடங்காமல்.

சம்யு தங்கமா? சம்யுக்தாவிற்கு மொத்தமும் வேர்த்துவிட்டது. அவனை கண்களால் அதட்ட, அவனோ  இவளுக்கு முகத்தை திருப்பி கொண்டான்.

 “ராஸ்கல். பெரிய இவனாட நீ? என் பொண்ணு ரூமுக்கு போயிருக்க” என்று குருமூர்த்தி ஆத்திரமாக கேட்டார்.

“ஆமா போனேன். சம்யுக்தா ரூமுக்கு போக என்னைவிட வேற யாருக்கு உரிமை இருக்கு?” என்று நெஞ்சை நிமிர்த்தினான்.

“உன்னை இப்போவே கொன்னுடுறேன்டா. போனா போகுதுன்னு விட்டா ஓவரா போற நீ?”

“என்ன ஓவரா போயிட்டேன். இனி தான் போவேன். என்ன பண்ணுவீங்க?”

“என்ன பண்ணிட்டிருக்க நீ? முதல்ல அவர்கிட்ட இருந்து தள்ளி நில்லு” சம்யுக்தா இருவருக்கும் இடையில் வந்தாள்.

“சம்யுக்தா இந்த பக்கம் வா” என்று குருமூர்த்தி மகளை  அதட்ட,

“தள்ளு. அப்படியென்ன பண்ணிடுவார்ன்னு நானும் பார்க்கிறேன்” என்று இளங்காளை திமிறி கொண்டு நின்றது.

“பண்ணுவேன்டா. கண்டிப்பா பண்ணுவேன். என்னைக்கு இருந்தாலும் உன்னை வெளுக்காம விட மாட்டேன்” குருமூர்த்தி உறுதியாக சொன்னவர்,

“வாம்மா. நாம போலாம்” என்று மகளின் கைப்பற்றி இரண்டு அடி எடுத்து வைத்தவர், அடுத்த அடியில் சிலையாகிவிட்டார்.

சர்வாச்சார்யா அவரை பின்னிருந்து அணைத்திருந்தான்.

சம்யுக்தா கண்கள் ஏகத்துக்கும் விரிந்து போனது. மூச்சு விடுறோமா? இல்லை அடைச்சுக்கிச்சா?

குருமூர்த்தி கத்த வாய் திறக்க வார்த்தைகள் வருவேனா என்றது. அவரின் உடலை உதறுகிறார் தான், ஆனால் அதில் சிறிதும் வலுவில்லை.

“தேங்க்ஸ் எல்லாம் சொல்லி நம்மளை பிரிக்க மாட்டேன்” என்றான் சர்வாச்சார்யா.

“என். என்னை விடுடா” குருமூர்த்தி சொல்ல,

“ம்ஹூம். மாட்டேன்” என்று இன்னும் இறுக்கத்தை கூட்டினான்.

“இப்படியெல்லாம் பண்ணா மட்டும் நான் உன்னை விட்டுறுவேனா?”

“விடாதீங்க? ஏன் விடுறீங்க” என்று இவரிடம் கோவம் கொண்டான்.

“உன்னை கட்டி இதுவரைக்கும் நான் மேய்ச்சதே போதும். தள்ளுடா”

“காலத்துக்கும் நீங்க தான் மேய்க்கணும். என்கிட்ட இருந்து உங்களுக்கு விடுதலையே கிடையாது”

குருமூர்த்தி அவன் பிடியில் இருந்து வெளியே வந்தவர், “திரும்ப எங்க பக்கம் வந்துடாத” என்று எச்சரித்தார்.

“வருவேன். கண்டிப்பா வருவேன். நீங்க என்ன என்னை வராத சொல்றது? எனக்கில்லாத உரிமையா?” என்று குதித்தான்.

“போடா. போ. முதல்ல வாழ்க்கையிலே சுயமா நிக்கிற வழியை பாரு. வாம்மா” என்று மகளை இழுத்தவர், அவள் வராததில் என்னவோ என்று திரும்பி பார்க்க, அவளின் இன்னொரு கை அவன் பிடியில் சிக்கியிருந்தது.

“டேய். என்ன லந்தா? விடுடா அவளை”

“நான் அவளுக்கு பாய் சொல்ல வேண்டாமா”

“வேண்டாம்” என்று அவன் கையை பிரித்துவிட்டவர்,

“நன்றி கடனுக்காக மட்டும் தான் உன்னை நான் பார்த்துக்கிட்டேன், இனி அதுவும் நமக்குள்ள கிடையாது. இனி நீ யாரோ, நாங்க யாரோ. கிட்ட வந்துடாத” என்றார் குருமூர்த்தி.

நன்றி கடன்! உன்னை பார்த்துக்கிட்டேன்! உன்னை காப்பாத்த ஆள் வேணும்! உயிர் தான் முக்கியம்! சுயமா நில்லு! எங்ககிட்ட வந்துடாத! நீ எங்களுக்கு வேண்டாம்! போதும்!

எனக்கான மதிப்பே இவர்களிடம் சுத்தமாக இல்லையா? அப்பா, மகள் வார்த்தைகளை ஒதுக்கவே பார்க்கிறான். ஆனால் நீண்டு கொண்டே செல்கிறது!

“ஏன்?” சர்வாச்சார்யா அவரை நேர்கொண்டு பார்த்தான்.

“முதல் விஷயம் உன் குடும்பம்! பணம், அந்தஸ்து தான் உங்க உயிர் மூச்சு. அப்படியான உயிர் மூச்சு எங்களுக்கு வேண்டாம்”

“அடுத்து நீ! உன்னை நம்பினேன் நான். ஆனா நீ என் நம்பிக்கையை தூள், தூளா உடைச்சுட்ட! என் பொண்ணு  ரூமுக்கு போனதும் சரி, அவளை கூட்டிட்டு கோயம்பத்தூர் வந்ததும் சரி. இரண்டுமே சரியில்லை. நீ சரியில்லை”

“ப்பா. நான், நாந்தான் அவரை”

“உன்னைவிட சின்ன பொண்ணுடா. அவளை பேசி ஏமாத்தியிருக்க நீ? உனக்கு ஆபத்துன்னு நல்லா தெரியும். ஆனாலும் நீ? இங்க அவளுக்கோ, உனக்கோ, இல்லை எனக்கோ எதாவது ஆகியிருந்தா?”

“எங்க இரண்டு பேர்ல ஒருத்தர் போயிருந்தாலும் மற்றவங்க கதி என்ன? உனக்கு ஆகியிருந்தா உன் குடும்பம் என்னை விட்டிருக்குமா? இதுக்கே என்னை காயத்தோட உட்கார வைச்ச குடும்பம்டா உன் குடும்பம்!”

“நீ, அவங்க எல்லாம் இவ்வளவு தான், ஆனா நாங்க, நானும் என் பொண்ணும் அப்படி இல்லை. கொலைகாரனா இருந்தாலும் என் பொண்ணுக்கு நான் தான் ஹீரோ! எனக்கும் அவதான் எல்லாம். ஒரு குடும்பமா இப்போதான் நாங்க வாழவே ஆரம்பிச்சிருக்கோம். எங்களுக்குள்ள நீ வேண்டாம். வேண்டவே வேண்டாம்” குருமூர்த்தி தெளிவாக, திடமாக சொல்லிவிட்டார்.

சர்வாச்சார்யா ஏறி இறங்கும் நெஞ்சத்துடன் அப்பா, மகளை பார்த்தான். சம்யுக்தா சொல்லிய வார்த்தைகளும், குருமூர்த்தி சொல்லிய வார்த்தைகளும் அவனை மிகவும் பதம் பார்த்தது. கோவம் வந்தது.

ஏதேதோ சொல்ல வேண்டும், அவரிடம் சண்டையிட வேண்டும். ஆனால் எதுவும் செய்யவில்லை.

“ஹீரோ” சம்யுக்தாவும் இதைத்தான் சொன்னாள்.

அப்போ நான்? நான் யாரு? ஜீரோ! இவங்களுக்கு நான் அப்படித்தான் இருக்கேனா?

அவ்வளவு கெட்டவனா நான்? இல்லை அவ்வளவு கீழிறங்கி விட்டேனா?

இவளும் அப்படித்தானே சொன்னாள். உயிர் தான் முக்கியம், தாழ்ந்து போறது இல்லையில்லை!

சர்வாச்சார்யா அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்.

“இதுவரைக்கும் நீங்க பண்ண எல்லாத்துக்கும் தேங்க்ஸ். நான் பண்ண எல்லாத்துக்கும் ஸாரி” என்று இரு கைகளை கூப்பி இருவரிடமும் சொன்னவன், அறையை விட்டு வெளியேறினான்.

குருமூர்த்தி பார்வை ஓர் நொடி இளக்கம் கண்டது. பின் அதற்கும் சேர்த்து உறுதியாக மகளின் கை பற்றி கொண்டார்.

சம்யுக்தா அவன் கலங்கியிருந்த கண்களில் தானும் கலங்கி போனாலும், “இதுதான் சரி” என்று அப்பாவின் பிடியில் அமைதியாக நின்று கொண்டாள்.

இனி காட்சிகள் மாறுமா? சர்வாச்சார்யா திரும்ப இவர்களிடம் வருவானா? இல்லை இவர்கள் அவனை தேடி செல்வார்களா?

விடை தெரியா கேள்விகளுடன் இரண்டாம் பாகம் விரைவில்!