கடந்து செல் காதலுடன்! 22

குருமூர்த்தியும், சம்யுக்தாவும் ஓர் அறைக்குள் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

அறைக்கு வெளியே கருப்பு உடை அணிந்த ஆட்கள் இருவர் காவலுக்கு இருந்தார்கள்.

‘ஏன் இவங்களை இங்க நிக்க வைச்சிருக்காங்க. ஒருவேளை எங்க பாதுகாப்புக்காக இருக்குமோ?’

ஆனால் நான் வெளியே செல்ல முயன்ற போது என்னை தடுத்தார்களே?

தடுத்தது கூட பாதுகாப்பு சம்மந்தப்பட்டது என்றால், அந்த குரலில் இருந்த கடுமை அது எதை குறிக்கிறது?

‘நாங்க வெளியே போக கூடாதோ?’ சம்யுக்தாவிற்குள் கேள்வி.

சர்வாச்சார்யா எப்படி இருக்கிறான் என்று தெரியவில்லை. இதே மருத்துவமனையில் தான் இருக்கிறான். ஆனால் எங்கிருக்கிறான் என்று தெரியாது.

யாரிடம் கேட்க? முதலில் இந்த அறைக்குள் யார் வருகிறார்கள்? யாரும் இல்லை.

குருமூர்த்தியின் காயத்துக்கு மருத்துவம் நடந்ததுடன் சரி, அதன் பின் முழு அமைதி.

குருமூர்த்தி கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தவர், “என்னை விட்டு எங்கேயும் போக கூடாது” என்று மகளிடம் சொன்னார். தந்தைக்குள் ஆயிரம் விஷயங்கள் ஓடி கொண்டிருந்தது.

“சரி, சரிப்பா” என்ற சம்யுக்தா, ‘வலிக்குதாப்பா?’ என்று கேட்க கூட அஞ்சினாள்.

குருமூர்த்தி முகம் ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லாததில் மகளுக்கு அவளின் கேள்விகள் யாவும் வாய்க்குள்ளே நின்றுவிட்டது.

குருமூர்த்தி இருக்கையில் அசைய, அப்பா படுக்க பெட் வேணுமே? சம்யுக்தா எழுந்து வாசலுக்கு சென்று கேட்க,

“அமைதியா போய் உட்காருங்க” என்று ஓர் எச்சரிக்கை.

ஏன் இவ்வளவு கடுமை? நான் செய்ததற்கா? சம்யுக்தா கனத்த நெஞ்சத்துடன் தந்தைக்கு அருகில் வந்தாள்.

குருமூர்த்தி காயத்திற்கு வைத்தியம் பார்த்ததன் விளைவாக ஒருவகையான மயக்கத்தில் இருந்தார்.

பிடிமானம் இல்லாமல் சாய்ந்த குருமூர்த்தியின் தலையை சட்டென தன் தோளில் தாங்கி கொண்டாள் மகள்.

அப்பா காயத்தோட எப்படி உட்கார்ந்திருப்பார்? ஏன் இப்படி பண்றாங்க? சம்யுக்தாவிற்கு மெல்ல மெல்ல கண்ணீர் உற்பத்தியானது.

ஆனால் துடைக்கவோ, ஏன் என்று கேட்கவோ யார் வருவார்கள்?

சம்யுக்தாவிற்கு நடப்பது  புரிந்தால் தானே அவளின் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்?

அவளின் எண்ணம் எல்லாம் இன்று நடந்து விட்ட நிகழ்வுகளுக்கு சென்றுவிட்டது.

குருமூர்த்தி வரும் வரை நீடித்த நேரங்களை நினைத்தாலே, இப்போதும் உடல் அதிர்கிறது.

சிப் எடுக்கும் வரை கூட சம்யுக்தாவிற்கு சமாளித்து விடலாம் என்று சிறு நம்பிக்கை இருந்தது.

ஆனால் சர்வாச்சார்யா இவளை அறைக்குள் அடைத்துவிட்டு, அவன் வெளியே சென்ற நேரம் பெண்ணுக்கு உயிரே போய்விட்டது.

கிறுக்கன் இவனை டார்கெட் பண்ணித்தானே ஆளுங்க வந்திருக்காங்க, இவன் ஏன் வெளியே போனான்? கோபத்துடன் பயமும் பெண்ணை பிடித்தாட்டியது.

குணா வேறு  நாம மாட்டிகிட்டோம் அவ்வளவு தான் என்கிறான்.

கையில் இருக்கும் ஆதாரம் ஒருபக்கம், சர்வாச்சார்யா மறுபக்கம்!

பெரிய தப்பு பண்ணிட்டேன், நான் அவனை  இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாது! அந்த மெண்டலோடு சேர்ந்து நீயும் மெண்டல் ஆகிட்ட சம்யுக்தா! தன்னை தானே நெற்றியில் அறைந்து கொண்டாள் பெண்.

எதாவது செய்தாக வேண்டும் என்று உடனடியாக யோசித்து அவளுக்கு தோன்றியதை அவள் செய்தாள்.

அவளின் நல்ல நேரம் யாரோ கதவு திறந்துவிட்டார்கள். மின்னலாக சர்வாச்சார்யா எங்கிருக்கிறான் என்று அவனை தேடித்தான் பெண் ஓடினாள்.

சுற்றிலும் இருக்கும் ஆபத்தை பற்றி அவள் எங்கு நினைத்தாள்? அவளின் முழு கவனமும் சர்வாச்சார்யா என்பவனை சுற்றி மட்டுமே!

காயங்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தவனை பார்த்த பின்னே நிம்மதியாக மூச்சுவிட்டவள், அவனை இழுத்து கொண்ட ஓட முயல, ஆட்கள் விட வேண்டுமே?

குருமூர்த்தி ஆட்களும் சட்டென இருவரை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துவிட,

“நீ ஏண்டி இங்க வந்த?” என்று சம்யுக்தாவிடம் கத்தினான் சர்வாச்சார்யா.

“உன்னை நானே கொன்னுடுவேன்? எதுக்குடா என்னை ரூமுக்குள்ள விட்டு வந்த? இவங்க எல்லாம் என்னை தேடியா வந்திருக்காங்க” என்று சம்யுக்தா அவனிடம் வெடித்தாள்.

“உன்னை மட்டும் விட்டுடுவாங்களா? உன்னையும் தாண்டி அட்டேக் பண்ணுவாங்க”

“டேய் நாம முதல்ல இங்கிருந்து தப்பிக்கிற வழியை பார்க்கணும்”

“நான் இல்லை. நீ? நீ முதல்ல இங்கிருந்து ஓடுற வழியை பாரு” என்றவனுக்கு தன்னை நிச்சயமாக விட மாட்டார்கள் என்று புரிந்து போனது.

நடக்கும் தாக்குதல்கள் அனைத்தும் இவனை மட்டும் குறி வைத்தே நடக்கிறது. இதோ இப்போதும் இந்த வளையத்தை மீறி அவனை தாக்க அவ்வளவு போராடுகிறார்கள்.

குருமூர்த்தி ஆட்கள் மிகவும் கடுமையாக சண்டையிடுகின்றனர். பணத்தை தாண்டி குருமூர்த்தி எனும் மனிதனுக்காக இவனை காப்பாத்த போராடுகின்றார்கள்.

சர்வாச்சார்யாவிற்கு புரிகிறது. அவரின் மகளை நான் விட்டுவிட கூடாது. நூலளவு இடைவெளி  கிடைத்தாலும் சம்யுக்தாவை தன்னை விட்டு வெளியே தள்ளவே பார்க்கிறான். ஆனால் அவன் கைப்பற்றி இருப்பது சம்யுக்தா! எப்படி விடுவாள் பெண்!

“என்னை விட்டு தொலைடி” என்று கையை உதறி கத்தியும் பலனில்லை.

“மூடிட்டு நில்லுடா” என்று இவனுக்கு மேல் அரட்டுகிறாள் சம்யுக்தா.

“உள்ள தள்ளுங்க, எங்க பின்னாடி தள்ளி நில்லுங்க” என்று குருமூர்த்தி ஆட்கள் இருவரையும் முழுதும் மறைத்து கொள்ள, எதிர்தரப்பு ஆட்கள் தங்கள் பொறுமையை இழந்துவிட்டார்கள்.

கத்தியை மிகவும் ஆக்ரோஷமாக வீச சம்யுக்தா, சர்வாச்சார்யா இருவர் கைகளும் பிரியும்  நிலை உருவானது.

“அவனை விட்டுடாதீங்க, சுடுங்கடா அவனை” என்று ஒருவன் கத்த, சம்யுக்தாவும், ஆட்களும் சுதாரிப்பதற்குள் சர்வாச்சார்யா தோளின் மீது குண்டு பாய்ந்துவிட்டது.

அவன் நெஞ்சுக்கு வைத்த குறியில் இருந்து சர்வாச்சார்யா விலகிவிடவே குறி தப்பியது. அதற்கே சம்யுக்தா நடுங்கிவிட்டாள்.

ச்சே. என்று திரும்ப அவனை குறி வைக்க, குருமூர்த்தி ஆட்களும் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்ததுடன்,

“இன்னொரு முறை ஷூட் பண்ணீங்க, ஒருத்தன் உயிரோட வெளியே போக மாட்டீங்க” என்று கடுமையாக எச்சரிக்க,

வேகமாக சர்வாச்சார்யாவை மறைத்து நின்ற சம்யுக்தாவும் பாதுகாப்புக்கென எடுத்து வந்த துப்பாக்கியை தன் இடையில் இருந்து எடுத்து நின்றாள்.

பயிற்சிக்காக சுடுவது வேறு. ஆட்களை குறி வைப்பது வேறு! சம்யுக்தா கரங்கள் நடுக்கம் கண்டது. பின்னால் இருப்பவனுக்கு எதுவும் ஆகிவிட கூடாது. இவர்கள் திரும்ப சுட்டால் விடவும் கூடாது. நடப்பது நடக்கட்டும் என்று முடிவுடனே நடுக்கத்தில் நழுவிய துப்பாக்கியை இறுக்க பற்றி கொண்டு நின்றாள்.

“சம்யுக்தா” என்றழைத்த குருமூர்த்தியை கண்டதும் தான்,

“அப்பா” என்று கதறிய சம்யுக்தா கையில் இருந்த துப்பாக்கியை நழுவவிட்டாள்.

“அப்பா மட்டும் அந்த நேரம் சரியா வராம போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?” சம்யுக்தாவிற்கு அந்த நினைப்பே நடுங்க வைத்தது.

எத்தகைய விபரீதங்கள் எல்லாம் நடந்திருக்குமோ?

குருமூர்த்தியே இருவரையும் காப்பாற்றி வெளியே அழைத்து வர அதிகளவில் சிரமப்பட்டார்.

சம்யுக்தா கையில் துப்பாக்கி, பின்னால் சர்வாச்சார்யா சரிந்திருந்ததிலே, குருமூர்த்தி நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார்.

“என் பிள்ளைங்க” என்று வளையத்திற்குள் பாய்ந்தவர், மகளையும், அவனையும் தன் இருக்கரங்களால் இறுக்கமாக பற்றி கொண்டார்.

“ப்பா, ப்பா” என்று சம்யுக்தா அவரின் நெஞ்சத்தில் ஒன்றி பரிதவிக்க, சர்வாச்சார்யா அவரின் மறுக்கரத்தை வலுவாக கோர்த்து கொண்டான்.

“ஒன்னுமில்லை, ஒன்னுமில்லை. நான் வந்துட்டேன்,  நான் பார்த்துகிறேன்” என்று குருமூர்த்தி இருவரையும் தன்னோடு சேர்த்து சமாதானம் சொன்னார்.

இத்தனை நேரம் அவரின் தவிப்பும் வார்த்தையால் விவரிக்க முடியாதது.

“அண்ணா. நமக்கு நேரம் இல்லை. அவரை சீக்கிரம் ஹாஸ்பிடல்ல சேர்க்கணும். இவனுங்க விட மாட்டேங்குறாங்க” என்று ஆட்கள் குருமூர்த்தியிடம் சொல்ல,

“இவரை பிடிமா” என்று சர்வாச்சார்யாவை மகளிடம் கொடுத்தார்.

“கண்ணை ஏன் மூடுற, மூடாதடா. என்னை பாரு, இங்க பாரு” என்று சம்யுக்தா கண்ணீருடன் அவன் கன்னம் வருடி, அவனை பத்திரமாக தன் நெஞ்சுக்குள் பொத்தி கொள்ள,

“நான் ஓகே. ஏன் இப்படி அழுற? அழாத” சர்வாச்சார்யா அவளின் கண்ணீர் தாங்காமல் சிரமத்துடன் சொன்னவன், அவளின் நெஞ்சுக்குள் இருந்தபடி ஏதோ முனகி கொண்டே இருந்தான்.

ரத்தம் வெளியேற, மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தவன் மகளிடம் காட்டும் நெருக்கம்,  மகளின் வார்த்தைகள், அவளின் கண்ணீர் எல்லாம் குருமூர்த்தியை சுருக்கென குத்தியது.

“வாயா குருமூர்த்தி. இவனை பதுக்கி வைச்சுக்கிட்டு தான் எங்ககிட்ட இல்லைன்னு நாடகம் ஆடுனியா நீ?” என்று ஆட்கள் கோபத்துடன் குருமூர்த்தியின் மேல் பாய்ந்து கொண்டு வந்தனர்.

குருமூர்த்தி சட்டென சுதாரித்து, “துப்பாக்கி எடுத்தவன் எவண்டா?” என்று கோவத்துடன் சண்டையிட, சில நிமிடங்கள் அந்த இடமே போர்க்களம் தான்.

பாவம் பார்க்கவே இல்லை. கடுமையான தாக்குதலை நிகழ்த்தினார் குருமூர்த்தி.

“அண்ணா ஆம்புலன்ஸ் வெளியே இருக்கு. நீங்க இவரை தூக்குங்க. நாங்க சமாளிச்சுகிறோம்” என்று சூழ்நிலை ஒரு கட்டுக்குள் வரவும் ஆட்கள் இவர்கள் மூவரையும் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

குருமூர்த்திக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டிருக்க, சம்யுக்தாவிற்கு இருவரையும் பார்த்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

என் முட்டாள்தனம் தான் இதற்கெல்லாம் காரணம்! கணக்கிலே இல்லாமல் தன்னை நிந்தித்து கொண்டாள் பெண்.

சர்வாச்சார்யா உடனே அவசரப்பிரிவுக்கு அழைத்து செல்லப்பட, குருமூர்த்தியையும், இவளையும் ஓர் அறைக்குள் அமர வைத்தார்கள்.

அதிலே சிவப்பிரகாசம் வந்துவிட்டார் என்பதை குருமூர்த்தி உணர்ந்து கொண்டார்.

“அப்பாக்கு அடிபட்டிருக்கு. ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்” என்று சம்யுக்தா அவசரப்படுத்த,

“ஒன்னுமில்லை, சின்ன காயம்தான்” என்று மகளின் கைப்பற்றி தட்டி கொடுத்தார் குருமூர்த்தி.

மருத்துவர்கள் வந்து அவருக்கு வைத்தியம் பார்த்து சென்றும் நீண்ட நேரம் ஆகிவிட்டது.