‘ஏன் இப்படி? நோ சம்யு’ தன் அதிரும் இதயத்தை தந்தை கவனிக்காதவாறு வருடி விட்டு கொண்டவள், “சரிப்பா. போலாம்” என்று தன் அறைக்கு வந்துவிட்டாள்.
“அண்ணா. இங்கேயே எடுக்கலாம் இல்லை” என்று மணி தயங்க,
சர்வாச்சார்யா பாதுகாப்பு பற்றிய தயக்கம் என்பதை உணர்ந்து, “நீதான் இங்க இருக்க இல்லை” என்றார் குருமூர்த்தி.
“அண்ணா. இப்போவும் நம்மளை கண்காணிச்சுட்டு தான் இருக்காங்க. சஞ்சீவ் ஆளுங்க சில பேர் சென்னையிலே தங்கிட்டாங்கன்னு சண்முகம் சொன்னார்” என்றார் மணி.
“அதனால என்ன மணி? அவங்க இருந்துட்டு போகட்டும். நான் என் பொண்ணு கூட போகணும்” என்றார் மூர்த்தி.
பண்டிகை, மற்ற நாட்களில் சம்யுக்தா தானே எடுத்து கொள்வாள்! பிறந்த நாளுக்கு மட்டும் குருமூர்த்தி உடன் இருப்பார்.
சுபத்ரா பழக்கம் அது! “நீங்க உங்க வேலையை பாருங்க. நான் என் பொண்ணுக்கு பார்த்து பொறுமையா தான் எடுப்பேன்” என்று எடுப்பார்.
இப்போது தான் அவர் இல்லையே! அம்மா இடத்தில் அப்பா நான் இருக்க வேண்டும்!
அவளுடன் இருக்க ஆரம்பித்த இந்த சில வருடங்களாக மகளின் பிறந்த நாளுக்காக உடை எடுக்க செல்கிறார். தந்தைக்கு அந்த நேரங்கள் பிடித்து போனது கூடுதல் நன்மை!
இந்த வருடமும் அதை தவறவிட தந்தைக்கு மனதில்லை.
“இங்க வந்ததுல இருந்து என் பொண்ணை எங்கேயும் கூட்டிட்டு போல மணி! அவரை பத்திரமா பார்த்துகிறது தான் முக்கியம்ன்னு இருந்துட்டேன். இதுக்காகவாவது என் மகளை கூட்டிட்டு போறேன். அவளும் பாவம் தானே” என்றார்.
மாசிலாமணிக்கும் புரிகிறது என்பதால், “சரிங்கண்ணா. நான் பார்த்துகிறேன்” என்றார்.
“விடியற்காலையில் கிளம்பி, நைட்டுக்குள்ள வந்திடுறேன். துணி எடுத்துட்டு, படத்துக்கு இல்லை கோவிலுக்கு, என் பொண்ணு எங்க போகணும்ன்னு சொல்றாளோ, அங்க போய்ட்டு வந்துடுறோம்” என்றார்.
குருமூர்த்தி ஒரு திட்டம் போட, அவரின் மகளோ வேறொன்றை யோசித்து கொண்டிருக்கிறாள்.
‘சம்யு நீ அவரை கூட்டிட்டு போகணும்ன்னு ஆசைப்பட்டாலும் அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டார். அப்பாக்கு தெரியாம ஒரு கார்ல அவரை மறைச்சு கூட்டிட்டு போறதும் சாத்தியமில்லை. சோ இதை இப்படியே விட்டுடு’ என்று சம்யுக்தா தன்னை கட்டுப்படுத்த பார்க்க,
‘ஒருவேளை அப்பா வரலைன்னா அவரை கூட்டிட்டு போலாம் தானே?’ என்று அவளின் ஆசை மனது வேலையை காட்டியது.
‘அப்பா வரணும். அவர் வராம நான் ஏன் துணி எடுக்க கோயம்பத்தூர் போகணும்?’ என்று பாய்ந்து கொண்டு வந்தாள் குருமூர்த்தியின் மகள்!
குருமூர்த்திக்கே அந்த நேரங்கள் பிடிக்கும் எனும் போது சம்யுக்தாவிற்கு பிடிக்காமல் போகுமா?
‘அப்புறம் என்ன முடிஞ்சு போச்சு. போய் வேலையை பாரு போ’ என்று தன்னை தானே விரட்டி படிக்க அமர்ந்தாள்.
மறுநாள் பயிற்சியின் போது சர்வாச்சார்யா மௌனமாகவே இருக்க, “என்ன பண்ணுது உனக்கு?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்கிறீங்க?” என்று இவன் கேட்டுவைத்தான்.
“அமைதியா இருக்கீங்கன்னு அண்ணா கேட்டார்” என்று மணி முறைப்புடன் சொல்ல,
“வேறென்ன பண்ணனும். டேன்ஸ் ஏதும் ஆடி காட்டணுமா? அதுக்கும் தனியா பயிற்சி ஏதும் இருக்கா? இருந்தா அதையும் சொல்லி கொடுங்க. கத்துக்கிறேன்” என்றான் இடக்காக.
“வாய் பேசாம வாள் வீசுங்க போங்க” என்று மணி சொல்ல,
“வாளை இங்கேயே வீசணும்ன்னு தான் தோணுது, வீசிடவா?” என்று இருவரையும் குறிப்பாக பார்க்க,
“வாளோடு சேர்ந்து கையும் பறந்து போனா ஓகேவா?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“அதையும் பார்ப்போம். வாங்க” என்று அவர் முகத்துக்கு நேரே வாளை சுழற்றினான் வம்புக்காரன்.
இவரால அமைதியாவே இருக்க முடியாதா? சம்யுக்தா கடுப்பாகி, “அப்பா” என்று தந்தையை அழைத்தாள்.
“பேசிட்டு இருக்கோம் இல்லை” என்று இவளை வேறு அரட்ட,
“சண்டை போட்டு தீர்த்துகிற அளவு என்ன கோவம் உங்களுக்கு?” என்று குருமூர்த்தி நிதானமாக கேட்க,
“எனக்கு இருக்கிறதுக்கு பேர் கோவமா? அப்படி கோவம் இருந்தா உங்களை எல்லாம் அடிச்சு போட்டு தப்பிக்க முயற்சி பண்ணியிருக்க மாட்டேனா?” என்று கேட்டான்.
“அதென்ன எங்களை அடிச்சு போட்டு தப்பிக்கிறது? அமைதியா தப்பிக்க முடியாதா?” என்று மணி கிண்டலாக கேட்க,
“அப்புறம் நீங்க கொடுத்த பயிற்சியை நான் எப்படி டெஸ்ட் பண்ணி பார்க்கிறது” என்று கேட்டான்.
“நல்லது. ரொம்ப நல்லது தம்பி! இப்போ பயிற்சிக்கு போலாமா?” என்று கேட்டார் மணி.
“நான் டையர்ட் ஆகிட்டேன். எனக்கு ரெஸ்ட் வேணும்” என்று கீழே கால் நீட்டி அமர்ந்துகொண்டான்.
“இப்படி கோட்டுக்குள்ள உட்கார்ந்துட்டா நான் எப்படி சிலம்பம் சுத்துறது?” என்று சம்யுக்தா கேட்க,
“என் மேலே ஏறி குதிச்சு சுத்து போ” என்றான்.
சம்யுக்தா அவனை கோவமாக பார்த்து செல்ல, குருமூர்த்தி அவன் பக்கத்திலே நின்றார்.
வயது பையன்! பாவம் தான்!
இவரையும் நம்மளோட கோயம்பத்தூர் கூட்டிட்டு போகலாமா? மடையா என்ன நினைப்பு இது? கடுமையாக தன்னை தானே சாடி கொண்டார்.
அவர் நம்ம வீட்டுக்கு விருந்துக்கா வந்திருக்கார், ஜாலியா கூட்டிட்டு ஊர்கோலம் போக?
உனக்கு பொண்ணு பாசம் அதிகம் ஆகிடுச்சு, அதான் இவரையும் அவளை போலவே நினைச்சு, முதுகுல ஏத்திக்க பார்க்கிற? அடங்கி இருடா மூர்த்தி!
மனிதர் வேகமாக அவனிடம் இருந்து நகர்ந்து கொண்டார்.
அடுத்த நாள் இரவு சர்வாச்சார்யா ரகசிய அறைக்கதவை தட்டினான்.
“பசிக்குதா?” என்றபடி அவனை அறைக்குள் அனுமதித்தாள் சம்யுக்தா.
என்னமோ அந்த தம்பி சரியாவே சாப்பிட மாட்டேங்கிறார் என்று கற்பகம் பாட்டி சொல்லியிருக்க, அவன் கேட்காமலே, அவனுக்கு நொறுக்கு தீனி எடுத்து கொடுத்தாள்.
“எனக்கு வேணாம்” என்று மறுத்துவிட,
“டீ, காபி, பால் ஏதும் குடிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ப்ச். வேணாம்” என்று கீழே அமர்ந்து கொண்டான்.
அவன் வருகிறான் என்றாலே சின்ன விளக்கை போட்டு, ஜன்னல் மொத்தத்தையும் அடைத்து விடுவாள் என்பதால், சம்யுக்தா பயமில்லாமல் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
“உன் அப்பாவோட ஷாப்பிங் போற போல?” என்று கேட்டான்.
இந்த பாட்டியோட? “ஆமா. பிறந்த நாளுக்காக ட்ரஸ் எடுக்க போறோம்” என்றாள்.
“ம்ம். நான் ஒன்னு கேட்டா செய்வியா?” என்று கேட்க,
“என், என்ன?” என்று சம்யுக்தா திக்கென்ற நெஞ்சத்துடன் அவனை திகிலாக பார்த்தாள்.
“ம்ப்ச். இப்போ எதுக்கு இப்படி பார்க்கிற? எனக்கு ஒன்னும் வேணாம் போ”
“இல். இல்லை. நான் சாதாரணமா தான் இருக்கேன்”
“அப்றம் எதுக்கு இங்க வேர்த்திருக்கு?” என்று அவளின் காதோரம் பூத்திருந்த ஈரத்துளிகள் மேல் ஊதினான்.
“நானே” என்று சம்யுக்தா அவன் முகத்தை பின்னால் தள்ளிவிட்டு, துடைத்து கொண்டாள்.
“என் உதட்டுல உன் உள்ளங்கை பட்டா தப்பில்லை. நான் ஊதிவிட்டா தப்பா?” என்று புருவம் தூக்கி கேட்க,
“நான் தள்ளி விடத்தான் கை வைச்சேன்”
“நானும் வேர்வையை துடைக்க தான் ஊதினேன்”
“சரி இரண்டும் சரியா போச்சு போங்க”
“வாங்கன்னு கூப்பிட மாட்டியா?” அவன் குரலில் என்ன இருந்தது? யாசகமா? கொஞ்சலா? கெஞ்சலா?
ம்ஹூம், ஸ்டெடி சம்யு!
“வாடான்னு கூப்பிட்டா வர மாட்டிங்களா?” என்று வேண்டும் என்றே கேட்டுவைத்தாள்.
“கூப்பிடு பார்ப்போம். வந்தா கூட வருவேன்” என்றான்.
“தேவையில்லை” பெண் பட்டென சொன்னாள்.
அசர மாட்டேன்கிறாளே!
“இங்க பாருடி. எனக்கு எதாவது நீ செஞ்சே ஆகணும். என்ன செய்ற சொல்லு?” என்று வேஷத்தை கலைத்தான்.
“எதையும் செய்ய முடியாது. போடா” என்றாள் சம்யுக்தா.
“அப்புறம் இத்தனை நாளா நான் உன்கிட்ட நல்லவனா நடந்துக்கிட்டதுக்கு என்ன பதில்டி வைச்சிருக்க?”
“கேடி என்கிட்ட காரியத்துக்காக நடிச்சிருக்க இல்லை” என்று சம்யுக்தா அவன் உச்சி முடியை பிடித்து ஆட்டினாள்.
“ஆமா. நான் நடிச்சேன். எனக்கு கோயம்பத்தூர் போகணும்” என்றான்.
“முடியாது. இடத்தை காலி பண்ணு”
“நானும் முடியாது. இங்கே தான் இருப்பேன்”
சம்யுக்தா அவனை முறைத்திருக்க, “என்னை வேற என்னதாண்டி பண்ண சொல்ற? எனக்கு யாரும் உதவி செய்ய மாட்டேங்கிறாங்க. உன் அப்பா கூட நான் பேசுறதை கேட்க ரெடியா இல்லை. அப்படியே நான் சொன்னாலும் அவர் செய்ய மாட்டார் எனக்கு தெரியும்”
“நீங்களே முடிவெடுத்தா எப்படி?”
“இவங்க எல்லாருக்கும் என் உயிர் மட்டும் தான் வேணும்”
“அது இருந்தா தான் நீங்க நினைச்சதை கூட செய்ய முடியும்” என்றாள் சம்யுக்தா அழுத்தமாக.
சர்வாச்சார்யா சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “நான் லேட் பண்ணா என்னால சத்தியத்தை காப்பாத்த முடியாம கூட போகலாம்” என்றான்.
“அப்படியென்ன செய்யணும்? சொல்லுங்க நான் செய்றேன்” சம்யுக்தா அவன் வருத்தத்தை தாளமுடியாமல் கேட்டாள்.
“நான் நேர்ல போனா மட்டும் தான் நடக்கும்”
“அது நடக்காது”
“அவ்வளவு அதிர்ஷ்டம் எல்லாம் எனக்கு இல்லைன்னு எனக்கே தெரியும்” என்றான் சர்வாச்சார்யா.
ஆனால் அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. குருமூர்த்தி மகளுடன் கோயம்பத்தூர் செல்ல முடியா சூழல் உருவானது.
சம்யுக்தா மட்டும் ஓட்டுநருடன் கோயம்பத்தூர் செல்கிறாள்!