கடந்து செல் காதலுடன்! 18

“எப்படி இருக்கார்?” என்று சிவப்பிரகாசம் கேட்க,

“இப்போதைக்கு நல்லா இருக்கார்” என்றார் மருத்துவர்.

“ஏன் அவர் சாப்பிட மாட்டேங்கிறார்?” என்று மருத்துவர் கேட்க,

“நான் அப்பாகிட்ட பேசுறேன்” என்றார் சிவபிராகசம்.

“சாப்பிடலைன்னா கஷ்டம்.  பார்த்துக்கோங்க” என்று மருத்துவர் விடைபெற்று கொள்ள, வீட்டினர் ஒவ்வொருவராக சென்று பெரியவரை பார்த்து வந்தனர்.

மாளிகையிலே அவருக்கான வைத்தியம் நடைபெற, வசுந்தரா விரைவாக வீட்டிற்கு வந்தார்.

“மாமா ஓகேவா?” என்று சிவபிரகாசத்திடம் கேட்க,

“போய் பார்த்துட்டு வா” என்றார் கணவர்.

“இல்லை. அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று மறுத்தார் சிவபிரகாசத்தின் பெரிய தங்கை.

“வசுந்தரா. நீ போய் பாருமா” என்று அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளையான சத்தியமூர்த்தி சொல்ல, யாராலும் அவரை மறுக்க முடியாது என்பதால் வசுந்தரா நன்றியுடன் அவருக்கு தலையசைத்து பெரியவர் அறைக்கு சென்றார்.

பெரியவரின்  உடல் முடியாமல் போவதற்கு வயது ஒரு காரணம் என்றாலும், பேரன் கவலை அவருக்கு அதிகம்.

“எனக்கு அவனை பார்க்கணும்” என்று இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறார்.

என்னமோ அவருக்கு தன் உடல்நிலை மேல் நம்பிக்கையில்லை. பேரனை அதற்குள் கண்ணால் கண்டுவிட வேண்டும்  என்று உறுதியாக தோன்றிவிட்டது.

அதன் காரணமாகவே, “இத்தனை நாள் ஆச்சு, இன்னும் உன்னால அந்த பிரச்சனையை தீர்க்க முடியலையா?” என்று மகனிடம் கோவமும் கொள்கிறார்.

படுத்த படுக்கையில் இருந்தாலும் அவரின் அதிகாரம், மரியாதை வேறு! எந்த நிலையிலும் அவரிடம் எதிர்த்து பேசிவிட முடியாது.

சிவப்பிரகாசமும் பொறுமையாக தந்தைக்கு விலக்கத்தான் செய்கிறார். ஆனால் பெரியவருக்கு சமீப காலமாக மறதி அதிகம் ஆகிவிட்டது.

மறுநாள் திரும்ப பேரனை கேட்பார். “சர்வா ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி என்னை வந்து பார்க்க சொல்லு” என்பார்.

மற்றொரு நாள், “சர்வா காலேஜ் போயிட்டானா?” என்று விசாரிப்பார்.

பெரியவரின் எந்த நினைவிலும் சர்வா நிறைந்திருந்தான். “என் மறுபிம்பம் அவன்” என்ற அவரின் ஆழ்மனதின் ஆசையாக இருக்கலாம்.

காலையில் திடீரென அவனை பார்த்தே ஆக வேண்டும் என்று உணவை மறுத்து, மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்ளாமல் அதகளம் செய்துவிட்டார். அதன் பலனே மருத்துவர் வந்து பார்த்து சென்றது.

படுக்கையில் தளர்ந்திருந்த மாமனாரை வசுந்தரா கவலையாக பார்த்திருக்க, சிவப்பிரகாசமும் மனைவியின் பின் வந்திருந்தார்.

பெரியவர் மயக்கத்தில் இருந்து விழித்து இருவரையும் பார்க்க, வசுந்தரா அவரின் நலன் விசாரித்தார்.

“ஏன்ப்பா இப்படி?” என்று சிவபிராகசம் தந்தையின் கரத்தை பற்றி கொண்டார்.

“கொஞ்ச நாள்ப்பா. சீக்கிரம் உங்க பேரனை உங்க கண்முன்னாடி நிறுத்திடுறேன்” என்று சிவப்பிரகாசம் சொல்ல,

“ஆளை பிடிச்சுட்டியா?” என்று பெரியவர் சிரமத்துக்கு இடையில் கேட்டார்.

இப்போது பெரியவர் நினைவு நிகழ்காலத்தில் இருக்க, “நெருங்கிட்டேன்ப்பா” என்றார் சிவப்பிரகாசம்.

“ம்ம். சீக்கிரம்” என்றவர், வசுந்த்ராவை மட்டும் குறிப்பாக பார்க்க, சிவப்பிரகாசம் அறையை விட்டு வெளியேறினார்.

வசுந்தரா அவர் பேசும் வரை மௌனம் காத்தார். ஏற்கனவே பெரியவரின் அதிருப்தியை பெற்றாகிவிட்டது.

ஊட்டியில் சர்வாவை தேடி குருமூர்த்தியின் வீட்டை சூறையாடிய மறுநாள், “இந்தாள் பின்னாடி போங்க” என்று சஞ்சீவ் புகைப்படத்துடன் வேறு ஒருவன் புகைப்படத்தையும் சிவபிரகாசத்திடம் கொடுத்தார் வசுந்தரா.

“யார் இது?” என்று சிவப்பிரகாசம் கேட்க,

“நீங்க தான் விசாரிக்கணும்” என்று வசுந்தரா முடித்து கொள்ள, சிவப்பிரகாசம் விசாரித்து தெரிந்து கொண்டது அவரை கோவத்திற்கு தள்ளிவிட்டது.

எங்கோ, ஏதோ பிரச்சனை என்று ஊட்டியில் நடந்ததை செய்தியாக கடந்தவருக்கு, அந்த செய்தியின் முதல் புள்ளியே தன் மகன் தான் என்று தெரிய வந்தது.

அன்று விரைவாக வீட்டிற்கு வந்த சிவபிராகசம், “சர்வாச்சார்யா எங்க இருக்கான்?” என்று அப்பொழுதான் வீட்டிற்கு வந்த மனைவியிடம் கேட்டார்.

வேலைகளை முடித்து ஒவ்வொருவராக வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தவர்கள், சிவபிரகாசத்திடம் தென்பட்ட கோவத்தில் அங்கேயே தேங்கி நின்றனர்.

“உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்” என்றார் வசுந்தரா.

“அந்த கொலைகாரன் குருமூர்த்திகிட்ட தான் என் மகன் இருக்கான்னு சொல்லிடாத” என்று எச்சரித்தார் சிவப்பிரகாசம்.

“அவர் கொலைகாரன் இல்லை”

“வேறெப்படி அவன் ஜெயிலுக்கு போனான். நீதான் தீர்ப்பு கொடுத்த?”

“சர்வா பத்தி மட்டும் நாம பேசலாம்” வசுந்தரா சொல்ல,

“என் மகன் அந்தாள்கிட்ட இருக்க கூடாது” என்றார் சிவப்பிரகாசம் உறுதியாக.

“நீங்க சொல்ற அந்த கொலைகாரர்கிட்ட போனதுக்கு அப்புறம் தான் உங்க மகன் பாதுகாப்பா இருக்கான். மறந்துடாதீங்க” என்று வசுந்தரா சொல்ல,

“அந்தாள் வீடு வரைக்கும் ஆளுங்க போயிட்டாங்க. அப்புறம் எந்த பாதுகாப்பை பத்தி சொல்ற நீ?” என்று சிவப்பிரகாசம் கோவமாக கேட்க,

“உங்க மகனை பிடிச்சுட்டாங்களா?” என்று கேட்டார் வசுந்தரா.

“சந்தேகம் இருக்க போய்தானே என் மகனை தேடி ஆளுங்க போயிருக்காங்க. இடத்தை மாத்திடலாம். சர்வா அங்க இருக்க கூடாது” என்றார் சிவப்பிரகாசம்.

“வேறெந்த இடம் நீங்களே சொல்லுங்க”

“லண்டன்”

“ஏர்போர்ட் வரைக்கும் உங்க மகன் பத்திரமா வந்திடுவானா? இல்லை லண்டன்ல உங்க மகன் பாதுகாப்பா இருந்திடுவானா?”

“நீ என்ன சொன்னாலும் சரி அந்த ரௌடிகிட்ட என் மகனை நான் விட மாட்டேன்” என்றார் சிவப்பிரகாசம்.

“பணத்துக்கு வேலை செய்றவன் என் மகனை பத்திரமா பார்த்துப்பானா? நீ கொடுக்கிற பணத்தை விட யாராவது அதிகம் கொடுத்தா என் மகன் பாதுகாப்பு என்னாகிறது?” என்று தந்தையாக கேட்க,

“நான் இன்னும் அவருக்கு ஒத்த ரூபாய் கொடுக்கலை” என்றார் வசுந்தரா அழுத்தமாக.

“பின்னாடி கொடுப்போம்ன்னு அந்தாளுக்கு தெரியும். எனக்கு புரியாதது பணத்துக்காக ரவுடிசம் பண்ற அந்தாளை நீ எப்படி நம்புறன்னு தான்?” என்று சிவப்பிரகாசம் கேட்டார்.

“அண்ணா சொல்றது சரி அண்ணி. பின்னாடி நம்மகிட்ட அதிகமான பணத்தை டிமாண்ட் பண்ணலாம்ன்னு கூட அந்த ரௌடி நினைச்சிருக்கலாம். பணத்துக்காக தானே ரௌடி தொழிலை கூட பண்ணது” என்று பெரிய தங்கை சொல்ல,

“அவர் மட்டுமில்லை நாமளும் பணத்துக்காக தான் தொழில் பண்றோம்!” என்று வசுந்தரா சொல்லிவிட, வீட்டினருக்கு அதிருப்தி.

“பேச்சு பணம் பத்தி இல்லை. சர்வா எங்க பாதுகாப்பா இருப்பான் அப்படிங்கிறது தான்!” என்றார் வசுந்தரா.

“அந்தாள் கோவம்! அடிச்சே ஒரு உயிரை எடுத்திருக்கான். அப்படிப்பட்ட ஆள்கிட்ட நம்ம சர்வா எப்படி பாதுகாப்பா இருப்பான்? சர்வாவையும் கோவத்துல அடிச்சா?” என்று சின்ன தங்கை கேட்டார்.

“குருமூர்த்தி அப்படியான ஆள் இல்லை. எனக்கு தெரியும்” என்ற வசுந்தரா, “அந்த சண்முகம் தம்பி விஷயம் வேற. அதை மட்டுமே வைச்சு நீங்க குருமூர்த்தியை ஜட்ஜ் பண்ண கூடாது. எனக்கு அவர்மேல நம்பிக்கை இருக்கு” என்று வசுந்தரா முடித்து கொண்டார்.

இவர்களின் பணம், பகட்டை விட வசுந்தரா வகிக்கும் பதவி பெரிது!

எளிதாக அவரிடம் வார்த்தைகளை விட்டுவிட முடியாது என்று அப்போதைக்கு அமைதியாகி விட்டாலும், குருமூர்த்தியிடம் சர்வா இருப்பதில்  வீட்டினர் யாருக்கும் ஒப்புதல் இல்லை.

பெரியவருக்கு கூட!

“நம்ம ஸ்டேட்டஸ் வேற! அவர் ஸ்டேட்டஸ் வேற! என் பேரனை நீ அங்க அனுப்பியிருக்க கூடாது” என்றார் மருமகளிடம்.

“உங்க பேரன் உயிருக்கு முன்னாடி ஸ்டேட்டஸ் முக்கியம் இல்லை மாமா” என்றார் வசுந்தரா.

“அதனால தான் உன்கிட்ட கோவப்படலை. சீக்கிரம் அவனை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க” என்றார் பெரியவர்.

அதன் பின்னும் சிவப்பிரகாசம் மகனை மாற்ற இரண்டு, மூன்று இடத்தை சொன்னார். வசுந்தரா கேட்கவில்லை, அவர்களின் பாதுகாப்பு ஆலோசகரும் ஒப்புக்கொள்ளவில்லை.

“குருமூர்த்தி சரியா செய்றார். நாம தலையிட வேண்டாம். நம்ம கவனம் முழுக்க, அந்த மெயினான ஆளை தேடுறதுல தான் இருக்கணும்” என, சிவபிரகாசமும் வேறு வழி இல்லாமல் ஏற்று கொண்டார்.

என்ன முன்பை விட அதிகமே தேடுதலில் தீவிரத்தை காட்டினார். அதற்கு பலன் இருந்தது. மறைவில் இருந்து தாக்குபவனை நெருங்கியிருந்தார்.

வசுந்தரா அவரின் பதவி முன்னிட்டு எதிலும் தலையிடுவதில்லை. சிவப்பிரகாசம் பணம் மட்டுமே போதும் என்றாலும், சில இடத்தில் அதிகாரமும் தேவைப்பட்டது.

அதற்கான முயற்சியில் சிவப்பிரகாசம் இருக்க, “நாளைக்கு மீட்டிங் வைச்சிருக்காங்க” என்று சத்தியமூர்த்தி சொன்னார்.

இருவரும் சந்திப்பில் கலந்து கொள்ள, டெல்லி சென்றார்கள்.

வசுந்த்ராவிற்கு இப்பொழுதான் வெளிச்சம் தெரிகிறது!