பெரிய ஆட்கள் குருமூர்த்தியை தேடி செல்வதை தடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்!
சண்முகமும் ஓர் இரவு நேரம் குருமூர்த்தியை சுற்றி வளைத்தார். ‘சின்ன பையன் ஆட்களை பார்த்ததும் பயந்துவிடுவான். மிரட்டுட்டு விட்டுடலாம்’ என்பதே சண்முகத்தின் எண்ணம்.
ஆனால் சிறிதும் அச்சப்படாமல் தலையில் தட்டியவர்களை திருப்பி அடித்த குருமூர்த்தியின் வேகம், ஆக்ரோஷம் சண்முகத்தை அதிசயிக்க வைத்தது.
“பெரிய வித்தைக்காரன். இவனுக்கு எதிரா சண்டை போட்டு ஜெயிக்க முடியாது” என்று சண்முகம் அந்த இரவு தெளிவாக அறிந்து கொண்டார்.
தனக்கு எதிராக இருந்தாலும் குருமூர்த்தி திறமை மேல் ஓர் பிரமிப்பு!
தந்தையின் வற்புறுத்தலால் சண்முகத்திற்கு தவறாக படும் செயல்களையும் அவர் செய்தாக வேண்டிய கட்டாயம்! ஆனால் குருமூர்த்திக்கு அதுபோல கட்டாயம் ஏதும் இருப்பதில்லை.
“நம்மளை மாதிரி ரொம்ப அநியாயமா அவன் தொழில் பண்றதில்லை” மனதுக்குள் ஓர் திருப்தி.
அவரின் தம்பி குருமூர்த்தியை எதாவது செய்தாக வேண்டும் என்று குதிக்கும் போதெல்லாம் சண்முகம் தடுத்து நிறுத்திவிடுவார்.
அதனாலே சண்முகம் ஊரில் இல்லாத நேரம், குருமூர்த்தியிடம் பஞ்சாயத்துக்கு சென்று, சுபத்ராவை அசிங்கமாக பேசினார்.
குருமூர்த்தி நிதானம் இழந்தால் என்ன ஆகும் என்று அன்று எல்லாம் கண்டுகொண்டார்கள்.
அதன் பிறகு நடந்த எல்லாம் சண்முகத்தின் கட்டுப்பாட்டை மீறி நடந்தது. சுபத்ராவின் இழப்பு சண்முகத்தை இன்று வரையிலுமே வருந்த வைக்கும்.
திருவிழாவில் ஆறு வயது மகள் குருமூர்த்தியின் ஓர் கரத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருக்க, மறுக்கரம் சுபத்ராவை தோளோடு அணைத்திருந்தது. அன்றய நாளில் குருமூர்த்தியின் முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போதும் சண்முகத்திற்கு நன்றாக நினைவில் இருந்தது.
அழகான கூடு சிதைந்துவிட்டது! காரணம் என் குடும்பம்! சண்முகத்திற்கு குற்ற உணர்வு!
“கிளம்ப சொல்லு மணி” என்றார் குருமூர்த்தி.
“நான் பேசணும்” என்று சண்முகம் சொல்ல,
“உங்க மகன் வேணும்ன்னா பேசாம கிளம்புங்க” மாசிலாமணி மிரட்டினார்.
“என் மகன் என்கிட்ட இருக்கிறதை விட உங்ககிட்ட நல்லா இருப்பான். நான் பேச வேண்டியது அவனைப்பத்தி இல்லை” சண்முகம் சொல்ல,
“இதென்ன புது பிட் போடுற. நாங்க இதுக்கெல்லாம் மசிய மாட்டோம்” மாசிலாமணி நக்கலாக சொன்னார்.
“பிடிச்சு வைச்சிருக்க ஆளுங்களை விட்டுடு மூர்த்தி. சஞ்சீவ் கோவமா இருக்கான். என்ன வேணும்ன்னாலும் செய்வாங்க” என்று சண்முகம் சொல்ல,
“அதை நாங்க பார்த்துகிறோம். உங்க மகன் வரை நீங்க பேசுங்க” மணி சொல்ல,
“என் மகனை பத்தி எனக்கு கவலையில்லைன்னு நான் முதல்லே சொல்லிட்டேன். சஞ்சீவை பகைச்சுக்க வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் கண்டு பிடிச்சு சொல்றேன்” என்றார் சண்முகம்.
“உன்னை நம்ப மாட்டோம். உன் வேலையை மட்டும் நீ பாரு” மணி கோவமாக சொல்ல,
“இதை பார்த்தா நம்புவீங்களா?” என்று ஓர் காகித உறையை எடுத்து போட்டார்.
ஒருவரின் புகைப்படம்! “சஞ்சீவ் முதலாளி இவன்தான். ஆனால் நீங்க தேடிட்டு இருக்க ஆள் இவனா இருக்காது” என்றார் சண்முகம்.
தொடர் சங்கிலி போன்று நீண்டு கொண்டே போகும் ஆட்களின் கடைசி பிடித்தான் சர்வாச்சார்யாவை குறிவைப்பது! அது யாரென்று கண்டுபிடிப்பது சவாலான விஷயம்!
சிவப்பிரகாசம் பாதிக்கு மேல் கடந்துவிட்டார். ஆனால் இப்போது சிக்கலான சங்கிலியால் ஓர் இடத்திலே தேங்கி நிற்கிறார்.
லிங்கத்தின் மூலம் இதை தெரிந்து வைத்திருந்த குருமூர்த்தி, திரும்பி மாசிலாமணியை பார்க்க, அவர் உடனே அந்த காகித உறையை அவரிடம் சென்று காட்டினார்.
நம்பிக்கை கொள்ளும் படியான ஆளை தான் சண்முகம் சொல்வது! ஏனென்றால் சிவப்பிரகாசம் சந்தேகிக்கும் ஆளும் இவன்தான்!
“நீ கேஸ் கொடுத்தது நல்லதா போச்சு மூர்த்தி. சஞ்சீவ் வைச்சு சிவப்பிரகாசம் சார் திரும்ப முன்னேறிட்டு இருக்கார்” என்று லிங்கம் சொல்லியிருந்த தகவல், சண்முகத்துடன் ஒத்து போனது.
குருமூர்த்தியின் அமைதியில் மாசிலாமணியும் நிதானத்துக்கு வந்தவர், “இதுக்கும் அந்த பசங்களை விடுறதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டார்.
“நீங்க பிடிச்சு வைச்சுருக்க ஆளுங்க பாதி பேர் மேல போலீஸ் கேஸ் இருக்கு, வீட்லயும் இவங்களை தேடி அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த பதட்டத்துல சஞ்சீவ் ஏடாகூடமா எதாவது செஞ்சு வைச்சா மொத்தமா எல்லாம் சொதப்பிடும். நமக்கு வழி கிடைச்சிருக்கு. அதை வைச்சு முன்னேற இது தடையா இருக்க கூடாது” என்றார் சண்முகம்.
குருமூர்த்தி புருவங்கள் சுருங்க ஜன்னலுக்கு வெளியே வெறித்தார்.
சண்முகம் அமைதியாக காத்திருக்க, குருமூர்த்திக்கு அவர் இருப்பு ஒப்பவில்லை.
நேர்கோட்டில் யோசிக்க முடியாமல், “நாளைக்கு சொல்றேன்” என்றார்.
சண்முகம் சரியென கிளம்ப, “அவர் மகன் விஷயத்துல என் முடிவு மாறாது. காலையில அவர் மகன் சென்னையில இருப்பான். இனி இந்த பக்கம் அவன் திரும்ப கூடாது” என்றார் குருமூர்த்தி திட்டவட்டமாக.
மனைவி விஷயத்துல கோட்டை விட்டேன். மகள் விஷயத்தில சிறு தவறும் செய்ய மாட்டேன். தந்தையின் வைராக்கியம் அது!
“நான் என்மகன்கிட்ட பேசுறேன்” என்று சண்முகம் விடைபெற்று கொள்ள,
“அதென்ன பேசுறது? அந்த பையன் இனி என் பொண்ணு பக்கம் திரும்ப கூடாது மணி” என்றார் குருமூர்த்தி.
ரோஹனிடம் தெரிந்த உறுதி, அவன் கண்களில் தென்பட்ட தெளிவு குருமூர்த்தியை உடனே முடிவெடுக்க வைத்தது.
அன்றிரவே ரோஹனை சென்னையில் விட சொல்லி தான் வீட்டுக்கு கிளம்பி வந்தார்.
மகளோ புது பஞ்சாயத்துடன் அவர் முன் நின்றாள்! “நீங்க தப்பு” என்கிறாள்.
“உங்க தொழில் தான் நம்ம எல்லா கஷ்டத்துக்கும் காரணம்” என்கிறாள்.
“அநியாயத்துக்கான பலி நாங்க! எங்களுக்கு உங்க சாப்பாடு வேண்டாம்” என்று சர்வாச்சார்யா உடன் அவளும் சேர்ந்து கொள்கிறாள்!
குருமூர்த்திக்கு கோவம் வராமல் இருக்குமா? ஏற்கனவே சண்முகத்தின் வரவால் குருமூர்த்தியின் மனநிலை சீர் கெட்டு இருக்கிறது. இதில் மகளின் குற்ற சாட்டு வேறு!
குருமூர்த்தி தந்தையாக மகளிடம் தோற்று தான் போனார். ஆம்! இல்லையென்றால் அந்த அடங்காதவனுக்கு என் கையால் நான் சமைத்து கொடுத்திருப்பேனா?
போகட்டும்! என் பொண்ணு சாப்பிட்டா! அதனால அவனை விடுறேன்!
குருமூர்த்தியே பலநாள் உணவில்லாமல் இருந்தவர். இன்று அவர் இன்னொருவனுக்கு உணவு கொடுக்க மாட்டேன் என்கிறார். மகளுக்காக என்றாலும் குருமூர்த்தி எனும் தனிமனிதனுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்?
நல்லவேளை யாருக்காக இதை செய்தாரோ அதே மகள் அவனுக்கு உணவு கொடுக்க வைத்து, அவர் குற்ற உணர்வை வெகு சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாள்.
அந்த மனநிம்மதியிலே குருமூர்த்தியும் அவரின் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட்டு, உறக்கத்திற்கு சென்றார்.
அடுத்த நாள் அதிகாலையில் குருமூர்த்தி பயிற்சி இடத்துக்கு செல்ல, மாசிலாமணி காத்திருந்தார்.
“ரோஹன் வீட்டுக்கு போயிட்டான்” என்றார் மணி.
“ம்ம். அடைச்சு வைச்சிருக்கவங்களை ரிலீஸ் பண்ணிடு” என்று குருமூர்த்தி சொல்ல, உடனே மணி போன் எடுத்து அதை நடைமுறை படுத்தினார்.
சண்முகம் சொன்னார் என்பதை விட, சிவப்பிரகாசம் நூலை பிடித்துவிட்டார் என்பதே காரணம்.