அடுத்த நாள் சூரிய உதயம் பல திருப்பங்களுடன் தான் உதித்தது!
சர்வாச்சார்யா காலை ஐந்து மணிக்கே பயிற்சிக்கு அழைக்கப்பட்டான்.
முன்பெல்லாம் ஐந்து மணிக்கு வர வேண்டும் என்றால், தலைவர் ஆறு, ஏழு மணிக்கு தான் வருவார்.
குருமூர்த்தியும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்.
ஆனால் இன்று மாசிலாமணி, விடாப்பிடியாக அவனை பயிற்சிக்கு அழைத்து வந்தார்.
சர்வாச்சார்யா, “நேத்து ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று மணியிடம் பார்த்ததுமே கேட்டான்.
ஆனால் இப்போது வரை அவனுக்கு பதில் கிடைக்கவில்லை.
“இதை செய்ங்க, இப்படி செய்ங்க, அதை எடுங்க, இதை வைங்க” என்று நல்லவனை விரட்டி கொண்டே இருந்தார் மணி.
சிலம்பம் பயிற்சியின் போது நல்லவனுக்கு அடிகள் நன்றாகவே விழுந்தது. ஒற்றை கையால் அவனும் எவ்வளவு தான் தடுப்பது?
சர்வாச்சார்யாவிற்கு நடப்பது புரியவில்லை. “இப்போ எதுக்கு இப்படி வெறிகொண்டு சண்டை போடுறீங்க?” என்று மணியிடம் கேட்க,
“நீங்க ஒழுங்கா சண்டை போடுங்க. உங்களை காத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்றார் மணி.
“அதெல்லாம் அவர்கிட்ட ஏன் சொல்ற மணி! அவர் உயிரையே நாமதான் காப்பாத்த வேண்டியிருக்கு” என்று வந்தார் குருமூர்த்தி.
“என் உயிரை காப்பாத்துங்கன்னு நான் உங்ககிட்ட கேட்டமாதிரி எனக்கு ஞாபகம் இல்லையே” என்று அலட்சியமாக தோள் குலுக்கினான் சர்வாச்சார்யா.
ஆனால் உள்ளுக்குள் குருமூர்த்தியின் வார்த்தைகள் அவனை நிச்சயம் பதம் பார்த்தது தான்!
“நீங்க ஏன் கேட்க போறீங்க? இளவரசரை காப்பாத்த தான் உங்க குடும்பம் இருக்கே! எங்களை போல உள்ளவங்க உயிரை கொடுத்தாவது உங்க உயிரை காப்பாத்திட மாட்டாங்க” என்று குருமூர்த்தி தாக்க,
“என்னை அனுப்பிடுங்க. உங்க உயிர் ஒன்னும் எனக்கு வேணாம்” என்றான் சர்வாச்சார்யா ரோஷத்துடன்.
“அனுப்ப எனக்கும் ஆசை தான், ஆனா அனுப்ப முடியாது” என்றார் குருமூர்த்தி.
“அப்புறம் எதுக்கு பேசுறீங்க? ஒன்னு செய்யணும்? இல்லை முடியாதுன்னு ஜென்டிலா ஒதுங்கிடணும். அதைவிட்டு தேவையில்லாம பேசக்கூடாது” என்று குருமூர்த்திக்கு பாடம் எடுத்தான் சர்வத்துக்கும் ஆசிரியனான சர்வாச்சார்யா.
“நான் என்ன செய்யணும், செய்ய கூடாது நீ சொல்லாத. உன் வேலையை மட்டும் நீ பாரு” என்று குருமூர்த்தி கடுகடுக்க,
“சொல்வேன். பேச்சு என்னை பத்தி தானே? அப்புறம் என்னை பேச கூடாதுன்னு நீங்க என்ன சொல்றது?” விடாக்கண்டன் மல்லுக்கு நின்றான்.
“என் இடத்தில தான் நீ நிக்கிற மறந்துடாத” என்று குருமூர்த்தி எச்சரிக்க,
“அதனால? அதனால என்ன சொல்லுங்க”
“நான் சொல்றதை கேட்டு அடங்கி இரு”
“முடியாது. ஒரு ரவுடிகிட்ட அடங்கி போகணும்ன்னு எனக்கு அந்த அவசியமும் இல்லை”
“தம்பி பார்த்து பேசு. அப்புறம் வேற மாதிரி ஆகிடும்” மாசிலாமணி பாய்ந்து கொண்டு வந்தார்.
“என்ன ஆகிடும்? எங்க செய்ங்க பார்ப்போம்” என்று மாசிலாமணி மேல் இவன் ஏறிக்கொண்டு சென்றான்.
“ப்பா” என்று சத்தமாக அழைத்து கொண்டு வந்தாள் சம்யுக்தா.
அதில் மூவரும் கொஞ்சம் அடங்க, “எனக்கு சிலம்பம் சுத்தணும்” என்று மாசிலாமணியிடம் இருந்த சிலம்பத்தை தானே வாங்கி கொண்டாள் சம்யுக்தா.
சர்வாச்சார்யா விறைத்து படி நின்றிருக்க, சம்யுக்தா கண்களால் அவனை அதட்டினாள்.
‘போடி’ என்று முகம் திருப்பியவன், சிலம்பத்தை குருமூர்த்தி பக்கம் எறிந்துவிட்டு அவன் அறைக்கு சென்றான்.
குருமூர்த்தி கால்களிடம் விழுந்த சிலம்பத்தை கண்டு கோவப்பட்ட மணி, “அவரை இன்னைக்கு விடறதா இல்லை” என்று சர்வாச்சார்யாவை பின் தொடர போக,
“மணி” என்று அதட்டலிட்டு நிறுத்தினார் குருமூர்த்தி.
சம்யுக்தாவிற்கு நடப்பது அத்தனையும் தலை வலியை தான் கொடுத்தது.
மாசிலாமணியிடம் ஏதாவது கேட்கலாம் என்றால், அவர் அதற்கான வாய்ப்பை கொடுக்க மாட்டேன் என்கிறார்!
குருமூர்த்தியிடம் ஏதோ சரியில்லை. அது என்னவென்ற கேள்வியுடனே சம்யுக்தா பயிற்சி முடித்து, கல்லூரி கிளம்ப தயாரானாள்.
காலை உணவிற்கு சம்யுக்தா அமர, “அந்த தம்பிக்கு சாப்பாடு கொடுக்க சொல்லிட்டார் உன் அப்பா” என்றார் கற்பகம் பாட்டி.
சந்தோசம்! சம்யுக்தா உண்டு, கல்லூரிக்கு சென்றாள்.
ரோஹன் பற்றியும் பார்க்க வேண்டுமே! வகுப்பு இடைவேளை நேரம் அவனை தேடி சென்றாள் பெண்.
“ரோஹன் காலேஜ் வரலை” என்று அவன் நண்பர்கள் சொன்னார்கள்.
சம்யுக்தா முடிவில்லாத கேள்விகளுடனே வீட்டிற்கு வந்தவள், டீ குடித்த பின்னே கொஞ்சம் தெளிந்து படிக்க அமர்ந்தாள்.
“சாப்பிட வா கண்ணு” என்று கற்பகம் பாட்டி இரவு உணவுக்கு அழைக்க,
“அப்பா எங்க பாட்டி?” என்று கேட்டபடி டேபிளில் அமர்ந்தாள்.
“வெளியே போயிருக்கார்” என்ற கற்பகம் பாட்டி முகம் சுருங்கியிருந்தது.
சம்யுக்தாவிற்கு அவரின் சுருங்கிய முகம் எதையோ உறுத்த, “அவருக்கு சாப்பாடு கொடுத்திட்டீங்களா?” என்று கேட்டாள்.
“ரோஹனை பார்க்கத்தான் போனீங்கப்பா! ஆனா உங்க கோவத்தை ஏன் இவர்மேல காட்டுறீங்க? சொல்லுங்கப்பா”
“நீ ஏன் என்கிட்ட சொல்லலை?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“என்ன? என்னப்பா?” என்று சம்யுக்தா புரியாமல் கேட்க,
“ஹோம்ல நீ எப்படி இருந்த?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“அது. அது இப்போ ஏன்ப்பா?” சம்யுக்தா தடுமாற,
“வேறெப்போ நான் தெரிஞ்சுக்கணும்?” என்று குருமூர்த்தி கேட்டார்.
“தெரிஞ்சுக்க? நான் நல்லா இருந்தேன்ப்பா” என்றாள் சம்யுக்தா.
“மூணு வேளை சாப்பிட்டு, பிள்ளைகளோட சந்தோஷமா இருந்தியா?”
“ப்பா” சம்யுக்தா பதிலின்றி நின்றாள்.
இவருக்கு எப்படி தெரிஞ்சது?
“என்னை எத்தனை முறை பார்க்க வந்த? ஏன் என்கிட்ட சொல்லலை? ஜெயில்ல இருக்க அப்பன் என்ன செய்வான்னு மறைச்சியா?” என்று கேட்க,
“நா. நான் அப்படி நினை.. நினைக்கலப்பா” என்றாள் சம்யுக்தா.
“அப்புறம் ஏன் சொல்லலை?” என்று மீண்டும் கேட்க,
என்ன சொல்வாள் சம்யுக்தா?
“நான் ஒன்னும் யாரையும் கொலை பண்ணலை. அவன் செத்துட்டான்! அடிச்சேன், உயிர் போற அளவு அடிக்கலை. அந்த நாய்க்கு வாழ தகுதியில்லை. அவன் போய் சேர்ந்துட்டான். தப்புக்கு தண்டனையா நானும் ஜெயிலுக்கு போயிட்டேன். நீ ஏன் கஷ்டப்பட்ட?” என்று மகளிடம் வெடித்தார் மனிதர்.
“ப்பா” என்ற சம்யுக்தா மிரண்டு போனாள்.
“அண்ணா. என்ன பண்றீங்க? பாப்பா பயப்படுறாங்க” என்று மணி அவரை இழுக்க,
“என் மக என்ன தப்பு பண்ணா மணி? இவளுக்காக தானே பணத்தை கொட்டி கொடுத்தேன். மணி நீதானே கொடுத்த. கைநீட்டி வாங்கினாங்க இல்லை. அப்புறம் ஏன் என் மகளை தவிக்க விட்டாங்க. தாயில்லா பொண்ணுடா என் மகள்!”
“அண்ணா. நாம அப்புறமா இதை என்னன்னு பார்ப்போம். இப்போ நீங்க நிதானத்துக்கு வாங்க” என்று மணி அவரை கட்டுப்படுத்த,
“அப்புறம் பார்க்கணுமா? அதான் ஆரம்பிச்சுட்டேனே. இளவரசனுக்கு சாப்பாடு கொடுக்கலை! கொடுக்கவும் மாட்டேன். என் பொண்ணு பட்டினியா இருந்த மாதிரி அவனும் இருக்கட்டும்” என்றார் குருமூர்த்தி.
“பழி வாங்கவா அவருக்கு சாப்பாடு கொடுக்கலை” சம்யுக்தா அதிர்ந்து போய் கேட்டாள்.
“ஆமா. நீ கஷ்டப்பட அவங்க வீட்டு ஆளும் ஒரு காரணம் தான்” என்றார் குருமூர்த்தி.
“இல்லை. யாரும் காரணம் இல்லை. நாம மட்டும் தான் காரணம், நாம பார்த்த தொழில் தான் காரணம்” என்றாள் சம்யுக்தா.
“பாப்பா. என்ன பேசுற நீ?” என்று மணி கண்டிக்க,
“தப்பா சொல்லிட்டேனா?” என்று கேட்டாள் சம்யுக்தா.
“என் வேலை தப்பு. நான் ரவுடி, கெட்டவன், அயோக்கியன் எல்லாம் தான். ஆனா இவங்க எல்லாம் யோக்கியனுங்களா?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“சின்ன பொண்ணை கஷ்டப்படுத்துறவங்களும், கண்டுக்காம போறவங்களும் நல்லவங்க! நான் கெட்டவன்! அப்படித்தானே சொல்ற நீ?” என்று சீறினார் குருமூர்த்தி.
“நாம நல்லது செய்யலைப்பா. இது உண்மை” சம்யுக்தா உறுதியாக சொன்னாள்.