இரவு உணவிற்காக காத்திருந்த சர்வாச்சார்யா நீண்ட நேரம் ஆகிவிட்டதால் குருமூர்த்தியை அழைத்தான்.
இவன் அழைப்பை அவர் எடுக்காமல் போக, சர்வாச்சார்யா பொறுமையாக காத்திருந்தான்.
தெரிந்தே குருமூர்த்தி அவன் அழைப்பை நிராகரிப்பார் என்று சர்வாச்சார்யா யோசித்திருக்கவில்லை.
இதுவரை குருமூர்த்தி அப்படி நடந்து கொண்டதும் இல்லை. என்ன கலவரமாக இருந்தாலும் அவனுக்கான உணவு சரியாக வந்துவிடும்.
அப்படியே அவர் அழைப்பை ஏற்காமல் போனாலும், மாசிலாமணி, கற்பகம் பாட்டி யாராவது நேரிலே வந்து என்னவென்று கேட்பார்கள்.
எனவே ரோஹனை பார்க்க சென்ற இடத்தில் எதாவது பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்து கொண்டான்.
பசியை விட அவனுக்கான திட்டங்கள் அதிகம் என்பதால் அதில் தன் கவனத்தை வைத்தான்.
அங்கு சம்யுக்தா, “போதும்” என்று ஒரு இட்லியுடன் தன் உணவை முடித்து கொண்டாள்.
“ஏன் கண்ணு. ஒரு இட்லி எப்படி காணும். இன்னும் இரண்டு வைச்சுக்கோ. உனக்காக நெய் தோசையும் ஊத்திட்டிருக்கேன்” என்று பாட்டி சொல்ல,
“பசிக்கலை பாட்டி. நீங்க சாப்பிடுங்க” என்று சம்யுக்தா எழுந்துவிட்டாள்.
“நான் அந்த தம்பிக்காக புலம்பினதுல நீ சாப்பிடாம வைச்சுட்டியா கண்ணு. தப்பு தான். நான் அப்படி புலம்பியிருக்க கூடாது. அங்கலாய்ப்புல பேசிட்டேன்” என்று கற்பகம் பாட்டி வருத்தத்துடன் சொல்ல.
“பாட்டி. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நீங்க ப்ரீயா விடுங்க” என்று வாசலுக்கு வந்தாள் சம்யுக்தா.
குருமூர்த்தி வீட்டிற்கு வருவதற்காக காத்திருக்க, குருமூர்த்தியும் வந்துவிட்டார்.
வாசலில் வைத்தே தன் மகளை கண்ட குருமூர்த்தியின் கால்கள் வேகம் கண்டது.
அவர் கேள்விப்பட்ட விஷயங்கள் அவரின் நிதானத்தை சூறையாடி இருந்தது.
அப்பா ஏன் இவ்வளவு அவசரமா வரார்? சம்யுக்தா கேள்வியாக தந்தையை பார்த்திருக்கும் போதே, குருமூர்த்தி மகளை தன் நெஞ்சோடு அணைத்திருந்தார்.
“ப்பா” என்ற சம்யுக்தாவின் உதடுகள் அதிர்ச்சியில் அசைந்தது.
இப்படியான ஒன்றை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை!
எத்தனை வருடங்களுக்கு பிறகான தொடுதல், அணைப்பு!
குழந்தையாக அவளை விட்டு சென்ற குருமூர்த்தி, மீண்டும் மகளிடம் வந்த போது அவள் வளர்ந்த வயது பெண்!
இடைப்பட்ட காலங்களில் எல்லாம் கம்பிகளுக்கு இடையில் தான் சந்திப்பு.
தண்டனை காலம் முடிந்துவிட்டது. மகள் அவருக்கு அருகில் நிற்கிறாள்! அவளை கைகளில் ஏந்தி கொள்ளலாம்! மகளுக்கு முத்தம் கொடுக்கலாம் என்றால், வயது பெண்ணை எப்படி நெருங்க?
மகள் வளர்ந்துவிட்டாள் என்று மகிழ முடியவில்லை. மகளுக்கான ஏக்கம் குருமூர்த்தி மட்டுமே அறிந்த ஒன்று!
அன்று கைகள் நடுங்க அவளின் உச்சி தலையை வருடினார் குருமூர்த்தி. அவ்வளவு தான்!
இதில் ஏமாற்றம் அடைந்தது சம்யுக்தா!
‘ஏன் என்னை அப்பா கிட்ட சேர்க்கலை?’
ஆறு வயது வரை அவரின் கைகளில் தான் வளர்ந்தாள்! எங்கு சென்றாலும் குருமூர்த்தி மகளை கைகளில் தூக்கி கொள்வார்!
“அவளை நடக்க விடுங்க. உங்க பொண்ணு இன்னும் கைக்குழந்தை இல்லை” என்று சுபத்ரா கண்டிக்கும் போதெல்லாம் குருமூர்த்தி கேட்டதில்லை.
ஆனால் இப்போது தந்தையும், மகளும் விலகி நிற்கின்றனர்.
தொடர்ந்த நாட்களில் ஒரே வீட்டில் வசித்த போதும் குருமூர்த்தி மகளை முன்பு போல் கொண்டாடவில்லை.
அப்பாக்கு என்மேல இருந்த பாசம் குறைஞ்சிடுச்சா? சம்யுக்தா தானும் தந்தையிடம் இருந்து விலகி கொண்டாள்.
குருமூர்த்தி முடிவெடுப்பார்! மகள் கேட்டுக்கொள்வாள்! இப்படித்தான் இருவர் உறவும் அவர்கள் உயிர்ப்பை தொலைந்திருந்தது.
இன்றோ குருமூர்த்தி மகளை தன் நெஞ்சில் தாங்கி நிற்கிறார்!
தந்தையின் ஸ்பரிசத்தை மறந்து போயிருந்த மகள், இப்போது அவர் திடீர் அரவணைப்பில் திகைத்து நிற்கிறாள்.
ஏன் இந்த அணைப்பு என்று காரணம் தெரியவில்லை. ஆனால் வேண்டும்! தந்தையின் ஸ்பரிசம் வேண்டும், அவரின் கைகளில் நான் வேண்டும்!
குருமூர்த்தி அவளின் உச்சி தலையில் முத்தம் வைக்க, “ப்பா” என்ற சம்யுக்தாவின் கண்களில் சட்டென கண்ணீர் சூழ்ந்துவிட்டது.
“அண்ணா” என்று மாசிலாமணி அவரின் தோள் தட்டினார்.
குருமூர்த்தி தன்னை சுதாரித்து கொண்டவர், மகளை தட்டி கொடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்தார்.
“ஒன்னுமில்லை. தூங்க போ” என்று மணி அவளுக்கு தலையசைத்தார்.
சம்யுக்தா அவளின் அறை கதவை திறக்க, “கதவை மூடாத” என்றார் குருமூர்த்தி.
“சரிப்பா” என்ற சம்யுக்தா கேள்விகளுடன் படுக்கைக்கு சென்றாள்.
சர்வாச்சார்யா உணவில்லாமல் இருப்பது! தந்தையின் திடீர் மாற்றம்!
இரண்டுக்கும் இடையில் எதாவது சம்மந்தம் இருக்குமா?
இல்லை. உடல்நிலைக்காக அவருக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று ஏதாவது சொல்லியிருப்பார்களா?
ச்சு. அது எப்படி?
அப்புறம் வேறென்ன காரணம்?
அப்பா ஏன் திடீர்ன்னு இப்படியெல்லாம் வித்தியாசமா நடந்துகிறார்?
பல, பல கேள்விகளுடனே சம்யுக்தா தூங்கி போனாள்.
தூங்காமல் இருந்தது இருவர்!
சர்வாச்சார்யா! குருமூர்த்தி!
நீண்ட நேரம் ஆன பின்னும் உணவு வராததில் சர்வாச்சார்யா குழம்பி போனான்.
ரோஹனை பார்க்க சென்ற இடத்தில் தான் நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது!
குருமூர்த்தியை தனியே அழைத்து சென்று மாசிலாமணி ஏதோ சொன்னது, குருமூர்த்தி பாய்ந்து மணி சட்டையை பிடித்தது, பின் இருவரும் வேகமாக வெளியேறியது என்று எல்லாமே கண்ணாடி கதவின் வழி சர்வாச்சார்யா கவனித்திருந்தான்.
அதனாலே என்னமோ சரியில்லை என்று உறுதியாக நம்பினான்.
சம்யுக்தாவை நேரில் பார்த்து கேட்டுவிடுவோம் என்று அவளின் அறைக்கு வந்தான். ஒற்றை கையால் அந்த கதவை திறக்க முடியாது என்பதால் முன்பு போல் மெல்ல தட்டினான்.
ஆனால் சம்யுக்தா தான் அறைக்குள் இல்லையே. அவளின் அறை கதவும் எப்போதும் போல் மூடியிருந்தது.
அவனும் தட்டி பின் தானே திறக்கவும் வெகுவாக முயன்றான். வலுவான கதவு என்பதால் தோல்வி தான் கிட்டியது.
சில நிமிடங்களே போராடி அவன் அறைக்கு திரும்பிவிட்டான்.
பசியில் என்பதை விட, இவர்களுக்கு என்னவோ என்ற கேள்வியிலே அவனால் தூங்க முடியவில்லை.
அடுத்து குருமூர்த்திக்கு நிம்மதியாக தூங்க தான் முடியுமா?
ரோஹன் சொன்னதோடு மட்டுமில்லாமல் அவரும் அந்த ஹோமிற்கு அழைத்து பேசினார்.
“உங்க பொண்ணை நாங்க நல்லாத்தான் வளர்த்தோம். நீங்க என்ன இப்படி அபாண்டமா பேசுறீங்க” என்று அவர்கள் பதட்டத்துடன் மறுக்க, குருமூர்த்தி அங்கிருக்கும் தன் ஆட்களை ஹோமிற்கு அனுப்பிவிட்டார்.
பின் என்ன? குருமூர்த்தி ஆட்கள் கவனித்த கவனிப்பில், எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் அந்த மேலாளர் பெண்மணி.
அந்த இல்லம் நல்ல இல்லம் தான். ஆனால் அந்த மேலாளர் சரியில்லை. பணத்துக்கு விலை போய்விட்டார்.
குருமூர்த்தி கொடுத்த பணம், ரோஹனின் தாத்தா கொடுத்த பணம் என்று அவருக்கு வசதியான வாழ்வு!
“அந்தம்மா எங்க எல்லாம் சொத்து வாங்கியிருக்குன்னு எனக்கு காலையிலுக்குள்ள லிஸ்ட் வந்தாகணும்” என்று மாசிலாமணி தன் ஆட்களுக்கு உத்தரவிட்டார்.
குருமூர்த்தி ஹாலிலே இருந்துகொள்ள, மாசிலாமணியும் அங்கேயே இருந்து கொண்டார்.
நள்ளிரவில், “மணி. என் பொண்ணு இருக்கிற இடத்துல அந்த சண்முகம் மகன் இனி இருக்க கூடாது” என்றார் குருமூர்த்தி.
“அண்ணா. சண்முகம்கிட்ட சொல்லிடுறேன்” மணி சொல்ல,
“சொல்றியா?” என்று குருமூர்த்தி கோவமாக ஓர் மாதிரி கேட்டார்.
“இல். இல்லைண்ணா. நான் என்ன பண்ணன்னு”
“அந்த பையன் இன்னும் பத்து நிமிஷத்துல நம்ம ஆபிஸில இருக்கணும்” என்றார் குருமூர்த்தி.
மாசிலாமணி உடனே அந்த வேலையை செய்ய ஓடினார்.
சண்முகம் ஊட்டிக்கு வருவதற்குள் அவர் மகன் குருமூர்த்தியின் கட்டுபாட்டிற்குள் சென்றுவிட்டான்.