“இங்க என்ன பதிலுக்கு பதில் போட்டியா நடக்குது? இப்படி பாய்ஞ்சுட்டு வரீங்க? எப்படியும் என்னை விட பெரியவங்களா தான் இருப்பீங்க. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்கோங்க சார்” என்று சம்யுக்தா நல்ல பிள்ளையாக இவனுக்கு கிளாஸ் எடுத்தவள் சுட ஓடிவிட்டாள்.
குருமூர்த்தி முதல் முறையாக மகளை இப்படி பார்த்ததில், முகம் முழுக்க புன்னகையுடன் நின்றிருக்க, மற்றவனோ அவளை உர்ரென பார்த்து கொண்டிருந்தான்.
சம்யுக்தா மெல்லிய புன்னகையுடன், நன்றாகவே அவளின் பயிற்சியை மேற்கொள்ள, குருமூர்த்திக்கு இன்னமும் முகம் மலர்ந்தது.
“அண்ணா” என்று மாசிலாமணி அந்த நேரம் வந்தவர், “விசாரிச்சுட்டேன் அண்ணா” என்றார்.
மணி முகத்தில் என்ன கண்டாரோ? குருமூர்த்தி எதையும் யோசிக்காமல், “சொல்லு மணி. என்ன?” என்று கேட்டார்.
சர்வாச்சார்யா, சம்யுக்தா அங்கிருப்பதில் மணி லேசாக தயங்க, குருமூர்த்திக்கு மகள் பற்றி எனும் போது சுத்தமாக பொறுமையில்லை.
” என்ன மணி?”
“ஒரு பையன் தான் பாப்பா பின்னாடி புதுசா சுத்திட்டு இருக்கானாம்” என்றார் மணி.
“அப்படியா?” என்று குருமூர்த்தி மகளை பார்க்க, சம்யுக்தா அதிர்ந்து தான் போனாள். அதற்குள்ள முழுதும் விசாரித்து விட்டார்களா?
“அவங்க சும்மா ஏதோ? தொந்தரவு எல்லாம் கொடுக்கறதில்லை” என்றாள் சம்யுக்தா.
உண்மையும் அதுதான். ரோஹன் அவளுக்கு சீனியர்! அவனுக்கு திடீர் கிறுக்கு இவள் மேல்!
அவர்களின் துறை சார்ந்த செமினாரில் ஒன்றாக வேலை பார்த்த போது, பிடித்து விட்டதாம்!
காதலை சொன்னால் கூட மறுத்து விடலாம். ஆனால் இவன் செல்லுமிடம் எல்லாம் பின்னால் வருவது, ஜாடையாக பேசுவது, கிப்ட் அனுப்புவது என்று ஏதோ செய்து கொண்டிருக்கிறான்.
பெண்ணை அச்சுறுத்துவது போல் அவன் செயல்கள் இல்லை. குருமூர்த்தியிடமும் அதை தெளிவாக சொன்னாள் சம்யுக்தா.
மற்ற யாரையும் விட குருமூர்த்தியின் கோவம் மகளுக்கு நன்றாக தெரியும்!
“நல்ல பையன்னு சொல்றீங்க. ஆனா உங்க பின்னாடி சுத்துறான்” என்று கேட்டான் நம் நாயகன்!
இது நிச்சயம் கிண்டலே தான்! நல்ல பையன் ஏன் உன் பின்னாடி சுத்துறான் என்பதே அதன் பொருள்!
சம்யுக்தா உடனே இதை புரிந்து கொண்டவள், துப்பாக்கியை இறுக்கமாக பிடித்தாள்.
ஐயோ பயமா இருக்கு! என்று அச்சப்படுவது போல் வேறு நடித்து இன்னும் அவளை வெறுப்பேற்றினான்.
“தம்பி சொல்றது சரி, பொண்ணு பின்னாடி சுத்துறவன் எல்லாம் நல்ல பையனா?” என்று மணி கோவமாக சொன்னார்.
“அங்கிள். அது ஏதோ, சொன்னா புரிஞ்சுப்பாங்க” சம்யுக்தா சொல்ல,
“சொன்னா புரிஞ்சுப்பான்னா, மணி நீயே சொல்லிடு” என்றார் குருமூர்த்தி.
அதில் இருக்கும் உள்அர்த்தம் புரிந்த சம்யுக்தா, “ப்பா. காலேஜ்ல இதெல்லாம் சகஜம். நானே அவங்களுக்கு சொல்லிக்கிறேன்” என்றாள்.
“உங்களை யாராவது கேட்டாங்களா? நீங்க பேசாம இருங்க” என்று சம்யுக்தா சொல்ல,
“சம்யுக்தா” என்றார் குருமூர்த்தி.
அவரிடம் வெளிப்பட்ட கண்டிப்பில், சம்யுக்தா முகம் சுருங்கிவிட்டது. ஏனோ சட்டென கண்களும் கலங்கி போனது.
“அண்ணா” என்று குருமூர்த்தியை தனியே அழைத்தார் மாசிலாமணி.
முக்கியமானது இனிதான் வர போகிறது என்று புரிந்து கொண்ட குருமூர்த்தி பயிற்சி கூடத்தை விட்டு வேளியே வந்துவிட, “அந்த பையன் சண்முகம் மகன்” என்று மணி பட்டென விஷயத்தை சொல்லிவிட்டார்.
குருமூர்த்தி முகமெல்லாம் சூடாகி போனது. மனிதருக்கு கோவத்தில் உடல் நடுக்க காண, “இத்தனை நாளா இதை கண்டுபிடிக்காம புடுங்கிட்டா இருந்த?” என்று மணி கழுத்தை பிடித்துவிட்டார்.
சண்முகம் மூச்சு கற்று கூட தங்கள் மேல் பட கூடாது என்று விலகியிருக்க, அவர் மகன் தேடி வந்து என் மகள் பின்னால் சுத்துவானா?
குருமூர்த்தி அதற்கு மேல் நொடி கூட தாமதிக்கவில்லை. காரை நோக்கி போக, “அண்ணா, அண்ணா. அவசரபட வேண்டாம். சொன்னா கேளுங்க, நம்ம பாப்பா விஷயம் இது. பொறுமையா தான் கவனிக்கணும்” என்று மணி அவரின் பின்னே ஓடினார்.
குருமூர்த்தி கிளப்பிய காரில் மணி ஓடி தான் ஏற வேண்டியிருந்தது. அவ்வளவு வேகம்!
பயிற்சி கூடத்தில் இவர்கள் இருவர் மட்டும் இருக்க, “டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் மேடம்” என்றழைத்தான் வினயக்காரன்!
சம்யுக்தா கண்களை சிமிட்டி கொண்டவள், “டாடி பொண்ணு மட்டும் தான். பிரின்சஸ் எல்லாம் கிடையாது” என்றாள்.
“அப்படியா? பார்த்தா அப்படியே தெரியலையே! பொண்ணு பின்னாடி யாராவது வந்தா ஸ்ட்ரெயிட்டா சொர்க்கம் தான் போலயே”
“எல்லா அப்பாக்கும் கோவம் வரும்”
“உன் அப்பாக்கு அதிகமா வருது. இப்போ உன் டாடி போயிருக்க வேகத்தை பார்த்தா அந்த ‘நல்ல்ல’ பையன் நிலைமை கவலைக்கிடம் தான்”
“மணி அங்கிள் பார்த்துப்பார்” சம்யுக்தா அவளுக்கும் சேர்த்து சொல்லி கொண்டாள்.
“ஆனாலும் உன் அப்பா ஓவர் அப்பாவா இருக்கார். பொண்ணுன்னா எல்லாம் தான் இருக்கும். அதுக்கு போய் பாய்ஞ்சுட்டு போறார். உன் டாடி தோள் மேலே தான் வளர்ந்தியா? இறக்கமாட்டாம சீராட்டுறார்” உதட்டை சுளித்தான்.
“அவர் தோள் மேலே வளருற கொடுப்பினை எல்லாம் எனக்கு இல்லை” சம்யுக்தா கீழே அமர்ந்து கொண்டாள்.
“அப்பா ஜெயில்ல இருந்தார். நான் ஹோம்ல இருந்தேன்”
“என்ன சொல்ற நீ?”
“அப்பாக்கு தான் எல்லா வித்தையும் தெரியுமே! சின்ன ஆளுங்க இருந்து பெரிய ஆளுங்க வரைக்கும் பணம், சொத்து பிரச்சனைக்கு இவர்கிட்டதான் வருவாங்க. இவர் தான் அப்போ டாப்ல இருந்தார். கோர்ட்டுக்கு போன கேஸ் கூட அப்பாகிட்ட வந்தா முடிஞ்சிடும். அதனால ஜட்ஜ் மேடம் ஒருத்தருக்கு அப்பா மேல ரொம்ப கோவம்” என்று மெலிதாக புன்னகைத்தவள்,
“அம்மா லாயர்! கேஸ்ல ஆரம்பிச்சு கல்யாணத்துல தான் முடிஞ்சது. காதல்! நல்லா தான் போயிட்ட இருந்த மாதிரி இருந்தது. ஆனால் ஒரு பஞ்சாயத்துக்கு போனார். அதில இருந்து எல்லாம் மாறிப்போச்சு”
“சண்முகம்! அப்பாவை விட ஒரு படி மேல இருப்பார். அவர் தம்பிக்கும், அப்பாக்கும் அடிக்கடி முட்டிக்கும். அந்த பஞ்சாயத்துல அடிதடி ஆகிருச்சு. அம்மாவை பத்தி ஏதோ பேசிட்டார் போல. அப்பா அவரோட கட்டுப்பாட்டுல இல்லாம அடிச்சுட்டார்”
“அவருக்கு ஏற்கனவே ஹெல்த்ல கோளாறு. அப்பா அடி தாங்காம, எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அவரை காப்பாத்த முடியலை. அப்பாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க”
“அப்போ எனக்கு ஆறு வயசு. அம்மா வேலைக்கு போனவங்க வீட்டுக்கே வரலை. விபத்துன்னு சொன்னாங்க. ஆனா என் அம்மா வைச்சு பழிக்கு பழி வாங்கிட்டாங்க. அதை நிரூபிக்க எங்ககிட்ட ஆதாரம் இல்லை. ஆனா அப்பா மேல மட்டும் கொலை கேஸ்”
“அப்பாக்கு தூக்கு தண்டனை இல்லை ஆயுள் தண்டனை கிடைக்கணும், அவர் வெளியவே வர கூடாதுன்னு ரொம்ப போராடினாங்க. ஆனா எங்க வாழ்க்கையை தெய்வமா காப்பாத்தி கொடுத்தாங்க ஜட்ஜ் மேடம்”
“அவருக்கு ஏற்கனவே இருந்த ஹெல்த் பிரச்சனை, அப்பாவுடைய குறிக்கோளும் கொல்றது இல்லைன்னு சொல்லி அப்பாக்கு பத்து வருஷம் மட்டும் தண்டனை கொடுத்தாங்க”
“அவங்க அன்னைக்கு எழுதின தீர்ப்பு தான் என்னை காப்பாத்திச்சு! என் அப்பா எனக்கு கிடைச்சார். இல்லை நான்? ம்ப்ச்” என்று எங்கோ வெறித்தாள் சம்யுக்தா.
ஆறு வயதில் இருந்து அவளின் கடின காலங்கள் ஆரம்பமானது!
கொலையாளியின் மகளை யார் அருகில் சேர்ப்பார்கள்! நண்பர்கள் என்று யாருமில்லை! மூன்று வேளை உணவு கூட முழுதாக கிடைக்காத நாட்கள்! வயதுக்கு வந்த நேரம் மூச்சு முட்டி நான்கு சுவற்றுக்குள் கிடந்தது! தந்தையை சிறை கம்பிக்குள் பார்த்த கடினமான தருணங்கள்! புகை போல் அம்மாவின் மடி! போதும்!
“தண்ணீர் குடி” என்று நீட்டினான் சர்வாச்சார்யா.
எப்போது அவளின் அருகில் அமர்ந்தான் என்று தெரியவில்லை.
சம்யுக்தா அடைத்த தொண்டையை தண்ணீர் குடித்து சரியாக்கினாள்.
அப்படியும் ஏதோ ஜீரணிக்க முடியா நினைவில் அவள் உடல் துள்ளி விழ, “ரிலாக்ஸ்” என்று அவளை தன் தோள் சாய்த்து ஒற்றை கையால் அவளை அரவணைத்து கொண்டான்.
சம்யுக்தா சில நொடிகளில் தெளிந்து அவனிடம் இருந்து விலகி கொண்டாள்.
புதிதான ஆண் வாசனை, அவன் உடல் சூடு சம்யுக்தாவை தள்ளி அமர வைத்தது.
நேற்று அவன்! இன்று இவள்! தெரிந்தோ தெரியாமலோ மற்றவரிடம் தங்களை பகிர்ந்து, அரவணைத்து கொள்கின்றனர்.
சூழ்நிலை தான் மனிதனை எவ்வளவு மாற்றுகிறது!
சர்வாச்சார்யா உயரம் பெரிது! சம்யுக்தாவின் கடந்த காலமும் பெரிது!
இருவரும் எப்படி தான் மற்றவரிடம் தங்களை வெளிப்படுத்தி கொள்கின்றார்களோ?
சர்வாச்சார்யா நிதானமாக அவளின் நெற்றி முடியை ஒதுக்க, “நானே” என்று சம்யுக்தா சரி செய்து கொண்டவள்,
“எங்களோட வாழ்க்கையில இருந்து ஏதாவது புரிஞ்சுக்கிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம். ரொம்ப பெரிய பாடத்தை கத்துக்கிட்டேன்”
“என்ன அது சொல்லுங்க” சம்யுக்தா ஆர்வமாக கேட்க,
“காதலிச்சு நாசமா போயிட கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்” என்றான் உலக மகா நல்லவன்!