கடந்து செல் காதலுடன்! 11 1 10232 கடந்து செல் காதலுடன்! 11 “இன்னும் கிளம்பலையா நீ?” என்று அந்த வீட்டின் தலைவர் கோதண்டம் சத்தம் போட, “கிளம்பிட்டேன்ப்பா” என்ற சுபத்ரா சுருங்கிய முகத்துடனே கிளம்பினார். “அவளுக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுடலாமே?” என்று கோதண்டத்தின் மனைவி கேட்க, “என்ன விருப்பம் இல்லை? அவ வயசுக்கு எல்லாம் உனக்கு இரண்டு பிள்ளைங்க பொறந்தாச்சு” என்று கோதண்டத்தின் அம்மா பாய்ந்து கொண்டு வந்தார். “இல்லை அத்தை. சுபா ஒரு மூணு மாசம் கழிச்சு கல்யாணம் வைச்சுக்கலாம்ன்னு சொல்றா. அதான்“ “அதென்ன மூணு மாச கணக்கு? மாப்பிள்ளை இவந்தான்னு முடிவான உடனே கல்யாணத்தை முடிச்சுடுறது தான் சரி. நீ போய் ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன செய்யணும்ன்னு சொல்லு போ” என்று மாமியார் முடித்துவிட, கோதண்டமோ ஓர் வார்த்தை கூட பேசவில்லை. அவருக்குள் என்ன ஓடுகிறது என்பது அவர் மட்டுமே அறிந்த ஒன்று! சுபத்ராவை ஓர் வேலையாய் நீதிமன்றத்தில் பார்க்க சென்ற கோதண்டம் கண்டது என்னமோ சுபத்ராவின் கையை பிடித்திருந்த குருமூர்த்தியை தான்! வழக்கு முடிந்தாலே கையெழுத்து எதுவும் இடாமல் கிளம்பும் குருமூர்த்தியை ஓடி பிடிப்பதே சுபத்ராவின் வேலை. அன்றும் அப்படித்தான் சுபத்ரா ஓடி சென்று குருமூர்த்தியை பிடிக்க, அவரோ “எனக்கு அர்ஜென்டா ஒரு இடத்துக்கு போகணும். அப்புறம் பார்த்துக்கலாம்” என்று நடையை கட்ட, “சைன் போடாம போக கூடாது. போட்டுட்டு போங்க” என்று சுபத்ரா அவரின் பின் தானும் செல்ல, “ஸ்ஸ். உன்னோட. பேசாம என் கையெழுத்தை நீயே போடு போ” என்றார் குருமூர்த்தி. “நானா? என் கோட்டை கழட்ட பிளான் பண்றீங்களா நீங்க? உங்க பிராடு வேலைக்கு வக்கீலையே கூட்டு சேர்க்கிறீங்க” என்று சுபத்ரா கோபத்துடன் சண்டைக்கே நிற்க, “ஏய் கத்திரிக்கா? என்ன வாய் நீளுது. அடிச்சு மூஞ்சை உடைச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று சுபத்ராவின் முகத்துக்கு நேரே கைய வீசினார் மனிதர். “எங்க உடைங்க பார்ப்போம். இப்போவே உங்களை உள்ள தள்ளி கம்பி என்ன வைச்சிடுவேன்” என்று சுபத்ரா விரல் நீட்டி மிரட்ட, “உள்ள தள்ளுவியா? அவ்வளவு தைரியம் வந்துடுச்சா உனக்கு” என்று சுபத்ராவின் நீட்டிய விரலை மடக்கி பிடிக்க, “அயோ. வலிக்குது. விடுங்க. இனி பேச மாட்டேன்” என்று சுபத்ரா அலற, “பேசி பாரு அப்புறம் இருக்கு உனக்கு” என்று குருமூர்த்தி அவரின் விரலை விட, சுபத்ரா கலங்கிய கண்கள் குருமூர்த்தியை குற்றம் சாட்டியதுடன், “சீனிவாசன் சார்கிட்ட இப்படி பண்ணியிருப்பீங்களா நீங்க? நான்னு தானே என்னை ஓட வைக்கிறீங்க, மிரட்டுறீங்க, அடிக்கிறீங்க” என்று விசும்பி கொண்டே கேட்டார். “சீனிவாசன் சார் என்கிட்ட உன்னை மாதிரி நடந்துப்பாரா? நீயும் தான் என்கிட்ட எகிறிட்டு நிக்கிற” என்று குருமூர்த்தி கேட்டார். “உங்களால நான் ஒவ்வொரு முறையும் ஜட்ஜ் மேடம்கிட்ட திட்டு வாங்குறேன். அந்த கடுப்புல ஏதோ பேசிட்டேன் தான், அதுக்காக வக்கீல் விரலையே உடைப்பீங்களா?” என்று திரும்ப குதித்தார் சுபத்ரா. “என்ன திரும்ப குரல் உசரது? அடக்கி வாசி கத்திரிக்கா. நான் ரவுடி தெரியுமில்லை” என்று முகத்தை கொடூரமாக வைத்து கொண்டு சின்ன பிள்ளையை மிரட்டினார் குருமூர்த்தி. சில மாதங்கள் சேர்ந்து பயணித்தாலும் ஏனோ சமீப காலமாக இருவருக்கும் இடையில் உரிமை உணர்வு பரவுவதை உணர்ந்த மனது, சுபத்ராவை தள்ளி வைக்க பார்த்தது. “எனக்காக வாதாடி பீஸ் வாங்குறதோடு நிறுத்திக்கோ. சும்மா என்கிட்ட குதிக்காத. நான் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன். பார்த்துக்கோ” என்று எச்சரித்தார் குருமூர்த்தி. “நீங்க ஒழுங்கா சொன்ன வேலையை செஞ்சா நான் ஏன் குதிக்க போறேன். அதோட நான் ஒன்னும் உங்ககிட்ட பீஸ் வாங்கலை” என்று சுப்தரா விடைத்துவிட்ட மூக்குடன் பொரிந்தார். “நான் கொடுக்கிற பீஸ்ல தானே சம்பளம் வாங்குற. அப்புறமென்ன? அடங்கி இரு“ “அடங்கி இருக்கம்னுமா? நீ பெரிய ரவுடியா இருந்தா உன்னோட? என்னை பகைச்சுக்கிட்டிங்க உங்களுக்கு கண்டிப்பா ஜெயில் தான். நீங்களும் பார்த்துக்கோங்க“ “அடிங்க. சொல்லிட்டே இருக்கேன். கூட கூட பேசிட்டே இருக்க நீ?” என்று சுபத்ராவை அதிகமாக நெருங்க, சுபத்ரா பயத்தில் கண்களை விரித்தாலும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. குருமூர்த்தி அவர் விலகிவிடுவார் என்று எதிர்பார்த்தார் போல. சுபத்ரா அப்படியே நின்றதில் இருவரின் உடலும் சட்டென உரசி, பின் வாங்கிவிட்டது. மின்னல் உரசலில் இருவரும் மற்றவரை அதிர்ந்து பார்க்க, சுபத்ரா நிலை தடுமாற, குருமூர்த்தி சட்டென சுபத்ராவின் கைப்பற்றி கொண்டார். “பார்த்து சுபா” என்றவர் அனுசரணையாக சுபத்ராவின் பற்றிய கையை வருடி கொடுக்க, சுபத்ராவிற்கே அதிர்ச்சி எனும் போது, அவரை தேடி கொண்டு வந்த கோதண்டத்திற்கு இந்த காட்சி கண்ணில் பட்டு, நெஞ்சில் வாளை பாய்ச்சிவிட்டது. குருமூர்த்தியை நன்கு தெரிந்தவர் கோதண்டம். ஓர் ரௌடி என் மகள் கையை பற்றுவதா? தந்தைக்கு கொதித்து கொண்டு வர, மகளும் அவரின் பிடியில் அடங்கி இருப்பதை கண்டு, திகைத்து நின்றுவிட்டார். சுபத்ரா பின் கையை விலக்கி நடப்பதும், குருமூர்த்தி சுபத்ராவின் பின் அமைதியாக செல்வதையும் கண்டிருந்த கோதண்டம் அப்போதே மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார். அடுத்த ஓர் வாரத்தில் மகளுக்கும் மாப்பிள்ளை பார்த்து உறுதியும் செய்துவிட்டார். வசதியான குடும்பம் என்பதால் பணத்திற்கு கவலையில்லை. முகூர்த்த நாள் குறித்தாகிவிட்டது. இத்தனை அவசரத்தை சுபத்ரா எதிர்பார்த்திருக்கவில்லை. தந்தையுடன் பேச பல முறை முயன்றுவிட்டார். கோதண்டம் மகள் பேசவே இடம் கொடுக்கவில்லை. சுபத்ராவிற்கு இரு அண்ணன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து தனி குடித்தனம். தொழில் மொத்தமும் கோதண்டம் கையில் என்பதால் அவர்களும் தங்கைக்கு ஏற்று தந்தையை கேள்வி கேட்டு நிற்கவில்லை. “இனி வேலைக்கு வர மாட்டா” என்று கோதண்டம் அழைத்து சீனிவாசனுக்கு சொல்லிவிட்டார். சுபத்ராவிற்கு மனதில் ஏதோ அழுத்தம்! “குருமூர்த்தி கேஸ் என்னாச்சு? யார் பார்க்கிறா?” என்று சீனிவாசனுக்கு அழைத்து கேட்டார் சுபத்ரா. சீனிவாசன், “கல்யாண பொண்ணு ஜாலியா இரும்மா. கேஸ் எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்” என்று முடித்துவிட, ஏனென்றே தெரியாத சோர்வு. ‘வேலைக்கு செல்ல முடியாதது என்னை இந்தளவு பாதிக்குமா?’ ஆம் என்ற பதிலையும் மனது ஏற்கவில்லை. எதையோ இழந்துவிட்ட துக்கத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை! ஓர் வாரத்திலே சுபத்ரா மொத்தமாக தளர்ந்துவிட்டார். “அவங்களுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு, இனி நாந்தான் உங்க கேஸ் வாதாடுவேன்” என்று ஒருவர் புதிதாக வந்து நிற்க, குருமூர்த்தி முகம் வாடிவிட்டது. ‘ச்சு, விடுடா. என்னமோ எல்லாம் கிடைச்சு சுபா மட்டும் கிடைக்காம போன மாதிரி உருகுற! இவளும் உனக்கு கனவு தான்!’ குருமூர்த்தி அடைத்த நெஞ்சத்துடன் நீதிபதி முன் நின்றார். வசுந்தரா ஏதோ கேட்க, குருமூர்த்தியிடம் ஓர் விரக்தி பார்வை! “என்னாச்சு இந்தாளுக்கு?” வசுந்தரா முனகி கொண்டார். இருள் சூழ ஆரம்பித்த நேரம் அந்த உயர்தர ஹோட்டல் பலவகை மக்களுடன் இயங்கி கொண்டிருந்தது. இதோ சுபத்ரா மணமகன் முன்பு நின்றிருக்க, “என் பிரண்ட்ஸுக்கு உன்னை அறிமுகம் படுத்தலாம்ன்னு தான் வர சொன்னேன்” என்றான் மணமகன். சுபத்ரா அசவுகரியத்துடன் அமர்ந்திருக்க, பலவகை உணவுகள் அவர் முன் அடுக்கப்பட்டிருந்தது. மணமகன் நண்பர்கள் வட்டத்தில் பெண்களும் இருக்க, சுபத்ராவும் அவள் தோழிகளுடன் தான் சென்றிருந்தார். இசை மெலிதாக ஒலிக்க, உணவுடன் சிலர் மதுவும் எடுத்து கொண்டனர். “உனக்கு ஓகேன்னா நான் லைட்டா எடுத்துக்கவா?” என்று மணமகன் சுபத்ராவிடம் கேட்க, பெண்ணுக்கு ஒவ்வாமை. இவனையே பிடிக்கலை, இவன் என்ன பண்ணா எனக்கென்ன? சுபத்ரா தலையசைத்துவிட்டார். “முக்கியமான மீட்டிங். டேபிள் புக் பண்ணிட்டாங்க. பெரிய ஆளுங்க. வர சொல்லிட்டு போகாம இருக்க முடியாது. போய்ட்டு வா மூர்த்தி” என்று மறுத்த குருமூர்த்தியை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார் லிங்கம். குருமூர்த்தி ஹோட்டலுக்குள் வந்த நேரமே சுபத்ராவை பார்த்திருக்க, பேச்சில் அவர் கவனம் நிலைக்கவில்லை. மாசிலாமணி தான் வந்தவர்களுடன் பேச, குருமூர்த்தி கண்கள் அடிக்கடி சுபத்ராவையே தொட்டு மீண்டது. சில நிமிடத்தில் அந்த மணமகன் சுபத்ராவை நெருங்கி அமர, சுபத்ரா விலக ஆரம்பித்தார். “ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற? உனக்கு என்னை பிடிக்கலையா?” என்று அவன் சுபத்ராவின் கையை பற்றினான். மணமகனுக்குள்ளும் ஏக்கம்! சுபத்ராவை அவனுக்கு பிடித்திருக்கிறது. ஆனால் சுபத்ரா அவரிடம் பழக ஆர்வம் காட்டவில்லை. அதை தீர்க்கவே இந்த சந்திப்பு ஏற்பாடு! சுபத்ராவிற்கோ அவன் கையை பற்றிய நேரம், மின்னலாக குருமூர்த்தி அவருள் மின்னி மறைந்தார். பெண்ணுக்கு கண்கள் விரிந்துவிட்டது. ஏன் அவரை நினைச்சேன்? அந்த நொடி மட்டுமில்லை தொடர்ந்த நொடிகளுமே சுபத்ரா அவரின் மனக்கண்ணில் கண்டது குருமூர்த்தியை தான். சுபத்ரா அறியாமலே அவரின் இதழ்கள் தானே விரிந்து கொள்ள, முகமும் மலர்ந்துவிட்டது. கடவுளே! என்ன நடக்குது எனக்குள்ள! சுபத்ரா அவரின் உலகத்திற்குள் தொலைந்து போக, மணமகனோ இன்னும் நெருங்கி சுபத்ராவை தோளோடு அணைத்து தனக்குள் கொண்டு வந்த நொடியே, சுபத்ரா பதறி வேகமாக அவனின் பிடியில் இருந்து விலகினார். “என்ன பண்றீங்க நீங்க?” என்று சுபத்ரா கோவமாக கேட்க, “என்ன பண்ணிட்டேன்? ஏன் நான் உன்னை தொட கூடாதா? கட்டிக்க போறவன் தானே?” என்று மணமகன் அவரின் மலர்ந்த முகத்தில் உல்லாசமாக கேட்க, கட்டிக்க போறவனா? தொடுவியா? தீண்ட தகாத வார்த்தைகளாக சுபத்ரா முகம் அநியாயத்திற்கு சுருங்கியதுடன், “என்னை தொட கூடாது” என்றும் கோபத்துடன் சொன்னார்.