வசுந்தரா கண்கள் இப்போது குருமூர்த்தியை தான் சுட்டது.
“அதான் அவரே சொல்லிட்டார் இல்லை. நான் கிளம்பவா மேடம்” என்று கேட்டார் குருமூர்த்தி.
“போய் தொலை” என்று அந்த வழக்கை முடித்துவைத்தார் வசுந்தரா.
பணத்திற்காக அடிதடி செய்கிறார் என்று உறுதியாக தெரிந்தும் தண்டனை கொடுக்க முடியா கடுப்பு வசுந்தராவிடம் தென்பட்டது.
“சார். கையெழுத்து போடணும்” என்று சுபத்ரா ஓடிவர,
“கத்திரிக்கா குதிச்சு வர மாதிரியே இருக்கு” என்றார் குருமூர்த்தி.
“சார்” என்ற சுபத்ராவின் மூக்கு விடைத்தது இப்போதும், இத்தனை வருடங்கள் கழித்தும் குருமூர்த்தியின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது.
“சுபா” என்றவர் மனைவியின் முகத்தை மென்மையாக வருடினார்.
மென்மை! ம்ம். அவரின் விரல்கள் மென்மையை உணர்த்தும் என்பதை உணர்ந்தவர் சுபத்ரா மட்டுமே!
“நீ எங்களோட இப்போ இருந்திருக்கணும் சுபா” என்று முனகினார் மனிதர்.
வலித்த இதயத்தை தடவி கொண்டவரின் கண்கள் மகளை கண்டதும் ஒளிர்ந்தது.
“என் பொண்ணு. என் எஜமானி!”
“காலையில அப்பா வந்து உன்னை பார்ப்பேன்” என்று சபதம் எடுத்து கொண்டார் தந்தை!
“ண்ணா. குணா வீட்டுக்கு போக மாட்டேங்கிறான்” என்று மாசிலாமணி வந்தார்.
பர்ஸை பத்திரமாக வைத்தவர், “என்னவாம் அவனுக்கு?” என்று கேட்டார்.
“அம்மா கூட சண்டையாம். வீட்டுக்கு போக மாட்டானாம். நீங்களே பேசுங்க” என்று குணாவை அழைத்தார் மாசிலாமணி.
“வீட்டுக்கு போக சொல்லாதீங்க. நான் போக மாட்டேன்” என்றான் எடுத்ததும்.
“டேய். எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். இப்போ வீட்டுக்கு கிளம்பு” என்று அதட்டினார் குருமூர்த்தி.
“ஏன் நான் இப்போ இங்க இருக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? என்னை தாங்குறதால உங்க கட்டிடம் ஒன்னும் தேய்ஞ்சிடாது” என்றான் அவன்.
“டேய். அகராதி. கிளம்புடா” என்று மணி கோவப்பட,
“குணா. இப்போ நீ இங்க இருக்க கூடாது. நாளைக்கு வந்து தினமும் கூட இங்கேயே தங்கிக்கோ. இப்போ நீ வீட்டுக்கு போகத்தான் வேணும். கிளம்பு” என்று குருமூர்த்தி முடிவாக சொல்லிவிட்டதுடன், அவனை ஆள் வைத்து வீடு வரைக்கும் விட சொன்னார்.
நேரம் நள்ளிரவுக்கு மேல் ஆக, சிறு அசப்பும் இல்லை. ஆனால் அதில் ஏமாறும் ஆளா குருமூர்த்தி?
மேலும் நேரம் சென்று தான் தேயிலை தோட்டம் அசைந்தது. குருமூர்த்தி அவரின் அறையிலே இருக்க, தோட்டாக்கள் அவரை குறிவைத்தது பாய்ந்து வந்தது.
குருமூர்த்தி தயராகவே இருந்ததால் மனிதர் தப்பித்து கொண்டதுடன், திருப்பி தாக்கவும் பணித்தார்.
குருமூர்த்தி ஆட்கள் அவர்களுக்கு பின்னிருந்து குண்டுகளை பாய்ச்ச, எதிர் தரப்பு ஆட்கள் அதிர்ந்து தான் போனார்கள்.
“நம்மளை கவர் பண்ணிட்டாங்க” அவர்கள் உணர்ந்து சுதாரிக்க கூட நேரம் கிடைக்கவில்லை.
மேலும் சிலர் கட்டிடத்திற்குள் நுழைந்து குருமூர்த்தியை தாக்க, மாசிலாமணியுடன் வேறு சில ஆட்களும் அவர்களை முதல் கதவிலே எதிர்கொண்டனர்.
குருமூர்த்தி நடு ஹாலிலே நின்றிருக்க, ஒருவனாலும் அவர் நெருங்க முடியவில்லை.
எத்தனை ஆட்கள் வந்தாலும் சமாளிக்கும் திறன்படைத்தவர்கள் முன்பு, சஞ்சீவ் ஆட்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்றே சொல்லலாம்!
சண்டையிட்டாலும் குருமூர்த்தியை முடித்து விடலாம் என்று நம்பி கொண்டிருந்தவர்களுக்கு இவரின் பதில் தாக்குதல் மலைப்பையே கொடுத்தது.
“அந்தாளை ஓர் அடியாவது அடிச்சிடணும்” என்று சிலர் வெறிகொண்டு அவரை நோக்கி ஓடிய வேகத்தில், தரையில் தான் கிடந்தனர்.
சண்முகம் வேறு அவரின் ஆட்களுடன் அங்கு வந்துவிட, சஞ்சீவ் ஆட்கள் அதிர்ந்து தான் போனார்கள்.
“துரோகிகளா?” என்று சஞ்சீவ் ஆள் ஒருவன் கத்த,
“நீங்க தான்டா துரோகிங்க. பேசத்தானே வந்தீங்க? அப்புறம் உங்களுக்கு இங்கென்னடா வேலை” என்று சண்முகம் அந்த ஆளை அடி வெளுத்துவிட்டார்.
திடீரென அந்த இடமே விளக்குகளால் வெளிச்சத்தை பாய்ச்ச, சஞ்சீவ் ஆட்கள் இதையெல்லாம் எதிர்பாராமல் தெறித்து ஓட ஆரம்பித்தனர்.
காவலர்கள் வேறு எங்கிருந்தோ முளைத்து அந்த ஆட்களை மடக்கி பிடிக்க, “இவனையும் பிடிங்க” என்று குணா ஒருவனை பிடித்து இழுத்து வந்தான்.
“டேய் நீ எங்கடா இங்க?” என்று மணி அதிர்ந்து அவனை சத்தமிட, குருமூர்த்தி கையோ அவன் கன்னத்தில் பதிந்துவிட்டது.
“அண்ணா. சின்ன பையன்’ண்ணா” என்று மணி சட்டென குணாவை மறைத்து கொண்டார்.
“சார்” என்று காவலர்கள் அழைக்க,
“நாளைக்கு என்னை வந்து பார்க்கிற நீ?” என்று குணாவிடம் கோவமாக சொல்லி சென்றார் குருமூர்த்தி.
“கேஸ் கொடுக்கிறீங்களா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க,
“ஆமா. ஒருத்தனையும் வெளியே விட கூடாது” என்றார் குருமூர்த்தி.
“மூர்த்தி. வேணாம், சொன்னா கேளு” என்று சண்முகம் அவரை தடுக்க முயல, குருமூர்த்தி அவர் பக்கம் கூட திரும்பவில்லை.
மீடியாவிற்கும் இந்த தாக்குதல் பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. மறுநாள் சம்யுக்தா விழித்ததும் இதைத்தான் முதலில் கண்டாள்.
“அப்பா, அப்பா எங்க?” என்று சம்யுக்தா நடுங்கிய குரலில் கேட்க,
“அப்பா நல்லா இருக்கார். இப்போ வந்திடுவார்” என்றார் ஒருவர்.
குருமூர்த்தியை கண்ணால் பார்த்தால் தான் ஆகிற்று என்று சம்யுக்தா காத்திருந்தாள்.
சிவப்பிரகாசம் குடும்பத்திற்கு இந்த தாக்குதல் பற்றி தெரிந்தாலும் அதை தங்கள் வாரிசுடன் இணைக்க முடியவில்லை.
“எங்கோ, ஏதோ ஓர் பிரச்சனை?” என்ற எண்ணம் மட்டும் தான்.
குருமூர்த்தியின் பெயரும் வெளியே வரவில்லை. தேயிலை தோட்டத்தில் தாக்குதல் என்பது வரை தான் செய்தி.
ஊருக்கு இது தெரிந்தால் போதும்! தெரிய வேண்டியவர்களுக்கு விளக்க வேண்டியதில்லையே!
எதிர் ஆட்களுக்கு மட்டும் செய்தி சென்று சேரவில்லை. வசந்தாவிற்கும் தான் செய்தி சென்று சேர்ந்தது
“யாரை கேட்டு நீ மீடியாக்கு நியூஸ் கொடுத்த?” என்று குருமூர்த்தியை போனில் அழைத்து கோவமாக கேட்டார் வசுந்தரா.
“இன்னும் எத்தனை நாளைக்கு இருட்டிலே தேட போறீங்க?” என்று பதிலுக்கு கேட்டார் குருமூர்த்தி.
“நீ அவங்களை மட்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரலை. என் மகனையும் தான் கொண்டு வந்திருக்க?” என்று சர்வாச்சார்யாவின் அன்னை கொதித்தார்.
“இருட்டுலே வாழணும்ன்னு அவருக்கென்ன தலையெழுத்து? சீக்கிரம் அவரை இதுல இருந்து வெளியே கொண்டு வர பாருங்க” என்று குருமூர்த்தி போனை வைத்துவிட்டார்.
“ஆஹ்” வசுந்தரா போனை எடுத்து பார்த்து லிங்கத்தை பார்த்தார்.
“வைச்சுட்டானா? அது, அவன் அப்படித்தானே மேடம்” என்றார் லிங்கம் சமாதானமாக.
“கேஸ் கொடுக்க வேணாம்ன்னு சொல்லுங்க” என்று வசுந்தரா அங்கேயே நிற்க,
மாசிலாமணிக்கு அழைத்து பேசிய லிங்கம், “கேஸ் பைல் பண்ணிட்டாங்க” என்றார்.
“வாபஸ் வாங்க சொல்லுங்க. இப்போவே” என்று வசுந்தரா சொல்ல, மணி கேள்வியாக பக்கத்தில் நின்ற குருமூர்த்தியை பார்த்தார்.
“முடியாது சொல்லு” என்றார் குருமூர்த்தி.
“அண்ணா வாங்க மாட்டாராம்” என்று மாசிலாமணி சொல்லி வைத்துவிட்டார்.
“எனக்கு வர கோவத்துக்கு நானே இந்தாளை சுட்டு தள்ள போறேன்” என்று வசுந்தரா கோவத்தில் சிவந்து போனார்.
“மாசக்கணக்கா ஆடுபுலி ஆட்டம் ஆடுறாங்க! வேலையில்லாதவங்க. நீ கேஸை ஸ்ட்ராங்கா போடு மணி” என்றார் குருமூர்த்தி.
சண்முகமும் “கேஸ் கொடுக்க வேண்டாம் அவங்களை தூண்டிவிடுற மாதிரி ஆகிடும் மூர்த்தி. யோசி” என்று மன்றாடி பார்த்துவிட்டார்.
“தூண்டித்தான் விடுறோம். நீ உன் வேலையை பாரு” என்று மாசிலாமணி முகத்தில் அடித்தது போல் பேசினார்.