Advertisement

இளமுகில், பரத் கூறியது போல் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் படுத்தாலும் அவனுக்குத் தூக்கம் வரவே இல்லை. மாறாகப் பல எண்ணங்கள் அவனை வாய்பித்தது. என்ன தான் தைரியமாக அவன் முடிவு எடுத்து விட்டாலும் ஏனோ மனம் நெருடிக் கொண்டே இருந்தது.

அவன் அதையே நினைத்துக் கொண்டே இருக்க, நேரம் போனதே தெரியவில்லை. சரியாக இரண்டு மணி நேரம் கழித்து கதவுத் தட்டப்படும் ஓசையில் தான் நினைவுலகத்திற்கு வந்தான் இளமுகில். வேகமாக எழுந்து போய் கதவைத் திறக்க பரத் தான் நின்றிருந்தான்.

“இளா நல்லா தூங்குனியா?”

“இல்லை பரத். தூக்கம் வரலை அதனால சும்மா தான் படுத்திருந்தேன்.”

“அப்படியா, சரி அம்மா டிஃபன் ரெடினு சொன்னாங்க. வா சாப்பிட போகலாம். தூக்கம் வந்தா அப்புறம் தூங்கிக்கோ.”

“ஒரு ஃபை மினிட்ஸ் டா நான் குளிச்சுட்டு வந்துடுறேன்.” என்று கூறி பரத்தை பதிலளிக்க விடாமல் வேகமாகக் குளியலறை நோக்கிப் போனான்.

பத்து நிமிடத்தில் தயாராகி வர, பரத்துடன் கீழே சென்றான் இளமுகில். பரத்தின் அப்பா கல்லூரி கிளம்பத் தயாராகி உட்கார்ந்திருக்க, அவனது அம்மாவும் தங்கையும் சமையலறையிலிருந்து உணவுகளைச் சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் வருவதைப் பார்த்த பரத்தின் அப்பா,”வாங்க வாங்க, எப்படி இருக்க இளமுகில்?”

“நல்லா இருக்கேன் அப்பா நீங்க எப்படி இருக்கீங்க?”

“நானும் நல்லா இருக்கேன் பா. டிஃபன் ரெடியா இருக்கு வாங்க சாப்பிடலாம்.” என்று கூறி அவர் முன்னே நடக்க, அவர்கள் இருவரும் பின்னே சென்றனர்.

சாப்பிட்டு முடித்தவுடன் பரத்திடம் இளா மெதுவாக,”பரத் வீடு பார்க்கச் சொல்லிருந்தேனே? என்னாச்சு? வீடு ரெடியா? எப்ப போகலாம்?” என்று மெதுவாக அவன் காதில் கேட்க,

“அதை ஏன் டா இவ்ளோ மெதுவா கேட்கிற?” என்று அவனிடம் கேட்டுவிட்டு தன் அப்பாவிடம்,”
அப்பா வீடு சொல்லிருந்தேன்ல அதைத் தான் கேட்கிறான். ரெடியா இருக்கா?” என்று கேட்க,

“ம் ரெடியா இருக்கு பரத். நீங்க எப்போ போகனும்னு சொல்லுங்க நான் ஆள் வரச் சொல்றேன்.”

“எப்போ போகலாம் இளா?”

“அகாடமிக்கு எத்தனை மணிக்குப் போகனும் பரத்?”

“அண்ணா அகாடமிக்கு நீங்க பதினோர் மணி போல வாங்க.” என்று ஓவியா கூற,

“அப்போ நாம இப்போ போய் பார்த்துட்டு வந்துரலாமா?” இளா பரத்திடம் கேட்க,

“சரி போயிட்டு வந்துரலாம். அப்பா ஆள் வரச் சொல்லுங்க.” என்று பரத் கூற, அவனது அப்பா கைப்பேசியை எடுத்து வீட்டைக் காமிக்க ஆள் வரச் சொன்னார்.

பரத்தின் அப்பா, அம்மா மற்றும் தங்கை ஓவியா மூவரும் வேலைக்குக் கிளம்பிச் செல்ல, பரத்தின் அப்பா கூறிய ஆள் வர, மூவரும் வீடு பார்க்கக் கிளம்பினர்.

பரத் வீடு இருக்கும் தெருவிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கும் தெருவில் தான் இளாவிற்கு அவர்கள் பார்த்த வீடு இருந்தது. வீட்டின் உரிமையாளர் வயசானவர். அவரும் அவரது மனைவி மட்டுமே கீழே இருக்கும் வீட்டிலிருந்தனர். அவர்களுக்கு ஒரே மகள் தான். அந்த மகளுக்கும் திருமணம் முடிந்து மும்பையில் இருக்கிறார். அவர்களது வீட்டின் மேல் போர்ஷன் காலியாகத் தான் இருந்தது. அதைத் தான் இளாவிற்கு பார்த்து இருந்தனர்.

இளா, பரத் மற்றும் அவனது தந்தை கூறிய ஆள்ளும் வர, அந்த வீட்டின் உரிமையாளர் அவர்களை அழைத்துச் சென்று மாடியில் இருக்கும் வீட்டைக் காமித்தார்.

இரண்டு அறை, ஒரு சமையலறை, சிறியதாக இருந்த ஹால், மேல்மாடம் என்று அந்த வீடு நன்றாகவே இருந்தது. இளாவிற்கு அந்த வீடே பெரிது தான்.

“என்ன பா வீடு பிடிச்சுருக்கா?” அந்த வீட்டின் உரிமையாளர் கேட்க,

“நல்லா இருக்குங்க ஐயா. அப்புறம் வாடகை எவ்ளோனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்.” என்று இளா கூற,

“இங்கப் பாருங்க தம்பி நான் பேச்சுலருக்கு வீடு கொடுக்க வேண்டாம்னு தான் இருந்தேன். ஆனால் ப்ரொஃபஸர்(பரத்தின் தந்தை) சொன்னதால தான் உங்களுக்குக் கொடுக்க சம்மதிச்சேன். ஆனால் வாடகைப் பணத்துல எந்தவித சலுகையும் பண்ண முடியாது தம்பி. மாசம் ஐந்தாயிரம், அட்வான்ஸா பத்து மாசம் வாடகையை கொடுத்துருங்க.” என்று அவர் கூற, இளா யோசித்தான்.

பரத் அவனைத் தனியாக அழைத்துச் சென்று,”என்ன யோசனை இளா? வாடகை ஜாஸ்தியா இருக்குனு யோசிக்கிறியா?”

“இல்ல பரத் அந்த யோசனை எல்லாம் இல்லை. பத்து மாசம் வாடகையை அட்வான்ஸா கேட்கிறாங்க. அதான் யோசிக்கிறேன்.”

“இதுல யோசிக்க என்ன இருக்கு இளா? எல்லாரும் கேட்கிறது தான!!”

“ப்ச் நான் அவங்க கேட்டது தப்புனு சொல்லலை பரத். ஆனால் நான் பத்து மாசம் இங்க இருப்பேனானே தெரியாது. இதுல அவங்க பத்து மாசம் வாடகை கேட்கிறாங்க. அதான் யோசிக்கிறேன்.”

“எதாவது சொல்லிட போறேன் இளா. பிற்காலத்தைப் பத்தி இப்போ எதுவும் யோசிக்காத. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு மட்டும் யோசி டா. வேற எதுவும் பேசாத நீ வா அவர் அங்க நமக்காகக் காத்துட்டு இருக்கார்.” என்று கையோடு அழைத்துச் சென்றான் பரத்.

“ஐயா நீங்க சொன்னது எல்லாம் எங்களுக்கு ஓகே. இன்னைக்கே வாடகைப் பணத்தையும் அட்வான்ஸையும் தந்துடுறோம்.” என்று பரத் கூற, வீட்டின் உரிமையாளரும் சரி என்று கூறிவிட்டு அவரது வீட்டிற்கு வந்தார். பரத் இளாவை அழைத்துக் கொண்டு அவனது வீடு வந்தான்.

“இளா உனக்கு ஓகே தான?”

“எனக்குத் தங்க ஒரு வீடு வேணும் பரத். அந்த வீடு எப்படி இருக்குனு ஆராய்ச்சி பண்ணலாம் எனக்கு அவசியம் இல்லை பரத்.”

“இப்படி விட்டேற்றியாகப் பேசுறதை முதல்ல நிறுத்து இளா. எனக்கு மனசுல படுது இனிமே உனக்கு நடக்கிறது எல்லாம் நல்லதாவே நடக்கும் பார். உன்னோட கஷ்டம் எல்லாம் உன்னை விட்டு போய் நீ ரொம்ப சந்தோஷமா இருக்கத் தான் போறேன். அதை நான் பார்க்கத் தான் போறேன்.” என்று பரத் கூறி, இளா வேதனையாகச் சிரித்தான்.

“இளா ப்ளீஸ் எதுவும் இப்போ யோசிக்காத. நடக்கிறதை விதி கையில ஒப்படைச்சுறு. கடந்த காலத்தைப் பத்தியோ எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்காமல் இப்போ ப்ரெசன்டா எப்படி சந்தோஷமா வாழலாம்னு மட்டும் யோசி. சரி நீ கிளம்பு நாம அகாடமி போகலாம்.” என்று பரத் கூற, இளா பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதியாகத் தயாராகினான்.

~~~~~~~~~~

ப்ரனவிகா என்றும் இல்லாத மகிழ்ச்சியுடன் அகாடமி வந்தாள். அவளது மகிழ்ச்சிக்கான காரணம் அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அந்த உணர்வு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவளது அறைக்குள் நுழைய ரேஷ்மி அவளின் பின்னேயே வந்தாள்.

“சொல்லுங்க ரேஷ்மி.”

“மேம் இன்னைக்கு இரண்டு கேன்டேடிட் இண்டர்வியூக்கு வரச் சொல்லிருக்கோம் மேம். உங்களுக்கு ரிமைன்ட் பண்ணத் தான் வந்தேன் மேம்.”

“ஓகே ரேஷ்மி. பதினோர் மணிக்குத் தான இண்டர்வியூ?”

“ஆமா மேம்.” என்று ரேஷ்மி கூற, ப்ரனவிகா சரி என்று தலையசைக்க, ரேஷ்மி அங்கிருந்து சென்றாள்.

சரியாக பதினோர் மணிக்கு இளமுகில் பரத்துடன் சேஸ் அகாடமிக்கு வந்தான்.

“இளா நான் சொன்னது ஞாபகம் டா. எதையும் யோசிக்காத. நான் சொல்றது இண்டர்வியூ பத்தி இல்லை. அதுல நீ நல்லாவே பெர்ஃபார்ம் பண்ணுவனு எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் லைஃப் பத்தி ரொம்ப யோசிக்காத. இண்டர்வியூ முடிஞ்சதும் சொல்லு நான் வந்து கூப்பிட்டுக்கிறேன். ஆல் த பெஸ்ட் இளா.” என்று பரத் கூற, இளமுகில்கு பரத்தை நினைத்து சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒரு நண்பன் கிடைக்க அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு பரத்திடம் விடைபெற்று உள்ளே சென்றான்.

அகாடமி உள்ளே வந்த இளமுகில் வரவேற்பு அறைக்குச் சென்று அவனது விவரத்தையும் அவன் வந்த விவரத்தையும் கூற, அங்கு இருந்த பெண் அவனை வெயிட்டிங் அறையில் அமரச் சொல்லிவிட்டு ரேஷ்மியை தொடர்பு கொண்டு அவன் வந்ததைக் கூற, ரேஷ்மி அவனை மேலே அனுப்பச் சொன்னாள். அந்தப் பெண்ணும் ரேஷ்மி கூறியதைப் போல் இளமுகிலனை மேலே அனுப்பி வைத்தாள்.

இளமுகில் மேலே வந்ததும் அவனை எதிர்கொண்ட ரேஷ்மி தன்னை அவனிடம் அறிமுகப்படுத்தி விட்டு அவனை அழைத்துக் கொண்டு மீட்டிங் அறைக்குச் சென்றாள்.

“இங்க உட்காருங்க. நான் போய் மேம்கிட்ட சொல்லிட்டு வரேன்.” என்று அவள் கூறிவிட்டுச் செல்ல, இளமுகில் தலையசைத்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

ரேஷ்மி, ப்ரனவிகாவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள். ப்ரனவிகா அவளின் மடிக் கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

“மேம் இண்டர்வியூக்கு ஆள் வந்துட்டாங்க.” என்று ரேஷ்மி கூற, அவள் தலையை நிமிர்த்தி,

“இரண்டு பேரும் வந்துட்டாங்களா?”

“நோ மேம் ஒருத்தர் தான் வந்துருக்காங்க. இன்னொருத்தர் வரலை மேம்.”

“அவங்க வர லேட்டாகுமா இல்லை வரவே மாட்டாங்களா?”

“மேம் அவர் வர மாட்டார். நேத்து கால் பண்ணி இன்னைக்கு வரச் சொன்னதுக்கு கொஞ்சம் அதிகமா பேசிருக்கார் மேம். அதனால நான் அவரை வர வேண்டாம்னு சொல்லிட்டேன் மேம்.”

“இதை ஏன் நீங்க காலைலயே சொல்லலை? என்ன பேசுனார்?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்க,

“மேம் காலைலயே உங்களை டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான் சொல்லலை மேம். சாரி மேம்.”

“ப்ச் முதல்ல அவர் என்ன சொன்னார்?”

“நமக்கு டிஸிப்ளின் இல்லை. சொன்ன சொல்லை காப்பாத்த முடியாத இடதுக்கு நான் வேலைக்கு வர மாட்டேன்னு சொல்லிருக்கார் மேம்.”

“ரொம்ப சந்தோஷம். இப்படி ஒரு டெம்பரோட அவர் ஒன்னும் வரத் தேவையில்லை. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வந்திருக்கிற கேன்டேட்ட வரச் சொல்லுங்க.” என்று ப்ரனவிகா கூற, ரேஷ்மியும் தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றாள்.

பத்து நிமிடம் கழித்து இளமுகில், ப்ரனவிகாவின் அறைக் கதவைத் தட்ட, அவள் உள்ளே வரச் சொல்லவும் ஒரு விநாடி தன்னை நிதானப் படுத்தி விட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

ப்ரனவிகா ஏதோ கீழே விழுந்து விட்டது என குனிந்து அதை எடுத்து விட்டு நிமிர இளமுகில் அவள் முன்னால் நின்றிருந்தான். ப்ரனவிகாவிற்கு அவள் கண்களையே நம்ப முடியவில்லை. சத்தியமாக அவள் இளமுகில்லை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் தன்னுடைய அகாடமிக்கு அவன் வந்து இப்படித் தன் முன் நிற்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை ப்ரனவிகா. ஏதோ பிரமை போல் இருந்தது. அவள் எதுவும் பேசாமல் அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் போன்று இளமுகில், ப்ரனவிகா அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைப் பார்த்துப் பயந்து விட்டான்.

இளமுகில் வந்த வழியே திரும்பப் போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சரியாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ரேஷ்மி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி இருப்பதைப் பார்த்த ரேஷ்மிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் இளமுகிலனிடம்,”உட்காருங்க சார்.” என்று கூறவும் தான் இருவரும் சுயம் உணர்ந்தனர்.

இளமுகிலிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அமைதியாகப் பயத்தை முகத்தில் காட்டாமல் அமர்ந்தான். ப்ரனவிகா மற்ற இருவருக்கும் தெரியாமல் ஒரு முறை தன் கையைக் கிள்ளிக் கொள்ள, இது கனவு இல்லை உண்மையிலே இளமுகிலன் தன் முன்னால் தான் இருக்கிறான் என்று அவளது கையின் வலி அவளுக்கு உணர்த்தியது. அவளது உள்ளம் மகிழ்ச்சியில் கூத்தாடியது.

இளமுகில் அமைதியாக உட்கார்ந்திருந்தாலும் ப்ரனவிகாவின் முகத்தை ஆராயாமல் இல்லை. அவளது உணர்ச்சிகள் எல்லாம் அவளது முகத்தில் அப்பட்டமாகவே தெரிய, இளமுகிலிற்கு சந்தேகம் தோன்றியது. ஏனென்றால் முதலில் அவள் முகத்தில் அவனைப் பார்த்ததும் அதிர்ச்சி தெரிந்தது. பின்னர் அவள் தன் கையைக் கிள்ளிக் கொண்டதையும் அவன் பார்க்கத் தான் செய்தான். அதன் பிறகு அவளது முகம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அவனுக்கு இது வேற ஏதோ விஷயம் என்று தெள்ளத் தெளிவாகத் தோன்றியது.

அடுத்த விநாடியே இளமுகில் எதையும் யோசிக்காமல் ப்ரனவிகாவிடம்,” உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியுமா?” என்று கேட்க,

ப்ரனவிகா முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் அதைச் சட்டென்று மறைத்துக் கொண்டு ரேஷ்மி இருக்கிறாள் என்று எல்லாம் பார்க்காமல்,”ம் தெரியும். பட் உங்களுக்கு என்னை ஞாபகமில்லை போல. இட்ஸ் ஓகே. அதுக்காக எந்தச் சலுகையும் நீங்க எதிர்பார்க்காதீங்க.” என்று கூற, அவனுக்கு அது முகத்தில் அடித்தது போல் இருக்க, அது அவனது முகத்திலும் தெரிய, ப்ரனவிகாவிற்கு ஒரு மாதிரியாகி விட்டது.

“சாரி நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லலை. நான் சொன்னதை நீங்க தப்பான அர்த்தத்துல எடுத்துக்காதீங்க ப்ளீஸ். நான் ஜஸ்ட் லைக் தாட் ஒரு விளையாட்டா தான் சொன்னேன். உங்களை அது ஹர்ட் பண்ணும்னு நான் யோசிக்கலை.” என்று ப்ரனவிகா கூற, ரேஷ்மிக்கு தான் ஆச்சரியமாக இருந்தது ப்ரனவிகா இவ்வாறு பேசுவதைப் பார்த்து.

ரேஷ்மி பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் பர்னவிகா வேறு. அவள் அவர்களிடம் கோபமாகவோ அதிகாரமாகவோ பேச மாட்டாள். அதற்காக அவர்களிடம் அவள் ஒட்டி உறவாடியதும் இல்லை. ஒரு எல்லைக் கோட்டை வகுத்து அது படித் தான் நடப்பாள். ஆனால் இன்று நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவரிடம் அவள் இப்படிப் பேசியது அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்ததில் எந்தத் தவறும் இல்லை. ரேஷ்மிக்கு ஒன்று மட்டும் புரிந்தது ப்ரனவிகாவிற்கு இளமுகில் ஏதோ வகையில் முக்கியமானவன் என்று.

இளமுகிலிற்குமே ஆச்சரியம் தான். அவன் அவளிடம் வேலை கேட்க வந்த சாதாரண ஆள். அவனிடம் அவள் விளக்கம் தர வேண்டியதே இல்லை. விளக்கம் மட்டும் அளிக்காமல் அவனிடம் மன்னிப்பு வேறு கேட்டது அவனுக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.

“இட்ஸ் ஓகே. நீங்க சாரிலாம் கேட்க வேண்டாம். நீங்க என்னைப் பார்த்ததும் ஆச்சரியமா பார்த்தீங்களா அதான் ஒரு வேளை என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமானு கேட்டேன். எனக்கு என்னோட எபிலிட்டி மேல ரொம்பவே நம்பிக்கை இருக்கு. நான் எப்பவும் என்னோட திறமைல தான் முன்னுக்கு வரனும்னு நினைப்பேன். சிபாரிசை எங்கும் எதுக்கும் நான் நாடவே மாட்டேன்.” என்று நீண்டதொரு விளக்கத்தை இளமுகில் தர, ப்ரனவிகாவிற்குத் தான் ஐயோ என்று இருந்தது.

ஏற்கனவே அவனுக்குத் தன்னைத் தெரியவில்லை. இதில் தான் இவ்வாறு வேறு பேசி வைத்தால் அவன் மனதில் தன்னைப் பற்றித் தவறாகப் பதிந்து விடுமோ என்று பயந்தாள்.

“நீங்க இவ்ளோ விளக்கம் சொல்ல வேண்டாம். எனக்கு கில்ட்டியா இருக்கு ப்ளீஸ். நான் சொன்ன அர்த்தமே வேற. என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.” இறைஞ்சுதலுடன் ப்ரனவிகா ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ப்ளீஸ் போட்டு கூற, இளமுகிலனுக்கு சங்கடமாகி விட்டது.

“அச்சோ மேடம் உங்களை கில்ட்டியா ஃபீல் பண்ண வைக்க நான் இதை எல்லாம் சொல்லலை. என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியனும்னு தான் இதைச் சொன்னேன். இதை என்னோட செல்ஃப் இன்ட்ரோவா கூட நீங்க எடுத்துக்கலாம். அப்புறம் கண்டிப்பா நான் உங்களைத் தப்பா எடுத்துக்கவே இல்லை மேடம்.” என்று அவன் விளக்கினாலும் ஏனோ ப்ரனவிகாவிற்கு மனம் சங்கடமாகி விட்டது.

“மேடம் நிஜமாகவே நான் தப்பா எடுத்தக்கலை மேடம். நீங்க சங்கடமா ஃபீல் பண்ண எதுவும் இல்லை மேடம் ப்ளீஸ்.” என்று இளமுகிலன் கூறியதும் தான் ப்ரனவிகா கொஞ்சம் தெளிந்தாள்.

ரேஷ்மிக்கு அங்கு நடந்தது எதுவும் புரியவில்லை. அவளுக்கு எல்லாம் புதிதாக இருந்தது. அங்கு நடந்த நிகழ்வுகள் சாதாரண ஒன்று தான். ஆனால் ப்ரனவிகா இவ்ளோ வருந்தி அவனிடம் மன்னிப்புக் கேட்டது ரேஷ்மியை பலமாக யோசிக்க வைத்தது. பெண்ணின் மனம் பெண்ணிற்குத் தான் புரியும் என்பது போல ரேஷ்மிக்கும் ஏதோ புரிந்தது. மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

Advertisement