Advertisement

சங்கர் திருச்சி மேற்கு தொகுதியைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டாளும் வீட்டில் தன் பெண்ணை அவரது கைக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. எல்லா தகப்பனைப் போல் அவருக்கும் தன்னுடைய பெண் திவ்யா என்றால் உயிர். அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார். அவள் கேட்டு அவரால் முடிந்தும் முடியாத ஒன்று இளமுகில்.

மூன்று வருடங்களாக அவரும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவர் கண்ணில் படாமல் இளமுகில் தான் பரத் வீட்டில் இருக்கிறானே. பின்னே எப்படி அவரால் அவனைக் கண்டுபிடிக்க முடியும்?

தன் மகள் மிகுந்த வருத்தத்துடனும் கோபத்துடனும் பேசிச் சென்ற பிறகு அவரது கோபம் எல்லாம் அவர் இளமுகிலை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்த ஆட்கள் மேல் தாவியது. அவரது கோபம் அவர்களை வேகமாகச் செயல் பட வைத்தது. விளைவு இளமுகில் எங்கு இருக்கிறான் என்று கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள். அதை இன்று காலையில் தான் சங்கர் அவரது அலுவலகத்தில் இருக்கும் பொழுது தெரிவித்தனர். உடனே இதைத் தன் மகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று வேக வேகமாக அவரது வீட்டிற்குள் நுழைந்தார்.

சங்கர் முதலில் பார்த்தது திவ்யாவும் ராகேஷும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைத் தான். வேகமாக அவர்களிடம் சென்றார். அவரைப் பார்த்த ராகேஷ் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் கூற, சங்கர் அவனது தோளில் தட்டி அவனை உட்கார் என்று சைகையில் கூறிவிட்டு திவ்யா பக்கம் அமர்ந்தார்.

“அப்பா இளமுகில் எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சு. ராகேஷ் சொன்ன டிடெகட்டிவ் ஏஜென்சி பாருங்க எவ்ளோ சீக்கிரம் வேலையை முடிச்சுட்டாங்க. முன்னாடியே அவங்ககிட்ட சொல்லிருந்த இந்நேரம் இளமுகில் என் பக்கத்தில் இருந்துருப்பான்.” திவ்யா மிகுந்த சந்தோஷத்துடன் கூற,

“அப்படியா திவிமா! எங்க இருக்கானாம் அவன்? நம்ம ஆளுங்க கூட அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சுட்டதா சொன்னாங்க திவி மா.”

“நெஜமாவா அப்பா. இந்த டிடெக்டிவ் இளமுகில் சென்னைல இருக்கான்னு தான் கண்டுபிடிச்சுருக்காங்க. இன்னும் எக்சாட்டா எங்கனு தெரியலை அப்பா. நம்ம ஆளுங்க அதைக் கண்டுபிடிச்சுட்டாங்களா?”

“நம்ம ஆளுங்களுக்கும் எங்க இருக்கான்னு தெரியலை மா. ஆனால் நெருங்கிட்டாங்க. கண்டிப்பா இன்னும் இரண்டு நாள்ள நமக்கு நல்ல செய்தி வரும் பார்.”

“அப்படி நடந்தா ரொம்ப சந்தோஷம் அப்பா.”

“அது எப்படி ராகேஷ் நாங்களும் மூணு வருஷமா அவனைத் தேடுறோம். எப்படி உங்க அந்த டிடெக்டிவ் ஏஜென்சி மட்டும் இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடிஞ்சது?”

“அங்கிள் நீங்க அனுப்பின ஆட்கள் எல்லாம் எப்படித் தேடுனாங்கனு எனக்குத் தெரியலை. ஆனால் நான் சொன்னவங்க இந்தத் துறையில ரொம்ப வருஷமா இருக்காங்க. அவங்க இது மாதிரி நிறைய கேஸ் பார்த்துருப்பாங்க. அதனால் தான் அவங்க சீக்கிரம் கண்டுபிடிச்சுட்டாங்க. எனக்குமே ஆச்சரியம் தான் அங்கிள் அவங்க இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிப்பாங்கனு.”

“எங்க கண்டுபிடிச்சாங்க? எனக்கு என்னமோ அவன் இன்னும் சென்னைல தான் இருக்கானானு டவுட்டா இருக்கு.” திவ்யா விட்டேற்றியாகக் கூற

“திவி அவன் கண்டிப்பா சென்னைல தான் இருப்பான்.” உறுதியாக ராகேஷ் கூற,

“அது எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற?” என்று சங்கர் அவனிடம் கேட்க,

“அங்கிள் அவனை சென்னைல ஒரு யூகத்துல தான் தேடுனாங்க. ஏனா அவன் சென்னைல தான் வேலைப் பார்த்தான். அவனோட ப்ரண்ட்ஸ் யார் கூடயும் அவன் காண்டாக்ட்ல இல்லை. அவன் வேலை செஞ்ச கம்பெனில கூட யாருக்கும் அவன் எங்க இருக்கான்னு தெரியாதுனு சொல்லிட்டாங்க. தீடிர்னு அவன் வேற எந்த ஊருக்கும் போக சான்ஸ் இல்லை. அவனுக்கு நல்லா தெரிஞ்ச சென்னைல தான் இருப்பான்னு யூகிச்சு மட்டமா இருக்கிற மேன்ஷன் எல்லாத்துலயும் விசாரிச்சுருக்காங்க. ஏனா அவன்கிட்ட காசு இல்லை. அப்போ கண்டிப்பா அங்கத் தான் தங்கியிருப்பான்னு யூகிச்சு விசாரிச்ச அப்போ தான் ஒரு மேன்ஷன் மேனேஜர் அவன் மூணு வருஷத்துக்கு முன்னாடி அங்க இருந்ததாவும் தீடிர்னு ஒரு நாள் அவனை யாரோ நண்பன் அழைச்சுட்டு போனதாவும் சொல்லிருகாங்க. அந்த நண்பனும் சென்னை தான். ஏனா இளமுகில் அவன் கூட வெளி இடங்கள்ல பேசுனதை அங்கத் தங்கியிருக்கறவங்க பார்த்துருக்காங்க. ஸோ அவன் சென்னை விட்டுப் போகலை. அந்த நண்பனோட வீட்டுல தான் இருக்கனும். அந்த நண்பனைத் தான் தேடிட்டு இருக்காங்க. அவன் கிடைச்சுட்டா இளமுகில் இருக்கிற இடம் கண்டிப்பா தெரிஞ்சுடும்.”

“ஊஃப் இவ்ளோ ப்ராசஸ் இருக்கா? போ ராகேஷ் நான் கூட ஒரு நிமிஷத்துல ரொம்ப சந்தோஷப் பட்டுட்டேன். முகம் தெரிஞ்ச இளமுகிலையே கண்டுபிடிக்க முடியலை! இதுல முகம் தெரியாத அந்த ஃப்ரண்டை எப்படிக் கண்டுபிடிப்பாங்க?”

“திவி மா நீ கவலைப்படாத. இளமுகிலை உன்கிட்டக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு. இந்த முறை நீ அப்பாவைத் தாராளமா நம்பலாம்.” என்று தீர்மானமாகக் கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்று விட்டார் சங்கர். ராகேஷும் சிறிது நேரம் திவ்யாவிடம் பேசிவிட்டுச் சென்றான்.

~~~~~~~~~~

ஹரிகா க்ரான்ட் பேலஸ்,

அஸ்வத் அவனது அறையில் அமர்ந்து அவனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனது காரியதரிசி கதவைத் திறந்து உள்ளே வந்து,”சார் உங்களைப் பார்க்க மிஸ்டர்.ஆகாஷ் வந்துருக்கார்.” என்று அந்தப் பெண் கூற,

“வரச் சொல்லுங்க.” என்று சிறு மகிழ்ச்சியுடன் கூற, அவள் வெளியே சென்று அவனை உள்ளே போகச் சொல்ல, அவனும் உள்ளே வந்தான்.

“டேய் ஆகாஷ் உள்ள வரதுக்கு நீ பெர்மிஷன்லாம் கேட்கனுமா என்ன?” என்று தன் ஆருயிர் நண்பனைக் கட்டித் தழுவி வரவேற்றான்.

“நம்ம நண்பர்களா இருக்கலாம் டா. இதுவே வெளி இடங்களிலோ இல்லை உன்னோட வீட்டுலயோ பார்க்க வந்திருந்தா உன்னோட பெர்மிஷன் தேவையில்லை. பட் இது உன்னோட ஒர்க் ப்ளேஸ். அதுக்கு தகுந்த மரியாதையும் உனக்குத் தகுந்த மரியாதையும் நான் கொடுத்துத் தான் ஆகனும். இல்லாட்டி முதலாளியே ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டிங்குறார். நாம எதுக்கு ஃபாலோ பண்ணனும்னு வேலை பார்க்கிறவங்க நினைச்சுருவாங்க.”

“டேய் டேய் சரி டா. வா வந்து முதல்ல உட்கார். எப்போ நீ கேனடால இருந்து வந்த? ஒரு வார்த்தை கூடச் சொல்லலை? என் நிச்சியத்துக்கும் நீ வரலை. அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் வந்தாங்க.”

“நான் உன்னோட நிச்சியத்துக்கு இரண்டு நாள் முன்னாடியே வந்துடனும்னு ப்ளான் பண்ணி டிக்கெட் எல்லாம் போட்டுட்டேன் டா. கடைசியில நான் மீட் பண்ண வேண்டியவன் வரதுக்கு லேட் பண்ணிட்டான். அதனால் வர முடியாம போயிடுச்சு. அதான் அப்பாவும் அம்மாவும் மட்டும் வர வேண்டியதா போயிடுச்சு.”

“ஏதோ காரணம் சொல்ற, நானும் நம்புறேன்.”

“அட அஸ்வத் விடு உன்னோட கல்யாணத்தை ஜமாய்சிடலாம்.”

“பார் வந்தவன்னை நான் பாட்டுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்காம பேசிட்டு இருக்கேன் பார்.” என்று கூறி அவனது காரியதரிசியை அழைத்து இருவருக்கும் ஜூஸும் சாப்பிட சான்க்ஸும் எடுத்து வரச் சொன்னான்.

“நீ போன வேலை முடிஞ்சதா ஆகாஷ்?”

“அதெல்லாம் சிறப்பா முடிஞ்சது டா. உன்னோட நிச்சயமும் நல்லபடியா நடந்தது அப்படின்னு அம்மா சொன்னாங்க. ஒரே ஃபோட்டோஸ்ஸா அனுப்பி தள்ளிட்டாங்க. உங்க ஜோடி பொருத்தும் சூப்பரா இருக்கன்னு அம்மா சொன்னாங்க டா.”

“ஆமா டா ஆண்டி என்கிட்டயே சொன்னாங்க. ஒரே ஷையா போச்சு.” சிறிது வெட்கப்பட்டுக் கொண்டே கூற, ஆகாஷ் அவனை நக்கலடிக்க, காரியதரிசி கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தவள் கொண்டு வந்ததை வைத்து விட்டு வெளியே சென்றாள்.

“அப்புறம் சொல்லு ஆகாஷ் ஏதோ என்கிட்ட சொல்ல வர, ஆனால் சொல்லாம அமைதியாகிடுற. என்ன விஷயம்? என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்”

“சை சை தயக்கமெல்லாம் இல்லை டா. ஆனால் நீ என்னைத் தப்பா எடுத்துக்க கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.”

“உன்னை நான் தப்பா எடுத்துப்பேனா? என்னனு சொல்லுடா.”

“அது வந்து அம்மா உன்னோட நிச்சியத்துக்கு வந்த போது உன் சிஸ்டர் ப்ரனவிகாவை பார்த்துருக்காங்க. அவங்களோட பிக்கை எனக்கும் அனுப்புனாங்க. எனக்கு அவங்களை பிடிச்சுருக்கு. அம்மா அப்பா இரண்டு பேரும் உன் சிஸ்டரை அவங்க வீட்டு மருமகளா கொண்டு வரன்னும் ஆசைப் படுறாங்க. உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன்னு சொன்னாங்க. ஆனால் நான் தான் முதல்ல அஸ்வத்கிட்ட பேசுறேன். அவனுக்கு விருப்பம் இருந்தா அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்னு சொன்னேன் டா. நேத்து தான் வந்தேன். இன்னும் ஜெட்லாக் கூடப் போகலை அதுக்குள்ள என்னை உன்கிட்ட பேசச் சொல்லி அனுப்பிட்டாங்க டா. நண்பனோட தங்கை தன்னோட தங்கையா தான் பார்க்கனும்னு தெரியும். இருந்தாலும் அம்மா முதல்ல பிக் அனுப்பி பொண்ணு பிடிச்சுருக்கான்னு கேட்டாங்க. நானும் பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் அது உன்னோட தங்கைன்னு சொன்னாங்க. எனக்கும் உன் தங்கச்சிய பார்த்து ரொம்ப வருஷமாகிடுச்சு. அதனால முதல்ல சுத்தமா அடையாளமே தெரியலை. என்னைத் தப்பா எடுத்துக்காத டா.” என்று தயக்கத்துடன் ஆகாஷ் முடிக்க,

“டேய் என்ன டா இப்படிச் சொல்லிட்ட, நான் தப்பா எடுத்துக்கிறதுல இதுல ஒன்னுமே இல்லை. நண்பனோட தங்கை தன்னோட தங்கையா பார்க்கனும்னு எந்த அவசியமும் இல்லை டா. உன்னை விட என் தங்கைக்கு பெஸ்ட் சாய்ஸ் வேற யாரும் இல்லை.” என்று உணர்ச்சிகரமாக அஸ்வத் கூற, ஆகாஷிற்கு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

“ஆகாஷ் நீ கவலைப்படாத நான் இன்னைக்கே வீட்டுல பேசிட்டு உன்கிட்ட சொல்றேன் டா.”

“சரி டா. உன் தங்கச்சிகிட்ட பேசிட்டு அப்புறம் எனக்குக் கூப்பிட்டுச் சொல்லு டா.”

“ஹாஹா சரி டா.”என்று அஸ்வத்தும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினான்.

~~~~~~~~~~

பரத்தின் சொந்த ஊர் ஈரோடு. அவன் பிறந்து வளர்ந்து பள்ளிப் படிப்பு எல்லாம் ஈரோட்டில் தான். ஆனால் கல்லூரி படிப்பு மட்டும் அவன் படித்தது தஞ்சாவூரில் புகழ் பெற்ற சாஸ்திரா கல்லூரியில் தான். அங்கு தான் அவன் இளமுகிலையும் சந்தித்தான். அதன் பின் வேலை சென்னையில் கிடைத்து விட, சென்னை வாசி ஆகிவிட்டான் பரத்.

பரத்தின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். அதுவும் அவனது தந்தை பொறியியல் கல்லூரியில் கணிதப் பாடப் பிரிவின் தலைவர்(H.O.D). அவனது அம்மா தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருக்கிறார்.

அவனுக்கு ஒரு தங்கை. அவள் படிப்பை முடித்து ஒரு வருடம் தான் ஆகிறது. தன் அப்பாவைப் போலவே அவளும் கல்லூரியில் கணிதப் பாடப் பிரிவு எடுத்துப் படித்தாள். கூடவே பி.எட்.யும் சேர்த்து முடித்து விட்டாள்.

பரத் தன் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. முதலிலே அவன் ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று தான் வீட்டிற்கு வருவான். ஏனென்றால் அவன் வீட்டிற்கு வந்தாலும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அனைவரும் வேலைக்குச் சென்று விடுவார்கள். இதற்கு எதற்கு வர வேண்டும் என்று வரவே மாட்டான் பரத்.இப்பொழுது இளமுகில் வற்புறுத்திய ஒரே காரணத்தால் யாரிடமும் சொல்லாமல் வந்திருக்கிறான்.

பரத் அவனது வீட்டிற்குச் சென்று அழைப்பு மணி அழுத்த, அவனது தங்கை தான் கதவைத் திறந்தாள். பரத்தை அங்குப் பார்த்ததும் அவளுக்கு சந்தோஷம் ஆச்சரியம்.

“ஹேய் அண்ணா என்ன அதிசயம் வீட்டுக்கு வந்துருக்க?” அவள் அவனை வெளியே நிற்க வைத்தே கேள்வி கேட்க,

“சும்மா வரனும்னு தோனுச்சு அதான் வந்தேன். கொஞ்சம் வழிய விட்டீங்கனா நான் உள்ளே வருவேன்.”

“அய்யோ அண்ணா சந்தோஷத்துல அப்படியே நின்னுட்டேன். உள்ள வா வா. அம்மா அப்பா யார் வந்துருக்காங்கனு பாருங்க.” பரத்திடம் ஆரம்பித்து அவளது அப்பாவிடம் முடித்தாள்.

பரத்தின் அம்மாவும் அப்பாவும் வந்துப் பார்க்க, பரத்தைப் பார்த்து அவர்களுக்குள் ஆச்சரியம் தான்.

“ஹேய் கண்ணா சொல்லவே இல்லை வருவனு?” என்று அவனது அம்மா கேட்க,

“சும்மா உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லவே இல்லை.”

“சரி எத்தனை நாள் லீவ்?” என்று அவனது அப்பா கேட்க,

“ஒரு வாரம் அப்பா.”

“முதல்லயே சொல்லிருந்தா உனக்குப் பிடிச்ச மீன் வாங்கிட்டு வந்திருப்பேன். இன்னைக்கு வீட்டுல உங்க அம்மா சிக்கன் தான் சமைக்கிறா.”

“அதனால என்ன அப்பா. அதான் ஒரு வாரம் இருக்கப் போறேன்ல.”

“அப்பா என்னமோ இவன் ஹோட்டல்ல சாப்பிட்டு நாக்குச் செத்துப் போனது போல பேசுறீங்க? அங்க இளா அண்ணா நல்லா வாய்க்கு ருசியா சமைச்சு போடுறார். ஆளைப் பார்த்தாலே தெரியலையா ஒரு சுத்து பெருத்துப் போய் வந்துருக்கான்.” என்று பரத்தின் தங்கை அவனைக் கேலி செய்ய,

“ஏய் நீ என்கிட்ட அடி தான் வாங்கப் போற!!”

“இப்போ தான் வந்துருக்கான். அவனை எதுக்கு பாப்பா வம்பிழுக்குற? சரி பரத் அந்த தம்பி எப்படி இருக்கான்?.” என்று தன் பெண்ணிடம் ஆரம்பித்து பையனிடம் முடித்தார் பரத்தின் அம்மா.

இளமுகில், பரத் வீட்டிற்கு வந்த புதுசிலே அவனைப் பற்றி பரத் அவனது வீட்டில் கூறிவிட்டான். அவனது பெற்றோர்கள் இருவரும் முதலில் எதற்கு இந்தத் தேவையில்லாத வேலை, ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று பயந்தனர். ஆனால் பரத் தீர்மானமாக இளமுகில் தன்னோடு தான் இருப்பான். நீங்கள் எதுவும் கூற வேண்டாம் என்று கூறியிருக்க, அவர்களுக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் நாளடைவில் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

“அவனுக்கு என்ன அம்மா நல்லா இருக்கான். என்ன அந்தப் பயம் மட்டும் போக மாட்டீங்குது. நானும் எவ்ளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். ஒன்னும் பண்ண முடியலை. இப்போ வரும் போது கூடச் சொல்லிட்டு தான் வந்துருக்கேன். பார்க்கலாம் அவன் என்ன முடிவு எடுக்கிறான்னு.”

“பாவம் அந்தத் தம்பி. இந்த வயசுல நல்லா சந்தோஷமா இருக்கனும். ஆனால்!! யாரைச் சொல்லி என்ன பண்றது?” இளமுகில்காக பரத்தின் அம்மா வருத்தப்பட,

“நீ ஏன் பரத் இளமுகிலை கவுன்சிலிங் கூட்டிட்டு போகக் கூடாது?” அவனது அப்பா கேட்க,

“நான் கேட்டுப் பார்த்துட்டேன் அப்பா. அவன் தயாராகவே இல்லை. ஒரு வாரம் அவனுக்கு டைம் கொடுத்துருக்கேன். நல்ல முடிவா தான் எடுப்பான்னு தோனுது. பார்க்கலாம் அப்பா.”

“பாவம் அந்த அண்ணா. உன்கிட்ட போய் மாட்டிக்கிட்டாங்க. ம் இது தான் கலிகாலம்னு சொல்றது போல!!” சூழ்நிலையை மாற்ற பரத்தின் தங்கை அவனைக் கேலி செய்ய, பரத் அவளை அடிக்க ஓட,

“ப்ச் பாப்பா என்ன பேச்சு இது?” என்று அவனது அம்மா அவன் தங்கையை அதட்ட,

“அய்யோ அம்மா இன்னுமா இவளை நீங்க பாப்பானு கூப்பிடுறீங்க!! இந்நேரம் இவளுக்குக் கல்யாணமாகி இருந்தா இவளே ஒரு பாப்பாவுக்கு அம்மாவாகிருப்பா.”

“ஏய் நிஜமாவே அடிச்சுருவேன் உன்னை. முதல்ல உனக்குத் தான் கல்யாணம் அப்புறம் எனக்குப் பண்ணிக்கலாம்.”

“ஹாஹா எனக்குத் தான பண்ணிட்டா போச்சு.”

“என்னது பண்ணிட்டா போச்சா? ஏதோ சரியில்லையே என்ன தம்பி லவ்ஸா?” என்று பரத்தின் தங்கை கேட்க, அவனது அம்மா கலவர முகத்துடன் பார்த்து

“என்ன பரத் அவள் சொல்றது உண்மையா?” என்று கேட்க,

“அய்யோ அம்மா அவள் ஒரு லூசு அவள் சொல்றதை நம்புறீங்க!! அப்படி எல்லாம் எதுவும் இல்லை அம்மா. என்னை நம்புங்க.”

“சரி சரி இப்போ தான் அவனே வந்துருக்கான். அவனைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க. நீ போய் குளிச்சுட்டு வா பரத் சாப்பிடலாம்.” என்று அவனது அப்பா கூற, நிம்மதியாக அவனது அறைக்குச் சென்றான்.

பரத் தன் அறைக்கு வந்ததும் அவனுக்கு இளமுகில் ஞாபகம் தான் வந்தது. அவனால் அவனைத் தொடர்பு கொண்டு பேசக் கூட முடியாது. ஏனெனில் இளமுகிலிடம் கைப்பேசி எதுவும் இல்லை. அதனால் பரத் இளமுகிலின் மின்னஞ்சலிற்குத் தான் வீட்டிற்கு வந்த விஷயத்தையும் அவனைப் பாதுகாப்பாக இருக்கவும் அதே சமயம் அவன் பயத்தைப் போக்கி நல்ல முடிவையும் எடுக்கச் சொல்லி செய்தி அனுப்பிவிட்டு குளியலறை சென்று விட்டான்.

Advertisement