Advertisement

இளமுகிலன் திருச்சிக்கு வந்து ஒரு மாதங்களாகி விட்டது. திவ்யாவின் மேல் வழக்குக் கொடுத்ததால் அவன் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் வர, அவன் அங்கேயே இருந்து விட்டான்.

திவ்யா கொலை செய்தது நிரூபணமாக அவளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. சங்கர் நில மோசடி, சொத்துக் குவிப்பு, வரி எயிப்பு, அரசாங்க டெண்டர்களில் லஞ்சம் வாங்கியது என அனைத்தும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட, அவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதுடன் அவரது சொத்தையும் முடக்கியது அரசாங்கம். அவரது மனைவி கவிதாவும் வீடு வாசல் எதுவுமில்லாமல் அவரது அண்ணன் வீட்டிலும் சேர்க்காமல் போக, யாருமின்றி நடுத்தெருவில் நின்றார். சங்கரின் விசுவாசிகள் தான் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர்.

இளமுகிலன், அவனது அம்மா மற்றும் அப்பாவிடம் அவன் கடைசியாகப் பேசியது காவல் நிலையத்திற்குச் சென்று வந்த அந்த இரவு நேரத்தில் தான். அதன் பிறகு அவர்கள் இருக்கும் பக்கம் கூட அவன் திரும்பவில்லை. சாப்பாடு கூட அவனே தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டான்.

அவன் காவல் நிலையத்திலிருந்து வந்தவுடன் அவனது அம்மாவும் அப்பாவும் வேகமாக அவனிடம் வந்து,

“இளா என்னாச்சு பா? அந்தப் பொண்ணை அத்து விட்டாச்சுல?” என்று வசந்தி கேட்க, இளமுகிலன் அமைதியாக இருக்க,

“சொல்லு இளா, அம்மா கேட்கிறாங்கள!!” என்று குமார் கேட்க,

“என்ன சொல்ல சொல்றீங்க? உங்களுக்கு எல்லாம் மனசுனு ஒன்னும் இருக்கா? இந்த மூணு வருஷம் எப்படி வாழ்ந்தீங்க நீங்க? திவ்யா தான உங்களுக்கு எல்லாம் செஞ்சா!! ஆனால் நான் அவளை விட வசதியான வீட்டுப் பொண்ணை காட்டியதும் அவளை மறந்துட்டீங்க!! அது மட்டுமில்லாம அவளை விட்டுட்டு வந்துட்டியானு என்கிட்டயே கேட்கிறீங்க!! சை!! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க! இனி உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உங்களை அப்படியே விட்டுடுவேன்னு பயப்பட வேண்டாம். மாசம் மாசம் உங்களுக்குத் தேவையான பணத்தை அனுப்பி வைச்சுடுவேன். அதை வச்சு நீங்க என்ன வேனாலும் பண்ணிக்கோங்க. என்னை எந்த தொந்தரவும் நீங்கப் பண்ணக் கூடாது.” என்று கூறிவிட்டு அவர்கள் பேச வாய்ப்பு அளிக்காமல் அவனது அறைக்குச் சென்று விட்டான். அவர்களும் அவன் மாதாமாதம் பணம் தருகிறேன் என்று சொன்னதுமே அமைதியாகி விட்டனர். அவன் அவர்களுக்கும் அவனுக்கும் எதுவுமில்லை என்று சொன்னது எல்லாம் அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்த வரை பணம் வந்தால் போதும்.

அதே நேரம் அவன் பரத்திடம் கூறி அவனுக்கு வேலை வேண்டுமெனக் கூற, அவனும் அவனது நண்பர்கள் அனைவரிடமும் சொல்லி வைக்க, நான்கைந்து நிறுவனத்திலிருந்து இவனை நேர்காணலுக்கு வரச் சொல்லிக் கூப்பிட அவனும் அதில் கலந்து கொண்டான். நான்கிலுமே அவன் தேர்ச்சி பெற, அதிலுள்ள சாதகப் பாதங்களை அவன் அலசி ஆராய்ந்து ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அதற்கு முன்னர் ப்ரனவிகாவிடம் இதைப் பற்றிப் பேச வேண்டுமென அதிலும் நேரில் சென்று பேசினால் நன்றாக இருக்கும் என்று உடனே ஈரோடு கிளம்பி விட்டான்.

ப்ரனவிகா அன்று எப்போதும் போல காலையில் இளமுகிலனிடம் பேசிவிட்டு அகாடமி கிளம்பிச் செல்ல, அந்த அகாடமி முன்பு வண்டியில் சாய்ந்து கொண்டு இளமுகிலன் நின்றிருக்க, அவனை அங்குப் பார்த்ததும் தலை கால் புரியவில்லை ப்ரனவிகாவிற்கு. வேகமாக இறங்கிய ப்ரனவிகா அவனை நெருங்கி,

“முகிலன் காலைல பேசும் போது எதுவும் சொல்லலையே நீங்க!!!”

“அப்படிச் சொல்லியிருந்தா உன் முகத்துல தெரியுற இந்தச் சந்தோஷத்தை நான் பார்க்காமல் போயிருப்பேன். அதான் சொல்லாம உனக்கு சர்ப்ரைஸ் பண்ண வந்தேன்.” என்று அவன் கூற, அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.

“வெளில போகலாமா?” என்று அவன் கேட்க,

“தாராளமா!!” என்று அவள் கூற, அவள் கையிலிருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டு அவளது கையைப் பற்றி அழைத்துச் சென்று அவளை காரில் உட்கார வைத்து விட்டு இவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை எடுத்தான்.

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக வர, ப்ரனவிகா அவனைப் பார்ப்பதைப் போல் திரும்பி உட்கார்ந்து,”அப்புறம் முகிலன் எப்போ இங்க வரப் போறீங்க? அதான் எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடுச்சுல!!” என்று கேட்க,

இளமுகிலன் கொஞ்ச தூரம் சென்று வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அவனும் அவளைப் பார்த்த மாதிரி திரும்பி அமர்ந்து,”அதைப் பத்தி பேசத் தான் நான் வந்தேன் ப்ரனவிகா. நான் இப்படியே இருக்கிறது நல்லது இல்லையா!! அதான் ஒரு ஜாப் போகலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன் ப்ரனவிகா.” என்று கொஞ்சம் தயங்கிக் கொண்டே அவன் கூற,

“புரியுது முகிலன்.” என்று மட்டும் அவள் கூற,

“ப்ரனவிகா..” என்று அவன் ஏதோ கூற வர, அவன் கையைப் பிடித்து,

“முகிலன் எனக்கு நல்லா புரியுது. நீங்க எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம். ஜாப் பார்த்துட்டீங்களா?”

“ம் நாலு கம்பெனில இண்டர்வியூ அட்டென்ட் பண்ணேன் ப்ரனவிகா. அதுல எல்லாமே செலக்ட் ஆகிட்டேன். அதுல ஒரு கம்பெனியை செலக்ட் பண்ணிருக்கேன். சென்னைல வேலை, சம்பளமும் ஜாஸ்தி.” என்று அவன் கூற,

“ம் போயிட்டு வாங்க முகிலன். அதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட பேசிட்டு போயிடுங்க.” என்று அவள் கூற,

“கண்டிப்பா ப்ரனவிகா. ஒரு இரண்டு வருஷம் ஜாப் பார்த்தா போதும் அதுக்கு அப்புறம் நானே ஒரு ஐ.டி. கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன். அந்த ஐடியாவும் இருக்கு ப்ரனவிகா. ஆனால் டூ யியர்ஸ் உன்னை விட்டு இருக்க முடியாது. அதனால உங்க வீட்டுல பேசி உன்னைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்று அவன் கூற,

“ஹா ஹா ஓகே முகிலன்.” என்ற ப்ரனவிகா பின்னர் பொதுவாகப் பேச ஆரம்பித்து விட்டாள்.

இளமுகிலன் கூறியது போலவே ப்ரனவிகாவுடன் அவளது வீட்டிற்கு வந்தான். அவனைப் பற்றி ராகவனும் நம்பியப்பனும் ஏற்கனவே வீட்டிலிருந்தவர்களிடம் சொல்லியிருந்ததால் அனைவருமே அவனை இன்முகத்துடன் வரவேற்றனர்.

ப்ரனவிகா அனைவரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். ஹரிதா தானாகவே அவனிடம் வந்து,”என்னை ஞாபகமிருக்கா அண்ணா?” என்று அவள் கேட்க,

“ப்ச் அண்ணி உன் அண்ணாவுக்கு என்னையே ஞாபகமில்லை உன்னை ஞாபகமிருக்குமா?” என்று அவள் கேட்க, இளமுகிலன் அசட்டுச் சிரிப்பு ஒன்றைத் தந்தான்.

“ஹா ஹா அதைச் சொல்லு.” என்று அவனை வம்பிழுக்க,

“சாரி!!” என்று முகிலன் கூற,

“அட!! அண்ணா சாரிலாம் எதுக்கு!!” என்று கூறி ஹரிதா பொதுவாக அவனிடம் பேச, ராகவன் அங்கு வந்தார்.

“வாங்க மாப்பிள்ளை, பிரச்சனை எல்லாம் நல்லபடியா முடிஞ்சது சந்தோஷமா இருக்கு.” என்று ராகவன் கூற,

“எல்லாம் உங்கனால தான் அங்கிள். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்.” என்று அவன் கூற,

“நான் இதை என் பொண்ணுக்காக தான் செய்தேன் மாப்பிள்ளை. அவளோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.” என்று அவர் கூற, ப்ரனவிகா சென்று அவரை அணைத்துக் கொண்டாள்.

பின்னர் இளமுகிலன் அவனது வேலையைப் பற்றிக் கூற, அவரும் எதுவும் எதிராகக் கூறவில்லை.

“சர்தோஷம் மாப்பிள்ளை. நாங்க நேத்து தான் ப்ரனவிகா ஜாதகத்தை ஜோசியர்கிட்ட காட்டுனோம். அவர் இப்போதைக்கு ப்ரனுவுக்கு கல்யாணம் பண்ண வேண்டாம். அவளோட இருபத்தி எட்டாவது வயசுல பண்ணுங்க. அப்போ தான் அவளுக்கு வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லிட்டார். அதனால் இன்னும் இரண்டரை வருஷத்துக்கு அப்புறம் தான் இவளுக்குக் கல்யாணம் பண்ணனும்.” என்று ராகவன் கூற, அதிர்ந்து பார்த்தான் இளமுகிலன்.

அவனது அதிர்ச்சியான முகத்தைப் பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே!!

“நாங்க எதுக்கெடுத்தாலும் ஜோசியம் பார்க்க மாட்டோம். ஆனால் கல்யாண விஷயத்துக்கு மட்டும் பார்ப்போம் மாப்பிள்ளை. அஸ்வத் ஹரிதாவுக்கு கூட நாங்க ஜாதகம் பார்த்துத் தான் எல்லாம் முடிவுப் பண்ணோம்.” என்று மரகதம் பாட்டி கூற,

“அச்சோ பாட்டி நீங்க இவ்ளோ விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டாம். எப்படியும் நான் கம்பெனி ஆரம்பிக்க எனக்கு டைம் வேணும். ஸோ எனக்குப் பிரச்சனை இல்லை பாட்டி.” என்று இளமுகிலன் கூற, அனைவருக்கும் நிம்மதி.

பின்னர் மதியம் சாப்பாடு சாப்பிட்டு விட்டு இளமுகிலன் கிளம்பி விட, ப்ரனவிகாவை ஹரிதா கிண்டல் செய்து அவளை ஒரு வழியாக்கி விட்டாள்.

இளமுகிலனும் நல்ல நாளில் நிறுவனத்தில் வேலைக்குச் சேர, நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. மாதத்திற்கு இரு முறை ஈரோடு வந்து விடுவான். காலையிலிருந்து மாலை வரை ப்ரனவிகாவுடன் ஊரைச் சுற்றிவிட்டு மீண்டும் சென்னை கிளம்பி விடுவான். சந்தோஷமாக அவனது வாழ்க்கைச் சென்றது. அதே போல் ஹரிதா மற்றும் அஸ்வத் திருமணத்திற்கு முன்னரே வந்து ராகவனுக்கு உதவியாக இருந்தான். அனைவரிடமும் இளமுகிலனை காட்டி தன்னுடைய மருமகன் என்று பெருமையாகக் கூறினார் ராகவன்.

நாட்கள், மாதங்களாகி, வருடங்களாகி இதோ இளமுகிலன் வேலைக்குச் சென்று இரண்டு வருடங்களாகி விட்டது. அவன் தனியாக நிறுவனம் ஆரம்பிக்க என்ன செய்யனுமோ அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தான். அவன் தனியாக நிறுவனம் ஆரம்பிப்பதைப் பற்றி பரத்திடம் கூற, பரத்தோ தன்னையும் சேர்த்துக் கொள்ளச் சொல்ல, தயங்காமல் சேர்த்துக் கொண்டான்.

ஈரோட்டிலே ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தனர். பரத்திற்கும் அது தான் சொந்த ஊர். இளமுகிலன் அறிந்த வரை ப்ரனவிகா அவளது வீட்டை விட்டு இருப்பது கடினம் என்று புரிந்தே இந்த முடிவை எடுத்திருந்தான். அதைக் கேட்டதும் ப்ரனவிகா அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எங்கு அவன் சென்னையில் தொடங்கி விடுவானோ என்று அவள் கவலைப்படாத நாளில்லை. இப்போது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் ஈரோட்டில் நிலத்திற்குத் தேடி அலையாமலே அவனுக்கு ராகவன் தந்துவிட்டார். முதலில் அதை வாங்க இளமுகிலன் மறுக்க, அந்த நிலம் ப்ரனவிகாவின் பெயரில் தான் இருக்கிறது. அது உங்களுக்கும் சொந்தம் என்று கூறி அவனைச் சமாதானப்படுத்தி விட்டார். இளமுகிலனும் ப்ரனவிகாவிற்காக ஒத்துக் கொண்டான்.

அந்த நிலத்தில் ஏற்கனவே வேறு கட்டிடம் இருக்க, அதை இடித்து இவனுக்குத் தேவையான மாதிரி கட்டிடம் கட்ட, கிட்டத் தட்ட ஒரு வருடமாகியது. நிறுவனம் தொடங்கியதும் தான் திருமணம் என்று இருவரும் உறுதியாக இருக்க, பெரியவர்களும் இவர்களைக் கட்டாயப்படுத்த வில்லை.

நிறுவனம் தொடங்கிய ஒரு மாதத்திலே ஒரு சுபயோக சுபதினத்தில் ப்ரனவிகாவின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தன் சரிபாதியாகிக் கொண்டான் இளமுகிலன். அவனது கல்யாணத்திற்குச் சபை மரியாதைக்காக அவனது பெற்றோரை அவன் வர வைத்தான். ஆனால் தேவைக்கு அதிகமாக அவன் எதுவும் பேசவில்லை. அவர்களும் அவன் பேசாததை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. இருவரும் ஜோடிப் போட்டுக் கொண்டு இளமுகிலன் தரும் பணத்தில் நன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

~~~~~~~~~~

ஐந்து வருடங்களுக்குப் பிறகு,

இளமுகிலனின் நிறுவனம் நன்றாகச் செயல்படத் தொடங்க, அவனது தொழில் ஏறுமுகமாகத் தான் சென்றது. அவனது வாழ்க்கையில் பர்னவிகா வந்தவுடன் அனைத்துமே நன்றாகவே நடக்க, அவளை அவனது அதிர்ஷ்ட தேவதையாகவே கருத ஆரம்பித்து விட்டான்.

ப்ரனவிகாவும் அவளது அகாடமியை இப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அடுத்த மாநிலமான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என்று அவளது அகாடமி கிளைகளை இந்த மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் தொடங்கி அது வெற்றிகரமாகவும் நடந்து கொண்டிருந்தது.

ப்ரனவிகா அவளது அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது பக்கத்திலே குட்டிக் குழந்தை ஒன்று அழகாக உறங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தை கீழே விழாமலிருக்க அணைவாக அவள் கை போட்டிருந்தாலும் அந்தக் குழந்தைக்கு அந்தப் பக்கத்தில் தலைகாணி இருந்தது.

அப்போது சத்தம் வராமல் மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் இளமுகிலன். தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனைவியையும் குழந்தையும் ஒரு நொடி ரசித்துப் பார்த்தவன் மெதுவாக அவர்கள் அருகில் சென்று ப்ரனவிகாவின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு அவளை எழுப்பி விட்டான். அவள் எழும்பாமல் திரும்பிப் படுக்க, அந்தப் பக்கம் வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு தொட்டிலில் படுக்க வைத்தவன் மீண்டும் வந்து ப்ரனவிகாவை எழுப்ப,

“குட்டிமா எழுந்திருங்க, நேரமாச்சு. நமக்காக எல்லாரும் காத்திருப்பாங்க டா. இப்போ எழுந்து தயாரானா தான் நாம அங்கப் போகச் சரியா இருக்கும். எழுந்திரி.” என்று அவளை எழுப்ப, அலுத்துக் கொண்டே எழுந்தாள் ப்ரனவிகா.

“போங்க முகில் நைட்டெல்லாம் தூக்கமே இல்லை. நீங்களும் பார்த்துட்டு தான இருந்தீங்க!! இவள் என்னைத் தூங்கவே விடலை.”

“எனக்கும் தெரியும் அதனால் தான் புஜ்ஜிய நான் நேத்தே ஹரிதாகிட்ட விட்டுட்டு வந்தேன். இன்னைக்கு நம்ம ஆதினியோட பெர்த்டே குட்டி மா. அவளோட அத்தையா நீ அங்க இருக்க வேண்டாமா? கிளம்பு டா. மதியம் வந்து தூங்கலாம் சரியா.” என்று அவன் கூற,

“ம் சரி சரி.” என்று அலுத்துக் கொண்டே அவள் எழுந்து கிளம்ப, இளமுகிலனும் அவள் வருவதற்கு முன் கிளம்பித் தயாராகி இருந்தான்.

ப்ரனவிகா வரவும் அவளிடம் சென்று,”அப்போ பார்த்த மாதிரியே இருக்க குட்டிமா. இரண்டு குழந்தைங்க பிறந்துட்டாங்க நமக்கு. ஆனால் இன்னும் இப்படி யங்கா இருக்கியே!!” என்று அவளது இடுப்பில் ஒரு கை வைத்து, மற்றொரு கையால் அவளது கண்ணத்தைத் தடவியபடியே அவன் கூற,

“நீங்க மட்டும் என்னவா? வயசு ஏற ஏற நீங்க ரொம்ப ஹான்ட்சமா மாறிட்டு வரீங்க முகில். அதுவும் உங்க ஆஃபிஸ்ல வொர்க் பண்ற ராஷி அப்படி சைட் அடிக்கிறா உங்களை. ஏதோ அவ வொர்க் நல்லா பண்றதால தான் விட்டு வைச்சுருக்கேன். இல்லாட்டி எப்போவோ வேலையை விட்டு தூக்கிருப்பேன்.” என்று அவள் பொறாமை பொங்கக் கூற, இளமுகிலன் சரித்துக் கொண்டே,

“அழகுச் செல்லம் டா நீ.” என்று கூறி அவளது உதட்டில் முத்தம் வைக்க, சரியாக அவர்களது சீமந்த புத்திரி தீஷிதா அழுக ஆரம்பிக்க,

“நீ தலை சீவி ரெடியாகு, நான் பார்க்கிறேன்.” என்று கூறி இளமுகிலன் அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றான்.

ப்ரனவிகா வர, இருவரும் கிளம்பி ராகவன் வீட்டிற்குச் சென்றனர். ஹரிதா மற்றும் அஸ்வத்தின் முதல் குழந்தை ஆதினியின் ஆறாவது பிறந்த நாள் விழா இன்று. அதைக் கொண்டாடவே அவர்கள் அங்குச் செல்கின்றனர்.

இவர்கள் இருவரையும் பார்த்ததும் ப்ரனவிகா மற்றும் இளமுகிலனின் மூன்றரை வயது சீமந்த புத்திரன் பிரதீக் ஓடி வந்து ப்ரனவிகா மற்றும் இளமுகிலனின் கால்களைக் கட்டிக் கொள்ள, ஹரிதா மற்றும் அஸ்வத்தின் பிள்ளைகள் ஆறு வயது ஆதினியும் நான்கு வயது ஆரியனும் வந்து அவர்களது அத்தை மற்றும் மாமாவைக் கட்டிக் கொள்ள, ப்ரனவிகா ஆதினியை தூக்கி,

“ஹாப்பி பெர்த்டே தங்கமே. உன்னை முதல்ல நான் தான் தூக்கினேன். உன் அப்பா கூடப் பயந்துட்டு தூக்கவே இல்லை. அதெல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்கு. ஆனால் பார் இப்போ உனக்கு ஆறு வயசாகிடுச்சு. என்னோட தங்கக் குட்டிக்கு இந்த அத்தையோட சின்ன கிஃப்ட்.” என்று கூறி இளமுகிலனை அவள் பார்க்க, அவன் பரிசைக் கொடுக்க, அதை அவள் ஆதினி கையில் கொடுத்து அவள் கண்ணத்தில் முத்தம் வைக்க,

“ஐ தாங்க் யூ அத்தை.” என்று கூறி ஆதினியும் அவளது அத்தையைப் போலவே ப்ரனவிகாவின் கண்ணத்தில் முத்தம் கொடுத்து விட்டு அந்தப் பரிசைப் பிரித்துப் பார்க்க, பார்பி டால் போட்டிருக்கும் உடை போல் அவளுக்குத் தகுந்த மாதிரி அழகாக உடை இருக்க, அது ஆதினிக்கு மிகவும் பிடித்துப் போக தன் அத்தையை மீண்டும் ஒரு முறை கட்டிக் கொண்டு முத்தம் வைத்தவள்,”இதைத் தான் நான் சாயங்காலம் பார்ட்டிக்கு போடுவேன்.” என்று அப்போதே கண்டிஷனாக கூறிவிட்டாள்.

“அத்தை அக்காவுக்கு மட்டும் தானா? போங்க டூ உங்க கூட” என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆரியன் கூற,

“ஆரியன் இன்னைக்கு அக்காவுக்கு தான பெர்த்டே, உன் பெர்த்டேவுக்கு உன் அத்தை உனக்கு கிஃப்ட் தருவா.” என்று ஹரிதா கூற,

“ப்ச் உங்க அம்மா கிடக்கிறா, ஆரியன் குட்டிக்கும் அத்தை கிஃப்ட் வாங்காமல் வருவேனா.” என்று மீண்டும் அவள் இளமுகிலனை பார்க்க,

“ஆரியன் நீ அத்தைக்கிட்ட கேட்கக் கூடாது, பார் உன் அத்தைக்கிட்ட எதுவுமில்லை. உன்னோட மாமாகிட்ட தான் கேட்கனும்.” என்று ஹரிதா ப்ரனவிகாவை கேலி செய்ய, அவள் விளையாட்டாக ஹரிதாவை முறைத்துப் பார்க்க,

“நான் சொல்றது உண்மை தான!! அப்புறம் எதுக்கு இந்த முறைப்பு ஹான்?” என்று ஹரிதா கேட்க,

“ஹாஹா உன் அம்மா சொல்றது உண்மை தான் ஆரியன். உனக்கு கிஃப்ட் வெளில இருக்கு வா.” என்று அவனை வெளியே அழைத்துச் சென்றான் முகிலன். அனைவரும் என்ன கிஃப்ட் என்று பார்க்க அவர்களும் வெளியே சென்றனர்.

அங்கு அழகிய வேலைப்பாடுகள் செய்த குட்டி சைக்கிள் ஒன்றுக்கு இரண்டாக இருக்க, ஆரியன் மிகுந்த சந்தோஷத்தோடு அதை ஓட்டிப் பார்த்தான். அந்த சைக்கிள்ளில் இரண்டு சைடிலும் சப்போர்ட்டிற்கு எக்ஸ்டரா வீல் இருக்க, பெரியவர்களும் கவலையில்லாமல் பார்த்தனர்.

ஆரியனுக்கு மட்டும் வாங்கினால் ஆதினி கஷ்டப்படுவாள் என்று அவளுக்கும் சேர்த்தே வாங்கினர். அதற்கும் ஆரியன்,”அக்காவுக்கு மட்டும் டூ கிஃப்ட் எனக்கு மட்டும் ஒன் தானா?” என்று அவன் கேட்க,

“இன்னைக்கு அக்காவுக்கு பெர்த்டே ஸோ டூ கிஃப்ட். ஆரியன் பெர்த்டேவுக்கும் மாமா டூ கிஃப்ட் தரேன். டீல் ஓகேவா?” என்று அவன் கேட்க,

“ஐ சூப்பர்.” என்று கூறி அவனது பாட்டி, தாத்தா, பெரிய பாட்டி, பெரிய தாத்தா என அனைவருக்கும் சைக்கிள்ளை ஆரவத்துடன் ஓட்டிக் காட்டினான் ஆரியன்.

இதை எல்லாம் பெரியவர்கள் சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இளமுகிலன் எப்படி இந்தக் குடும்பத்துடன் ஒத்துப் போவான் என்று முதலில் சந்தேகம் கொண்டது என்னவோ உண்மை தான். ஆனால் இப்போது ப்ரனவிகா அவர்கள் வீட்டிற்கு வருகிறாளோ இல்லையோ இளமுகிலன் அடிக்கடி வந்து விடுவான். பல சமயம் ப்ரனவிகாவுடன் வருவான். சில சமயம் அவன் மட்டும் அவர்களைப் பார்க்க வருவான். அந்த அளவுக்கு அவர்களை அவனுக்குப் பிடித்து விட்டது. அவனையும் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதுவும் அவன் இது வரை ப்ரனவிகாவை எந்த வேலையையும் செய்ய விட்டது இல்லை. சமையல் வேலை கூட முதலிலிருந்தே அவன் தான் சமைப்பான். ப்ரனவிகா செய்கிறேன் என்று கூறினாள் கூட அவன் விட மாட்டான். அவனே செய்து விடுவான். ப்ரனவிகாவை அவன் தாங்கு தாங்கென் தாங்குவதைப் பார்த்து பெரியவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இளமுகிலன் அவனது வாழ்க்கையில் தப்பான முடிவை எடுத்து படாதபாடு பட்டு இனி வாழ்க்கையே இல்லை என்று நொந்த நிலையில் ப்ரனவிகா அவனது இருண்ட வாழ்க்கையில் ஒளியாக வந்து அவனைப் பிரகாசமாக எறிய வைத்தாள்.

பெண் என்ற ஒரே காரணத்திற்காகத் திவ்யா கூறிய பொய்யை அனைவரும் நம்பினர். இளமுகிலன் ஆண் என்ற ஒரே காரணத்திற்காக அவனது வாதங்கள் எதுவும் எடுபடவில்லை. திவ்யா போன்ற நிறையப் பெண்கள் அவர்களுக்குக் கொடுத்த சலுகையைத் தப்பாகப் பயன்படுத்தி இளமுகிலன் போன்ற ஆண்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். இளமுகிலன் வாழ்க்கையில் ப்ரனவிகா வந்தாள், அவனது வாழ்க்கைப் பிரகாசமாக மாறியது. ஆனால் இதே போல் அனைவருக்கும் நடக்குமா என்பது கேள்விக் குறி தான். ஒருவரைக் கட்டாயப்படுத்தி ஒரு செயலை செய்ய வைக்கலாம். ஆனால் கட்டாயப்படுத்தி ஒருவரை வாழ வைக்க முடியாது. அப்படிச் செய்தால் அந்த வாழ்க்கை நிலைக்கவும் நிலைக்காது என்று கூறி இந்தக் கதையை முடிக்கிறேன்.

Advertisement