Advertisement

இளமுகிலன் தயாராகி கீழே வர, மூன்று வருடங்களுக்கு முன்பு அவனைக் கைது செய்த அதே பெண் காவலர் தான் வந்திருந்தார். அவரைப் பார்த்து நக்கலாகச் சிரித்து,

“அட நீங்க இன்னும் இன்ஸ்பெக்டரா தான் இருக்கீங்களா? இந்நேரம் ப்ரோமோஷன் வாங்கி வேற யாராவது வாழ்க்கையைக் கெடுத்துட்டு இருப்பீங்கனு நினைச்சேன். சை இப்படியாகிடுச்சே!!” என்று கேலியாக அவன் கூற,

அந்தப் பெண் காவலர் அவனை முறைத்துப் பார்த்து,”என்ன டா ரொம்ப திமிரா பேசுற!! உன்னை உள்ள தள்ளி லாடம் கட்டினா தான் தெரியும். நட டா ஸ்டேஷனுக்கு.” என்று அவர் மிரட்ட,

“நீங்க கூப்பிடலைனாலும் கண்டிப்பா நான் ஸ்டேஷன் வரத் தான் போறேன். ஆனால் உங்க ஸ்டேஷனுக்கு இல்லை. கமிஷ்னர் ஆஃபிஸ்கு தான் நானும் கிளம்பிட்டு இருந்தேன். நீங்க வந்ததும் நல்லதா போச்சு. வாங்க போகலாம்.” என்று தைரியமாகவே அவன் பேச, அந்தப் பெண் காவலருக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது. அவனது சட்டைக் காலரை பிடித்து இழுக்க, சரியாக அங்கு வந்தார் கருப்பு கோட் அணிந்த லாயர்.

“என்ன பண்ணுரீங்க மேடம் நீங்க? அவரை இப்படி இழுத்துட்டு போறது தப்பு. நான் உங்க மேல கமிஷ்னர் ஆஃபிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன். என் கட்சி காரரை நீங்க அவமானப்படுத்துரீங்கனு உங்க மேலயும் கேஸ் போடுவேன்.” என்று அவர் மிரட்ட, அந்தப் பெண் காவலர் அப்படியே அவரது கையை எடுக்க,

“இவன் மேல கம்ப்ளைன்ட் இருக்கு. எதுவா இருந்தாலும் நீங்க போலிஸ் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க. டேய் நீ நட டா.” என்று அப்போதும் மரியாதையின்றி பேச, வக்கீல் ஏதோ பேச வருவதற்கு முன் அவரை தடுத்து,

“வாங்க போகலாம்.” என்று இளமுகிலன் கூறி அவருடன் காவல் நிலையத்திற்குச் சென்றான்.

அவன் சென்றதும் அங்கு வந்த வக்கீல் ராகவனுக்கு அழைத்து,

“சார் தம்பியை போலிஸ் கூப்பிட்டு போயிட்டாங்க. நான் இப்போ அங்கத் தான் போறேன். உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணத் தான் கூப்பிட்டேன்.” என்று அவர் கூற,

“சரி லாயர் சார். என் மாப்பிள்ளைக்கு எந்தச் சேதாரமும் வராமல் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உங்களோடது. மறந்துடாதீங்க.” என்று ராகவன் கூறிவிட்டு வைத்தார்.

வக்கீலும் அவரது வாகனத்தில் காவல் நிலையம் செல்ல, அங்கு ஏற்கனவே சங்கர் மற்றும் திவ்யா அங்கிருந்தார்கள். இளமுகிலனை அங்குத் தனியாக உட்கார வைத்திருந்தார்கள்.

இவர் உள்ளே சென்ற அதே நேரம் திவ்யா இளமுகிலனிடம் வந்து,”இளா அவங்க சொல்றதை கேளுங்க. என் கழுத்துல தாலி கட்டிட்டா எந்தப் பிரச்சினையும் வராது. ஏன் இப்படிப் பிடிவாதம் பண்றீங்க? திரும்ப எங்கயாவது ஓடிப் போயிரலாம்னு ப்ளான் பண்ணாதீங்க. நீங்க என் கழுத்துல தாலி கட்டுனா தான் உங்களால இங்கயிருந்து வெளில போக முடியும்.” என்று அவள் அதிகாரமாகக் கூற,

இளமுகிலன் அவளை நக்கலாகப் பார்த்து,”அப்படியா!! பார்க்கலாமா? நான் உன் கழுத்துல தாலி கட்டாமலே நான் இங்கயிருந்து வெளில போயிடுவேன் பார்க்கிறியா?” என்று சாதாரணமாக அவன் கேட்க, திவ்யாவிற்கு உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

“அதையும் பார்க்கலாம் இளா.” என்று சவாலாகக் கூறிவிட்டு அவளது தந்தையிடம் வேகமாகச் சென்று இளமுகிலன் கூறியதைக் கூற, அவர் யோசனையுடன் அவனைப் பார்த்தார்.

“இவன் ஏதோ திட்டத்தோட தான் மா இங்க வந்திருக்கான். இல்லாட்டி இத்தனை நாள் ஒளிஞ்சு இருந்தவன் இப்போ எப்படி இவ்ளோ தைரியமா நம்ம முன்னாடி வர முடிஞ்சது? அது மட்டுமில்லாம இதோ இந்த லாயர் இருக்காரே இவர் லீடிங் லாயர் தெரியுமா? இவர் எப்படி இவனுக்காக வந்தார்? துரைசாமி வெளில இருந்து கூப்பிடு மா.” என்று அவர் கூற, வேகமாக அவள் வெளியே சென்றாள். ஆனால் துரைசாமி அங்கு இல்லை.

உள்ளே வந்தவள்,”அப்பா அவர் வெளில இல்லை அப்பா.” என்று இவள் கூற, யோசனையாக அவர் அவரது கைப்பேசி எடுத்து துரைசாமிக்கு அழைக்க, அவர் இவரது அழைப்பை எடுக்கவே இல்லை. மீண்டும் முயற்சி செய்து பார்த்தார். அப்போதும் அவர் எடுக்காமல் இருக்க, சரி வேற ஏதாவது வேலை வந்திருக்கும் என்று விட்டு விட்டார்.

அதற்குள் இங்கு அந்தப் பெண் காவலர் வக்கீலிடம்,”இங்கப் பாருங்க லாயர் சார், அந்தப் பொண்ணுகிட்ட தப்பா நடந்துருக்கான். அந்தப் பொண்ணை கல்யாணம் செய்துக்கிறேன்னு எழுதி கொடுத்ததால் தான் அவனை நான் போன தடவை வெளில விட்டேன். ஆனால் அவன் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிகாமல் ஓடிப் போயிட்டான். இப்ப கூடப் பாருங்க அந்தக் குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் எப்படித் திமிரா உட்கார்ந்திருக்கான். இவனை மாதிரி ஆளுங்களுக்கு நீங்க சப்போர்ட் பண்றது தான் கொடுமையா இருக்கு சார்.” என்று கடமை தவறாத காவலராக அவர் கதை விட,

“மேடம் என் க்ளைன்ட் தப்புப் பண்ணுதை நீங்க பார்த்தீங்களா? அவர் அந்தப் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று இவர் கேட்க,

“சார் என்ன இப்படிப் பேசுறீங்க? இவன் தப்புப் பண்ணாம அந்தப் பொண்ணு சும்மா சொல்லுதா? இதுக்கு போய் ஆதாரம் கேட்கிறீங்க?” என்று அவர் கேட்க,

“வக்கீல் சார் இவ்ளோ பேசுறீங்களே அவன் என் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கலைனு உங்ககிட்ட ஆதாரம் இருக்கா?” என்று சங்கர் கேட்க,

“ஆதாரம் தான? அது எங்ககிட்ட…” என்று லாயர் சார் பேசும் முன் அந்தப் பெண் காவலர் வேகமாக எழுந்து நின்று சல்யூட் அடிக்க, லாயர் திரும்பிப் பார்க்க, திருச்சி மாவட்டத்தின் கமிஷ்னர் அங்கு வந்திருந்தார்.

அவரைப் பார்த்த சங்கர் எழுந்து,”என்ன கமிஷ்னர் இந்தப் பக்கம்?” என்று அவர் கேட்க,

“மிஸ்டர் சங்கர் உங்களையும் உங்கப் பொண்ணையும் அரெஸ்ட் பண்ணத் தான் நானே நேர்ல வந்திருக்கேன்.” என்று அவர் கூற, இளமுகிலன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி.

“என்ன கமிஷ்னர்? நான் யார்னு மறந்துட்டு பேசுறியா? இந்த மாவட்டத்தோட எம்.எல்.ஏ. என்னை அரெஸ்ட் பண்றது சி.எம்.கு தெரிஞ்சா உன் வேலை காலி. அதை மறந்துட்டு பேசுறியா?” என்று அவர் திமிராகப் பேச,

“உங்களை அரெஸ்ட் பண்ணச் சொன்னதே சி.எம். தான்.” என்று கமிஷ்னர் கூற, அதிர்ந்து போனார் சங்கர்.

“என்னயும் என் பொண்ணுயும் எதுக்கு யா அரெஸ்ட் பண்ற? என் தொண்டர்களுக்குத் தெரிஞ்சா நீ அவ்ளோ தான். எனக்கா தீ குளிப்பாங்க என் தொண்டர்கள்.” என்று அவர் கூற,

“அதெல்லாம் எப்படித் தடுக்கிறதுனு எங்களுக்குத் தெரியும். இப்ப நீங்களா வந்தா நல்லது. இல்லைனா நான் இழுத்துட்டு போவேன்.” என்று கமிஷ்னர் கூற,

அப்போது அங்கு துரைசாமி வர, சங்கர் அவரிடம் சென்று,”துரைசாமி நம்ம லாயருக்கு ஃபோன் பண்ணி உடனே வரச் சொல்லு.” என்று அவர் கூற,

“எதுக்கு அவருக்கு நான் ஃபோன் பண்ணனும்? ஆதாரம் எல்லாம் பக்காவா இருக்கு. நீயும் உன் பொண்ணும் உள்ள போறது உறுதி.” என்று துரைசாமி கூற, சங்கர் அதிர்ச்சியாக அவரைப் பார்க்க,

“ஏய் என்னயா சொல்ற?” என்று சங்கர் அதிர்ச்சியாகக் கேட்க,

“என் பொண்ணையும் மனைவியையும் உன் பொண்ணு கார் ஏத்தி கொன்னது எனக்குத் தெரியும் சங்கர்.” என்று அவர் கூற, சங்கர் அதிர்ச்சியாகப் பார்த்தார் அவரை.

“எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கிறியா? இதோ பார்.” என்று அவரது கைப்பேசி எடுத்துக் காட்ட,

அதில் சங்கர் குடிபோதையில் துரைசாமியிடமே,”டேய் துரை உனக்குத் தெரியுமா? உன் பொண்ணையும் பொண்டாட்டியையும் பரலோகத்துக்கு அனுப்பினதே என் பொண்ணு தான் டா. அது கூடத் தெரியாம எனக்கு நாயா உழைக்கிற!! உன்னை நினைச்சா சிரிப்பா இருக்கு.” என்று கூறுவது தெள்ளத் தெளிவாகத் தெரிய, அதிர்ந்து பார்த்தனர் சங்கரும் திவ்யாவும்.

“இது சும்மா ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் நீ கமிஷ்னர் சார் கூடப் போனதும் தெரியும்.” என்று துரைசாமி கூற, சங்கருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இப்போ நடையை கட்டுறியா?” என்று கமிஷ்னர் கேட்க, என்ன செய்வதெனப் புரியாமல் நின்றிருந்தனர்.

“சார் நானும் கம்ப்ளைன்ட் தரேன். அதையும் சேர்த்துக்கோங்க.” என்று இளமுகிலன் கூறி அவனது கைப்பேசியை எடுத்து ஒரு காணொளியைப் போட, அதில் சற்று முன்னர் திவ்யா அவன் அறைக்கு வந்து வேண்டுமென்றே தான் இளமுகிலன் மேல் பழி கூறினேன் என்று பேசியது இருந்தது. இதைச் சத்தியமாக திவ்யா எதிர்பார்க்க வில்லை.

~~~~~~~~~

இளமுகிலன் ஈரோட்டிலிருந்து வரும் போதே என்ன செய்ய வேண்டுமென யோசித்துக் கொண்டு தான் வந்தான். முதலில் திவ்யாவின் தோழியைப் பார்த்துப் பேச வேண்டும். அவள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் திவ்யா பேசுவதை அவளுக்குத் தெரியாமல் அதை ரிகார்ட் செய்ய வேண்டுமென. அதன் படி அவன் திருச்சி வந்த போது பட்டன் கேமரா எங்கு விற்கும் என்று தெரிந்து வாங்கிக் கொண்டு தான் வீட்டிற்கு வந்தான்.

வசந்தி திவ்யாவிற்கு அழைத்து வரச் சொன்னதுமே அவன் அவனது அறையில் தயாராகப் பட்டன் கேமராவை அவனது சட்டையில் பொரித்து தயாராக இருந்தான். அதனால் தான் திவ்யா பேசும் போது அவன் அமைதியாக இருந்தான். அவன் எதிர்பார்த்த மாதிரியே அவள் வாயாலே அவன் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல வைத்துவிட்டான்.

~~~~~~~~~~

அந்தக் காணொளியைப் பார்த்ததும் சங்கருக்கும் திவ்யாவுக்கும் அதிர்ச்சி. திவ்யாவிற்கு பைத்தியம் பிடிப்பது போலாகி விட்டது. அவளுக்கு இளமுகிலன் கிடைக்கமாட்டான் என்று நன்றாகத் தெரிந்து விட்டது. அதே போல் அவள் சிறைக்குச் செல்வதும் உறுதியாகி விட்டது. இளமுகிலனை ஏதாவது செய்ய வேண்டுமென அவள் பைத்தியம் போல் இங்கும் அங்கும் பார்க்க, அவள் கைக்கு எதுவும் கிடைக்கவில்லை. இது ஒன்றும் சினிமா கிடையாதே பக்கத்திலே துப்பாக்கியோ கத்தியோ இருப்பதற்கு.

“உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது திவ்யா. நான் சொன்ன மாதிரியே உன் கழுத்துல தாலி கட்டாமலே இந்த ஸ்டேஷன் விட்டுப் போகப் போறேன். உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது. இனிமேலாவது திருந்து. இரண்டு உயிரை கொண்ணுட்டு உன்னால எப்படி இத்தனை நாள் சந்தோஷமா இருக்க முடிஞ்சது? கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா?” என்று இளமுகிலன் கேட்க,

“அதெல்லாம் உறுத்தியிருந்தா எப்போவே என்கிட்ட மன்னிப்பு கேட்டிருப்பாளே!! உங்க குடும்பத்துக்கு நான் எவ்ளோ பண்ணிருப்பேன். அந்த நன்றி கூட இல்லாம இப்படி என் குடும்பத்தை ஒன்னுமில்லாம பண்ணிட்டியே!! பாவி பாவி. இந்த கேஸ் மட்டுமல்ல, சங்கர் நீ பண்ண எல்லா தப்புக்கும் என்கிட்ட ஆதாரமிருக்கு. அதுவும் உன் வாயாலயே எல்லாத்தையும் சொல்லிட்ட. அதை எல்லாம் நான் ரெகார்ட் பண்ணிருக்கேன் டா. இனி நீயும் உன் பொண்ணும் வெளியவே வர முடியாது.” என்று ஆக்ரோஷமாகக் கூறினார் துரைசாமி.

கமிஷ்னர் அவருடன் வந்த காவலர்களிடம்,”இரண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணுங்க.” என்று அவர் கூற, அவர்களும் அவர்களைக் கைதிச் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

கமிஷ்னர் அந்தப் பெண் காவலரைப் பார்த்து,”யார் என்ன கேஸ் கொடுத்தாலும் இல்லை இல்லை காசு கொடுத்தாலும் யாரை வேணாலும் உள்ளத் தூக்கிப் போடுவீங்க? அப்படித் தான? உங்களை மாதிரி ஆளுங்க இருக்கிறதால தான் மக்கள் போலிஸை நம்ப மாட்டிங்கீறாங்க. உன்னை இப்படியே விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காத!! உன் மேல கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்.” என்று அந்தப் பெண் காவலரை மிரட்டி விட்டே அங்கிருந்து சென்றார் கமிஷ்னர்.

இளமுகிலனுக்கு இது எல்லாம் பார்க்கும் போது நிம்மதியாக இருந்தது. இனி திவ்யா தொல்லை தனக்கு இல்லை. ப்ரனவிகாவுடன் நிம்மதியாக வாழலாம் என்று மகிழ்ச்சியாக எண்ணினான்.

வக்கீல் இளமுகிலனிடம் வந்து,”இனி நீங்க நிம்மதியா வாழலாம் தம்பி.” என்று அவர் கூற,

“ரொம்ப தாங்க்ஸ் சார். எப்படி நீங்க சரியா என் வீட்டுக்கு வந்தீங்க? நான் கேட்க நினைச்சேன் ஆனால் நேரம் தான் இல்லை. எல்லாமே சட்டுன்னு முடிஞ்சுடுச்சு.” என்று இளமுகிலன் கேட்க,

“எல்லாம் ராகவன் சார் சொல்லித் தான் தம்பி. அவர் நேத்தே என்கிட்ட உங்க விஷயமா பேசிட்டார். இதெல்லாம் நடக்கும்னு முன்னயே எங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்க அந்தப் பொண்ணு திவ்யா பேசுனதை ரெக்கார்ட் பண்ணது தான் நான் எதிர்பார்க்கலை. ஆனால் ராகவன் சாருக்கு நீங்க ஏதாவது பண்ணுவீங்க தெரிஞ்சுருக்கு. அதான் அவர் என்கிட்ட உறுதியா சொன்னார் போல என் மாப்பிள்ளை கண்டிப்பா ஏதாவது செய்வார். நீங்க உறுதுணையா அவர் கூட இருங்கனு. நான் உங்க வீட்டுக்கு வந்தது கூட உங்க கிட்டப் பேசத் தான். நான் வந்தது கூட நல்லதா போச்சு.” என்று வக்கீல் கூற,

இளமுகிலனுக்கு ராகவன் மேல் பெரிய மரியாதையே வந்தது. உடனே வெளியே வந்த இளமுகிலன் ப்ரனவிகாவிற்கு அழைக்க, அவள் முதல் ரிங்கிலே கைப்பேசியை எடுத்து விட்டாள்.

“முகிலன்..”

“ப்ரனவிகா…” என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற, கேட்டுக் கொண்டிருந்த ப்ரனவிகாவிற்கு அவளது தந்தையை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மேல் தேவையில்லாமல் கோபப்பட்ட தன்னை நினைத்து கோபமாக இருந்தது.

“அப்பா இவ்ளோ செஞ்சுருக்கார். ஆனால் நான் அவர் மேல கோபப்பட்டு இதுவரை எதுவுமே பேசலை இளா. சை என்னை நினைச்சாலே கடுப்பா இருக்கு.” என்று அவள் கூற,

“அப்பா மகளுக்காக எதுவும் செய்வாங்கனு இரண்டாவது முறை தெரிஞ்சுகிட்டேன் ப்ரனவிகா. முதல்ல சங்கர், தப்பான அவர் பொண்ணுக்காக எதுவும் செய்வார். இப்போ உன்னோட அப்பா நீ ஆசைப்பட்ட ஒரே ரீசன்காக இவ்ளோ பண்ணிருக்கார். முதல் முறை நான் பொண்ணா பிறந்திருக்கலாமனு தோனுது. அப்பாக்களுக்கு பொண்ணுங்க எப்போதும் ஸ்பெஷல் தான்ல!!” என்று அவன் கூற, அவளுக்கு அப்போதே ராகவனைப் பார்க்க வேண்டுமெனத் தோன்ற,

“இளா நான் அப்பாகிட்ட பேசிட்டு உங்ககிட்ட பேசவா?” என்று அவள் தயங்கிக் கொண்டே கேட்க,

அவளது அப்போதைய உணர்வு அவனுக்கும் புரிந்ததால்,”ப்ச் இதெல்லாம் கேட்கனுமா நீ? பேசிட்டு கூப்பிடு ப்ரனவிகா.” என்று கூறி வைத்து விட்டான்.

அதே சமயம் துரைசாமி அவன் அருகில் வந்தார். இளமுகிலன் அவரை குழப்பமாகப் பார்த்தான் எதற்கு இவர் தன்னிடம் வருகிறார் என்று.

“தம்பி நீங்க அன்னைக்கு இங்கயிருந்து போகாமல் இருந்திருந்தா இவங்களை அன்னைக்கே ஜெயிலுக்கு அனுப்பியிருக்கலாம் தம்பி.” என்று அவர் கூற, அப்போதும் புரியாமல் அவன் பார்க்க,

“எனக்குப் புரியலை நீங்க சொல்றது.”

“என் பொண்டாட்டி சாகும் போது சொன்ன ஓரே வார்த்தை திவ்யா தான். அப்போ எனக்கு எதுவும் புரியலை. ஆனால் ஒரு வாரம் போனதும் தான் புரிஞ்சது திவ்யா தான் அந்த ஆக்சிடென்ட்டை செஞ்சிருக்கானு. இதுல என்ன கொடுமைனா அவள் ஓட்டின காரை நான் தான் ஸ்க்ராப்புல(காரை முழுசாக நொறுக்கும் இடம்) போய் விட்டேன். எங்கேயோ இடிச்சுட்டானு தான் சொன்னாங்க. ஆனால் அது பொய். அதை அந்த ஆளே என்கிட்ட தண்ணி போட்டுட்டு சொன்னான். அன்னைக்குனு பார்த்து என்னோட ஃபோன்ல எப்படியோ வீடியோ ஆன் ஆகிடுச்சு. அதனால் தான் அந்த ஆள் பேசுனது எல்லாம் ரெக்கார்ட் ஆகிடுச்சு. அப்புறம் அவன் பண்ணத் தப்பை எல்லாம் தோண்டி துருவி ஆதாரம் சேகரிச்சேன். சரியான நேரத்திற்கு நான் காத்திருந்தேன். அப்போ தான் உங்க மேல தப்பா கேஸ் கொடுத்தாங்க. சரி அடுத்த நாள் உங்களைச் சந்திச்சு பேசலாம்னு நினைச்ச போது நீங்க ஊரை விட்டுப் போயிட்டீங்க. நான் சேர்த்த ஆதாரத்தையும் அவன் ஈசியா ஒன்னுமில்லாம ஆக்கிடுவான். அதனால் அவனை பெருசா அடிக்கனும்னு இன்னும் இன்னும் ஆதாரத்தை சேர்த்தேன். அப்போ தான் உங்களைத் தேடி ஒரு பொண்ணு உங்க ஊருக்கு வந்தானு தெரிஞ்சு கார் நம்பர் ட்ரேஸ் பண்ணேன். அது ராகவன் சாரோடதுனு தெரிஞ்சது. அவரைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். என்ன தான் பிஸ்னஸ் மேன்னா இருந்தாலும் அவருக்குச் செல்வாக்கு அதிகம்னு தெரிஞ்சது. அவரை நேர்ல நானே போய் பார்த்தேன். என்கிட்ட இருக்கிற ஆதாரத்தைக் காட்டினேன். அவரும் அவரோட மகளுக்காக எனக்கு உதவிப் பண்றேன்னு சொன்னார். அவர் தான் கமிஷ்னர்கிட்ட பேசிருப்பார் போல!! நான் இங்க நடந்ததைக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவருக்கு ஃபோன்ல தகவல் சொன்னேன். அவர் தான் என்னை கமிஷ்னரை போய் பார்க்கச் சொன்னார். அந்த ஆதாரத்தை வைச்சு தான் திவ்யாகிட்ட உண்மையை வாங்க நாங்க நினைச்சோம். ஆனால் நீங்க வேற லெவல் தம்பி. திவ்யா வாயாலே உண்மையைச் சொல்ல வைச்சுட்டீங்க. என்ன இதை நீங்க அன்னைக்கே செஞ்சுருந்தா மூணு வருஷம் ஓடி ஒளிஞ்சுருக்க தேவையில்லாம போயிருக்கும். சரி எது எது எப்போ நடக்கனும்னு கடவுள் தான் முடிவுப் பண்றான். அவனோட தாளத்துக்கு ஏத்த மாதிரி நாம ஆடுறோம். அப்புறம் நீங்க ரொம்ப குடுத்து வைச்சவங்க தம்பி. ராகவன் சாரோட பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னாங்க. நீங்க இனிமேலாவது சந்தோஷமா இருங்க தம்பி. நான் வரேன்.” என்று கூறிவிட்டு அவர் சென்று விட, இளமுகிலனுக்கு தான் என்ன கூறுவதெனப் புரியவில்லை.

இதே விஷயத்தை ராகவன் ப்ரனவிகாவிடம் கூற, அவள் சந்தோஷத்தில் அவரை அணைத்துக் கொண்டாள்.

“அப்பா யூ ஆர் க்ரேட். தாங்க் யூ ஸோ மச் அப்பா.”

“ப்ரனு எனக்கு என் பிள்ளைங்களை விட எதுவும் முக்கியமில்லை. மாப்பிள்ளையும் தங்கமானவர், நோ சொல்ல எதுவுமில்லை. அதுவுமில்லாம புத்திசாலி வேற அவர். என்ன அதைக் கொஞ்சம் லேட்டா அவர் யூஸ் பண்ணிட்டார் அவ்ளோ தான்.”

“அப்பா அவர் அப்போவே புத்தியை யூஸ் பண்ணிருந்தா வேலைக்குனு அவர் இங்க வந்திருக்க மாட்டார். நானும் அவரை மறுபடியும் சந்திச்சுருக்க மாட்டேன் அப்பா.” என்று அவள் கூற,

“ம் நடக்கிற எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.” என்று அவர் கூற, ப்ரனவிகா சந்தோஷமாகத் தலையசைத்தாள்.

இனி இளமுகிலன் சுதந்திரமாக அவனது வாழ்க்கையை வாழலாம் என்ற எண்ணமே அவளுக்கு இனித்தது. இளமுகிலனுடன் தனது கல்யாணம் எந்தப் பிரச்சனையுமின்றி நடக்கும் என்பதில் அவளுக்கு மிகுந்த சந்தோஷம். அவனை நேரில் பார்க்க வேண்டும் போல் இருந்தது. சூழ்நிலை கருதி அமைதியாகி விட்டாள்.

Advertisement