Advertisement

இளமுகிலனும் ப்ரனவிகாவும் அவர்களது உணவகத்திலிருந்து வெளியே வந்தார்கள். ப்ரனவிகா சற்றுக் கோபத்துடன் தான் இருந்தால். இளமுகிலன் அவளது கையை அழுத்திக் கொடுத்து,

“ப்ரனவிகா நீ வொர்ரி பண்ணிக்காத!! என்னை நம்பு. நான் பார்த்துக்கிறேன். அப்படி என்னால முடியாத பட்சத்துல நாம அங்கிள்கிட்ட கேட்டுக்கலாம் சரியா!!” என்று அவன் கூற,

“எனக்குப் பயமா இருக்கு முகிலன். இவ்ளோ கிரிமினலா யோசிச்சு உங்க மேல தப்பான கேஸ் கொடுத்தவங்களுக்கு முன்னால நீங்கப் போனால் அவங்க என்ன வேனாலும் செய்வாங்க முகிலன். அதை நினைச்சா தான் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு முகிலன்.” என்று அவள் கூற,

“எனக்கு உன்னோட பயம் புரியுது ப்ரனவிகா. பயந்துட்டே இருந்தா எதுவும் செய்ய முடியாது. எனக்கு இப்போ தான் துணிச்சல் வந்திருக்கு. அதே உத்வேகத்தோட நான் போனா தான் என்னால அங்க என்ன செய்ய முடியும்னு பார்க்க முடியும் சரியா. அப்புறம் ஞாபகத்துல வைச்சுக்கோ இந்த இளமுகிலன் ப்ரனவிகாவுக்குத் தான் சரியா.” என்று அவன் கூறவும் தான் அவளுக்குச் சிறு நம்பிக்கையாக இருந்தது.

ப்ரனவிகாவும் இளமுகிலனும் அவனது வீட்டிற்கு வர, முகிலன் அவளிடம்,”நான் இன்னைக்கே கிளம்புறேன் ப்ரனவிகா. கண்டிப்பா ஏதாவது செய்ய முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ தைரியமா இரு சரியா.”

“ம் நான் உங்களை நம்புறேன் முகிலன். நீங்களும் தைரியமா போயிட்டு வாங்க. எது வந்தாலும் நாம பார்த்துக்கலாம்.” என்று அவள் கூற, அவனுக்கு அது கூடுதல் பலமாக இருந்தது.

“சரி ப்ரனவிகா. நீ வீட்டுக்குக் கிளம்பு. இனி நான் பார்த்துக்கிறேன்.” என்று அவன் கூற,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்கப் போற வரைக்கும் நான் இங்கத் தான் இருக்கப் போறேன். அடுத்து எப்போ வருவீங்கனு தெரியாது. ஸோ நான் வீட்டுக்குப் போக மாட்டேன்.”என்று அவள் உறுதியாகக் கூற, அவனுக்கும் அவள் கூட இருக்க வேண்டுமெனத் தோன்ற, எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான்.

அவன் அடுத்துச் செய்த செயல் பரத்திற்கு அழைத்து இதுவரை நடந்த விஷயம் எல்லாவற்றையும் கூற, பரத்திற்கு ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் நிம்மதியாகவும் இருந்தது.

“ரொம்ப சந்தோஷம் இளா. எங்க நீ கடைசி வரைக்கும் இப்படியே இருந்துடுவியோனு ரொம்பவே பயந்துட்டேன் இளா. இப்போ தான் நிம்மதியா இருக்கு. ஆனாலும் ரொம்ப பாஸ்ட் மேன் நீ.” என்று அவன் கூற, இளாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

“உனக்கு வேலைலாம் எப்படி டா போகுது?”

“அதெல்லாம் நல்லா போகுது இளா. பட் லன்டன் போறது மட்டும் அவங்க சொன்னதை விடச் சீக்கிரம் நடக்கிற மாதிரி இருக்கு இளா.”

“சூப்பர் பரத். நானும் உன்கிட்ட சில விஷயம் பேசனும் டா. திருச்சி போய் முதல்ல இந்தப் பிரச்சனையைச் சரி பண்ணிட்டு பேசுறேன் டா.” என்று அவன் கூற, பரத்தும் சரியென்று பொதுவாகப் பேசிவிட்டு வைத்தான்.

சரியாக ஒரு மணிநேரத்தில் அவன் கிளம்ப, அவர்கள் பேசியிருந்த காரும் வர, இளமுகிலன் ப்ரனவிகாவிடம் கூறிவிட்டு கிளம்பினான்.

“நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன் ப்ரனவிகா. நீ கவலைப்படாம இரு.” என்று கூறிவிட்டு வண்டியில் ஏறினான்.

~~~~~~~~~~

இளமுகிலன் முதலில் சென்றது கடைசியாக திவ்யாவைச் சந்திக்கச் சென்ற வீட்டிற்குத் தான். ஆனால் அவனது நேரம் அந்த வீடு பூட்டியிருந்தது. பக்கத்திலிருந்தவர்களிடம்,

“சார் இங்க தங்கியிருந்தவங்க வெளில போயிருக்காங்களா?” என்று அவன் கேட்க,

“இல்லையே பா ரொம்ப நாளா வீடு காலியா தான் இருக்கு. நீ ஊருக்குப் புதுசா?” என்று அவர் கேட்க, அவனுக்கு அதிர்ச்சி.

“ஆமாங்க. அவங்க எங்க போயிருக்காங்கனு தெரியுமா?” என்று கேட்க,

“அதெல்லாம் நமக்குத் தெரியாது பா.” என்று அவர் கூற, அவனுக்கு நன்றி உரைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

முதல் அடி அவனுக்குச் சறுக்கலாக அமைய, அடுத்த என்ன செய்வதென ஒன்றும் புரியவில்லை. ஓட்டுநரிடம் முசிறிக்குச் செல்ல சொல்லிவிட்டு ப்ரனவிகாவுக்கு அழைத்தான்.

“என்ன முகிலன் வீட்டுக்குப் போயிட்டீங்களா?”

“இல்லை ப்ரனவிகா. நான் இப்போ தான் திருச்சி வந்துருக்கிறேன். ஹாஃப் நவர்ல போயிடுவேன் ப்ரனவிகா. வீட்டுக்குப் போனால் உன்கிட்ட பேசமுடியுமானு தெரியலை. அதான் இப்போவே ஃபோன் பண்ணிட்டேன்.”

“ஓ ஓகே முகிலன். பீ கேர்ஃபுல் முகிலன்.”

“சரி ப்ரனவிகா. நீ உடம்பைப் பார்த்துக்கோ. ரொம்ப யோசிக்காத. நான் வீட்டுல சிட்டுவேஷன் பார்த்துட்டு உனக்குக் கூப்பிடுறேன். இல்லாட்டி நைட் கண்டிப்பா கால் பண்றேன்.” என்று அவன் கூற,

“ம் ஓகே முகிலன்.” என்று கூறி அவள் வைத்துவிட்டாள்.

என்ன தான் இளமுகிலனிடம் சாதாரணமாகப் பேசினாலும் ஏனோ அவளுக்குப் படப்படப்பாக இருந்தது. ஹரிதா சாதாரணமாக அவளைத் தேடி அங்கு வர, ப்ரனவிகாவும் முகம் பார்த்து,

“என்னாச்சு ப்ரனு? ஏன் இவ்ளோ டென்ஷன்?” என்று கேட்க, ப்ரனவிகா நடந்ததை எல்லாம் கூற,

“ஓய் என்கிட்ட முகிலன் அண்ணா உனக்கு ஓகே சொன்னதைச் சொல்லவே இல்லை பார்த்தியா?” என்று குறைபட,

“அச்சோ அண்ணி. நான் சொல்லக் கூடாதுனு நினைக்கலை. பிர‌ச்சனை எல்லாம் முடிஞ்சதும் சொல்லலாம்னு நினைச்சேன் அண்ணி. ஆனால் அப்பா இப்படிப் பண்ணுவார்னு நான் நினைக்கலை.”

“ப்ரனு நீ ஒன்னும் புரிஞ்சுக்கோ!! இப்போ மாமா இந்தப் பிரச்சனையை ஈசியா சரியா பண்ணிடுவார் தான். அதுல எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஒன்னு யோசி!! மாமா அண்ணா ஏதாவது செய்யனும்னு யோசிக்கிறார். அவரோட பிரச்சனையை அவரே செய்ய செய்யனும்னு நினைக்கிறார். அதனால நீ ரொம்ப யோசிக்காத. கண்டிப்பா அண்ணாவுக்கு எந்தப் பிரச்சனையும் வர மாமா விட மாட்டார்.” என்று அவள் கூறவும் தான் அவளுக்குச் சிறிது நம்பிக்கை வந்தது.

~~~~~~~~~~

இளமுகிலன் அவனது வீட்டிற்கு முன் இறங்க, அங்குக் காவலுக்கு இருந்த ஆட்கள் அவனை அதிர்ச்சியாகப் பார்க்க, யாரையும் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றான்.

குமாரும் வசந்தியும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் பக்கத்தில் அந்த வீட்டில் வேலை செய்யும் திவ்யாவின் ஆள் பவுன்னும் அமர்ந்திருக்க, அவர் தான் முதலில் இளமுகிலனை பார்த்தார். பார்த்தவர் அப்படியே அதிர்ச்சியில் எழுந்து நிற்க, அவர் எழுவதைப் பார்த்து குமாரும் வசந்தியும் பார்க்க, இளமுகிலன் நின்றிருந்ததைப் பார்த்து அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.

குமார் வேகமாகச் சென்று இளமுகிலன் முகத்தில் அறைய, அதிர்ச்சியாக அவரைப் பார்த்தான் இளமுகிலன்.

“ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டு அந்தத் தப்பைச் சரி செய்யாம ஊரை விட்டு ஓடிப் போயிருக்க வெட்கமா இல்லை?” என்று அவர் கேட்க,

“ப்ச் விடுங்க, அதான் மனசு மாறி அவன் வந்துட்டான்ல!! இனி கல்யாணத்தை முடிச்சுடலாம் அவ்ளோ தான். வா இளா திவ்யா உனக்காக இத்தனை வருஷம் வெயிட் பண்ணிட்டு இருக்கா தெரியுமா!! முதல்ல என் மருமகளுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லனும்.” என்று வசந்தி கூறவிட்டு திவ்யாவிற்கு அழைக்கக் கைப்பேசியை எடுக்க, இளமுகிலன் எதுவும் பேசாமல் அவனது அறைக்குச் சென்று விட்டான்.

அறைக்கு வந்தவன் கதவைப் பூட்டிவிட்டு அவனது படுக்கையில் படுத்து விட்டான். அதன் பிறகு தான் அவன் அவனது அறையையே பார்த்தான். அவன் சென்ற போது இருந்ததுக்கும் இப்போதும் பல வித்தியாசங்கள் இருந்தது.

அதிலும் சுவரில் ஆங்காங்கே இவனும் திவ்யாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம். அதைப் பார்க்கும் போது அவனுக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது. வேகமாக அனைத்தையும் எடுத்து கதவைத் திறந்து கீழே வந்தான்.

நடுவீட்டில் அந்தப் புகைப்படங்கள் அனைத்தையும் போட்டு அவன் உடைக்க, சத்தத்தில் உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்து பார்க்க, குமாரும் வசந்தியும் அதிர்ச்சியாகி விட்டனர்.

“ஏய் அறிவிருக்கா? எதுக்கு டா போட்டோவை போட்டு உடைச்ச? மருமக இப்போ வந்துடும், வந்து இதைப் பார்த்தா என்ன நினைக்கும்?” என்று குமார் கேட்க,

“யாரு யாருக்கு மருமகள்? ஏதாவது பேசுனீங்க நடக்கிறதே வேற!! நீங்களாம் உண்மையிலே என்னோட அப்பா அம்மா தானா?” என்று அவன் கேட்க,

“யாரைப் பார்த்து என்ன பேசுற? அவர் உன்னோட அப்பா!! பண்ற தப்பெல்லாம் நீ பண்ணிட்டு எங்களைக் குறை சொல்றியா நீ? எங்களைப் பத்தி எதுவும் யோசிக்காமல் நீ ஓடிப் போயிட்ட!! ஆனால் மருமக எங்களை எப்படி எல்லாம் கவனிச்சுகிட்டா தெரியுமா? பாரு எங்களுக்குப் பாதுகாப்பா இருக்க வெளில ஆட்கள் இருக்காங்க. அதே மாதிரி வீட்டுல நான் எந்த வேலையும் செய்யாமல் இருக்க வீட்டோட வேலைக்கு ஆளும் வைச்சு கொடுத்துருக்கா டா என்னோட மருமகள். நீ முதல்ல எங்களுக்கு ஒரு பையன் மாதிரி நடந்துகிட்டியா? எவ்ளோ அருமையான வாழ்க்கை. வசதி வாய்ப்போட யாருக்குக் கிடைக்கும்? ஆனால் நீ முட்டாள் மாதிரி அதை விட்டுட்டு போயிட்டு எங்களைப் பேசுறியா நீ?” என்று வசந்தி கோபமாகக் கேட்க,

அவன் அவருக்கு எதுவும் பதிலளிக்காமல் திவ்யா அங்கு இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவாள் என்று அவர் கூறியதைக் கேட்டு முறைத்துக் கொண்டே அவனது அறைக்குச் சென்றான்.

சரியாக ஒரு மணிநேரத்தில் சங்கர் மற்றும் துரைசாமியுடன் அங்கு வந்தாள் திவ்யா. மிகுந்த எதிர்பார்ப்புடன் அவள் கண்கள் மின்ன இளமுகிலனை தேட,

“அத்தை மாமா இளா எங்க?” என்று ஆர்வத்துடன் கேட்க,

“அவன் அவனோட ரூம்ல இருக்கான் தங்கம். நீ போய் பார்.” என்று வசந்தி கூற, ஆசையாக அவனது அறைக்குச் சென்றாள் திவ்யா.

வேகமாக அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற திவ்யா, ஜன்னல் பக்கத்தில் நின்றிருந்த இளமுகிலனை பார்த்து அவனிடம் ஓடிச் செல்ல, கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த இளமுகிலன் திவ்யா தன்னிடம் வருவதைப் பார்த்து,

“அங்கேயே நின்னு பேசு திவ்யா. கிட்ட வராத.” என்று கோபமாக அவன் கூற,

“இளா எனக்குப் புரியுது உங்களுக்கு என் மேல கோபம்னு. நான் அப்படிப் பண்ணது கூட நீங்க என் கூடவே கடைசி வரைக்கும் இருக்கனும்னு தான்.” என்று அவள் கூற, அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“இளா ப்ளீஸ் பேசுங்க.” என்று கூறி அவள் அவன் பக்கத்தில் வர பார்க்க,

“அங்கேயே நில்லுனு சொன்னேன்.”என்று அவன் கடுமையாகக் கூற,

“இளா, ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் பண்ணது தப்பு தான். ஆனால் அதுக்கு பின்னாடி உங்க மேல இருக்கிற லவ் தான் காரணம் இளா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. நான் உங்க மேல பொய்யா கேஸ் கொடுத்துருக்க கூடாது தான். ஆனால் எனக்கு வேற வழி தெரியலை. அதனால தான் நான் நீங்க என்கிட்ட தப்பா நடந்துகிட்டதா பொய்யா கேஸ் கொடுத்தேன். அப்போ தான் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்கனு. ப்ளீஸ் இளா புரிஞ்சுக்கோங்க.” என்று அவள் கூற, அவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க

“இளா ப்ளீஸ்…” என்று அவள் பேச வருவதற்கு முன், அவன் அவளைக் கடந்து அறையை விட்டு வெளியேறி விட்டான்.

திவ்யா அதிர்ச்சியாக அவனைப் பின் தொடர்ந்து வர, சங்கர், குமார், வசந்தி எல்லாம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, இளமுகிலன் அவர்களைக் கடந்து வீட்டை விட்டு வெளியேறச் செல்ல,

“எங்க போற இளா? உன்னோட மாமனார் வந்துருக்கார். வாங்கனு கூப்பிடாம போனால் என்ன அர்த்தம்?” என்று குமார் கோபமாகக் கேட்க,

“அட விடுங்க குமார். அவர் என்னை கூப்பிட்டா தானா? இனி இது என் பொண்ணு வாழ போற வீடு. அவர் கூப்பிடலைனாலும் நான் வருவேன்.” என்று சங்கர் கூற,

இளமுகிலன் எள்ளலாக,”ஓ அப்படியா!! உங்கப் பொண்ணு இனிமே இங்கத் தான் இருக்கப் போறாளா?” என்று அவன் கேட்க,

“என்ன இளா இப்படிச் சொல்லிட்டீங்க? உங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டா என் பொண்ணு இங்கத் தான இருக்கனும்?” என்று அவர் கேட்க,

“அப்படியா? யார் சொன்னா நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு?” என்று அவன் கேட்க,

“என்ன விளையாடுறியா? போலிஸ்ல நீ எழுதிக் கொடுத்தது மறந்துடுச்சா? நீ என் பொண்ணை கல்யாணம் பண்ணாட்டி ஜெயில்ல களி தான் திங்கனும். அதை மறந்துடாத!!” என்று அவர் கோபமாகக் கூற,

“நான் எல்லாத்துக்கும் தயாரா தான் வந்துருக்கேன். உங்களை நான் எங்க சந்திக்கனுமோ அங்க சந்திச்சிக்கிறேன். அப்புறம் இன்னொர் விஷயம் நான் உங்க பொண்ணை இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணிக்க போறது கிடையாது.” என்று அவன் கூறிவிட்டு யாருக்கும் பேச வாய்ப்பளிக்காமல் அவன் அங்கிருந்து சென்று விட,

சங்கர் கோபமாக குமாரிடம்,”என்ன குமார் இது? அவனுக்காக தான் மூணு வருஷமா என் பொண்ணு காத்திருக்கா!! ஆனால் அவன் என்னாடானா எதுவும் சொல்லாம போயிட்டு இருக்கான். என் பொண்ணுக்காக தான் நான் அமைதியா போறேன். இல்லாட்டி எனக்கு அவன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. அவனை இருக்கிற இடம் தெரியாமல் பண்ண எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. சொல்லி வைங்க அவன்கிட்ட. இனி நாள் எல்லாம் கடத்த முடியாது. நான் நல்லா நாள் பார்த்துச் சொல்றேன், அன்னைக்கு அவனைக் கூப்பிட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்து எதுவும் பேசாமல் என் பொண்ணு கழுத்துல தாலி கட்டச் சொல்லுங்க.” என்று அவர் கோபமாகக் கூற,

குமார் ஏதோ பேச வருவதற்குள், வெளியே சென்ற இளமுகிலன் மீண்டும் வந்தவன் சங்கர் பேசியது அனைத்தையும் கேட்டிருக்க,”ஓ அப்படியா? எங்க செய்யுங்க பார்க்கலாம். உங்களால என்னை ஒன்னும் செய்ய முடியாது. அப்புறம் இன்னொரு விஷயம் என்ன சொன்னீங்க? எதுவும் பேசாமல் அமைதியா வந்து உங்கப் பொண்ணு கழுத்துல தாலி கட்டனுமா? ஓய்வ் அதெல்லாம் உன் கனவுலயும் நடக்காது. உன்னால என்ன செய்யனுமோ அதைச் செஞ்சுக்கோ.” என்று கூறவிட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்.

அவன் பேச்சு, நடவடிக்கை எல்லாம் வித்தியாசமாக இருக்க, எல்லாரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர். துரைசாமி மெதுவாக சங்கரிடம்,”ஐயா இது சரி வராது. அதான் ஏற்கனவே அவன் போலிஸ்ல எழுதிக் கொடுத்திருக்கான்ல நம்ம பாப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிறதா!! நாம போய் போலிஸ வரச் சொல்லுவோம். அவங்க இவனை முட்டிக்கு முட்டி தட்டினால் தான் சரி வருவான்.” என்று அவர் கூற, சங்கருக்கும் அது தான் சரியாக இருக்கும் என்று தோன்ற,

“வாயா போகலாம். திவி மா நீ கவலைப்படாத. நான் பார்த்துக்கிறேன். நீ வா மா நம்ம வீட்டுக்குப் போகலாம்.” என்று அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

அவர்கள் சென்றதும் வசந்தி குமாரிடம்,”என்னங்க இந்தப் பையன் இப்படிச் செய்றான். இவனுக்குக் கொஞ்சம் கூடப் புத்தியே இல்லையா!! எவ்ளோ நல்ல வாழ்க்கை இப்படி அவனே கெடுத்துக்கிறானே. வாங்க நாம போய் அவன்கிட்ட பேசலாம்.” என்று கூறி குமாரை அழைத்துக் கொண்டு அவர் இளமுகிலன் அறைக்குச் சென்றார்.

வசந்தியும் குமாரும் இளமுகிலன் அறைக்கு வர, அவனது மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் இவர்கள் வந்ததும் அதை மூடி வைத்து விட்டு,

“என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்க,

“ஏன் டா இப்படிப் பண்ற? இந்த மாதிரி ஒரு அருமையான வாழ்க்கை உனக்குக் கிடைக்குமா? நீ திவ்யாவை கல்யாணம் பண்ணிகிட்டா ராஜா மாதிரி வாழலாம். உனக்காக நாங்க பட்ட கஷ்டத்தை எல்லாம் மறந்துட்டியா? எங்களுக்காக இது வரைக்கும் நீ என்ன செஞ்சுருக்க சொல்லு!! எல்லாரும் சொன்னாங்க உன் பையனை இவ்ளோ கஷ்டப்பட்டு பெரிய படிப்பு எல்லாம் படிக்க வைக்காத!! அப்புறம் அவன் வேலைக்குப் போனதும் உங்களை எல்லாம் கவனிக்கவே மாட்டான்னு. ஆனால் நாங்க அதை எல்லாம் காதுலயே வாங்காம உன்னைப் பெரிய படிப்பு படிக்க வைச்சதுக்கு நல்ல மரியாதை செஞ்சுட்ட டா.” என்று வசந்தி பேசிக் கொண்டே செல்ல,

“ஒரு நிமிஷம் அமைதியா இருக்கீங்களா.” என்று கூறி, அவன் இங்கு வருவதற்கு முன் ப்ரனவிகாவுடன் எடுத்த புகைப்படத்தைக் காட்டி,

“இநோ இதுல இருக்கிற பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அப்புறம் இவளோட குடும்பம் திவ்யா குடும்பத்தை பல மடங்கு வசதியானவங்க. இந்தப் பொண்ணும் என் மேல பைத்தியமா இருக்கா. இப்போ சொல்லுங்க நான் திவ்யாவை கல்யாணம் பண்ணிக்கவா இல்லை இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கவா?” என்று அவன் கேட்க,

இருவருக்கும் என்ன சொல்வது என ஒரு நிமிடம் புரியவில்லை. வேகமாக வசந்தி இளமுகிலன் பக்கத்தில் அமர்ந்து,”நிஜமா சொல்றியா நீ? இந்தப் பொண்ணு திவ்யாவை விட வசதியானவளா?” என்று கேட்க,

“ஆமா.” என்று மட்டும் அவன் கூற,

“அப்போ இந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ இளா.” என்று கொஞ்சமும் மனசாட்சியின்றி கூற, இளமுகிலன் எதுவும் பேசவில்லை.

அவனுக்குத் தன் பெற்றோர் இப்படித் தான் கூறுவார்கள் என்று முன்னமே யோசித்தான். அதனால் அவனுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.

“ம் நீங்க சொல்லலைனாலும் நான் இந்தப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணப் போறேன்.” என்று அவன் கூற,

“அப்போ திவ்யாவ எப்படி ஒதுக்குறது?” என்று குமார் கேட்க,

“அதை நான் பார்த்திக்கிறேன். நீங்க போலிஸ்ல எனக்குச் சாதாகமா பேசுனா போதும்.” என்று அவன் கூற,

“டேய் என்ன இப்படிச் சொல்லிட்ட? நீ எங்களோட பையன். உனக்குச் சாதகமா பேசாம யாருக்குச் சாதகமா பேசப் போறோம்?” என்று வசந்தி கேட்க,

இளமுகிலன் பதில் கூறுவதற்கு முன்பு அவர்கள் வீட்டில் வேலைச் செய்யும் பவுன் வேகமாக அங்கு வந்து,

“அம்மா போலிஸ் வந்திருக்காங்க கீழ, தம்பியைக் கூப்பிடுறாங்க.” என்று அவர் கூற,

“நீங்க இரண்டு பேரும் முதல்ல போங்க, நான் பின்னாடியே வரேன்.” என்று அவன் கூற, அவர்களும் தலையை ஆட்டிவிட்டு சென்று விட்டனர்.

இளமுகிலனுக்கு இங்கு வருவதற்கு முன்பு வரை சிறிது நம்பிக்கை இருந்தது அவனது பெற்றோர் அவனுக்காக யோசிப்பார்கள் என்று. ஆனால் இப்போது அவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. அவனது பெற்றோரா இப்படி என்று!! அப்போது தனக்காக தன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென அவர்கள் படிக்க வைக்கவில்லை. அவர்கள் சொகுசாக வாழ வேண்டுமென்பதற்காகத் தான் தன்னைப் படிக்க வைத்திருக்கிறார்கள். அதைக் கூட அவன் தன் பெற்றோர்களுக்குச் செய்யும் கடமையாக எண்ணிச் செய்துவிடுவான். ஆனால் காசுக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை இன்று நன்றாகப் புரிந்து கொண்டான்.

Advertisement