Advertisement

நீண்ட நாட்களுக்குப் பிறகு அஸ்வத் ஹரிதாவை தனியாக அழைத்து வந்திருந்தான். அதுவும் ஆகாஷால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பிறகு, ஹரிதா அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இப்போதும் கூப்பிடதும் அவள் வரவில்லை. அவன் அவளிடம் கெஞ்சி கேட்ட பிறகு தான் அவள் அவனுடன் வருவதற்குச் சம்மதித்தாள்.

“சாரி ஹரி!!! நான் இப்படியாகும்னு எதிர்பார்க்கலை. அதுவும் ஆகாஷோட அப்பா இப்படிப் பேசுவார்னு நான் யோசிக்கலை. நான் நல்லதுக்குனு செஞ்சது எப்படியோ போய் முடிஞ்சுடுச்சு. என் தங்கச்சிக்குத் தப்பான வாழ்க்கையை நான் அமைச்சு குடுக்க யோசிப்பேனா? கொஞ்சம் யோசிச்சு என்னை மன்னிக்கக் கூடாதா? ஆகாஷை நம்பி நானும் தான் ஏமாந்துட்டேன் ஹரி. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு.” என்று அவன் மனமார மன்னிப்புக் கேட்க, அவன் தப்பை உணர்ந்ததால் ஹரிதாவும் சிரித்துக் கொண்டே,

“சரி அத்தான். ஏதோ தங்கச்சி மேல உள்ள பாசத்துல இப்படிப் பண்ணிட்டனு உன்னை மன்னிச்சு விடுறேன். ஆனால் திரும்பவும் இப்படிப் பண்ணா கண்டிப்பா நான் என்ன முடிவெடுப்பேன்னு எனக்கே தெரியாது. இது தான் லாஸ்ட் அத்தான்.” என்று அவள் கூறவும் தான் அஸ்வத்திற்கும் நிம்மதியாக இருந்தது.

சிறிது நேரம் வெளியே சுற்றிவிட்டு ஹரிதாவிற்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்து அவளிடம் கொஞ்சம் நல்ல பெயர் எடுத்து விட்டு வீட்டுக்கு வந்தார்கள். அஸ்வத்தை பார்த்த ராகவன் அவனை முறைத்து விட்டு எழுந்து உள்ளே செல்ல, சோகமாக அவனும் அவனது அறைக்குச் சென்றான்.

ராகவனும் மட்டும் இன்னும் அஸ்வத்தின் மேல் கோபத்துடன் தான் இருக்கிறார். ப்ரனவிகா கூட அவனை மன்னித்து விட்டால். ஆனால் அவரால் அவனை மன்னிக்கவே முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை தான் இருக்கும் போதே அஸ்வத் தங்கையைப் பற்றி எதுவும் யோசிக்காமல், அவளிடம் விருப்பம் கேட்காமல் அவனாகவே முடிவெடுத்துச் செய்தது அவரை மிகவும் பாதித்து விட்டது. ஒரு வேளை நாளைக்கு அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன தான் ப்ரனவிகா தைரியமான பெண்ணாக இருந்தாலும் அஸ்வத் அவளைக் கை கழுவி விட்டுருவானோ என்று யோசித்தார். அதனால் அவரால் எளிதாக அவனை மன்னிக்க முடியவில்லை. அவரைச் சமாதானப்படுத்த வழி தெரியாமல் அஸ்வத் அல்லாடிக் கொண்டிருக்கிறான்.

~~~~~~~~~~

அடுத்த நாள், ப்ரனவிகா சீக்கிரம் எழுந்து தயாராகி காலை உணவை அனைவருக்கும் முன்பு சாப்பிட்டு விட்டு பூர்ணிமாவிடம் மட்டும்,”அத்தை எனக்கு ஒரு வேலை இருக்கு. அதனால் நான் சீக்கிரம் போறேன் அத்தை. அப்பாகிட்ட நைட்டே சொல்லிட்டேன். என்ன விஷயம்னு நான் வந்ததும் சொல்றேன் அத்தை.” என்று கூறிவிட்டு அவள் பூர்ணிமாவின் பதிலைக் கூடக் கேட்காமல் சென்று விட்டாள்.

அவள் நேராகச் சென்றது இளமுகிலன் வீட்டிற்குத் தான். அவன் அவனது வீட்டில் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அவன் எழுந்து சென்று கதவைத் திறக்க, ப்ரனவிகா நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் சிரிப்புடன் அவளுக்கு உள்ளே வர வழி விட்டான்.

“வா வா ப்ரனவிகா. உனக்குத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். சாப்பிட்டியா?” என்று கேட்க,

“ம் இப்போ தான் சாப்பிட்டு வந்தேன். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று அவள் கேட்க,

“இல்லை, நீ வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஒரு வேளை நீ சாப்பிடாமல் இருந்தா சேர்ந்து சாப்பிடலாம்னு தான்.” என்று அவன் சாதாரணமாகக் கூற, கேட்ட அவளுக்குத் தான் கஷ்டமாகி விட்டது.

“அச்சோ!!இப்போவும் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, வாங்க சேர்ந்து சாப்பிடலாம். வயிறுல இன்னும் கொஞ்சம் இடமிருக்கு.” என்று அவள் கூற,

அவளது கையைப் பற்றி,”ஹேய் எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை. நீ எனக்காகச் சாப்பிடறேன்னு உடம்புக்கு முடியாமல் போகப் போகுது.” என்று அவன் கூற,

“அதெல்லாம் இல்லை முகிலன். நான் உங்களைப் பார்க்க வரேன்னு கம்மியா தான் சாப்பிட்டேன். அதுவுமில்லாமல் உங்களோட சாப்பாட்டைச் சாப்பிட எனக்குக் கிடைச்ச சான்ஸை நான் மிஸ் பண்ண மாட்டேன்.” என்று அவள் கூற, அவன் அவளது தலையில் கை வைத்து ஆட்டி விட்டுச் சிரிப்புடன் உள்ளே சென்றான்.

அவள் காலையில் அழைத்து அவனது வீட்டுக்கு வருவதாகக் கூற முதலில் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. பின்னர் ப்ரனவிகா தான் அவனிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டுமெனக் கூற, ஆவலுடன் அவளுக்கும் சேர்த்துச் சமைத்திருந்தான்.

பூரியும் சிக்கன் குருமாவும் செய்திருந்தான். ப்ரனவிகாவிற்கு சைவத்தை விட, அசைவம் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கன் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதனாலே அவன் சிக்கன் குருமா செய்திருந்தான். அதைப் பார்த்ததும் ப்ரனவிகாவிற்கு மகிழ்ச்சியாகி விட்டது.

“வாவ் செம முகிலன். எனக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்னு எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்று அவள் கேட்க,

“அதெல்லாம் தெரியும் ப்ரனவிகா. நேத்து உன்னோட பேஸ்புக் பார்த்தேன். அதுல நீ ஏதோ ஹோட்டல் போய் ஆர்டர் பண்ண டிஃபன் எல்லாத்தையும் ஒரு ஃபோட்டோவா போட்டிருந்த, அதுல சிக்கன் ஐட்டம்ஸ் தான் நிறையா இருந்தது. அதிலயும் மை ஃபேவரிட் சிக்கன் அப்படினு ஹாஷ்டேக் வேற!! அதுல தெரிஞ்சுக்கிட்டேன் உனக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்னு.” என்று இளமுகிலன் கூற, சத்தியமாக இப்படி ஒரு பதிலை ப்ரனவிகா எதிர்பார்க்க வில்லை. அப்படியே தாவி அவனை அனைத்துக் கொள்ள, முதலில் திகைத்த இளமுகிலன் பின்னர் சிரிப்புடன் அவளை அனைத்துக் கொண்டான்.

“உங்ககிட்ட பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கா? நான் நாலு வருஷம் எவ்ளோ தேடுனேன் தெரியுமா?” என்று அவள் கேட்க,

“ம்ஹூம் நேத்து தான் புதுசா ஒப்பன் பண்ணேன். உனக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் கூட கொடுத்தேன்னே.” என்று அவன் கூற,

“அப்படியா?? நான் கவனிக்கலையே!!” என்று வேகமாக அவளது கைப்பேசி எடுத்துப் பார்க்க, அதில் அவன் கூறியது போலவே அவன் அனுப்பி இருக்க, வேகமாக அவனை அவளது தோழனாக முகப்புத்தகத்தில் ஏற்றுக் கொண்டாள்.

“சரி இரு நான் போய் பூரி சுட்டு எடுத்துட்டு வரேன்.” என்று அவன் கூற,

“நான் கிட்சன்னுக்கே வரேன். தனியா உட்கார்ந்து என்ன பண்றது?” என்று கூறி அவளும் அவனுடன் செல்ல, இளமுகிலன் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு அதில் கடாயை வைத்து, சூடானதும் எண்ணெய்யை ஊற்றினான். எண்ணெய் சூடாவதற்குள் பூரியைத் தட்டி பக்கத்தில் வைத்துக் கொண்டான். எண்ணெய் சூடானதும் ஒவ்வொன்றாகப் பொறித்து எடுத்து தட்டில் வைத்து சிக்கன் குருமா ஊற்றி ப்ரனவிகாவிற்கு கொடுத்தான்.

ஒரு விள்ளல் தான் எடுத்து வாயில் வைத்திருப்பாள், அப்படியே கரைந்து விட்டாள்.

“இவ்ளோ சூப்பரா சமைப்பீங்கனு நான் எதிர்ப்பார்க்கலை முகிலன். செமயா இருக்கு.” என்று ரசித்துக் கூறி அவள் சாப்பிட, அவனும் அவளை ரசித்தபடியே பூரியைச் சுட்டு அவளுக்குக் கொடுத்தான். ஒரு பூரி மட்டுமே அவள் முழுவதும் சாப்பிட்டாள். இரண்டாவது பூரி அவன் தட்டில் வைத்ததும் அவள் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அவனுக்கு ஊட்ட எடுத்துட்டு போக,

“நீ முதல்ல சாப்பிடு ப்ரனவிகா. நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்.”

“ப்ச் முகிலன். நான் ஏற்கனவே ஒன்னு சாப்பிட்டேன். அதுவுமில்லாம இதை ஃபுல்லா உங்களுக்குத் தரலை!! ஒரு வாய் உங்களுக்கு ஒரு வாய் எனக்கு.” என்று அவள் கூற, அவனும் அவள் ஆசையாக ஊட்ட வருவதால் மறுப்புக் கூறாமல் வாங்கிக் கொண்டான். ஒரு கட்டத்தில் அவளால் சாப்பிட முடியாமல் முழுவதும் அவனுக்கே ஊட்டி விட்டாள். அவனும் சாப்பிட்டு முடிக்க, இருவரும் கை கழுவி விட்டு கூடத்தில் வந்து அமர்ந்தனர்.

“ப்ரனவிகா காலைல பேசும் போது ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்ன!! என்ன விஷயம்?”

“ம் ஆமா முகிலன். உங்களோட பூரி சிக்கன் குருமால நான் வந்த விஷயத்தையே மறந்துட்டேன். அது வந்து நேத்து நான் அப்பாகிட்ட நடந்த விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு நான் சொல்றதுக்கு முன்னாடியே எல்லாம் தெரிஞ்சுருக்கு முகிலன்.” என்று அவள் கூற, அவனோ திகைத்துப் பார்த்தான்.

“என்ன சொன்னாங்க?” என்று அவன் கேட்க,

“ப்ச் முகிலன் உங்க மேல எந்தத் தப்புமில்லைனு புரிஞ்சுகிட்டாங்க. அதுவுமில்லாம அப்பா உங்களை தன்னோட மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டாங்க.” என்று அவள் கூற, அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.

“எனக்கு என்னமோ அவருக்கு என் மேல நல்ல ஒப்பியன் வந்திருக்காதுனு தோனுது ப்ரனவிகா.” என்று அவன் கூற,

“என்ன சொல்றீங்க முகிலன்? ஏன் இப்படிச் சொல்றீங்க?” என்று அவள் கேட்க,

“ஆமா ப்ரனவிகா எந்தத் தகப்பனுக்கும் தன்னுடையப் பொண்ணுக்கு வரப் போற மாப்பிள்ளை தைரியமானவனா, எந்தச் சூழ்நிலையையும், பிரச்சினையையும் சமாளிக்கத் தெரிஞ்சவனா இருக்கனும்னு தான் நினைப்பாங்க. ஆனால் நான் எனக்கு வந்த பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் பயந்து ஓடி வந்தவன். அப்போ ஒரு தயக்கம் இருக்கத் தான செய்யும்.” என்று அவன் கூற,

“முகிலன் அப்பா அப்படி எல்லாம் யோசிச்சுருக்க மாட்டார். அதுவுமில்லாம நீங்க ஒன்னு யோசிக்கனும் முகிலன். உங்களுக்கு வந்தது பிரச்சனைனு சொல்றதை விட, நம்பிக்கைத் துரோகம். உயிருக்கு உயிரா நேசிச்ச பொண்ணு பொய் சொன்னது மட்டுமில்லாம, உங்க மேல பொய்யான கேஸ் வேற கொடுத்துட்டா. அந்த நேரத்துல ஒரு வேளை உங்களுக்குச் சாதகமாகப் பேச யாராவது இருந்திருந்தா கண்டிப்பா நீங்க ஓடி ஒளிஞ்சுருக்க மாட்டீங்க.” என்று அவள் கூற, அவனுக்குமே தோன்றியது அது தான். அந்தச் சூழ்நிலையில் யாராவது ஒருத்தர் அவனுக்குச் சாதகமாக நின்றிருந்தால் கண்டிப்பாக ஏதாவது செய்திருப்பான்.

“எப்படி ப்ரனவிகா நான் எது சொன்னாலும் அதுல ஒரு பாசிட்டிவ் விஷயத்தை மட்டும் யோசிச்சு சொல்ற? என்னை அவ்ளோ பிடிக்குமா?” என்று கேட்க,

“எஸ் முகிலன். எப்படினு எல்லாம் கேட்காதீங்க, ஆனால் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.”

“அதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு ப்ரனவிகா. என்ன தான் நீ நாலு வருஷத்துக்கு முன்னாடி என்னைப் பார்த்திருந்தாலும் என்னைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளா தான் உனக்கு என்னைப் பத்தியே நல்லா தெரிஞ்சுருக்கும். அப்புறம் எப்படி இப்படி?”

“நான் தான் சொல்லிட்டேனே முகிலன். எப்படின்னுலாம் கேட்காதீங்க!! ஏனா எனக்கும் தெரியாது. உங்களைப் பிடிக்கும் அதுவும் நிறையப் பிடிக்கும் அவ்ளோ தான்.” என்று கூற,

“ஐ லவ் யூ ப்ரனவிகா.” என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் வைக்க, அப்படியே அதிர்ச்சியாகி விட்டாள் ப்ரனவிகா. அதுவும் சில நொடிகள் தான், அவளது அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். இந்த நாளிற்குத் தான் அவள் அத்தனை வருடங்கள் காத்திருந்தாள். அது நிஜமாக நடந்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு.

சரியாக அவர்களது நிலையை ப்ரனவிகாவின் கைப்பேசி ஒலி கலைக்க, அவனிடமிருந்து விடுபட்டு அவளது கைப்பேசியை எடுத்தாள். ராகவன் தான் அழைத்தார்.

“சொல்லுங்க அப்பா?”

“எங்க இருக்க மா?”

“முகிலன் வீட்டுல தான் அப்பா. நீங்க நேத்து சொன்ன விஷயத்தை சொல்லலாம்னு வந்தேன் அப்பா.” என்று அவள் கூற,

“நீ மாப்பிள்ளையை கூட்டிட்டு நம்ம ஹோட்டலுக்கு வா மா. நான் அவரைப் பார்த்து நேர்லயே விஷயத்தைச் சொல்றேன்.” என்று அவர் கூறியதும்,

“சரி அப்பா கூட்டிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு வைத்தாள். இளமுகிலன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

“முகிலன், அப்பா உங்களைப் பார்க்கனுமாம். நம்ம ஹோட்டலுக்கு போகலாமா?” என்று அவள் கேட்க, அவனுக்குமே அவரிடம் பேச வேண்டுமெனத் தோன்ற, சரியென்று தலையசைத்தான்.

இருவரும் கிளம்பி, ப்ரனவிகாவின் வண்டியிலே அவர்களது உணவகத்திற்குச் சென்றனர். என்ன தான் அவள் கூப்பிடதும் அவன் வருகிறேன் என்று கூறினாலும் ஏனோ அவனுக்கு மனதிற்குள் பயமாகவே இருந்தது. அதை வெளியில் காட்டாமல் அமைதியாக வந்தான்.

“என்ன முகிலன் டென்ஷனா இருக்கா?” என்று ப்ரனவிகா கேட்க,

“எஸ் லைட்டா!!” என்று அவன் கூற,

“டோன்ட் வொர்ரி முகிலன். அப்பா ரொம்ப ஃப்ரெண்டலி. நீங்க டென்ஷனாக வேண்டாம். பீ கூல். நானும் உங்க கூடத் தான் இருப்பேன்.” என்று அவள் கூற, அவனுக்குச் சிறிது நிம்மதியாக இருந்தது.

இருபது நிமிடத்தில் அவர்களது உணவகம் வர, ப்ரனவிகா வண்டியை நிறுத்திவிட்டு இறங்க, இளமுகிலனும் கீழே இறங்கினான். இருவரும் உள்ளே செல்ல, மக்கள் ஆங்காங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ப்ரனவிகா இளமுகிலனை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள். மாடியிலும் சில மேஜைகளில் மக்கள் உட்கார்ந்திருக்க, அங்கு ஓரமாக ஒரு அறை இருந்தது. அந்த அறையைத் திறக்க, உள்ளே ராகவனுடன் நம்பியப்பனும் அமர்ந்திருந்தார். ப்ரனவிகா தன் தந்தை மட்டும் தான் இருப்பார் என்று நினைக்க, தாத்தாவும் இருப்பதைப் பார்த்து சிறிது தயங்கினாள். பின்னர் தாத்தா ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் இளமுகிலனின் கையைப் பற்றி உள்ளே அழைத்து வந்தார்.

ராகவனும் நம்பியப்பனும் இளமுகிலனை ஆராய்ச்சியாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு இருவரும் அவர்களுக்குள் கண்களாலே ஆள் பார்க்க நன்றாக இருக்கிறான் என்ற செய்தியைப் பரிமாறிக் கொண்டனர்.

“உட்காரு பா.” என்று நம்பியப்பன் கூற, ப்ரனவிகா அவரைக் காட்டி,

“இவர் என்னோட தாத்தா. அப்புறம் இவர்(ராகவனை காமித்து) தான் என் அப்பா.” என்று அறிமுகப்படுத்த,

“வணக்கம் தாத்தா, வணக்கம் அங்கிள்.” என்று கையெடுத்துக் கும்பிட்டு இருவருக்கும் தனித்தனியாகக் கூற, நம்பியப்பன் மெச்சுதலாகப் பார்த்தார்.

“நீங்க என்னைப் பார்க்கனும்னு சொன்னீங்களாம். சாரி அங்கிள், நீங்கக் கூப்பிடுறதுக்கு முன்னாடி நானே வந்து உங்களைப் பார்த்திருக்கனும். நேத்து தான் என்னோட விருப்பத்தையே நான் சொன்னேன். இன்னைக்கு ப்ரனவிகாகிட்ட கேட்டுட்டு உங்களைப் பார்க்கலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்களே கூப்பிட்டீங்க.” என்று அவன் கூற,

“பரவால தம்பி. யார் கூப்பிட்டா என்ன? அதான் வந்தாச்சுல. சரி நேரா நான் விஷயத்துக்கே வரேன்.” என்று ராகவன் பேச, அவரை இடைமறித்த ப்ரனவிகா,

“அப்பா, தாத்தாகிட்ட சொல்லிட்டீங்களா?” என்று கேட்க,

“நான் என்ன உன் அண்ணன் மாதிரியா!! எப்போவும் எதுவும் என் அப்பாவைக் கேட்காமல் நான் செய்ய மாட்டேன் ப்ரனு. நீ திருச்சி போயிட்டு வந்து என்கிட்ட சொன்னதுமே நான் அப்பாகிட்ட சொல்லிட்டேன் டா.” என்று அவர் கூற,

“அப்போ வீட்டுல எல்லாருக்கும் தெரியுமா?”

“இல்லை. எனக்கும் உன் தாத்தாவுக்கும் மட்டும் தான் தெரியும்.” என்று அவர் கூறியதும் தான் அவளுக்கு நிம்மதி.

“உங்க பேர் இளமுகிலன் தான?” என்று ராகவன் கேட்க,

“ஆமா அங்கிள்.”

“ப்ரனவிகா ஏதோ ஏதோ சொன்னா!! நானும் உங்களைப் பத்தி எல்லாம் விசாரிச்சேன். பட் நீங்கக் கொஞ்சம் தைரியமா பிரச்சனையை ஃபேஸ் பண்ணிருக்கலாம். ஏன் இந்த ஒளிவு மறைவான வாழ்க்கை. இது வாழ்க்கை முழுசும் எப்படி நீடிக்கும்? என் பொண்ணை எப்படி நம்பி என்னால குடுக்க முடியும்?” என்று ராகவன், இளமுகில் பயந்தது போலவே கேட்க, ப்ரனவிகா அவனைத் தான் பார்த்தாள்.

இளமுகிலன் சிரித்துக் கொண்டே,”அங்கிள் எனக்கு உங்களோட எண்ணம் புரியுது. எனக்குமே அப்படி ஓடி வந்தது சுத்தமா பிடிக்கலை. என்னோட அப்பா அம்மா கூட என்னை நம்பலை!! நான் தப்புப் பண்ணிருப்பேன்னு தான் பேசுனாங்க. எங்க நான் அங்கேயே இருந்தால் எனக்கு திவ்யாவ கல்யாணம் பண்ணி வைச்சுடுவாங்களோனு பயம். திவ்யாவோட அப்பா அரசியல்வாதி. அவருக்குத் திருச்சில நிறைய செல்வாக்கு இருக்கு. அவர் நினைச்சா எதுவும் செய்வார். அவருக்கு திவ்யானா உயிர். அதனால எங்க என்னோட வாழ்க்கை அழிஞ்சுடுமோனு பயம் வந்தருச்சு. அப்போ எனக்கு வேற வழியும் தெரியலை!! நான் செஞ்சதை நியாயப் படுத்தலை அங்கிள். எனக்குக் கொஞ்சம் டைம் மட்டும் தாங்க. நான் நாளைக்கே ஊருக்குப் போய் இந்தப் பிரச்சனைக்கு எப்படியாவது ஒரு முடிவுப் பண்ணிட்டு வரேன்.” என்று அவன் கூற, ராகவனும் நம்பியப்பனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“இளமுகிலன் உன்னால இந்தப் பிரச்சனைக்கு முடிவுக் கட்டமுடியும்னு நம்புறியா?” என்று நம்பியப்பன் கேட்க,

“முடியும்னு என்னால நம்பிக்கையா சொல்ல முடியாது தாத்தா. ஆனால் முயற்சி செய்வேன் தாத்தா. இத்தனை நாள் எனக்காக யாருமில்லைனு தான் நான் அமைதியா இருந்தேன். ஆனால் இப்போ எனக்குனு ப்ரனவிகா இருக்கா தாத்தா. கண்டிப்பா நான் ஏதாவது முயற்சி செய்வேன் தாத்தா. என்னை நம்புங்க தாத்தா.” என்று அவன் கூற,

“ம் சரி இளமுகிலன். எங்களை ரொம்ப நாள் காத்திருக்க வைச்சுடாத பா. ப்ரனு எங்க வீட்டுச் செல்ல பேத்தி. அவள் கஷ்டப்படுறதை எங்களால பார்க்க முடியாது. ஸோ சீக்கிரம் இந்தப் பிரச்சனையை முடிச்சுட்டு வா. நாங்க சந்தோஷமா உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.” என்று நம்பியப்பன் கூற,

“அப்பா நேத்து மாப்பிள்ளையை நாளைக்கு அவரோட ஊருக்குப் போகச் சொல்லு மா. மத்ததை நான் பார்த்திக்கிறேன்னு நீங்க சொன்னீங்க. இப்போ இப்படி அவரைப் போகச் சொன்னா எப்படி அப்பா? அவர் போய் என்ன பண்ணுவார்?” என்று ப்ரனவிகா கேட்க,

“நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுட்ட ப்ரனு. அவரை நாளைக்கு ஊருக்குப் போகச் சொல்லுனு சொன்னது இந்தப் பிரச்சனையை முடிச்சுட்டு வரச் சொல்லுனு அர்த்தம். அப்புறம் மத்ததை நான் பார்த்துக்கிறேன் சொன்னது நம்ம வீட்டுல மத்தவங்ககிட்ட நான் பேசிக்கிறேன்னு சொன்னேன்.” என்று அவர் கூற, ஏமாற்றத்துடன் அவரைப் பார்த்தாள் ப்ரனவிகா.

இளமுகிலன் அவளது கையை அழுத்தி,”டோன்ட் வொர்ரி ப்ரனவிகா. நான் வீட்டுல சொன்னது தான். நேத்து வரைக்கும் யாருக்காக உயிர் வாழனும்னே தெரியாமல் வாழ்ந்துட்டு இருந்தேன். ஆனால் இன்னைக்கு நீ என் கூட இருக்கிறதே எனக்குப் பெரிய பலம். நம்பிக்கையோட இரு, கண்டிப்பா ஏதாவது வழி இருக்கும்.” என்று ஆறுதலாக அவன் கூற, அவளுக்கு மனசே இல்லை என்றாலும் அவன் கூறியதால் அமைதியாக எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

“சரி அங்கிள். நான் இன்னைக்கு மதியமே கிளம்புறேன். சீக்கிரம் நல்ல செய்தியோட வரேன். என்னை நீங்கத் தாராளமாக நம்பலாம். நான் கிளம்புறேன். வரேன் அங்கிள். வரேன் தாத்தா.” என்று அவன் கூற, அவர்கள் தலையை மட்டும் அசைத்தனர்.

ப்ரனவிகா அவர்களைப் பார்க்காமலே,”நானும் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு முகிலன் பின்னாலே அவளும் அறையை விட்டு வெளியே வந்து விட்டாள்.

Advertisement