Advertisement

காவலர்கள் வந்திருப்பதாக ரேஷ்மி கூறியதும், இளமுகிலனுக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. ஒரு வேளை ப்ரனவிகா தார் வர வைத்திருப்பாளோ என்று தவறாக நினைத்தான். இப்போது என்ன செய்வதென அவன் யோசிக்க, வெளியே சென்ற ப்ரனவிகா மீண்டும் உள்ளே வந்து,”முகிலன் இங்கேயே இருங்க, நீங்க வெளில வர வேண்டாம். நான் போய் என்ன விஷயம்னு கேட்டுட்டு வரேன்.” என்று அவள் கூறிவிட்டு அவன் பதிலளிக்க இடமளிக்காமல் செல்ல, இளமுகிலனுக்கு அப்போது தான் ஆசுவாசமாக இருந்தது. ப்ரனவிகாவை ஒரு நொடி தப்பாக நினைத்ததை நினைத்து அவனையே திட்டிக் கொண்டான்.

வெளியே வந்த ப்ரனவிகா வேகமாகக் கீழே சென்றாள். அவள் செல்வதற்குள் கூட்டம் கூடிவிட்டது. இவள் வருவதைப் பார்த்து காவலர் இவளிடம் வந்து,”மேடம் உங்க அகாடமில படிக்கிற பொண்ணை நேத்துல இருந்தது காணோம். அது சம்பந்தமா விசாரிக்கத் தான் வந்தேன்.” என்று அவர் கூற,

“என்ன சார் சொல்றீங்க? யார் அந்தப் பொண்ணு? என்ன கோர்ஸ் படிக்கிறாங்க இங்க?” என்று அவள் கேட்க, காவலர் அதற்கான விவரத்தைக் கூற, ப்ரனவிகா ரேஷ்மியை ஒரு பார்வைப் பார்க்க, அவள் வேகமாக உள்ளே சென்று அன்றைய நாளுக்கான வருகைப் பதிவேட்டைப் பார்க்க, அதில் அவர்கள் சொன்ன பெண் அன்று வரவில்லை என்று தெரிய, வேகமாக வந்து ப்ரனவிகாவிடம் கூறினாள்.

“சார் அந்தப் பொண்ணு இன்னைக்கு வரலை. நேத்து அந்தப் பொண்ணு வந்துருக்கு சார். எங்க அகாடமில சீசீடிவி வச்சுருக்கோம். அதுல உங்களுக்கு ஏதாவது உதவுதானு பாருங்க.” என்று அவள் கூறி காவலர்களை அழைத்துக் கொண்டு மீட்டிங் அறைக்குச் சென்றாள்.

நேற்றையப் பதிவைப் போட்டுப் பார்க்க, அதில் அந்தப் பெண் அகாடமி விட்டு வெளியே வந்து ஒரு வாலிபனுடன் ஆட்டோவில் ஏறுவது நன்றாகத் தெரிந்தது.

“இது ஏதோ காதல் விஷயமா படுது. சரிங்க மேடம் நாங்க வரோம். இந்த வீடியோ ஒரு காப்பி எடுத்துட்டு போறோம்.” என்று கூற,

“ஓ சுயர் சார்.” என்று கூறி ப்ரனவிகா ரேஷ்மியிடம் அவர்களுக்கு ஒரு நகல் கொடுக்கச் சொல்ல, அவளும் ப்ரனவிகா கூறியதைச் செய்தாள். காவலர்கள் அங்கிருந்து சென்றதும் ப்ரனவிகா அவளது அறைக்குச் சென்றாள்.

இளமுகிலன் கவலையுடன் உட்கார்ந்திருந்தான். ப்ரனவிகா கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய, இளமுகிலன் தலையை நிமிர்த்திப் பார்க்க, அவள் அவன் முன் வந்து அமர்ந்தாள்.

“முகிலன் உங்க லைஃப்ல ஏதோ ப்ராப்ளம்னு எனக்கு நல்லா தெரியும். ஆனால் அது என்னன்னு எனக்குச் சரியா தெரியுது. உங்களுக்கு விருப்பமிருந்தா, என்னை நம்பினா என்கிட்ட நீங்கச் சொல்லலாம்.” என்று அவள் கூற,

“உங்ககிட்ட சொல்லனும்னு நான் முன்னாடியே முடிவுப் பண்ணது தான். ஆனால் நான் சொல்றதுக்கு முன்னாடியே நீங்க கேட்டதும் எனக்கு ஒரு மாதிரியாகிடுச்சு. ஒரு நிமிஷம் எதுவுமே ஓடலை எனக்கு.” என்று அவன் கூற,

“ம் முகிலன் நீங்க என்னை வா போனே சொல்லலாம். மரியாதையா கூப்பிடுறது ஒரு மாதிரி இருக்கு.” என்று அவள் கூற,

“சரிங்க…சாரி சரி ப்ரனவிகா.” என்று அவன் கூற,

“முகிலன் இங்கப் பேசுறது சரியா இருக்காது. எங்கயாவது வெளில போகலாமா?”

“எங்க போறது?” என்று அவன் கேட்க,

“நாம அன்னைக்குப் போன கோவிலுக்குப் போகலாமா?” என்று அவள் கேட்க, ஒரு நிமிடம் யோசித்தான். நேரத்தைப் பார்த்தான். அது காலை பதினோர் மணி என்று காட்டியது. இந்தச் சமயம் கூட்டம் இருக்காது. அதனால் சரியென்று அவன் கூற, இருவரும் கிளம்பி கோவிலுக்குச் சென்றனர்.

முதலில் சாமியைக் கும்பிட்டு விட்டு ஓரமாகச் சென்று அமர்ந்தனர். பின்னர் இளமுகிலன் அவன் வாழ்வில் நடந்த கொடுமைகளைக் கூற ஆரம்பித்தான்.

“நீ என்னோட பாட்டைக் கேட்டுட்டு என்னைப் பாராட்டி வாய்ஸ் நல்லா இருக்குனு சொன்ன ஞாபகம் இருக்கா?” என்று அவன் கேட்க,

“முகிலன் ஜோக் அடிக்காதீங்க. என்கிட்ட ஞாபகமிருக்கானு கேட்கிறீங்களா? நான் மறந்தா தான அதை ஞாபகம் படுத்த?” என்று அவள் கூற, அவன் மெலிதாகச் சிரித்து,

“அன்னைக்கு, அதே நேரம் நான் திவ்யாவை பார்த்தேன். அவளும் என்னோட வாய்ஸ் நல்லா இருக்கு. நான் சூப்பரா பாடுனேன்னு பாராட்டினா. அப்படித் தான் எங்களோட தொடர்பு ஆரம்பிச்சது. நான் செய்த ஒரே தப்பு அவளை அதுக்கு அப்புறம் சந்திச்சது தான்….” என்று கூறி திவ்யா செய்த அத்தனை அட்டூழியத்தையும் கூறினான். அவன் கூறக் கூற ப்ரனவிகாவிற்கு திவ்யா மேல் பயங்கர கோபம் வந்தது. அவள் அவளது கண் முன்னாடி நின்றிருந்தாள் சத்தியமாக ஒரு வழி செய்திருப்பாள்.

“ப்ச் நான் அவளை ரொம்ப நம்பிட்டேன். அவள் சொன்ன மாதிரி நான் அவளை உண்மையா காதலிச்சுருந்தா அவள் எப்படியிருந்தாலும் நான் அவளை அக்செப்ட் பண்ணனும்னு நினைச்சேன். ஆனால் மனசு ஏதோ தப்புனு சொல்லிட்டே இருந்தது. அதை யோசிக்காமல் அடுத்த நாள் அவள் கூப்பிட்டதும் லூசு மாதிரி போய் என் வாழ்க்கையை நான் இழந்துட்டேன். அதை விட என்னோட அப்பா அம்மாவுக்கு என்னை விட, காசு பணம் பெருசா போயிடுச்சு.” என்று அவன் வருத்தத்துடன் கூற,

“முகிலன் உங்களோட கஷ்டம் எனக்குப் புரியுது. ஆனால் நீங்க இப்படி எத்தனை நாள் ஓடி ஒளிய முடியும்னு நினைக்கிறீங்க?”

“எனக்கும் தெரியும். அதனால தான் இப்போ எனக்கு என்ன நடந்தாலும் பரவால அப்படினு தான் நான் இங்க வேலைக்கே வந்தேன். ஆனால் வந்த இடத்துல உன்னைப் பார்ப்பேன். நீ என்கிட்ட லவ்வ சொல்லுவனு நான் எதிர்பார்க்கலை. நீ சொன்னதும் நான் இந்த ஊரை விட்டுப் போகனும்னு தான் நினைச்சேன். இன்னொரு முறைக் காதல்லால நான் கஷ்டப்பட விரும்பலை. ஆனால் நீ வந்து என்கிட்ட பேசுனதும் சரி என்ன தான் நடக்குதுனு பார்த்துக்கலாம்னு தான் நான் வந்தேன். ஆனால் எப்போனு எனக்கே தெரியலை நானும் உன்னை லவ் பண்றேன்னு புரிஞ்சுகிட்டேன். அதுவும் நீ நேத்து என்னைக் கண்டுக்காமல் போன போது தான் நான் புரிஞ்சுகிட்டேன். அதுவுமில்லாம இன்னைக்கு அந்த ஆகாஷ் வந்து அவன் உன்னைக் கல்யாணப் பண்ணப் போறதா சொன்னதும் அது உண்மையா இருக்கக் கூடாதுனு நான் வேண்டாத தெய்வம் இல்லை.” என்று கூற, அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.

“முகிலன் நீங்க இனிமேல் எதுக்கும் பயப்பட வேண்டாம். போதும் நீங்க ஓடி ஒளிஞ்சது. நாம இனி எதுவா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணலாம் முகிலன். நான் இருக்கேன் உங்களுக்கு.” என்று கூறி அவனது கையைப் பிடிக்க, அவனும் அவளது கையைப் பிடித்து அழுத்தினான்.

“தாங்க்ஸ் ப்ரனவிகா. எனக்குத் தெரியும் நீ என்னைப் புரிஞ்சுப்பனு. சரி எப்படி உனக்கு திவ்யா என் மேல கொடுத்த கேஸ் பத்தியும் போலிஸ் என்னைத் தேடுறாங்கனு தெரியும்?” என்று அவன் கேட்க,

“நேத்து நான் இங்க வந்துட்டு உங்களைக் கண்டுக்காம போயிட்டேன்னு சொன்னீங்கள!! நான் இங்க வந்ததுக்கு காரணம் உங்களோட அட்ரெஸை பார்க்கத் தான்.” என்று அவள் கூற, அவன் புரியாமல் அவளைப் பார்த்தான்.

“நீங்களா உங்களைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்கிறீங்க. ஆனால் உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்குனு மட்டும் புரிஞ்சது. அதான் நானே கண்டுபிடிக்கலாம்னு தான் உங்க ஊருக்குப் போகலாம்னு முடிவுப் பண்ணி நேத்து உங்க அட்ரெஸ் பார்க்க வந்தேன்.” என்று அவள் கூற, அவனுக்கு எப்படி எதிர் வினை ஆற்ற என்று தெரியவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தான் எதுவும் பேசாமல். ப்ரனவிகாவே தன் பேச்சை ஆரம்பித்தாள்,

“நீங்களே என்கிட்ட சொல்ற ஐடியால இருக்கிறது எனக்குத் தெரியாது. அப்படித் தெரிஞ்சுருந்தா நான் போயிருக்க மாட்டேன்.” என்று அவள் கூற,

“ப்ச் இட்ஸ் ஓகே ப்ரனவிகா. முசிறிக்குப் போனியா” என்று அவன் கேட்க,

“ம் ஆமா. அங்க போய் உங்களோட பேர் சொல்லிக் கேட்டேன். அப்போ தான் உங்களைப் பத்திச் சொன்னாங்க. நீங்க ஏதோ பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டதாவும், அது போலிஸ் கேஸ்ஸாகி நீங்க அவங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டு ஊரை விட்டு ஓடியதாவும் சொன்னாங்க. எனக்கு அதைக் கேட்டு ரொம்ப ஷாக். எனக்குத் தெரிஞ்சு நீங்க அப்படிக் கிடையாதுனு தெரியும். ஸோ அந்தப் பொண்ணு யார்னு கேட்டப் போது தான் திவ்யா பத்தித் தெரிஞ்சது. அவள் தான் ஏதோ கேம் ஆடிருக்கானு புரிஞ்சது. இன்னைக்கு உங்ககிட்ட இதைப் பத்திப் பேசனும் யோசிட்டு இருந்தேன். நீங்களே பேசிட்டீங்க.” என்று அவள் கூற,

சிறிது நேரம் இளமுகிலன் எதுவும் பேசவில்லை. அவன் ஏதோ யோசிக்கிறான் என்று புரிந்து,”முகிலன் உங்களுக்கு நான் இருக்கேன். நீங்க எந்த முடிவெடுக்கிறதா இருந்தாலும் நான் உங்க கூட இருப்பேன். அதை மட்டும் மறந்துடாதீங்க.” என்று அவள் கூற,

“ரொம்ப தாங்க்ஸ் ப்ரனவிகா. எனக்கு நம்பிக்கை இருந்துச்சு நீ என்னை நம்புவனு. ம் ஓகே நடந்தது நடந்து போச்சு. இனிமேல் நடக்கிறதைப் பார்ப்போம். நான் நாளைக்கே ஊருக்குப் போகலாம்னு இருக்கேன். இனி எது வந்தாலும் பார்த்துக்கலாம். நீ என் கூட இருக்கேன்னு சொன்னதே எனக்கு யானை பலம் வந்த மாதிரி தான் இருக்கு.” என்று அவன் கூற,

“அவசரப்பட வேண்டாம் முகிலன். நான் அப்பாகிட்ட பேசிருக்கேன். நான் சொன்னதுக்கு அப்புறம் நீங்க ஊருக்குப் போங்க.” என்று அவள் கூற,

“என்ன சொல்ற ப்ரனவிகா. உன்னோட அப்பாவுக்கும் இது தெரியுமா? அவர் ஒன்னும் சொல்லையா?” என்று அவன் கேட்க,

“அப்பா எதுவும் சொல்லலை முகிலன். அவர் என்னை முழுசா நம்புறார். நான் தப்பான பையனை செலக்ட் பண்ண மாட்டேன்னு அவருக்கு நம்பிக்கை. அப்பாவுக்கு அவரோட பிள்ளைங்க மேல நம்பிக்கை ஜாஸ்தி. என்ன அஸ்வத் அண்ணாவுக்குக் கொஞ்சம் தலைக்கனம் இருக்கு. அதனால சில நேரம் தப்பான முடிவு எடுப்பான். என்னோட கல்யாண விஷயத்துல நடந்து மாதிரி. அதனால அப்பாவுக்கு அவன் மேல் கொஞ்சம் மனவருத்தம்.” என்று அவள் கூற,

“ம்..” என்று மட்டுமே கூறினான். அவனுக்கு ப்ரனவிகாவின் அப்பாவுக்கும் விஷயம் தெரியும் என்பதிலே ஒரு மாதிரியாகி விட்டான். யாராக இருந்தாலும் தான் காதலிக்கும் பெண்ணின் பெற்றோர் முன்பும் நல்லவனாகத் தெரிய வேண்டுமென்று தான் யோசிப்பார்கள். அவனது யோசனை அவளுக்கும் புரிய,

“முகிலன் டோன்ட் வொர்ரி. அப்பா உங்களைத் தப்பா நினைக்க மாட்டார். அவர் எதுவா இருந்தாலும் யோசிச்சு தான் முடிவெடுப்பார். யூ டோன்ட் வொர்ரி.” என்று கூறி அவனைச் சமாதானப்படுத்த, அவனுக்குத் தெளிந்து தெளியாத நிலை.

பின் சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் ப்ரனவிகாவும் இளமுகிலனும். ப்ரனவிகா இளமுகிலை அகாடமியில் இறக்கி விட்டு அவளது வீட்டுற்குச் சென்று விட்டாள் தன் அப்பாவிடம் பேசுவதற்கு.

இளமுகிலனுக்கும் அகாடமியில் இருக்க மனமில்லாமல் விடுமுறை கூறிவிட்டு அவனது வீட்டிற்குச் சென்றுவிட்டான். வீட்டிற்கு வந்ததும் தான் அவனுக்கு பல வருடங்கள் கழித்து மனம் லேசாகவும் நிறைவாகவும் இருப்பது போல் இருந்தது.

~~~~~~~~~~

தில்லை சங்கர் தன் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துரைச்சாமியைப் பார்த்து,”துரை நான் சொன்ன விஷயம் என்னாச்சு? அந்த இளமுகிலன் பத்தி ஏதாவது நியூஸ் வந்துச்சா இல்லையா? ஒரு வேளை ஆள் போய் சேரந்துட்டானோ!!” என்று கேட்க,

“ஐயா இல்லை. கூடியச் சீக்கிரம் நல்ல செய்தி வரும்னு தோணுது. நீங்க கவலையை விடுங்க, நான் இருக்கும் போது நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க ஐயா.” என்று அவர் கூற, அப்போது அவர்களது அடியாள் ஒருவன் வேகமாக உள்ளே வந்தான். அவனைப் பார்த்த துரைச்சாமி,

“என்ன டா இவ்ளோ வேகமா வர? என்ன விஷயம்?” என்று கேட்க,

“அண்ணே அந்த இளமுகிலனை பத்தி அவங்க ஊர்ல யாரோ வந்து விசாரிச்சுருக்காங்க. தகவல் இப்போ தான் வந்தது. ஆதான் ஓடி வந்தேன்.” என்று அவன் கூற,

“யாரு அவனைப் பத்தி விசாரிச்சது?” என்று சங்கர் கேட்க,

“அது தெரியலங்க ஐயா. ஆனால் ஏதோ பொண்ணு பெரிய கார்ல வந்து விசாரிச்சுட்டு போச்சுனு சொன்னாங்க. இளமுகிலன் பத்தி மட்டுமல்லீங்க நம்ம திவ்யா அம்மா பத்தியும் விசாரிச்சுருக்கு.” என்று கூற, சங்கர், துரைச்சாமி இருவருக்குமே ஒன்றுமே புரியவில்லை. திவ்யாவைப் பற்றி எதற்கு விசாரிக்க வேண்டும்!!!

“அந்தப் பொண்ணு பத்தி வேற ஏதாவது விபரம் தெரியுமா?” என்று துரைச்சாமி கேட்க,

“அதெல்லாம் எதுவும் தெரியலை அண்ணே!!”

“ப்ச் சரி அந்தப் பொண்ணு ஓட்டிட்டு வந்த கார் நம்பராவது தெரியுமா?” என்று கேட்க, அவனோ தலையைச் சொறிந்து கொண்டு அமைதியாக நிற்க,

“சரி நீ போ!!” என்று துரைச்சாமி கூற, அவனும் வந்த வேலை முடிந்து விட்டது சென்று விட்டான்.

“என்ன துரை யாரா இருக்கும்? எதுக்கு திவிமா பத்தியும் விசாரிச்சுருக்கனும்?” சந்தேகமாகக் கேட்க,

“தெரியலங்க ஐயா. நீங்க எதுவும் யோசிக்கதீங்க ஐயா நான் தான் இருக்கேன்ல நான் பாத்துக்கிறேன்.” என்று துரைச்சாமி கூற, சங்கரும் தலையசைத்து விட்டுச் செல்ல, துரைச்சாமி யோசனைக்குச் சென்றார்.

‘வந்தப் பெண் யாராக இருக்கும்? ஒரு வேளை இளமுகிலனுக்காக வந்திருப்பாளா? அப்படி அவனுக்காக வந்திருந்தாள் கண்டிப்பாக அவன் இருக்குமிடம் அவளுக்குத் தெரியும். அவளைப் பிடித்தால் அவன் கிடைக்க வாய்ப்பு இருக்கும். அவன் கிடைத்து விட்டால் போதும் அடுத்து சங்கருக்கு சங்கு ஊத வேண்டிய வேலை மட்டும் தான் பாக்கி’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வந்தது யாரென்று விசாரிக்க வெளியே கிளம்பினார்.

துரைச்சாமி நேராகச் சென்றது முசிறிக்குத் தான். சங்கரின் வீட்டில் அவரிடம் வந்து விஷயத்தைக் கூறியவனையும் உடன் அழைத்துக் கொண்டு தான் வந்திருந்தார்.

“டேய் போய் அந்தப் பொண்ணை நேரில் பார்த்தவனை கூட்டிட்டு வா.” என்று அவர் கூற, அவனும் இறங்கிச் சென்றான்.

சரியாக முக்கால் மணிநேரம் கழித்து அந்த அடியாள் நடுத்தர வயதிலிருக்கும் ஒருவரை உடன் அழைத்து வந்திருந்தான்.

“அண்ணே இவர் தான் பார்த்தது. இவர்கிட்ட தான் இளமுகிலன் வீட்டு அட்ரெஸ் கேட்டிருக்குது அந்தப் பொண்ணு.” என்று அந்த அடியாள் கூற,

“அந்தப் பொண்ணு வந்த கார் ஞாபகத்துல இருக்கா?” என்று துரைச்சாமி கேட்க,

“நல்லா ஞாபகத்துல இருக்குங்க. நான் மெக்கானிக் அதனால் எனக்கு அந்த கார் ஞாபத்துல இருக்கு.” என்று அவர் கூற,

“சரி வண்டில ஏறு.” என்று துரைச்சாமி கூற, அவரும் வண்டியில் ஏறினார் உடன் அந்த அடியாள்.

மூவரும் சென்றது போக்குவரத்து காவல் நிலையத்திற்குத் தான். சங்கரின் வலது கை துரைச்சாமி என்பது திருச்சி மாவட்டத்தில் மட்டுமில்லை, அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால் சங்கருக்கு அளிக்கும் மரியாதையில் நூற்றுக்கு என்பது சதவீதம் மரியாதை அவருக்கும் வழங்கப்படும்.

அவர்கள் அங்கு வந்ததற்கான காரணம் போக்குவரத்துச் சமிக்கையில் இருக்கும் புகைப்படக் கருவியில் ப்ரனவிகாவின் வண்டி இடம் பெற்றிருக்கும். அதைப் பார்க்கவே அங்கு வந்தனர்.

துரைச்சாமி உடன் வந்த அந்த நடுத்தர மனிதரிடம்,”நல்லா பார்த்துச் சொல்லுங்க.” என்று அவர் கூற, அவரும் சரியென்று ஒவ்வொன்றாகப் பார்த்தார்.

ஒரு காணொளியில் ப்ரனவிகாவின் வண்டி தெரிய, அதை அவர் துரைச்சாமியிடம் கூற, துரைச்சாமி அங்கிருந்த காவலரிடம்,”அந்த கார் நம்பர் பார்த்து எனக்கு அவங்களோட டீடெய்ல்ஸ பார்த்துச் சீக்கிரம் சொல்லுங்க.” என்று கூறிவிட்டு அவருடன் வந்த அடியாளிடம்,

“இவரை நம்ம வண்டிலயே கூட்டிட்டு போய் விட்டுட்டு வா. அப்புறம் எதையும் நீ ஐயாகிட்ட இப்போதைக்குச் சொல்ல வேண்டாம். நான் எல்லாம் முடிஞ்சதும் சொல்லிக்கிறேன் சரியா.” என்று அவர் கூற,

“சரிங்க அண்ணே.” என்று கூறி அந்த நடுத்தர மனிதரை அழைத்துக் கொண்டு அவன் அங்கிருந்து சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் காவலர் வந்து அந்த வண்டி யார் பெயரில் இருக்கிறது. அவர்களது முகவரி என்று எல்லாத்தையும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்து தர, அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார் துரைச்சாமி.

~~~~~~~~~~

வீட்டிற்கு வந்த ப்ரனவிகா, ராகவனது வண்டி நிற்பதைப் பார்த்து நேராக அவரைச் சந்திக்கச் சென்றாள். ராகவன் அவரது அறையில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க,

“அப்பா..” என்று அழைத்தபடி அவள் உள்ளே நுழைய, ராகவன் கையைக் காட்டி அவளை உட்காரச் சொல்லி விட்டு, அவர் சற்றுத் தள்ளிச் சென்று பேசிவிட்டு வந்தார்.

“சொல்லு டா.” என்று அவர் கேட்க,

“அப்பா முகிலன் மேல எந்தத் தப்புமில்லை…” என்று அவள் பேச, அவர் அவளை இடைமறித்து,

“எனக்குத் தெரியும் டா. மாப்பிள்ளை ரொம்ப நல்லவர், அந்தப் பொண்ணு தான் மாப்பிள்ளை மேல் தப்பா கேஸ் கொடுத்துருக்கு.” என்று அவர் இளமுகிலனை மாப்பிள்ளை என்று கூற, ப்ரனவிகாவிற்கு பயங்கர சந்சோஷம்.

அவள் இளமுகிலனிடம் கூறியது போல் ராகவன் உடனே அவனை நம்பவில்லை. அஸ்வத் ப்ரனவிகாவின் கல்யாண விஷயத்துல செய்தது அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் ப்ரனவிகா, இளமுகிலன் பற்றிக் கூறும் போது அவரால் முன்பு போல் உடனே தன் பிள்ளைகளின் முடிவை நம்ப முடியவில்லை. அதனால் அவர் தனியாக விசாரித்த போது நிறைய விஷயங்கள் அவருக்குத் தெரியவந்தது. தன் பெண்ணிற்காக எதுவும் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார்.

“மாப்பிள்ளையை நாளைக்கு அவரோட ஊருக்குப் போகச் சொல்லு மா. மத்ததை நான் பார்த்திக்கிறேன்.” என்று அவர் கூற, மிகுந்த உற்சாகத்துடன் அவரை அனைத்துக் கொண்டாள்.

Advertisement