Advertisement

ப்ரனவிகாவிடம் பேசுவதற்காக அகாடமி வந்த ராகவன் அவள் அங்கு இல்லை என்றதும் அவருக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவளுடைய கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க அவர் எடுக்க அவளே அவருக்கு அழைத்து விட்டாள்.

“அப்பா நான் ஒரு விஷயமா வெளில போறேன் அப்பா. வீட்டுக்கு வர லேட்டாகும் அப்பா. அதான் உங்ககிட்ட சொல்ல கால் பண்ணேன் அப்பா.” என்று அவள் கூற,

“ப்ரனு எங்க போற? வீட்டுக்கு வர லேட்டாகுற அளவுக்கு அப்படி என்ன விஷயமா போற?”

“அப்பா நான் போயிட்டு வந்து விளக்கமா எல்லாத்தையும் சொல்றேன் அப்பா.” என்று அவள் கூற,

“சரி ப்ரனு. ம் உனக்கு ஆகாஷைப் பிடிச்சுருக்கா? எதுவா இருந்தாலும் சொல்லு டா. நான் போய் அவங்ககிட்ட உனக்காகப் பேசுறேன்.” என்று அவர் கூற,

“ஐயோ அப்பா என்ன இப்படிச் சொல்றீங்க!! எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. ஆகாஷை எனக்குப் பிடிக்கலை அப்பா. நீங்க தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்க வேண்டாம்.”

“எனக்காக ஒன்னும் சொல்லையே!!”

“அச்சோ அப்பா சத்தியமா எனக்கு ஆகாஷை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லை. இன்னைக்கு நான் வந்ததுக்கு காரணமே அஸ்வத்காக தான். இல்லாட்டி அவங்க வர நேரம் பார்த்து நான் வெளில போயிருப்பேன்.” என்று அவள் கூற, அப்போது தான் நிம்மதியாக இருந்தது ராகவனுக்கு.

“சரி மா சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு.” என்று கூறி அவர் வைத்து விட, ப்ரனவிகா அவளது வண்டியை எடுத்துக் கொண்டு அவள் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றாள்.

~~~~~~~~~~

அடுத்த நாள் எப்போதும் போல் அகாடமிக்கு வந்தாள் ப்ரனவிகா. அங்கு வேலைச் செய்பவர்கள் எல்லாம் அவளைப் பார்த்து வாழ்த்துக் கூற, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளது அறைக்கு வரும் வழியில் ரேஷ்மியும்,”மேம் நான் ஒன்னு நினைச்சேன். பட் வேற ஒன்னு நடந்துருச்சு. அதனால ஒரு ப்ராப்ளமும் இல்லை மேம். உங்களோட விருப்பம் தான் மேம் முக்கியம். கங்க்ராஜுலேஷன்ஸ் மேம்.” என்று அவள் கூற, ப்ரனவிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன பேசுறீங்க ரேஷ்மி? எதுக்கு இப்போ எனக்கு விஷ் ப்ணணீங்க?” என்று ப்ரனவிகா கேட்க,

“மேம் உங்களோட ஃபியான்சி உங்க கேபின்ல உட்கார்ந்திருக்கார் மேம். அவர் வந்ததுமே எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சு மேம். அதான் எல்லாரும் உங்களுக்கு விஷ் பண்ணோம் மேம்.” என்று ரேஷ்மி கூற, ப்ரனவிகாவிற்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.

“புல்ஷிட் யார் வந்து என்னோட ஃபியான்சினு சொன்னாலும் என்னோட ரூம்ல உட்கார வைச்சுடுவீங்களா!! இது தான் நீங்க அகாடமியை பார்த்துகிற லட்சணமா?? நான் இல்லாத போதும் இப்படித் தான் பண்றீங்களா!!” என்று அவள் கோபமாகக் கேட்க, ரேஷ்மி பயந்து விட்டாள்.

“இல்லை மேம் நேத்து நீங்க சாரில வந்தீங்க. அவர் இன்னைக்கு வந்து உங்க ஃபியான்சினு சொன்னதும் உண்மையோனு நினைச்சுட்டோம் மேம். சாரி மேம்.” என்று அவள் மன்னிப்புக் கேட்க, ரேஷ்மியை கோபமாகப் பார்த்து விட்டு அவளது அறைக்குச் சென்றாள்.

இளமுகிலன் அவனது இருக்கையில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளது இருக்கைக்கு முன்பு உட்கார்ந்திருந்தான் ஆகாஷ். அவனைப் பார்த்ததும் இளமுகிலனை அவள் ஒரு பார்வை பார்க்க, அவனோ ப்ரனவிகா என்ற ஒருத்தி அங்கு இல்லை என்ற ரீதியில் அவன் இருக்க, ப்ரனவிகாவிற்கு அது வேறு எரிச்சலை ஏற்படுத்தியது.

ப்ரனவிகா எதையும் முகத்தில் காட்டாமல் அவளது இருக்கைக்குச் சென்று அமர, அவளைப் பார்த்ததும் ஆகாஷ் அவனது எல்லா பற்களும் தெரியும்படிச் சிரிக்க, அதைக் காணச் சகிக்காமல்,

“சொல்லுங்க எதுக்கு வந்துருக்கீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று அவள் கேட்க, ஆகாஷ் எதுவும் சொல்லாமல் திரும்பி சொடக்கிட்டு இளமுகிலனை கூப்பிட, அவனோ கண்டு கொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்க,

“ஏய் உன்னைத் தான்.” என்று ஆகாஷ் மரியாதை இல்லாமல் இளமுகிலனிடம் பேச, அவன் தன் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்க்க,

“ஓ சார் பதில் சொல்ல மாட்டாங்கீளோ!!! முதல்ல உன்னை வேலைல இருந்து தூக்கனும். கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாதா உனக்கு? நாங்க பேசப் போறோம்னு தெரிஞ்சு அப்படியே உட்கார்ந்திருக்க, எந்திருச்சு வெளில போ.” என்று ஆகாஷ் கூற, இளமுகிலன் எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்திருக்க, இதையெல்லாம் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ப்ரனவிகா,

“அவரை வெளில போகச் சொல்ல நீங்க யார்? உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? முகிலன் நீங்க உட்காருங்க. எங்கயும் போகத் தேவையில்லை.” என்று அவள் கோபமாகக் கூற, ஆகாஷ் சத்தியமாக ப்ரனவிகா இப்படி நடந்துப்பாள் என்று நினைக்கவில்லை.

அவனைப் பொறுத்தவரை ப்ரனவிகாவிற்கு தன்னைப் பிடிக்காமல் போக எந்த முகாந்திரமும் இல்லை. அவளுக்கு நிச்சயமாகத் தன்னைப் பிடிக்கும். என்ன அவனது அப்பா பேசினதில் கோபத்தில் இருக்கிறாள் என்று தான் அவன் நினைத்தான். அவள் இப்படிக் கோபமாக அவனைக் கேள்வி கேட்டதும் அதுவும் வேலைப் பார்க்கும் ஒருவன் முன்பு(அவனைப் பொறுத்தவரை) இப்படிப் பேசியது அவனது மரியாதைக்குத் தீங்கு விளைவிப்பது போல் இருக்க,

“ப்ரனு எனக்குத் தெரியும் நீ அப்பா அப்படிப் பேசுனதுல கோபமா இருக்கனு. நான் நேத்தே அப்பாவை நல்லா திட்டிட்டேன். அவர் அப்படிப் பேசுனதுல உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு ஆகிடுமா? உனக்கு என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அப்பாவைத் திரும்ப உங்க வீட்டுல பேசு சொல்றேன். இந்த முறை அவர் தப்பா எதுவும் பேச மாட்டார். ஆனால் நீ வேலை செய்றவன் முன்னாடி இப்படி என்கிட்ட பேசுறது நியாயமா? நீயே சொல்லு.” என்று அவன் சைக்கோ மாதிரி பேச,

“ஹலோ மிஸ்டர் ஆகாஷ், நான் உங்கிட்ட சொன்னேன்னா எனக்கு உங்களைப் பிடிச்சுருக்குனு? நீங்களா அப்படிக் கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது…” என்று ப்ரனவிகா பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் புகுந்து,

“பொய் சொல்லாத ப்ரனவிகா. எனக்குத் தெரியும் உனக்கு என்னைப் பிடிக்கும்னு. அஸ்வத் என்கிட்ட சொல்லிட்டான். அதனால நீ என்கிட்ட மறைக்க ட்ரை பண்ணாத. ப்ச் நாம பொறுமையா பேசலாம் முதல்ல இவனை வெளில போகச் சொல்லு.” என்று ஆகாஷ் எரிச்சலாகக் கூற,

“அவர் எங்கேயும் போக மாட்டார். இங்கத் தான் இருப்பார். அவர் இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமா இருந்தா தாராளமா நீங்க போகலாம். யாரும் உங்களை வெத்தலை பாக்கு வைச்சு கூப்பிடலை. அப்புறம் என்ன சொன்னீங்க? எனக்கு உங்களைப் பிடிச்சுருக்கா? புல்ஷிட் எனக்கு உங்களைப் பிடிக்காது. நல்லா கேட்டுக்கோங்க உங்களைக் கல்யாணம் பண்ற எந்த ஐடியாவும் எனக்கு இல்லை சரியா. நான் என்னோட பதில்லை சொல்லிட்டேன். கிளம்புறீங்களா?” என்று அவள் கேட்க,

ஆகாஷோ,”இல்லை நீ பொய் சொல்ற!! அஸ்வத் என்கிட்ட தெளிவா சொன்னான் உனக்கு என்னைப் பிடிக்கும்னு.” என்று மறுபடி மறுபடியும் கூறியதையே கூற, ப்ரனவிகா அவளது கைப்பேசியை எடுத்து அஸ்வத்திற்கு அழைத்து,

“இன்னும் பத்து நிமிஷத்துல நீ அகாடமி வர. இல்லாட்டி பதினோராவது நிமிஷம் உன் ஃப்ரண்ட்டுக்கு என்ன ஆனாலும் அதுக்கு நான் பொறுப்பில்லை.” என்று கூறிவிட்டு அவள் வைத்து விட,

“என்ன நீ இப்படிப் பேசுற!!” என்று ஆகாஷ் கேட்க, அவள் எரிச்சலுடன் அவனைப் பார்த்து விட்டு எழுந்து வெளியே செல்ல நகர, ஆகாஷ் அவளது கையைப் பற்றி நிப்பாட்ட, ப்ரனவிகா அவனது கையை உதறிவிட்டு,

“உன் கை என் மேல பட்டுச்சு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. அஸ்வத்தோட ப்ரண்ட் அதனால தான் நான் இதுவரை அமைதியா பேசிட்டு இருக்கேன். இல்லாட்டி நடக்கிறதே வேற. ஒழுங்கா இங்க இருந்து வெளில போ.” என்று அவள் கத்த,

“அதான் நான் அப்பா பேசுனது தப்புனு சொல்லிட்டேன்ல அப்புறம் எதுக்கு நீ சீன் போட்டுட்டு இருக்க? நல்லா புரிஞ்சு போச்சு எனக்கு, நீ சீக்கிரம் ஓகே சொல்லிட்டா உன்னோட கெத் என்னாகிறது!! அதான் என்னை அலைய விட்டுப் பார்க்க ஆசைப்படுற!! பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சாதாரணமாச்சே. இப்போ நல்லா புரியுது எனக்கு.” என்று அவன் பாட்டிற்குப் பேசிட்டு போக, ப்ரனவிகாவிற்கு கோபம் ஏறிக் கொண்டே இருந்தது.

“மிஸ்டர் உங்ககிட்ட பேச மேடம் இஷ்டப்படலை. நீங்க கிளம்புங்க. எதுவா இருந்தாலும் அவங்க வீட்டுக்குப் போய் பெரியவங்க முன்னாடி பேசுங்க. இங்க டிஸ்டர்ப் பண்ணாமல் நீங்க முதல்ல கிளம்புங்க.” என்று இளமுகிலன் அமைதியாகக் கூற,

“ஏய் நீ யார்டா என்கிட்ட பேசுறதுக்கு? உனக்கு என்ன தகுதி இருக்குன்னு என்கிட்ட பேசுற நீ? ப்ரனு உனக்கு வேலக்காரங்களை எங்க வைக்கணும்னு எதுவுமே தெரியலை. நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். உன்னோட ஃபியான்சினு சொல்லியும் இதோ நிற்கிறானே இவன் முறைச்சு பார்த்துட்டே இருந்தான். இப்போ எப்படிப் பேசுறான் பார். எல்லாம் நீ கொடுக்கிற இடம்.” என்று ஆகாஷ் பேச,

“வாயை மூடு ஆகாஷ். யாரை எங்க வைக்கனும்னு எனக்குத் தெரியும். அஸ்வத் வர வரைக்கும்லாம் வெயிட் பண்ண முடியாது. முதல்ல நீ வெளில போ. நீயா போயிட்டா உனக்கு மரியாதையாவது மிஞ்சும் இல்லாட்டி நான் செக்யூரிட்டிய கூப்பிட்டு உன்னைக் கழுத்துப் பிடிச்சு வெளியே தள்ளச் சொல்லுவேன். போ டா வெளில.” என்று ப்ரனவிகா சத்தம் போட, ஆகாஷ் அதிர்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, சரியாக அங்கு வந்தான் அஸ்வத். அதுவும் ஓடி வந்திருந்தான். அவனைக் கோபமாகப் பார்த்த ப்ரனவிகா,

“முதல்ல இவனைக் கூப்பிட்டு வெளில போ அஸ்வத். உன்னோட ப்ரண்ட்னு தான் நானும் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருந்தேன். பட் ஹீ க்ராஸ்ட் த லிமிட்.” என்று அவள் கோபமாகக் கூற,

“ப்ச் ப்ரனு என்னாச்சு? ஏன் இவ்ளோ கோபம்? டேய் ஆகாஷ் என்ன டா பண்ண?” என்று அஸ்வத் கேட்க,

“நீ தான அஸ்வத் சொன்ன ப்ரனுவுக்கு என்னைப் பிடிச்சுருக்குனு!! ஆனால் ப்ரனு வேற ஏதோ சொல்றா!!” என்று சிறுபிள்ளை போல் கேட்க,

“நான் எப்போ அஸ்வத் இவனைப் பிடிச்சுருக்குனு உன்கிட்ட சொன்னேன்? பார் உன்னால எவ்ளோ பிரச்சனைனு!! உனக்கும் ஹரிதா அண்ணிக்கும் என்னால எந்தச் சண்டையும் வேண்டாம்னு தான் அமைதியா இருந்தேன். ஆனால் நீ என்ன பண்ணி வைச்சருக்க பார். இன்னைக்கு இவனால் இங்க எவ்ளோ பிரச்சனைனு பார்த்தியா!! எனக்கு இவனைப் பிடிக்கலைனு சொல்றேன்!! பைத்தியம் மாதிரி அஸ்வத் என்கிட்ட சொல்லிட்டான் உனக்கு என்னைப் பிடிக்கும்னு அதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருக்கான். முதல்ல இவனை இங்கிருந்து கூப்பிட்டுப் போ. அப்புறம் அவன்கிட்ட சொல்லி வை, இன்னொரு தடவை என்னைத் தேடி வந்தால் நான் பொறுமையா எல்லாம் பேச மாட்டான். டைரக்ட்டா போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்.” என்று அவள் கூற, அஸவ்த்திற்கு பிரச்சனையின் தீவிரம் புரிய, அவனுக்குமே ஆகாஷ் அங்கு வந்து பிரச்சனைச் செய்தது பிடிக்கவில்லை.

எதுவும் பேசாமல் அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் அஸ்வத். அவனது வாகனத்திலே ஆகாஷையும் அமர்த்தி சிறிது தூரம் சென்றதும் வாகனத்தை நிப்பாட்டி வெளியே வந்தான். ஆகாஷையும் வெளியே இழுத்து,

“என்ன பிரச்சனை டா உனக்கு?” என்று கேட்க,

“ஏன் டா பொய் சொன்ன? எனக்கு ப்ரனவிகாவை எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? நேத்து அதனால் நான் அப்பாகிட்ட எவ்ளோ சண்டை போட்டேன் தெரியுமா?”

“இங்கப் பார் ஆகாஷ் நான் கேட்கும் போது ப்ரனு எதுவும் பேசலை. அதனால் அவளுக்கு உன்னைப் பிடிச்சுருக்குனு நினைச்சேன். ஆனால் நேத்து உங்க அப்பாகிட்ட அவள் பேசுனதை வைச்சே அவளுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைனு புரிஞ்சுடுச்சு. அதுவும் நீங்க எல்லாரும் போனதும் அவள் கேசுவலா அகாடமி போகும் போதே எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு. அதனால் தான் நான் நேத்து உன்கிட்ட எதுவும் பேசலை. அப்படி என் தங்கச்சிக்கு உன்னைப் பிடிச்சுருந்தா நேத்து நடந்த விஷயத்துக்கு அப்புறமும் உன்கிட்ட நான் பேசிருப்பேன். நல்ல வேளை அவளுக்கு இஷ்டமில்லைனு சொல்லிட்டா. இத்தனை நாள் நான் அவளோட ஆசையைப் பார்க்காமல் நீ பிடிச்சுருக்குனு சொன்ன ஓரே காரணத்துக்காகத் தான் நான் வீட்டுல எல்லார்கிட்டேயும் பேசி இல்லை இல்லை சண்டை போட்டேன். அது எவ்ளோ தப்புனு எனக்கு இன்னைக்கு நீ புரியவைச்சுட்ட. போதும் எதுவும் நீ பேசாத ஆகாஷ். அவளுக்கு இஷ்டமில்லைனு சொல்லும் போது கம்பல் பண்றது எந்த விதத்துலயும் சரி கிடையாது. இதோட இந்த விஷயத்தை விட்டுரு அவ்ளோ தான். உன்னை நான் கூப்பிட்டு வந்தேன். அதனால உன்னை உன்னோட ஆஃபிஸ்ல இறக்கி விட்டுறேன். உன்னோட கார் உன் வீட்டுக்குத் தான வந்துரும்.” என்று அஸ்வத் கூற, ஆகாஷிற்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தாலும் அவனுக்கு வேறு வழியில்லை. அஸ்வத் வண்டியில் ஏறி உட்கார, அவனை அவனது அலுவலகத்தில் இறக்கி விட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அஸ்வத் சென்று விட்டான்.

~~~~~~~~~~

ஆகாஷை அஸ்வத் அழைத்துக் கொண்டு போனதும் ப்ரனவிகா அவளது இருக்கையில் அமர, இளமுகிலன் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவளிடம் வந்து தர, மறுக்காமல் வாங்கிக் குடித்தாள் ப்ரனவிகா.

“ரிலாக்ஸ் மேடம். இப்படிச் சில ஆட்கள் இருக்கத் தான் செய்றாங்க. அதோட வலி என்னனு எனக்கு நல்லா தெரியும் மேடம். நாம பிடிக்கலைனு சொன்னாலும் சைக்கோ மாதிரி ஃபிகேவ் பண்றவங்க இருக்கத் தான் செய்றாங்க. நான் இந்த மாதிரி ஏற்கனவே பார்த்ததால எனக்கு இது பெரிய விஷயமா தான் தெரியலை மேடம். உங்களுக்கு இது முதல் தடவைல அதான் இப்படி இருக்கீங்க. நல்ல வேளை நீங்க பெண்ணா போயிட்டீங்க!! இதுவே ஆண்ணா இருந்தா என்ன என்ன பழிச் செல்லுக்கு ஆளாகியிருப்பீங்களோ!!” என்று இளமுகிலன் அவளுக்கு ஆறுதல் கூற,

“அதனால் தான் திவ்யா உங்க மேல பலாத்கார கேஸ் கொடுத்தாளா முகிலன்?” என்று அவள் கேட்க, இளமுகிலன் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். அவளுக்கு இது எப்படித் தெரியும் என்று யோசனையாக அவளைப் பார்க்க, அவளே மேலும் தொடர்ந்தாள்,

“எனக்கு எல்லா விஷயமும் முழுசா தெரியாது முகிலன். ஆனால் உங்க மேல திவ்யா கொடுத்த கேஸ் மட்டும் தெரியும். அதுவுமில்லாம இப்போ உங்களை போலிஸ் தேடிட்டு இருக்காங்கனும் தெரியும் முகிலன்.” என்று அவள் சாதாரணமாகக் கூற,

“என்…ன சொல்….றீங்க மே….டம்?” முகமெல்லாம் வேர்த்து, திக்கித் திணறி அவன் கேட்க, அவளுக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவளுக்கு முதல் முறை இதைக் கேட்கும் போது அவளுக்கும் பயங்கர அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் அவள் திடமாக நம்பினாள் இளமுகிலன் கண்டிப்பாகத் தப்பாக எதுவும் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று.

இளமுகிலனிடம் பேச வேண்டுமெனத் தான் அவள் அகாடமி வந்தது. ஆனால் ஆகாஷை அவள் சற்றும் அங்கு எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவன் நடந்து கொண்ட விதம் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இளமுகிலனிடம் பிறகுப் பேசலாம் என்று தான் எண்ணினாள். ஆனால் அவனே அதைப் பற்றிப் பேச ஆரம்பிக்கவும் தானாகவே கேட்டு விட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் இளமுகிலனுக்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது. நேற்று வரை அவன் ப்ரனவிகாவிடம் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று தான் யோசித்தான். என்ன தான் அவளிடம் அவனின் கடந்தகாலத்தைக் கூற நினைத்தாலும் அவளிடம் தள்ளி இருக்கத் தான் நினைத்தான். ஆனால் நேற்று புடவையில் அவளைப் பார்த்ததும் அவள் அவனைக் கண்டு கொல்லாமல் சென்றதும் அவனது மனதை உறுத்த ஆரம்பித்து விட்டது. அதுவும் இன்று ஆகாஷ் வந்து ப்ரனவிகாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் என்று கூறியதும் அவனுக்கு எதையோ இழந்துவிட்ட உணர்வு தான் தோன்றியது. ப்ரனவிகா வந்து அவனைப் பிடிக்காது என்று கூறும் வரை அவனது மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

இப்போது ப்ரனவிகாவே திவ்யா பற்றி அதுவும் அவள் கொடுத்த வழக்கைப் பற்றிக் கேட்கவும் அவனது மூளைக்குத் தோன்றியது ஒன்று மட்டும் தான். இனி ப்ரனவிகா தன்னை நம்பமாட்டாள். அவள் தனக்கு இல்லை என்ற எண்ணம் மட்டுமே அவனது மனதிலிருந்தது.

எதுவும் பேசாமல் அவன் அமைதியாக நின்றிருக்க, வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ரேஷ்மி,

“மேம் போலிஸ் வந்திருக்காங்க.” என்று கூற, இளமுகிலன் அதிர்ச்சியாகி விட்டான். ஒன்றும் புரியாமல் அவன் அப்படியே நிற்க, ப்ரனவிகா அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வேகமாக வெளியே சென்றாள்.

Advertisement