Advertisement

அன்று ஞாயிற்றுக் கிழமை, வேலைக்குச் செல்ல வேண்டியது இல்லாததால் பரத்தும் இளமுகிலனுக்கு வீட்டு வேலையில் உதவி செய்யச் சீக்கிரமே அனைத்தையும் முடித்து விட்டனர். இளமுகில் தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு உட்கார, பரத் அவனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு அவனது வீட்டிற்குப் பேச பால்கனி பக்கம் சென்றான்.

தொலைக்காட்சி ஓடினாலும் இளமுகிலனின் கவனம் அதில் இல்லை. அவனது எண்ணம் முழுவதும் பரத் பற்றித் தான். இந்த இரண்டரை வருடங்களில் பரத் தன் வீட்டிற்கு இரண்டு முறை மட்டுமே சென்று வந்துள்ளான். அதுவும் அங்கு இரண்டு மூன்று நாள் மட்டும் இருந்து விட்டு வந்து விடுவான் இளமுகிலன் தனியாக இருப்பதால். அதை நினைக்கும் போதுலாம் அவனுக்குக் கவலையாக அதே சமயம் குற்றவுணர்ச்சியாக இருக்கும் தன்னால் தேவையில்லாமல் பரத் கஷ்டப்படுகிறான் என்று.

“டேய் என்ன டா டீவி போட்டுட்டு கனா கண்டுட்டு இருக்க?” இளமுகிலனின் தோளைத் தட்டி பரத் கேட்க,

“பரத் நீ ஒரு ஒருவாரம் உன் வீட்டுக்குப் போயிட்டு வாயேன்.”

“எதுக்கு டா தீடிர்னு இப்படிச் சொல்ற?”

“அது இல்லை டா, நீ எனக்காக லீவ்வே போடாம இதுவரைக்கும் இருந்துட்ட, அதே மாதிரி நான் இங்கத் தனியா இருப்பேன்னு ஊருக்குக் கூடப் போயிட்டு இரண்டே நாள்ள திரும்பி வந்துடுற. எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு டா. என்னால நீ இப்படிப் போகாமல் இருப்பது எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்குது டா. அதான் நாம ஒரு மாசத்துக்கு வீட்டுக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டோம்ல. நீ போயிட்டு வா டா. நான் சமாளிச்சுக்குவேன். ப்ளீஸ் டா முடியாதுனு மட்டும் சொல்லாத.” என்று இளமுகிலன் கூற,

“அப்படி எல்லாம் இல்லை டா. ரொம்ப வேலை இருக்கு டா. நீ இங்க இல்லாத போதும் கூட நான் ஊருக்கு ரேர்ரா தான போவேன். உன்னால நான் போகமல் இல்லை டா.”

“நீ என்னைச் சமாதானப்படுத்த அப்படிச் சொல்ற, லாக்டவுன் அப்போ கூட உன்னை நான் ஊருக்குப் போகச் சொன்னேன். ஆனால் நீ தான் முடியாது அப்படினு சொல்லிட்ட. அது என்னாலனு எனக்கு நல்லாவே தெரியும். ப்ளீஸ் டா அம்மா, அப்பா, தங்கச்சிலாம் உன்னைப் பார்க்க ஆசைப்படுவாங்க டா. எனக்காக நீ அவங்களை பார்க்கப் போகாம இருக்கிறது மனசுக்கு வருத்தமா இருக்கு டா. அந்த அளவுக்கு நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்னு புரியலை.” சோகமாக இளா கூற,

“இங்கப் பார் இளா நீ வருத்தப்படுற அளவுக்கு இங்க எதுவும் நடக்கலை. வீட்டுல புரிஞ்சுப்பாங்க டா. சரி இப்போ என்ன நான் ஊருக்குப் போகனும் அவ்ளோ தான்! நான் போறேன, ஆனால் எனக்கு நீ ஒரு பதில் சொல்லனும்.” பீடிகையாக பரத் கேட்க,

“என்ன சொல்லனும் பரத்?”

“இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி நீ வீட்டுக்குள்ள அடஞ்சே இருப்ப? நீ வெளி காற்றைச் சுவாசித்துக் கிட்டத்தட்ட இரண்டரை வருஷம் மேல ஆச்சு. வெளில வா டா. அப்படியே அவங்க உன்னைக் கண்டுபிடிச்சாலும் என்ன பண்ணிடுவாங்க? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் இளா. இப்படிப் பயந்து பயந்து எத்தனை நாள் உசுரு வாழ முடியும் சொல்லு?” என்று பரத் கேட்க, அதற்கு இளா பதில் சொல்ல வர,

பரத் அவனைத் தடுத்து,”நீ இப்போ எதுவும் சொல்லாத, நான் முதல்ல ஊருக்குப் போயிட்டு வரேன். அதுவரை நல்லா யோசி. அதுக்கு அப்புறம் நாம பேசிக்கலாம். நல்ல முடிவா எடுப்பனு நம்புறேன். ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ உனக்கு நான் இருக்கேன் டா. எது வந்தாலும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம்.” பரத் கூற, இளமுகிலன் அவனை அனைத்து கண்ணீர் விட்டான். பரத் அவனது முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

பலருக்கு நண்பர்கள் வரம். அந்த நட்பால் அவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். அதே சமயம் அவர்கள் தப்பு செய்தால் தட்டியும் கேட்பார்கள். தீய வழியில் சென்றால் நம்மைத் தட்டி நல் வழிப் படுத்தும் நட்பும் உண்டு. நமக்கு ஏதாவது ஒன்று என்றால் துடிக்கவும் செய்வார்கள். இளமுகிலனுக்கு சென்னை வரும் வரை பரத் தெரிந்தவன் மட்டுமே. ஆனால் இப்பொழுதோ அவனது வாழ்வில் இன்றியமையாத ஒருவனாக பரத் மாறி இருக்கிறான். பரத் இளமுகிலன் வாழ்வில் வந்த ஒரு வரம். இன்னொரு வரமும் அவன் வாழ்வில் வரலாம் அவன் சரியான முடிவெடுத்தால். எடுப்பானா? இதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

~~~~~~~~~~

திருச்சியில் அந்த நடச்சத்திர விடுதியில் திவ்யா பயங்கர கோபத்துடன் அமர்ந்திருந்தாள். அவளருகே அவளது நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள்.

அந்த விடுதியின் கீழே சங்கரின் ஆள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தே அவனது கைப்பேசியை எடுத்து சங்கருக்கு அழைத்தான்.

“சொல்லு டா.”

“ஐயா சின்னம்மா இங்க ஹோட்டலுக்கு வந்துருக்காங்க. அவங்களோட அந்த ராகேஷ் தம்பியும் ரியா பொண்ணும் போச்சுங்க ஐயா.”

“சரி டா. அங்கேயே இரு. திவி மா கிளம்பும் போது நீயும் கூடப் போ. அதுக்கு முன்னாடி எனக்கு ஃபோன் பண்ணிட்டு போ.” என்று கூறிவிட்டு சங்கர் வைத்துவிட, அந்த ஆள் அங்கிருந்த மரத்தடி நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு அதன் பக்கத்தில் நின்றான்.

இங்கு விடுதி அறையில்,

“திவி நீ டென்ஷனாகாத. முன்னாடியே நீ என்கிட்ட சொல்லிருந்தா அவன் இப்போ உன் காலடியில இருந்துருப்பான்.” அவளது நண்பன் ராகேஷ் கூற,

“ப்ச் அதான் இப்போ சொல்லிட்டாள! சரி சொல்லு என்ன பண்ண போற நீ?” அவளது இன்னொரு தோழி ரியா கேட்க,

“சிம்பிள். என்னோட அண்ணா ப்ரண்ட் ஒருத்தன் டெல்லில டிடெக்டிவ் ஏஜென்சி வச்சுருக்காங்க. அவனோட ஃபோட்டோ போதும். எங்க இருந்தாலும் அவனை பிடிச்சுடுவாங்க.” நம்பிக்கையாக ராகேஷ் கூற,

“திவி நாம ஏன் ராகேஷ் சொல்ற மாதிரி பண்ணக் கூடாது?”

“ராகேஷ் கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவாங்களா? உன்னை நம்பலாமா? ஏன் கேட்கிறேன்னா எங்க அப்பா அரசியல்வாதி. அவரோட செல்வாக்கை யூஸ் பண்ணியே கண்டுபிடிக்க முடியலை. இந்த டிடக்டிவ் கண்டுபிடிச்சுடுவானா?”

“இங்கப் பார் திவி நான் இப்படிப் பேசுறேன்னு நீ கோபப்படாத. உங்க அப்பா அரசியல்வாதி தான், நான் இல்லைனு சொல்லலை! ஆனால் அவரால் ஒன்னும் பண்ண முடியலே! அவர் பவர் இந்த திருச்சில மட்டும் தான் போல.” முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கூறினாலும் அவன் குரலில் நக்கல் ஊறியிருந்தது.

“இங்கப் பார் ராகேஷ், தேவையில்லாம எங்க அப்பாவை பத்தி பேசாத. அவரால முடியாம நான் ஒன்னும் உன்கிட்ட சொல்லலை. முதல்ல நான் உன்கிட்ட ஹெல்ப் கேட்கவே இல்லை. நான் விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். நீயா தான் ஹெல்ப் பண்றனு சொன்ன! அதான் இப்போ இங்க இந்த மீட்டிங் நடக்குது. அதை மறந்துடாத சொல்லிட்டேன்.” கோபமாக திவ்யா கூற, ராகேஷ் அப்படியே அமைதியாகி விட்டான்.

“இல்லை திவி நான் அங்கிள்ள தப்பா சொல்லலை. அவரோட பவர் தமிழ்நாட்டுல மட்டும் தான். அப்படி அவன் வேற ஸ்டேட்க்கோ இல்லை ஃபாரின் கண்ட்ரிக்கோ போயிருந்தா இவங்களால ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். அதைத் தான் சொல்ல வந்தேன்.” அப்படியே பேச்சை மாற்றி அவன் கூற,

திவ்யா அவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,”அவன் கண்டிப்பா ஃபாரின்னா போகலை. ஏன்னா அவனோட பாஸ்போர்ட் எங்ககிட்ட இருக்கு. அவனோட செர்டிஃபிகேட் கூட அவன் வீட்டுல தான் இருக்கு. டூப்ளிகேட் வாங்கனும்னா கூட அவன் காலேஜ் போகனும். எனக்குத் தெரிஞ்சு அங்கயும் அவன் போகலை. எங்கயும் செர்டிஃபிகேட் இல்லாம வேலைக்குப் போக முடியாது. எங்க போய் ஒளிஞ்சுருக்கானோ தெரியலை.”

“திவி கண்டிப்பா வேலைக்குப் போகாம அவனால உயிர் வாழ முடியாது. எங்க கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கானோ! இன்னேரம் நீ சொல்றதை கேட்டிருந்தா ராஜா மாதிரி இருந்திருக்கலாம். கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை.” அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ரியா கூற,

“எந்தக் காலத்துல இருக்கீங்க இரண்டு பேரும்? இப்போ இருக்கிற டெக்னாலஜில டூப்ளிகேட் தயாரிக்கிறது ரொம்ப சுலபம். பொய்யான பேர்ல ஈசியா தயார் பண்ணிடலாம். அவன் எதுக்கு கூலி வேலை செய்யப் போறான்?” ராகேஷ் கூற, பெண்கள் இருவரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

“ஏய் கூல் கையிஸ். அப்படி அவன் பண்ணிருந்தா நம்ம வேலை சுலபமா முடிஞ்சுடும். ஏனா அந்த மாதிரி பண்றவங்க கொஞ்ச பேர் தான். அவங்ககிட்ட கேட்டாலே சொல்லிடுவாங்க.”

“ஏய் அவன் என்ன உனக்குத் தெரிஞ்சவனா கேட்டவுடனே சொல்றதுக்கு?” ரியா நக்கலாகக் கேட்க,

“பணம் பத்தும் செய்யும். நோட்டை நீட்டினா தானா சொல்லிடுவாங்க. அப்புறம் அதெல்லாம் நீ கவலைப்படாத ரியா சரியா! அண்ட் திவி நீ என்கிட்ட சொல்லிட்டைல, எதுக்கும் டென்ஷனாகத, நான் பார்த்துக்கிறேன். சீக்கிரமே அவன் உன் காலடில இருப்பான்.” ராகேஷ் உறுதியாகக் கூற,

“ம் உன்னை நம்புறேன். உனக்கு ஒரு வாரம் டைம் தரேன். அதுக்குள்ள அவனே இங்க வரனும் இல்லாட்டி அவனைப் பத்தியாவது எனக்கு நியூஸ் வரனும். இல்லாட்டி உன்னோட ப்ரண்ட்ஷிப் அதோட கட்.” என்று கூறிவிட்டு விறுவிறுவென திவ்யா வெளியே சென்று விட, ராகேஷ் யோசனையோடு அமர்ந்திருந்தான்.

“என்ன யோசனை ராகேஷ்? சீக்கிரம் திவ்யா சொன்ன மாதிரி செஞ்சு முடி. இல்லாட்டி அவள் சொன்னதை செய்வா.”

“ப்ச் ரியா நீ வேற அதையே சொல்லாத. அவள் சொன்ன மாதிரி கண்டிப்பா நான் செய்துவிடுவேன். அவளோட ப்ரண்ட்ஷிப் எனக்கு ரொம்ப முக்கியம். அதைவிட எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா ரிலேஷன் ரொம்ப முக்கியம். ஸோ ஒரு வாரத்துல நல்ல விஷயத்தைச் சொல்றேன்.” எனக் கூறிவிட்டு ராகேஷ் சென்று விட, ரியாவும் அவன் பின்னையே சென்று விட்டாள்.

திவ்யா இங்கு வெளியே வர, அந்த ஆள்ளும் அவள் வருவதைப் பார்த்து விட்டு சங்கரிடமும் கூறிவிட்டு அவள் பின்னே சென்றான்.

திவ்யா நேராகச் சென்றது திருச்சி தாண்டி முசிறி கிராமத்திற்குத் தான். அந்த கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய வீட்டின் முன்பு வண்டியை நிறுத்த, அங்கிருந்த காவலர் அவளிற்கு வணக்கம் கூறி கேட்டை திறந்தான்.

திவ்யா காரை உள்ளே நிறுத்த வேகமாக ஒருவன் வந்து அவளது கார் கதவைத் திறந்தான்.

“என்ன பண்றாங்க இரண்டு பேரும்?”

“உள்ள தான் மா இருக்காங்க. பவுன்னு சாப்பாட்டுப் போட்டுச்சு, சாப்பிட்டுட்டு இருக்காங்க.” என்று அவன் கூற, தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றாள்.

திவ்யா உள்ளே சென்றவுடன் அவளைப் பின் தொடர்ந்து வந்த ஆள் சங்கரிடம் அவள் முசிறி வந்த விஷயத்தைக் கூற, சங்கருக்குத் தான் அய்யோ என்று இருந்தது.

~~~~~~~~~~

காலை எப்பொழுதும் போல் எழுந்த ப்ரனவிகா சுத்தம் செய்துக் கொண்டு முடியை மொத்தமாக எடுத்து க்ளிப்பால் அடக்கி ஈஸி பன் போல் போட்டுக் கொண்டு கீழே வந்தாள்.

அங்கிருந்த சாய்விருக்கையில் பூர்ணிமா டீ குடித்துக் கொண்டிருக்க, ராகவன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

ப்ரனவிகா வந்து தன் அத்தையை பின்னிருந்து கட்டிக் கொண்டு,”குட் மார்னிங் அத்தை.” என்று அத்தையிடம் கூறி அவர் கண்ணத்தில் முத்தம் வைத்துவிட்டு தன் அப்பாவைப் பார்த்து,”குட்மார்னிங் ப்பா.” என்று கூறினாள்.

“குட்மார்னிங் குட்டிமா.” என்று ராகவன் கூற,

“குட் மார்னிங் டா.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம்ல? எதுக்கு அதுக்குள்ள எழுந்த?” பாசமாக அவளது கண்ணத்தை தடவி பூர்ணிமா கேட்க,

“நோ அத்தை நேத்தும் அகாடமி போகலை. இன்னைக்கும் லேட்டா போனா அவ்ளோ தான்.”

“ஆமா நீ தான் போய் அங்க இருக்கிற ஸ்டூடன்ட்ஸ்குலாம் க்ளாஸ் எடுக்குப் போற! சும்மா போய் மானிட்டர் தான பண்ண போற! அதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்?” கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் ஹரிதா.

“வா மா என் அத்தைப் பெண்ணே! என்னை வம்புக்கு இழுக்காட்டி தூக்கம் வராதே உனக்கு. நானாவது அதாவது பண்றேன். மேடம் என்ன பண்றீங்களாம்?” ப்ரனிவிகா அவளிடம் நக்கலாகக் கேட்க,

“நல்லா கேளு டா. எவ்ளோ சொன்னாலும் கேட்கிறது இல்லை. நம்ம ஹோட்டல்லுக்கு அஸ்வத் கூடப் போனு சொன்னா அதுவும் முடியாதுனு சொல்றா. சரி உன் கூட அகாடமி போனு சொன்னாலும் கேட்க மாட்டீங்கறா.” சற்றே எரிச்சலாக பூர்ணிமா கூற,

“என்ன பூர்ணி நீ? அஸ்வத்தும் ப்ரனவிகாவும் நாம சொல்லியா போறாங்க? அவங்களுக்கு அங்கப் போக இஷ்டம் அதனால் போறாங்க. ஆனால் ஹரிதாவுக்கு இஷ்டமில்லை. அதனால் அவ போகலை. விடு அவ இஷ்டதுக்கு இருக்கட்டும்.” ராகவன் தன் தங்கைப் பெண்ணுக்கு பரிந்துரைக்க,

“அண்ணா ஏற்கனவே அவள் யாரையாவது டிபென்ட் பண்ணியே இருக்கா. இப்போ அவள் வீட்டுக்குள்ளயே இருந்தா நாளைக்கு தைரியமாக எப்படி ஒரு சிட்டுவேஷன்னை ஃபேஸ் பண்ணுவா இவள்?” என்று பூர்ணிமா கேட்க, ராகவனுக்கு அவர் சொல்வதும் நியாயமாகப் பட,

“பூர்ணிமா சொல்றதும் சரி தான் ஹரிதா. நீ இப்படியே இருக்கக் கூடாது. ஒன்னு ப்ரனவிகா கூட அகாடமி போ இல்லையா அஸ்வத் கூட ஹோட்டல் போ.”ராகவனும் பூர்ணிமா கூறியது போலவே கூறிவிட, ஹரிதா தன் தாயை முறைத்தாள்.

“அப்போ ஹரி என் கூட ஹோட்டல்லுக்கு வரட்டும்.” உடற்பயிற்சி முடித்து அங்கு வந்த அஸ்வத் வேகமாக கூற, எல்லோரும் அவனின் வேகத்தில் சிரித்து விட்டனர்.

“டேய் ஹரிதா வந்தா கூட்டிட்டு போ.” ராகவன் சிரித்தப்படியே கூறிவிட்டு எழுந்து செல்ல, அஸ்வத் ஹரிதாவை பார்த்தான்.

“போ அத்தான். நான் எங்கயும் வரலை.”

“ஹரி அண்ணி இன்னைக்கு நீ என் கூட வர டாட். சீக்கிரம் போய் ரெடியாகி வா.” ப்ரனவிகா கூறிவிட்டு மேல செல்லத் திரும்ப,

“ஹரிதாவை எங்க கூப்பிடுற ப்ரனி?” கேட்டுக் கொண்டே அங்கு வந்தார் நம்பியப்பன் மரகதத்தோடு.

“தாத்தா என் கூட அகாடமிக்கு தான் கூப்பிடுறேன். மேடம் ரொம்ப தான் பிகு பண்றாங்க. நீங்களே கொஞ்ச நல்ல வார்த்தைச் சொல்லி அனுப்புங்க. பாவம் அத்தை அண்ணியை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க.”

“அவளுக்கு இஷ்டமில்லைனா நாம என்ன டா பண்றது?”

“அப்பா நீங்களும் இப்படிப் பேசாதீங்க! இப்போ தான் அண்ணாகிட்ட சொன்னேன். அதே தான் உங்கிட்டயும் சொல்றேன். அவள் யாரையும் டிபன்ட் பண்ணி இருக்கக் கூடாது. இவளோட அப்பா சின்ன வயசுல இவளை கைக்குள்ளயே வைச்சுருப்பார். அதனால் தான் அவர் போனதும் இவளால் அவரோட இழப்பை ஏத்துக்கவே முடியலை. ஸ்கூல்லுக்கு அதனாலயே ஒரு வருஷம் போக முடியாம போயிடுச்சு. அப்போல இருந்து பிரனி கூடத் தான் இருக்கா. இப்போ படிப்பு முடிஞ்சதும் நம்மக் கூட வீட்டுல இருக்கா. வெளில நாலு இடத்துக்குப் போனா தான் அவளுக்கும் இந்த உலகம் புரியும்.”

“நீ சொல்றது புரியுது பூர்ணி, இத்தனை நாள் அவள் இப்படியே இருந்துட்டா. தீடிர்னு வந்து நீ இப்படி இருக்கக் கூடாது நீ உடனே மாறியே ஆகனும்னு சொன்னா எப்படி? அவளுக்கு கொஞ்சம் டைம் குடு. நான் பேசுறேன். நீ போய் குளிச்சுட்டு வா.” என்று மரகதம் கூற, பூர்ணிமா, ஹரிதாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்று விட்டார்.

“ப்ச் ஏன் அம்மாச்சி, இந்த அம்மா எப்பவும் இப்படியே பேசிட்டு இருக்காங்க? எனக்கு வேலைக்குப் போறது பிடிக்கலைனா கேட்கவே மாட்டேங்கிறாங்க. அவங்க மட்டும் கல்யாணம் பண்ணாலும் அப்பாக் கூட இங்கத் தான உங்கக் கூட இருந்தாங்க! அப்புறம் என்னவாம்?”

“ஹரி உங்க அம்மா எங்க கூட இருந்தானா அவளை உங்க அப்பா வீட்டுல சேர்த்துக்கலை. அவளை நாங்க தனியாவும் விட விரும்பலை அதனால் நாங்க எங்கக் கூட வச்சுக்கிட்டோம். அதே மாதிரி நீ சும்மா இருக்கிறது தப்பில்லை ராஜாத்தி நீ தைரியமா இருக்கனும்னு தான் உங்க அம்மா ஆசைப்படுறா. இப்போ வரைக்கும் நீ எங்கப் போனாலும் உனக்கு ப்ரனி கூட வரனும். நாளைக்கு அவளுக்குக் கல்யாணமாகி வேற வீட்டுக்குப் போயிட்டா நீ என்ன பண்ணுவ?”

“பாட்டி என் செல்லக் குட்டிக்கு நான் தான் இருக்கேன்ல.” கூறியபடி அஸ்வத், ஹிரிதா பக்கத்தில் உட்கார்ந்து அவளது தோளில் கைப்போட,

“ஏய் உனக்கு ஹோட்டலுக்கு நேரமாகலை? நீ கிளம்பு.” என்று மரகதம் கூற,

“பாட்டி இதலாம் அந்நியாயம்!! தோ பாருங்க உங்க வாயைப் பார்த்து அவள் எப்படி உட்கார்ந்திருக்கானு! அவளைலாம் எதுவும் சொல்லாதீங்க. தாத்தா இதலாம் என்னனு கேட்க மாட்டீங்களா நீங்க?”

“ராஜா உன்னோட எண்ணம் எனக்கும் தெரியும். உன் வேலையை என்கிட்ட காட்டாத. நான் உனக்காக ஏதாவது கேட்டு அப்புறம் என் செல்லம் என்னை திட்ட நீ அப்படியே உன் செல்லக் குட்டியை கூட்டிட்டு போயிடுவ. இதலாம் நடக்காது ராஜா நடக்காது.” சிரிப்புடன் நம்பியப்பன் கூற, வடப்போச்சே என்று அஸ்வத் நினைத்துக் கொண்டே கிளம்பத் தயாராக போனான்.

“ராஜாத்தி நீ அம்மா சொல்றதையும் கொஞ்சம் யோசிக்கனும் சரியா.” என்று மரகதம் பாட்டி கூற,

“விடு மரகதம் என் பேத்தி புத்திசாலி. கண்டிப்பா அவள் புரிஞ்சு நடந்துப்பா. போங்க நீங்க போய் குளிச்சுட்டு வாங்க. எல்லாரும் சாப்பிடலாம் நேரமாச்சுல.” என்று நம்பியப்பன் கூற, அனைவரும் எழுந்து சென்றனர்.

அஸ்வத் அவனது ஹரிகா க்ரான்ட் பேலேஸ் செல்ல, ராகவன் அவர்களது நம்பி பவன் செல்ல, ப்ரனவிகா கிளம்பி அவர்களது சேஸ்(chase) அகாடமிக்கு சென்றாள்.

ராகவனுக்கு அப்பாவின் உணவகம் தொழிலில் அவ்ளோ விருப்பமில்லை. அவருக்கு கற்பித்தல் தொழிலில் தான் ஆர்வம் அதிகம். அதை அவரது தந்தையிடம் கூற, நம்பியப்பன் அவரது ஆசைக்குத் தடை விதிக்கவில்லை. ராகவனும் மகிழ்ச்சியாக ஒரு பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து வேலை செய்தார். பூர்ணிமா தான் நம்பியப்பன் துணையாக அவர்களது உணவகம் செல்வார்.

ராகவன் பள்ளிக்குக் காலையில் சென்றால், மாலையில் வீட்டிலே ட்யூஷன் எடுப்பார் யாரிடமும் காசு வாங்காமல். ஒரு நாள் ராகவன் பள்ளியிலிருந்து டூர் போவதற்கு ஏற்பாடாகியிருக்க, அவரும் குழந்தைகளுடன் போக வேண்டுமென பள்ளி நிர்வாகம் கூற, அவரும் ஒத்துக் கொண்டு சென்றார். அந்த நேரம் தான் ராகவனின் மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் போய் ஹரிதாவின் அப்பா அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல அந்த விபத்து நடந்து இருவரின் உயிரும் பிரிந்தது.

பூர்ணிமா மிகவும் மனமுடைந்த விட்டார். ராகவனும் அவசர அவசரமாக அங்கு வர, போகும் போது உயிருடன் பார்த்த அவரது மனைவியை உயிரில்லா சடலமாகத் தான் அவரால் பார்க்க நேர்ந்தது. நாட்கள் செல்ல அவர் தன் பிள்ளைகளைப் பார்த்து அந்த துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து விட்டார். ஆனால் பூர்ணிமாவின் புகுந்த வீட்டினர் செய்த பிரச்சனையால் அவரால் எளிதில் வெளி வர முடியவில்லை. நம்பியப்பனும் தன் இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கை ஓரே நாளில் இப்படியாகி விட்டது நினைத்து மனிதர் தளர்ந்து விட்டார். அவரால் தொழில் கவனம் செலுத்த முடியவில்லை. ராகவன் தான் மனதை திடப்படுத்தி அவரது வேலையை விட்டுவிட்டு ஹோட்டல் செல்ல ஆரம்பித்தார்.

பூர்ணிமாவும் நம்பியப்பனும் அவர்களது துயரத்திலிருந்து வெளி வந்ததும் தான் ராகவனின் நிலை புரிந்தது. அவர்கள் செய்த தவறும் புரிந்தது. அவர்கள் ராகவனிடம் சென்று பேசி மறுபடியும் வேலைக்குச் செல்ல சொல்ல, ராகவன் வேண்டாம் என்று மறுக்க, இருவருக்கும் ஒரு மாதிரியாகி விட்டது. அவர்களது கவலையான முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் ஆரம்பித்தது தான் சேஸ் அகாடமி. முதலில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கும் இடமாக இருக்க, நாட்கள் செல்ல செல்ல போட்டித் தேர்வுக்கு சொல்லிக் கொடுக்கும் அகாடமியாக மாறி இப்பொழுது இவர்களது சேஸ் அகாடமி தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் உள்ளது.

Advertisement