Advertisement

அஸ்வத் அவனது தாத்தா பாட்டியிடம் பேசி விட்டு அவர்கள் அறையிலிருந்து வெளியே வர, ஹரிதாவும் ப்ரனவிகாவிடம் பேசிவிட்டு அவளது அறையிலிருந்து வெளியே வந்தாள். கீழே இருந்த அஸ்வத், ஹரிதாவை பார்த்ததும் அவளிடம் பேசலாம் என்று போக, ஹரிதாவோ அவனைப் பார்த்ததும் அவளது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள். இந்தச் செயல் அவனை மிகவும் காயப்படுத்த, எதுவும் செய்யாமல் அவனது அறைக்குச் சென்று படுக்கையில் படுத்து,’இது எல்லாம் நாளைக்கு அவங்க வந்து பார்க்கிற வரைக்கும் தான். அதுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும். ஆகாஷ் பத்தி அவங்களே பெருமையா பேசுவாங்க.’ என்று தனக்குள் பேசிக்கொண்டு அவன் உறங்கி விட்டான்.

அடுத்த நாள் காலை, ப்ரனவிகா வீடு பரபரப்பாக இருந்தது. பூர்ணிமாவும் அஸ்வத் மட்டுமே பதற்றத்துடன் இருந்தனர். இது வரை அவர்கள் வீட்டில் பெண் பார்க்கும் சடங்கு நடந்ததே இல்லை. பூர்ணிமாவுக்குக் காதல் கல்யாணம். ஆதலால் பெண் பார்க்கும் சடங்கு அமையவில்லை. அதே போல் அஸ்வத் மற்றும் ஹரிதாவிற்கும் அப்படி ஒன்றுக்கு வாய்ப்பே இல்லை. ராகவனுக்கும் அவர்கள் தான் பெண் வீட்டிற்குச் சென்றனர். முதன் முதலில் தங்கள் வீட்டிற்குப் பெண் பார்க்க வருவதால் சிறிது பதற்றத்துடன் இருந்தனர். ஆனால் பெண்ணின் தந்தையான ராகவனோ யாருக்கோ வந்த விருந்து போல் இதுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் அமைதியாக அவரது வேலையைச் செய்து கொண்டிருந்தார். ஹரிதா அவருக்கு மேல், அவள் இன்னும் எழுந்திருக்கக் கூட இல்லை.

“அத்தை ஹரி இன்னும் ரூம்ம விட்டு வரவே இல்லை. ஒரு வேளை தூங்கிட்டு இருக்காளா?”

“இவளை என்ன பண்றதுனு சுத்தமா புரியலை அஸ்வத். இரு நான் போய் பார்க்கிறேன்.” என்று கூறி பூர்ணிமா, ஹரிதாவின் அறைக்குச் சென்றார்.

அவர் முதல் முறை கதவைத் தட்டும் போது அவள் திறக்கவே இல்லை. இரண்டு மூன்று முறை தட்டியது தான் அவள் திறந்தாள். தூக்கக் கலகத்துடன் அவள் கதவைத் திறந்து,”என்ன அம்மா?” என்று அவள் சோம்பலாகக் கேட்க, பூர்ணிமாவிற்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது.

அவர் ஏதோ சொல்ல வருவதற்குள் அங்கு வந்த அஸ்வத் அவளின் நிலையைப் பார்த்து அவனுக்குக் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு,”அத்தை நீங்க போங்க, நான் பேசுறேன்.” என்று அவன் கூற,

“எல்லாரும் வந்துட்டு போகட்டும் அப்புறம் உனக்கு இருக்கு ஹரிதா!!” என்று அவளைத் திட்டி விட்டே அவர் சென்றார்.

அவர் சென்றவுடன் கதவைப் பூட்டப் பார்க்க அஸ்வத் அதற்குள் அவளது அறைக்குள் வந்துவிட்டான்.

ஹரிதா சலிப்புடன்,”ப்ச் என்ன வேணும்?” என்று கேட்க,

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க ஹரிதா? நானும் ஏதோ கோபம் சரியாகிடும்னு பார்த்தா நீ ரொம்ப தான் ஓவரா பண்ற!! என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கனும் நான் நினைச்சது தப்பா? நீயும் சரி அப்பாவும் சரி ரொம்ப தான் பண்றீங்க!! நான் பண்ண ஒரே தப்பு நம்ம வீட்டுப் பெரியவங்களை கலந்துக்காம அவங்களை இன்னைக்கு பொண்ணு பார்க்க வரச் சொன்னது மட்டும் தான்.” என்று அவன் கூற,

“உங்களுக்கு இன்னும் புரியலை அத்தான். அதான் பிரச்சனையே!! ப்ச் பரவால விடுங்க!!” என்று அவள் கூற,

“ஏய் எனக்கு என்ன புரியலை?”

“இங்கப் பாருங்க அத்தான் ப்ரனவிகாவுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க நீங்க நினைக்கிறது எல்லாம் சரி தான். ஆனால் அது ப்ரனவிகாவுக்கு பிடிச்சுருக்கானு இதுவரை ஒரு தடவையாவது நீங்க கேட்டீங்களா?” என்று அவள் கேட்க,

“ஏய் அவள் இன்னும் ஆகாஷை பார்க்கலை. பார்த்தா கண்டிப்பா அவளுக்குப் பிடிக்கும். எனக்கு என் தங்கச்சிய பத்தி நல்லா தெரியும். நீயும் அப்பாவும் தேவையில்லாம ரியாக்ட் பண்ணிட்டு இருக்கீங்க.” என்று அவன் கூற, ஹரிதாவிற்கு பயங்கர கோபம். அவள் ஏதோ கூற வருவதற்குள், அஸ்வத் கைப்பேசிக்கு அழைப்பு வர, ஆகாஷ் தான் அழைத்திருந்தான். அவன் எடுத்துப் பேச, இவள் மறுபடியும் படுத்து விட்டாள். அஸ்வத் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே ஆகாஷிடம் பேசிவிட்டு அவளிடம வந்து,”இங்கப் பார் சீக்கிரம் எழுந்து குளிச்சு ரெடியாகி வா. நீ தான் ப்ரனவிகா கூட இருக்கனும். ஆகாஷ் இப்போ தான் எனக்குக் கூப்பிட்டான். அவங்க வீட்டுல இருந்து கிளம்பிட்டாங்க. ஒழுங்க என்னை டென்ஷன் பண்ணாமல் எழுந்து கிளம்பு.” என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட, ப்ரனவிகாவிற்காக அவள் எழுந்து குளிக்கச் சென்றாள்.

அஸ்வத் கீழே வந்து எல்லோரிடமும் ஆகாஷும் அவனது குடும்பமும் இன்னும் பதினைந்து நிமிடத்தில் வந்து விடுவார்கள் என்று அவன் கூற, பூர்ணிமாவிற்கு தான் பதற்றம். இந்த சம்பந்தம் நல்லபடியாக முடிய வேண்டும். இதனால் மீண்டும் ஒரு பிரச்சனை தங்களது குடும்பத்தில் வரக் கூடாதெனக் கடவுளைப் பிரார்த்திக் கொண்டார்.

சரியாக அரை மணிநேரத்தில் ஆகாஷின் குடும்பம் ப்ரனவிகாவின் இல்லத்திற்கு வந்தனர். ஆகாஷ், அவனது அப்பா மற்றும் அம்மாவுடன் வண்டியிலிருந்து இறங்கி வீட்டைப் பார்க்க, நம்பியப்பன், மரகதம் மற்றும் அஸ்வத் வெளியே வந்து மரியாதை நிமித்தமாக அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

ஆகாஷின் தந்தை அவர்களது வீட்டை ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டே தான் உள்ளே சென்றார். ப்ரனவிகாவின் வீட்டை வீடு என்று சொல்ல முடியாது குட்டி அரண்மனை என்று தான் கூற வேண்டும்.

ராகவனும் பூர்ணிமாவும் அவர்கள் உள்ளே வந்ததும் வரவேற்று அமர வைத்தனர். பூர்ணிமா உள்ளே சென்று அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டார். ஆகாஷின் தந்தை பூர்ணிமாவை ஒரு பார்வைப் பார்த்தார். அவரது பார்வை பூர்ணிமாவுக்கு புரியவில்லை. ஆனால் அவரது பார்வை அவரை ஏதோ செய்ய அவரைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டார்.

“நேரத்தை வீணாக்க வேண்டாம். சீக்கிரம் பொண்ணை வரச் சொன்னா பார்த்துட்டு நாங்க கிளம்புவோம்.” என்று ஆகாஷின் தந்தை கூற, அனைவருக்கும் என்ன இவர் வந்தவுடனே இப்படிக் கூறுகிறார் என்று எண்ணினாலும், ப்ரனவிகாவை அழைத்து வர பூர்ணிமா எழுந்து சென்றார். ராகவன் அஸ்வத்தை ஒரு கண்டன பார்வைப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டார். அஸ்வத்திற்குப் பயம் வர ஆரம்பித்து விட்டது. எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என்று கடவுளை வேண்ட ஆரம்பித்து விட்டான்.

பூர்ணிமா ப்ரனவிகாவின் அறைக்குச் செல்ல, அவளோ சேலையில் அழகாகத் தயாராகி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, ஹரிதா அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

பூர்ணிமா உள்ளே நுழையவும் ஹரிதா முகத்தைச் சாதாரணமாக மாற்றிக் கொள்ள, பூர்ணிமா பேச்சு ஆரம்பித்தார்,”ப்ரனு அழகா இருக்க டா. என் கண்ணே பட்டுரும் போல. அவங்க போனதும் உனக்குச் சுத்திப் போடனும். நீ சாரி போட்டிருப்பனு நான் எதிர்பார்க்கவே இல்லை. சரி வா அவங்க வந்துட்டாங்க. நீயும் வா ஹரி.” என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு கீழே சென்றார்.

ப்ரனவிகாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவளை ஆச்சரியமாகப் பார்த்தனர். அவளுக்குப் புடவை அவ்ளோ இஷ்டம் கிடையாது. ஏதாவது விசேஷங்களுக்குப் புடவைக் கட்டச் சொன்னால் கூட முடியாது என்று மறுத்து விடுவாள். அப்படி இருப்பவள் இன்று புடவைக் கட்டி வந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதை விட அவளுக்கு ஆகாஷை பிடித்திருக்கிறது என்ற எண்ணத்தையும் தந்தது.

ஆகாஷோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவனது அம்மா அவனது அப்பாவிடம்,”அன்னைக்குப் பார்த்ததை விட இன்னைக்கு அழகா இருக்காங்க. நம்ம ஆகாஷூக்கு ஏத்த ஜோடி தான்.” என்று அவனது அம்மா கூற, அவனது அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“இவள் தான் என் பொண்ணு ப்ரனவிகா. பி.ஈ. முடிச்சுட்டு எங்களோட சேஸ் அகாடமியை பார்த்துக்கிறா.” என்று ராகவன் கூற,

“ம் ம் அதெல்லாம் நல்லா தெரியும். என் பையன் இரண்டு டிகிரி வாங்கியிருக்கான். அதுவும் எம்.பி.ஏ. அவன் யூ.எஸ்.ல போய் படிச்சுட்டு வந்தான். ஆனால் உங்க பொண்ணு ஒரு டிகிரி தான!!” என்று சற்று ஏளனமாக ஆகாஷின் தந்தை கூற,

ராகவன்,”என் பொண்ணு ஒரு டிகிரினாலும் அவள் படிச்சது பி.ஈ. அப்படிப் பார்த்தா உங்க பையன் படிச்சது வெறும் பி.பி.ஏ. தான். அப்புறம் என் பொண்ணுக்கு எம்.பி.ஏ. படிக்க வேண்டிய அவசியம் வந்தது இல்லை. ஏனா அவள் பெருமைக்குப் படிக்கலை இஷ்டப்பட்டு படிச்சா.” என்று அவர் கூற, ஆகாஷின் தந்தைக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

“அப்போ நான் பெருமைக்குத் தான் என் பையனை எம்.பி.ஏ படிக்க வைச்சேன்னு சொல்றீங்களா!!”

“பின்ன இல்லையா!! பெருமை இல்லாட்டி ஒரு டிகிரியோட நிப்பாட்டிருக்க வேண்டியது தான!! எப்படியிருந்தாலும் உங்களோட பிஸினஸை தான பார்க்கப் போறான். அதுக்கு எம்.பி.ஏ படிக்கனும் அவசியம் இல்லையே!!” என்று அவர் கூற,

“என்ன மரியாதை இல்லாமல் அவன் இவன்னு பேசுறீங்க?” என்று அவர் எகிற, ராகவன் ஏதோ பேச வர, அதற்குள் நம்பியப்பன் குறுக்கிட்டு

“எங்க அஸ்வதோட ப்ரண்ட். அப்போ அஸ்வத் வயசு தான இருக்கும். அதான் அப்படிப் பேசிட்டான் என் பையன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.” என்று அவர் கூற,

“என்னங்க இப்போ படிப்பா முக்கியம். குணம் தாங்க முக்கியம். பொண்ணும் நல்ல பெண்ணா தான் தெரியுறா. நம்ம பையனுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கு. அப்புறம் என்னங்க?” என்று ஆகாஷின் அம்மா கூற,

“என்னது நல்ல பொண்ணா? உனக்குத் தெரியுமா?” என்று அவர் கூற, அனைவருக்கும் ஒரு மாதிரியாகி விட்டது.

“என்னங்க இப்படிப் பேசுறீங்க?” என்று ஆகாஷின் அம்மாவும்,

“அப்பா என்னப்பா?” என்று ஆகாஷும் சத்தமாகக் கேட்க,

“என்ன சொல்ல வரீங்க?” என்று கோபமாக ராகவனும் கேட்க,

“ஓ இன்னும் என்னை ஞாபகம் வரலையா?” என்று அவர் பூர்ணிமாவை பார்த்துக் கேட்க, அவருக்குச் சுத்தமாக எதுவும் புரியவில்லை. அவருக்கு மட்டுமில்லை யாருக்கும் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. எல்லோரும் அமைதியாக இருக்க, ஆகாஷின் தந்தையே பேசினார்,

“முப்பது வருஷத்துக்கு முன்னாடி இதோ நிக்கிறாங்களே பூர்ணிமா, இவங்களைப் பொண்ணு கேட்டு எங்க அப்பாவும் அம்மாவும் வந்த போது முடியாதுனு சொல்லி அவங்களை அவமானப்படுத்தி அனுப்பினீங்களே!! ஞாபகம் வருதா!!” என்று அவர் கேட்க, அனைவருக்கும் அதிர்ச்சி.

“முப்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை இப்போ கேட்டா நாங்க என்ன பதில் சொல்றது? எங்களுக்கு நீங்க சொல்றது ஞாபகம் கூட இல்லை.” என்று நம்பியப்பன் கூற,

“அது எப்படி ஞாபகம் இருக்கும்? அவமானப்பட்டது நானும் என் குடும்பமும் தான!!” என்று அவர் கூற,

“சரி அதுக்கு இப்போ என்ன பண்ணனும்?” என்று ராகவன் கேட்க,

“ம் என்கிட்ட மன்னிப்பு கேட்கனும்!! அதுவும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கனும். அப்படிக் கேட்டால் இந்தக் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம். அதுவும் நீங்க கேட்கிற மன்னிப்பைப் பொறுத்து தான்.” என்று அவர் கூற, இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று ப்ரனவிகா அவர் முன்னால் வந்து சொடக்கிட்டு,

“யார் யாருகிட்ட மன்னிப்புக் கேட்கிறது!! அதெல்லாம் முடியாது. உங்களோட பையனைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும் இங்க யாரும் தவம் இருக்கலை. நீங்க கிளம்பலாம்.” என்று ப்ரனவிகா கூற,

“வாசல் அந்தப் பக்கமிருக்கு. வந்த வழி ஞாபகமிருக்கா இல்லை நான் வழி சொல்லவா?” என்று ஹரிதா கேட்க, அதைப் பெரியவர்களும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க, ஆகாஷின் தந்தைக்கு அவமானமாகி விட்டது.

“ஏய் வா டா!! இந்தப் பொண்ணு இல்லாட்டி உலகத்துல வேற பொண்ணா கிடைக்காது. நான் உனக்கு இவளை விட நல்ல பொண்ணா மரியாதைத் தெரிஞ்ச பொண்ண பார்த்துக் கட்டி வைக்கிறேன். எழுந்து வாங்க.” என்று கூறிவிட்டு அவர் சென்று விட, ஆகாஷிற்கு ஏமாற்றமாகி விட்டது. சத்தியமாக அவனது அப்பா இப்படிச் செய்வார் என்று அவன் நினைக்கவே இல்லை.

“அஸ்வத் சாரி டா. அப்பா இப்படிப் பேசுவார்னு நான் நினைக்கவே இல்லை. ப்ளீஸ் என்னைத் தப்பா எடுத்துக்காத டா. நான் அப்பாகிட்ட பேசுறேன். ப்ளீஸ் நீங்களும் யாரும் தப்பா எடுத்துக்காதீங்க!! எனக்கு ப்ரனவிகாவை ரொம்ப பிடிக்கும். அப்பா பேசுனது தப்பு தான். நான் அப்பாவை சாரி கேட்கச் சொல்றேன். நீங்க வேற எந்தத் தப்பான முடிவுக்கும் வர வேண்டாம் ப்ளீஸ்.” என்று அவன் கூற,

“அவர் இப்படிப் பண்ணுவார்னு நான் நினைக்கலை!! எங்களை மண்ணிச்சுடுங்க.” என்று கூறிவிட்டு ஆகாஷின் அம்மா செல்ல, அவர் பின்னே ப்ரனவிகாவை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஆகாஷ் சென்றான்.

அவர்கள் சென்றதும் ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அனைவருக்கும். பூர்ணிமா வருத்தத்துடன்,”ப்ச் என்னால உன் வாழ்க்கைல பிரச்சனை வரும்னு நான் நினைக்கவே இல்லை ப்ரனு.” என்று அவர் கூற,

“அத்தை என்ன இப்படிப் பேசுறீங்க? அவர் பொண்ணு கேட்டா உடனே தந்துடுவாங்களா!! அவர் தான் லூசு மாதிரி பேசுறார்னு நீங்க அதுக்கு மேல பேசுறீங்க அத்தை. நல்ல வேளை மாமா உங்க வாழ்க்கைல வந்து உங்களைக் காப்பாத்திட்டார். தேவையில்லாம வருத்தப்படாமல் எனக்கு வந்து சாப்பாடு போடுங்க அத்தை. பயங்கரமா பசிக்குது. சாப்பிட்டு நான் அகாடமி போகனும்.” என்று அவள் கூற, மற்றவர்களுக்குத் தாங்கள் வருத்தப்படக் கூடாதென அவள் அப்படிப் பேசுகிறாளோ என்று தப்பாகப் புரிந்து கொண்டனர்.

ப்ரனவிகாவிற்கு அனைவரும் தான் புடவைக் கட்டியதற்கு ஆகாஷை பிடித்ததால் தான் கட்டியிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் பேசாமல் சாப்பிட்டு அதே புடவையில் அகாடமி கிளம்ப, கவலையாக அவளைப் பார்த்தனர்.

“அஸ்வத் எல்லாமே நீ பண்ண வேலையால தான்!! இதுக்கு தான் இந்த மாதிரி விஷயத்தை முதல்ல பெரியவங்ககிட்ட சொல்லனும். நாங்க என்ன ஏதுனு பார்த்து செய்வோம். உன்னை நம்புனதுக்கு என் பொண்ணோட மனசை இப்படி உடைச்சுட்டியே!! பாரு நாம யாரும் கவலைப்படக் கூடாதுனு அவள் சிரிச்சு பேசிட்டு போறா!! எல்லாம் உன்னால தான் அஸ்வத்.” என்று கோபமாகக் கூறிவிட்டு ராகவன் சென்று விட, ஹரிதாவிற்கு இது என்ன புதுச் சோதனை என்று தோன்றியது.

“அய்யோ என்ன மாமா இப்படிச் சொல்லிட்டு போறார்.” என்று அவள் வாய்விட்டே கூற,

“என்ன மாமா இப்படிச் சொல்லிட்டு போறார்? அவன் சொல்றது உண்மை தான!!” ஹரிதா அஸ்வத்திற்கு வங்காளத்து வாங்குவதாக நினைத்து மரகதம் கூற,

“ப்ச் அம்மாச்சி என்ன பேசுறீங்க?” என்று அவள் புரியாமல் கேட்க,

“ஆமா, அஸ்வத் செஞ்சது சரியா?” என்று அவர் கேட்க,

“அவர் செஞ்சது தப்புனு தான நானும் சொல்லிட்டு இருக்கேன்.” என்று அவள் கூற,

“ஏய் அப்புறம் எதுக்கு உன் மாமா அப்படிச் சொல்லிட்டு போறார்னு ஏதோ சொன்ன?”

“ப்ச் அம்மாச்சி ப்ரனவிகாவுக்கு ஆகாஷை பிடிச்சுருக்குனு நினைச்சு மாமா பேசிட்டு போறார். அதைத் தான் நான் சொன்னேன்.” என்று அவள் கூற,

“அவன் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? ப்ரனவிகாவுக்கு பிடிச்சதால தான அவள் புடவைக் கட்டிட்டு வந்தா.” என்று மரகதம் பாட்டி கூற,

“அய்யோ அம்மாச்சி புடவைக் கட்டிட்டு வந்தா பிடிச்சுருக்குனு அர்த்தமா!! அதெல்லாம் ஒன்னுமில்லை அம்மாச்சி. அவளுக்கு இன்னைக்கு புடவைக் கட்டனும்னு தோனுச்சு அதனால புடவைக் கட்டுனா அவ்ளோ தான்.” என்று அவள் கூற,

“என்ன சொல்ற நீ? அது எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?” என்று அஸ்வத் கேட்க,

“எனக்கு ப்ரனு பத்தி எல்லாம் தெரியும் அத்தான். அவள் என்கிட்ட எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டானு தெரியாதா உங்களுக்கு?” என்று அவள் கேட்க, அஸ்வத் தவிர அனைவருக்கும் அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

~~~~~~~~~~

அகாடமிக்கு முதல் முறை புடவையில் வருகிறாள் ப்ரனவிகா. இது வரை அவள் பாரம்பரிய உடை அணிந்து அங்கு யாரும் பார்த்தது இல்லை. அவளைப் புடவையில் பார்த்ததும் அனைவரும் வியப்பாகத் தான் பார்த்தனர். அதுவும் அவள் அழகு பதுமையாக இருக்க, ஆண்கள் அவர்களது கண்களை எடுக்க முடியாமல் அவள் தங்களது முதலாளி என்பதை மறந்து அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ப்ரனவிகா அவளது அறைக்குச் செல்ல, இளமுகிலன் அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு நொடி ப்ரனவிகாவை பார்த்து மயங்கிவிட்டான். அவள் அழகி என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்று புடவையில் அவள் பேரழகியாகத் தெரிந்தாள். அவனால் அவனது கண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ இவன் பக்கம் கூடத் திரும்பவில்லை. அவளது இருக்கையில் அமர்ந்து ஏதோ கோப்பையை எடுத்து அதைக் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவள் அவனிடம் எதுவும் பேசாமல் சென்றது இளமுகிலனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. ஒரு நாளும் அவள் இப்படிப் பேசாமல் செல்வாள் என்று அவன் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. அவனுக்கு அவள் பேசாமல் சென்றது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது.

இதை எதையும் அறியாமல் ப்ரனவிகா அவளது வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

Advertisement