Advertisement

இளமுகிலன் மீண்டும் வேலைக்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. இந்த ஒரு வாரத்தில் ப்ரனவிகா அவனிடம் கூறியபடியே வேலை விஷயமாக மட்டுமே பேசினான். மற்றபடி வேறு எந்த விதப் பேச்சும் இல்லை.

இது அவனைச் சந்தேகப்பட வைத்தது. முதலில் திவ்யா எப்படி அவனைப் பத்து நாட்கள் கண்டுக்காமல் இருப்பது போல் நடித்தாளோ அதே மாதிரி ப்ரனவிகாவும் பண்ணுகிறாளா என்று தோன்றியது அவனுக்கு.

ப்ரனவிகா செய்யும் செயல்கள் அனைத்தையும் மனம் திவ்யாவோடு ஒப்பிடச் செய்தது. அது சரியா தவறா என்று புரியவில்லை. ஆனால் மறுபடியும் அவன் வாழ்க்கையில் ஒரு பெண்ணால் எந்தத் தொந்தரவும் வரக் கூடாதென மட்டும் திடமாக நம்பினான். அதனால் ப்ரனவிகாவின் செயல்கள் அனைத்தும் அவனுக்குச் சந்தேகத்தை விதைத்தது.

ஆனால் அவனது மூளை அவனைச் சரமாரியாகக் காரித் துப்பி,”உனக்கு அறிவே இல்லையா? திவ்யா உன்னை ஏமாத்தினா எல்லாரும் அப்படியே இருப்பாங்களா? நீ திவ்யா விஷயத்துல சந்தேகப்பட்டிருக்கனும். அப்போ விட்டுட்டு இப்போ சந்தேகப்படுறது எந்த விதத்துல நியாயம்? ப்ரனவிகாவ பார்த்தாலும் அப்படித் தெரியலை.” என்று மூளை எடுத்துரைக்க,

அவனது மனமோ,”திவ்யாவ பார்த்தா மட்டும் சந்தேகப்படுற மாதிரி இருந்ததா? இல்லையே!! அவள் ஏமாத்துனாள!! அப்போ ப்ரனவிகா மட்டும் ஏமாத்த மாட்டாளா?” என்று கேள்வி கேட்க,

“இந்த உலகத்துல எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். நீன்னு கிடையாது யார் திவ்யா கூடப் பழகியிருந்தாலும் உன்னை மாதிரி ஏமாறத் தான் செஞ்சுருப்பாங்க. அந்த அளவுக்கு அவள் நல்லா நடிச்சா. ஆனால் எப்படியோ அவள் வாய்ல இருந்தே உண்மையைக் கடவுள் வர வைச்சுட்டான்ல!! அதே மாதிரி ப்ரனவிகா தப்பானவளா இருந்தா அதே கடவுள் உனக்கு அதையும் காட்டிடுவார்.” என்று மூளை உரைக்க,

“அதுக்காக இளா ப்ரனவிகாவோட பழக முடியுமா? இது என்ன விளையாட்டா? ட்ரியல் அண்ட் எரர் மெத்தட் யூஸ் பண்ண!! இது வாழ்க்கை!! ப்ரனவிகாவும் இவனை ஏமாத்திட்டா!! அவனால் தாங்கிக்கவே முடியாது.” என்று மனம் இளமுகிலனுக்கு பரிந்து பேச,

“வாழ்க்கையே ட்ரியல் அண்ட் எரர் தான். நாம எல்லோரும் நம்ம வாழ்க்கைல எல்லா சமயத்துலயும் சரியான முடிவெடுத்திருக்க மாட்டோம். எப்போவாவது தவறு செஞ்சு தான் இருப்போம். அதுக்காக வாழ்க்கையே வேண்டாம்னு யாரும் சொல்றது இல்லை. என்னைக் கேட்டா ப்ரனவிகாவிற்கு ஒரு சான்ஸ் தரலாம். அப்புறம் உன்னோட இஷ்டம்.” என்று மூளை கூற,

“இளா நீ மூளை சொல்றதைக் கேட்காதா!! மூளைக்கு அறிவு இருக்கிற அளவுக்கு உணர்ச்சி இருக்காது. மனசுக்கு தான் உணர்ச்சி இருக்கு. நான் சொல்றதை கேள், நீ வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு கிளம்பு. திரும்ப எதுலயும் சிக்கிக்காத.” என்று மனம் கூற,

“நான் எதுவும் பேசக் கூடாதுனு தான் இருந்தேன். ஆனால் நீ என்னைப் பேச வைச்சுட்ட. திவ்யா நடிக்கிறானு தெரிஞ்சதும் இளா ப்ரேக் அப் பண்றனு முடிவுப் பண்ணியாச்சு. அப்புறம் என்ன வெங்கயாத்துக்கு அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க நினைச்ச!! அவள் என்ன எதுவும் தெரியாமல் செஞ்சாளா வாய்ப்புக் கொடுக்க? எல்லாம் ப்ளான் பண்ணிப் பண்ணிருக்கா!! அதுலயும் அவள் உன்னை ஏதோ வீட்டுக்குக் கூப்பிட்டானு கொஞ்சம் கூட யோசிக்காமல் போயிட்ட!! அப்போ மட்டும் என்னை நீ யூஸ் பண்ணிருந்தா இந்நேரம் நீ இப்படி ஓடி ஒழிய அவசியமே இல்லாமல் போயிருக்கும். சில நேரத்துல மனசு சொல்றதை கேட்கலாம். ஆனால் சில நேரத்துல மூளை சொல்றதை தான் கேட்கனும். அப்போ தான் வாழ்க்கை நல்லா இருக்கும். இதுக்கு மேல் உன் இஷ்டம்.” என்று மூளை கூறிவிட்டு மறைந்து விட, மனதிற்கும் மூளை கூறியது சரியாக இருக்க, எதுவும் பேசாமல் அமைதியாக அதுவும் சென்று விட, இளா யோசித்தான்.

‘கடவுள் இதுவரை தனக்கு நல்லதை மட்டுமே செய்துள்ளான். திவ்யாவை பற்றிய உண்மையை அவள் வாயிலே கேட்க வைத்தான். தான் தான் புத்திக் கெட்டுப் போய் அவளை மறுபடியும் நம்பி அவள் விரித்த வலையில் சிக்கியது. ஆனால் ப்ரனவிகாவைப் பார்த்தால் அப்படித் திட்டம் போட்டுக் காதலிப்பவளாகத் தெரியவில்லை. திவ்யா மனதிற்குள் காதல் இருந்தாலும் அதைக் கூறாமல் நட்பாகப் பழகி, இல்லை பழகி என்று கூறக் கூடாது என்னை ஏமாற்றிய பின் தன் காதலைக் கூறினாள். ஆனால் ப்ரனவிகா முன்னரே தன் காதலைத் தன்னிடம் கூறிவிட்டாள். இருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதே போல் திவ்யா பணக்காரியாக இருந்தாலும் வேண்டுமென்றே என்னைக் கவர்வதற்கே அவள் சாதாரணமாகத் தான் உடுத்தினாள். ஆனால் ப்ரனவிகா அப்படியில்லை. இப்படி திவ்யாவிற்கும் ப்ரனவிகாவிற்கும் நிறைய வித்தியாசங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.’ என்று அவன் நினைக்க, ஒரு நொடி அதிர்ச்சியாகி விட்டான். தானே ப்ரனவிகாவை பற்றி நல்லவிதமாக யோசிக்கிறோமே!! ஒரு வேளை மனமும் ப்ரனவிகாவை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறதா!!

இப்படிப் பல எண்ணங்கள் அவன் மனதில் தோன்றி மறைய, கடைசியாக ப்ரனவிகாவிடம் தன்னைப் பற்றி முதலில் கூறலாம், மற்றவற்றைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் தூங்கச் சென்றான்.

~~~~~~~~~~

இந்த ஒரு வாரத்தில் ப்ரனவிகா எப்போதும் போல் அவளது அகாடமிக்கு சென்று வந்தாள். இளமுகிலனை அவள் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. ஏதாவது பேசப் போய் எங்கு அவன் வேவையை விட்டுச் சென்று விடுவானோ என்று பயம். அதனால் அமைதியாக வேலையை மட்டும் பார்த்தாள்.

ஹரிதா கூட அவளிடம் கேட்டாள்,”ஹேய் ப்ரனு நீ அண்ணா வந்ததும் அகாடமிலயே இருப்பேன்னு சொன்ன!! ஆனால் எப்போவும் போல காலைல இரண்டு மணிநேரம் மதியம் ஒரு மணிநேரம் தான் போற? என்னாச்சு உனக்கு,” என்று அவள் கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணி. நான் சும்மா சொன்னதை நீ நம்பிட்ட. அப்படி மட்டும் பண்ணா வீட்டுல இருக்கிறவங்களுக்கு சந்தேகம் வராதா?” என்று அவள் கேட்க,

“ம் அதுவும் சரி தான். நல்ல வேலை பண்ண!! சரி அதெல்லாம் விடு உங்க ரிலேஷன்ஷிப்ல எதுவும் முன்னேற்றம் இருக்கா? எவ்ளோ தூரம் போயிருக்க நீ? அண்ணாகிட்ட க்ளோஸ் ஆகிட்டியா?” என்று ஹரிதா கேட்க,

“அட அண்ணி அவரே இப்போ தான் வந்துருக்கார். அதுக்கு எல்லாம் டைம் எடுக்காதா? உடனே போய் காதல்னு சொன்னால் என்னைப் பார்த்துச் சிரிக்க மாட்டாங்களா?” என்று அவள் கேட்க,

“ம் நீ சொல்றதும் சரி தான். சரி சீக்கிரம் அண்ணாகிட்ட பேசுற வேலையைப் பார். நான் ஏன் சொல்றேன்னா அத்தான் தீவிரமா இறங்கிட்டார். நேத்து கூட அவர் ஃப்ரண்ட் ஆகாஷ் கூடப் பேசிட்டு இருந்தார். அனேகமா அவங்க வீட்டுல இருந்து உன்னைப் பார்க்க வந்தாலும் வருவாங்க. ஸோ எதுவா இருந்தாலும் சீக்கிரம் பண்ணு.” என்று ஹரிதா கூற, ப்ரனவிகாவிற்குத் தான் என்ன செய்வதெனப் புரியவில்லை.

இளமுகிலனிடம் பேசலாம் என்று யோசித்தால் கண்டிப்பாக அவன் அவளுக்குச் சாதகமாகப் பேச மாட்டான். அவனது பிரச்சனை என்னவென்றும் தெரியவில்லை. அது தெரிந்தால் அவனது பிரச்சனையைச் சரி செய்யலாம். ஆனால் அதற்கும் வழியிருப்பது போல் தெரியவில்லை. அவன் பேசவே யோசிக்கிறான், இதில் எப்படி அவனது பிரச்சனையை தன்னிடம் கூறுவான்!! நாமே தான் ஏதாவது செய்ய வேண்டுமென யோசித்தாள்.

அன்றிரவு எப்போதும் போல சாப்பிட கீழே வந்தாள் ப்ரனவிகா. ஹரிதாவின் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, அஸ்வத் பேச்சை ஆரம்பித்தான்.

“அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, ப்ரனு, ஹரி எல்லாரும் கேட்டுக்கோங்க நாளைக்கு ஆகாஷ் வீட்டுல இருந்து ப்ரனுவ பொண்ணு பார்க்க வராங்க.” என்று அவன் சந்தோஷமாகக் கூற, தோசையைப் பிய்த்து வாயருகில் கொண்டு சென்றவள் அப்படியே தட்டில் போட்டுவிட்டு அஸ்வத்தை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“அண்ணா என்ன சொல்ற நீ?”

“நான் தமிழ்ல தான சொன்னேன்!! புரியாத மாதிரி கேட்கிற!! நாளைக்கு நீ அகாடமி போக வேண்டாம்.” என்று அவன் கூற,

“ப்ச் இப்போ என்ன அவசரம் என் கல்யாணத்துக்கு? முதல்ல உனக்கும் ஹரிதா அண்ணிக்கும் நடக்கட்டும். அதுக்கு அப்புறம் எனக்குப் பார்த்துக்கலாம்.” என்று அவள் கூற,

“ஏய் அன்னைக்கு கேட்டதுக்கு சரினு தான்ன சொன்ன!! இப்போ இப்படிப் பேசுனா என்ன அர்த்தம்?” என்று கோபமாக அஸ்வத் கேட்க, ப்ரனவிகா பேச வருவதற்கு முன் ஹரிதா குறுக்கிட்டு,

“அத்தான் அவள் எங்க சம்மதம் சொன்னா? நீ தான் உன்னோட ப்ரண்ட தான் கல்யாணம் பண்ணனும் அவளை கம்பெள் பண்ண!!”

“அதுல எந்தத் தப்புமில்லை. அவன் நல்லா படிச்சுருக்கான், பிஸ்னஸ்ல அவன் புலி!! அப்புறம் அவங்களும் நம்மளை மாதிரி வசதியானவங்க தான்.” என்று அன்று பாடிய அதே பாட்டை இப்போதும் பாட, ஹரிதாவிற்கு எரிச்சல் தான் வந்தது. அவள் ஏதோ பேச வருவதற்கு முன் ப்ரனவிகா அவள் கையைப் பிடித்துத் தடுத்து,

“இப்போ என்ன நாளைக்குப் பொண்ணு பார்க்க வராங்க அவ்ளோ தான!! சரி வரட்டும்.” என்று கூறிவிட்டு அவள் சாப்பிடாமலே எழுந்து செல்ல, ஹரிதா அஸ்வத்தை முறைத்துப் பார்த்து விட்டு அவளும் ப்ரனவிகா பின்னால் சென்று விட்டாள்.

“என்ன பழக்கம் இது அஸ்வத்? இது எவ்ளோ பெரிய விஷயம்!! பொண்ணு பார்க்கிறது சாதாரண விஷயமா? அவங்க வீட்டுல பெரியவங்க இருக்காங்க தான!! அப்போ அவங்க நேரடியாவோ இல்லை ஃபோன்லயோ எங்ககிட்ட தகவல் சொல்லிருக்கனும். அதை விட்டுட்டு அந்தப் பையனே உன்கிட்ட சொல்றது நல்லவா இருக்கு?” என்று ராகவன் கேட்க,

“நீ என்ன ராகவா இப்படிப் பேசுற!! நம்ம வீட்டுப் பையனே நம்மகிட்ட அவங்களை வரச் சொல்லவானு கேட்காமல் ஒரு தகவல்லா தான நம்மகிட்ட சொன்னான். அப்புறம் நாம எப்படி அவங்க குடும்பத்தைத் தப்புச் சொல்ல முடியும்.” என்று கூறிவிட்டு நம்பியப்பன் சாப்பிடாமல் எழுந்து செல்ல, ராகவனும் அவன் பின்னாலே சென்று விட,

“நான் உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை அஸ்வத்.” என்று மட்டும் கூறிவிட்டு மரகதமும் கணவரின் பின்னால் சென்று விட, அஸ்வத்திற்கு அப்போது தான் அவன் செய்த தவறு புரிந்தது.

பூர்ணிமா அவன் அருகில் அமர்ந்து,”அஸ்வத் நீ என்கிட்ட கூடச் சொல்லலையே!! ஏன் இப்படிப் பண்ண? முதல்ல அந்தப் பையன் பொண்ணு கேட்டது கூட சாதாரண விஷயம் தான். பொண்ணுனு இருந்தா நாலு பேர் கேட்கத் தான் செய்வாங்க. அந்தப் பையனும் நீ தப்பா எடுத்துக்க கூடாதுனு அவன் முதல்ல உன்கிட்ட பேசுனது கூடச் சரி தான். ஆனால் பொண்ணு பார்க்க வரது சாதாரண விஷயமில்லையே!! முதல்ல நீ நம்ம வீட்டுல சொல்லி அவங்களுக்குச் சம்மதமா!! அந்த நேரம் நல்ல நேரமா!! ப்ரனவிகாவுக்கு அந்த நாள் ஒத்து வருமா!! அவங்களை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லலாமா இப்படி எதுவுமே நீ கேட்கலையே!! நீயா முடிவுப் பண்ணி அவங்களை வரச் சொல்லிட்டு ஒரு இன்ஃபர்மேஷனா தான் எங்க கிட்ட சொல்ற நீ!! ஏன் இப்படிப் பண்ண அஸ்வத்?” என்று அமைதியாக அவர் கேட்க, அஸ்வத்தால் பதில் சொல்ல முடியவில்லை.

“இல்லை அத்தை எங்க வேண்டாம்னு சொல்லிடுவாங்களோனு பயம். ஆகாஷ் ரொம்ப நல்ல பையன் அத்தை. அவன் ப்ரனவிகாவை கல்யாணம் பண்ணால் எங்களுக்குள்ள நல்ல பாண்டிங் கடைசி வரைக்கும் இருக்கும் அத்தை.” என்று அவன் கூற,

“நீ சொல்றது சரி தான் அஸ்வத். ஆனால் நாளைக்குப் பொண்ணு பார்க்க வராங்க!! இப்போ டைம் பார் ஒன்பது மணி!! இப்போ விஷயத்தைச் சொல்றது சரியா??” என்று அவர் கேட்க,

“அது தப்பு தான் அத்தை. நான் யோசிக்கவே இல்லை. நானே போய் அவங்கிட்ட பேசுறேன்.” என்று எழுந்து சென்று கை கழுவி விட்டு நம்பியப்பன் மற்றும் மரகதம் பாட்டி அறைக்குச் சென்றான்.

ராகவனும் அங்கு தான் இருந்தார். அவருக்கு அஸ்வத்தின் செயல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரது அம்மா மற்றும் அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் அஸ்வத் உள்ளே வந்தான். அவன் வருவதைப் பார்த்து ராகவன் எழுந்து செல்லப் போக, அஸ்வத் அவரது கையைப் பிடித்து,

“அப்பா சாரி. நான் உங்க எல்லாரையும் மதிக்கக் கூடாதுனு இப்படிச் செய்யலை. எங்க நீங்க ஆகாஷை வேண்டாம்னு சொல்லிடுவீங்களோனு பயம். அதனால் தான் அப்பா நான் அவன் வரேன் சொன்னதும் நான் உங்க யார்கிட்டயும் கேட்காமல் வரச் சொல்லிட்டேன்.” என்று அவன் கூற,

“இங்கப் பார் அஸ்வத் உனக்கு நாங்க நிறையவே சுதந்திரம் தந்திருக்கிறோம். நீ பிஸ்னஸ்ல நிறையப் புதுசா புதுசா கொண்டு வர நினைச்ச, அதையும் நாங்க எதுவும் சொல்லாமல் அக்செப்ட் பண்ணிட்டோம். அது சக்ஸாவும் முடிஞ்சது. அப்படி சக்ஸா முடியலைனாலும் அடுத்த முறைப் பார்த்துக்கலாம்னு விட்டுரலாம். உனக்கு அது ஒரு பாடமா இருக்கும்னு நினைச்சோம். அதனால் தான் நீ எந்த முடிவு வேணாலும் எடுக்கலாம், எங்களைக் கேட்கத் தேவையில்லைனு சொன்னேன். அது பிஸ்னஸ்ல மட்டும் தான் அஸ்வத் குடும்ப விஷயத்துல கிடையாது. இன்னும் உன்னோட தாத்தா என் அப்பா உயிரோட தான் இருக்கார். இந்தக் குடும்பத்துல எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் அவர் தான் எடுப்பார். நானே அவரைக் கேட்காமல் குடும்ப விஷயத்துல எந்த முடிவும் எடுத்தது இல்லை. உனக்கு எப்படி இப்படி ஒரு தைரியம்? இதை நான் உன்கிட்ட சுத்தமா எதிர்பார்க்கலை அஸ்வத். யூ டிஸ்ஆப்பாயின்டெட் மீ.” என்று கூறி அவர் அவனது கையை எடுத்து விட்டுச் சென்று விட, அஸ்வத்திற்கு தான் என்ன சொல்வது என்று புரியவில்லை. அவன் ஒன்று நினைத்துச் செய்ய, அது தன் குடும்ப உறுப்பினர்களைக் கஷ்டப்படுத்தும் என்று நினைக்கவில்லை.

அவன் பாவமாக நிற்பதைப் பார்த்த மரகதம் பாட்டி அவனிடம் வந்து,”இங்கப் பார் அஸ்வத் இன்னைக்கு நீ பண்ணது சரியில்லை. நாங்க அன்னைக்கே என்ன சொன்னோம்? ப்ரனுவுக்கு பிடிச்சுருந்தா எங்களுக்குச் சம்மதம்னு சொன்னோமா இல்லையா? அப்புறம் ஏன் இப்படிப் பண்ண?”

“இல்லை பாட்டி உங்களைக் கேட்காமல் எல்லாம் பண்ணனும் நான் நினைக்கலை. ஆனால் ஆகாஷ் ஃபோன் பண்ணி நாளைக்கு நாள் நல்லா இருக்கு. நாளைக்கு விட்டுட்டா எப்போ பொண்ணு பார்க்க வர முடியும்னு தெரியலை, பிகாஸ் அவங்க அப்பா பிஸ்னஸ் விஷயமா மும்பை போறார்னு சொன்னான். அதனால எனக்கும் வேற வழி தெரியாமல் சரினு சொல்லிட்டேன் பாட்டி. மத்தபடி உங்களை எல்லாம் கேட்காமல் எந்தவித முடிவும் எடுக்க நான் நினைக்கலை பாட்டி.” என்று அஸ்வத் விளக்கம் கூற,

“சரி விடு அஸ்வத், நடந்துருச்சு. இந்தக் கோபம் உன் அப்பாவுக்குக் கொஞ்ச நாள் இருக்கத் தான் செய்யும். ஆனால் நீ கவலைப்படாத அவன் உன்னோட அப்பா, நீ அவனோட பிள்ளை, பிள்ளைங்க வேணா கோபத்துல பெத்தவங்ககிட்ட முகத்தைத் தூக்கி வைச்சுட்டு திரியலாம்!! ஆனால் பெத்தவங்க ஒரு போதும் தன் பிள்ளையைக் கோபத்துல ஒதுக்கி வைக்க மாட்டாங்க. அவனே வந்து உன்கிட்ட பேசுவான் பார்.” என்று சமாதானப்படுத்த, அவன் பாட்டியிடன் சரியென்று கூறிவிட்டு தன் தாத்தாவிடம் வந்து,

“தாத்தா நீங்களும் கோபமா தான் இருக்கீங்களா?” என்று கேட்க,

“நீ என் பேரனா போயிட்ட!! அதான் என்னால ஒன்னும் சொல்ல முடியலை. நீ இப்படி வந்து நிக்கிறதையும் என்னால பார்க்க முடியலை. மனசுக்கு கஷ்டமா இருக்கு. அதுக்காக நீ பண்ணத் தப்பை நான் மன்னிச்சிட்டேன் மட்டும் நினைக்காத.” என்று கூறி அவர் படுத்து விட, அஸ்வத்திற்கு மிகுந்த மன வருத்தம்.

“நான் தான் சொல்றேன்ல அஸ்வத் கண்ணா, நீ கவலைப்படாத, இந்த கோபமெல்லாம் சீக்கிரம் போயிடும். நீ எதுவும் நினைச்சுக்காம போய் தூங்கு. பாட்டி நான் சொல்றேன்ல போ கண்ணா.” என்று அவர் மேலும் அவனிடம் கொஞ்சம் பாசமாகப் பேசி அவனைச் சமாதானப்படுத்தியே அனுப்பினார்.

ப்ரனவிகா பின்னால் சென்ற ஹரிதாவால் அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“ப்ரனு நான் அத்தான்கிட்ட பேசுறேன். நீ எதுவும் ஃபீல் பண்ணாத சரியா.”

“அதெல்லாம் வேண்டாம் அண்ணி. நீ எதுவும் பேச வேண்டாம். நாளைக்குச் சும்மா பொண்ணு தான பார்க்க வராங்க. பார்த்துக்கலாம் என்ன பண்றாங்கனு.” என்று ப்ரனவிகா சாதாரணமாகக் கூற,

“ப்ரனு என்ன நீ இவ்ளோ சாதாரண சொல்ற!! வரவங்களுக்கு உன்னைப் பிடிச்சு போச்சுனா என்ன பண்ணுவ? ஏற்கனவே அந்த ஆகாஷுக்கு உன்னைப் பிடிக்கும். அவங்க அப்பா அம்மாவுக்கும் உன்னைப் பிடிக்க எவ்ளோ நேரமாகும் சொல்லு.” என்று அவள் கேட்க,

“அண்ணி நடக்கிறதுக்கு முன்னாடி நாம அதைப் பத்தி எதுவும் யோசிக்க வேண்டாம். ரொம்ப யோசிச்சா தேவையில்லாதப் பிரச்சனை அண்ணி. என்னை மீறி எதுவும் நடக்காது அண்ணி. நீ தேவையில்லாமல் அண்ணாகிட்ட பேசி சண்டைப் போட வேண்டாம். அப்புறம் ஞாபகம் வைச்சுக்கோ அவங்களுக்குப் பிடிச்சா மட்டும் போதுமா? நீ எதுவும் யோசிக்காமல் போய் தூங்கு.” என்று அவள் கூற,

“ஏதோ சொல்ற!! நான் கேட்டுக்கிறேன். ஆனால் உன்னோட அண்ணா பண்ற எதுவும் சரியில்லை. அவ்ளோ தான் நான் சொல்லுவேன்.” என்று அவள் கூறிவிட்டு அவள் எழுந்து சென்று விட, ப்ரனவிகா தான் என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தாள்.

இளமுகிலன் காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே பத்தடி தூரம் செல்கிறான். அவனைச் சரி செய்யவே நாளாகும் இதில் தன்னைப் பொண்ணு வேறு பார்க்க வருகிறார்கள்!! எப்படியும் தன்னை மீறி எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனால் அஸ்வத்தும் ஹரிதாவும் இவள் விஷயமாகச் சண்டை போடுவது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

முதலில் இளமுகிலனின் பிரச்சனையைக் கண்டுபிடித்து அவனை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தால் மட்டுமே தன்னுடைய எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று யோசித்தாள். ஆனால் அவனுக்கு என்ன பிரச்சனை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற யோசனையுடனே தூங்கி விட்டாள்.

Advertisement