Advertisement

இளமுகிலன் அவனது கடந்த கால நிகழ்வுகளை மற்றுமொரு முறை நினைத்துப் பார்த்ததில் அவனது மனம் கனத்து போனது. யாரது வாழ்க்கையிலும் இப்படி நடக்கக் கூடாது. சொந்த பெற்றோரே பணத்திற்காக மகனை கை விட்டு விட்டனர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. திவ்யாவின் உண்மையான குணத்தை அறியாமல் ஒன்றரை வருடம் அவளைக் காதலித்த தன்னை நினைத்து அசிங்கமாகவும் கேவலமாகவும் இருந்தது.

அவனது நினைவுகள் அவனது வீட்டின் அழைப்பு ஒலியில் தடைப்பட, யார் இந்த நேரம் வந்திருக்கிறார்கள் என்ற யோசனையுடன் கதவைத் திறக்க, ப்ரனவிகா நின்றிருந்தாள். சத்தியமாக அவன் நினைக்கவே இல்லை அவள் இங்கு வருவாள் என்று. அவளை அங்குப் பார்த்ததில் அவனுக்கு அதிர்ச்சி.

எதுவும் பேசாமல் அவன் அப்படியே சிலை போல நிற்க, ப்ரனவிகா அவன் முன் சொடக்கிட, தெளிந்து இளமுகிலன் அவளைப் பார்த்தான்.

“உள்ள வரலாமா?” என்று ப்ரனவிகா கேட்க,

“என்ன விஷயம்? எதுவா இருந்தாலும் இப்படியே சொல்லுங்க.” என்று அவன் கூற, ப்ரனவிகாவிற்கு ஒரு மாதிரியாகி விட்டது.

இளமுகிலன் இப்பொழுது தான் அவனது கடந்த காலத்தை நினைத்து நொந்து கொண்டிருந்தான். எந்த யோசனையும் இல்லாமல் திவ்யா அழைத்ததும் அவளது தோழியின் வீட்டிற்குப் போய் தான் எல்லா பிரச்சனையும். இப்பொழுது ப்ரனவிகா அங்கு வந்தது அவனுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. அவனது நிலையிலிருந்து பார்த்தால் அவன் செய்தது சரி. ஆனால் ப்ரனவிகா நிலையிலிருந்து பார்த்தால் அவன் அவளை அவமதிப்பது போல் தான் இருக்கும். அதை யோசிக்க மறந்தான் இளமுகிலன்.

அவன் அவ்வாறு கூறியதும் ப்ரனவிகாவால் ஒரு நிமிடம் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக நின்றாள். பின்னர் தெளிந்து,”நான் இங்க வந்தது உங்களுக்குப் பிடிக்கலைனு தெரியுது முகிலன். இட்ஸ் ஓகே, பட் நான் உங்ககிட்ட பேசியே ஆகனும். ஆனால் இப்படிப் பேச முடியாது. நான் உள்ள வரதுல உங்களுக்குப் பிரச்சனை இருந்தா பரவால, நாம வெளில எங்கேயாவது போய் பேசலாம். முடியாதுனு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்.” என்று அவள் கூற,

சரி இன்றோடு அவளிடம் பேசிவிட்டு இனி அவளின் பக்கமே திரும்பக் கூடாது என்று முடிவெடுத்து,”ஒரு நிமிஷம் வரேன்.” என்று கூறிவிட்டு இளா மறக்கமால் கதவைச் சாற்றி விட்டுச் சென்றது ப்ரனவிகாவின் மனதில் படிந்து பல எண்ணங்களை யோசிக்க வைத்தது.

இளமுகிலன் அகாடமியில் இருந்து சென்றதுமே ப்ரனவிகாவும் மனமுடைந்து தான் தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றாள். அவள் எங்குச் செல்கிறோம் எனத் தெரியாமல் வண்டி ஓட்டிச் செல்ல, தீடிரென வந்த ஞனோதயத்தில் சுற்றுப்புறத்தைப் பார்க்க, ஈரோடு நகரை விட்டு வெகு தூரம் வந்தது அப்போது தான் அவளது மூளையில் உரைத்தது.

அப்படியே வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு ஸ்டியரிங் மேல் தலையை வைத்து கண்ணை மூடிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள். அவள் முதன் முதலில் இரயிலில் பார்த்த இளமுகிலனிற்கும் இப்போது பார்க்கும் இளமுகிவனிற்கும் பல வித்தியாசங்கள் இருந்தது.

அப்போது அவன் சிரித்த முகமாக இருப்பான். ஆனால் இப்போது சிரிக்கக் காசு கொடுக்க வேண்டும் போல, அந்த அளவுக்கு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தான். பேருக்குக் கூட சிரிக்கவில்லை அவன்.

அதே போல் அப்போது எல்லோரிடமும் நன்றாகப் பேசினான். ஆனால் இப்போது யோசித்து யோசித்துத் தான் பேசினான். அதிலும் அவனது கண்ணில் எந்நேரமும் பயம் அல்லது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

இப்படி எல்லாவற்றையும் யோசித்தவள் அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது எனத் திடமாக நம்பினாள். அதை அவனிடமே கேட்டு விடலாம் என்று வண்டியைத் திருப்ப, அப்பொழுது தான் அவளுக்கு அவன் எங்கு இருக்கிறான் என்ற விவரம் தெரியாது என்பது மூலையில் உரைக்க, அவளது கைப்பேசியை எடுத்து ஓவியாவிற்கு அழைத்து இளமுகிலனின் வீட்டின் விலாசத்தை வாங்கிக் கொண்டு அதை அவனிடமும் கூறக் கூடாது என்று சொல்லிவிட்டு அவனைப் பார்க்கக் கிளம்பி விட்டாள்.

பர்னவிகாவால் இளமுகிலனை அப்படியே விட முடியாது. இத்தனை நாள் இனி அவன் தனக்குக் கிடையாது என்று மனதைத் திடப்படுத்தி தன் அண்ணன் கூறிய ஆகாஷை பார்த்துப் பேசும் அளவுக்கு முன்னேறியவள் முன் தீடிரென இளமுகிலன் தோன்ற, இது தான் கடவுள் சித்தம், இளமுகிலன் தான் தனக்கான வாழ்க்கைத் துணை என்பதில் திண்ணமான நம்பிக்கை. ஆனால் அதே சமயம் அவன் தன்னை வேண்டாமெனக் கூறினாள் கண்டிப்பாக இவளால் ஒன்றும் செய்ய முடியாது. சரி இப்படித் தனக்குளே யோசித்துக் கொண்டு இருப்பதற்கு இளமுகிலனையே நேரில் பார்த்துப் பேசிடலாம் என்று முடிவெடுத்துத் தான் அவள் அவனது வீட்டிற்கு வந்தாள்.

இளமுகிலன் உள்ளே சென்றவன், என்ன செய்வதெனப் புரியாமல் அப்படியே தலையில் கைவைத்து நின்றான். அவனுக்கு அவளுடன் செல்வதில் பிரச்சனை. பிரச்சனை என்று கூறுவதற்குப் பதில் பயம் என்று கூறலாம். அப்படியே எவ்ளோ நேரம் நிற்க முடியும்? இதைச் சமாளித்துத் தான் ஆக வேண்டுமென முடிவெடுத்து தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான்.

“எங்க போகலாம்?” என்று அவன் பட்டும் படாமல் கேட்க,

“பக்கத்துல ஒரு கோயில் இருக்கு, அங்கப் போகலாம். அப்படி உங்களுக்கு அது சவுகரியமா இல்லைனா நீங்களே சொல்லுங்க.” என்று அவள் கூற, இளா அவளை அதிசயமாகப் பார்த்தான். சத்தியமாக அவள் கோவிலுக்கு அழைப்பாள் என்று அவன் யோசிக்கவே இல்லை.

“சரி நீங்க முன்னாடி போங்க, நான் உங்களை ஃபாலோ பண்ணிட்டு வரேன்.” என்று அவன் கூற, அவனைக் கட்டாயப்படுத்த விரும்பாததால் அவள் தலையசைத்து விட்டு முன்னால் நடந்தாள்.

சரியாக பதினைந்து நிமிடப் பயணத்தில் அவர்கள் கோயிலை அடைந்தார்கள். ப்ரனவிகா முன்னே செல்ல, இளமுகிலன் அவள் பின்னே வந்தான். அது விநாயகர் கோவில். ப்ரனவிகாவின் இஷ்ட தெய்வம் விநாயகர். அவர் அவளையும் இளாவையும் சேர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் அவனை அங்கு அழைத்து வந்திருந்தாள்.

“முதல்ல சாமி கும்பிடலாம் முகிலன்.” என்று கூறிவிட்டு அவள் சாமி கும்பிட, இளாவும் அதையே செய்தான். பின்னர் இருவரும் விநாயகரைச் சுற்றி வந்து உக்கியும் போட்டு விட்டு ஓரமாகச் சென்று அமர்ந்தாள் ப்ரனவிகா. இளமுகிலனும் அவளின் பின்னேயே வந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தான்.

இருவரும் சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ப்ரனவிகா பேச்சை ஆரம்பித்தாள்,

“முகிலன் நான் காலைல உங்ககிட்ட என் காதல்ல சட்டுன்னு சொன்னதும் உங்களுக்கு யோசனையா தான் இருக்கும். அது எனக்குப் புரியுது. ஆனால் அதுக்காக நீங்க வேலைக்கு வராம இருக்க வேண்டாம். நான் உங்ககிட்ட காதல்ல சொன்னது வேணா அகாடமில இருக்கலாம். ஆனால் நான் எப்போவும் ஃப்ரோஃபஷன் வேற பெர்சனல் வேறனு தான் பார்ப்பேன். நான் ஸ்லிப்பானது உங்ககிட்ட மட்டும் தான். நான் மறுபடியும் என்னோட காதல்ல பத்தி உங்ககிட்ட பேச மாட்டேன். அதுக்காக எனக்கு உங்க மேல காதல் இல்லைனு அர்த்தமில்லை. நீங்க என்னைக் காதலிக்கிற வர நான் வெயிட் பண்ணுவேன்.” என்று அவள் கூற, இளா அமைதியாக இருந்தான். எதுவும் பேசவில்லை.

“உங்களுக்கு ஏதோ பிரச்சனைனு மட்டும் எனக்குப் புரியுது. ஆனால் அது என்னன்னு எனக்குத் தெரியலை. உங்களுக்குச் சொல்ல விருப்பமிருந்தால் என்கிட்ட சொல்லலாம்.” என்று அவள் கூற,

“நீங்க யாரோ எவரோ!! உங்களை நான் ஒரு பத்து நிமிஷம் பார்த்திருப்பேன். அதுவும் நேத்து இண்டர்வியூ நடத்தும் போது பார்த்தது. அப்புறம் இன்னைக்கு பார்த்தேன் அவ்ளோ தான். நான் எதுக்கு என்னோட பிரச்சனையை உங்ககிட்ட ஷேர் பண்ணனும்?” சற்றுத் திமிராக அவன் கேட்க,

பர்னவிகாவிற்கு அவன் பேச்சு கோபத்தைத் தரவில்லை மாறாகச் சிந்திக்க வைத்தது. அவன் நிஜமாகக் கோபப்படுவது போல் தெரியவில்லை. வேண்டுமென்றே அவன் மேல் அவளுக்குத் தப்பான எண்ணம் வர வைக்க நினைக்கிறான் என்று தோன்றியது.

“சரி முகிலன். நீங்க என்கிட்ட எதுவும் ஷேர் பண்ண வேண்டாம். ஆனால் நீங்க வேலைக்கு மட்டும் வராமல் இருக்க வேண்டாம். உங்களை விட்டா எனக்கு வேற ஆட்களே கிடைக்க மாட்டாங்களானு நீங்க கேட்க நினைக்கிறீங்க. அது எனக்குப் புரியுது. உங்களுக்கு முன்னாடி நாங்க சில பேரை இண்டர்வியூ பண்ணோம். ஆனால் யாரும் எங்களுக்குச் சரி வரலை. நீங்க மட்டும் தான் சரி வந்தீங்க. இது எக்சாம் சீசன். இந்த மாதிரி நேரம் ஸ்டூடன்ட்ஸ்கு ரொம்ப ப்ரீஷியஸ். ஒவ்வொரு நிமிஷமும் அவங்களுக்கு ரொம்ப முக்கியமானது. காலம் கடத்திறது ரொம்ப ரொம்ப தப்பு. அதனால் தான் நான் இப்போ உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க வொர்க்ல ஜாயின் பண்ணுங்க. நாம பெர்சனல்ல அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று அவள் கூற,

அவள் மாணவர்களுக்கு இது முக்கியமான நேரம் என்று கூறியதிலே அவன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். அவள் நம் விஷயத்தை அப்புறம் பேசலாம் என்று கூறியதை அவன் கவனிக்கவே இல்லை.

“ஓகே மேடம், நீங்கச் சொன்ன மாதிரி ஃபரோஃபஷன்னை பெர்சனல்லையும் மிக்ஸ் பண்ண வேண்டாம். நான் நாளைல இருந்து வேலைக்கு வரேன்.” என்று அவன் கூற, அவளது முகம் மகிழ்ச்சியைக் காட்ட, வேகமாக இளமுகிலன்,

“நான் இப்போவே சொல்லிடுறேன் திரும்ப என்கிட்ட காதல் அது இதுனு எதுவும் பேசாதீங்க. அப்படிப் பேசினால் கண்டிப்பா நான் வேலைக்கு வர மாட்டேன்.” என்று அவன் தீர்மானமாகக் கூற,

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்காதீங்க!! உங்களுக்குக் காதல்னா பிடிக்காதா இல்லை என்னைப் பிடிக்கலையா?” என்று அவள் கேட்க,

“எனக்குக் காதல் பிடிக்காதுங்க. அதால நான் பட்ட கஷ்டமே போதும்.” என்று வாய் தவறி அவன் கூறிவிட, ப்ரனவிகா யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.

“நீங்க முன்னாடி யாரையாவது லவ் பண்ணீங்களா? அவங்க உங்களை ஏமாத்திட்டாங்களா?” என்று அவள் கேட்க, அப்போது தான் அவன் உளறியதே புரிந்தது.

“ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க. நான் கிளம்புறேன், நாளைக்குச் சரியா பத்து மணிக்கு அகாடமில இருப்பேன்.” என்று கூறிவிட்டு அவளைப் பார்க்காமலே கிளம்பிவிட்டான்.

அவன் சென்றும் ப்ரனவிகா அங்கேயே தான் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்து அவனை எப்படி அணுகுவது என்று புரியவில்லை. இப்போதைக்கு அவன் அகாடமிக்கு வரேன் என்று கூறியதே நிம்மதியாக இருந்தது. மறுபடி ஒரு முறை விநாயகரிடம் இளமுகிலனை தன்னுடன் சேர்த்து வைத்து விடு என்று வேண்டிக் கொண்டு அவளது வீட்டிற்குச் சென்றாள்.

~~~~~~~~~~

திருச்சியில் திவ்யா வெயில் இல்லாமலே சூடாக இருந்தால். அவளிற்கு இதுவரை இளமுகிலன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் அவளது அம்மா வேறு அவரது அண்ணன் மகனைக் கல்யாணம் பண்ணக் கூறி நச்சரித்துக் கொண்டிருப்பது அவளை இன்னும் இன்னும் கோபப்படுத்தியது.

சங்கரும் திவ்யாவின் தோழன் ராகேஷும் அவள் முன் என்ன கூறுவதெனத் தெரியாமல் முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

“சை இரண்டு பேர் அவ்ளோ பேசுனீங்க!! ஒரே ஒருத்தனை உங்களால கண்டுபிடிக்க முடியலை!! அப்புறம் எதுக்கு அவ்ளோ பேச்சு? அப்பா நீங்க அரசியல்ல இருந்து என்ன ப்ரியோஜனம் சொல்லுங்க!!” என்று அவள் பாட்டிற்கு அவர்களை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

“திவிமா அப்பா என்ன டா பண்றது? நான் எவ்ளோ முயற்சி செய்தும் அவன் எங்க இருக்கான்னு தெரியலையே!! நம்ம பசங்க சென்னையை சல்லடைப் போட்டு தேடிட்டாங்க. ஆனால் அவன் எங்கேயும் இல்லை.” என்று அவர் பாவமாகக் கூற,

“ஆமா திவ்யா, அந்த டிடெக்டிவ் ஆட்களும் சென்னையை நல்லா தேடிட்டாங்க. இளமுகிலன் எங்கேயும் இல்லை.”

“அன்னைக்கு வாய் கிழிய அவ்ளோ பேசுன!! அவங்க ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்ட், ஸோ ஈசியா கண்டுபிடிச்சுடுவாங்கனு சொன்ன!! இப்போ என்னாச்சு?” என்று அவள் கோபமாகக் கேட்க,

“திவி ஒரு வேளை அவன் தப்பான முடிவெடுத்துட்டானோ!!” என்று ராகேஷ் கூற,

“ப்ச் என்ன சொல்ற? தப்பான முடிவா? புரியற மாதிரி பேசு.”

“அதான் திவி, அவன் ஒரு வேளை தற்கொலை பண்ணியிருந்தா?” என்று அவன் கூற, திவ்யாவிற்குப் பயங்கர கோபம். அவளுக்கு மட்டும் சக்தியிருந்தால் அவனை அங்கேயே எரித்து இருப்பாள்.

“ஒழுங்கா பேசு ராகேஷ்!! அவன் அப்படி எல்லாம் பண்ற கோழைக் கிடையாது. உங்களுக்கு அவனைக் கண்டுபிடிக்கத் துப்பில்ல!! இதுல அவன் தற்கொலை பண்ணிக்கிட்டானா? அடுத்த முறை பேசுறதுக்கு முன்ன என்ன பேசுறனு யோசிச்சு பேசு.” என்று அவள் கோபமாகக் கூற, ராகேஷ் அப்படியே அமைதியாகி விட்டான்.

“திவி மா நீ கவலைப்படாத, அப்பா ஒவ்வொரு மாவட்டத்திலும் தேடச் சொல்றேன். இந்த வாட்டி அப்பா உன்னை வருத்தப்படுற மாதிரி நடந்துக்க மாட்டேன்.” என்று தீவிரமாக அவர் கூறிவிட்டு அவரது கைப்பேசியுடன் வெளியே சென்றார்.

துரைச்சாமி, சங்கரின் வலது கை. அவர் எள் என்பதற்கு முன் எண்ணெய்யாக இருப்பார். சங்கரைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்தவர். சங்கருக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதை, பக்தி இப்படி எதை வேண்டுமென்றாலும் கூறலாம். சங்கரிடம் வெளியாட்கள் யாரும் சுலபமாக வந்து பேசி விட முடியாது. முதலில் அவர்கள் துரைச்சாமியை தான் பார்க்க வேண்டும். அவர் அனுமதித்தால் தான் மட்டுமே சங்கர் அவர்களைப் பார்ப்பார். அந்த அளவிற்கு துரைச்சாமி மீது நம்பிக்கை. அவரும் சங்கருக்கு உண்மையாகத் தான் இருந்திருக்கிறார். மற்றவர்கள் கூட சங்கரிடம் பேசப் பயப்படும் விஷயத்தை இவர் தைரியமாகப் பேசிவிடுவார். அதனாலே அனைவரும் முதலில் இவரைத் தான் அணுகுவது. சில வருடங்களுக்கு முன் தான் ஒரு விபத்தில் தன் மனைவியையும் ஆசை மகளையும் பறி கொடுத்தவர். சிறிது நாட்கள் தேங்கி இருந்தவர் அதிலிருந்து வெளி வந்து முழுமையாக வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

வெளியே வந்த சங்கர், துரைச்சாமியை அழைத்து,”துரை அந்தப் பைய இளமுகிலன் இல்லாம என் பொண்ணு ரொம்ப கஷ்டப்படுறா!! இதுக்கு மேல நான் அமைதியா இருக்க முடியாது. நீ என்ன பண்ற எல்லா மாவட்டத்துலயும் இருக்க நம்ம கட்சி ஆளுங்ககிட்ட சொல்லி அவனைத் தேடச் சொல்லு.” என்று அவர் கூற,

“ஐயா கட்சி ஆட்களை எப்படித் தேடச் சொல்ல முடியும்? நாம வேற ஏதாவது வழி பார்க்கலாம் ஐயா.” என்று அவர் கூற,

“என்ன துரை இப்படிப் பேசுற? கட்சி ஆட்கள்கிட்ட சொன்னா வேலை ஈசியா முடியும்.”

“ஐயா கட்சில ஏற்கனவே உங்களைப் பிடிக்காதவங்க நிறையப் பேர் இருக்காங்க. இதுல அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நாமளே நம்மளை ஏதாவது செய்ய எடுத்துக் கொடுத்த மாதிரியாகிடும்.” என்று அவர் கூற, சங்கர் யோசித்தார்.

“அப்போ இதுக்கு என்ன வழி?”

“அதை நான் பார்த்துக்கிறேன். நீங்கக் கவலையை விடுங்க ஐயா.” என்று துரை கூற,

“சரி துரை, எதுவா இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் பண்ணிடு. பாவம் என் பொண்ணு, அவன் போனதுல இருந்து சோகமாவே இருக்கா.”

“ஐயா என்னை நம்புங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்று துரை கூற, சங்கரும் தலையசைத்து விட்டு உள்ளே சென்றார்.

துரைச்சாமி உள்ளே செல்லும் அவரைத் தான் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். சங்கரின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த துரைச்சாமி துருப்புச் சீட்டாக இளமுகிலனை பயன்படுத்த எண்ணி முழு மூச்சில் அவனைத் தேட ஆட்களை ஏவி விட்டார்.

Advertisement