Advertisement

இளமுகிலன் திவ்யாவிடம் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என அவனது பயணம் முழுவதும் அதையே நினைத்துக் கொண்டு வந்தான். இந்த முறை இப்படி வருவதற்கு வீட்டில் என்ன சொல்லுவார்களோ என்ற சிந்தனையுடன் தான் வீடு வந்து சேர்ந்தவனுக்கு அதிர்ச்சி.

திவ்யா அவளது பெற்றோருடன் அவனது அப்பா மற்றும் அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் என்ன செய்வதென் ஒன்றும் புரியவில்லை. சரி எதுவாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் உள்ளே வந்தான்.

திவ்யாவின் பெற்றோருக்கு அதுவும் அவளது அம்மாவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு தன் மகளை அவரது அண்ணன் பையனுக்குத் தர வேண்டுமெனக் கொள்ளை ஆசை. ஆனால் அதில் மண்ணை அள்ளிப் போட்ட மகள் மீது கோபமிருந்தது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் இளமுகிலனை நேரில் பார்த்ததும் அண்ணன் மகனை விட இவன் தன் மகளிற்குப் பொருத்தமாக இருப்பான் என்று மனதில் நினைத்துத் திருப்தி பட்டுக் கொண்டார்.

“வா வா இளா. நீ தான் விஷயத்து எங்ககிட்ட சொல்லலை. ஆனால் என் மருமகள் கெட்டிக்காரி எப்படி விஷயத்தைச் சொல்லிட்டானு பார்த்தியா!!” என்று அவனது அப்பாவும்,

“ராசா இப்போ தான் எங்க மனசே நெரஞ்சு போயிருக்கு. இந்தக் கல்யாணத்துல எங்களுக்குப் பரி பூரண சம்மதம்.” என்று அவனது அம்மாவும் கூற,

இளமுகிலனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலை. ஆனால் இதற்கு மேல் பேசாமலிருந்தால் நன்றாக இருக்காது என்று,”நான் திவ்யாகிட்ட கொஞ்சம் தனியா பேசனும்.” அவன் கூற,

அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர். இது ஒன்றும் வீட்டில் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் கிடையாது. திவ்யாவும் அவனுக்கு ஒன்றும் தெரியாத பெண் கிடையாது அப்படியிருக்கும் போது எதற்குத் தனியாகப் பேச வேண்டுமென எல்லாரும் அவனைப் பார்க்க, திவ்யா அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் எழுந்து நின்று,”வாங்க இளா போகலாம்.”என்று அவள் கூற,

“நாங்க பக்கத்துல இருக்கிற பார்க்ல போயி பேசிட்டு வரோம்.” என்று இளமுகிலன் கூறிவிட்டு யாரின் முகத்தையும் பார்க்காமல் திவ்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவனது வேகத்தைப் பார்த்த பெரியவர்களுக்குச் சிரிப்பு வந்தது. அவர்கள் வேறு மாதிரி அதைப் புரிந்து கொள்ள, அது தெரியாமல் அவன் திவ்யாவுடன் பக்கத்திலிருக்கும் பூங்காவிற்குச் சென்றான்.

இளா அங்கிருந்து இருக்கையில் அமர, திவ்யா அவன் பக்கத்தில் அவனை உரசிக் கொண்டு அமர, இளமுகிலன் தள்ளி அமர்ந்தான்.

“என்ன இளா தள்ளி போறீங்க? இதுக்கு முன்னாடி நீங்க அப்படிப் பண்ணது இல்லை.” என்று கேட்டுக் கொண்டு மீண்டும் அவனை நெருங்கி அமர,

இளா இப்பொழுது எழுந்து நின்று,”அப்போ நிலைமை வேற திவ்யா. இப்போ நிலைமை வேற.” என்று கூற,

“எனக்கு ஒன்னும் புரியலை இளா!! என்ன வேற நிலைமை? இப்போ என்ன நிலைமை மோசமாகிடுச்சு? நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? நம்ம கல்யாணம் சீக்கிரம் நடக்கப் போகுது இளா. இனிமேல் நம்ம இரண்டு பேரும் சேர்ந்தே இருக்கப் போறோம். அதை நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு இளா.” என்று அவள் பாட்டிற்குப் பேசிக் கொண்டே போக,

“ப்ச் போதும் நிறுத்து திவ்யா. எனஃப் இஸ் எனஃப்.” என்று அவன் கத்த, திவ்யா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.

“என்னாச்சு இளா? ஏன் இப்போ இப்படிக் கத்துறீங்க? இப்படி எல்லாம் பண்ணாதீங்க இளா. எனக்குப் பயமா இருக்கு.” கண்ணில் நீருடன் அவள் கூற,

“நீ நடிச்ச வரைக்கும் போதும். இனிமேல் உன்னோட நடிப்பால நான் ஏமாற மாட்டேன். நான் தெளிஞ்சுட்டேன் திவ்யா. இப்போ நான் ஊருக்கு வந்ததுக்குக் காரணம் நாம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்னு சொல்ல தான். ஸோ என்னை மறந்துடு!! நம்ம இரண்டுப் பேருக்கும் ஒத்து வராது. இதைச் சொல்ல தான் வந்தேன். சொல்லிட்டேன், நான் கிளம்புறேன்.” என்று அவன் முன்னால் நடக்க ஆரம்பிக்க,

“இளா ஒரு நிமிஷம். நீங்க இப்படிப் பேசுனா நான் என்ன பண்றது? காரணம் எதுவும் சொல்லாமல் ப்ரேக் அப்புனு சொன்னால் என்ன அர்த்தம்? இதுல நான் நடிக்கிறேன்னு வேற நீங்க சொல்றீங்க!! பதில் சொல்லிட்டு அப்புறம் போங்க இளா.” என்று அவள் கூற,

“பதில் தான!! சொல்றேன் நல்லா கேட்டுக்கோ!! நீ காலேஜ் முடிச்சுட்டு திருச்சி வரேன்னு தெரிஞ்சு உன்னை சர்ப்ரைஸ் பண்ண நான் ஸ்டேஷன் வந்தேன். ஆனால் நீ என்னைப் பார்க்கலை, உன் ப்ரண்ட் யாரோடவோ பேசிட்டு போயிட்ட. உன் பின்னாடி வந்து உன்னை சர்ப்ரைஸ் பண்ண நினைச்ச எனக்கு நீ உன் ப்ரண்ட்கிட்ட பேசுனதை கேட்டு நான் சர்ப்ரைஸ் ஆகிட்டேன். எல்லாம் கேட்டதுக்கு அப்புறம் எப்படி நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு நினைக்கிற?” என்று அவன் கடுமையாகக் கேட்க,

“இங்கப் பாருங்க இளா…” என்று அவள் ஏதோ கூற வர, இளா அவன் கையைக் காட்டி அவளை நிப்பாட்ட கூறி,

“உன் ப்ரண்ட்கிட்ட அவன் இவன்னு தான பேசுன!! அப்புறம் என்ன இப்போ மட்டும் மரியாதை? நீ அப்படிப் பேசுனதை கூட நான் கண்டுக்க மாட்டேன். ஆனால் உன்னோட ப்ரண்டும் என்னை அப்படிப் பேசுற அதைத் தப்புனு சொல்ல கூட உனக்குத் தெரியலை!! ப்ச் அதெல்லாம் இப்போ தேவையில்லாதது. நமக்குள்ள ஒத்துவராது அவ்ளோ தான். என்னைத் தயவு செஞ்சு விட்டுரு.” என்று அவன் கூற,

“அப்படி எல்லாம் விட முடியாது இளா. ஓகே உனக்கே என்னைப் பத்தி தெரிஞ்சது ஒரு விதத்துல நல்லது தான். இனிமேல் உன்கிட்ட நான் நடிக்கத் தேவையில்லை. சரி நீ சொன்னது எல்லாம் உண்மை தான் ஒத்துக்கிறேன். ஆனால் நான் ஒன்னும் உன்னைக் காதலிக்கிற மாதிரி நடித்து ஏமாத்தலையே!! நான் உன்னை உண்மையா தான் காதலிச்சேன் இப்போவும் காதிலிக்கிறேன். ஆனால் நீ உண்மையிலே என்னை காதலிச்சு இருந்தால் நீ என்னை விட்டுப் போக நினைச்சுருக்க மாட்ட, என்கிட்ட உட்கார்ந்து பேசி இது தப்புனு சொல்லிருப்பா. ஆனால் அப்படி எதுவும் பண்ணாம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்னு இவ்ளோ ஈசியா சொல்ற?” என்று திவ்யா கேட்க, இளமுகிலனுக்கு இப்போது என்ன கூறுவதெனப் புரியவில்லை. அவள் கூறுவது நூறு சதவிகிதம் உண்மை. முதலில் அவளை அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பண்ணாமல் விட்டது தப்பு என்று மனம் அவளுக்குச் சாதகமாகப் பேச, அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

இப்பொழுதும் இளமுகிலன் தவறு தான் செய்தான். அவள் கூறுவதில் நியாயம் இருந்தாலும் உட்கார்ந்து பேசினால் மாறக்கூடிய ஆள் திவ்யா இல்லை என்பதை மறந்து விட்டான். அவள் எதுவும் தெரியாமல் செய்யவில்லை. எல்லாம் யோசித்து திட்டம் போட்டுச் செய்தவள் உட்கார்ந்து பேசினால் மட்டும் மாறிவிடுவாளா? யோசிக்க மறந்தான் இளமுகிலன்.

“சரி இப்போ என்ன செய்யனும்?” என்று இளா அவளிடமே கேட்க,

அவளோ மனதிற்குள் சிரித்துக் கொண்டே,”நாம பேசலாம் இளா. உங்க…ப்ச் உன்னோட மனசு நோகுற மாதிரி நான் எதுவும் பண்ண மாட்டேன் இளா. நீ எப்படி இருக்கச் சொல்றியோ அப்படியே இருக்கேன்.” என்று அவள் கூற, இளாவும் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா என்று யோசித்தான்.

இது ஒன்றும் போட்டியோ வேற எதுவோ கிடையாது ஒரு முறை தப்பு செய்தால் இன்னொரு வாய்ப்பு கொடுக்க, இது வாழ்க்கை என்பதை முற்றிலும் மறந்துவிட்டான் இளமுகிலன்.

“தாங்க்ஸ் இளா, நீ யோசிக்கிறதுல எனக்குப் புரிஞ்சுடுச்சு. இனிமேல் நீ எப்படி இருக்கனும்னு சொல்றியோ அப்படியே இருக்கேன்.” என்று அவள் கூற,

“நான் உனக்கு இன்னொரு வாய்ப்பு தர நினைக்கிறது உண்மை தான் திவ்யா. அது சரியானு தெரியலை. பட் என்னை இன்னொரு முறை நீ ஏமாத்த மாட்டன்னு மட்டும் நம்புறேன். அப்புறம் இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் என்னன்னு பார்த்துக்கலாம்.” என்று கூறிக் கொண்டே முன்னே நடக்க, திவ்யாவின் முகத்தில் தீவிரச் சிந்தனை.

இளமுகிலனும் திவ்யாவும் அவனது வீட்டிற்கு வர, தில்லை சங்கர் எழுந்து வந்து,”என்ன மாப்பிள்ளை என் பொண்ணுகிட்ட பேசிட்டீங்களா? நாங்களும் பேசி கல்யாண தேதிலாம் குறிச்சுட்டோம். அடுத்த மாசத்துல வர முதல் தேதில கல்யாணம் வைச்சுக்கலாம்னு முடிவுப் பண்ணிட்டோம்.” என்று குண்டைத் தூக்கிப் போட, இளா தன் பெற்றோரைப் பார்க்க, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

“இல்லை இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம். அதுக்கு நாங்க இன்னும் தயாராகலை.” என்று ஏதோ காரணம் கூற, சங்கர் ஒரு மாதிரி இளாவை பார்க்க,

“டேய் என்ன டா பேசுற?” என்று முதல் முறை கத்தியும் டா போட்டும் குமார் பேச, அதிர்ச்சியாக இளா அவரைப் பார்த்தான்.

“அய்யோ மாமா நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம். இது நானும் இளாவும் சேர்ந்து எடுத்த முடிவு தான்.” என்று திவ்யா கூற, குமார் அமைதியாகி விட, சங்கர் அவளைப் பார்க்க, அவரிடம் கண்களால் ஜாடை காட்ட அவரும் அமைதியாகி விட்டார்.

“சரி அப்போ நாங்க கிளம்புறோம்.” என்று அவர்கள் கிளம்பியதும் குமாரும் வசந்தியும் இளமுகிலனை வாங்கு வாங்கென வாங்கி விட்டார்கள்.

“உனக்கு என்ன பிரச்சனை இளா? எவ்ளோ பெரிய சம்மதம் நம்மளை தேடி வந்திருக்கு? உனக்கு வந்த வாழ்க்கையை நினைச்சு நாங்க எவ்ளோ சந்தோஷமா இருக்கோம் தெரியுமா? அதை எல்லாம் கெடுத்துருவ போலயே!!” என்று குமார் அவனைச் சத்தம் போட,

“ப்ச் அப்பா புரியாம பேசாதீங்க..” என்று திவ்யா செய்த அட்டூழியம் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூற,

“இங்கப் பார் அந்தப் பொண்ணு உன்னைக் காதலிச்சதே பெரிய விஷயம். அந்தப் பொண்ணு பெரிய இடத்தைப் பொண்ணு. அப்படி இப்படினு தான் இருக்கும். நீ தான் சகிச்சுட்டு போகனும். அதை விட்டுட்டு கல்யாணத்தை தள்ளி வைக்கச் சொல்ற!! அறிவுனு ஏதாவது இருக்கா உனக்கு? என்னங்க அவங்களுக்கு ஃபோன் பண்ணி நம்ம குறிச்சே தேதிலயே கல்யாணம் வைச்சுக்கலாம்னு சொல்லுங்க.” என்று வசந்தி கூற,

“அம்மா என்னமா சொல்றீங்க? அவங்க பெரிய இடமா இருந்தா மட்டும் போதுமா?”

“அதெல்லாம் போதும் டா. ஒன்னு கிடைக்கனும்னா இன்னொன்னை இழந்தா தப்பே இல்லை. அந்தப் பொண்ண நீ கல்யாணம் பண்ணிகிட்டா பொண்ணோட சேர்ந்து நமக்கு வசதி வாய்ப்பும் கிடைக்கும். அதனால இந்த மாதிரி விஷயத்தை கண்டுக்கமா போயிடு.” என்று குமார் கூற, இளமுகிலன் தன் பெற்றோரா இப்படிப் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“இங்கப் பார் நாங்க பேசுறது இப்போ வேணா தப்பா தெரியலாம். ஆனால் உன்னோட நல்லதுக்கு தான் நாங்க இதைச் சொல்றோம். பொண்ணும் பார்க்க நல்லா தான் இருக்கா. இப்போலாம் மாமனார் வீட்டுல மருமகன் இருக்கிறதுலாம் சாதாரணம். அதைப் போய் பெரிசா பேசிட்டு இருக்க.” என்று வசந்தி கூற, இளமுகிலனுக்கு மனம் விட்டுப் போய் விட்டது. எதுவும் பேசாமல் அமைதியாக அவனது அறைக்குச் சென்று விட்டான்.

இளமுகிலன் என்ன யோசித்தாலும் அவனால் திவ்யாவை மண்ணித்து ஏற்றுக் கொள்ள முடியுமெனத் தோன்றவில்லை. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் புரிந்தது. ஆனால் மூளையில் எந்த யோசனையும் வரவில்லை. யாரிடமும் அவனால் உதவிக் கேட்க முடியாது. அவனது அம்மா மற்றும் அப்பாவிடம் கூற எதுவும் பேசவில்லை. அவனது அறையை விட்டு அவன் வெளியேவும் வரவேயில்லை. அவனது பெற்றோரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. இவ்ளோ நல்ல வாழ்க்கையை அவன் கெடுத்துக் கொள்கிறான் என்ற எண்ணம் அவர்களுக்கு.

அடுத்த நாள், மதிய நேரம் போல திவ்யா அவனை அழைத்து அவனிடம் பேச வேண்டுமெனக் கூறி, ஒரு இடத்திற்கு வரச் சொல்லி அவனிடம் கூற, இளமுகிலனும் எதுவும் யோசிக்காமல் அவள் சொன்ன இடத்திற்குத் தயாராகிக் கிளம்பிச் சென்றான்.

திவ்யா வரச் சொன்ன இடமோ அவளது தோழி ஒருத்தியின் வீடு. இளமுகில் யோசிக்காமல் அவள் கூறிய இடத்திற்குச் செல்ல, அவளது தோழி வீட்டின் வெளியே நின்று அவனுக்காகக் காத்திருக்க, சரியாக வந்தான் இளமுகிலன்.

“உங்ககிட்ட தான் பேசனும்னு திவ்யா வெயிட்டிங். உள்ள போங்க, எனக்குப் பக்கத்துல கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு வந்துடுறேன்.” என்று அவள் கூறிவிட்டுச் செல்ல, இளமுகிலனும் எதுவும் யோசிக்காமல் உள்ளே சென்றான்.

அவன் உள்ளே சென்றவுடன் வீடும் திவ்யா இருந்த நிலைப் பார்த்தும் பதறிவிட்டான். வேகமாக அவளிடம் சென்று,”ஏய் திவ்யா உனக்கு என்னாச்சு? ஏன் பொருள் எல்லாம் சிதறிக் கெடக்குது? உன் ட்ரெஸ்கு என்னாச்சு?” என்று அடுக்காகக் கேள்வி கேட்க,

வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு காவலர்களுடன் அவளது தோழி வர, அப்பொழுதும் அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு பெண் காவலர் வேகமாக வந்து அவனது சட்டையைப் பற்றித் தூக்கி,

“எவ்ளோ தைரியமிருந்தா இந்தப் பெண்ணை பலாத்காரம் பண்ண நினைச்சுருப்ப?” என்று அவர் கேட்க, அவன் கதிகலங்கி விட்டான்.

“அய்யோ மேடம் நீங்கத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!! நான் ஒன்னும் பண்ணலை மேடம். வேணும்னா நீங்க திவ்யாகிட்ட கேளுங்க.” என்று அவன் கூற, அவர் அவளைப் பார்க்க,

“மேடம் அவர் என்னைக் கல்யாணம் பண்ணப் போறவர் தான். ஏதோ தெரியாமல் பண்ணிட்டார் விட்டுருங்க ப்ளீஸ்.” என்று அந்த பெண் காவலரிடம் கூறிவிட்டு அவளது தோழியைப் பார்த்து,”ஏய் எதுக்கு டீ போலிஸ கூப்பிட்ட.” என்று கேட்க, இளமுகிலனுக்கு அதிர்ச்சி. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“திவ்யா ஏன் பொய் சொல்ற? ஒழுங்கா உண்மையைச் சொல்லு.” என்று அவன் கூற,

“ஏய் என் முன்னாடியே அந்தப் பொண்ண மிரட்டுறியா? நட டா ஸ்டேஷனுக்கு.” என்று அவனை இழுத்துக் கொண்டு செல்ல, இளமுகிலன் திரும்பி திவ்யாவைப் பார்க்க, அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து வெற்றிச் சிரிப்பு ஒன்றைச் சிரிக்க, அவனுக்கு தாமதமாகப் புரிந்தது திவ்யா விரித்த வலையில் அவன் சிக்கிக் கொண்டான் என்று.

காவல் நிலையத்தில், திவ்யா அவளது தந்தை சங்கர், குமார் மற்றும் வசந்தி என அனைவரும் வந்திருக்க, இளமுகிலனை அங்கிருக்கும் சிறையில் வைத்திருக்க, குமாரும் வசந்தியும் கண்ணீருடன் அங்கு நின்றிருந்தார்கள்.

“அம்மா என் பையன் ஏதோ புத்திக் கெட்டு இப்படிப் பண்ணிட்டான். இனிமேல் இப்படிப் பண்ணாமல் நாங்க பார்த்துக்கிறோம்.” என்று குமார் கூற,

“இதை உங்க பையனைச் சொல்ல சொல்லுங்க நான் விடுறேன். அதுவும் சங்கர் சார் சொல்றதால தான். இல்லாட்டி முட்டிக்கு முட்டி தட்டிருப்பேன்.” என்று அந்தப் பெண் காவலர் கூற,

“இதோ நான் பேசுறேன்.” என்று கூறிவிட்டு வசந்தி, இளமுகிலனிடம் நெருங்க, அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல,

“இங்கப் பார் இளா நாங்க உன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைச்சதுக்கு எங்களுக்கு ரொம்ப நல்லது பண்ணிருக்க. எப்படி டா உனக்குள்ள இவ்ளோ வக்கிரம்? நேத்து என்னமோ அந்தப் பொண்ண வேணாம்னு சொன்ன!! இப்போ இப்படிப் பண்ணிருக்க?? இந்த மாதிரி இனிமேல் நடக்காதுனு நீ சொன்னா உன்னை விட்டுருவாங்க. அதுக்கு அப்புறம் அவங்க கால்ல நாங்க விழுந்தாவது இந்தக் கல்யாணத்தை நடத்தி வைச்சுடுறோம்.” என்று அவர் கூற, இளமுகிலன் எது கூறினாலும் அவர் கேட்க மாட்டார் என்பது புரிந்து போனது. அவனது அம்மாவும் அப்பாவும் திவ்யாவின் செல்வச் செழிப்பைப் பார்த்து மயங்கிவிட்டார்கள் என்று நன்றாகத் தெரிந்தது அவனுக்கு.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் சம்மந்தி. மாப்பிள்ளை ஏதோ புத்திக் கெட்டு இப்படிப் பண்ணிட்டார். இப்பவும் ஒன்னும் பிர்சசனை இல்லை, அவர் என் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன் எழுதி தரச் சொல்லுங்க அது போதும். நான் கேஸ்ஸை வாப்பஸ் வாங்கிக்கிறேன்.” என்று சங்கர் கூற,

“பின்ன என்ன டா? அவங்க இவ்ளோ இறங்கி வராங்க, நீ இப்படிக் கல்லு மாதிரி நிக்கிற!! என்னங்க நீங்க பேப்பர் வாங்கி எழுதுங்க, இவன் கையெழுத்து போடுவான்.” என்று வசந்தி கூற, நொடியும் தாமதிக்காமல் அவர் வாங்கி எழுத, இளமுகிலனுக்கு அவர்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை. அவனை யோசிக்கவும் விடாமல் அடுத்து அடுத்து விஷயங்கள் நடக்க, அவன் கலங்கி நின்றான்.

“இங்கப் பார் இளா நீ இதுல கையெழுத்து போடாட்டி என்னை உயிரோட பார்க்க முடியாது.” என்று வசந்தி கூற,

“உன்னை நாங்க கஷ்ட்டப்பட்டு படிக்க வைச்சதுக்கு இது தான் நீ பண்ற நன்றிக் கடனா?” என்று அவனது அப்பாவும் கேட்க, அவனுக்கும் வேறு வழி எதுவும் தோன்றாவில்லை. முதலில் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும். அது மட்டும் தான் அவனது புத்தியில் உரைத்தது. அதனால் அவர்களிடமிருந்து அந்தக் காகிதத்தை வாங்கி அதில் என்ன எழுதியிருக்கிறது என்று கூடப் பார்க்காமல் கையெழுத்திட்டான்.

காவலர் அவனை விடுவிடுக்க, இளமுகிலன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் வெளியே வர, திவ்யா வெற்றிச் சிரிப்புடன் அவனிடம் வந்து,”இனி உன்னால என்னைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீ எனக்கு மட்டும் தான். இந்த ஜென்மத்துல நான் மட்டும் தான் உன்னோட பொண்டாட்டி.” என்று அவள் கூற, இளமுகிலன் உடைந்து போனான். அவள் தன்னைப் பழிவாங்க இப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்த இளமுகிலனுக்கு அவள் தன்னை அடையவே இப்படிச் செய்துள்ளாள் என்பதை நினைக்க நினைக்க தன் மேலே வெறுப்பு வந்தது அவனுக்கு.

“இங்கப் பார் இந்தப் பொண்ணை ஏமாத்த நினைச்ச நீ எங்க இருந்தாலும் உன்னைத் தேடிக் கண்டுபிடிச்சு முட்டிக்கு முட்டி தட்டி நீ வெளியவே வர முடியாத படி உன் மேல கேஸ்ஸை போட்டு ஆயிசுக்கும் ஜெயில்ல இருக்கிற மாதிரி பண்ணிடுவேன் ஞாபகம் வைச்சுக்கோ. ஒழுங்கா அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்து சரியா.” என்று அந்தப் பெண் காவலர் கூற, அவன் அமைதியாக நின்றான்.

“மேடம் அதெல்லாம் என் பையன் ஒழுங்கா இருப்பான்.” என்று வசந்தி கூற, இளமுகிலன் அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அவனது பெற்றோருக்குக் கூட காத்திருக்காமலே வீட்டிற்கு வந்தவன் அவனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு அவனது படுக்கையில் படுத்து விட்டான். அவனது வாழ்க்கையே இருண்டது போல் இருந்தது அவனுக்கு. இதன் பிறகு என்ன செய்வது என்று யோசித்தான். கண்டிப்பாக திவ்யாவை அவனால் இவ்ளோ நடந்த பிறகு கல்யாணம் செய்ய முடியாது. இதிலிருந்து தப்பிக்க ஓரே வழி யாரிடமும் எதுவும் சொல்லாமல் இங்கிருந்து செல்வது தான் என்று முடிவெடுத்து அவனது உடைமைகள், மற்றும் அவனுக்குத் தேவையானவற்றை ஒரே ஒரு பையில் மட்டும் எடுத்து வைத்தான்.

பின்பு அவனது மடிக்கணினி எடுத்து அவன் வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் தலைமைக்கு அவன் வேலையிலிருந்து நிற்கப் போகிறான் என்று மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்தான். பின்னர் அதையும் எடுத்துச் செல்லலாம் என்று தான் யோசித்தான். ஆனால் ஐ.பி. அட்ரெஸ் வைத்து அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அதை அங்கேயே வைத்துவிட்டான்.

இரவு அவனது அம்மாவும் அப்பாவும் தூங்கும் வரை காத்திருந்தான். யாரும் அவன் இப்படி ஒரு முடிவெடுப்பான் என்று யோசிக்காததால் அவர்கள் சாதாரணமாகத் தான் இருந்தார்கள். அது இவனுக்குச் சாதகமாக இரண்டு மணி போல் அவனது வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்பி நடந்தே திருச்சி செல்லும் சாலைக்கு வர, அவனது நேரம் ஒரு லாரி வர, அதில் ஏறி சேலம் சென்றான். அங்கிருந்து பேருந்தில் சென்னை வந்து ஒரு பழைய மட்டமான மேன்ஷனில் அறை எடுத்துத் தங்கினான். அதன் பின் தான் அவன் பரத்தை சந்தித்தது, அவன் இவனை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றது.

இளமுகிலனின் நினைவு அவனது வீட்டின் அழைப்பு ஒலியில் நிகழ்விற்கு வர, எழுந்து சென்று கதவைத் திறந்தான். வெளியில் நின்றிருந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

Advertisement