Advertisement

ஹரிதாவும் ப்ரனவிகாவும் சந்தோஷத்துடன் கோயம்புத்தூர் செல்வதற்குத் தயாராகினர். முதல் முறையாகத் தன் நண்பர்களுடன் அதுவும் ப்ரனவிகாவிற்கு மிகவும் பிடித்த இரயில் பயணம். அவர்கள் வகுப்பிலிருந்தே பத்து மாணவிகளும் நான்கு மாணவர்களும் தேர்வாகி இருந்தனர். மாணவர்களும் இவர்களுடன் வரேன் என்று கூறியிருந்ததால் இன்னுமே நன்றாக அதே சமயம் ஜாலியாக இருக்கும் என்று கருதினர்.

ஹரிதாவையும் ப்ரனவிகாவையும் வழியனுப்ப இரயில் நிலையத்திற்கு மொத்த குடும்பமுமே வந்திருந்தது. அது அவர்களுக்கு ஒரு மாதிரி கூச்சத்தைத் தர,

“நாங்க என்ன மாசக் கணக்கா அங்கேயேவா இருக்கப் போறோம்? இதோ காலைல போயிட்டு நைட் வந்துருவோம். இதுக்கு போய் இப்படி எல்லாரும் வந்துருக்கீங்க?” என்று சற்றுக் கோபத்துடன் ப்ரனவிகா கேட்க,

“அதான? நாங்க என்ன சின்ன குழந்தைகளா? ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று ஹரிதாவும் கேட்க,

“இங்கப் பாருங்க, நீங்க சின்ன குழந்தைகள் கிடையாது தான். அதே மாதிரி நீங்க ஒரு நாளுக்குத் தான் போறீங்க. ஆனால் முதல் முறை தனியா போறீங்க. எங்களுக்குக் கொஞ்சம் பயம் இருக்கத் தான செய்யும். சொல்லப் போனால் நாங்க உங்க கூடவே வந்திருக்கனும். அப்படி வரலையேனு சந்தோஷப் படுங்க.” என்று பூர்ணிமா கூற,

“அய்யோ இதெல்லாம் டூ மச். இப்போ என்ன நீங்க எல்லாரும் ட்ரெயின் இங்கேயிருந்து கிளம்புற வரைக்கும் இருப்பீங்க அதான!! தாரளமா இருங்க. யார் வேணாம்னு சொன்னா?” அப்படியே ப்ரனவிகா பேச்சை மாற்ற, அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது.

அஸ்வத் அமைதியாக நின்றிருக்க, ஹரிதா அவனிடம் சென்று,”என்னாச்சு அத்தான்? ஏன் அமைதியா இருக்கீங்க?”

“நீ கண்டிப்பா போய் தான் ஆகனுமா?” என்று அஸ்வத் வருத்தத்துடன் கேட்க,

“அத்தான் ஏன் என்னாச்சு? இப்போ ஏன் நீ இப்படிக் கேட்கிற?”

“இல்லை உன்னை பிரிஞ்சு ஒன் டே ஃபுல்லா நான் எப்படி இருப்பேன்?”

“அத்தான் இதெல்லாம் அந்நியாயம்!! நாங்க போறது ஜஸ்ட் ஒன் டே தான். ஆனால் எத்தனை தடவை நீ போயிருப்ப!! அதுவும் நாள் கணக்கா!! அப்போ மட்டும் பிரிஞ்சு இருந்த, இப்போ என்ன வந்துச்சு? சுயநலமா பேசாத அத்தான்.” என்று சற்றுக் கோபத்துடன் கேட்க,

“ஏய் ஒய் டென்ஷன்? சரி சரி விடு. இவ்ளோ கோபம் உடம்புக்கு ஆகாது மா. ரிலாக்ஸ்!!” என்று அவன் கூற,

“எல்லாம் சொல்லிட்டு சாதாரணமா ரிலாக்ஸ்னு சொல்றீங்க அத்தான்.” இன்னும் கோபம் குறையாத குரலில் கூற,

“சரி டா, போகும் போது இவ்ளோ கோபம் வேண்டாம் சரியா. நான் சொன்னது தப்பு தான். நான் போகும் போது எனக்குத் தெரியலை. இப்போ ஐ அன்டர்ஸ்டேன்ட். அதை விடச் சும்மா கொஞ்சம் லவ் டைலாக் விடலாம்னு பார்த்தேன். ஆனால் அது எனக்கே ஆப்பா முடிஞ்சுடுத்து” என்று அஸ்வத் தொங்கிய முகத்துடன் கூற ஹரிதா சிரித்து விட்டாள்.

“அது அந்தப் பயம் இருக்கட்டும்!! சரி அத்தான் ட்ரெயின் வந்துருச்சு. வாங்க அங்கப் போகலாம்.” என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.

இரயில் வர, ப்ரனவிகாவும் ஹரிதாவும் அனைவரிடமும் விடைபெற்று ஏறி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்தனர். இரயில் ஐந்து நிமிடம் தான் நின்றது. அது கிளம்பும் வரை இருந்து விட்டுக் கிளம்பிய பிறகே அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

ப்ரனவிகாவையும் ஹரிதாவையும் அவர்களது நண்பர்கள் கேலி செய்து அமர்க்களப் படுத்திவிட்டனர்.

“ஏய் அமைதியா இருங்க பா. நீங்களாம் நிறைய முறை இப்படித் தனியா வந்துருப்பீங்க ஆனால் எங்களுக்கு இது தான் முதல் முறை. அதனால எங்க வீட்டுல கொஞ்சம் பயப்படுறாங்க. முதல் தடவை அனுப்பும் போது உங்க வீட்டுலயும் பயப்பட்டாங்களா இல்லையா? என்னமோ புதுசா பேசுறீங்க?” என்று ப்ரனவிகா கேட்கவும் தான் அனைவரும் அமைதியாகினர்.

எந்தப் பெற்றோருக்கும் முதல் முறை தன் பிள்ளையைத் தனியாக வெளி ஊர் அனுப்பப் பயமாகத் தான் இருக்கும். அதுவும் காலம் கெட்டுப் போயிருக்கும் இந்தச் சமயத்தில் பயமில்லாமல் இருந்தால் தான் அதிசயம்.

ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவு தான். முதல் அரை மணிநேரம் அனைவருடனும் ப்ரனவிகா சிரித்துப் பேசி விளையாடி எனப் பொழுதைக் கழிக்க, விளையாடியது போதும் என்று ஒருவர் அமரும் சீட்டில் வந்து அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு இந்த மாதிரி பயணங்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டு போகத் தான் மிகவும் விரும்புவாள். அது ஹரிதாவிற்கும் தெரியும் என்பதால், அவளும் தொந்தரவு செய்யவில்லை, மற்றவர்களையும் தொந்தரவு செய்ய அனுமதிக்கவில்லை.

ப்ரனவிகா ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, தீடிரென கேட்ட சிரிப்புச் சத்தத்தால் அவளது பார்வை ஜன்னலிலிருந்து எதிரில் நோக்க, இளமுகிலன் தான் சிறு குழந்தையைத் தூக்கிப் போட்டு அதைச் சிரிக்கச் செய்து கொண்டிருந்தான். அவன் செய்தது என்னமோ சாதாரண செயல் தான். யாரும் செய்யாத ஒன்றை அவன் செய்யவில்லை. ஆனால் அவனது அந்த கல்லமில்லாத சிரிப்பு ப்ரனவிகாவை ஈர்த்தது. அதன் பிறகு அவளது பார்வை முழுவதும் இளமுகிலனை விட்டு நகரவே இல்லை.

இளமுகிலன், தன்னை ஒரு பெண் வைத்த கண் வைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியாமல் அந்தக் குழந்தையைக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான்.

அவன் கொஞ்சுவதைப் பார்த்த ப்ரனவிகா அந்த இடத்தில் தான் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க, ஒரு விநாடி தான், அடுத்த நொடி,’சீ நாம என்ன இப்படி யோசிக்கிறோம்? ஏதோ ட்ரெயின்ல பார்த்தோம். நல்லா இருக்கான். அதோட விட்டுறனும். இப்படி அசிங்கமா யோசிக்கக் கூடாது. ம்ஹூம் இது ரொம்ப தப்பு. இனி அந்தப் பக்கமே பார்க்கக் கூடாது.’ என்று மறுபடியும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள். அவளது கண் அங்குப் போகத் துடித்துக் கொண்டிருக்க, அவளது மூளை அவளைப் பயங்கரமாகக் கண்டிக்க, இது சரிவராது என்று புரிந்து கொண்டு அவளது தோழிகளுடன் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

இரயில் கோயம்புத்தூரில் சென்று நிற்க, அனைவரும் இறங்கினர். என்ன தான் மூளை அவளை எச்சரித்தாலும் அவளது கண் இளமுகிலன் இருக்கும் கம்பார்ட்மென்ட் பார்க்காமல் இல்லை. அவனும் எழுந்து அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையிடம் சிரித்துக் கொண்டே டாட்டா கூறிவிட்டு இறங்க, ப்ரனவிகாற்கு அந்தச் சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்ற, அவனைப் பார்த்துக் கொண்டே முன்னே நடந்து ஒருவர் மேல் இடிக்கப் போக, ஹரிதா தான் அவளை இழுத்து இடிக்காமல் இருக்க உதவினாள்.

“என்னாச்சு ப்ரனு? கண்ணை எங்க வைச்சுட்டு நடக்கிற? நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் உன் நடவடிக்கையே சரியில்லை. சம்திங் இஸ் ராங். என்னாச்சு உனக்கு?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணி. யாரோ தெரிஞ்ச மாதிரி இருந்தது. அதான் பார்த்தேன். மத்தபடி ஒன்னுமில்லை.” என்றும் ஹரிதாவிடம் எதையும் மறைக்காதவள் முதல் முறையாக அவளிடம் பொய் கூறினாள்.

“ஓ!! சரி வா போகலாம்.” என்று அவளை இழுத்துக் கொண்டு செல்ல, மீண்டும் ஒரு முறை ப்ரனவிகா திரும்பிப் பார்க்க, இளமுகிலன் எங்கும் தென்படவில்லை. சரி இது சாதாரண ஒன்று, இத்துடன் அவனை மறந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வெளியே வர, அவளது கண்கள் தெரித்து விழுந்துவிடும் போல அகல விரித்துப் பார்க்க, இளமுகிலன் அவளது கல்லூரி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

ப்ரனவிகா அப்படியே நின்றுவிட, ஹரிதா தான் அவளை யோசனையுடன் பார்த்தாள்.

“என்னாச்சு ஏன் இப்படி நின்னுட்ட?” என்று கேட்கவும் தான் சுய உணர்வு பெற்று,

“இல்லை நம்ம பசங்க கூட யாரோ பேசிட்டு இருக்காங்க. அதான் யார்னு பார்த்தேன்.” என்று கூற,

“அதை இப்படி இங்கேயே நின்னு பார்த்தா ஆச்சா? வா நாம அங்கப் போனா தான் அது யார்னு தெரியும்.” என்று மறுபடியும் இழுத்துக் கொண்டு போக, ப்ரனவிகாவிற்கு முதல் முறை என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்.

“ஏய் ப்ரனு உனக்கு என்னாச்சு? ஏன் இப்படி அங்க அங்க ஸ்ட்ரக் ஆகி நிக்கிற?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணி வா அங்கப் போகலாம்.” என்று இப்பொழுது ப்ரனவிகா, ஹரிதாவை இழுத்துக் கொண்டு வேகமாகப் போனாள்.

“ஹேய் வாங்க வாங்க. இவரும் நாம போற காலேஜ்கு தான் போறாராம். இவரோட நேம் இளமுகிலன். அப்புறம் அங்கத் தான் எம்.சி.ஏ. படிக்கிறாங்க.” என்று அவர்களது நண்பன் ஒருவன் கூற, ப்ரனவிகா மனதில் முகிலன் என்ற பெயர் அழுத்தமாகப் பதிந்து விட்டது.

முந்தைய நிமிடம் வரை ப்ரனவிகாவைப் பொறுத்த வரை இளமுகிலன் சக பயணி, அவனது சிரிப்பு அவளை ஈர்த்தது அதனால் அவனை சைட் அடித்தாள் அவ்ளோ தான். ஆனால் மறுபடியும் அவனைப் பார்த்ததும் இது தான் விதி என்று நம்ப ஆரம்பித்தாள். அவளுக்கும் அவனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பந்தமிருக்கிறது என்று நம்பினாள்.

இளமுகிலன் அந்தப் பயணம் முழுவதும் பசங்களுடன் மட்டும் தான் பேசிக் கொண்டு வந்தான். அவனது பார்வை எந்த நொடியும் பெண்கள் பக்கம் திரும்பவே இல்லை. அந்த கண்ணியம் ப்ரனவிகாவை இன்னும் இன்னும் அவனிடம் ஈர்த்தது. அதனால் தான் அகாடமியில் ப்ரனவிகாவை பார்க்கும் போது அவனுக்கு அவளைப் பார்த்த ஞாபகம் சுத்தமாக இல்லை.

பின்பு கல்லூரி வந்ததும் இளமுகிலன் அவர்களிடம் விடைப்பெற்று அங்கிருந்து சென்று விட, இவர்களும் அவர்களது பேப்பர் ப்ரசன்டேஷனிற்கு சென்று முன்பதிவு செய்து விட்டுச் சாப்பிடலாம் என்று கேன்டின் சென்றனர்.

அன்று காலையிலே பேப்பர் ப்ரசன்டேஷன், ப்ரனவிகாவின் கல்லூரியிலிருந்து வந்தவர்களை அடுத்து அடுத்து அழைக்க, சீக்கிரமே முடிந்து விட்டது.

“சரி ப்ரண்ட்ஸ் நாங்க கோடிங் கண்டெஸ்ட்ல பார்ட்டிசிபேட் பண்ண போறோம். நீங்க வேற எதிலாவது பார்ட்டிசிபேட் பண்ணா முடிச்சுட்டு க்ரூப்ல ஒரு மெசேஜ் போட்டுருங்க ப்ரண்ட்ஸ். இது தெரியாத ஊர், அதனால நீங்களா யாரும் வெளியே போக வேண்டாம். எல்லாரும் சேர்ந்தே ஒன்னா போகலாம்.” என்று ஒரு தோழன் கூற, அனைவருக்கும் அது சரி என்று தோன்றத் தலையசைத்து விட்டுச் சென்றனர்.

ப்ரனவிகாவும் ஹரிதாவும் அந்தக் கல்லூரியைச் சுற்றிப் பார்க்கலாம் என்று போக, மற்ற தோழிகளும் சில போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று சென்று விட்டனர். அவர்கள் சுற்றி வரும் போது தான் தெரிந்தது அந்தக் கல்லூரியில் எம்.சி.ஏ. டிபார்ட்மென்ட்டிலும் ஏதோ கலை விழா என்று தெரிந்து கொண்டனர்.

“ஹரிதா அண்ணி வா அங்கப் போய் என்னன்னு பார்க்கலாம்.” என்று ப்ரனவிகா கூற,

“ஏய் நம்மளை உள்ள விடுவாங்களா? நீ பேசாம கூப்பிடுற?”

“அதலாம் பார்த்துக்கலாம் அண்ணி நீ வா.” என்று அழைத்துக் கொண்டு சென்றாள்.

ஹரிதா கொஞ்சம் பயமாகவே வர, ப்ரனவிகா தைரியமாகப் போக, ஹரிதா பயந்தது போல அங்கு எதுவும் நடக்கவில்லை. ப்ரனவிகாவும் ஹரிதாவும் உள்ளே சென்று பார்க்க நிறையப் பேர் இருந்தனர்.

இவர்கள் சென்று ஒரு இருக்கையில் அமர, முன்னே மேடையில் சில மாணவ மாணவிகள் நடனமாடிக் கொண்டிருக்க, ஹரிதா அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ப்ரனவிகாவும் முதலில் ரசித்தவள் பின்னாடி அமர்ந்த மாணவிகளின் பேச்சில் அவளது கவனம் சிதறியது.

“ஹேய் உனக்குத் தெரியுமா இன்னைக்கு பாட்டுப் போட்டியில ஃபைனல் யியர் இளமுகிலன் பாடப் போறாங்களாம். அப்போ மட்டும் கூட்டத்தைப் பார். அப்படியே இந்த ஆடிட்டோரியம் ஃபுல்லா நிறைஞ்சுடும்.” என்று ஒருத்திக் கூற,

“அவ்ளோ நல்லா பாடுவாங்களா?”

“என்ன இவ்ளோ சாதாரணமா கேட்கிற? அவர் செமயா பாடுவார். அதை விட கிட்டார் சூப்பரா வாசிப்பார் தெரியுமா!! அவரோட குரலுக்கே தனி ரசிகைகள் நம்ம டிபார்ட்மென்ட்ல இருக்காங்க.”

“ஓ!! இன்னைக்கு கேட்டுருவோம்.” என்று இன்னொரு பெண் கூற, அத்துடன் அவர்கள் எழுந்து சென்று விட்டனர். ப்ரனவிகாவிற்கு அதைக் கேட்டதில் இருந்து இருப்புக் கொள்ளவில்லை. அவன் எப்பொழுது பாடப் போகிறான் என்று எதுவும் தெரியாமல் எப்படி இங்கு வருவது என யோசித்துக் கொண்டிருக்க, அவளது கண்ணில் பட்டது கீழே ஓரமாகக் கடந்த நிகழ்ச்சி நிரல். அதை எடுத்துப் பார்த்தவள் மாலை நான்கு மணிக்கு என்று போட்டுருக்க, கண்டிப்பாக அப்பொழுது இங்கு வர வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு ஹரிதாவுடன் மதிய உணவுச் சாப்பிடச் சென்றாள்.

சரியாக மூன்றே முக்காலிற்கு ஹரிதாவிடம்,”அண்ணி நாம திரும்ப அந்த ஆடிட்டோரியம் போகலாமா?” என்று கேட்க,

“ஏய் விளையாடுறியா? எல்லாரும் இப்போ வந்துருவாங்க. சாயந்தரம் மால் போகலாம்னு எல்லாரும் பேசித் தான் முடிவு பண்ணோம்! இப்போ இப்படிச் சொல்ற?”

“ப்ளீஸ் அண்ணி. சீக்கிரம் போயிட்டு வந்துரலாம் அண்ணி. ப்ளீஸ் ப்ளீஸ்.” என்றும் இல்லாத திருநாளாக ப்ரனவிகா, ஹரிதாவிடம் கெஞ்ச, ஹரிதா அவளை வித்தியாசமாகப் பார்த்தாள்.

“ப்ரனு உண்மையைச் சொல்லு. நானும் காலைல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன் நீ ஆள்ளே சரியில்லை. உண்மையை சொல்லு ப்ரனு.” என்று சற்றுக் குரலை உயர்த்திக் கேட்க, ப்ரனவிகா காலையிலிருந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற, முதலில் ஹரிதாவிற்கு பயம் தான் வந்தது.

“நீ சொல்றது ஏதாவது நியாயம் இருக்கா ப்ரனு? அவர் யாருனே நமக்குத் தெரியாது. எப்படிப் பார்த்ததும் காதல் வந்துடுது உங்களுக்கு?”

“அண்ணி இது காதல்லா அப்படின்னு கேட்டா கண்டிப்பா எங்கிட்ட பதிலில்லை. ஆனால் அவரை எனக்குப் பிடிச்சுருக்கு. எஸ் முதல் பார்வையிலே அவர் என்னை ஈர்த்துட்டார் தான். அது நூறு சதவிகிதம் உண்மை தான். அண்ணி மறந்துடாத வீட்டுல பார்த்துக் கல்யாண பண்றாங்கள அவங்களாம் அவங்களோட வாழ்க்கைத் துணையை ஒரு அஞ்சு நிமிஷம் தான் பார்க்கிறாங்க. ஆனால் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா? அதை மட்டும் நாம ஏத்துக்குறோம்!! பார்த்ததும் காதல்னா மட்டும் ஏன் சந்தேகமா பார்க்கிறாங்க?”

“உனக்கா பேசக் கத்துக் கொடுக்கனும்? சாதாரணமாவே நீ நல்லா பேசுவ இப்போ லவ் வேற வந்துடுச்சு. கேட்கவா வேணும்.”

“அண்ணி லவ் எல்லாம் இல்லை. ஜஸ்ட் அ க்ரஷ்.”

“ஏய் இதெல்லாம் அந்நியாயம். பயங்கரமா சைட் அடிச்சுட்டு கேட்டா க்ரஷாம். எனக்குச் சின்ன வயசலயே உங்க அப்பா மடில உட்கார வைச்சு காது குத்திட்டாங்க சரியா.”

“அய்யோ அண்ணி இப்போ அதுவா முக்கியம்? நாம ஆடிட்டோரியம் போறது தான் முக்கியம்.” என்று ப்ரனவிகா கூற,

“சரி என்ன பண்ணலாம்?”

“எல்லாரும் வந்ததும் நாம அவங்கிட்ட சொல்லிட்டு ஆடிட்டோரியம் போகலாம். அவங்க வேணா மால் போகட்டும்.” என்று கூற,

“ஏய் அப்புறம் நாம எப்படி இங்கேயிருந்து போறது?”

“அதெல்லாம் பெரிய விஷயமா அண்ணி? பஸ்ல தான் போகனும். கேட்டா சொல்லிடப் போறாங்க.”என்று சாதாரணமாகக் கூற,

“உனக்குத் தைரியம் ஜாஸ்தி தான்.” என்று ஹரிதா கூற, சரியாக அதே நேரம் எல்லாரும் அங்கு வர, ப்ரனவிகா கூறும் முன்,

“ஹேய் நாம காலைல மீட் பண்ணோமே இளமுகிலன்!! அவரோட டிபார்ட்மென்ட்லயும் ஏதோ ஃபங்ஷன் போல!! அவர் பாடப் போறாராம். நாங்க வழில அவரைப் பார்த்தோமா, அவரோட ப்ரண்ட்ஸ் எல்லாம் இவர் சூப்பரா பாடுவாங்கனு சொன்னாங்க. அதோட கிட்டார் வேற வாசிப்பாராம். அதைக் கேட்டதும் எங்களுக்கும் போய் பார்க்கனும் போல இருக்கு. இஃப் யூ டோன்ட் மைன்ட் நாம அங்கப் போயிட்டு மால் போகலாமா? பிகாஸ் தேர்ட் பெர்ஃபாமன்ஸ் அவர் தான் பண்றாராம். என்னச் சொல்றீங்க?” என்று பொதுவாக ஒரு பையன் கேட்க,

எல்லாருக்கும் முன்பு ப்ரனவிகா வேகமாக,”ஹேய் சூப்பர் தாராளமா போகலாம். எனக்கு நோ ப்ராப்ளம்.” என்று கூற, அனைவரும் அவளை விசித்திரமாகப் பார்த்தனர்.

ஹரிதா தான்,”ஹேய் உங்களுக்கு எல்லாம் தெரியும்ல இவளுக்கு ஷாப்பிங் அவ்ளோவா பிடிக்காதுனு. நாம இப்போ அங்கப் போனா மால் போனா தான போவோம். அதான் மேடம் ஓரே எக்சைட்மென்ட் ஆகிட்டாங்க. இல்லை ப்ரனு?” என்று பல்லைக் கடித்துக் கொண்டே கேட்க, ப்ரனவிகா இழித்துக் கொண்டே தலையசைக்க, ஒருவருக்கும் சந்தேகம் வரவில்லை.

சிலர் வருகிறோம் என்றும் சிலர் வரவில்லை என்றும் கூற,

“சரி மால் போறவங்க நீங்க முன்னாடி போங்க, நாங்க அவர் பாடி முடிச்சதும் உங்க கூட வந்து ஜாயின்ட் பண்ணிக்கிறோம்.” என்று ப்ரனவிகா கூற, அனைவரும் அதற்குச் சம்மதிக்க, ப்ரனவிகாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.

Advertisement