ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 20
சிறிது நேரம் என்ன செய்வது எனப் புரியாது சந்திரன் அமர்ந்திருக்க, இது அவ்வளவு எளிதினில் தீரும் பிரச்சனை இல்லை என்பது புரியச் சோர்ந்து போனான். லுனா விஷயத்தில் கோபம் இருக்கும், மற்றபடி கருத்தடை மாத்திரை விவகாரம் எல்லாம் புரிதல் சரியாக இல்லாததால் நடந்து விட்டது என்று விளக்கி விடலாம் என்று எண்ணியிருந்தான். லுனா விஷயத்திற்கு மட்டும், சற்று அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கும். இந்த இரண்டு விஷயங்களிலும் அவளை மிகவும் வருத்திவிட்டோம் என்றவாறு தான் இதுவரை அவனுடைய எண்ணம்.
மற்ற சுணக்கங்களை விட இவை இரண்டும் தான் அவனுக்குப் பிரதானமாய் பட்டிருந்தது. ஆனால், ரோகிணி பேசுவதைப் பார்த்தால், அவனுடைய ஒவ்வொரு செய்கையிலும் அவள் காயம் அடைந்திருக்க வேண்டும் எனப் புரிய என்ன செய்ய என்றே அவனுக்குத் தெரியவில்லை.
அவளுக்குக் கொஞ்சக் காலம் வருத்தங்களைத் தந்ததாக நினைத்ததற்கே தினம் தினம் வருந்தி, வாடி போனவன்… இப்பொழுது அவள் கூறும் விஷயங்களைக் கேட்டு, அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. துள்ளித் திரிந்த ரோகிணி தனது கூட்டுக்குள் சுருண்ட காரணம் விளங்கியது. நேர்செய்ய முடியாத பிழைகள். அதிலும் அவள் அடைந்த வேதனைகள்…? நிச்சயம் அவன் அறிந்து நடந்ததில்லை. உறவுகளின் நுணுக்கம், இந்தியப் பெண்களின் நுணுக்கமான எண்ணங்கள் எல்லாம் அவன் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். எதுவுமே அறியாதவன் அல்ல, அதற்காக இந்த அளவு தெரிந்தவனும் இல்லை. தற்பொழுது என்ன செய்ய எனப் புரியாத நிலையிலிருந்தான். வழிகாட்ட யாரும் இல்லாததால் இன்னும் தடுமாறினான். தன் யோசனையிலேயே சுழன்றவன் சுற்றம் மறந்து, பசியைக் கூட மறந்து அமர்ந்திருந்தான்.
அவன் அசையவே போவதில்லை என்பதை ரோகிணி உணர்ந்திருப்பாளோ என்னவோ, தோசையைச் சுட்டு தட்டில் போட்டு வந்து அவன் முன்பு நீட்டினாள். அவளின் அதிகாரத்தின் முன்பு அவனால் வேண்டாம் என்று மறுக்கவா முடியும். அதுவும் ஒருநாள் சிகாகோவிலிருந்த சமயம் உணவு வீணாவது குறித்து அவள் பேச முனைந்த பொழுது என்னமாய் கோபப்பட்டிருந்தான். அவளைப் பிரிந்து நல்ல உணவு கிடைக்காத ஏக்கத்தில், அந்த நாளை அத்தனை முறை அசைபோட்டிருப்பான். அவள் பிரிவில் உணவின் மீது மரியாதையும், மதிப்பும் தானாய் வந்திருந்தது. எதுவும் பேசாமல் அவள் நீட்டிய உணவை வாங்கி உண்ணத் தொடங்கினான். நேரம் பதினொன்றை நெருங்கும் வேளை என்பதால் பசியால் வயிறு வாடுகிறது என்பதையே இப்பொழுது தான் உணர்ந்தான்.
அவன் உண்ணும் வேகம் பார்த்தே பசி அறிந்தவள், பேசாமல் சமையலறைக்குப் போய்விட்டாள். தட்டில் இருந்த தோசைகள் காலியான பிறகும் பசிப்பது போன்ற எண்ணம் அவனுக்கு, அவளிடம் கேட்கவும் சங்கடமாக இருந்தது. சரி நீரைக் குடித்துக் கொள்ளலாம் எனக் கைகழுவ அவன் எழுந்த சமயம், மீண்டும் இரண்டு தோசைகளை அவன் தட்டினில் வைத்தாள். “வேண்டுமா?” என்ற கேள்வி இல்லை, “சாப்பிடு” என்னும் அதிகாரம் இல்லை, ஆனாலும் சாதித்து விடுகிறாள். குறிப்பறிந்து நடந்து கொள்கிறாள் என்றும் கூறலாம். இறுக்கம் தளர்ந்து புன்னகை வந்தது. அவனாகவே, “இதோட போதும் ரோ” என்றான். இப்பொழுதெல்லாம் அவனும் உணவை வீணடிப்பதில்லை. ஆகவே, அவள் மேலும் சுட்டு அதைச் சாப்பிட முடியாமல் போய்விட்டால், அதற்காகத்தான் முன்பே மறுத்து விட்டான்.
சந்திரன் உண்டு முடிக்கும்வரை பேசாமல் இருந்தவள், அதன்பிறகு அவனிடம், “வந்து… நீங்க எப்போ சிகாகோ போகணும்?” என்று கேட்டுவிட்டு அவன் பதிலுரைக்கும் முன்னே, “எனக்கு என்னமோ நமக்குள்ள இனி சரியா வரும் தோணலை. அதுனால, லீகலா என்ன பண்ணணுமோ பண்ணிக்கங்க. தடுக்க மாட்டேன். அப்பறம், இன்னும் ஒரு உதவி…” என்று நிறுத்தியவள் இப்பொழுதும் அவன் முகம் பார்க்காமல் தான் பேசிக்கொண்டிருந்தாள். அவன் இளைத்த தோற்றமும், வாடி வதங்கிய முகமும் அவளை வெகுவாக சோதிக்க, முயன்று அவன் முகம் பார்ப்பதைத் தடுத்தாள். என்னமோ அவனிடம் இம்மி அளவு தடுமாறுவதில் கூட அவளுக்கு விருப்பம் இல்லை.
அவன் முகத்தில் கடுமை ஏறுவதைப் பார்க்காமலேயே ரோகிணி மேலும் தொடர்ந்தாள். “இனி நீங்க இங்க அடிக்கடி வர வேணாம். சொந்தக்காரங்க கிட்ட உங்களுக்கு என்னை பிடிக்கலைங்கிற மாதிரி சொல்லிக்கிறேன். ஏன்னா நம்ம ஊர்ல ஆம்பளை ஒரு பொண்ணை ஒதுக்கி வெக்கலாம். ஆனா, பொண்ணு புருஷன் வேணாம்னு சொல்லவே முடியாது. உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு சொன்னாலே, சேர்த்து வெக்கறேன்னு கிளம்பிடுவாங்க. சரி அதெல்லாம் நான் சாமாளிச்சுப்பேன். நீங்க எப்போ ஊருக்கு போகணும் அதை சொல்லுங்க?” என தன் எண்ணங்களை எல்லாம் சொன்னவள், மீண்டும் முதல் கேள்வியிலேயே நிறுத்தினாள். அவள் பேசி முடித்தபிறகும் சந்திரனிடம் எந்த பதிலும் இல்லை.
பதில் வராது போகவும், சந்திரனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அதில் அத்தனை கடுமை. அவனது கைகளை இறுகிய விதத்திலேயே கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயல்கிறான் என்று புரிந்தது. நேற்று அவன் அத்தனை கோபடைந்ததே அவளுக்குப் புதிது. இப்பொழுது மீண்டும் இத்தனை கோபமாக இருக்க, அதுவும் அவள் பேசிய பேச்சினால் கோபம் வந்திருக்க, மனதிற்குள் குளிர் பிறந்தது. ஆயிரம் இருந்தாலும் தாயின் நிழலில் வளர்ந்தவள் தானே, முதல்முறை எதிர்கொள்ளும் கணவனின் கோபம் அவளை அச்சுறுத்தியது. கணவன் சம்மதித்து விடுவான் என்று நினைத்துப் பேச, இப்படி கோபம் கொள்வான் என்று அவள் நினைக்கவேயில்லை. அவன் இஷ்டம் போல அவன் வாழ்ந்தான் என்றால், ரோகிணியும் அவள் இஷ்டம் போலப் பிரியலாம் என்கிறாள். ஒரே மாதிரியான பிழைகள்! இருவருக்கும் தன்புறம் மட்டுமே ஆராயும் தன்மை.
ரோகிணி பயத்தோடு நிற்க, அவளை அதிகம் சோதிக்காமல் வீட்டிற்கு உறவினர்கள் வந்தார்கள். ஆம், வந்திருந்த சந்திரனின் பெற்றோரைப் பார்த்தவள், ‘தப்பித்தோம்’ என்றுதான் ஆசுவாசமாக நினைத்தாள். மீண்டும் பெரிய ரசாபாசம் நடக்கும் என்று அவள் என்ன கனவா கண்டிருப்பாள்? ஆகவே, மனதில் நிம்மதி படர, புன்னகை முகமாக அவர்களை வரவேற்றாள்.
ஆனால், சந்திரனுக்கு அவர்களைப்பற்றி நன்றாகவே தெரியுமே! சிலருக்கு அவர்களின் தேவைகளை தீர்த்து வைத்துக்கொண்டே இருக்கும்வரை நாம் நல்லவர்களாகத் தெரிவோம். அதையே ஏதோ ஒரு காரணத்திற்காக மறுத்தால்? நாம் செய்ய முடியாத நிலையிலிருந்தால்? அவ்வளவுதான். அவர்களின் முழு சுயரூபத்தையும் பார்த்து விடலாம். சந்திரன் அவ்வப்பொழுது பார்த்த அவதாரங்கள் தான். ஆகவே எதற்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்து போனது.
ரோகிணி மாணிக்கவேலையும், சுசீலாவையும் வரவேற்றுக் கொண்டிருக்க, அவர்களோ அவளை கண்டுகொள்ளவே இல்லை. பார்வையில் அலட்சியமும் தெரிந்ததோ! அவ்வளவுதான் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்படி ஒரு கோபம். “ரோ வாசல் கதவைத் தாள் போடு” என்றான் அவளைத் துளைக்கும் பார்வையோடும், அழுத்தமான குரலோடும். மறுக்கவே தோன்றாத குரல். ஏன், எதற்கு என்று புரியாத போதும் வரவேற்பதை கூட விட்டுவிட்டு கதவைத் தாள் போட்டு வந்தாள்.
சந்திரனுக்கு இங்கு என்ன நடக்கும் என்று தெரியும். என்னவோ ரோகிணியின் முன்பு சண்டையிட அவனுக்குப் பிடிக்கவில்லை. அது வேறு ஒன்றுமில்லை, அவன் சற்று அடக்கிவாசிக்க நேரும். ஆகவே, கட்டுப்படுத்திய கோபத்துடனேயே பெற்றவர்களைப் பார்த்து, “சாயங்காலம் வீட்டுக்கு வரேன்” என்றான் அறிவிப்பாக. இப்பொழுது எதுவும் பிரச்சனை வேண்டாம் என்கிற செய்தியோடு. ஆனால், அவனைப் பெற்றவர்களா கேட்கப் போகிறார்கள்?
அவனின் அறிவுஜீவி மனையாளோ அதற்கும் மேலே! வந்தவர்களைக் கிளம்பு என்பது போலப் பேசுகிறானே என்று அர்த்தம் செய்துகொண்டு, “என்னங்க வந்தவங்கிட்ட… நீங்க வாங்க மாமா, வாங்க அத்தை. உக்காருங்க” என்றவள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மீண்டும் அடுப்படிக்கு ஓடி, அவசரமாகப் பழச்சாறு தயாரித்து, அதனைக் கொண்டு வந்து மூவருக்கும் கொடுத்தாள்.
அவள் நீட்டிக் கொண்டே நிற்க, அவர்கள் எடுக்காமல் அலட்சியம் செய்ய, “டேபிள்ல வை. வேணும்ன்னா எடுத்துக் குடிக்க போறாங்க” என்றான் அதட்டலும், அதிகாரமுமாய். இவன் என்னடா காலையில அப்படி வருத்தமா, சமாதானமா, தன்மையா பேசுனான். இப்போ இந்த ஏறு ஏறறான், நாம சொன்ன விஷயம் பிடிக்கலையோ? ரொம்ப கோபப்படுத்திட்டோமோ? என்று தான் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் அவன் சொன்னதை மறக்காமல் செய்துவிட்டு சற்று தள்ளி சுவர் ஓரம் நின்று கொண்டாள்.
மாணிக்கவேல் ஆத்திரத்திலிருந்தார். ஒரு நிலம் வாங்குவதாகச் சொல்லி வைத்து விட்டார்கள். இவனோ என்ன கேட்டும் பணம் தரமாட்டேன் என்கிறான். ஆனால், வாங்கிக்கொள்வது என்னமோ அவர்களின் பெயரில். பின்னாளில் சந்திரனுக்குத் தான் என்றாலும், அந்த பின்னாள் எப்பொழுது என்பது உறுதி இல்லை அல்லவா? அதோடு இது இவர்கள் வாங்கும் முதல் சொத்தும் இல்லை. அடிக்கடி வாங்குகின்றனர். இருந்தும் சந்திரன் இப்பொழுது பணம் தரவில்லை என்பது அதீத கோபம். அந்த கோபத்தைக் குரலில் வெளிப்படுத்தி, “என்னடா என்னதான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?” என எடுத்த உடனேயே சண்டையாகத் தொடங்க,
மகன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறான். அதுவும் இளைத்து, சோர்ந்து, வாடி வதங்கி வந்திருக்கிறான். அவனை அன்பாக வரவேற்காமல் இதென்ன விதமான பேச்சு என்று ரோகிணி முகம் சுளித்தாள். அதைக் கவனித்து விட்ட சுசீலாவோ, “உன் புருஷனைத் தான் முந்தானையில முடிஞ்சு வெச்சு இருக்கியே! அப்பறமும் இங்கேயே நின்னு வேவு பார்க்கணுமா? உனக்கெல்லாம் இங்கிதமே இருக்காதா?” என ரோகிணியிடம் கேட்க, அவளுக்கு அப்படியொரு அதிர்ச்சி, என்ன நேரடியாகவே இப்படிப் பேசுகிறார்கள் என்று.
அவ்வளவுதான் கேட்டுக்கொண்டிருந்த சந்திரன் தனது கட்டுப்பாட்டை இழந்தான். தாயை நோக்கி அதட்டலாக ஒரு ஆங்கில கெட்டவார்த்தையை உதிர்க்க, ரோகிணி காதையே பொத்திக் கொண்டாள். பின்னே, யாரேனும் பெற்ற தாயிடம் இப்படிப் பேசுவார்களா? மீண்டும் சந்திரன் ஏதோ திட்ட, ‘என்னடா இவ முன்னாடியும் இப்படி பேசறானே!’ என்றாகிவிட்டது பெற்றவர்களுக்கு.
அதற்குள் இம்முறை சற்று சுதாரித்த ரோகிணி அவனின் அருகில் ஓடி வந்து வாயைப் பொத்தினாள். “அது ஒன்னும் இல்லை அத்தை. அங்க… அந்த நாட்டுல… சண்டைன்னா இந்த மாதிரி தான் பேசிக்கறாங்க. அவரு வேற ஏதோ டென்ஷன்ல இப்படி பேசிட்டாரு போல. தப்பா எடுத்துக்காதீங்க” என்று அவசரமாகச் சொல்லிக் கூடவே மன்னிப்பும் கேட்டாள். கணவன் தன்மீது இருக்கும் கோபத்தில் தான் இப்படி யோசிக்காமல் பேசுகிறான் என்பது அவளது யூகம். அவள்தான் அவனை ஏகத்திற்கும் கோபப்படுத்தி வைத்திருக்கிறாளே!
“உங்களுக்கு என்ன ஆச்சு? பெரியவங்கிட்ட இப்படி தான் பேசுவாங்களா? கொஞ்சம் யோசிச்சு பேசுங்க” என அனைவருக்கும் கேட்கும் வண்ணம் அவள் ரகசியம் பேச, அவளையே தான் பார்த்திருந்தான். அவங்க இவளை மதிக்கிற மாதிரியே தெரியலை. இவ எப்படி இப்படி இருக்கா என்பது போல எண்ணம் அவனுள். போறவரவங்களை எல்லாம் மன்னிக்கிறவ, புருஷனையும் பாவம் பார்த்து மன்னிச்சா பரவாயில்லை என்றுதான் அந்த நேரத்திலும் தோன்றியது. அவன் கஷ்டம் அவனுக்கு.
பிறகு எதுவும் பேசாமல் எழுந்து அவளை அறையினுள் அழைத்துச் சென்றவன் தழைந்த குரலில், “ரோ கொஞ்ச நேரம் என்னை கண்ட்ரோல் பண்ணாத…” எனத் தொடங்க, அவள் முறைத்தாள். ‘நான் எப்போ உன்னை கண்ட்ரோல் பண்ணியிருக்கேன் என்பது போல’.
ஆனால், அவனோ வேறு விதமாக எடுத்துக் கொண்டு, “சரி முறைக்காத. முடிஞ்சவரை மரியாதையா பேசறேன். ஆனா, ப்ளீஸ் அவங்க கொஞ்சம் வேற மாதிரி. அதுனால நீ இங்கேயே இரு. என்கிட்ட சண்டை போட வந்து இருக்காங்க அதுல நீ வேற டேமேஜ் ஆகாத. உன்னை எதுவும் சொன்னங்கன்னா கண்டிப்பா என் கோபத்தை கண்ட்ரோல் பண்ணவே முடியாது அதையும் சொல்லிட்டேன்” என்றான் தன்மையாகவே.
“நான் பேசிட்டு வரேன். ப்ளீஸ் எனக்காக…” என்றான் மீண்டும். சற்று நேரம் முன்புவரை சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். பிரிவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் என்பது இருவருக்கும் நினைவில்லை. உண்மையில் இவர்களைப்பற்றி அப்படிச் சொன்னால், வெளியும் இருக்கும் இவனைப் பெற்றவர்கள் கூட நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு அன்னியோன்னிய தம்பதிகளைப் போன்று இருந்தனர்.
சந்திரன் இத்தனை தூரம் கேட்டுக்கொள்ளவும் ரோகிணிக்கு மறுக்கவே தோன்றவில்லை. சரியென அமர்ந்துவிட்டவள், தனது சந்தேகத்தை வேறு கேட்டாள். “ஆனா இங்க உக்காந்தாலும் நீங்க பேசறது எனக்கு கேக்குமே!” என்க, “அது எனக்குத் தெரியாதா? உன்னை எப்போ கேட்க வேணாம்ன்னு சொன்னேன்? ஆனா, அங்க வராத. அவங்க உன்னை ஏதாவது சொல்லிட்டா… அப்பறம், என்னால நீ எக்ஸ்பெக்ட் பண்ணற மாதிரி மரியாதையா எல்லாம் பேச முடியாது” என்று விளக்கினான். அவனைப்பொறுத்த வரையிலும் பெற்றவர்களைத் திட்டாமல் பேசுவது தான் மரியாதையான பேச்சு.
சரி என அவனை அனுப்பிவிட்டு ரோகிணி அங்கேயே அமர்ந்து கொண்டாள். வெளியில் வெகு சூடான விவாதம் தொடங்க அந்த விவாதத்தின் கருத்துக்கள் எல்லாம் இவளுக்கு மிகமிக புதிது என்பதோடு, அந்த பேச்சின் சாராம்சங்கள் தந்த கோபத்தில், இவளும் சூடாக தொடங்கினாள்.