அத்தியாயம் 09

நிலவு தன் ராஜாங்கத்தை வானத்தில் நடத்திக் கொண்டிருந்த இரவு நேரம், வீட்டு மொட்டை மாடியில் நடை போட்டுக் கொண்டிருந்தான் விஸ்வஜித்.

 நேற்று காலை, அஸ்வினி, ஷக்தி, ஊர்மிளா மூவரோடு, பாஸ்கரும், விஸ்வஜித்தும் தங்கள் சின்ன தாத்தா ஊரான, காரைக்குடிக்கு அருகிலுள்ள கோட்டையூருக்கு சென்று விட்டு, இன்று மாலை தான் திரும்பியிருந்தனர்.

ஷக்தியின் ஆசைப்படி அந்த மிகப்பெரிய செட்டிநாடு வீட்டில் ஒருநாள் இரவு தங்கிவிட்டே வந்திருந்தனர்.

வந்த வேலையும், லீவும் முடியவே நாளை சென்னைக்கு கிளம்புகிறார்கள் பெண்கள்.

நாளை காலை ஷக்தி ஊருக்கு கிளம்புகிறாள் என்பதாலோ என்னவோ, தன் கைகளுக்குள்ளேயே அவளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று விஸ்வாவின் மனம் ஏங்கியது.

தன் எண்ணத்தின் போக்கைக் கண்டு விஸ்வாவிற்கு சிரிப்பாக இருந்தது.

இப்படி ஒரு பெண்ணின் பின்னால், அதுவும் முதல் சந்திப்பிலேயே சண்டை போட்டு முட்டிக்கொண்ட பெண்ணின் பின்னால், பூனைகுட்டியாய் தன் மனம் சுற்றும் என்று ஒரு ஐந்து நாட்களுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டான்.

 இந்த அழகில் இன்னமும் ஒருவருக்கொருவர் அன்பை நேரடியாக பகிர்ந்துகொள்ளக் கூட இல்லை.

ஆனாலும் விஸ்வாவுக்கு தெரியும், தனக்கு குறையாத ஆர்வம், தன்மீது ஷக்திக்கும் உண்டென்று.

 இந்த கவிஞர்கள் வேறு, சொல்லாத காதல் என்றும் சொர்க்கத்தில் சேராது என்று சொல்லுகிறார்கள். அதற்காகவாவது தன் காதலை ஷக்தியிடம் சொல்லிவிட வேண்டும் என்று தான் விஸ்வா பார்க்கிறான். எங்கே… அவன் கைகளிலேயே அவள் அகப்படமாட்டேன் என்கிறாளே .

‘போன் செய்து மாடிக்கு ஷக்தியை வரச் சொல்லலாமா? நான் அழைத்தால் இந்த இரவு நேரத்தில் வருவாளா?’ ஆசைக்கு கடிவாளம் ஏது? உற்சாகமாக யோசித்தவனின் காதுகளில்,

“வேண்டாம் ப்பா… இங்க அஸ்வினியோட வீட்ல, அவங்க அண்ணனையே எங்களைக் கொண்டு கார்ல விடச்சொல்லியிருக்காங்க. அதனால நீங்க வீணா அலைய வேண்டாம் ப்பா” என்ற ஷக்தியின் குரல் மெல்லியதாக விழ, திரும்பி பார்த்தான்.

அங்கே, மெல்லிய நிலவொளியில் நடமாடும் தங்கபதுமையாக, ஃபோன் பேசியபடி வந்து கொண்டிருந்தாள் ஷக்தி.

‘ப்ப்பா… பரவாயில்லையே! இப்போதான் மாடிக்கு கூப்பிடலாமான்னு யோசிச்சேன், அதுக்குள்ள நம்மாளு இங்க வரவே செய்தாச்சு. அப்போ ரெண்டு பேரோட வேவ் லென்த்தும் ஒரே நேர்கோட்டில தான் ட்ராவல் பண்ணுது.’

உள்ளுக்குள் குதூகலித்துக்கொண்ட விஸ்வா, சட்டென்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஷக்தியை பேச அனுமதித்து இருளின் மறைவில் ஒதுங்கி நின்றான்.

“ம்ம்… சரிப்பா, நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க, நாங்க நல்லபடியா வந்துடுவோம்.”

ஷக்தியின் பேச்சிலிருந்து நாளை இங்கிருந்து கிளம்புவதைப் பற்றி தமிழரசு பேசிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தது விஸ்வாவுக்கு.

பெண்கள் மூவரும் இங்கு வரும்போது ட்ரெயினில் நடந்திருந்த களேபரத்தை விஸ்வா அறிந்திருந்ததால், இரயிலில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த போதும், தானே காரில் கொண்டு விட்டுவிட்டு வருகிறேன் என்று சொன்னான். வீட்டிலுள்ளவர்களுக்கும் அதுவே சரியாகப்பட்டது.

அதேபோல தமிழரசுவும் காரைக் கொண்டு வந்து, தானே அழைத்து போவதாகச் சொல்ல, விஷயத்தைச் சொல்லி மறுத்துக் கொண்டிருந்தாள் ஷக்தி.

 தகப்பனுக்கும் மகளுக்குமிடையே உரையாடல் நீண்டு கொண்டே போக, பொறுமை பறிபோய்க் கொண்டிருந்தது விஸ்வாவுக்கு.

‘அடுத்தவங்க பிள்ளையை பிடுங்கி வச்சிகிட்டு, மனுஷன் ரொம்ப தான் பாசத்தை பிழியுறார்.’ மனதுக்குள் வியாக்கியானம் செய்த விஸ்வாவைப் பொறுத்தவரை, தமிழரசுவின் செயல் தவறு.

‘பெற்றவர் பிள்ளையைக் கேட்கும் போது கொடுத்துவிட வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு அதென்ன அதிகப்பிரசங்கித்தனம்?’ என்று தான் அவன் மனம் எண்ணியது.

ஒருவழியாக தகப்பனை சமாதானம் செய்து, பேச்சை முடித்துக்கொண்ட ஷக்தி, வானத்தில் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்த நிலவை அண்ணாந்து பார்த்தபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றாள். முகத்தில் சிந்தனை ரேகை பரவியிருந்தது.

அவளுக்குமே, ஏதேதோ நினைவில் உறக்கம் வர மறுக்க, மாடிக்கு போகலாம் என்ற எண்ணம் தோன்றிய நேரத்தில், தமிழரசுவும் அழைக்கவே, பேசியபடியே மொட்டைமாடிக்கு வந்திருந்தாள்.

தகப்பனிடம் பேசி முடிக்கவும், மறுபடியும் விதவிதமாக விஸ்வாவின் ஞாபகங்கள் வந்து கண்சிமிட்ட, யோசனையோடு நின்றிருந்தாள்.

இருளுக்கு பழகியிருந்த விஸ்வாவின் கண்களில் தவறாமல் அது விழ, “யோசனை எல்லாம் பலமா இருக்கு. எதைப்பத்தின்னு சொன்னா நாங்களும் கூட சேர்ந்து யோசிப்போம்ல.”

உரிமையோடு ஷக்தியின் புருவமத்தியை நீவி விட்டபடி, அவள் பின்னோடு லேசாக அணைத்தவாக்கில் நெருங்கி வந்து நின்றான்.

விஸ்வாவின் வருகையை அங்கே எதிர்பாராத ஷக்தியோ, அவனின் இந்த செயலில் விதிர்விதித்து போய், அவன் கரம் பற்றி தடுத்து, “யூ க்ராஸ் தி லிமிட்ஸ் விஸ்வா” என்றாள் கோபமாக. ஆனால், குரலோ அவளுக்கு ஒத்துழைக்க மறுத்து உருகி வழிந்தது.

“எம்மாமன் பொண்ணுகிட்ட எனக்கென்னடி லிமிட்ஸ்?” பதிலுக்கு விஸ்வாவின் குரலில் இருந்த மிதமிஞ்சிய உரிமையில் மிரண்டுபோனவள், “மாமன் பொண்ணா?!” என்றாள் குழப்பமாக.

“ஹ்ம்ம்… நம்ம கல்யாணத்துக்கு பிறகு உங்கப்பா எனக்கு மாமா தானே?” சுதாரித்துக்கொண்டவன், தன் பதிலிலேயே தன்னுடைய மனதின் ஆசையையும் வெளிப்படுத்தினான்.

ஒரு வார்த்தைக்கு பத்து வார்த்தைகள் பதில் பேசுபவளோ, பேச்சை மறந்தவள் போல தவித்தாள்.

“என்ன? நாம கல்யாணம் பண்ணிக்கலாம் தானே?” ஆளை அசரடிக்கும் புன்னகையோடு மறுபடியும் கேட்டான் விஸ்வா.

அதற்கும் பதில் சொல்லாமல் குழப்பம் நிறைந்த முகத்தோடு ஷக்தி நிற்க, “ஸ்பீக் அவுட் ஷக்தி, உன் மனசு தெரியாம, நான் தான் ஆகாயத்துல கோட்டை கட்டுறனா என்ன?” சட்டென்று பேச்சில் சின்ன விலகலை காட்டினான் விஸ்வா.

“என் மகளைக் கல்யாணம் செய்து கொள்” என்ற மாமனின் விண்ணப்பத்துக்கு முன்னரே ஷக்தியிடம் மயங்கியிருந்த மனது, அவளுக்கும் தன் மீது மயக்கம் உண்டு என்பதை, அவள் வாயாலே கேட்க வேண்டும் என்று மல்லுக்கு நின்றது. ஆனால், அது நடக்கவில்லை என்றதும் முறுக்கிக்கொண்டு தன் கோபத்தை காட்டியது.

“இல்ல… ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஒரு விசிட் போய்ட்டு வரேன்னு வந்துட்டு, திரும்பி போய் இப்பிடி லவ்வுல விழுந்துட்டேன்னு அம்மா, அப்பாட்ட எப்படி சொல்லுறது?” லேசான தவிப்போடு ஷக்தி கேட்டாள்.

ஷக்தியின் பேச்சின் அர்த்தத்தை சட்டென்று புரிந்து கொண்டவன், பெண்ணவளின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து, தன்னை நோக்கி இழுத்தபடியே, “மொதல்ல எங்கிட்ட உங்க லவ்வை சொல்லுங்க அம்மணி, மத்ததை எல்லாம் பிறகு பாத்துக்கலாம்” என்றான் உல்லாசமாக.

விஸ்வா இழுத்த வேகத்தில் அவன் மார்போடு மோதி நின்றவள், “அதான் சொல்லியாச்சு ல்ல. சும்மா, சும்மா சொல்லிட்டு இருந்தா ரசிக்காது” என்றபடியே அவன் மார்பிலிருந்து தன் முகத்தை விலக்க முயன்றாள்.

தனிமையும், உரிமையும் தந்த தைரியத்தில், ஆவலோடு அந்த நிலவு முகத்தை தன் கைகளில் அள்ளிக்கொண்ட விஸ்வா, ஷக்தியின் லேசான மறுப்பையும் மீறி, தயங்காமல் அங்கே முத்தத்தால் தன் முன்னுரையை எழுத ஆரம்பித்தான்.

மறுநாள் காலையில் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தது பெண்கள் கூட்டணி. அவர்களின் மூட்டை முடிச்சுகள் வேலையாட்கள் மூலம், ஏற்கெனவே காருக்கு போயிருந்தது.

மாடியிலிருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்த ஷக்தியின் விழிகள் எதைத் தேடுகிறது, எதற்காக தேடுகிறது என்பது தெரியாமலேயே, அந்த புகைப்படம் இருந்த இடத்தை ஒருமுறை தடவி பார்த்து விலகியது.

ஹாலுக்கு வந்தவள், இப்போதும் மகாலிங்கம் ஐயா, கல்யாணி அம்மா கால்களைத் தொட்டு வணங்கி, விடைபெற்றுக் கொண்டாள்

பக்கத்தில் நின்றிருந்த மீனாட்சியோ, லேசாக உணர்ச்சிவசப்பட்டவராக ஷக்தியை இழுத்தணைத்துக் கொண்டு, “சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துடு ம்மா” என்று முணுமுணுத்தார்.

‘விஸ்வா தங்கள் விஷயத்தை தாயிடம் சொல்லிவிட்டான் போலும், அதனால்தான் அவர் இப்படி சொல்கிறார்’ என்று புரிந்து கொண்ட ஷக்தி, சின்ன சிணுங்கலோடு விஸ்வாவைப் பார்த்தாள்.

‘ஆத்தி… இந்த அம்மா குட்டையை குழப்பிடுவாங்க போலயே!’ பதறிப்போன விஸ்வா, “அஸ்வி… டைம் ஆச்சு, சீக்கிரம் போய் கார்ல ஏறுங்க” என்று சத்தமாகச் சொன்னான்.

 மகனின் குரலில் நிகழ்வுக்கு வந்த மீனாட்சி, ஷக்தியின் கன்னத்தை லேசாக தட்டி விலகிக்கொண்டார்.

எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்ட ஷக்தி வழக்கம்போல, கௌரியையும், சௌந்தரையும் அழகாக ஒதுக்கி, காரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தெய்வத்தின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் பக்தனைப்போல, ‘தன் மகள் ஒரே ஒரு முறை தன்னை ஏறெடுத்துப் பார்த்துவிட மாட்டாளா?’ என்று கண்களில் உயிரைத் தேக்கியபடி நின்றிருந்தார் சௌந்தர்.

 ஆனால், அந்தோ பரிதாபம், காரில் ஏறி கிளம்பிச் செல்லும் வரை, அந்த தேவியின் திருவருள் பார்வை அவர் பக்கம் திரும்பவே இல்லை.

சென்னையை நோக்கி சீரான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் விஸ்வா.

அவனுக்கு பக்கத்து இருக்கையில் தங்கை அஸ்வினி அமர்ந்திருக்க, பின்னிருக்கையில் ஊர்மிளாவும் ஷக்தியும் அமர்ந்திருந்தனர்.

 ‘ஷக்தி வீட்டுக்கு சென்றுவிட்டால் இனி அவளை எப்போது பார்ப்பதோ தெரியவில்லையே?’

 இந்த எண்ணம் தந்த தவிப்பில் காருக்குள் இருந்த ரியர்வியூ மிரர் வழியாக, ஷக்தியை அடிக்கடி பார்த்தபடி விஸ்வா வண்டி ஓட்டினான். ஷக்தியும் அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக, ஊர்மிளாவிடம் கதை பேசிக்கொண்டு வந்தாள்.

அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் நாடகத்தை கண்டுகொண்ட ஊர்மிளா, தனக்கு முன்னால் இருந்த அஸ்வினியை விரலால் சுரண்டி,

“மரியாதையா பின்னாடி வா. இல்லைன்னா உன் அண்ணா ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டாமல் ரியர்வியூ மிரர் பாத்தே வண்டியை ஓட்டி, எங்கயாவது கவுக்க போறாரு.” கிசுகிசுத்தபடி, விஸ்வாவையும் ஷக்தியையும் கண்ணால் காட்டினாள்.

புரிந்து கொண்ட அஸ்வினி, “அண்ணா… எனக்கு தூக்கம் வருது, நான் பின்னாடி போறேன்” என்று கண்ணைக் கசக்க, காரை ஓரம்கட்டி நிறுத்தினான் விஸ்வா.

 அண்ணன் காரை நிறுத்திய இடத்தில் இறங்கியபடியே, “ப்ரியா, நீ முன்னாடி போய் உக்காரு” என்று அஸ்வினி சொல்ல, இது தங்களுக்கான ஏற்பாடு என்று இருவருக்குமே புரிந்தாலும், சிறிது வெட்கத்தோடே அதை ஏற்றுக் கொண்டார்கள்.

ஹஹ… ஆசை வெட்கம் அறியாது தானே.

சிறிது நேரத்திலேயே பின்னிருக்கையில் இருந்த பெண்களிருவரும் உண்மையாகவே தூங்கிப் போக, காதலர்கள் விரும்பிய தனிமை அவர்களுக்கு வாய்த்தது.

“ஹ்ம்ம்… சொல்லுங்க அம்மணி, வீட்டுக்கு போனதும் எங்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா?” என்று விஸ்வா பேச்சை ஆரம்பித்தான்.

தன்னை கிண்டல் செய்கிறான் என்ற நினைப்பில், “அதெல்லாம் திவ்யமா இருக்கும் பயப்படாதீங்க.” சொல்லிவிட்டு சிரித்தாள் ஷக்தி.

ஷக்தி நினைத்தது போல விஸ்வா, விளையாட்டாக எல்லாம் கேட்கவில்லை. ‘தன் மாமனிடமிருந்து அவரது மகளை பிரித்ததுபோல, தன்னிடமிருந்தும் தமிழரசு குடும்பம் ஷக்தியை பிரித்து விடுவார்களோ?’ என்ற எண்ணத்தில் தான் கேட்டது.

அதே நேரம் ‘தரமுடியாது என்று சொன்னதும் கையைக் கட்டிக் கொண்டு வெளியேற, நான் ஒன்றும் சௌந்தர் இல்லை. முறைப்படி கேட்பேன். தரவில்லையா, பெண்ணை தூக்கிவிடுவேன். என்னை தடுக்கும் உரிமை எவனுக்கும் கிடையாது’ என்றும் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

“என்னாச்சு?”

மௌனமாக வண்டி ஓட்டியவனை ஷக்தியின் தேன் குரல் கலைக்க, “ம்ம்… கல்யாணத்துக்கு பிறகு ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தேன்” என்றான் கண்களைச் சிமிட்டி.

“அச்சோ…” அழகாக வெட்கப்பட்டவள், “இப்படி பேசுனீங்கன்னா பின்னாடி போய் உக்காந்துக்குவேன் என்று மிரட்டினாள். சிரித்தவன், அதன்பிறகு அப்படி எதுவும் பேசவில்லை.

ஆனால், வேறு ஏதேதோ பேசினார்கள், சிரித்தார்கள், அந்த பயணத்தை இருவரும் இனிதே ரசித்தார்கள்.

சரியாக மாலை மயங்கும் வேளையில், அந்த கார் ஷக்தியின் வீடு இருக்கும் அப்பார்ட்மெண்ட் முன்பு வந்து நின்றது.

ஷக்தியை முதலில் வீட்டில் விட்டு விட்டு, மற்றவர்களை ஹாஸ்டலில் விடுவதாக ஏற்பாடு.

காரை பார்க்கிங் ஏரியாவில் விஸ்வா நிறுத்த, “அப்பா…” என்று உற்சாகமாக கூவிக்கொண்டு காரிலிருந்து இறங்கிய ஷக்தி, அங்கிருந்த தமிழரசுவின் கையைப் பிடித்து தொங்கிக்கொண்டு, “எனக்காகவா ப்பா காத்திருக்கீங்க?” என்றாள் உற்சாகமாக.

“இத்தனை நிமிடங்களில் ரீச் ஆகிவிடுவோம்” என்று ஷக்தி வாட்ஸ்அப் மெசேஜ் தம்பிக்கு செய்திருந்தாள். அதை வைத்து சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்தார்கள் அப்பாவும் மகனும்.

“ஹ்ம்ம்… ஆமா டா..” ஆமோதித்தவர், லேசாக குனிந்து காருக்குள் இருந்த விஸ்வாவைப் பார்த்து, “வாங்க தம்பி, வீட்டுக்கு வந்துட்டு போலாம்” என்று சொல்ல, எல்லாரும் இறங்கி அவர் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள்.

சஞ்சீவ் அக்காவின் லக்கேஜை எடுத்து தன் தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்தான்.

உண்மையில் இப்படி ஒரு சீனை எதிர்பாராத விஸ்வாவுக்கு ஆச்சர்யமாகத் தான் இருந்தது.

இதைவிட ஆச்சர்யத்தை கலைவாணி அவனுக்கு கொடுத்தார். ஆம்… ஷக்தியைக் கண்டதும், கூட வந்த மற்றவர்களை மறந்து, பாய்ந்து அவளைக் கட்டிக்கொண்ட கலைவாணி, யுகம் யுகமாக மகளைக் காணாமல் இருந்தது போல, அவள் நலனை விசாரிக்க ஆரம்பித்தார்.

“கலை, உன் பொண்ணை விட்டுட்டு, வீட்டுக்கு வந்துருக்கவங்களை கவனி” என்ற அத்தையின் குரலுக்கு பிறகே மற்றவர்களின் வருகை அவர் மனதில் பதிந்தது.

ஒரு வெட்கச்சிரிப்போடு அனைவரையும் அவர் வரவேற்க, வீட்டுக்கு ஏற்கனவே வந்திருந்த பெண்களுக்கு, அவரின் இயல்பு தெரிந்திருந்ததால், “ஆன்டிக்கு ஷக்தியை தவிர வேறு யாரும் கண்ணுல தெரிய கூட மாட்டோமே” என்று இயல்பாக கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் விஸ்வாவோ, ‘இப்படி பாசம் காட்டி, தன் மாமன் மகளை மயக்கி வைத்திருக்கிறார்கள்’ என்று உள்ளுக்குள் அவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தான்.

“இது அஸ்வியோட அண்ணா” என்று ஷக்தி தன் பெற்றோருக்கு முறையாக விஸ்வாவை அறிமுகம் செய்து வைக்க, பெண்களை பத்திரமாக அழைத்து வந்தமைக்கு நன்றி கூறினார் தமிழரசு.

சிறு தலையசைப்பில் அதை ஏற்றுக் கொண்டவனின் கண்களில், சிறுவயதில் தன் குடும்பத்தோடு ஷக்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் விழுந்தது, அதை ரசனையோடு பார்த்தான்.

ஆனால், அந்த ரசனையையும் மீறி, தாய்மாமன் மீது அளவற்ற பாசம் கொண்ட அவன் மனது, ‘இதெல்லாம் என் மாமன் அனுபவித்திருக்க வேண்டிய சந்தோஷமான தருணங்கள்’ என்று பொருமித் தீர்த்தது.

இது எதுவும் தெரியாமல், “தம்பி, கொஞ்சம் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரீங்களா, டீ குடிக்கலாம்?” என்று விருந்து உபச்சாரத்தில் இறங்கி கொண்டிருந்தார் தமிழரசு.

பெண்கள் முகம் கழுவிவர ஷக்தியின் அறைக்கு செல்ல, விஸ்வாவை சஞ்சீவ் தன்னுடைய அறைக்கு கூட்டிச் சென்றான்.

 தன்னோடு வந்த சிறுவனிடம், “நீ என்ன படிக்கிற?” என்று விஸ்வா கேட்க, “நைன்த்” என்றான் சஞ்சீவ்.

உடனே சஞ்சீவ் க்கும் ஷக்திக்கும் இடையே இருந்த வயது வித்தியாசத்தை கணக்கிட்ட விஸ்வா, “ஓஹ்… கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷம் குழந்தை இல்லாமல் இருந்துருக்காங்க. அதனால தான் மாமா ஷக்தியை கேட்கும் போது குடுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சிருக்காங்க போல” என்று அதற்கும் ஒரு கதையை தனக்குத்தானே உருவாக்கி கொண்டான் விஸ்வா.

ஹும்ம்…ஷக்தியைத் தவிர வேறு குழந்தை எதுவும் தனக்கு வேண்டாம் என்று, அத்தனை வருடங்களை கலைவாணி தள்ளிப்போட்டது அவனுக்கெங்கே தெரியப்போகிறது.

ஆமாம்… தன் மகனுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று, பஞ்சவர்ணம் கண்களில் காணும் கோவில்களுக்கெல்லாம் வேண்டுதல் வைக்க,

கலைவாணியோ, ஷக்தி மட்டுமே தனக்கு போதும் என்ற எண்ணத்தில் கர்ப்பத்தடை மாத்திரைகளை நீண்ட நெடுங்காலங்களாக கணவனுக்கும் மாமியாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டே இருந்தார்.

‘நெடுநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’ என்பது போல, அந்த மாத்திரைகள் பஞ்சவர்ணத்தின் கைகளில் ஒருநாள் சிக்கிக்கொண்டது.

அப்போது அவர்கள் இருந்தது வட இந்தியாவில் ஒரு பகுதியில் தான். சரியாக ஹிந்தி பேசத் தெரியாத பஞ்சவர்ணம், பக்கத்து வீட்டு பெண்ணின் துணையோடு அந்த மாத்திரைகளை அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் காட்டி விபரம் கேட்டார்.

அவர்களோ, “இது கர்ப்பத்தடை மாத்திரை” என்று கூறி, பஞ்சவர்ணத்தின் தலையில் இடியை இறக்கினார்கள்.

வீட்டுக்கு வந்தவர், எதுவுமே கேட்காமல் பளாரென்று மருமகளின் கன்னத்தில் அறை ஒன்றை வைத்து, மாத்திரையைக் காட்டி, “எதுக்கு இதை சாப்பிடுற? சொல்லு” என்று அதட்டினார்.

“எனக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா, ஷக்தி மேல இப்போ நான் வச்சிருக்கிற பாசம் குறைஞ்சு போகுமோன்னு பயமாயிருக்கு” என்றார் கலைவாணி பரிதாபமாக.

“ஓஹ்… அப்போ உனக்கே, உன்னோட பாசம் மேல நம்பிக்கை இல்லை போல?” நக்கலாக கேட்டார் பஞ்சவர்ணம்.

“அப்படியெல்லாம் இல்ல த்த…”

“ம்ம்… நீ நிரூபி… உனக்கொரு குழந்தை பிறந்தாலும் ஷக்தி மேல இருக்குற பாசம் மாறாதுன்னு, நீ ஒரு குழந்தையைப் பெத்து நிரூபி” என்று பஞ்சவர்ணம் முடித்துவிட்டார்.

கர்ப்பத்தடை மாத்திரைகளை எடுத்த விஷயத்தை மருத்துவரிடம் சொல்லி, முறையான சிகிச்சைக்கு பிறகு, சஞ்சீவை பெற்றுக்கொண்டார் கலைவாணி.

மாலைநேர டீயோடு சிற்றுண்டியும் கலைவாணி பரிமாற, உண்டு முடித்தவர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள்.

“தம்பி, பிள்ளைகளை ஹாஸ்டல்ல விட்டுட்டு, நீங்க உடனே கிளம்பிடாதீங்க. இன்னைக்கு நிறைய நேரம் ட்ரைவ் செய்துட்டீங்க. மறுபடியும் தூங்காம நைட் ட்ரைவ் பண்ணுறது சேஃப் இல்ல. அதனால நைட் நம்ம வீட்டுல தங்கிட்டு, காலைல எழும்பி போகலாம்.”

ஒருவாரம் அவர்கள் வீட்டில் நம் பெண் தங்கியிருக்கிறாள், போதாததற்கு பிள்ளையை அக்கறையோடு காரில் அழைத்து வந்து வீட்டிலேயே விட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாமும் அவர்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டுமே.

தமிழரசுவின் வார்த்தைகளில் சட்டென்று ஷக்தியைப் பார்த்த விஸ்வாவின் கண்களில், “என்ன சொல்லுற? தங்கட்டுமா?” என்ற கேள்வி இருந்தது.

“தாராளமா தங்குங்களேன்” என்ற பதிலைத் தாங்கி நின்றது மங்கையின் மைவிழிகள்.

“இல்ல சார், என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இங்க இருக்குறான், அவனை எனக்கு பாக்க வேண்டி இருக்குது. அப்படியே கொஞ்ச நேரத்தை அங்க போக்கிட்டு, எர்ல்லி மார்னிங் கிளம்பிடுவேன்” என்றவன், பெண்ணவளிடம் கண்களால் சிரித்து, கண்களாலேயே விடைபெற்றுக் கொண்டான்.

வந்தவர்கள் சென்று நெடுநேரத்திற்கு பிறகும், தன் பெண்மீது விழுந்த விஸ்வாவின் உரிமையான பார்வைகளும், அதற்கு அவளின் வெட்கம் நிறைந்த பதில் பார்வைகளுமே, கலைவாணியின் கண்களில் ஓடிக்கொண்டிருந்தது…