என்ன சொல்லி ஷக்தியை மதுரைக்கு அழைத்து வந்தார்களோ, அந்த வார்த்தைக்கு கொஞ்சம் கூட குறை வராதவகையில், ஷக்தியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள் விஸ்வாவின் வீட்டினர்.
விஸ்வா ஸ்டுடியோவுக்கு கிளம்பி சென்றதும், இரண்டாம்கட்டில் அமர்ந்து, ஆஃபீஸ் வேலையை செய்வதற்கு ஏதுவாக, புதிதாக இருக்கை வசதிகள் கூட செய்து கொடுக்கப்பட்டது ஷக்திக்கு.
வேலைக்கிடையே கிடைக்கும் இடைவேளையில், தனியாக அறைக்குள் ஒதுங்கி விடாமல், வீட்டுப் பெண்களோடு பேச்சுக்கொடுத்து ஒரு நல்ல நட்புறவை அவர்களோடு உருவாக்கி கொண்டாள் ஷக்தி.
அதிலும், கல்யாணி அம்மாவுடன் பேசும் நேரங்கள் அவளுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.
கல்யாணி அம்மாவின் பெரும்பான்மையான பேச்சுகள், அந்த வீட்டை தன்னுடைய மாமனாருடைய அப்பா, எப்படி கட்டினார், வீட்டுக்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் எங்கிருந்தெல்லாம் தருவிக்கப்பட்டது, வீடு கட்டிமுடிக்க எடுத்துக்கொண்ட கால அளவு போன்றவற்றைப் பற்றியே இருந்தது. இப்படிபட்ட பேச்சுக்களில் மிகுந்த ஆர்வம் உள்ள நம் ஷக்தி அவரின் பேச்சுக்கு மிகப்பெரிய விசிறியே ஆகிப்போனாள்.
மகள் திருமணத்திற்காக வந்திருந்த போதே, ஷக்தியிடம் ராசியாகிக் கொண்ட மீனாட்சி, அதை அப்படியே பிடித்துக் கொண்டு, இப்போழுதும் மருமகளோடு நல்லவிதமாகவே பேசிப் பழகினார்.
ஷக்திக்கும் பழைய கசடுகளை தூக்கி சுமக்க விருப்பமில்லாததால், அவருடன் இயல்பாக பழகமுடிந்தது.
அறிந்தவர், தெரிந்தவர், உறவினர் என்று, ஷக்தியை பார்த்து செல்வதற்காக யாராவது ஒரு நபரின் வருகை தினமும் வீட்டிலிருந்தது.
‘இத்தனை நாளும் மறைந்து, ஒளிந்து தன்னை பார்த்த மனிதர், தங்கை வீட்டில் நான் இருக்கிறேன் என்று தெரிந்தால், தயக்கமின்றி வந்து நிற்பார்’ என்று ஷக்தி நினைத்த, சௌந்தர் மட்டும் வரவேயில்லை.
இருவீட்டாரும் இணைந்து ஷக்திக்கு வளைகாப்பு நடத்த ஒரு நல்லநாளை முடிவு செய்ய, சொந்தபந்தங்களுக்கு அழைப்பு விடப்பட்டது. அவர்களோடு சௌந்தரும் அழைக்கப்பட்டார்.
வளைகாப்புக்கு முந்தைய நாளே ஷக்தியின் வீட்டினர் சென்னையிலிருந்து வந்துவிட்டார்கள். மறுநாள் காலை வளைகாப்பு முடிந்து, அன்று மாலையே விமானத்தில், அவர்களோடு ஷக்தி சென்னை செல்வதாக ஏற்பாடு.
வளைகாப்புக்கான அந்த நாளும் அழகாகவே புலர்ந்தது.
வளைகாப்பிற்கென்றே, ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வாங்கியிருந்த, காஞ்சிப்பட்டு முந்தானையில், ஆலிலைக் கண்ணன் அழகாக சிரித்துக் கொண்டிருக்க, அதை அணிந்து கொண்டு புன்னகை முகமாக வலம் வந்து கொண்டிருந்தாள் ஷக்தி.
“ம்ஹூம்… அம்மாவைக் கண்டதும், இந்த அப்பாவி புருஷனை டீல்ல விட்டாச்சு” கலைவாணி வந்த நேரத்திலிருந்து, அவர் பின்னே அலைந்து கொண்டிருந்த மனைவி, தனியாக கிடைக்கவும் கிண்டலடித்தான் விஸ்வா.
“அப்படி எல்லாம் விடமுடியாது சார். வாங்க… வந்து, அந்த தலைவாசல் நிலையில், தேருக்குள்ள இருக்குற இளவரசி சிற்பத்தோடு சேர்த்து என்னை ஃபோட்டோ எடுத்து குடுங்க” என்றாள் ஷக்தி.
“அம்மாடியோவ்… அப்பவே உங்க ரெண்டு பேரையும் வச்சி ஸ்டில் எடுக்க எனக்கு கஷ்டமாயிருந்தது. ஆனாலும் என்னோட ஹீரோ இமேஜை காப்பாத்திக்க, அந்த டாஸ்கை அன்னைக்கு கம்ப்ளீட் பண்ணிட்டேன். ஆனா இப்போ… சான்ஸ்ஸே இல்ல ம்மா… என்னை விட்டுரு.”
“ஐயையோ… பருத்தி மூட்டை மாதிரி, கும்முன்னு இருந்த உன்னைப் போய் குண்டம்மான்னு சொல்லுவேனா ஷக்தி?”
பதறிப்போனவனைப் போல தொடங்கியவன், மீண்டும் கேலியிலேயே முடிக்க, வாய்விட்டு சிரித்த ஷக்தி, “உண்மையிலேயே ஃபோட்டோ எடுக்க முடியாதா விஸ்வா?” என்று ஏக்கமாக கேட்டாள்.
“எம்பொண்டாட்டி கேட்டு இல்லாதது ஒன்னு, இந்த உலகத்துல உண்டா என்ன? வா… ஜமாய்சிடுவோம்.” மனைவியின் முகவாயைப் பற்றி கொஞ்சியவன்,
அந்த தலைவாசல் நிலையிலிருந்த, இவளரசி சிற்பத்துக்கு அருகில் ஷக்தியை நிற்கவைத்து, தன்னுடைய கேமராவினால் புகைப்படங்களை எடுத்து தள்ள ஆரம்பித்த நேரத்தில் தான், மனைவி கௌரியோடு வீட்டுக்குள் நுழைந்தார் சௌந்தர்.
வந்தவர், வாசலில் நின்றிருந்த விஸ்வாவிடம் கைகுலுக்கி, அவன் தோளை தட்டிக் கொடுத்தார். பின்னர், எப்போதும் போல ஒரு புன்னகையை மட்டும் ஷக்திக்கு கொடுக்காமல், “நல்லாயிருக்கியா ம்மா ஷக்தி?” என்றார் ஆழ்ந்த குரலில்.
அவரின் இந்த மாற்றத்தை மனதில் குறித்து கொண்ட ஷக்தி, “ம்ம்… நல்லாருக்கேன்” என்றாள் மெதுவாக.
ஷக்தியிடமிருந்து இப்படி பதிலை எதிர்பார்க்காத சௌந்தர், கண்கள் பளிச்சிட மகளைப் பார்த்தார். அங்கு நின்றிருந்த விஸ்வா, கௌரி இருவருக்கும் கூட ஷக்தியின் செயல் ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
“இந்த மாதிரி டைம்ல நிறைய ஃபோட்டோஸ் எடுக்க வேண்டாமே விஸ்வா.” மருமகனின் கையிலிருந்த கேமராவைப் பார்த்து, கௌரி சொல்ல, “சரி த்த…” என்றவன், மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். அவர்களோடு நகர்ந்தார்கள் சௌந்தரும், கௌரியும்.
சௌந்தர் எப்படியும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருவார் என்று விஸ்வாவுக்கு தெரியும் தான். ஆனால் வந்ததுமே, அவர் ஷக்தியை சந்திக்குமாறு அமைந்த சூழ்நிலை, அவனை லேசாக மிரட்ட, மனைவியோடு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
‘இனி வளைகாப்பு முடிகிற வரைக்கும் மனைவியை விட்டு நகர்ந்து விடக்கூடாது.’ சடுதியில் முடிவெடுத்து கொண்டவனாக ஷக்தியைப் பார்க்க, அவளின் முகம் எந்த குழப்பமுமின்றி தெளிவாக இருந்தது போல தெரிந்தது விஸ்வாவுக்கு.
அழைத்திருந்த உறவினர்கள் அத்தனை பேருக்கும் முதலாவதாக வந்திருந்த இருவரையும், வீட்டிலுள்ள அனைவரும் வரவேற்று பேசினர். தமிழரசுவும் கலைவாணியும் கூட அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள்.
எல்லாவற்றையும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தாள் ஷக்தி.
வளைகாப்பு நடத்துவதற்கென குறித்திருந்த நேரத்திற்குள், அனைத்து சொந்தங்களும் வந்திருக்க, ஷக்தியை மனையில் அமரவைத்து நலங்கு வைக்க ஆயத்தமானார்கள் பெண்கள்.
முதலில் குடும்பத்தில் பெரியவரான கல்யாணி அம்மா, ஷக்திக்கு குங்குமம், சந்தனம் வைத்து ஆசீர்வாதம் செய்து, ஒரு ஜோடி தங்க வளையல்களைப் போட்டுவிட்டார்.
அடுத்ததாக மீனாட்சி, கலைவாணி, பஞ்சவர்ணம், விஸ்வாவின் சித்தி, அத்தை என குடும்பத்திலுள்ள பெண்கள் ஒருவர் பின் ஒருவராக வளையலடுக்க ஆரம்பித்தார்கள்.
கலைவாணியைத் தவிர அத்தனைபேரும் ஒருஜோடி தங்க வளையல்களை ஷக்திக்கு அணிவித்தார்கள்.
அரைடஜன் தங்கவளையல்களை மகளுக்கு அணிவித்த கலைவாணி, ஷக்தியின் முன்நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்து லேசாக உணர்ச்சிவசப்பட்டார்.
“மம்மி ஜி… என்னாச்சு?” கிசுகிசுத்தாள் ஷக்தி.
“சும்மா… கொஞ்சமா இமோஷனல் ஆகிட்டேன் டா.” முணுமுணுத்தவாறே விலகி அடுத்தவருக்கு வழிவிட்ட கலைவாணி, மகளிடம் சொல்லியது போல கொஞ்சமாக எல்லாம் உணர்ச்சி வசப்படவில்லை. அவர் உள்ளம் முழுவதுமே உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது,
‘தன்னுடைய ஒருவயதில் அம்மா என்று அழைத்து தன் விரல்களைப் பற்றிய ஷக்தி, தன் உண்மையான தாய், தகப்பனைப் பற்றி அறிந்து கொண்ட பின்பும் கூட, தன்பிடியை விட மறுத்து தங்களோடு ஒட்டிக்கொண்டது கலைவாணிக்கு உச்சபட்ச சந்தோஷத்தையே கொடுத்திருந்தது.
என்றாலும், இங்கு வந்த நேரத்திலிருந்து தன் மகளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சௌந்தர் என்னும் தகப்பனின் கண்களில், பாசமா? ஏக்கமா? வலியா? என்று பிரித்தறிய முடியாமல் வந்து வந்து போன உணர்வுகளைக் கண்டு,
‘என்னுடைய பிள்ளைப் பாசத்தில், ஒரு தகப்பனுக்கும் மகளுக்குமான உறவில் தலையிட்டு அவர்களுக்கு நான் தீங்கிழைத்து விட்டோனோ?’ என்ற குற்ற உணர்ச்சியில் மனம் தவிக்க ஆரம்பிக்க, தன்னை மறந்து உணர்ச்சிவசப்பட்டு விட்டார் கலைவாணி.
“ஷக்திக்கு வளையலை போட்டுவிடு” என்று தைரியமாக அவரிடம் சொல்லவும் யாராலும் இயலவில்லை.
சௌந்தர், பொங்கல்சீர் கொண்டு வந்திருந்த அன்று நடந்தவை அத்தனையும், இன்னும் அனைவருக்கும் ஞாபகம் இருக்க, தாங்கள் சொல்லி ஏதும் ரசாபாசமாகிவிடுமோ என்ற தவிப்பு எல்லாருடைய முகத்திலும் இருந்தது.
கௌரியின் தயக்கத்தைக் கண்ட ஷக்தியுமே அமைதியாக தான் இருந்தாள். ஆனால் பொங்கல்சீரன்று ஷக்தியிடம் கதைபேசிய வயதான பெண்மணிகளில் ஒருவரால் அப்படியிருக்க முடியவில்லை.
“இந்த கௌரியும் வளையல் போடப்போறாளாமா? அதெப்படி போட முடியும்? அவளுக்குன்னு ஒரு குழந்தை கூட…” அருகிலிருந்த தன் வயதையொத்த பெண்மணியிடம் மேடைரகசியம் பேசுகிறேன் பேர்வழி என்று வேண்டுமென்றே அவர் சத்தம் போட்டு பேசத் தொடங்கினார்.
அவரை முடிக்க விடாமல், தன்னருகே நின்ற தாயிடம் கௌரியைச் சுட்டிகாட்டிய கௌரி, “அவங்களை வளையல் போட்டுவிடச் சொல்லுங்க ம்மா. ஆனா, அவங்க கையிலயிருக்கிற கோல்ட் வளையல் எல்லாம் வேண்டாம். இந்த கண்ணாடி வளையலையே போடச்சொல்லுங்க” என்றாள்.
அம்மாவிடம் சொல்லிவிட்டு, ஏதோ சாதித்து விட்டதுபோல அந்த வயதான பெண்மணியை ஷக்தி உற்றுப் பார்க்க, “என் திட்டம் எப்படி பலித்துவிட்டது பார்” என்னும் விதமாக கண்சிமிட்டி சிரித்தார் அந்த பெண்மணி.
அவரின் கண்சிமிட்டலே அவரின் திட்டத்தை ஷக்திக்கு உணர்த்திவிட, தன்னைமீறி சிரிப்பு வந்தது அவளுக்கு.
‘வளையல் போட ஷக்தியின் சம்மதம் கிடைத்ததே பெரிய விஷயம்’ என்னும் சந்தோஷத்தில் அங்கிருந்த கண்ணாடி வளையல்களை போட்டுவிட்டு, கலைவாணியைப் போலவே ஷக்திக்கு உச்சிமுத்தம் ஒன்றையும் கௌரி வைக்க, உள்ளுக்குள் ஏதோ கொஞ்சம் அசையத்தான் செய்தது ஷக்திக்கு.
அடுத்ததாக, வீட்டின் ஆண்கள் தங்கள் வீட்டு பெண்ணுக்கு சந்தனம் வைத்து ஆசீர்வாதம் செய்ய தொடங்கினார்கள். கௌரியைப் போல யாரின் அனுமதியையும் எதிர்பார்த்து சௌந்தர் நிற்கவில்லை.
விறுவிறுவென்று வந்தவர், விரலில் சந்தனத்தை தொட்டு மகளுக்கு பொட்டிட்டு விட்டு, மனைவியை நோக்கி தன் கையை நீட்ட, கணவனின் நீட்டிய கையில் தங்கவளையல்கள் அடங்கிய பாக்ஸ்ஸை வைத்தார் கௌரி.
அவற்றிலிருந்த ஒருடஜன் தங்க வளையல்களை மகளின் கரத்தைப் பிடித்து கைக்கு ஆறாக சௌந்தர் போட்டுவிட, “இல்ல… இதெல்லாம் வேண்டாம்.” உடனடியாக மறுத்தாள் ஷக்தி.
மகளின் மறுப்பில் நிமிர்ந்து அவள் கண்களை கூர்ந்து பார்த்த சௌந்தர், ஏதும் சொல்லாமல் கருமமே கண்ணாகினார். அந்த கண்களிலிருந்த ஏதோ ஒன்று, குரலை உயர்த்தி மறுத்து பேசவிடாமல் ஷக்தியை கட்டிப் போட்டது.
வளையல் அணிவிக்கும் சௌந்தரின் கைகளோ, எத்தனை கட்டுப்படுத்தியும் அவரையும் மீறி உணர்ச்சி பெருக்கில் நடுங்கியது. அது ஷக்திக்கு மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி நின்றவர்களுக்கும் தெளிவாக புரிந்தது.
‘பெற்றோரிடம் அடிவாங்கினால் கூட அவர்களின் கால்களையே கட்டிக்கொள்ளும் குழந்தையைப் போல, இத்தனைக்குப் பிறகும் மகளின் மீது அபரிமிதமான பாசம் வைத்திருக்கும் சௌந்தரை, காலம் இவ்வாறு வஞ்சித்திருக்க வேண்டாம்’ என்று காலத்தை பழித்தது அவர்களின் உள்ளங்கள்.
வளையலை அணிவித்ததோடல்லாமல் மகளின் தலையை மென்மையாக தன் வலது கையால் தடவிய சௌந்தர் அங்கிருந்து நகர, மனைவி அருகில் வந்த விஸ்வா, “ஆர் யூ ஓகே பேபி?” என்று அக்கறையாய் வினவினான்.
அவனுக்கு ‘மாமனின் செயல்கள் எதுவும் மனைவியை காயப்படுத்திவிடுமோ?’ என்ற கவலை. அதேநேரம் மாமனையும் தவிர்க்க முடியாத சூழ்நிலை.
இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை போலத்தான் இருந்தது அவனது மனநிலை.
ஆனால், எந்த அசம்பாவிதமும் மகளுக்கும் தகப்பனுக்குமிடையே நடைபெறாமல் அந்த சூழ்நிலையை அவர்கள் கடந்துவிடவே, “அப்பாடா…” என்று பெருமூச்சொன்றை அவன் வெளியிட்டதென்னவோ நிஜம்.
தன்பங்குக்கு மனைவிக்கு நலங்கு வைத்து, வேலைப்பாடு மிகுந்த இரண்டு தங்க வளையல்களை விஸ்வாவும் அணிவித்து விட்டான். விருந்து உபசரிப்போடு இனிதே நிறைவு பெற்றது ஷக்தியின் வளைகாப்பு.