அத்தியாயம் 18:

நல்ல ஏகாந்தமான மனநிலையில் விஸ்வாவின் அத்தை வீட்டிலிருந்து கணவனோடு கிளம்பிய ஷக்தி, அதே மனநிலையில் விஸ்வாவின் வீட்டில் வந்து இறங்கினாள்.

‘சரியாக ஒருவருடத்திற்கு முன், இப்படித்தானே இந்த வீட்டுக்கு முன் வந்து நின்றேன். என்ன? இன்று என் அருகில், காதல் கணவனாக நிற்கும் விஸ்வா, அன்று என்னிடம் சிடுசிடு விஸ்வாவாக இருந்தான், அவ்வளவு தான் வித்தியாசம்.’

கடந்த காலத்தின் நினைவுகள், ஷக்தியின் இதழ்களில் மெல்லியதாக இளநகை ஒன்றை ஓடச்செய்ய, “அம்மணி… எதுக்கிந்த சிரிப்பு?” கிசுகிசுத்தான் விஸ்வா.

“ஒன்னுமில்லை…” புன்னகையோடு தலையசைத்தவள், அங்கே வீட்டில் குழுமியிருந்த அதிகப்படியான நபர்களைக் கண்டு, யோசனையாய் கணவனின் முகம் நோக்கினாள்.

“எல்லாம் நம்ம நெருங்கிய சொந்தம் தான் டா. கல்யாணத்துக்கு பிறகு ஃபர்ஸ்ட் டைம் நாம ரெண்டு பேரும் இங்க வர்றதுனால, வீட்டுல கூப்பிட்டிருப்பாங்களா இருக்கும்.”

மனைவியின் கண்பார்த்தே அவள் குழப்பத்தைப் புரிந்து கொண்டு, அவள் காதோரம் குனிந்து மெல்லிய குரலில் சொன்னான் விஸ்வா.

தன்னுடைய சின்னச்சின்ன அசைவுகளைக் கூட கணவன் கண்டுகொள்வது, ஷக்திக்கு உள்ளூர உற்சாகத்தை தர, சந்தோஷமான மனநிலையிலேயே எல்லோரையும் எதிர் கொள்ள தயாரானாள் ஷக்தி.

விஸ்வா, ஷக்தியின் வருகையை கொஞ்சம் ஆரவாரமாக கொண்டாட, விஸ்வா வீட்டினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

கல்யாண வீடு போல வாசலில் வாழைமர தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த வீடு, நெருங்கிய சொந்தங்களால் நிறைந்திருந்தது.

 வந்திருந்த சொந்தங்களுக்காக, விருந்து பின்கட்டில் தயாராகி கொண்டிருந்தது போலும். வாசனை ஆளை அசரடித்தது.

விஸ்வாவின் அம்மாவும் சித்தப்பா மனைவியும் இணைந்து, தம்பதியருக்கு ஆரத்தியெடுத்து முடிக்க, “வாங்க அண்ணி” என்று ஷக்தியை கைப்பிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்றாள் அஸ்வினி.

“என்னை அண்ணின்னு கூப்பிட்டா, உன்னை கொன்னுடுவேன்னு சொல்லியிருக்கேனா இல்லையா அஸ்வி?” மெல்லிய குரலில் அதட்டினாள் ஷக்தி.

“கூப்பிடலைன்னா, உன் பக்கத்துல வர்றவன், என்னைக் கொன்னுடுவான்னு, நானும் உனக்கு சொல்லியிருக்கேனா இல்லையா அண்ணி.”

ஷக்தியின் பாணியிலேயே பதில் சொல்லி கிளுக்கிச் சிரித்த இதே அஸ்வினி மீது கூட, கோபம் கொண்டு அவள் ஃபோன் நம்பரை ஷக்தி ப்ளாக் செய்து வைத்திருந்த காலமும் இருந்தது தான்.

அதன்பின்னர், தன்னைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்த தோழியோடு கோபம் மறந்து பழையபடி பேச ஆரம்பித்திருந்தாள் ஷக்தி.

அஸ்வினி மட்டுமல்ல, பாஸ்கருமே, “அண்ணி ஜி” என்றழைத்து ஷக்தியின் இரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொண்டிருந்தான்.

புதுமணத்தம்பதியர் செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் ஒன்றுவிடாமல் விஸ்வாவையும் ஷக்தியையும், செய்ய வைத்தார்கள் பெரியவர்கள்.

ஒருவழியாக, எல்லா சம்பிரதாயங்களும் முடிவடைய, கணவனோடு ஹாலில் வந்து உட்கார்ந்து, தன் மனம் கவர்ந்த வீட்டை ஆசையாக கண்களால் அளக்க ஆரம்பித்த ஷக்தியிடம்,

“இவ்வளவுபேரை கூப்பிட்டு இருக்கிறது எனக்கே தெரியாது ஷக்தி. நீ கம்ஃபர்டபிளா தானே ஃபீல் பண்ணுற டா?” என்றான் விஸ்வா. மனைவி தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்ற தவிப்பிருந்தது அவன் குரலில்.

“ஹ்ம்ம்… நோ ப்ராப்ளம் விஸ்வா. இது கூட நல்லா தான் இருக்கு.” மனைவியின் பதிலில் மனம் நிறைந்து போனவன், “தேங்யூ ஷக்தி” என்று சொல்லி வாய்கூட மூடவில்லை,

“ஏன் பேராண்டி? நீ மட்டுமே உம்பொஞ்சாதி கூட பேசுனா போதுமா? நாங்களும் கொஞ்சம் அவகூட பேசணும், நீ இடத்தை காலிபண்ணு” என்று, சொல்லியபடியே நான்கைந்து வயதான பெண்மணிகள் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.

“உங்கள நம்பி எல்லாம் எம்பொண்டாட்டியை விட்டுட்டு போகமுடியாது ஆத்தா‌. நான் இப்பிடிக்கா, உக்காந்துக்குறேன், நீங்க தாராளமா பேசுங்க.”

சட்டென்று லேசான டென்ஷனுக்கு மாறியிருந்த மனைவியின் முகத்தைப் பார்த்து, விளையாட்டாகவே அவளை விட்டு விலக மறுத்த விஸ்வாவிடம், “நாங்க ஒன்னும் உம் பொண்டாட்டியை கடிச்சி முழுங்கிட மாட்டோம், நீ எழும்பி போடா” என்றார்கள் பெரியவர்கள்.

“யாராவது உன்னை ஓவரா ராகிங் பண்ணுனா, கூப்பிடு செல்லம்… மாமன் பறந்து வரேன்.” வேறுவழியில்லாமல் எழும்பியவன், அங்கே அமர்ந்திருந்த தங்கையிடம், “பாத்துக்கோ” என்று கண்களாலேயேச் சொல்லி சென்றான்.

“ரொம்பத்தான் பண்ணுறான் உம்புருஷன்.” அலுத்துக்கொண்டே உட்கார்ந்த அத்தனை பேரின் கவனமும், இப்போது ஷக்தி மீது விழுந்தது. ஏதோ புதிதாக கல்லூரிக்கு வந்த மாணவி, சீனியர்களின் பிடியில் சிக்கிக்கொண்டது போன்ற மனநிலையில் அவர்கள் முன் உட்கார்ந்திருந்தாள் ஷக்தி.

“ம்ம்… புருஷன், பெஞ்சாதிக்குள்ள இருந்த பிணக்கெல்லாம் இப்போ தீர்ந்திடிச்சா, எப்படி?” முதல் கேள்வியை ஒரு பெண்மணி ஆரம்பித்தார்.

“பயலுக்கு, நம்மகிட்ட பொண்டாட்டியை விட்டுட்டு போக, இஷ்டமில்லாத போதே தெரியலையா, இரண்டு பேருக்குள்ளயும் எல்லாம் சுமுகமா போகுதுன்னு.”

ஷக்திக்கு பதில் சொல்லும் சிரமத்தைக் கொடுக்காமல், லேசாக தன் கண்களைச் சிமிட்டி விஷமமாக பதிலைக் கொடுத்தார், கூட்டணியில் இருந்த மற்றொரு பெண்மணி.

அவரின் பதிலில் வெடித்து சிரித்து கொண்ட பெண்மணிகளில் ஒருவர், ஷக்தியின் நெற்றியைத் தொட்டுகாட்டி, “இதைவிட கொஞ்சம் பெருசா பொட்டு வச்சிக்கணும், அப்போ தான் முகம் பளிச்சுன்னு பாக்கும்படியா இருக்கும்” என்றார்.

‘இதைவிட பெருசாவா?’ உள்ளுக்குள் அலறினாலும், “சரி ஆத்தா” என்றாள் ஷக்தி நல்லபிள்ளையாக.

 “கல்யாணத்தன்னைக்கு நிறைய நகை போட்டிருந்தியே, இப்போ ஏன் கம்மியா போட்டுருக்க?” மற்றொரு பெண்மணி, தன்பங்குக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அது, நிறைய போட்டா உறுத்துதுன்னு சொல்லி, மெலுசான ஜ்வெல்லா பாத்து அண்ணி போட்டுருக்காங்க.” ஷக்தியை முந்திக்கொண்டு, இப்போது பதில் சொன்னாள் அஸ்வினி.

“பரவாயில்லையே ஃப்ரெண்டா இருந்தாலும், அண்ணன் பொண்டாட்டியா ஆனதும், நம்ம புள்ள அதுக்குள்ள மரியாதையை கொடுத்து பேசுதே!” என்று அஸ்வினியை மெச்சிக்கொண்டவர்கள், “எங்களுக்கு உன் அண்ணியே பதில் சொல்லட்டும், நீ வாயை மூடிட்டு இரு” என்றார்கள்.

‘ஷக்தின்னு, பேரைச் சொன்னா, என்னை வச்சி செய்வீங்கன்னு தெரிஞ்சு தானே, உஷாரா, அண்ணின்னு சொன்னேன்.’ மனதுக்குள் எண்ணம் ஓட, அர்த்தபுஷ்டியாக ஷக்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அஸ்வினி தன் வாயை மூடிக்கொண்டாள்.

அதன் பிறகு, ஷக்தியின் அடர்ந்த கூந்தலை இழுத்து பார்த்து, “இது சொந்த முடியா?” கைகளில் அணிந்திருந்த கல்வளையல்களை பிடித்து பார்த்து, “இதெல்லாம் அசல் வைரமா? உங்கிட்ட ஒட்டியாணம் இருக்கா? இல்லையா?” போன்ற கேள்விகளை எழுப்பி, ஷக்தியின் வாய் வார்த்தையாகவே பதிலையும் வாங்கிக் கொண்டார்கள்.

இறுதியில், “பொண்ணு பரவாயில்லை, எப்படி கேள்வி கேட்டாலும், கோபப்படாம பொறுமையாவே பதில் சொல்லுது. நல்ல வளர்ப்பு” என்று சான்றிதழும் தந்தார்கள்.

இன்னும் சற்றுநேரத்தில் தன் வளர்ப்பை ஒருநபர் குறை சொல்லப்போவது தெரியாமல், ‘யப்பா… இதுக்கு தான் இத்தனைக் கேள்வியா? நல்லவேளை பொறுமையா பதில் சொன்னேன் டா சாமி’ என்று, மனதுக்குள் அங்கலாய்த்து கொண்டாலும், வெளியே தன்னை சந்தோஷமாகவே காட்டிக்கொண்டாள் ஷக்தி.

“உங்க கேள்வி எல்லாம் முடிஞ்சுதுன்னா, பொண்ணை எங்ககிட்டயும் கொஞ்சம் தாங்க பெரியம்மா.”

ஏதோ, அந்த பொம்மையை கொஞ்ச நேரம் தாங்க, நாங்களும் விளையாட்டிவிட்டு தருகிறோம் என்ற பாவனையில், ஷக்தியின் வயதையொத்த இளம்பெண் ஒருத்தி கேட்டுக்கொண்டு வந்து நின்றாள்.

‘ஹையையோ… அடுத்த சோதனையா?’ உள்ளுக்குள் ஷக்தி பதறினாலும், பெரியவர்களின் அனுமதியோடு, வந்திருந்த பெண்ணோடு நகைமுகமாகவே கிளம்பினாள் ஷக்தி.

“இங்க பாரு தனு, ஷக்தி கிட்ட ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்டுவச்சீங்கன்னா, கொன்னேபோடுவேன் பாத்துக்க.” கூடவே வந்த அஸ்வினி அந்த தனுவை மிரட்ட, வில்லங்கமாக சிரித்தது அந்த பெண்.

“ம்ஹூம்… நான் ஊர்ல இல்லாத நேரமா பார்த்து, எங்க அத்தானை நீங்க கொத்திட்டு போயிட்டீங்க. இல்லைன்னா நான் தான் அவரைக் கல்யாணம் பண்ணியிருப்பேன்.”

குழுமியிருந்த இளம்பெண்களுக்கு நடுவே ஷக்தி அமரவும், பெருமூச்சொன்றை மானாவாரியாக வெளியிட்டபடியே இளம்பெண் ஒருத்தி கூறினாள்.

“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலையே, வேணும்னா நீங்க தாராளமா… உங்கத்தானை கல்யாணம் பண்ணிக்கோங்களேன்.”

சிரித்தபடியே ஷக்தி சொல்ல, “ஹோ…” என்ற உற்சாக கூச்சல் பெண்களிடையே எழும்பி அடங்கிய நேரத்தில், சர்… சர்ரென்று நான்கைந்து கார்கள் வாசலில் வந்து நிற்க, எல்லாருடைய பார்வையும் வாசலை அளந்தது.

ஷக்தியும், அவர்களைப் போலவே வாசலைப் பார்த்தாள். தன் உறவு ஜனங்களோடு காரிலிருந்து இறங்கி கொண்டிருந்தார் சௌந்தர்.

அதை சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்த ஷக்திக்கு, ‘அவருடைய தங்கை வீட்டுக்கு அவர் வருகிறார், எனக்கென்ன வந்தது?’ என்ற எண்ணம் தான் மனதில் வந்தது.

ஆனால், கார்களைத் தொடர்ந்து வந்த டெம்போக்களிலிருந்து இறக்கப்பட்ட, வீட்டு உபயோக பொருட்கள் அத்தனையும் வீட்டின் ஹாலை நிறைக்க, நிறைக்க, மனதிற்குள் கோபம் வேகமாக கூடுகட்ட தொடங்கியது.

அந்த கோபத்தையும் தாண்டி, ஏனோ தான் மீண்டும் ஏமாற்றப்பட்டது போல ஒரு உணர்வு வர, பார்வை கணவனிடம் தானாகவே சென்றது.

ஷக்தியின் பார்வையிலிருந்த ஏமாற்றத்தை தாங்கமுடியாத விஸ்வா, அவள் அருகில் வந்து, “ஷக்தி… உனக்கு எப்படி இது எல்லாம் புதுசா இருக்கோ, அப்படி தான் எனக்கும். மொதல்ல அதை நீ நம்பணும்” என்று, அவள் கைகளைப் பற்றிபடிச் சொன்னான்.

அந்த வார்த்தையில் இருந்த உண்மையில் பெண்ணவளின் மனம் லேசாக அமைதியடையவே, கணவனுக்கு அருகில் அமைதியாக நின்றாள் ஷக்தி.

 பொருட்களை இறக்கி வைப்பதை சௌந்தர் மேற்பார்வை செய்து கொண்டு நிற்க, அவரோடு வந்த உறவுகள், ஜோடியாக நின்ற ஷக்தி, விஸ்வா அருகே வந்து, “இது தான் சௌந்தர் பொண்ணா?” என்று கேட்டுக் கொண்டே, “அப்படியே அப்பனையே உறிச்சு வச்சிருக்கா” என்று சொல்லி ஷக்தியின் கன்னம் தொட்டு திருஷ்டியும் வழித்தார்கள்.

‘இல்ல… நான் தமிழரசு, கலைவாணியோட பொண்ணு’ என்று ஓங்கி கத்த வேண்டும் போல இருந்தது ஷக்திக்கு.

ஆனால் சூழ்நிலை அவள் எண்ணத்தை செயல்படுத்த முடியாமல் கைகளைக் கட்டிப்போட, நடப்பதை ஒரு இயலாமையோடு அனுமதித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

எல்லாப் பொருட்களையும் இறக்கி முடிக்கவும், இவர்களுக்கு அருகில் மனைவி கௌரியோடு வந்த சௌந்தர், மருமகனை ஆரத்தழுவி நலன் விசாரித்தார்.

பின்னர் ஷக்தியிடம், “எனக்கு தெரிஞ்சதை எல்லாம் இந்த அப்பா உனக்காக வாங்கியிருக்கேன் ஷக்தி மா. வேற எதுவும் தேவைன்னா, அதையும் சொல்லு. அப்பா வாங்கித் தரேன். இப்போ இந்த நகையை வாங்கிக்கோ” என்றபடியே, மனைவி கையிலிருந்த நகைகள் அடங்கிய பையை வாங்கி ஷக்தியிடம் நீட்டினார்.

அதை வாங்கிக் கொள்ளாமல், “நீங்க யாரு சார், இதெல்லாம் எனக்கு வாங்கிக்கொடுக்க?” அமைதியாக, ஆனால் அழுத்தமாக வந்தது ஷக்தியிடமிருந்து கேள்வி.

“ஷக்தி… நான் உன்…”

“நீங்க விஸ்வாவோட தாய்மாமா. எனக்கு, என் ஹஸ்பெண்டோட மரியாதைக்குரிய உறவு, அவ்வளவு தான்.” சௌந்தரின் வார்த்தைகளை வெட்டிப் பேசிய ஷக்தி, “யாரும் என்னை நிம்மதியா இருக்க விடவே மாட்டாங்களா விஸ்வா?” என்று நொந்து போனக் குரலில் கணவனிடம் கேட்டாள்.

மனைவியை தோளோடு அணைத்து கொண்ட விஸ்வா, “ஷக்தியோட மனசையும் புரிஞ்சுக்க பாருங்க மாமா. தயவு செய்து இதையெல்லாம் திரும்ப எடுத்துட்டு போயிடுங்க” என்றான் மென்மையான குரலில்.

அப்போது அங்கே வந்த சௌந்தரின் அத்தைமுறை பெண்மணி ஒருவர் சூழ்நிலை புரியாமல், “ஹ்ம்ம்… எப்புடியோ, நம்ம புள்ள நமக்கு கிடைச்சிடிச்சி. ஆனாலும் நீ இழந்த காலம், இழந்தது தானே ப்பா” என்று சௌந்தருக்காக அனுதாபப்பட்டவர்,

  “உன் மொத சம்சாரத்தோட அண்ணன்காரன் வந்துருகாப்லயா சௌந்தர்? எங்கிட்ட அவனைக் கொஞ்சம் காட்டு. தகப்பனையும் பிள்ளையையும் இத்தனை வருஷம் பிரிச்சிட்டியே படுபாவின்னு, நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை அவனைக் கேட்டாத் தான் எம்மனசு ஆறும்” என்று வீராவேசமாக பேசினார்.

அவ்வளவு தான்… இத்தனை நேரம் சூழ்நிலை கருதி கட்டுக்குள் இருந்த ஷக்தியின் கோபம், தன் தந்தையை தவறாக பேசியதும் கரையுடைத்து, நுங்கும் நுரையுமாக பாய்ந்து செல்லும் வெள்ளம் போல ஆக்ரோஷமாக வெளியே வந்தது.

“என்ன சொன்னீங்க? நாக்கப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்கப்போறீங்களா? ம்ஹும்… அப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருந்தா, என் அப்பாவை நீங்க கேக்க கூடாது. இதோ உங்க முன்னாடி நிக்குறாரே சௌ…ந்தர், இவரைத்தான் நீங்க கேட்கணும்.” குரலை உயர்த்தி படுநக்கலாக பேசினாள் ஷக்தி.

ஷக்தியின் பேச்சு, தன் அண்ணனை மட்டம் தட்டுவதாக அங்கு நின்று கொண்டிருந்த விஸ்வாவின் அம்மா மீனாட்சிக்கு தோன்ற, “கொஞ்சம் நிதானமா பேசு ஷக்தி” என்றார் லேசாக எச்சரிக்கும் தொனியில்.

“அது எல்லாருக்குமே பொருந்தும் தானே” பயமின்றி வந்தது ஷக்தியிடமிருந்து பதில்.

“வயசுக்கும் மதிப்பில்ல, மாமியார் ங்குற உறவுக்கு உண்டான மட்டுமரியாதையும் இல்லை. என்ன வளர்ப்போ தெரியலை? எப்படின்னாலும் பெத்தவங்க வளர்ப்புக்கும், மத்தவங்க வளர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கும் தானே?”

மறுபடியும் தன் பெற்றோரையே குறைசொல்லி அந்த பெண்மணி பேச, “என் அப்பா, அம்மா என்னை எப்படி வளத்தாங்கன்னு எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும், கண்டவங்களுக்கும் நிரூபிக்கணும் ங்குற அவசியம் எனக்கு கிடையாது.” நறுக்குதெறித்தாற் போல் கோபத்தோடு பதில் சொன்னாள் ஷக்தி.

“ஷக்தி ப்ளீஸ்டா… பதிலுக்கு பதில் பேசினா, பிரச்சினை வளர்ந்துட்டே தான் போகுமேயொழிய ஒரு முடிவுக்கு வராது. ப்ளீஸ் அமைதியாயிரு.” மனைவியை சாந்தப்படுத்த முயற்சித்தான் விஸ்வா.

“என்னை மட்டும் அமைதியா இருக்க சொல்லுறீங்களே விஸ்வா… இப்போ இந்த பிரச்சினைவர நான் மட்டும் தான் காரணமா?” தன் அதிருப்தியை வெளியிட்டாள் ஷக்தி.

“நான் உங்கிட்ட மட்டும் தானே உரிமையா சொல்லமுடியும்.” கணவனின் இந்த வார்த்தையில் ஷக்தியின் கோபம் லேசாக குறைய,

“எனக்கு யார் மேலயும் கோபமோ, இல்லை அப்பான்னு கூப்பிட கூடாதுன்னு பிடிவாதமோ எல்லாம் கிடையாது விஸ்வா. உண்மையிலேயே என்னால அப்படி கூப்பிட முடியல. என் அப்பா தழிழரசுன்னு என் மனசுல ஆழமா பதிஞ்சாச்சு. இனி அதை அழிக்க முடியாது. அவரைத் தவிர யாரையும் என்னால, என் அப்பாவா ஏத்துக்கவும் முடியாது. அப்படி இருக்கும் போது, இவங்க தர்ற பொருட்களை மட்டும் என்னால எப்படி எடுத்துக்க முடியும்?”

கணவனிடம் தன் மனம் திறந்தவள், “என்னை உங்களுக்காவது புரியுது தானே விஸ்வா” என்றாள் பரிதாபமாக.

மகள், மருமகனிடம் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை ஒருவித வலியோடு உள்வாங்கி கொண்டிருந்த சௌந்தரிடம், “நல்லாயிருக்கே உங்க கதை. ஏதோ நீ கூப்பிட்டதும், நம்ம சௌந்தர் பொண்ணை பாத்துட்டு வந்துடலாம்னு நினைச்சு இங்க வந்ததுக்கு, இப்போ நானில்லை சண்டைக்காரியா ஆகிப்போனேன்” என்று அந்த பெண்மணி சிடுசிடுத்தார்.

“ஷக்தி சின்னபொண்ணு, அவ பேசுனதை எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க அத்தம்மா.” கெஞ்சல் தொனியில் அந்த பெண்மணியை சமாதானப்படுத்தினார் சௌந்தர்.

தன் அண்ணன் இன்னொரு நபரிடம் கெஞ்சுவதைப், பார்க்க பொறுக்காத மீனாட்சி, “ஷக்தி, நீ எவ்வளவு தான் என் அண்ணனைப் பார்த்து, உன் அப்பா இல்ல, இல்லன்னு கத்தினாலும், உன் உடம்புல ஓடுறது அவர் இரத்தம் தான். அதை இல்லன்னு சொல்லிட முடியுமா உன்னால?”

‘ஒருவார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்’ என்பதை மறந்து, ஏதோ ஒருவேகத்தில் ஷக்தியிடம் வார்த்தைகளை விட்டுவிட்டார் மீனாட்சி.

தங்கையின் வாதத்தில், பேச்சின் போக்கு எங்கேயோ திசைமாறி போவதை புரிந்து கொண்ட சௌந்தர், “மீனு… இது என்னம்மா பேச்சு?” என்று தங்கையை அதட்டினார்.

“ம்மா… இந்த விஷயத்துல ஷக்தி என்ன நினைக்குறான்னு எப்பவோ பேசிமுடிச்சிட்டா. திரும்பவும் நீங்க அதையே பேசிட்டு இருந்தா, நான் மறுபடியும் ஷக்தியை இங்க கூட்டிட்டு வர்றதைப் பத்தி யோசிக்க வேண்டியதா இருக்கும்.” விஸ்வா தன் பங்குக்கு பேசினான்.

தன் அத்தையின் வார்த்தைகள் மறுபடியும், மறுபடியும் காதுகளில் வந்து மோத, “ஓஹ்… அப்படி ஒரு விஷயம் இருக்கோ.” வேதனை நிறைந்த குரலில் முணுமுணுத்த ஷக்தியின் கண்களில், யாரோ, உபயோகப்படுத்தி விட்டு அங்கே விட்டுச் சென்றிருந்த கத்திரிக்கோல் விழுந்தது.

“கவலைப்படாதீங்க… அதுக்கும் இப்போ ஒருவழி பண்ணிடலாம்” என்று சொல்லிக்கொண்டே விரைவாக அதை கைப்பற்றியவள், தன் இடது கை மணிக்கட்டில் ஓங்கி குத்த முயன்றாள்.

 மனைவியின் பார்வையைத் தொடர்ந்த விஸ்வாவிற்கு, அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்பது நொடிப்பொழுதில் புரிந்துவிட, “என்ன பைத்தியக்காரத்தனம் செய்ய பாக்குற ஷக்தி?” என்று அதட்டியபடியே, அவள் கையிலிருந்த கத்தரிக்கோலை வேகமாக தட்டிவிட்டான். அது எட்டு குட்டிக்கரணம் அடித்து எகிறிப்போய் விழுந்தது.

ஷக்தியின் செயலில், நடப்பவற்றை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேருமே பதறிப் போனார்கள்.

மீனாட்சிக்கு கூட தன் பேச்சின் வீரியம் இப்போது புரிய, “எதுவுமே நான் ப்ளான் பண்ணி வேணும்னு பேசல ஷக்தி. என் வார்த்தை உன்னை காயப்படுத்தியிருந்தா, என்னை மன்னிச்சிடு” என்று சொல்லிவிட்டு ஓய்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.

சற்றுமுன் வீட்டிலிருந்த கோலாகலம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நொடியில் காணாமல் போக, அமைதியை பூசிக்கொண்டு நின்றது வீடு.

இப்போது சூழ்நிலையை கையிலெடுத்து கொண்ட கல்யாணி அம்மா, சௌந்தரிடம், “இந்த பொருட்களை விட, எனக்கு என் வீட்டு நிம்மதி தான் முக்கியம் சௌந்தர். அதனால நீ இதையெல்லாம்…” வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தார்.

“எனக்குமே ஷக்தியோட நிம்மதி தான் முக்கியம் அத்தம்மா. கண்டிப்பா இதையெல்லாம் நான் எடுத்துட்டு போயிடுறேன்.”

அமைதியாக சொல்லிய சௌந்தர் கிளம்ப முயன்றார். அவரைத் தடுத்த கல்யாணி அம்மா, “இது உன் தங்கையோட வீடு. அதை யாராலும் இல்லைன்னு சொல்ல முடியாது. அதனால உன் ஜனக்கட்டோட உக்கார்ந்து விருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்” என்று அழுத்திச் சொன்னார்.

கல்யாணி அம்மாவின் வார்த்தைகளை மறுத்துப் பேசி பழக்கமே இல்லாத சௌந்தர், மறுபேச்சில்லாமல் தன் உறவுகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார்…