அத்தியாயம் 17
வைல்ட் லைஃப் ஃபோட்டோ க்ராஃபிக்காக, விஸ்வா காட்டுக்குள் சென்று, இன்றோடு பதிமூன்று நாட்களாகிறது.
அன்று மனைவி அத்தனைச் சொல்லியும் அவளைச் சமாதானப்படுத்தி, தன் கனவு பயணத்திற்கு சென்றுவிட்டிருந்தான் விஸ்வா.
மொத்தம் பதினைந்து நாட்கள் என்று திட்டமிட்டிருந்த பிரயாணத்தில், அவனோடு அவன் நண்பன் சந்துருவும் இணைந்திருந்தான்.
இன்னும் இரண்டே நாட்கள். விஸ்வா வந்துவிடுவான். எண்ணமே இனிக்க, தனதறையின் பால்கனியில் உட்கார்ந்து தன் கையிலிருந்த ஃபோனை உற்று, உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷக்தி.
மணி, இரவு ஏழரையை நெருங்கியிருந்தும், அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அழைப்பு வராது போகவே,. “ம்ப்ச்… இங்க ஒருத்தி காத்திருப்பேங்குற நினைப்பில்லாம, இன்னும் என்னதான் பண்ணுறாங்க?” ஷக்தியின் உதடுகள் லேசாக முணுமுணுத்துக் கொண்டது.
விஸ்வா இங்கிருந்து கிளம்பிச் சென்ற நாளிலிருந்து, தினமும் இரவு ஏழரை மணிக்கு, தவறாது மனைவியை அலைபேசியில் அழைத்து விடுவான்.
இவளும் அந்த நேரத்திற்காகவே காத்திருந்தது போல கைபேசியில் பேச ஆரம்பிக்க, அவன் தன் பயண அனுபவங்களை எல்லாம் மனைவிக்கு சுவைபட சொல்லுவான்.
இன்றும், அதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் ஷக்திக்கு, காட்டுக்குப் போகப் போவதாக விஸ்வா சொல்லிய அன்று, தான் முத்தமெல்லாம் கொடுத்து, அவனை போக வேண்டாமென்று தடுத்ததும், அவன், “நீ என்ன செய்யுறன்னு, தெரிஞ்சு தான் செய்யுறியா?” என்று கேட்டதெல்லாம் நினைவிற்கு வர, புன்னகையில் இதழ்கள் விரிந்தது.
அதுமட்டுமா? அன்றிரவு ஏதோ ஒரு வேகத்தில், தான் கோடு தாண்ட முயன்ற போது, அவள் நோக்கம் புரிந்து, “ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே இந்த விஷயத்துல தலைகுப்புற விழுந்திருக்கும் போது, நான் சாதாரண விஸ்வா… அதுவும் உம்மேல டன்கணக்கா காதல் வச்சிருக்கிற விஸ்வா. என்னை சோதனைக்குள்ளாக்காத மை எனர்ஜி” என்று சிரிப்புடன், ஒரு முத்தத்தோடு கணவன் விலகிக் கொண்டது ஞாபகத்துக்கு வந்தது.
‘ஹையோ… லூசு மாதிரி, விஸ்வாவை காட்டுக்கு விடக்கூடாதுன்னு, என்னல்லாம் செய்திருக்கேன் நான்’ நினைத்துப் பார்க்கும் போதே வெட்கம் பிடுங்கித் தின்றது ஷக்தியை.
கூடவே, ‘ஏதாவது செய்தேனும் கணவனின் சாகசப் பயணத்தை தடுக்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கா, அவன்மீது பைத்தியமாக இருக்கிறேன் நான்?’ என்று, சுய அலசலில் ஈடுபட்டது ஷக்தியின் மனது.
முடிவில், கணவன் மீதிருந்த கோபம் எல்லாம் காலாவதியாகிப் போய் நாளாகியிருந்ததை, அவள் மனம் அவளுக்கு எடுத்துச்சொல்ல, விஸ்வாவை இப்போதே பார்க்க வேண்டும் என்று பெண் மனது அடம்பிடித்தது.
தன் சிந்தனையின் போக்கில், கணவன் தினமும் அழைக்கும் நேரம் கடந்து, மேலும் ஒருமணி நேரம் சென்றிருந்ததை கண்டவளுக்கு,’விஸ்வா இன்னுமா ஷெட்டுக்கு திரும்பல?’ என்ற யோசனை ஓடியது.
காலையில் எழுந்து காட்டுக்குள் செல்பவர்கள், சாயங்காலம் ஏழுமணி போலத்தான் தங்குமிடத்திற்கு திரும்புவார்கள். கைபேசியை உடனெடுத்து செல்லும் பழக்கம் இல்லாததால், விஸ்வா தான், மனைவிக்கு அழைத்து பேசுவான்.
கணவன் அழைத்துப் பேசும் நேரம் கடந்திருக்கவும், சிறிய பதட்டத்தோடு அவனுக்கு தானே அழைப்பெடுத்தாள் ஷக்தி. அணைக்கும் கரங்களின்றி, ஃபோன் கதறி ஓய்ந்தது.
கணவனிடமிருந்து பதில் வராது போகவே, உடம்பில் பதட்டம் உச்சகட்டத்தில் ஓட, மறுபடியும் அழைத்தாள் ஷக்தி. இப்போதும் பதிலில்லை. மறுபடி, மறுபடி ஷக்தி முயற்சி செய்ய, பலனென்னவோ பூஜ்யம் தான்.
பயத்தில் முகம் வெளிறி, என்ன செய்வதென்று தெரியாமல் பித்து பிடித்தது போலிருந்தவள், இரவு உணவிற்காக அழைக்க வந்த அன்னையைக் கட்டிக் கொண்டு கதறினாள். விஷயம் தெரிந்ததும் வீட்டில் உள்ளவர்களின் நெஞ்சிலும் திகில் பிடித்துக்கொண்டது.
இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், தைரியம் சொல்லி ஷக்தியைத் தேற்றும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர்.
முடியா இரவே விடியாப்பகலே என்று அந்த முழு இரவும் உறக்கமின்றி அந்த வீட்டிலுள்ளவர்கள் புலம்பிக் கொண்டிருக்க, மறுநாள் அதிகாலை ஆறுமணிக்கு போல் விஸ்வாவிடமிருந்து மனைவியின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்த ஷக்தி, மறுமுனையில் கேட்ட விஸ்வாவின் குரலில் வெடித்து அழுதாள். அவளைச் சமாதானப்படுத்த படாதபாடு பட்டுப்போனான் விஸ்வா.
“ஷெட்டுக்கு இப்போதான் வந்தீங்களா? ஏன் இவ்வளவு நேரம்?” தேம்பியபடியே ஷக்தி கேட்க,”காட்டுக்குள்ள வழியை மிஸ் பண்ணிட்டோம் டா. அதை கண்டுபிடிச்சு வெளிய வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிடிச்சு” என்று விஸ்வா சொன்னான்.
“இல்ல… வேற எதோ ரீஸன் இருக்கு, நீங்க எங்கிட்ட சொல்லமாட்டேங்குறீங்க” கணவனின் வார்த்தைகளை நம்ப மறுத்தாள் ஷக்தி.
மனைவியின் உள்ளுணர்வை மெச்சிக்கொண்ட விஸ்வா, உண்மையிலேயே காட்டில் நடந்திருந்தவற்றை மனைவியிடம் மறைக்கத்தான் செய்திருந்தான்.
இரண்டு மூன்று நாட்களாக ஒரு அபூர்வ பறவையின் நடமாட்டத்தை குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து பார்த்த நண்பர்கள், அதன் வசிப்பிடத்தை இன்று கண்டு கொண்டார்கள்.
அதன் கூடு, கூட்டிலிருந்த குஞ்சுகள், தாய்பறவை தன் குஞ்சை பராமரிக்கும் முறை என்று அத்தனையையும், பக்கத்து மரத்தில் ஏறி அமர்ந்து அங்குலம் அங்குலமாக படமெடுத்து கொண்டிருந்தவர்களுக்கு, நேரம் சென்றதே தெரியவில்லை.
பொதுவாக ஒரு வேலையை கஷ்பட்டு செய்யாமல் இஷ்டப்பட்டு செய்யும் போது, சுற்றம் மறப்பது இயல்பு தானே.
அந்த பறவையின் அத்தனை செயல்பாடுகளையும், காத்திருந்து திருப்தியாக படமெடுத்து முடிக்கும் போது, தாங்கள் ஷெட்டுக்கு திரும்பும் நேரத்தை தாண்டியும் இன்று காட்டுக்குள் இருப்பதை புரிந்து கொண்டவர்கள், தங்கள் கேமரா சகிதம் மரத்திலிருந்து இறங்க முற்பட்டார்கள். அப்போது, அங்கே ஒற்றை யானை ஒன்றின் வருகை நிகழ்ந்தது.
பொதுவாக கானகத்தில் அலையும் ஒற்றையானை மிகவும் அபாயகரமானது. எனவே அப்போது மரத்திலிருந்து இறங்குவது சரியான முடிவல்ல என்று மரத்திலேயே அவர்கள் இருந்துகொள்ள, யானையும் குட்டி போட்ட பூனை போல அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது.
போதாததற்கு, இவர்கள் உட்கார்ந்திருந்த மரத்திற்கு பக்கத்து மரத்தை வேரோடு பிடுங்கி, உண்டு இல்லை என்று வேறு செய்தது.
உயிரைக் கையில் பிடித்தபடி அதையும் தங்கள் கேமராவுக்குள் அடக்கிக்கொண்ட இருவரும், ஒருவழியாக யானை அங்கிருந்து நகரவும், வானத்தில் காய்ந்து கொண்டிருந்த பௌர்ணமி நிலவின் துணையோடு, ஷெட்டிற்கு வந்து சேர இவ்வளவு நேரமாகியிருந்தது.
‘மனைவி இருக்கும் மனநிலையில், இப்போது இதைச் சொன்னால், அவளின் பயம் எல்லையில்லாததாகப் போய்விடும்’ என்று நினைத்தே நடந்ததை மறைத்து, வேறு காரணத்தைச் சொன்னான் விஸ்வா.
“நீங்க அங்க குப்பை கொட்டுனது போதும். சீக்கிரம் கிளம்பி வாங்க” அவனின் காரணத்தை முழுதாக நம்பாத ஷக்தி அவனுக்கு கட்டளையிட்டாள்.
“ஹஹ… குப்பை கொட்டுறேனா? இதென்னடா விஸ்வா, உனக்கு வந்த சோதனை” என்று சிரித்த விஸ்வா,
“சங்ககால வீரதமிழச்சி எல்லாம், கணவன்மார்களுக்கு வீரத்திலகமிட்டு போர்களத்துக்கு போய்வான்னு அனுப்பி வச்சாங்களாம். நீ என்னடான்னா இந்த காட்டுக்கு என்னை அனுப்பி வைக்க இப்படி அழுவுறியே ம்மா” மனைவியின் மனநிலையை மாற்றவேண்டி கேலி செய்தான்.
“பரவாயில்ல, என்னை கோழைன்னே வச்சுக்கோங்க, நீங்க எப்போ வர்றீங்க?” எதையும் கண்டுகொள்ளாமல் தொடங்கிய இடத்துக்கே வந்து நின்றாள் ஷக்தி.
சிறிய சிரிப்போடு மனைவியின் கோபத்தை ரசித்தவன், “கொஞ்ச நேரம் தூங்கணும்” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டான்.
முறையான பதிலேதும் சொல்லாமல் ஃபோனை வைத்து விட்டவனின் மீது கோபம் கொப்பளித்தாலும், அவன் சொன்ன காரணத்தால் மறுபடியும் ஃபோன் செய்து அவனை தொந்தரவு செய்யவில்லை ஷக்தி.
நடந்த நிகழ்வுகளால் ஷக்திக்கு அன்று அலுவலகம் செல்ல விருப்பமின்றி போனது. தன் விடுமுறை குறித்து ஒரு மெயிலை அலுவலகத்திற்கு தட்டிவிட்டாள். கணவன் பாதுகாப்பாக இருக்கிறான் என்ற நினைப்பே, நேற்று முழு இரவும் கண்கள் தொலைத்திருந்த உறக்கத்தை கொண்டு வந்திருந்தது.
காலையில் படுத்தவள், மதிய உணவு நேரம் தாண்டி தான் கண்விழித்தாள். ஒரு குளியல் போட்டு தன் புத்துணர்ச்சியை மீட்டுக் கொண்டவள், அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே சஞ்சீவும், கால்நீட்டி சோஃபாவில் ஓய்வாக உட்கார்ந்திருந்தான்.
“டேய்… நீ ஸ்கூலுக்கு போகலையா?” ஆச்சர்யமாக கேட்டாள் ஷக்தி.
“நைட் முழுசும் அழுது, அழுது எங்களையும் தூங்கவிடாம பண்ணிட்டு, இப்போ கேள்வியைப் பாரு?” சஞ்சீவ் கிண்டலடித்தான்.
“மாமாவை விட தூக்கம் உனக்கு ரொம்ப முக்கியமோ? இருடா… விஸ்வா வரட்டும், உன் அருமை மச்சான், உன்னைவிட தூக்கம் தான் முக்கியம்னு சொன்னான்னு போட்டு கொடுக்கிறேன்” நொடியில் நாரதராக மாறிய ஷக்தி, சஞ்சீவை பயமுறுத்தினாள்.
“உன் முயற்சி வெற்றியடைய, ஆல் தி பெஸ்ட் ஷக்தி.”
கிண்டலாகச் சொல்லிய இளையவன், “இப்படித்தான் ஏதாவது நடந்திருக்கும்ன்னு எனக்கு ஒரு கெஸ்ஸிங் இருந்தது. நீதான் அழுது எல்லாரையும் டென்ஷன் பண்ணிட்ட” என்று சொல்லி சிரித்தான்.
“என்னோட பயம் உனக்கு கிண்டலா தெரியுதா டா?”
“அப்படி இல்லை ஷக்தி. இந்த புரொஃபெஷன்ல ரிஸ்க் எல்லாத்தையும், ரஸ்க் சாப்பிடுற மாதிரி ஈஸியா எடுத்துக்கணும். அப்போ தான் ஃபேமஸ் ஆகமுடியும். அதனால, நீ அழுது சும்மா மாமாவை டென்ஷனாக்காத. பி ப்ரேவ் ஷக்தி” என்று, பெரிய மனிதனாய் ஷக்திக்கு அறிவுரையும் சொன்னான்.
“நண்டுசிண்டு எல்லாம் எனக்கு அறிவுரை சொல்லுது. எல்லாம் என் நேரம் டா” என்று அலுத்துக் கொண்ட ஷக்திக்கு, சிலநாட்களுக்கு முன்னர் கூட, சகமாணவர்களிடம் பய உணர்வோடு இருந்த தம்பியின் இந்த தைரியமான மனநிலை ஆச்சர்யத்தை தந்தது.
‘எல்லாம் சகவாசதோஷம். அந்த மனுஷர் கூடவே வால்பிடிச்சிட்டு அலைஞ்சா, அவரோட குணம் வரத்தானே செய்யும்’ அலுத்துக் கொண்டது போல கணவனை மெச்சிக்கொள்ளவும் செய்தாள்.
அன்றிரவு, சரியாக ஏழு மணிக்கு மனைவியை அழைத்த விஸ்வா, “கிளம்பியாச்சா? எப்போ வருவீங்க?” என்று மனைவி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் சொல்லாமல், வேறு ஏதேதோ பேசினான்.
‘கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லுறாங்களா? எப்படின்னாலும், நாளைக்கு எங்கிட்ட வந்துதானே ஆகணும், அப்போ இந்த ஷக்தி யாருன்னு காமிக்குறேன்’ என்று உள்ளுக்குள் சபதமெடுக்காத குறையாக ஷக்தி நினைத்துக் கொண்டாள்.
இரவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உண்டு முடித்து, நேற்று நடந்தவற்றைப் பற்றி பேசி, எந்த சூழ்நிலையிலும் பதட்டம் கொள்ளக்கூடாது என்று ஷக்திக்கு அறிவுரை கூறி, ஒரு பத்து மணிக்கு போல தூங்குவதற்காக கலைந்து சென்றார்கள். ஷக்தியும் தங்களறையில் வந்து படுத்துக் கொண்டாள்.
பகலில் தூங்கியதாலோ, இல்லை மனம் முழுவதும் கணவனே நிறைந்து நின்று கண்ணாமூச்சி ஆடியதாலோ என்னவோ, தூக்கம் ஷக்தியை விட்டு தொலைவில் போய் நின்றது.
படுக்கையில், புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் போகவே, கணவனின் தலையணையில் தலைவைத்து படுத்தாள். அது, தன் தலைவனின் மடியிலேயே சாய்ந்தது போல ஒரு உணர்வைத் தந்தது.