விஸ்வா சென்னையில் ஃபோட்டோகிராபி படிக்கும் போது உடன்படித்த நண்பன் தான் சந்த்ரு. அவனுமே சென்னையில் பெரிய அளவில் ஸ்டுடியோ வைத்து, தொழில் செய்து கொண்டிருக்கிறான்.

இந்த நண்பன் கல்யாணத்துக்கு தான், ஃபோட்டோ எடுத்து கொடுப்பதற்காக விஸ்வா ஆரம்பத்தில் சென்னைக்கு வந்தது. விஸ்வாவின் திருமணத்தன்று புகைப்படக் கலைஞனாக நின்றதும் இதே நண்பன் தான். எனவே விஸ்வாவின் திருமணத்தில் நடந்த குளறுபடிகள் எல்லாம் சந்த்ருவுக்கும் தெரியும்.

தன்னைக் கண்டதும் ஆர்ப்பாட்டமாக வரவேற்ற நண்பனிடம், தான் இன்று எடுத்த முடிவைக் கூறி, “இனி கொஞ்சநாள் உங்கூட வேலை பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றும் விஸ்வா சொல்ல, சந்தோஷமாக அரவணைத்துக் கொண்டான் தோழன்.

அங்கிருந்து விடைபெற்று கொண்டவன் வீட்டுக்கு வரும்போது கிட்டத்தட்ட ஏழரை மணி ஆகிவிட்டிருந்தது.

காரை, பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்துவிட்டு, துணி இருந்த பைகளோடு, ஷக்தியின் வீட்டுக்குள் நுழைந்தான் விஸ்வா.

“வாங்க விஸ்வா, ஆளைக் காணோமே ஃபோன் பண்ணி பாக்கலாமான்னு இப்போ தான் நினச்சேன், நீங்களே வந்துட்டீங்க” என்றார் தமிழரசு.

அப்பா, அம்மாவை ஊருக்கு அனுப்பி வைத்தது முதல், ஃப்ரெண்ட்டை பார்க்க போனது வரை எல்லாவற்றையும் சொல்லியவன், கலையின் கையில் அவர்களுக்கு எடுத்திருந்த துணிமணிகளைக் கொடுத்தான். ஷக்திக்கு எடுத்ததை தன்கையிலேயே வைத்துக் கொண்டான்.

“எதுக்கு தம்பி இதெல்லாம்?” என்று கேட்டாலும், சின்ன சிரிப்போடு வாங்கிக்கொண்டார் கலைவாணி.

“ரொம்ப நேரமாகிடிச்சி, அந்த ரூம்ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரீங்களா? சாப்பிடலாம்” என்று ஷக்தியின் அறையை நோக்கி கையை நீட்டினார் தமிழரசு.

‘ஹாலில் இல்லாத ஷக்தி, ஒருவேளை அந்த அறையில் இருப்பாளோ’ என்ற எண்ணத்தில் உல்லாசமாக அறையினுள் நுழைந்தான் விஸ்வா.

அறையினுள் நுழைந்தவனின் கண்கள், மனைவியை அங்குலம் அங்குலமாக தேடி, சோர்ந்து போனது. அவள் தான் தம்பியின் அறையிலிருந்து வெளியே வரவேயில்லையே.

ஷக்தியை சமாதானப்படுத்துவது ஒரு சவால் தான் என்று புரிந்து கொண்ட விஷ்வா, அங்கிருந்த கபோர்டுக்கு அருகில் சென்று, அதை திறந்தான். அங்கே, நேர்த்தியாக ஷக்தியின் உடைகள் அடுக்கப்பட்டிருந்தது.

“ஓஹ்… அப்போ கண்டிப்பா இங்க தான் என்னோட ட்ரெஸை அடுக்கணும்.’ நினைத்துக் கொண்டவன் வேண்டுமென்றே ஷக்தியின் உடைகளுக்கு மேல் தனக்கு வாங்கியிருந்த உடைகளை வைத்து, அதை ஒரு நிமிடம் நின்று ரசிக்கவும் செய்தான்.

‘ம்ம்… ட்ரெஸ்ஸை இப்படி பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு. இதே மாதிரி, இந்த ட்ரெஸ்ஸைப் போடுற நாங்களும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்தா எப்படி இருக்கும்?’ மனம் தன் கற்பனைச் சிறகை விரித்தது.

‘ஆனாலும் உனக்கு பேராசை கொஞ்சம் அதிகம் தான் விஸ்வா. அம்மணி, உனக்கும் உன் திங்ஸ்ஸுக்கும், முதல்ல இங்க இடம் தர்றாளான்னு பாரு.’ மறுபடியும் அவன் மனசாட்சி தான் கிடந்து குதித்தது.

‘என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.’ மனதை தைரியப்படுத்தி கொண்டவன், பாத்ரூம் சென்று ஒரு குளியலைப் போட்டு, டி சர்ட், ட்ராக் பாண்ட் அணிந்து வெளியே வந்தான்.

 ஷக்தி உட்பட, குடும்பத்தில் உள்ள அனைவரும் இவனுக்காக டைனிங் டேபிளின் முன் காத்துக் கொண்டிருந்தனர்.

இவனைக் கண்டதும், ஒரு புன்னகையோடு வரவேற்று அமரச் செய்தார் கலைவாணி.

ஷக்திக்கு பக்கத்தில் கிடந்த நாற்காலியில், சஞ்சீவ் சட்டமாக அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்தான் விஸ்வா.

அமர்ந்தவன், தனக்கெதிரே இருந்த ஷக்தியை பார்வையிட, முகமும் கண்களும் அதிகப்படியாக சிவந்து, தகதகவென தக்காளிப் பழம் போல இருந்தாள்.

‘அந்த அளவுக்கா என் வருகை அவளை கோபப் படுத்தியிருக்கிறது?’ நொடியில் மனம் சோர்ந்து போனது விஸ்வாவுக்கு.

அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், இயல்பாக இருந்தவனின் கண்கள், டைனிங் டேபிளில் ஒன்றோடொன்று கோர்த்தாற்போல் வைத்திருந்த ஷக்தியின் கைகளின் மீது பதிய, “ஹேய் ஷக்தி… விரல்ல என்னது?” என்றான் அதிர்ச்சியான குரலில்.

விஸ்வாவின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல், தேமே என்று ஷக்தி உட்கார்ந்திருந்தாள். “என்ன? என்னாச்சு?” என்று மற்றவர்கள் பதறினார்கள்.

“ஷக்தியோட, கைவிரலைப் பாருங்க, ஏதோ பபிள்ஸ் மாதிரி தெரியுதுல்ல?”

 விஸ்வா சொல்லவும், பேத்தியின் கைகளைப் பிடித்து பரிசோதித்த பஞ்சவர்ணம், சில நொடிகள் யோசனைக்கு பிறகு, “ஆமா… ஷக்திக்கு முத்து போட்டுருக்கு” என்றார் சோர்வாக.

 ஆம்… ஷக்தியின் விரல்களில், கைகளில் என்று இருந்த ஒன்றிரண்டு முத்துக்கள், தன் வருகையை அவருக்கு உறுதிபடுத்தியது.

‘ஓ… சிக்கன் பாக்ஸ்ஸா? அதனால தான் முகம் கண்ணெல்லாம் சிவந்திருக்கோ அம்மணிக்கு?’ யோசித்த விஸ்வா, சட்டென்று ஷக்தியின் நெற்றியில் தன் கை வைத்து, அவளின் உடல்சூடை கணிக்க முயன்றான். வேகமாக அவன் கையை தட்டிவிட்ட ஷக்தி, அவனைப் பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பையும் சிரித்து வைத்தாள்.

அங்கு மாறியிருந்த சூழ்நிலையில், ஷக்தியின் செயல் எதுவும் மற்றவர்களின் கண்களையோ, கருத்தையோ எட்டவில்லை.

ஆம்… பெண்ணவளின் உடல்நிலையை முன்னிட்டு, சட்டென்று அங்கே ஒரு இறுக்கம் குடிகொண்டது போல இருந்தது. சாப்பிட வந்தவர்கள், வந்த வேலையை மறந்து ஷக்தியை தாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

பஞ்சவர்ணம் வேப்பிலை வேண்டுமென்று மகனிடம் சொல்ல, “இதோ, இப்ப கொண்டு வந்துடுறேன் ம்மா” என்று கிளம்பிய தமிழரசோடு விஸ்வாவும் சேர்ந்து கொண்டான்.

ஒரு பதினைந்து நிமிட இடைவெளியில் கையில் அள்ளமுடியாத அளவுக்கு வேப்பிலையோடு நுழைந்தார்கள் இருவரும்.

அதற்கிடையில் ஷக்தியை, தானும், பேரனுமாக உபயோகப்படுத்தும் அறைக்கு அழைத்து சென்றிருந்தார் பஞ்சவர்ணம்.

 “வேப்பிலை எங்கங்க கிடைச்சுது? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?” கணவனிடமிருந்து வேப்பிலையை வாங்கியபடியே கேட்டார் கலைவாணி.

“நம்ம சொசைட்டி காம்பவுண்ட்குள்ள, ஒரு மரம் நிக்குதுல்ல கலை, அதுலயிருந்து தான் கொண்டுவந்தோம்” என்றார் தமிழரசு.

“அது ரொம்ப வளத்தியான மரமாச்சே ங்க, எப்படி உங்களால முடிஞ்சது?” ஆச்சர்யத்தில் விழிகளை விரித்தார் கலைவாணி.

“அது, விஸ்வா தான் மரத்துல ஏறி பறிச்சு கொடுத்தார். நான் ஏற வேண்டாம்னு தான் சொன்னேன், அவர்தான், சின்ன வயசுல, ஊர்ல மரம் ஏறி பழக்கம் தான்னு சொன்னார்.” தகவல் சொன்னார் தமிழரசு.

 தமிழரசு பேச, புன்னகையோடு அருகில் நின்றிருந்த விஸ்வாவிடம் திரும்பிய கலைவாணி, “தம்பி, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதை நீங்க தப்பா புரிஞ்சிக்க கூடாது” என்று இழுத்தார்.

“சொல்லுங்க ஆன்டி” என்றான் விஸ்வா.

“அது, சிக்கன் பாக்ஸ் ஒட்டுவாரொட்டி. அதாவது வீட்ல ஒருத்தருக்கு வந்தா, எல்லாருக்குமே வர்றதுக்கு சான்ஸஸ் இருக்கு, அதனால…”

அதற்குமேல் சொல்லமுடியாமல் திணறிய கலை, “அதனால கொஞ்ச நாள், ஷக்திக்கு சரியாகுற வரைக்கும், உங்க வீட்டுக்கு போய்ட்டு வர்றீங்களா?” என்று மெதுவாக கேட்டார்.

“ஷக்திகிட்டயிருந்து உங்களுக்கு ஒட்டிக்கும்னு, நீங்க எல்லாரும் அவளை தனியா விட்டுட்டு எங்கயும் போகப் போறீங்களா ஆன்டி?”

“இல்லையேப்பா.”

“அப்போ, நான் மட்டும் போவேன்னு எப்படி நினச்சீங்க ஆன்டி?” அமைதியாக விஸ்வா கேட்க, உண்மையிலேயே ஒரு தாயாக, நிறைவாக உணர்ந்தார் கலைவாணி.

“சாரி தம்பி, இனி இந்த மாதிரி முட்டாள்தனமான கேள்வி உங்ககிட்ட கேக்கமாட்டேன், ஓகேயா?” என்றவர் வேப்பிலையோடு ஷக்தியின் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

அதன் பிறகு ஒரு டாக்டரிடம் ஷக்திக்கு கன்சல்ட் செய்து, மருந்துகள் வாங்கி, சாப்பிட்டு முடித்து, என்று படுப்பதற்கு நேரம் பத்தாகிப்போனது.

தனது உடைகளை வைத்திருக்கும் மனைவியின் அறைக்கே தூங்குவதற்காக, விஸ்வா சென்றான்.

“சஞ்சீவ், நீயும் மாமா கூட அந்த ரூம்லயே போய் தூங்கு. ஷக்தி சரியாகுற வரைக்கும் இந்த ரூம்ல தான் இருப்பா” என்று பஞ்சவர்ணம் சொல்ல, வேறுவழியில்லாமல், விஸ்வாவின் பின்னோடு ஷக்தியின் அறைக்குள் நுழைந்தான் சஞ்சீவ்.

விஸ்வா இங்கு வந்த நேரத்திலிருந்து, சஞ்சீவ், விஸ்வாவை, முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தான், விஸ்வாவோடு அவனை கோர்த்து விட்டிருக்கிறார் பஞ்சவர்ணம்.

“ஹ்ம்ம்… என் நேரம், எனக்கு பிடிக்காதவங்க கூட எல்லாம் ரூமை ஷேர் பண்ணவேண்டியதா இருக்கு.” முணுமுணுக்கிறேன் பேர்வழி என்று சத்தமாகவே சொன்னான் சஞ்சீவ்.

‘பொண்டாட்டி கூட இராத்திரி தூங்கலாம்னு கனவோட இருந்தா, இப்படி மச்சினன் கூட தூங்கவேண்டிய நிலமை வந்திடிச்சி பாரு. எல்லாம் என் நேரம் டா.’ சஞ்சீவுக்கு இணையாக மனதிற்குள் அலுத்துக் கொண்டான் விஸ்வா.

“எனக்கு பெட்டை யார் கூடவும் ஷேர் பண்ணுறது பிடிக்காதுன்னு தெரியாதா, இந்த அப்பத்தாவுக்கு?” மறுபடியும் முணுமுணுத்துக் கொண்ட சஞ்சீவ், அந்த பெரிய மெத்தையின் நடுவே பில்லோக்களை வரிசையாக அடுக்க ஆரம்பிக்க, தன்னை மீறி சத்தம்போட்டு சிரிக்க ஆரம்பித்தான் விஸ்வா.

“ஏன் சிரிக்குறீங்க?” விஸ்வாவின் சிரிப்பு சீண்டிவிட, கொஞ்சம் கோபமாக கேட்டான் சஞ்சீவ்.

‘உன் அக்கா என்னோடு ஒரே அறையில் தங்கி இப்படி செய்யவேண்டியதை எல்லாம், சில்வண்டு நீ செய்யுறியேடா’ என்று, தான் நினைத்ததை சொல்லாமல்,

“இது யாரோட ரூம்?” என்றான் விஸ்வா.

“ஷக்தியோடது.” ஒரு முறைப்போடே பதில் வந்தது இளையவனிடமிருந்து.

“இந்த பெட் யாரோடது?”

“அதுவும் ஷக்தியோடது தான்.”

“அப்போ, எதுக்கு உன்னோட பெட்டை ஷேர் பண்ணுற மாதிரி, ரொம்ப ஸீன் போடுற மேன். நியாயமா என் வைஃப் பெட்ல நீ படுக்கக் கூடாதுன்னு, நான் தான் உன்னை தூக்கி கீழ போடணும். எப்படி வசதி? தூக்கி கீழ போடட்டுமா?”

கேட்டுக்கொண்டே அவனை தூக்குவது போல விஸ்வா ஆக்ஷன் காட்ட, ‘எங்கே தூக்கி கீழே போட்டு விடுவானோ?’ என்ற பயத்தில், “இல்ல வேணாம்…’ என்றான் சஞ்சீவ் அவசரமாக.

“ம்ம்… இந்த பயம் இருக்கணும்.” மெல்லிய சிரிப்போடு தலையணைக்கு இந்த பக்கமாக கட்டிலில் சாய்ந்து கண்களை மூடினான் விஸ்வா.

மூடிய கண்களுக்குள் ஷக்தி தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தகாட்சி வந்து நின்றது.

‘பின்ன, என் ஐடியா இப்படி சொதப்பினா சிரிக்கமாட்டாளா, என்ன?’ தனக்குள்ளே சிரித்துக் கொண்டவனுக்கு, கடவுள் தன்னுடைய வாழ்க்கையில் அளவுக்கு மீறி விளையாடுவதாகவே தோன்றியது.

‘இல்லையென்றால், சுமுகமாக முடிந்திருக்க வேண்டிய திருமணம் தான், கலவரமாகிப் போயிருக்குமா? இல்லை, திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக இன்று மனைவியோடு தனித்திருக்க போகிறோம் என்று ஆனந்த கூத்தாடிக் கொண்டிருந்தவனின் ஆசைகள் தான், இப்படி சடுதியில் தலைகீழாகிப் போயிருக்குமா?’

மனதளவில் கொஞ்சம் சோர்ந்து போன விஸ்வாவின் மீது டொம்மென்று ஏதோ விழுந்தது. திகைத்து போய் பார்த்தவனின் இதழ்கள் அடக்கமுடியாத சிரிப்பால் விரிந்தது.

பெரிய மனிதன் போல வியாக்கியானம் செய்த சஞ்சீவ், இன்னும் நான் சிறுவன் தான் என்று நிரூபிக்கும் வண்ணம் விஸ்வாவின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு, ஒய்யாரமாக தூங்கிக் கொண்டிருந்தான்.

“மவனே, என்ன வாய் பேசுனடா நீயி? நாளைக்கு விடியட்டும், உனக்கு வச்சிருக்கேன் டா.” உற்சாகமாக முணுமுணுத்தது விஸ்வாவின் உதடுகள்.