விஸ்வாவின் வார்த்தைகளில், ஒரு நொடி கண்கள் மின்ன அவனைப் பார்த்தாள் ஷக்தி. மறுநொடியே, அது பொய்யோ என்னும் விதமாக முகத்தில் அப்பட்டமாக கோபத்தை காட்டினாளென்றால், அங்கிருந்த இருவரின் பெற்றோருமே சமமான அளவில் அதிர்ந்து போனார்கள்.
சம்பிரதாயங்களையும், பழக்கவழக்கங்களையும், பெரிதாக மதிக்கும் விஸ்வாவின் அப்பத்தாவுக்கு, பேரன் அவசரப்பட்டு மருத்துவமனையில் வைத்து திருமணத்தை முடித்து கொண்டதில், அவன் மீது கரைகாணாத கோபம்.
“அது என்ன அதிகப்பிரசங்கித்தனம்? அன்னைக்கு இல்லைன்னா, இன்னொரு நாள் திருமணத்தை முறையா முடிச்சிருக்கலாமே? அதை விட்டுட்டு ஹாஸ்பிடல்ல வச்சு யாராவது இப்படி செய்வாங்களா?” என்று மண்டகப்படி கூட அவரிடமிருந்து பேரனுக்கு கிடைத்திருந்தது.
இப்போதும் அவரே தான், “தாலி முடிந்து மாசக்கணக்கா ஆகியாச்சு. இன்னும் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வராமல், என்ன செய்யுறீங்க?” என்று மருமகளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தார்.
ஏற்கனவே இவர்களுக்கும், ஷக்தியை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கவே, இனியும் தாமதிக்க கூடாது என்று கிளம்பி வந்துவிட்டார்கள்.
அதேநேரம், தாங்கள் நினைத்துவந்த காரியம் எளிதில் நடந்துவிடும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கில்லை.
சொல்லப்போனால், ‘விஷயம் தெரிந்ததும் இப்படி ஒரு பதில்தான் ஷக்தியிடமிருந்து வரும்’ என்று, எதிர்பார்த்து தான் வந்திருந்தார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பாராதது மகனின் இந்த முடிவு. உண்மையிலேயே, மகனின் இந்த முடிவில் கணவரை விட மீனாட்சி கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்.
‘இதென்ன பட்டென்று இந்த பையன் இப்படி ஒரு முடிவைச் சொல்லிவிட்டான்? இவன் மட்டுமே முடிவெடுக்க கூடிய விஷயமா இது?’ என்று தான் தோன்றியது அவருக்கு.
ஆனால், தான் நினைத்ததை உடனே வாய் வார்த்தையாக சொல்லிவிடும் சூழ்நிலையும் அங்கே இல்லையே.
‘ஏற்கனவே தன்மீது ஷக்தி கோபத்தில் இருக்கும் போது, தன் எண்ணத்தை வெளியே சொன்னால் தன்னை எள்ளி நகையாடுவதற்கு, தானே அவளுக்கு சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது போலாகிவிடுமே’ என்று அமைதியாக இருந்த மீனாட்சி, ஏதாவது செய்யுங்களேன் என்பது போல கணவரைப் பார்த்தார்.
அவரும், மனைவியின் மனதில் இருந்ததை படித்தவர் போல, “என்ன விஸ்வா? யோசிக்காம இப்படி சொல்லிட்ட? இது சரியா வருமா?” என்றார்.
“இல்ல… அப்பத்தா, இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்குறாங்களோ தெரியலையே? அதான் யோசனையா இருக்கு.”
“அப்பத்தா நினைக்குறது இருக்கட்டும், நீங்க என்ன நினைக்குறீங்க ப்பா?”
அங்கு இருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் தந்தை, மகனின் உரையாடல் நீண்டது. அவர்கள் பேசிக்கொண்ட விதத்திலேயே, இந்த முடிவு திட்டமிட்ட ஒன்றல்ல என்று தெளிவாக புரிந்தது தமிழரசு தம்பதியருக்கு.
‘முதலில் அவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும், அதன் பிறகு நாம் பேசிக் கொள்ளலாம்’ என்பது போல, அவர்களின் பேச்சில் குறுக்கிடாமல், அமைதியாக பார்த்து கொண்டு நின்றிருந்தார்கள்.
மகனின் கிடுக்கிப்பிடி கேள்வியில், “உன்னோட விருப்பம் இதுவாயிருந்தா, நான் என்ன சொல்லமுடியும் விஸ்வா? இருந்தாலும், எனக்கென்னவோ இது சரியா வருமான்னு யோசனையாவே இருக்கு?” ஒளிவு மறைவின்றி தன் எண்ணத்தை சொன்னார் சதாசிவம்.
எந்த பெற்றோருக்கு தான், தன் மகன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கப் போகிறேன் என்று சொல்லுவது பிடிக்கும். அதைக்கொண்டே அவருக்கும் இந்த தயக்கம்.
“ப்பா… எங்க வாழ்க்கையைச் சிக்கலாக்கிகிட்டது நான். சோ, அதை சரிபண்ணுற ரெஸ்பான்ஸிபிளிட்டியும் எனக்கு தான் அதிகம் இருக்கு. அதனால விட்டுக் கொடுத்து இறங்கிப்போற மொதஆள் நானாவே இருந்துட்டு போறனே.” தகப்பனின் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு மென்மையாக கூறினான் விஸ்வா.
மகனின் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிய, சரி என்பது போல தலையசைத்தார் சதாசிவம்.
“தேங்ஸ் ப்பா, என்னை புரிஞ்சுகிட்டதுக்கு” என்றவன், “ம்மா… நீங்க ஒன்னும் சொல்லலையே” என்று அன்னையிடம் கேட்டான்.
மனப்பூர்வமாக விருப்பம் இல்லாவிட்டாலும், கணவர் சம்மதிக்கவும் வேறு வழியில்லாமல், “உன்னிஷ்டம் விஸ்வா” என்றார் மீனாட்சி.
அவருக்கும் ஒரு நன்றியைச் சொல்லியவன், “அங்கிள், என்னோட இந்த முடிவுல, உங்களுக்கு அப்ஜக்ஷன் ஏதும் இல்லையே?” என்று, தமிழரசுவிடமும் கேட்டான்.
‘விஸ்வாவின் முடிவை, அவனுடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று அமைதியாக நின்றிருந்த ஷக்தியின் நம்பிக்கையை, அவர்களின் சம்மதம் தூள் தூளாக்கியது.
ஏனோ விஸ்வா எல்லோரையும் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்டுவிப்பது போல அவளுக்கு தோன்றியது.
இதற்கு மேலும் இவனை இங்கே விட்டுவைத்தால் சரிவராது என்றெண்ணி, “அதென்ன, சம்மந்தப்பட்ட என்னை விட்டுட்டு, யார் யார்கிட்டயோ யோசனைக் கேக்குறீங்க? மொதல்ல எங்கிட்ட கேக்கணும் நீங்க” என்று விஸ்வாவிடம் சண்டைக்கு வந்தவள்,
இவ்வளவு நேரமும் நடந்தவற்றை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தமிழரசு, “யோசிக்காம இஷ்டத்துக்கு பேசாத ஷக்தி” என்று மகளை அதட்டினார்.
“ப்பா… திரும்பத் திரும்ப நாடகம் போடுறாங்க ப்பா. இவங்களுக்காகவா, எம்மேல கோபப்படுறீங்க?” லேசான அதிர்ச்சியோடு கேட்டாள் ஷக்தி.
“அப்பா மேல நம்பிக்கை இருந்தா, கொஞ்சம் அமைதியா இரு ஷக்தி” என்றார் தமிழரசு.
தந்தையின் சொல் மிக்க மந்திரம் தான் உண்டா, என்ன ஷக்திக்கு? முகம் முழுவதும் கோபத்தை வெளிப்படையாக காட்டிக்கொண்டு, தம்பியின் அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஷக்தி.
“பிரச்சினையை சால்வ் பண்ணனும் ங்குறதுக்காக நீங்க இவ்வளவு தூரம் இறங்கி வர்றேன்னு சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம் தம்பி. ஆனா ப்ராக்டிக்கலா யோசிச்சா, உங்க அப்பா சொன்னது போல, இது சரிவராது.”
“எங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுங்க, எப்படியாவது ஷக்தியை கன்வின்ஸ் செய்து, உங்க வீட்ல கொண்டு வந்து விட்டுடுறோம்” என்று தமிழரசு, விஸ்வாவிடம் சொன்னார்.
“அது இந்த ஜென்மத்துல நடக்காது ப்பா.” ஷக்தி இருந்த அறையினுளிருந்து வேகமாக வந்தது சத்தம்.
“அவ சின்ன பொண்ணு, நடந்த எல்லாத்தையும் டைஜஸ்ட் பண்ண, இன்னும் கொஞ்ச நாள் அவளுக்கு குடுப்போமே, பிளீஸ்…” மகளை யாரும் தவறாக நினைத்து விடக்கூடாது என்று அவசரமாக சொன்னார் தமிழரசு.
“ஏன் அங்கிள், நான் இங்க தங்குறதுல உங்களுக்கு இஷ்டமில்லையா?” தமிழரசுவின் கண்களைப் பார்த்து நேரடியாகவே கேட்டான் விஸ்வா.
“ஐயையோ, அப்படி எல்லாம் ஒன்னுமில்லை தம்பி. ஆனா…” எதுவும் சொல்ல முடியாமல் தமிழரசு மென்று முழுங்கினார்.
“ஏன் அரசு? தம்பியே, நம்ம வீட்டுல தங்குறேன்னு சொல்லுது. பளிச்சுன்னு சம்மதம் சொல்லாம, என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கிற நீ? உனக்கு என்ன தான் டா ஆச்சு?” என்று அலுத்துக் கொண்ட பஞ்சவர்ணம்,
விஸ்வாவைப் பார்த்து, “நீ இப்படி ஒரு முடிவெடுத்ததுக்கு ரொம்ப சந்தோஷம் ப்பா. எம்பையனுக்கு ஏதோ குழப்பம் போல, அதான் இப்படி தயங்குறான். நீ தப்பா நினைச்சுக்காத, கண்டிப்பா எங்களோட நீ இங்கயே தங்கிக்கோ. அப்படியாவது, எம்பேத்தி கோபம் குறையுதான்னு பார்ப்போம்” என்றார் வீட்டின் பெரிய மனுஷியாக.
தாயின் முடிவை மறுத்து அதன்பிறகு தமிழரசு எதுவுமே பேசவில்லை. கலைவாணிக்குமே இனி எல்லாம் சரியாகிவிடும் என்று மகிழ்ச்சியே.
ஆனால், அதே வீட்டில் விஸ்வாவின் வருகையை விரும்பாத இன்னொரு ஜீவனும் இருக்கத்தான் செய்தது. அது சஞ்சீவ். தன் சகோதரியை அழவைக்கும் விஸ்வாவை அவனுக்கு பிடிக்கவேயில்லை. ஆகவே விஸ்வாவின் முடிவும் பிடிக்கவில்லை.
கலைவாணி, தன் மகிழ்ச்சியை சமையைலில் காட்டினார். ஆம்… தடபுடலாக மதியம் ஒரு விருந்தே தயார் செய்து விட்டார் கலைவாணி.
எவ்வளவு மறுத்தும், விஸ்வாவின் பெற்றோர் சாப்பிட்ட பிறகே கிளம்ப சம்மதித்தார்கள் தமிழரசு தம்பதியர். அவர்கள் வீட்டுக்கு கிளம்பும் நேரம் பஞ்சவர்ணம் தன் பேத்தியை அழைக்க, அறையை விட்டு வெளியே வரவேயில்லை ஷக்தி.
ஷக்தியின் செயலில் மனம் வாடிப் போனாலும், “பரவாயில்லை ம்மா, எல்லாம் இன்னைக்கே மாறிடணும்னு நாம நினைக்கிறது தப்பு. ஷக்தியை கம்பெல் பண்ணாதீங்க. அப்புறம் எங்க மேல இன்னும் கொஞ்சம் வெறுப்பு தான் அதிகரிக்கும்” என்று மீனாட்சி சொல்ல, ஒத்துக்கொண்டு அவர்களே வழியனுப்பி வைத்தார்கள்.
பெற்றோரை அனுப்பி வைத்துவிட்டு வருவதாகக் கூறி, அவர்களோடு வெளியே வந்த விஸ்வா, “வரும்போது நான் ட்ரைவ் பண்ணுனேன். இப்போ நானில்லை, உங்களால அவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ணமுடியுமா ப்பா?” என்று சந்தேகமாக கேட்டான்.
“என்னை, என்னடா நினைச்சுகிட்ட? நான் அந்த காலத்து மிலிட்டரி ஆளு, எங்கிட்ட போய் இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு என்னை அசிங்கப்படுத்துடுற.”
வீராப்பாக சொல்லிய சதாசிவம், “ஆனா, நாங்க இப்போ ஃப்ளைட்ல தான் போகப்போறோம். எங்களை ஏர்போர்ட்ல மட்டும் கொண்டு விட்டுட்டு, வண்டியை நீயே யூஸ் பண்ணிக்க” என்றும் சொன்னார்.
“சூப்பர் ப்பா, மகன் தனியே வாழவந்ததும், அவனுக்கு சீதனமா காரெல்லாம் உடனே குடுக்குற உங்க பெரிய மனசை நான் பாராட்டுறேன். ஆனா இந்த சென்னை ட்ராஃபிக் க்கு எனக்கு ட்டூவீலர் தான் சரியா இருக்கும்.”
கிண்டலாகச் சொல்லி சிரித்த மகனின் தோளில் ஒரு அடிபோட்ட மீனாட்சி, “எங்களைக் கேக்காம இப்படி ஒரு முடிவை, நீ எப்படிடா எடுக்கலாம்?” என்றார் ஆதங்கத்தோடு.
“விடு மீனாட்சி, எல்லாம் அங்கயே பேசி முடிச்ச பிறகு தொடங்காத” சதாசிவம் மனைவியைக் கண்டித்தார்.
“நான் எங்க பேசினேன்? நீங்க இரண்டு பேரும் தான் பேசினீங்க, முடிவெடுத்தீங்க” நொடித்துக் கொண்டார் மீனாட்சி.
“யாரும், யாரையும் பார்த்து பம்மல. நான் பேசுறதை ஷக்தி தப்பா புரிஞ்சுகிட்டா, அப்புறம் நமக்கு தான் கஷ்டம். அதான் பேசாமல் அமைதியா இருந்தேன்” என்ற மீனாட்சி,
“இந்த நிலமை அப்படியே லைஃப் டைம் வரைக்கும் நீண்டுடக் கூடாது விஸ்வா. சீக்கிரமே ஷக்திக்கு உன்னை புரிய வச்சு, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடணும், ஓகே யா?” என்றார்.
“அப்படியே, உங்க அப்பத்தாவையும் கன்வின்ஸ் பண்ணிடு” என்ற மீனாட்சி கணவரோடு காரில் ஏற, விஸ்வாவின் கைகளில் கார், சென்னை விமான நிலையத்தை நோக்கி பறந்தது.
பெற்றவர்கள் விமானத்தில் மதுரையை நோக்கி பறக்க ஆரம்பிக்கவும், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த விஸ்வா சென்ற இடம், கற்பகம் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ்.
இங்கே தங்கும்படியாகும் என்று கிஞ்சித்தும் எண்ணாததால், வீசின கையும் வெறுங்கையுமாகத் தான் வந்திருந்தார் மாப்பிள்ளை.
ஊருக்கு போனதும் முதல் வேலையாக தனது உடைகளையும், பைக்கையும் பார்சல் சர்வீஸில் போட்டுவிட பெற்றவர்களிடம் சொல்லியிருக்கிறான்.
அதுவரையில் போட்டுக்கொள்ள மாற்றுடைகள் வேண்டுமே. அவனுக்கு தோதாக சிலவற்றை எடுத்துக் கொண்டவனுக்கு, ‘வீட்டிலிருக்கும் மற்றவர்களும் உடைகள் எடுத்தால் என்ன?’ என்று தோன்ற, எடுத்தான்.
மனைவிக்கு கூடுதல் நேரம் செலவழித்து, பெங்கால் காட்டன் சாரி ஒன்றையும் எடுத்தவனின் மனசாட்சி, ‘ஏதோ உங்கிட்ட உடனே அவ வாங்கிடப் போறது மாதிரி, என்னா பில்டப் மாமு’ என்று கிண்டலடித்தது.
‘போடா… போடா… இன்னைக்கு வாங்காட்டா, இன்னொருநாள் வாங்கிட்டு போறா. கண்டிப்பா வாங்க வைப்பான் இந்த மாமன்” என்று மனசாட்சியை, மனசாட்சியே இல்லாமல் துரத்திய விஸ்வா, அடுத்து போய் நின்றது தன் தோழன் சந்த்ருவின் ஸ்டுடியோவில்.