அத்தியாயம் 12.

அழுகை மன அழுத்தத்தின் வடிகால் என்பது உண்மைதான் போலும்.

வாய்விட்டு அழுததாலோ என்னவோ, தன் மனதின் இறுக்கங்கள் தளர்ந்து, அந்த பின் மாலைப்பொழுதில் ஒரு குட்டி தூக்கமும் போட்டு எழுந்திருந்தாள் ஷக்தி.

 “இரண்டு நாட்கள், ஐசியூவில் தங்கள் கண்காணிப்பிலேயே கலைவாணி இருக்கட்டும்” என்று மருத்துவர்கள் குழு சொல்லிவிட்டதால், அவரைத் தவிர அந்த குடும்பத்தின் மீதி நபர்கள் தான் அறையில் இருக்கிறார்கள்.

 அறையில் இருந்தவர்கள், எதுவும் நடக்காதது போலவே தங்களுக்குள் காட்டிக்கொள்ள முயன்றாலும், அவர்கள் முயற்சியையும் மீறி கலவையான உணர்வுகள் ஒவ்வொருவர் முகத்திலும் வந்துதான் போனது.

 மருத்துவமனையின் உணவு விடுதியிலிருந்து, தமிழரசு ஆர்டர் செய்திருந்த இரவு உணவு வர, பெயருக்கு உண்டு முடித்தவர்கள், ஐசியூக்கு சென்று கலைவாணியை பார்த்துவிட்டு, அறைக்கு வந்து மீண்டும் முடங்கிக் கொண்டார்கள்.

இவர்கள் சென்ற போது கலைவாணி ஆழ்ந்த நித்திரையின் பிடியில் இருந்தார்.

நல்ல பெரிய அறையாகவே மருத்துவமனை நிர்வாகத்திடம் தங்களுக்கு ஒதுக்கும்படி தமிழரசு கேட்டிருந்தபடியால், அவர்கள் தங்கியிருந்த அறை பெரியதாகவே இருந்தது.

நோயாளியின் படுக்கை தவிர, கூடுதலாக இரண்டு படுக்கைகளும் அங்கே கிடந்தன. அதில் ஒன்றில் மகனோடு தமிழரசு படுத்துக்கொள்ள, அப்பத்தாவோடு ஷக்தி படுத்திருந்தாள்.

அறை முழுவதும் இரவு விளக்கின் மெல்லிய நீலநிறம் பரவியிருந்தது.

தன் தாயின் உடல்நலத்தைக் குறித்த சந்தேகங்களை இடைவிடாது தகப்பனிடம் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சீவின் குரலும், அதற்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த தமிழரசுவின் குரலுமே அந்த அறையில் கேட்டுக்கொண்டிருந்தது.

சற்று நேரத்தில், சஞ்சீவின் குரல் மெல்ல தேய ஆரம்பித்து, உறக்கத்தின் பிடியில் ஆழ்ந்து போனான்.

  சிறுவனுக்கு அருள் செய்த உறக்கம், அந்த அறையிலிருந்த மற்றவர்களுக்கு அருள்பாலிக்க மறுத்து, அவர்களிடமிருந்து விலகி நின்றது.

 சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியின் மெல்லிய இரைச்சல் மட்டுமே அந்த அறையில் இப்போது கேட்டுக் கொண்டிருந்தது.

“செண்பகம் ங்குறது உங்க பொண்ணா அப்பத்தா?”

ஷக்தியின் கேள்வியில், அறையின் நிசப்தத்தோடு, தமிழரசுவின் மனநிம்மதியும் பின்னங்கால் பிடறியில் அடிபட தலைதெறிக்க ஓடியது.

“செண்பகத்துக்கு தான், நான் பிறந்தேனா? இல்லை செண்பகம் தான் என் அம்மாவா?” எப்படி வேண்டுமென்றாலும் இந்த கேள்வி ஷக்தியிடமிருந்து வந்திருக்கலாம்.

ஆனால், செண்பகத்தை அம்மா என்று அழைப்பதை அழகாக தவிர்த்து ஷக்தி கேட்க, ‘தன்னைப் பெற்ற தாய் யாரென்று தெரிந்து கொள்ள ஷக்திக்கு வாய்ப்பிருந்தும், அதை தெரிய விடாமல் செய்துவிட்டேனே’ என்ற சுயபச்சாதாபத்தில் உடைந்தே போனார் தமிழரசு.

தாய் உயிரோடில்லை, தந்தை இருந்தும் குழந்தையை தேடவில்லை. இந்த சூழ்நிலையில் அந்த சின்னஞ்சிறு குழந்தையின் சின்ன இதயம் பெற்றவர்களின் பாசத்திற்காக ஏங்கிப் போய்விடக்கூடாது’ என்ற காரணத்திற்காகவே தாய்மாமன் அங்கே தகப்பனாகிப் போனது.

‘ஆனால், தன்னுடைய இருபத்தியோராவது வயதில், இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்து, ஷக்தி மனம் வெதும்புவதற்கு பதிலாக, சிறுவயதிலேயே உண்மையைச் சொல்லி வளர்த்திருக்கலாமோ?’ என்று தமிழரசு க்கு இப்போது தோன்றியது.

பேத்தியிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை நீண்ட நேரமாக எதிர்பார்த்து காத்திருந்த பஞ்சவர்ணம், “ஆமா, உன்னைப் பெத்ததோட கடமை முடிஞ்சுதுன்னு, அந்த புண்ணியவதி நிம்மதியா போய் சேர்ந்துட்டா.”

 பெருமூச்சோடு சொல்லியவர், பேத்தியை அணைத்து முன்நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தபடியே, “என் தங்கம், உங்கூட வாழறதுக்கு, அவளுக்கு குடுப்பினை இல்லாமப் போச்சு டா” என்று தழுதழுக்க, தன் சோகம் மறந்து அந்த பெரியவரை ஷக்தி தான் ஆறுதல்படுத்த வேண்டியதாகிப் போனது.

இதற்கு மேலும் எதையும் மறைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து கொண்ட பஞ்சவர்ணம், ஷக்தியின் வாழ்வில் அவளிடமிருந்து மறைக்கப்பட்ட பக்கங்களை, உள்ளது உள்ளபடி சொல்ல ஆரம்பித்தார். கவனமாக கேட்டுக்கொள்ள ஆரம்பித்த ஷக்திக்கு, செண்பகத்தின் மேல் பரிதாபமும், சௌந்தரின் மேல் கட்டுக்கடங்காத கோபமும் கொப்பளித்தது.

‘பிறந்தது முதல், உயிரோடு இருக்கிறேனா? இல்லையா? என்று கூட தெரிந்து கொள்ளாத மனிதர், மூன்று வயதில் வந்து என்னை எப்படி உரிமை கொண்டாடலாம்?’ என்று மனதுக்குள் வஞ்சமில்லாமல் சௌந்தரை வறுத்தெடுத்தாள்.

அதேநேரம், தமிழரசு, கலைவாணி மீது, ஈடுஇணையில்லாத மரியாதையும் பாசமும் இன்னும் அதிகரித்தது ஷக்திக்கு.

‘அதிலும் தமிழரசுவுக்காவது தங்கை மகள் என்ற பாசம், கலைவாணிக்கு தன்மீது பாசம் வைக்க வேண்டும் என்று என்ன வந்தது?’

ஆனால், அளப்பரிய பாசம் அவரும் வைத்தாரே! அதுவும் தன்னைத் தவிர இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு ஒரு பாசம். சிலிர்த்தது ஷக்திக்கு.

‘நானும் ஏதோ ஒருவகையில் புண்ணியம் செய்திருக்கிறேன். அதனால் தான், பிறந்த உடனேயே தாயை இழந்திருந்தாலும், இப்படி அன்பின் திருவுருக்களின் கரங்களில் என்னை சேர்ந்திருக்கிறார் கடவுள்’ எண்ணிக் கொண்டவள்,

கட்டிலில் இருந்து லேசாக எழும்பி தங்களையேப் பார்த்தபடி படுத்திருந்த தகப்பனைப் பார்த்து, “நன்றி ப்பா” என்று தழுதழுத்தாள்.

“இல்ல ஷக்தி, நீ நன்றி சொல்லுற அளவுக்கெல்லாம் நான் நல்லவன் கிடையாது. நான் பாவி, பொல்லாதவன், பாசம் ங்குற பெயர்ல உன் பெத்தவங்களைப் பற்றிய தகவலை உங்கிட்ட இருந்து மறைச்சவன். அப்படி செய்தது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போ தான் இந்த மரமண்டைக்கு புரியுது. என்னை மன்னிச்சிடு ம்மா” என்று வேகமாகச் சொல்லியவர்,

“அன்னைக்கு, உன்னை வந்து கேட்டதும், ஏதோ களவுப்பொருளைக் கொண்டுட்டு தப்பிச்சு போறது போல, உன்னைத் தூக்கிட்டு ஊரைவிட்டே போனது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போ புரியுது ம்மா. எது வந்திருந்தாலும் எதுத்து நின்னு போராடி உன்னை எங்க கூடவே வச்சிருக்கணுமேயொழிய, இப்படி கோழை மாதிரி ஓடி ஒழிஞ்சிருக்க கூடாது.”

தன் மகளுக்காக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த, அத்தனை வருட நிகழ்வுகளையும் புரட்டிப் பார்த்த தமிழரசு, ‘இப்படி செய்திருக்கலாமோ? இல்லை, அப்படி செய்திருக்கலாமோ?’ என்று பரிதவித்தார்.

“இல்லப்பா, என்னோட அப்பா என்னைக்குமே தப்பு செய்யமாட்டாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ப்பா. ப்ளீஸ்… ப்பா, இப்படியெல்லாம் பேசாதீங்க” என்று, அவரை அமைதிப்படுத்த முயன்றாள் ஷக்தி.

தன்மீது மகளுக்கு இருந்த நம்பிக்கையில் நெகிழ்ந்து போன தமிழரசு, தன் கைபேசியில் இருந்த செண்பகத்தின் புகைப்படத்தை எடுத்து காட்டி, “இதுதான் செண்பகம், உன் அம்மா” என்றார்.

 செண்பகம் பாவாடை, தாவணி அணிந்து, ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்ட பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம். அதை செல்ஃபோனில் சேமித்து வைத்திருந்தார் தமிழரசு.

அதைப்பார்த்த ஷக்திக்கு, தன்னைப் பார்த்த மாதிரியே இருந்தது. ‘அதனால் தான், நான் தாவணி அணிந்திருந்த அன்று, அப்பாவும் அப்பத்தாவும் உணர்சிவசப்பட்டார்களோ?’

கூடவே, அன்று சௌந்தர் தன்னைக் கண்டு கண்கலங்கியதும் ஞாபகத்துக்கு வந்தது பெண்ணுக்கு. ‘ஓஹ்… அந்தளவுக்கா மனைவி மீது அந்த மனிதர் பாசம் வைத்திருக்கிறார்? அப்படியென்றால் மனைவி இறந்ததும் அவரால் வேறொரு திருமணம் எப்படி செய்ய முடிந்தது?’

சௌந்தர் யாரென்றே தெரியாத போதே அவரின் இரண்டாவது திருமணத்தை ஒத்துக்கொள்ளாத ஷக்தியின் மனது, தன் பிறப்பிற்கு காரணமும் அவர் தானென்ற உண்மையைத் தெரிந்து கொண்ட பின்பு, இன்னமும் கூடுதலாக கோபத்தில் வக்கரித்துக் கொண்டது.

மனிதர்களின் செயல்கள் அத்தனையையும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தான் நிர்ணயிக்கின்றன என்பதை, வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த அனுபவசாலிகளான தமிழரசுவும் பஞ்சவர்ணமுமே அறிந்துகொள்ள முடியாதபோது, வாழ்க்கை என்னும் பள்ளியில், பாலபாடம் படித்துக் கொண்டிருக்கும் ஷக்திக்கு மட்டும், அது தெரிந்துவிடவா போகிறது?

இரவு வெகுநேரம் வரை தூக்கம் வராமல் அதிகாலையில் தூங்கிய ஷக்தி விழிக்கும் போது, அறையில் தமிழரசுவும் பஞ்சவர்ணமும் இல்லை.

‘அம்மாவைப் பார்க்க போயிருப்பாங்க.’ நினைத்துக் கொண்டவளின் கைகள், நேரத்தை தெரிந்து கொள்வதற்காக, எப்போதும் போல படுக்கையில் கைபேசியைத் தேடி தூழாவிய பின்பு தான், அது விஸ்வா வீட்டில் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது.

“ம்ப்ச்…” அலுத்துக் கொண்டவள், கட்டிலில் இருந்து இறங்கி தம்பியின் கையிலிருந்த டைட்டன் டிஜிட்டல் வாட்ச்சில் மணி பார்க்க, அது எட்டு என்றது.

அவசரமாக பாத்ரூமிற்குள் நுழைந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டவள், ‘தானும் அம்மாவைப் போய் பார்த்து விட்டு வரலாம்’ என்று நினைத்து, அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வர, வாசலுக்கு முன்னே நின்று கொண்டிருந்தான் விஸ்வா.

அவனை இந்நேரத்துக்கு அங்கே எதிர்பாராத ஷக்தி லேசாக, மிக லேசாக திகைத்து, அதை அழகாக மறைத்து, யாரோ என்பது போல அவனை கடந்து செல்ல ஆரம்பித்தாள்.

“ஷக்தி… கொஞ்சம் நில்லு, நான் உங்கூட பேசணும்” தன்னை கடந்து போக முயன்றவளின் கையைப் பற்றி சட்டென்று விஸ்வா இழுத்தான்.

நின்றவள், அவனை அந்நியப்பார்வை பார்த்தபடியே, “எனக்கு உங்க கூட பேச எதுவுமே இல்லை. அதனால மரியாதையா எங்கையை விடுங்க” என்றாள் இறுகியக் குரலில்.

அவளின் பார்வையும், பேச்சும் தானாகவே அவளிடமிருந்து தன்னை தள்ளி நிறுத்துவதை உணர்ந்த விஸ்வா, “எனக்கு உங்கூட பேச நிறைய விஷயம் இருக்கு ஷக்தி” என்றான் பிடிவாதமாக அவள் கையை விடாமல்.

“நல்லவிதமா நான் சொல்லும் போதே கையை விட்டுட்டீங்கன்னா, உங்க மரியாதை மிஞ்சும். இல்லைன்னா…”

வார்த்தைகளை முடிக்காமல் விஸ்வாவை முறைத்துப் பார்த்தவளுக்கு, தன் கையைப் பிடித்துகொண்டு நடு காரிடாரில் நின்று வம்பளத்தவனின் செயலில், பொறுமை எல்லை மீறியிருந்தது. அதனாலேயே வார்த்தைகள் தடித்தபடி வந்து விழுந்தது.

பெண்ணவளின் வார்த்தைகளில் இருந்த கடுமை, விஸ்வாவை சீண்டிவிட, “இல்லைன்னா… என்னடி பண்ணிருவ? ம்ம்… ஏதோ உம்முன்னாடி அமைதியா நிக்குறேன் ங்குறதுக்காக, என்ன வேணும்னாலும் பேசலாம்னு அர்த்தமில்ல. கொஞ்சம் கவனமா பேசு” அதட்டினான்.

“ஓஹ்… ஐயா செய்த காரியத்துக்கு, உங்களுக்கு கோபம் வேற வருதோ?” நக்கலடித்தபடியே, முயன்று தன்கையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள் ஷக்தி.

“நீ இப்படி கோவப்படுற அளவுக்கு, அப்படி என்ன தப்பான காரியம் செய்துட்டேன் நான்?” எதுவுமே தெரியாதது போல விளக்கம் கேட்டான் விஸ்வா.

“அப்போ, நீங்க செய்ததெல்லாம் சரின்னு சொல்லுறீங்க, அப்படித்தான?” அவனைக் கூர்ந்து பார்த்தவளின் பார்வையில், ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தது.

 “எதை தப்புன்னு நீ சொல்லுற? உங்கழுத்துல நான் தாலி கட்டுனதையா?” ஊடுருவும் விழிகளால் அவளை அளந்தவன்,

“என்னமோ இந்த கல்யாணத்துல இஷ்டமில்லாத உன்னை, தூக்கிட்டு வந்து நான் தாலி கட்டுன மாதிரி சொல்லுற?, எல்லாம் உன் சம்மதத்தோடு ஏற்கனவே முடிவு செய்திருந்தது தானே. என்ன? கல்யாணம் நடந்த இடம் மட்டும் தான் கொஞ்சம் மாறிப்போச்சு. அதுக்கு ஏன் இப்படி தையாதக்கான்னு குதிகுதிக்கிற?”

பெண்ணின் மென்மையான மனதும், அதன் நுட்பமான உணர்வுகளும் அவனுக்கு புரியவில்லை. எனவே அவன் செய்த தவறை, தவறென்று ஒத்துக்கொள்ள மனம் வரவுமில்லை.

 ‘ஏற்கனவே முடிவான திருமணத்தை, தான் நடத்திக் கொண்டது அவ்வளவு பெரிய தவறா?’ என்ற எண்ணத்தில் முறைத்துக் கொண்டு நிற்கத்தான் தெரிந்தது.

ஆகமொத்தம், அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் வந்தவன், சண்டையை வளர்த்து கொண்டு நின்றான்.

‘என்னது? இடம் மட்டும் தான் மாறிப்போச்சா? எவ்வளவு திமிர் இருந்தா இப்படி பேசுவான்?’ எண்ணிக்கொண்ட ஷக்தி அடுத்து ஏதோ பேச தயாராக, அந்த காரிடாரில் அங்குமிங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தவர்களின் ஆர்வமான பார்வைகள், தங்களின் மீது விழுவதைக் கண்டு கூச்சமாகிப் போனது.

‘ச்சை… நேற்றிலிருந்து என்னை இப்படி காட்சிப் பொருளாக்குவதே, இவனுக்கு வேலையாகப் போச்சு.’ மனதிற்குள் அலுத்துக் கொண்டாள் ஷக்தி.

அப்போது அங்கு வந்த மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர், “என்ன சார் இது? உங்களோட பெரிய தொந்தரவா போச்சு. நேத்தும் இப்படி தான் ஹாஸ்பிடலை திடீர்னு கல்யாண மண்டபமா மாத்திட்டீங்க. இப்போ காலைலயே வந்து அந்த பொண்ணுகிட்ட வம்புவளக்க ஆரம்பிச்சாச்சு. போங்க சார்… எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கோங்க, இது ஹாஸ்பிடல்” என்று கண்டித்தார்.

அந்த நேரத்தை பயன்படுத்தி, விஸ்வாவுடனான வார்த்தை யுத்தத்தை, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து, அங்கிருந்து ஷக்தி சென்றுவிட, சமாதான உடன்படிக்கைக்கு வந்தவன் வெறுங்கையோடு திரும்ப வேண்டியதாயிற்று.

 வேகமாக போகும் ஷக்தியையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, ஷக்தியின் கோபம், ‘கொஞ்சம் அவசரபட்டுவிட்டோமோ?’ என்ற கேள்வியை எழுப்பியது.

‘நடந்தது நடந்து போச்சு, இனி அவளை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டியது தான்’ என்று யோசித்தவனுக்கு, அதற்கு தான் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஏனோ தெரியாமல் போய்விட்டது.

‘ஹும்ம்… இந்த கலைவாணி மட்டும் இப்படி இழுத்து வைக்காமல் இருந்திருந்தால், எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கும்’ நினைத்த விஸ்வா, ஏதோ ஒரு எண்ணத்தில், ஷக்தி குடும்பத்தினர் தங்கி இருந்த அறையைப் திரும்பி பார்த்தான்.

அங்கே, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு, கதவில் சாய்ந்தபடி இவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சஞ்சீவ்.

அவன் அருகில் சென்ற விஸ்வா, “என்னடா? இப்போத் தான் தூங்கி முழிச்சியா?” என்று கேட்டுக்கொண்டே இயல்பாக அவன் கேசம் கலைத்துவிட முயல, சட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டான் சஞ்சீவ்.

சிறுவனின் செயலில் உண்மையிலேயே அதிர்ந்து போன விஸ்வா, “என்னாச்சு சஞ்சீவ்?” என்றான்.

“எனக்கு பிடிக்கல, ஷக்தியை நீங்க தொந்தரவு பண்ணுறது எனக்கு சுத்தமா பிடிக்கல” விஸ்வாவை முறைத்துக் கொண்டே சொன்னான் சஞ்சீவ்.

‘அட… இவன் அக்காவுக்கு தான் எம்மேல பயம் இல்லாமல் போச்சுன்னா, இந்த அரை டிக்கட்டுக்கு கூட எம்மேல பயமில்லாமல் போச்சே’ நொந்து போன விஸ்வா,

“டேய்… அவ இனி என்னோட ஷக்தி டா. அவளை நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என்றான் சஞ்சீவை வெறுப்பேற்றும் விதமாக.

“இல்ல, அவ எங்க ஷக்தி” உடனடியாக மறுத்து பதிலைச் சொல்லிய சஞ்சீவ், “இனி ஒருதடவை நீங்க ஷக்தியை தொந்தரவு செய்தா, நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.” ஏதோ பெரிய மனிதனைப் போல விஸ்வாவை மிரட்டினான்.

“இங்கப்பாருடா, முருங்கைக்காய்க்கு கைகால் முளச்சமாதிரி இருந்துகிட்டு, என்ன பேச்சு பேசுறடா நீயி.”

சொல்லிவிட்டு வாய்விட்டு சிரித்த விஸ்வா, “மவனே… என்னைக்கா இருந்தாலும், என்னை மாமான்னு நீ கூப்ட்டு தான்டா ஆகணும். அதனால இப்பவே எங்கிட்ட மரியாதையா பேச பழகிக்கோ. இல்லைன்னா பிச்சிபுடுவேன் பிச்சி.”

 சஞ்சீவின் காதைப்பிடித்து விளையாட்டாக முறுக்கியபடியே மிரட்டியவன், “யப்பா… சின்னதுல இருந்து பெருசு வரை சரிகட்டுறதுக்கு முன்னாடி என் தாவு தீர்ந்துடும் போலயே” என்று முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

ஷக்தி, ஐசியூக்கு செல்லும் வழியில், எதிரே தமிழரசும் பஞ்சவர்ணமும் வந்து கொண்டிருந்தார்கள்.

“அம்மா நல்ல தூக்கம், இன்னும் முழிக்கலை டா. நீ வேணும்னா, டீ குடிச்சிட்டு அம்மாவைப் போய் பாக்குறியா?” என்று தமிழரசு மகளிடம் கேட்டார்.

“இல்லப்பா… நானும் அம்மாவை பார்த்துட்டு வந்துடுறேன்.” சொல்லிக்கொண்டு ஷக்தி அன்னையின் அறைக்கு போனாள். அவள் வந்த நேரம் கலைவாணி முழித்திருந்தார்.

ஷக்தியைக் கண்டதும், நேற்று தன் நினைவடுக்கில் மறைந்திருந்த மகளின் திருமணம், இன்று நினைவுக்கு வர, “ஷக்தி, உங்கல்யாணம்…” என்று இழுத்தார் கலைவாணி.

“முடிஞ்சிடிச்சி ம்மா.” தாமதமின்றி பதில் சொல்லிய ஷக்தி, சுடிதாருக்குள் கிடந்த தாலிச்செயினையும் வெளியே இழுத்து அன்னையிடம் காட்டினாள்.

 வாழ்வில் ஒருதடவை உண்மையை மறைத்து தன்னை வளர்த்ததற்கு பிரதிபலனாக, இந்த நல்ல உள்ளங்கள் படும்பாட்டை பார்த்தவளுக்கு, இன்னொரு முறை உண்மையை மறைக்க வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.

“ஓ… ரொம்ப சந்தோஷம் டா.” வார்த்தையில் இருந்த சந்தோஷம், அந்த தாயின் முகத்திலும் உண்மையிலேயே பிரதிபலித்தது.

எந்த தாய்க்கு தான் மகளின் திருமணம், மணமேடை வரை வந்து நின்று போவதில் உடன்பாடு இருக்கும்.

‘ஹப்பா… நடந்த கலாட்டாவுக்கு இடையிலும், என் மகளின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது’ என்ற நிம்மதியே எல்லா குழப்பங்களையும் மீறி அவர் முகத்தில் பரவியது.

ஆனால் ஏனோ, திருமணம் எங்கே நடந்தது? எப்போது நடந்தது? என்ற கேள்வியைக் கலைவாணி கேட்க முயலவில்லை, ஷக்தியும் அதைச் சொல்லவில்லை.

“அந்த தம்பி, அதான் விஸ்வாவையும் உங்கூட அம்மாவைப் பார்க்க கூட்டிட்டு வந்துருக்கலாம்ல ஷக்தி.”

“அது… இவ்ளோ நேரமும், இங்க தான் இருந்தாங்க ம்மா. இப்போ தான் வெளியே எங்கயோ போனாப்ல. அடுத்த தடவை வரும் போது கூட்டிட்டு வரேன், ஓகே யா.”

மகளின் பதிலுக்கு சிறுபிள்ளையாக தலையாட்டிய கலைவாணி, இன்னும் ஏதோ கேட்க முயல, அவர் வாயை தன் விரல் கொண்டு மூடியவள், “மம்மிஜி, போதும்…” என்று விளையாட்டாக சொல்லி, மேலும் சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு கிளம்பிவிட்டாள்.

திரும்பவும் அறைக்குள் வந்து அடைந்து கொண்ட பெண்ணவளை, அன்றே பெற்றோரையும் மாமனையும் அழைத்துகொண்டு வந்து நின்ற விஸ்வாவின் செயல் கோபமூட்டியது.

அவர்களின் வருகையை யாராலும் தடுக்கவும் முடியவில்லை.

சௌந்தரிடம் வேண்டுமென்றால், “ஷக்தி என் பிள்ளை, அவளைத் தேடி இங்கே வராதே” என்று தமிழரசு சண்டைக்கு நிற்கலாம். ஆனால் மற்றவர்களிடம் என்ன சொல்ல முடியும்?

 அந்த இக்கட்டான சூழ்நிலையை கையாளத் தெரியாமல் தமிழரசு அமைதியாக இருக்க, “வாங்க… உக்காருங்க” என்று வரவேற்பில் இறங்கினார் பஞ்சவர்ணம்.

அதை அழகாக பிடித்துக் கொண்டு, “கலைவாணியின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?” என்று பேச்சை ஆரம்பித்த விஸ்வாவின் அம்மா மீனாட்சி, “நாங்களும் உங்க மருமகளைப் போய் பார்க்கட்டுமா ம்மா?” என்று அனுமதி கேட்க, மகனைப் பார்த்தார் பஞ்சவர்ணம்.

“இல்ல… இப்போ வேண்டாம்.” தயக்கத்தோடு என்றாலும், உறுதியாக பதில் வந்தது தமிழரசுவிடமிருந்து.

அவரின் இந்த பதிலில், அடுத்து என்ன பேசுவது என்பது போல தடுமாறிய மீனாட்சி, தன் கைகளிரண்டையும் குவித்து தமிழரசுவைப் பார்த்து ஒரு வணக்கத்தை வைத்து, “இவ்வளவு நாளும் எங்க பிள்ளையை கண்ணும் கருத்துமா வளர்த்ததுக்கு நன்றி” என்று ஆரம்பிக்க,

“எம்பிள்ளையை வளக்குறதுக்கு, நீங்க எதுக்கு எனக்கு நன்றி சொல்லணும்?” பதில் கேள்வி கேட்டார் தமிழரசு.

“சரி… ஷக்தி உங்க பிள்ளையாவே இருந்துட்டு போகட்டும். ஆனா, இப்போ அவ எங்க வீட்டு மருமக தானே? அதை நீங்க ஒத்துக்கிறீங்க தானே?”

சமயோஜிதமாக, தமிழரசுவைப் பார்த்து கேள்வி கேட்ட மீனாட்சி, “கல்யாணத்துக்கு அப்புறம், ஒரு மருமகளா, ஷக்தி எங்க வீட்டுல செய்ய வேண்டிய செய்முறைகளும், சடங்கு சம்பிரதாயங்களும் ஏகப்பட்டது இருக்கு. அதைச் செய்ய உங்க பொண்ணை எங்ககூட அனுப்பி வைங்க, ப்ளீஸ்…” என்றார்.

தன் மனைவியை பார்ப்பதற்கு, அவர்களுக்கு அனுமதி மறுத்த மனிதருக்கு, மீனாட்சியின் இந்த விண்ணப்பத்தை மறுக்க முடியாமல், தன் மகளுக்கும் அவர்களுக்கும் இடையே புதிதாக முளைத்திருக்கும் உறவுமுறை குறுக்கே வந்து நின்றது.

என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போன மனிதர், இப்போதும் உதவி வேண்டி தாயைப் பார்த்தார். அவரோ, “போய்ட்டு வந்துடுறியா ம்மா” என்று பார்வையாலே பேத்தியிடம் கேட்டார்.

ஆனால் பேத்தியோ பார்வையால் எல்லாம் பதில் சொல்லவில்லை. “என்னால முடியாது அப்பத்தா” என்று எல்லோரும் கேட்கும்படி சத்தமாகவே சொன்னாள்.

“இப்படியெல்லாம் சொல்லக்கூடாது ஷக்தி ம்மா. இப்போ உங்க அத்தைக் கூடப் போய் எல்லா சம்பிரதாயத்தையும் முடிச்சிட்டு, சாயங்காலம் இங்க வந்துடு. அப்புறம், அம்மாவுக்கு உடம்புக்கு நல்லா ஆனபிறகு, நல்ல நாளாப் பாத்து திரும்பவும் அங்க போகலாம்.”

பேத்திக்கு சொல்வது போல, தன் எண்ணத்தை மீனாட்சிக்கு கோடிட்டு காட்டினார் பஞ்சவர்ணம்.

“ஆஹா… இவங்களை நீங்க தான் நம்பணும் அப்பத்தா. இப்போ எங்க மருமகளை அனுப்புங்கன்னு உங்களை பிளீஸ் பண்ணுறவங்க, காரியம் ஆனதும், எங்க வீட்டு மருமகளை எதுக்கு உங்ககிட்ட திரும்ப அனுப்பணும்னு சொல்லி, என்னை அங்கேயே அடைச்சி போட்டாலும் போட்டுருவாங்க அப்பத்தா. சரியான பிள்ளைபிடி கூட்டம்” என்றாள் வெறுப்பாக.

ஷக்திக்கு இன்னாரென்று இல்லாமல், விஸ்வாவின் வீட்டில் உள்ளவர்கள் அத்தனைபேர் மீதும் கோபம் இருந்தது.

கடந்த ஆறு மாத காலமாக கண்ணே, மணியே, மானே, தேனே,என்று உருகியவர்களின் வார்த்தைகளுக்கு பின்னால், அப்பட்டமான சுயநலமும், உள்நோக்கமும் இருந்திருக்கிறது என்று தெரியவந்த உண்மையால் உண்டான ஆற்றாமை, பெண்ணவளை இயல்புக்கு மீறி பேசவைத்தது.

“ஏய்… யாரை பிள்ளைப்பிடி கூட்டம் ங்குற?” கோபத்தில் விஸ்வா எகிறினான்.

அவனை அமைதிப்படுத்திய மீனாட்சி, “மூனு வயசுல உன்னை தரமாட்டேன்னு அவங்க சொல்லும் போதே, உங்கையை, காலை கட்டி தூக்கிட்டு போகாத பிள்ளைபிடி கூட்டமா, இந்த இருபத்தோரு வயசுல உன்னை தூக்கிட போகுது? உன் அப்பத்தா சொல்லுற மாதிரியே செய்துடலாம் ஷக்தி. என்னை நம்பி பயப்படாம வீட்டுக்கு வா” என்று, பொறுமையாக அழைத்தார்.

“ஆமா… யார் என்னோட கதையைச் சொன்னாலும், என்னோட மூனு வயசுலயிருந்து தான், நீங்க எல்லாரும் கதைக்குள்ளேயே வர்றீங்க. அதுவரைக்கும் எல்லாரும் எங்க போயிருந்தீங்க?”

“எங்கதை தெரிஞ்ச நேரத்துலயிருந்து, இந்த கேள்வி என் மண்டையை போட்டு குடையுது. பிளீஸ்… நீங்களாவது பதில் சொல்லுங்களேன்.” விழிகளை விரித்து அபிநயத்தோடு மீனாட்சியைப் பார்த்து ஷக்தி கேட்டாள்.

பதில்சொல்ல முடியாமல் வாயடைத்து போய் நின்றார் மீனாட்சி…