அத்தியாயம் 10
“தமிழரசு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாப்லயாம் கௌரி. இதோ, இந்த சன்டே ஒப்புதாம்பூலம் மாத்திக்கிறாங்களாம், ஷக்திக்கு கோர்ஸ் கம்ப்ளீட் ஆனதும் கல்யாணம். கல்யாணத்துக்கு முந்தினநாளு ஈவ்னிங் நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்னு டிசைட் பண்ணியிருக்காங்களாம்.”
தங்கை கணவருடன் ஃபோன் பேசிமுடித்த சௌந்தர், மடைதிறந்த வெள்ளமாக ஆர்ப்பரித்தபடி மனைவியிடம் கூறினார்.
“ஓ… அப்பிடியா, ரொம்ப சந்தோஷம் ங்க.”
தனக்கு நேர்மாறாக, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாதாரணமாக பதில் சொன்ன மனைவியை உற்றுப்பார்த்த சௌந்தர், “வார்த்தைல இருக்கிற சந்தோஷம் உன் மனசுல இல்லயே கௌரி, ஒருவேளை எம்பொண்ணு இங்கவர்றது உனக்கு பிடிக்கலையோ?” என்றார் யோசனையோடு.
“நம்ம பொண்ணு, நம்ம வீட்டுக்கு வர்றது எனக்கு ஏங்க பிடிக்காமல் போகணும்? ஆனா, அவளை இங்க கொண்டு வர நீங்கல்லாம் செய்யுற ஏற்பாடு தான் எனக்கு சுத்தமா பிடிக்கலை” தைரியமாக தன் மனதில் உள்ளதைச் சொன்னார் கௌரி.
“என்ன சொல்லுற கௌரி?” கிட்டத்தட்ட உறுமினார் மனிதர்.
“ஷக்தியோட சின்னவயசுல நீங்க செய்த தப்பை, இப்பவும் செய்யாதீங்கன்னு சொல்லுறேன். நேரடியா தமிழரசு அண்ணாவை நீங்க ஃபேஸ் பண்ணுங்கன்னு சொல்லுறேன்.”
பதிலேதுவும் சொல்லாமல் தன்னைத் தீப்பார்வை பார்த்தபடி நின்று கொண்டிருந்த கணவனைக் கண்டுகொள்ளாமல், மேலும் பேசினார் கௌரி.
“ஷக்தி உங்க மக, அப்படியிருக்கும் போது எதுக்கு எல்லாத்தையும் ஒளிவுமறைவா நின்னு செய்யுறீங்க? நேரா தமிழரசு அண்ணா வீட்டுக்கு நீங்களே போய், இத்தனை நாள் நல்லபடியா பிள்ளையை வளத்ததுக்கு ஒரு நன்றியை சொல்லி, நம்ம விஸ்வாவுக்கு ஷக்தியை பொண்ணு கேட்டுருக்கலாம். அதை விட்டுட்டு, இப்படி செய்யுறது நல்லாவா இருக்கு?”
“ஹஹ… நேரடியா நான் போய் கேக்கணுமா? எதுக்கு? இன்னொரு தடவை அந்தாளு ஊரைவிட்டே ஓடுறதுக்கா? இல்ல…அப்படி தான் நடக்கணுங்குறது உன்னோட ஆசையா?”
இத்தனை வருட வாழ்க்கையில் இப்படியெல்லாம் பேசாத சௌந்தர், மகள் என்று வந்ததும் வார்த்தைகளைத் தவறவிட்டார். அதை அலட்சியப்படுத்திய கௌரி, தன் மனதில் பட்டதை தயங்காமல் சொன்னார்.
“தப்பை எல்லாம் உங்கமேல வச்சிட்டு அவங்களை குற்றவாளி ஆக்காதீங்க. ஷக்தியை கைப்பிள்ளையா அவங்க கொண்டு போன பிறகு, ஒருநாள், ஒரே ஒருநாள் நீங்க போய் பிள்ளையை பாத்திருந்தாலோ, இல்ல, பிள்ளையை வளத்து குடுக்குறதுக்கு அவங்க உதவியை நீங்க நேரடியா கேட்டுருந்தாலோ, இப்படி எல்லாம் நடந்திருக்குமா, சொல்லுங்க?”
“செய்யுற தப்பை எல்லாம் நீங்க செய்துட்டு, பழியை அவங்க மேல தூக்கி போடுறீங்க. போதாததிற்கு எல்லாத்தையும் மறைச்சு இப்போ கல்யாண ஏற்பாடு வேற பண்ணுறீங்க.”
“கல்யாணத்துக்கு அப்புறம், உண்மையெல்லாம் திடீர்னு தெரிய வரும்போது, இத்தனை வருஷம் இவங்க தான் தன்னோட அப்பா, அம்மான்னு நம்பிகிட்டு இருக்கிற ஷக்தியோட மனநிலை எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தீங்களா? இல்ல… இவ என்னோட பிள்ளைன்னு, தோள்லயும், மார்லயும் போட்டு வளத்த அந்த பொண்ணோட மனநிலை எப்படி பாதிக்கப்படும்னு தான் யோசிச்சு பாத்தீங்களா?”
“யாரைப்பத்தியும் நினைக்கல, எதப்பத்தியும் யோசிக்கலை, உங்களுக்கு நீங்க நினச்சது நடக்கணும், அப்படித்தானா?”
“தப்புங்க, நீங்க பண்ணுறது ரொம்ப தப்பு. இப்போ கூட ஒண்ணும் கெட்டுப்போகலை. நேரா தமிழரசு அண்ணா வீட்டுக்கு போங்க, எல்லாத்தையும் சொல்லுங்…”
ஒரு மதியூக மந்திரி போல, பிரச்சினையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்த கௌரியின் பேச்சு சௌந்தருக்கு எரிச்சல் மூட்டியது. அதற்கு மேலும் மனைவியின் வார்த்தைகளை கேட்க மனமின்றி இடையிட்டவர்,
“ஆமா… எனக்கு எதப்பத்தியும், யாரப்பத்தியும் கவலையில்ல. எனக்கு, என்னோட பொண்ணு வேணும், அவ்வளவு தான். இவ்வளவு செய்யுறவனுக்கு, எம்பொண்ணை எப்படி சமாதானப்படுத்தணும்னு தெரியாதா? அதனால, அதைப்பத்தி நீ வீணா கவலப்படாத. அதேபோல, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டா, இப்படி தான் நடக்கும்னு அந்த தமிழரசு குடும்பமும் புரிஞ்சிக்கட்டும்.”
இளக்கமில்லாத குரலில் சொல்லிய சௌந்தர், மனைவியை ஏதோ வில்லி ரேஞ்ச்சுக்கு பார்த்தபடியே, “ம்ஹூம்… என் சந்தோஷம் தான் உன் சந்தோஷம்ன்னு நினச்சி, உங்கிட்ட வந்து இந்த விஷயத்தை சொன்னேன் பாரு, என்னை மொதல்ல ஜோட்டால அடிக்கணும்” தன்னைத்தானே திட்டிக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினார்.
நிதர்சனத்தை உணர மறுத்து, தன்னையும் தவறாக புரிந்து கொண்ட கணவனை கவலையோடு பார்த்தபடி நின்றிருந்தார் கௌரி.
ஆமாம்… சௌந்தர் திட்டப்படி, அவரை எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்தாமல், ஷக்தி, விஸ்வா திருமணத்தை முடிவு செய்துவிட்டனர் விஸ்வா குடும்பத்தினர்.
ஷக்தி, விஸ்வா வீட்டுக்கு போய் வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகியிருந்தது.
ஷக்தி வீட்டுக்கு திரும்பி வந்திருந்த மறுநாளிலிருந்தே அடிக்கடி ஷக்தியோடு ஃபோனில் பேச ஆரம்பித்திருந்தார் மீனாட்சி.
ஏற்கனவே பேத்திக்கு பட்டு, நகை, என்று அணிவித்து அழகு பார்த்திருந்த மீனாட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த பஞ்சவர்ணமும், மீனாட்சி தன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லவும் ஆவலோடு பேச ஆரம்பித்தார்.
அது அவரோடு முடியாமல் கலைவாணி வரை நீள, நாளடைவில் பெண்களுக்கிடையே, நல்ல ஒரு நட்பு வளர்ந்திருந்தது.
பேச்சுவாக்கில், “ஒருநாள் எங்கவீட்டுக்கு நீங்களும் வந்துட்டு போகலாமே” என்று கலைவாணி மீனாட்சியை அழைக்க, அடுத்த நாளே கணவரோடு வந்திறங்கி விட்டார் மீனாட்சி.
ஷக்தி மீது அவர் காட்டிய பாசமும், தான் அழைத்ததும் கணவரோடு அவர் வந்து நின்ற வேகமுமே, தங்கள் மகனுக்கு ஷக்தியை பெண் கேட்பார்கள் என்ற சேதியைச் சொல்லாமல் சொல்லியது கலைவாணிக்கு.
அப்படி எண்ணும்படியாகத் தான் இருந்தது அன்று விஸ்வாவின் பார்வையின் வீச்சு. இருந்தாலும் அவர் தன் பெண்ணிடம் அதைப்பற்றி எதையும் கேட்கவில்லை. மகளும், தாயிடம் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் மகளறியாமல் அவளைக் கவனித்தவரையில், மகள் காதலெனும் நோயில் வீழ்ந்து விட்டது தெளிவாக புரிந்தது அந்த தாய்க்கு.
கலைவாணி எதிர்பார்த்தது போலவே, விஸ்வா, ஷக்தி திருமணத்தைப் பற்றி மீனாட்சி ஒருமுறை பேச, கணவரிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என்று பிடிகொடுக்காமல் பேசி முடித்து விட்டார் கலைவாணி.
கலைவாணிக்குமே மதுரை என்ற ஊர் மட்டும் நெருடியதே தவிர, மீனாட்சி குடும்பத்தை நிரம்பவே பிடித்திருந்தது.
தன் மகள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் அந்த குடும்பத்தில், மகளைக் கொடுப்பதில் அவருக்கு விருப்பமே.
கணவனிடமும், மாமியாரிடமும் விஷயத்தை சொல்லி, மணமகனைப் பற்றி விசாரித்து என்று எல்லாம் திருப்தியாக இருக்கவே, மீனாட்சியிடம் சம்மதம் சொல்லிவிட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது,
“நம்ம கல்யாண விஷயமா எங்கம்மா, உங்கவீட்ல பேசியாச்சு” என்ற தகவலை விஸ்வா, ஷக்தியிடம் கூற, என்ன முடிவு எடுத்திருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள, குட்டி போட்ட பூனையாக தாயையே சுற்றி சுற்றி வந்தாள் ஷக்தி.
மகளின் நோக்கம் தெரிந்தும், எதுவும் சொல்லாமல் அவளுக்கு தண்ணிகாட்டினார் கலைவாணி. வேறுவழியில்லாமல், “ம்மா… ஹாட் நியூஸ் ஏதாவது உண்டா?” என்று எதுவும் தெரியாதது போல் கேட்டாள் ஷக்தி.
“ஒண்ணுமில்லையே” என்று உதடுபிதுக்கி மகளின் டென்ஷனை எகிற வைத்த கலைவாணி, “ஹாங்… ஒரு நியூஸ் உண்டு ஷக்தி” என்று சொல்லி, மகளின் கண்களை உற்று நோக்கினார். அங்கே ஆர்வம் டன்கணக்கில் வழிந்தது.
“என்னன்னு சொல்லுங்க ம்மா.” கண்களில் வழிந்த ஆர்வம் குரலில் வந்துவிடக்கூடாது என்று கடும் பிரயத்தனங்களை ஷக்தி செய்தாலும், அவளையும் மீறி குரலில் உற்சாகம் கும்மியடித்தது.
“அது, உன் ஃப்ரெண்ட் அஸ்வினி இருக்கால்ல…”
“ம்ம்…”
“அவ அண்ணனுக்கு, உன்னை கல்யாணம் பண்ணி தரச்சொல்லி கேக்குறாங்க.” அமைதியாக சொல்லியவர், மகளின் முகத்தில் தெறித்த வர்ணஜாலங்களை ரசித்தபடியே,
“எனக்கென்னவோ அந்த பையனை பிடிக்கலை ஷக்தி. அதனால வேண்டாம்னு சொல்லப்போறேன்” என்றார் அமர்த்தலாக.
அன்னையின் வார்த்தையில் ஆட்டம்பாம் வெடித்தது போல உள்ளுக்குள் ஆட்டம் கண்டுவிட்ட ஷக்தி, பதறிப்போய், “என்னம்மா சொல்லுறீங்க?” என்றாள் வேகமாக.
“ம்ம்… எனக்கென்னவோ அந்த பையனோட ஜாப் அவ்வளவு திருப்தியா இல்ல ஷக்தி. இதைவிட பெட்டரான அலையன்ஸ் எல்லாம் உனக்கு கண்டிப்பா வரும். அதான் இதை வேண்டாம்னு சொல்லலாம்னு முடிவெடுத்துட்டேன்.”
கலை சொல்லி வாய் கூட மூடவில்லை, அதற்கிடையில், “எனக்கு வேற யாரும் வேண்டாம், விஸ்வா மட்டும் போதும்.” வேகமாக சொல்லியிருந்தாள் ஷக்தி.
“என்ன?”
“மம்மிஜி, வி லவ் ஈச் அதர் மம்மிஜி…” மெல்ல சிணுங்கியபடியே உண்மை வெளியே வந்தது பெண்ணிடமிருந்து.
“தமிழ்… தமிழ்ல சொல்லு, இந்த இங்லிபீஷ்லாம் எங்களுக்கு தெரியாது.” சிரித்தபடி தன்னை கலாய்த்த அன்னையின் செயலிலேயே, ஏற்கனவே அவர் தங்கள் விஷயத்தை யூகித்திருக்கிறார் என்பது ஷக்திக்கு புரிய,
“எப்படி ம்மா?” என்றாள் விழிகளை விரித்து.
“ம்ம்… மொசபிடிக்கிற எதையோ, மூஞ்சவச்சே கண்டுபிடிச்சிரலாமாம்.”
“யூ மீன் குத்தா…”
“அதே… அதே…”
ஒத்த வயதுடையவர்கள் போல பேசிக்கொண்ட அம்மாவும் மகளும் வெடித்து சிரித்தார்கள்.
மகள் தனக்கு விஸ்வா மீது அன்பிருக்கிறது என்று சொன்ன ஒற்றை வார்த்தையே, அந்த தாய், தன் மனகிலேசத்தை ஒதுக்கி வைத்து, மகளின் திருமண விஷயத்தில் ஈடுபாட்டோடு இறங்குவதற்கு போதுமானதாக இருந்தது.
தங்களின் பரிபூரணமான சம்மதத்தை தமிழரசு, விஸ்வா குடும்பத்தாரிடம் சொல்ல, திருமண வேலைகளுக்கான முன்னேற்பாடுகள் ஜரூராக நடைபெற ஆரம்பித்தது.
விஸ்வா வீட்டில் சிறியவர்கள் தவிர அனைவருக்குமே ஷக்தி, சௌந்தரின் மகள் என்ற உண்மை சொல்லப்பட, ஆச்சர்யப்பட்டு போனார்கள்.
கல்யாணி அம்மாவிற்கு, ஷக்தியை தன் பேரனின் மனைவியாக ஏற்றுக்கொள்ள, சௌந்தரின் மகள் என்ற தகுதி ஒன்றே போதுமானதாக இருந்தது.
போதாததற்கு, அந்த வீட்டின் மேல் ஷக்தி காட்டிய ஆர்வம் கூடுதல் தகுதியாக தெரிந்தது அந்த மூதாட்டிக்கு.
‘அடுத்த தலைமுறை அந்த வீட்டை எப்படி பராமரிக்குமோ?’ என்ற கவலை அவருக்குள்ளேயே இருக்க, ஷக்தி அந்த வீட்டின் மேல் காட்டிய ஆர்வம் அவருக்கு நிரம்பவே பிடித்திருந்தது.
எனவே பெண் விஷயத்தில் குறை எதுவும் சொல்லாத அவர், தன் பிள்ளைகள் மூவரின் திருமணமும் நடந்த தன் வீட்டிலேயே அடுத்த தலைமுறையின் முதல் திருமணமும் நடைபெற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அவரின் ஆசை தமிழரசு குடும்பத்திடம் சொல்லப்பட, பெரிய உறவுக்கட்டு எதுவும் இல்லாத அவர்களும், அந்த ஏற்பாட்டை ஒத்துக்கொண்டார்கள்.
திருமணத்திற்கு முகூர்த்த பட்டு, திருமாங்கல்யம் வாங்குதல் போன்ற எல்லா நிகழ்வுகளிலும் இருபக்க குடும்பத்தாரும் மகிழ்ச்சியோடு ஒன்றாக பங்கெடுத்து கொண்டார்கள்.
எல்லோரும் எதிர்பார்த்த அந்த திருமண நாளும் வந்தது.
திருமண நாளுக்கு முதல் நாள் மாலை நிச்சயதார்த்தம் என்பதால், அன்று காலையிலேயே மதுரைக்கு வந்து, ஒரு தரமான லாட்ஜ்ஜில் குடும்பத்தோடு தங்கிவிட்டார் தமிழரசு.
அன்று மாலை நிச்சயத்துக்கு அங்கிருந்தே தயாராகி சென்றுவிடலாம் என்பது அவரின் எண்ணம்.
அதன்படி மகளை ‘தேவலோகத்து இரம்பையோ இவள்!’ என்று அனைவரும் வியந்து போகும்வண்ணம், பட்டுடுத்தி, நகைகள் பூட்டி கலைவாணி அலங்கரித்து முடிக்க, மணமகன் வீட்டிலிருந்து அவர்களை அழைத்து செல்வதற்காக மீனாட்சியும், அவரது கணவரின் தங்கையுமே காரில் வந்து விட்டார்கள்.
இரண்டு கார்களில் புறப்பட்டவர்கள், நான்கு தலைமுறை கண்டும் கம்பீரமாக நின்ற அந்த பெரிய வீட்டுக்கு முன் இறங்கினார்கள்.
‘இந்திரலோகமோ!’ என்று வியந்து போகுமளவுக்கு வண்ண விளக்குகளால் ஜொலித்தது அந்த மாளிகை.
செய்யவேண்டிய சம்பிரதாயங்கள் அத்தனையும் ஷக்திக்கு முடித்து, மாலை அணிவித்து, நேரடியாக ஹாலில் போடப்பட்டிருந்த மேடையில் ஏற்றி, அவளுக்கு நலங்கு வைக்க ஆரம்பித்தார்கள் பெண்கள்.
சற்றுநேரத்தில், மாலையணிவிக்கப்பட்டு விஸ்வாவும் ஷக்திக்கு பக்கத்தில் அமர வைக்கப்பட்டான். சிறிய இடைவெளிக்குப் பிறகு ஒருவரையொருவர் நேரடியாக பார்த்துக்கொண்ட காதலர்கள் இருவரும், கண்களாலேயே கதை பேச ஆரம்பித்தார்கள்.
“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், இப்போ நான் சொல்லுறதை செய்யுங்க” என்று இருவரையும் ஆட்டிவைக்க தொடங்கினார் விஸ்வாவின் அத்தை. அவர் சொல்லியபடி இருவரும் சடங்குகளை செய்து முடித்தார்கள்.
ஃபோட்டோகிராஃபராக நின்ற விஸ்வாவின் தோழன், “இதுவரை, போஸ் குடுக்க சொல்லி எத்தனை கப்பிள்ஸை பாடாபடுத்தியிருப்ப? அதையெல்லாம் இன்னைக்கு நான் உனக்கு திருப்பி செய்யலைன்னா சாமி குத்தமாகிடும் நண்பா” என்று, அவன் பங்குக்கு மணமக்களை ஆட்டிவைக்க தொடங்கினான்.
உன் சித்தம் என் பாக்யம் என்பது போல நண்பனின் வார்த்தைகளை கர்மசிரத்தையாக விஸ்வா பின்பற்ற, ஷக்தி தான் தவித்துப் போனாள்.
அவர்களை சிறிது நேரம் வேடிக்கை பார்த்த உறவுக் கூட்டம், பெண்ணின் வெட்கம் பார்த்து சிரித்தபடியே கலைந்து போனார்கள். கலைவாணியோ தன் மகளை தனியே விட்டுச் செல்ல மனமின்றி, நடக்கும் கூத்தை கண்டும் காணாதவர் போல, அங்கேயே சற்று தள்ளி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
“வெளிய மூன் லைட் செமையா இருக்கு, மொட்டைமாடியில போய் நாலஞ்சு போட்டோஸ் கிளிக் செய்துடுவமா ஷக்தி?”
தன் கைவளைவுக்குள் ஷக்தியை வைத்துக்கொண்டு, அவள் தோள்களைச் சுற்றி தன் கையைப் போட்டபடி போஸ் குடுத்த விஸ்வா, ஷக்தியிடம் கிசுகிசுத்தான். சட்டென்று அனுமதி வேண்டி அன்னையிடம் பார்வை தாவியது ஷக்திக்கு.
அதைக் கண்டுகொண்ட விஸ்வாவுக்கு, ஜிவ்வென்று கோபம் ஏறியது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்காம வரமாட்டீங்களோ?” என்றான் விளையாட்டு போல.
“ம்ம்… நீங்க கூப்பிட்டதும் வர, நான் இன்னும் மிஸஸ் விஸ்வஜித் ஆகலையே” சிரிப்புடனே சொல்லிய ஷக்தி, சற்று தள்ளி நின்ற தம்பியை அழைத்து, விஷயத்தை அன்னையின் காதுக்கு கொண்டு சென்றாள். அங்கிருந்தே தலையை அசைத்து அனுமதி வழங்கினார் கலைவாணி.
அதைக்கண்ட விஸ்வஜித்துக்கு உண்மையிலேயே அத்தனை கோபம் வந்தது.
ஆம்… ‘மகளைப் பெற்றவர் இதே வீட்டில் ஒரு அறையில் முடங்கியிருந்து, நடக்கும் சடங்குகளை லைவ்வாக திரையில் பார்க்க, இவர்கள் இங்கே உட்கார்ந்து நாட்டாமை பண்ணுவதா?’ என்று எண்ணம் ஓடியது அவனுள்.
‘பொறு மனமே… பொறு. எல்லாம் நாளை திருமணம் முடியும் வரை தான், அதன்பிறகு நிலமையை தலைகீழாக மாற்றிவிடலாம்’ என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மாடிக்கு ஷக்தியோடு வந்தவனை,
எட்டாத உயரத்தில் இருந்து தண்ணொளியை அள்ளித் தெளித்து கொண்டிருந்த பால் நிலாவும், கையருகே காதலோடு நின்று கொண்டிருந்த பெண் நிலாவும் அமைதிபடுத்த தொடங்கினார்கள்.
நாசூக்கு கருதி, விஸ்வாவின் நண்பன் வேண்டுமென்றே சற்று பின்தங்கினான். கிடைத்த தனிமையில் மனைவியாகக் போகும் காதலியின் கையைத் தன் கையோடு கோர்த்தபடி நடைபோட்ட விஸ்வா, அன்றொரு நாள் இருவரும் தனித்திருந்த இடம் வந்ததும் நின்று, “அன்னைக்கு இதே இடத்துல கிடைச்சது, இன்னைக்கும் கிடைக்குமா ஷக்தி?” என்றான் மையலாக.
“ம்ம்… ஏன் கிடைக்காது? கன்னம் பழுக்க நல்லாவே தருவேன்” என்று தன் கைகளை திருப்பித் திருப்பி பார்த்த ஷக்தி, சிரிக்காமல் சொன்னாள்.
சிரித்த விஸ்வஜித், “இன்னும் நீ மிஸஸ் விஸ்வஜித் ஆகுறதுக்கு முழுசா ஒருநாள் இருக்குல்ல” என்றான் ஏக்கமாக.
“இல்லையே… மிஞ்சி மிஞ்சி போனா பன்னிரெண்டு மணிநேரம் தான் இருக்கு விஸ்வா” கணக்கில் புலியாக மாறி கணக்கிட்டு சொன்ன ஷக்திக்கு, அவன் சொல்லியதன் பொருள் தாமதமாக தான் விளங்கியது.
“ஃபோட்டோ எடுத்துட்டு வந்துடுவோம்னு ஒரு பச்ச பிள்ளையை கூட்டிட்டு வந்து, பேசுற பேச்சு, ம்ம்…”
பொய் கோபத்தோடு குஸ்திக்கு தயாராவது போல ஷக்தி கைகளை மடிக்க, அருகில் நின்றால் அடி நிச்சயம் என்று புரிந்து, சிரித்தபடியே விளையாட்டாக விஸ்வா ஓடினான்.
அவன் பின்னோடு ஓடிய பெண்ணோடு, “அவனை விடாத ஷக்தி, பிடி… பிடி…” என்று சொல்லியபடி நிலவும் ஓடியது.
மறுநாள் காலைப்பொழுது அழகாகவே புலர்ந்தது.
அந்த வீட்டிலிருந்த ஒவ்வொருவரும், ஒவ்வொரு மனநிலையில் திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
ஷக்தி தன் காதல் நிறைவேறப்போகும் சந்தோஷத்தில் தயாராகிக் கொண்டிருந்தாள்.
இன்று முதல் தங்கள் மகள், தங்களுக்கு மட்டுமே உரிமைப்பட்டவள் இல்லை என்ற எண்ணம் தந்த சோர்வையும் மீறி, உற்சாகமாகவே புறப்பட்டு கொண்டிருந்தார்கள் ஷக்தியின் பெற்றோர்கள்.
சௌந்தரோ, கூடிய சீக்கிரம் நான் தான் உன் அப்பா என்ற உண்மையை ஷக்தியிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி கொண்டிருந்தார்.
மீனாட்சியும் அவரின் கணவருமோ, எந்த பிரச்சனையுமின்றி இந்த திருமணம் நடந்து முடிந்துவிட வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கிளம்பி கொண்டிருந்தார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வாவோ, தங்கள் திருமணத்தின் மூலம் மாமனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, கண்டிப்பாக நியாயம் செய்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் கிளம்பி கொண்டிருந்தான்.
குறித்த நேரத்தில், விஸ்வாவும் ஷக்தியும் மணவறையில் அமர, திருமண சடங்குகள் ஆரம்பமாகத் தொடங்கியது.
நேற்று தனியறையில் இருந்து திரையில் நிச்சயதார்த்த சடங்குகளை கண்டு மகிழ்ந்த சௌந்தர், இன்று உறவினர்கள் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து, நடக்கும் நிகழ்வுகளை கண்குளிர கண்டுகளித்து கொண்டிருந்தார்.
அந்நேரம், திருமண சடங்குகளை செய்து கொண்டிருந்த ஐயர், ஏதோ ஒரு சடங்கை செய்வதற்காக, “மாப்பிள்ளையின் தாய்மாமனை வரச்சொல்லுங்கோ” என்று சொல்ல,
மணமேடையில் நின்று, எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் முறைப்படி நடைபெற்று கொண்டிருக்கிறதா என்று கவனித்து கொண்டிருந்த கல்யாணி அம்மா, “ஏம்பா சௌந்தர்… அங்க போய் உக்காந்துட்டு என்ன பண்ணுற? ஐயர் உன்னை இங்க தேடுறார் பாரு,”
கூட்டத்தோடு உட்கார்ந்திருந்த சௌந்தரை கண்டு கொண்டவருக்கு, பேரன் திருமணத்தில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களே மனதில் முன்னுக்கு வந்து நிற்க, அனைத்தையும் மறந்து சத்தம் போட்டு சௌந்தரை அழைத்து விட்டார்.
மகளின் கல்யாண கோலம் கண்டு தன்னை மறந்திருந்த சௌந்தரோ, போட்டிருந்த வேஷத்தை மறந்து, இருந்த இடத்திலிருந்து சிரித்தபடியே வேகமாக எழும்பி நடந்து வந்தார்.
சௌந்தர் என்ற குரலில் ஒருசேர திரும்பி பார்த்த தமிழரசு தம்பதியரில், கலைவாணியின் காலுக்கு கீழே பூமி அதிரடியாக நழுவியது.
‘மாப்பிள்ளைக்கு தாய்மாமனா? அங்கே உட்கார்ந்திருந்ததால் இவ்வளவு நேரமும் கண்டிப்பாக எங்களை பார்த்து கொண்டு தான் இருந்திருப்பார். அப்படியிருந்தும் அவர் முகத்தில் எங்களை கண்ட அதிர்ச்சி இல்லாமல் சிரிப்பு இருக்கிறது என்றால்… எங்களை யாரென்று தெரிந்து தான் இந்த திருமணம் ஏற்பாடாகியிருக்கிறதா?’
குழப்பம்… குழப்பம்… கலைவாணியின் மனதில் ஓயாத குழப்பம் எழுந்தது. அதைத்தாங்க முடியாத மனது துவண்டுபோக, நெஞ்சை பிடித்துக் கொண்டு பூமியில் சரிந்து விழ ஆரம்பித்தார் கலைவாணி.
“கலை…”
பக்கத்தில் நின்றிருந்த மனைவி சரியவும், கைகளில் தாங்கிக் கொண்ட தமிழரசு, தன்னை மறந்து கதறினார்.
முகத்தில் புன்னகை மிளிர, வாழ்க்கையின் சந்தோஷமான தருணத்தை மனதிற்குள் உள்வாங்கி கொண்டிருந்த ஷக்தி, தகப்பனின் அலறலில் நிமிர்ந்து பார்த்தாள்.
அவ்வளவு தான்… கண்ட காட்சியில் “அம்மா…” என்று அலறியவள், பதறியடித்து எழும்பி, கழுத்து மாலையை கழற்றி எறிந்துவிட்டு தாயிடம் ஓடினாள்.
நொடியில் அந்த இடமே பரபரப்பின் பிடியில் சிக்கிக்கொண்டது.
அடுத்த அரைமணி நேரத்திற்குள், மதுரையின் தலைசிறந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கலைவாணி.
ஸ்பெஷல் கேரில் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அவருக்கு நடைபெற்று கொண்டிருந்தது. வெளியே இருந்தவர்கள் ஓய்ந்து போய் இருந்தார்கள்.
சௌந்தரைக் கண்ட பஞ்சவர்ணத்துக்கு மருமகளின் இந்த நிலைமைக்கான காரணம் புரிந்தது. பறவை தன் இறக்கைக்குள் குஞ்சுகளை பொதிந்து வைத்து கொள்வது போல, கதறி அழுதுகொண்டிருந்த தனது பேரனையும், பேத்தியையும் பொதிந்து கொண்டார்.
நீண்ட சில மணி நேரங்களில் சிகிச்சையை முடித்து வெளியே வந்த மருத்துவர்கள், “மைல்ட் அட்டாக் தான். எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்துட்டோம், ஒண்ணும் பிரச்சினை இல்லை. சீக்கிரமே ரெக்கவர் ஆகிடுவாங்க” என்று சொல்லிச் செல்ல, அனைவரின் முகங்களும் கொஞ்சம் தெளிவுற்றது.
இப்போது தான் சுற்றியிருந்தவர்கள், கண்ணிலும் கருத்திலும் பட, அங்கே நின்றிருந்த விஸ்வாவை நோக்கி ஆறுதலைத் தேடிச் சென்றாள் ஷக்தி.
அவனோ, வீட்டில் நடந்திருக்க வேண்டிய திருமணத்தை, மருத்துவமனையில் நடத்திக்கொண்டான்.
ஆம்… ஷக்தியின் கழுத்தில் அவளே எதிர்பாராத வகையில், திருமாங்கல்யத்தை அணிவித்திருந்தான் விஸ்வா…