“நானே எடுத்துட்டுப் போறேன் டாடி” என்று போனால் போகுது என்பதைப் போல் அவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு சென்றாள்.
“அப்படி என்ன கார்த்தி மாமாக்கு மட்டும் ஸ்பெஷல் லஞ்ச்?” என்றான் ஹரீஷ்.
“ம்ம்..! ஆஸ்திரேலியா ஸ்பெஷல். வெளிநாட்டு துரை, அவங்க குடுத்த மெனுல இருக்குற ஐட்டம்ஸ் மட்டும் தான் சாப்பிடுவாருங்கோ” என்றாள் நக்கலாக.
“சூப்பர்ல..! மாம்ஸ் தான் ஸ்டைலிஷா மாறியிருக்காருன்னு பார்த்தா, புட் கூட மாறியிருக்கு. எப்படியும் பெரிய வேலையில தான் இருப்பாரு” என்றான் ஹரீஷ்.
“அடேய் ஹரீசு! எனக்குத் தெரிஞ்சு அவன் ஆஸ்திரேலியால ஆடு தான் மேய்ச்சுட்டு இருந்திருப்பான். இங்க வந்து சீன் போடுறான் அந்த சிலுக்கு ஜிப்பா” என்றாள் முகத்தை சிலுப்பியபடி.
“எதே..ஆஸ்திரேலியால ஆடு மேய்க்கிறாரா? யக்கோவ், அவரு லெவல் தெரியாம பேசிட்டு இருக்க நீ. இதை மட்டும் அவர்கிட்ட சொல்லிப் பாரு, உனக்கு இருக்கு” என்றவனை வசந்தி அழைக்க,
“அபாய மணி அடிச்சிருச்சு. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன் ராஜ குருவே” என்றபடி சென்று விட்டான்.
அகனுக்கான உணவை எடுத்துச் சென்றவளோ, அவன் அறையின் முன்பு நின்றாள். கதவைத் தட்டவெல்லாம் இல்லை. எப்படியும் அவனே கதவைத் திறப்பான் என்று அவளுக்குத் தெரியும். அவள் எண்ணியதைப் போலவே கதவைத் திறந்திருந்தான் அகன்.
அவனோ அவளைத் தாண்டி சென்று சாப்பிட அமர, மெதுவாய் நிமிர்ந்து பார்த்தவள் தனக்கு முன் அவன் இல்லாதது கண்டு திகைத்துத் திரும்பிப் பார்க்க, அவனோ சாவகாசமாய் அமர்ந்து அவளுக்கும் ஒரு பிளேட்டில் பரிமாறிக் கொண்டிருந்தான்.
“ச்சு..!” என்று மூச்சை வெளியிட்டவள்,
“கொஞ்ச நேரத்துல என்னை எப்படியெல்லாம் யோசிக்க வச்சுட்டான் இந்த பம்பரக்கட்டை மண்டையன்?” என்று யோசித்தவளுக்கு தன்னைத் தாண்டி சென்றவனின் பெர்ப்யூம் வாசனை முழுவதும் தன் மேல் இருப்பதை போன்ற பிரம்மை அவளுக்கு.
“வந்து சாப்பிடு” என்று அவன் ஜாடை காட்ட,
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றவள் பிகு பண்ணாமல் அமர்ந்து சாப்பிட, எப்போதும் போல் அவளின் குணம் அவனை ஈர்த்திருந்தது.
“அப்பறம் அகன், நாளைக்கு இருந்து சார் ரொம்ப பிசி. நாளைக்கு சாயந்தரத்துல இருந்து மேரேஜ் செலிபிரேஷன் ஸ்டார்ட் ஆகிடும். அப்பறம் உங்களை பார்க்கக் கூட முடியாது. எனிவே என்ஜாய்” என்றபடி அவள் சாப்பிட, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் முகத்தில் இருந்து எதுவும் புலப்பட வில்லை.
சாப்பிட்டு முடித்தவள்,”தேங்க்ஸ் பார் யுவர் லஞ்ச் அகன். உங்க மேரேஜ்ல டான்ஸ் பண்றதுக்கு பிராக்டிஸ் பண்ணனும்னு ஹரீஷ் சொன்னான். சோ நான் ரொம்ப பிசி, வரட்டா” என்றவள் கிளம்ப எத்தனிக்க, அப்போதும் அவள் மீதிருந்த பார்வையை அவன் மாற்றவேயில்லை. அவளுக்கோ அவனின் கண் பார்த்து பேச ஏதோ ஒன்று தடுக்க,
“நா..நான் கிளம்புறேன் அகன்” என்றாள் சற்று தடுமாற்றத்துடன்.
“ஓகே” என்பதைப் போல் அவன் தலையை ஆட்ட, அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
வெளியே வந்தவளைப் பார்த்த மகிமாவோ,
“கார்த்தி ரூம்ல உனக்கென்ன வேலை?” என்றாள் ஆராய்ச்சி பார்வையுடன்.
“அதைப் பத்தி உனக்கென்ன?” என்றாள் தாரா மீண்டும்.
“ஏய்? என்ன மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க?” என்ற மகிமாவுக்கு முகம் சிவந்து போனது.
“மரியாதை எல்லாம் கேட்டா கிடைக்காது.குடுத்தா மட்டும் தான் கிடைக்கும்” என்றவள்,
மகிமாவை,”நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா?” என்பதைப் போல் பார்த்துவிட்டு சென்றாள்.
“இவளுக்கு திமிர் அதிகம் தான்” என்று எண்ணிக் கொண்ட மகிமா அதையே பரமேஸ்வரியிடமும், சுகந்தியிடமும் கூறியிருக்க,
“தாரா ரொம்ப நல்ல பொண்ணுமா மகிமா. அன்னைக்கு மட்டும் அந்த பொண்ணு இல்லைன்னா, கார்த்தி நிலைமையை யோசிச்சே பார்க்க முடியலை. தான் ஒரு டாக்டருன்னு என்ன பந்தாவும் இல்லை. நாங்களும் முதல்ல அப்படித்தான் நினைச்சுட்டோம்” என்றனர் இருவரும்.
“ஹோ, டாக்டரா அவ? அதான் அந்த திமிர் தான்” என்று எண்ணிய மகிமா,
“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் பாட்டி. ஆனா கார்த்தி ரூம்க்குள்ள அவளுக்கு என்ன வேலை? எனக்கு எதுவும் சரியா படலை, பார்த்துக்கோங்க” என்றாள் போகிற போக்கில்.
“என்ன சுகந்தி? நகுலன் பொண்டாட்டி இப்படி சொல்லிட்டு போறா?” என்றார் பரமேஸ்வரி மகளிடம்.
“அம்மா, அந்த பொண்ணு கார்த்திக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திருப்பாம்மா. இது தெரியாம மகிமா எதையாவது பேசிட்டு இருப்பா” என்றவர் அதோடு பேச்சை முடித்துக் கொள்ள, அவர்கள் பேசுவதைக் கேட்ட மகிமாவிற்கு எரிச்சலாய் வந்தது.
அத்தியாயம் 9 :
அறைக்குள் வந்து கதவை அடைத்த தாராவிற்கோ அழுகை வரும் போலிருந்தது. ஏனோ அழுகை வருவதற்கான காரணம் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இத்தனை நாட்கள் இருந்த இலகு நிலை மாறி அவள் மனம் முழுவதும் பாரமாய் இருப்பதைப் போன்ற உணர்வு. ஏதோ எல்லாமே தன்னை விட்டு செல்லும் உணர்வு. அவளையும் மீறி வெளியே வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,
“இப்ப நான் ஏன் தேவையில்லாம பீல் பண்ணிட்டு இருக்கேன். நான் சைட் அடிச்சவனுங்க கல்யாணத்துக்கு எல்லாம் அழுதிருந்தா எத்தனை பேர் கல்யாணத்துக்கு அழுதிருக்கிறது?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்ள,
“இது உன்னோட ஸ்டைலே இல்லை தாரா? எப்பவும் போல சைட் அடிச்சுட்டு ஜம்முன்னு இருக்குற வழியைப் பாரு. அதை விட்டுட்டு பீல் பண்றேன், பெர்பார்ம் பண்றேன்னு போனா உனக்குத் தான் டேஞ்சர்,பார்த்துக்கோ” என்றது அவளின் மனம்.
“அப்போ என் கற்போட ஒரு பிரான்ச் பாதிக்கப்பட்டது எல்லாம் எந்த கணக்குல சேர்க்குறது?” என்றாள் மனதிடம்.
“அடியே ஒரு பிரான்ச் ஒடிஞ்சா என்ன? மெயின் பிரான்ச் அப்படியே தான இருக்கு. கவலையை விடு” என்றது மனம்.
“பத்திரமா இல்லாம, ஹார்ட்டுல கட்டடம் கட்டி வாடகைக்கா விட்டிருக்கேன்? அதெல்லாம் ப்யூரா இருக்கு” என்று மனதிடம் சிலுப்பிக் கொண்டாள்.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று அலுத்துக் கொண்டது அவளின் மனம்.
மறுநாள் வீட்டில் வக்கீலைப் பார்த்த அகனின் புருவங்கள் யோசனையில் சுருங்கி விரிந்தது.
திருமண வீட்டின் அத்தனை பரபரப்பிலும் வீட்டிற்கு வக்கீல் வர வேண்டிய அவசியம் என்ன? என்பது தான் அவனின் யோசனையாக இருந்தது.
முந்தைய தினம் நடந்த கூத்து எதுவும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. வேறு ஏதோ காரணத்திற்காக அவர் வந்திருக்கிறார் என்று அவன் எண்ணிக் கொள்ள,
“என்னப்பா கார்த்தி? எது எப்படி இருந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கியே? எப்படியோ உங்கம்மாவுக்கு சேர வேண்டிய சொத்துன்னு சொல்லியே லாவகமா உன் பேருக்கு மாத்தித் தர போறாங்க. நீயும் எதுவுமே தெரியாத மாதிரி இப்படி மேம்போக்கா இருந்துட்டு, போற போக்குல கோடீஸ்வரன் ஆகுற? இந்த குடுப்பனை எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காதுப்பா” என்றார் வசந்தி அவனுக்கு முன்னால் நின்று அவன் முகம் பார்த்து.