அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சந்தான லட்சுமியுடன் வந்தான் அகன்.

“தாரா எங்க பூமி?” என்றார் லட்சுமி.

“இப்போத்தான் ரூம்க்கு போனா பெரியத்தை” என்றார் வேணி.

“என்னாச்சு பெரியம்மா?” என்றார் பூமி.

“என்ன பூமி இப்படி கேட்குற? பிள்ளைக்கு கேக் வெட்ட வேண்டாமா? அதோ அங்க எல்லாம் ரெடி பண்ணியாச்சு. வேணி நீ போய் தாராவைக் கூட்டிட்டு வாம்மா” என்றார் லட்சுமி.

“எதுக்கு பெரியம்மா இதெல்லாம்? அதுவுமில்லாம தாரா எப்பவும் கேக் வெட்டி எல்லாம் பிறந்த நாள் கொண்டாட மாட்டா” என்றார் பூமி.

“அதனாலென்ன? இந்த வருஷம் கொண்டாடிட்டா போச்சு. நீ போய் கூட்டிட்டு வர்றியா? இல்லை நான் போகட்டுமா வேணி?” என்றார்.

“நானே போய் கூட்டிட்டு வர்றேன் பெரியத்தை” என்ற வேணிக்கு மனதிற்குள் படபடவென்று வந்தது.

‘நடக்குறது நடக்கட்டும். கடவுள் மேல பாரத்தை போட்ருவோம்’ என்று எண்ணிக் கொண்டவர் தாராவை அழைக்க,

“நான் வரலை, இதுக்கும் நீங்க ஏதாவது சொல்லவா? எதுக்கு சாமி வம்பு?” என்றாள் கடுப்புடன்.

“அம்மா அப்படி கேட்டது தப்புத்தான்டா” என்றார் வேணி. அவர் அப்படி பேசியதும் தாராவின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது.

“யார் சொன்னது நீங்க கேட்டது தப்புன்னு. அதெல்லாம் சரித்தான். என் மேல உங்களுக்கு இல்லாத அக்கறை வேற யாருக்கு இருக்கும்மா. இருந்தாலும் நான் கொஞ்சம் ஹெர்ட் ஆனது உண்மைதான்” என்றவளை ஒரு வழியாய் அழைத்துக் கொண்டு சென்றார் வேணி.

அந்த தோட்டத்தின் நடுவே, அழகாய் செட் செய்திருந்தான் அகன். ஏற்கனவே திருமணத்திற்கான அலங்காரங்களில் அந்த தோட்டம் முழுவதும் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்திருக்க, அந்த இடமே ரம்யமான ஏகாந்த சூழ்நிலையில் இருந்தது.

அதையெல்லாம் பார்த்தவளுக்கு சற்று முன் மனதில் இருந்த சிறு சங்கடங்களும் இருந்த இடம் தெரியாமல் சென்றிருந்தது.

“வாவ்..!” என்று வாயைப் பிளந்தவள்,

“பாட்டி செம்மையா இருக்கு” என்றாள்.

“இதுல என்னடா இருக்கு. ஏற்கனவே இருந்த அலங்காரம். ஒரு டேபிளைப் போட்டு கேக்கை வச்சிருக்கோம், அவ்வளவு தான்” என்றார் லட்சுமி.

அவர் சொன்ன விதத்தில் அகன் லட்சுமியை முறைக்க, அதைப் பார்த்த தாரா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

அவன் ஒவ்வொன்றையும் ரசித்து செய்ய சொல்லியிருக்க, ஏதோ கல்லோ மண்ணோ என்று என்று அவர் பேசிய விதத்தில் அவன் கடுப்பாகாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

“எனக்கு கேக் வெட்டுறதுல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்லை பாட்டி. இந்த வருஷம் நீங்க அரேஞ்ச் பண்ண ஒரே காரணத்துக்காக செலிபரேட் பண்றேன்” என்றாள் கண்ணடித்து.

“நான் எங்கடா இதெல்லாம் பண்ணேன். கார்த்தி தான் இதையெல்லாம் பண்ண சொல்லியிருக்கான். கேக் கூட அவன் தான் ஆர்டர் போட்டு வாங்கியிருக்கான்” என்றார் லட்சுமி.

“ஏதே” என்று ஆச்சர்யத்துடன் அவள் அகனைப் பார்க்க, அவனோ “ என்ன?” என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி கேட்டிருந்தான்.

“யாரு சாமி நீ? மதியம் நீ பண்ண கலவரம் என்ன? இப்ப இருக்குற நிலவரம் என்ன? இந்த ரணகளத்துலையும் கேக் எல்லாம் ஆர்டர் போட்டிருக்கானே இந்த சிலுக்கு ஜிப்பா” என்று மெல்லமாய் தனக்குள் பேசிக் கொண்டவள், அவனைப் பார்த்து சிரித்து வைத்தாள்.

“தேங்க்ஸ் நண்பா..!” என்றாள் மலர்ந்த முகத்துடன். அவன் அவளின் செல்போனை காட்ட, வேகமாய் அதைப் பார்த்தாள்.

“என் பெஸ்டிக்கு நான் செய்யாம யாரு செய்வா?” என்று அனுப்பியிருந்தான்.

“யாத்தே..! இவன் என்னை இப்படி பேசாமையே கவுத்துடுவான் போலயே? எதுவா இருந்தாலும் இவனுக்கு ஓவரா தான் பொங்கும் போல. கோபத்துலையும் ஓவரா பொங்குறான். பாசத்துலையும் ஓவரா பொங்குறான். இப்ப இதையெல்லாம் பார்த்து இவன் அத்தைக்காரம்மா பொங்கோ பொங்குன்னு பொங்கப் போகுது” என்று எண்ணிக் கொண்டவள், வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அனைவரும் தோட்டத்திற்கு வர, எப்போதும் அவளை முறைத்துக் கொண்டிருக்கும் பரமேஸ்வரியும், சுகந்தியும் கூட சிரித்த முகமாய் இருந்தனர்.

அன்று அகனுக்கு அவள் செய்தது அவர்களை பொருத்தமட்டில் பெரிய உதவி அல்லவா? அதனால் அவள் மேல் இருந்த தங்களின் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டனர். அவள் டாக்டர் என்றதும் அவர்களின் மனம் இயல்பாகவே அவர்களை மாற்றியிருந்தது. படிப்பும் பதவியும் கொடுக்கும் மரியாதை எப்போதும் தனி தானே.

“எல்லாம் காலநேரம்? சமையல்காரர் பொண்ணுக்கு நம்ம வீட்டுல வச்சு பிறந்த நாள் கொண்டாட்டம். இதெல்லாம் தேவையா?” என்று வழக்கம் போல் புவியரசிடம் புகைந்து கொண்டிருந்தார் வசந்தி.

யுகந்தாராவின் அருகில் உரிமையுடன் நின்றிருந்த அகன் கார்த்திகேயனைப் பார்த்த கார்த்திகாவிற்கு உள்ளுக்குள் எறிந்தது. அவர்கள் நிற்பது மற்றவர்களின் கண்களுக்கு இயல்பு போல் தெரிய, கார்த்திகாவிற்கோ அப்படி தெரியவில்லை.

தாய் தந்தையர் ஒரு புறமும், அகனும் லட்சுமியும் ஒரு புறமும் நின்றிருக்க, நடுவில் நின்று எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் தாரா.

“இவளுக்கு வாய் மூடவே மூடாதா சித்தி. எப்ப பாரு சிரிச்சுகிட்டே தான் இருக்கா. என்ன பழக்கமோ?” என்றாள் கார்த்திகா, வசந்தியிடம்.

“பொம்பள சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சுன்னு

சும்மாவா சொன்னாங்க. சிரிச்சே ஆளை மயக்கிடுவா இவ. அவதான் அப்படி இருக்கான்னா, அந்த கார்த்தி பயலுக்கு அறிவு வேண்டாம்? கட்டிக்க போற பொண்ணு நீ இங்க இருக்க. அவன் என்னமோ அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான். இவனையெல்லாம் கட்டிக்கிட்டு என்னன்னு நீ குடும்பம் நடத்தப் போற? ஏற்கனவே காதும் கேட்காது, வாயும் பேசாது. இதுல இது வேற. என் பேச்சைக் கேட்காம என் அக்காக்காரி தான் ஆடுறான்னு பார்த்தா, நீயும் சேர்ந்து ஆடி, சரின்னு சொல்லிட்டிங்க. இப்போ அனுபவிங்க” என்று மூச்சு முட்ட பேசினார் வசந்தி.

“எம்மா கார்த்திகா கொஞ்ச நேரம் அமைதியா தான் இரேன்மா. ஏற்கனவே இவ தண்ணி குடிக்காம பேசுவா. இதுல நீ வேற?” என்று சலித்துக் கொண்டார் புவியரசு.

தாராவோ அவள் உலகத்திலேயே இல்லை. அவளின் அருகில் நின்றிருந்தவனின் தோள்கள் அவ்வப்போது அவள்மேல் உரச, அந்த உரசலில் அவள் உறுதி எல்லாம் தேய்ந்து கொண்டிருந்தது.

“அடேய் கிராதகா? நீ தெரிஞ்சு இப்படி இருக்கியா? இல்லை எதார்த்தமா இப்படி இருக்கியான்னு தெரியலை. ஆனா நான் தான்டா பாவம். வாழ்வும் வளமும் ஷோ மாதிரி இருந்த என் வாழ்க்கை இப்போ சமையல் மந்திரம் ஷோ மாதிரி ஆகிடுச்சுடா. நான் படிச்ச ஹியூமன் அனாட்டமி எல்லாமே எனக்கு எதிரா வேலை செய்தே இப்போ” என்று முணுமுணுக்க,

“என்ன முணுமுணுக்குற?” என்றார் வேணி.

“கேக் எனக்கு பிடிச்ச பிளேவர் மாதிரி இருக்கேன்னு சொல்லிட்டு இருந்தேன் மம்மி” என்று சமாளித்தவள் ஓரம் திரும்பி அகனை முறைத்தாள்.

வந்த சிரிப்பை அடக்கியவன்,”என்ன?” என்றான்.

“ஒண்ணுமில்லை” என்றவள் கேக்கை வெட்டி தாய் தந்தையருக்கு முதலில் ஊட்ட, அகனுக்கோ காரணமே இல்லாமல் கடுப்பாய் இருந்தது.

“அவ பேரண்ட்ஸ்க்கு குடுக்குறது தான முறை. அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோபம் வருது?” என்று அகனின் மனம் கேள்வி கேட்க, அந்த கேள்வியில் தணிந்தான் அகன்.

தாராவோ அவனிடம் திரும்பி அவனுக்கு கையில் கொடுக்க, அவளை முறைத்தவன், அவளின் கையைப் பிடித்து தனக்குத் தானே ஊட்டிக் கொண்டான். தன் விரல்களில் பட்ட அவன் இதழ் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் தோன்றி மறைய, அவனின் செய்கையில் விழி விரித்து நின்றாள்.

மற்றவர்களும் அவனை ஆராய்ச்சியுடன் பார்ப்பதை புரிந்து கொண்டவன்,

“ஏன் இவ்வளவு ஷாக். இந்த கையில நான் எப்படி வாங்க முடியும்?” என்பதைப் போல் கட்டுப் போட்டிருந்த கையை அவன் காட்ட, அதில் மற்றவர்கள் தெளிந்தாலும் தாரா கொஞ்சமும் தெளியவில்லை. விரல்களிள் அவனின் இதழ்கள் ஏற்படுத்திய உணர்வின் குறுகுறுப்பு இன்னமும் மிச்சம் இருந்தது.

தாறுமாறாய் துடித்த இதயத்தை தட்டிக் கொடுத்துக் கொண்டவள், தனது டென்ஷனை மறைக்க, உதடு குவித்து ஆழ்ந்த மூச்சை விட, அவளைப் பார்க்காதவன் போல் பார்த்திருந்தவன்,தன் பின்தலை கேசத்தை கோதிக் கொள்பவன் போல் திரும்பிக் கொண்டவனின் முகம் முழுவதும் இளநகை மட்டுமே.