அத்தியாயம் 5:

ரோப் காரில் வரும் பெண்கள் அணி இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. சூரியனோ சுள்ளென்று எறிக்க, வெப்பத்தின் வேட்கையை தாங்க முடியாமல் அகனின் முகம் முழுவதும் சிவந்து விட்டிருந்தது. அவனை அப்படி பார்த்த யுகந்தாராவிற்கு பாவமாய் இருந்தது.

அவர்கள் வரும் வழி நோக்கி இவர்கள் விழி வைத்துக் காத்திருக்க, கூட்டம் வேறு அதிகமாக இருந்தது. ஒரு இளைஞன் தாராவை இடித்துக் கொண்டு செல்வதைப் போல் செல்ல, சட்டென்று அவளைத் தோளோடு அணைத்து தன் பக்கம் இழுத்திருந்தான்.

அவளின் கவனம் வீட்டுப் பெண்களின் வருகையை எதிர்நோக்கியிருந்ததால் நடந்ததை கவனிக்கவில்லை. சட்டென்று அவன் அணைத்து இழுத்ததில் உள்ளமெங்கும் படபடத்தது அவளுக்கு.

அகனின் பெர்பியூம் வாசனையும் அவன் வாசனையும் சேர்ந்து அவள் நாசிக்குள் சென்று அவளை மூச்சடைக்க வைத்திருந்தது. உள்ளுறுப்புகள் உடனுக்குடன் வேலையை ஆரம்பிக்க, குத்தாட்டம் போடத் துவங்கிய உணர்வுகளை உடனுக்குடன் நிறுத்தி வைப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

‘அடேய் லூசுப் பயலே? கார்த்திகாகிட்ட பண்ற வேலையெல்லாம் என்கிட்ட பண்ணிக்கிட்டு இருக்கடா கார்த்திகேயா? இப்ப நான் என்ன பண்ணுவேன்? இவன் தொட்டு, இதயம் துடிச்சா கூட அதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா எனக்கு கணையம் கல்லீரல் வரைக்கும் துடிக்குதே. இதை நான் என்னன்னு சொல்லுவேன்? எங்க போய் சொல்லுவேன்?

அப்பனே முருகா, என் வாழ்க்கையில இது வரைக்கும் நீ நடத்தின திருவிளையாடலே போதும். எனக்கு வர்றவன் எனக்கு மட்டுமே தான் இருக்கணும். இப்படி அந்த பக்கம் கார்த்திகா, இந்த பக்கம் யுகந்தாரான்னு இருக்க வச்சிடாத” என்று  முருகனுக்கு அவசரமாய் அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருந்தாள்.

முருகனுக்கு அவளின் புலம்பல்கள் கேட்டு விட்டது போலும். அவள் ஏதோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்த அகன், அப்போது தான் அவளைத் தன்னில் இருந்து விலக்கியிருந்தான்.

“ஹப்பாடா இப்போதான் மூச்சே விட முடியுது. நல்லா இருப்படா நல்லவனே” என்று முனுமுனுத்தபடியே நிமிர, பெண்கள் அணி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

“ஹோ, இவங்களைப் பார்த்துட்டு தான் மன்மதன் கையை எடுத்தாரோ?” என்று அவனைப் பார்க்க,

“ஆமாம்” என்பதைப் போல் தலையை ஆட்டி சிரித்திருந்தான்.

“இவ்வளவு நேரமா மம்மி நீங்க வர?” என்று அவர்களிடம் பேசுவதைப் போல் கழன்று கொண்டாள். அவளின் ஒவ்வொரு முக பாவனைகளையும் படித்துக் கொண்டே இருந்தான் அகன்.

கோவிலுக்குள் சென்று முருகனை தரிசிக்கும் வரை அவளைத் தான் பார்த்திருந்தான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது அறவே இல்லை. ஆனால் இன்று கோவிலுக்கு வந்திருக்கிறான். “பாட்டிக்காக” என்று அவனுக்கு அவனே காரணம் சொல்லிக் கொண்டான்.

“அப்பனே முருகா! உன்னோட அறிவாலையும், ஞானத்தாலயும் நீ படைச்ச ஒரு சாதாரண மானிட பிறவி நானு. ஆனா, இந்த அகன் பையனை கண்டா மட்டும் மனசு பதறோ பதறுன்னு பதறுது. இந்த லவ்வோதிக வாழ்க்கை எல்லாம் நமக்கு செட்டாகாது. சைட் அடிச்சோமா ஜம்முன்னு இருந்தோமான்னு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா உன்னை மாதிரியே இவனை மாத்தலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்க. வள்ளி,தெய்வானை வாழ்க்கை எல்லாம் நமக்கு செட்டாகாது முருகா. எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்” என்றபடி கைகூப்பி நின்றிருந்தவள் முணுமுணுத்துக் கொண்டே இருக்க, அவளின் வேண்டுதலைப் பார்த்தவனுக்கு இதழோரம் புன்னகை அரும்பியிருந்தது.

சிறுபிள்ளை போல் இருந்தவளின் செய்கையை ரசித்துக் கொண்டிருந்தான். ஒருவனின் மனக்கதவை திறந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத யுகந்தாராவோ, முருகனிடம் உள்ளம் உருக நின்றிருந்தாள்.

“சாமி கும்பிடும் போது கூட இவ வாய் மூடுதா பார்?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அகன் கார்த்திகேயன்.

முருகனை ராஜ அலங்காரத்தில் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு மன நிறைவாய் இருந்தது.

“என்னடா தாரா? வேண்டுதல் எல்லாம் பலமோ? ரொம்ப நேரம் வேண்டுன மாதிரி இருந்ததே?” என்றார் சந்தான லட்சுமி.

“அதுவா பாட்டி, காட் கார்த்திகேயன் கிட்ட பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்தேன்” என்றாள்.

“என்னது?” என்று பெண்கள் மூவரும் சிரிக்க, அவளுக்கு எதிரில் இருந்த அகனோ அவளைக் கண்டு கொள்ளாதவன் போல் நின்றிருந்தான்.

“அப்போ எதுவும் வேண்டிக்கலையா தாரா?” என்றார் தாமரை.

“வேண்டாமையே அவர் எனக்கு நல்லதை மட்டும் தான் குடுப்பார் சித்தி. எனக்கு கிடைச்சிருக்குறதே நிறைவா தான் இருக்கு. அப்பறம் ஏன் அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு. எங்களுக்குள்ள எப்பவும் பேச்சு வார்த்தை மட்டும் தான்” என்றாள் நிறைவான முகத்துடன்.

“கிளம்பலாமா?” என்றான் அகன் வாட்சைக் காட்டி.

“கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு தான் போகணும் அகன். வாங்க அப்படி உட்காருவோம்” என்றாள்.

அங்கிருந்த ஜன நெருக்கடியைப் பார்த்தவனுக்கு பக்கென்று இருந்தது. அவனோ அவளை கடுப்புடன் பார்க்க,

“உன் கடுப்பெல்லாம் என்னை ஒன்னும் செய்யாதுடா பம்பரக்கட்டை மண்டையா?” என்று எண்ணியவள் வேணியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

என்னதான் அவள் தன்னை இயல்பாக கட்டிக் கொள்ள முயன்றாலும், அவளையும் மீறி ஏதோ ஒரு உணர்வு அவளுக்குள் மன பாரத்தை ஏற்றிக் கொண்டே இருந்தது. அந்த பாரத்தின் வீரியத்தை அறியாதவள் வழக்கம் போல் தனக்குள் எப்போதும் தோன்றும் உணர்வு என்று அதை எடுத்துக் கொண்டாள்.

கோவிலில் இருந்து கிளம்பி வீடு வரும் வரை யுகந்தாரா அவனின் பக்கம் திரும்பவேயில்லை. முடிந்த அளவு அவனை விட்டு விலகியே இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவளின் முயற்சி அவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவன் மறுபடியும் தன் கூட்டிற்குள் தன்னை சுருக்கிக் கொண்டான்.

வீடு வந்தவுடன் தாரவோ தந்தையைத் தேடி சென்றுவிட, அகனுக்குத் தான் தலை வின் வின்னென்று தெரித்துக் கொண்டிருந்தது.

பேரனின் முகமாற்றத்தை கவனித்த சந்தான லட்சுமி,

“கார்த்தி உடம்புக்கு எதுவும் முடியலையாப்பா? வெயில் எதுவும் ஒத்துக்கலையா?” என்றார் அக்கறையாய்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை” என்பதைப் போல் தலையை ஆட்டியவன், தலையை சோபாவில் சாய்த்தபடி விட்டத்தைப் பார்த்திருந்தான்.

அவன் அமர்ந்திருந்த தோரணையே, மனதிற்குள் எதையோ வைத்து அழுத்திக் கொண்டிருக்கிறான் என்று சொல்லாமல் சொல்ல, சந்தான லட்சுமிக்கு அதுவரை இருந்த இலகு நிலை சட்டென்று மறைந்திருந்தது.

“கார்த்தி” என்று அவனிடம் ஆரம்பிக்கும் போதே அங்கே ஆஜராகி இருந்தாள் கார்த்திகா.

“பாட்டி நீங்க கோவிலுக்கு போறதா சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே? கார்த்தியும் என்னை விட்டுட்டு வந்துட்டார்” என்றாள் கார்த்திகா.

“கல்யாணத்துக்கு ஒரு ஒரு வராம் தானமா இருக்கு. அதான் அழைச்சுட்டு போகலை. உனக்கு போகணும்னா சொல்லு, நான் தாராவை அழைச்சுட்டு போக சொல்றேன்” என்றார் லட்சுமி.

“அவ கூட போறதுக்கா இவ்வளவு மெனக்கெடுறேன்” என்று மனதிற்குள் நினைத்த கார்த்திகா,

“இருக்கட்டும் பாட்டி, நான் மேரேஜ் முடிஞ்ச பிறகு கார்த்தி கூடவே சேர்ந்து போய்க்கிறேன்” என்றாள் நல்ல பிள்ளையாய்.

‘கார்த்தி இப்படி சோர்வா இருக்குறது இந்த பொண்ணுக்கு தெரியுதா இல்லையா? ஏன் இப்படி இருக்கான்னு எதுவும் கேட்க மாட்டேங்குறாளே?” என்று லட்சுமி பாட்டி யோசித்துக் கொண்டிருக்க,

பூமிநாதனைப் பார்த்துவிட்டு வந்த தாராவோ,

“எனக்கு ராஜாவான்னா நான் வாழுறேன், எதுவும் இல்லைன்னாலும் ஆளுறேன்,ரகிட ரகிட ..” என்று பாடிக் கொண்டே ஆடியபடி வர, ஹாலில் இருந்தவர்களை கவனித்தவள், அப்படியே அமைதியாகிப் போனாள்.

“என்னடா இது? காலையில ஜம்முன்னு இருந்தவன் இப்போ கம்முன்னு இருக்கான். சம்திங் ராங்… போய் என்னன்னு கேட்போமா?” என்று எண்ணியவள்,

“எதுக்கு வம்பு? இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போய்டுவோம்” என்று எண்ணியபடி அறையை நோக்கி சென்றவளுக்கு, ஏனோ அப்படியே செல்லவும் மனமில்லை.

“என்ன இருந்தாலும் அவன் என்னோட பிரண்ட் லிஸ்ட்ல இருக்கான். அவன் இப்படி இருந்தா எனக்கு பீல் ஆகும்ல” என்று எண்ணியவள் நேராக லட்சுமியின் அருகில் சென்று நின்றாள்.

கார்த்திகா அவளை முறைக்க,

“இவ ஒருத்தி” என்று அவளை அசுவாரஸ்யமாய் பார்த்தவளுக்கு, கோவிலில் முருகனிடம் பேசிய வார்த்தைகள் ஞாபகத்திற்கு வர, அதற்கு ஏற்றார் போல் அந்த பக்கம் கார்த்திகாவும் இந்த பக்கம் தானும் நிற்பதைப் பார்த்தவளுக்கு, அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்திருந்தது. எவ்வளவு முயன்றும் முடியாமல் போக, பக்கென்று சிரித்திருந்தாள்.

“இப்ப எதுக்கு சிரிக்கிற தாரா?” என்றாள் கார்த்திகா கோபமாய்.

“என் வாய் நான் சிரிக்கிறேன். அதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா மிஸ்.கார்த்திகா?” என்றாள் தாரா.

“அதுக்காக இப்படி மேனர்ஸ் இல்லாம வந்து சிரிப்பியா?” என்றாள் கோபமாய்.

“மேடம்க்கு மேனர்ஸ் பத்தி நிறைய தெரியும் போல?” என்று நக்கலாய் உரைத்தவள் வெளியே சென்று விட்டாள்.

“இப்போ எதுக்கு கார்த்திகா இப்படி பேசுன? தாரா போய்ட்டா பாரு? கொஞ்சம் தன்மையா பேசிப் பழகுமா” என்றார் லட்சுமி.

“சாரி பாட்டி, அவ சிரிக்கவும் எனக்கு கோபம் வந்திடுச்சு” என்றவள் கார்த்தியின்  அருகில் அமர, அவனோ சட்டென்று எழுந்து விட்டான்.

“என்னப்பா ஆச்சு?” என்றார் லட்சுமி புரியாமல்.

அவனோ எதுவும் பேசாமல் லட்சுமியை நடுவில் விட்டு மறுபுறம் அமர்ந்து கொண்டான். அவன் வேண்டுமென்றே தன்னைத் தவிர்க்கிறான் என்று புரிந்த கார்த்திகாவிற்கு உள்ளுக்குள் எரிச்சல் மண்டியது.

அங்கிருந்து சென்ற தாரா திரும்பி வரும் போது அவள் கைகளில் ஆவி பறக்க சூடான காபி இருக்க, லட்சுமியின் முகத்தில் ஒரு சுவாரஸ்யம் பிறந்தது.

“எனக்காடா தாரா?” என்றார் வேண்டுமென்றே.

“உங்களுக்கும் தான், ஆனா உங்களுக்கு மட்டுமில்லை. அகனுக்கும் இருக்கு பாட்டி” என்றவள் அவரிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு அகனிடம் நீட்ட, அந்த காபி கப்பையே வெறித்திருந்தவன், வேண்டுமென்றே எடுத்துக் கொள்ளாமல் இருந்தான்.

“டால்டா மண்டையன் என்ன டகால்ட்டி வேலையெல்லாம் காட்டுறான். பாவமே தலைவலியோட இருக்கானேன்னு காபி எடுத்துட்டு வந்து குடுத்தா ரொம்ப ஓவராத்தான் பண்றான். உனக்கு வேணாம்னா போடா. நானே குடிச்சுக்கிறேன்” என்று மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்தவள், அவனுக்கு எடுத்து வந்த காபியை குடிக்கப் போனாள். அதற்கும் அவன் முறைக்க,

“இப்ப என்ன பாஸ் உங்க பிரச்சனை. குடிங்க, இல்லைன்னா குடிக்க விடுங்க” என்றாள் பாவமாய்.

அவளின் கையில் இருந்த காபி கப்பை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டான்.

“பார்த்து பார்த்து சூடா இருக்கு” என்று பதறியவள்,

“இதென்ன உலகக் கோப்பையாடா? இப்படி வெடுக்குன்னு பிடுங்குற? காபி கோப்பைடா. கொட்டுச்சுன்னா, இருக்குற சூட்டுக்கு கை வெந்துடும், நீ நொந்துடுவ” என்று முனங்கினாள்.

“ஏன் எனக்கெல்லாம் காபி எடுத்துட்டு வர மாட்டியா?” என்றாள் கார்த்திகா நக்கலாய்.

“கார்த்திகா” என்று லட்சுமி அதட்டியிருக்க,

“ஏன்? கை கால் நல்லாத்தான இருக்கு. போய் போட்டுக் குடிங்க” என்றாள் தாரா எரிச்சலுடன்.

“கார்த்தியை மட்டும் ஸ்பெஷலா கவனிக்கிற மாதிரி இருக்கே?” என்றாள் இரட்டை அர்த்தத்துடன்.

“ஆமா! அகன் என் பிரண்ட். அதான் கவனிக்கிறேன். இதுல உங்களுக்கு பிரச்சனை இருந்தா நீங்களே கவனிங்களேன். யாரு வேண்டாம்னு சொல்றது? இந்த வார்த்தை ஜாலம் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதிங்க கார்த்திகா. எல்லா நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்” என்றவள் அகனையும் சேர்த்தே முறைத்துவிட்டு சென்றாள்.

“தன்னுடைய தேர்வு தவறோ?” என்று லட்சுமியே ஒரு நிமிடம் எண்ணி விட்டார். கார்த்திகாவின் செயல்கள் அப்படித்தான் இருந்தது.

லட்சுமியின் முகம் போன போக்கைப் பார்த்த கார்த்திகா,

“சாரி பாட்டி. அது கார்த்தி என்கிட்ட இது வரைக்கும் முகம் காட்டி கூட பேசலை. ஆனா தாராகிட்ட நல்ல விதமா பழகுறார். அதான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்” என்றாள் பாவமாய்.

அவளின் சமாதானங்களை அவர் மனது ஏற்க மறுத்தது. அவர் திரும்பி அகனைப் பார்க்க, அவனோ எப்போதோ அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான்.