அவனிடமிருந்து வேகமாய் விலகியவள், சட்டென்று கண்கள் கலங்க தலையைக் குனிந்து கொண்டாள்.

“தாரா”

“நான் இப்படியெல்லாம் இல்லை அகன். எதையும் மனசுல வச்சுக்காம பேசி சிரிச்சுட்டு அம்மா அப்பான்னு ஒரு கூட்டுக்குள்ள சந்தோஷமா வாழ்ந்த சாதாரண பொண்ணு நானு. எல்லார் மாதிரியும் எனக்கும் நிறைய கல்யாண கனவுகள் எல்லாம் இருந்தது. இந்த வீட்டுக்கு வரும் போது உன்னை இங்க பார்ப்பேன்னு தெரியாது. உன்னை சைட் அடிப்பேன்னு தெரியாது. உனக்கு பிரண்ட் ஆவேன்னு தெரியாது. ஆனா எல்லாமே நடந்தது. உனக்கு மேரேஜ்னு சொன்னப்போ மனசுக்குள்ள லைட்டா பீல் ஆச்சு. அப்பறம் ஜஸ்ட் லைக் தட்ன்னு விட்டுட்டேன். பட் உன் மேரேஜ் ஸ்டாப் ஆனப்போ,உன்னை விட நான் தான் அதிகம் பீல் பண்ணேன். யார் உன்னை எது பேசினாலும் என்னால தாங்க முடியலை. அதான் நானே வந்து உன்கிட்ட மேரேஜ் பண்ணிக்க கேட்டேன்.

பேச முடியாது, கேட்க முடியாதுன்றது எல்லாம் எனக்கு குறையாவே தெரியலை அப்போ. நீ பீல் பண்ணக் கூடாதுன்னு மட்டும் தான் நினைச்சேன். அப்பறம் பார்த்தா நீ திடீர்ன்னு பேசுற. எல்லாரும் அது தெரிஞ்சு தான் உன்னை நான் மேரேஜ் பண்ணேன்னு என் முன்னாடியே பேசுனாங்க. அதையும் கடந்து வந்துட்டேன். இதோ இப்ப வரைக்கும் உன் பிரச்சனையை சரி பண்ணனும்னு நான் யோசிச்சா, அதுக்கும் என்னைத் தான் தப்பு சொல்ற. திடீர்ன்னு ஆஸ்திரேலியா போகனும்ன்ற. என்னை என்ன பண்ண சொல்ற அகன்? ஆரம்பத்துல இருந்து என் மேல தப்பு இருக்குறதா எனக்குத் தோணலை. நான் பேசுற வாயைத் தவிர்த்து.

இப்போ வரைக்கும் நீ அகன் கார்த்திகேயன்றதைத் தவிர்த்து எனக்கு உன்னைப் பத்தி எதுவுமே தெரியாது. என்னை தைரியத்துல உன்னை மேரேஜ் பண்ணேன்னு சத்தியமா இப்போ வரைக்கும் எனக்கே தெரியலை. அதை விட என் பேரண்ட்ஸ் எப்படி சம்மதிச்சாங்கன்னு எனக்குப் புரியவே இல்லை. இவ்வளவு குழப்பம் இருந்தும் ஒரு விஷயம் மட்டும் எனக்கு தெளிவா புரிஞ்சிருக்கு” என்றவள் அவனை இப்போது நிமிர்ந்து பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் தெரிந்த உணர்வை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“எனக்கு இந்த ஐ லவ் யு சொல்றதுல எல்லாம் நம்பிக்கை இல்லை அகன். ஆனா, நீ துடிச்சா எனக்கு வலிக்குது. உனக்காக எது வேணும்னாலும் செய்யலாம்னு தோணுது. ஆயுசுக்கும் உன் கூட வரணும்னு தோணுது” என்றாள் கமறிய குரலுடன்.

அவள் பேச பேச அவள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்குள் மனம் முழுவதும் ஒரு விதமான உணர்வு ஆட்டிப் படைத்தது. அவன் மீதான அவளின் அன்பு அவனை சந்தோஷ மனநிலைக்கு இழுத்துச் செல்ல,

“டாக்டரம்மா பக்கமா பக்கமா டயலாக் மட்டும் தான் பேசுறிங்க. எனக்காக இங்க இருக்குற ஆஸ்திரேலியா வர்றதுக்கு அவ்வளவு யோசிக்கிறவங்க ஆயுசுக்கும் கூட வரணும்னு நினைக்கிறாங்களாம், அவங்களுக்கே இது காமெடியா இல்ல” என்றான் கிண்டலுடன்.

“நான் எவ்ளோ பீல் பண்ணி பேசிட்டு இருக்கேன், உனக்கு கிண்டலா இருக்கா? டேய் சிலுக்கு ஜிப்பா உனக்கு வாழ்க்கை குடுத்த என்னைச் சொல்லனும்டா. நீ ஆஸ்திரேலியா போ, இல்லை ஆப்பிரிக்கா போ. எனக்கென்ன வந்தது? எப்படியோ போ,எக்கேடோ கெட்டுப் போடா. இனி ஒரு நிமிஷம் நான் இங்க இருக்க மாட்டேன்” என்றவள் வேகமாய் வெளியேற போக,

“யுகா”என்றவனின் குரலில் அவள் தடுமாறி நிற்க,

“யுகா பிளீஸ்” என்றவன் கைகளை நீட்ட, திரும்பி நின்று அவனை முறைத்தவள்,

“வர மாட்டேன்..!சத்தியமா வந்து உன்னை கட்டிப் பிடிக்கவே மாட்டேன். கையை நீட்டி நீட்டியே என்னை கரெக்ட் பண்ணது பத்தாதா உனக்கு?” என்றாள் மூக்கு விடைக்க.

“சரி சாரி” என்றான் இறங்கி வந்து.

“உங்களோட சாரி யாருக்கு வேணும்?” என்றாள் விறைப்பாக.

‘திடீர்ன்னு மரியாதை கூடுது’ என்று எண்ணியவன்,

“சாரி வேணாம்னா வேற என்ன செய்யணும்? வேணும்னா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவா?” என்றான் சிரிப்புடன்.

“மன்னிப்பு எல்லாம் வேண்டாம். உங்க மனசுக்குள்ள இருக்குற உண்மை தான் வேணும். ஏதோ ஒன்னு உங்களை ரொம்ப பாதிச்சிருக்கு. அது என்னன்னு எனக்கு தெரியனும். உங்களுக்கு எப்ப சொல்லத் தோணுதோ அப்போ சொல்லுங்க. அது வரைக்கும் டிஸ்டர்ன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்க. இந்த கையைப் பிடிக்கிறது, கட்டிப் பிடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது” என்றாள் கறாராய்.

“சொல்ல முடியாது. இந்த ப்ராப்ளம் சரியாகலைன்னா என்னை விட்டுட்டு போயிடுவியா என்ன?” என்றான் அவள் கண்களைப் பார்த்தபடி.

“ஆமா போய்டுவேன். என்னை நம்பாத யாரும் எனக்குத் தேவையில்லை. என் மேல நம்பிக்கை இல்லாமத் தான என்கிட்ட சொல்ல மாட்டேங்குறிங்க?” என்றாள் மூக்கு விடைக்க.

“கண்டிப்பா உன்னால என்னை விட்டுட்டு போக முடியாது” என்றான் உறுதியாக.

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றிங்க?” என்றாள் கேள்வியாய்.

“என் வொய்ப்க்கு இங்க சொந்த பந்தம் நிறைய பேர் இருக்காங்க… ஆனா எனக்கு அவ மட்டும் தான் இருக்கான்னு அவளுக்கு நல்லா தெரியும். அதனால கண்டிப்பா அவ என்னை விட்டுப் போக மாட்டா!” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவனை அணைத்திருந்தாள் யுகந்தாரா.

“யாரோ அவங்களை கட்டிப் பிடிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க” என்றான் அகன்.

“உங்களைத்தான் பிடிக்கக் கூடாதுன்னு சொன்னேன். நான் அப்படித்தான் கட்டிப் பிடிப்பேன்” என்றாள் அவனுள் புதைந்தபடி.

“அப்பறம் நான் மயக்கிட்டேன்னு என்மேல பழியைப் போடக் கூடாது” என்றான் சிரிப்புடன்.

“முதல்ல கையை பிடிச்சே கரெக்ட் பண்ண.. அப்பறம் சிரிச்சே கரெக்ட் பண்ண..இப்போ பேசியே கரெக்ட் பண்ற அகன்” என்றாள்.

“இதுல இருந்து என்ன தெரியுது?” என்றான் அகன்.

“என்ன தெரியுது?”

“என் பைத்தியம் தெளிஞ்சுடும். உன் பைத்தியம் முத்திடும்” என்றவன் அடக்க மாட்டாமல் சிரிக்க, அவளோ அவனை கண்கள் கலங்க பார்த்திருந்தாள்.

“இப்படி சொல்லாதிங்க அகன். நான் வாய் தவறி அப்படி சொல்லிட்டேன். உங்களுக்கு அப்படி யெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை” என்றாள் கண்களில் காதலுடன்.

“அப்படியா? டாக்டரம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்றான் அகன்.

“கிண்டல் பண்றிங்க பார்த்திங்களா?”

“கிண்டல் எல்லாம் இல்லை யுகா” என்றவன்,

“நிஜமாவே உன்னோட மேரேஜ் ட்ரீம்ஸ நான் ஸ்பாயில் பண்ணிட்டேன்ல்ல. கிராண்டா ரிஷப்ஷன் வச்சு, உன்னோட எல்லா ட்ரீம்சையும் நான் புல் பில் பண்ணிடவா? அதாவது வேற எந்த கவலையும் இல்லாம, யுகா இந்த அகனை மட்டுமே நினைச்சுட்டு இருக்குற மாதிரி” என்றான் அவள் முகத்தைத் தாங்கியபடி.

“மேரேஜ்டே அன்னைக்குத் தான நாம ஹேப்பியா இல்லை. ஆனா இந்த மேரேஜ் லைப் புல்லா நாம ஹேப்பியா இருந்தா அதுவே எனக்கு போதும் அகன்” என்றாள் தாரா.

அவளின் அன்பில் கட்டுண்டு அமைதியாய் இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தவன் ஆர்ப்பரிக்கும் நாளும் வந்திருந்தது.